Monday, 6 July 2020

கிருஷ்ணனின் வருகை | விஷ்ணு பர்வம் பகுதி – 82 – 027

(கம்ஸதனுர்பங்கம்)

Krishna's arrival | Vishnu-Parva-Chapter-82-027 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸனின் வண்ணானைக் கொன்ற கிருஷ்ணன்; பூமாலை கட்டும் குணகன்; திரிவிக்ரையின் கூன் நிமிர்த்திய கிருஷ்ணன்; வில் ஒடித்த கிருஷ்ணன்; செய்தியை அறிந்த கம்ஸன்...

Krishna breaking Kamsas bow

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு, தயாளக் கொடையாளியான அக்ரூரன், (குதிரைகளுடன்) தேரைப் பூட்டி, கிருஷ்ணனுடனும், ஸங்கர்ஷணனுடனும் {பலராமனுடனும்} புறப்பட்டுச் சென்று, கம்ஸனால் பாதுகாக்கப்பட்ட அழகிய மதுரா நகரினை அடைந்தான். மாலை வேளைக்கு முன் சூரியன் செவ்வண்ணம் ஏற்கும் போது அவன் அந்த அழகிய நகரத்திற்குள் நுழைந்தான்.(1,2)

சூரியனைப் போன்ற பிரகாசத்தைக் கொண்டவனும், நுண்ணறிவுமிக்கவனும், தயாளக் கொடையளிப்பவனுமான அவன் {அக்ரூரன்}, வீரனான கிருஷ்ணனையும், அழகிய வண்ணம் கொண்ட ஸங்கர்ஷணனையும் முதலில் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களிடம், "ஓ! ஐயா, தற்போது வஸுதேவரின் வீட்டுக்குச் செல்லும் விருப்பத்தை நீங்கள் கைவிட வேண்டும்.(3,4) முதியவரான உங்கள் தந்தை {வஸுதேவர்} இரவும் பகலும் கம்ஸனால் கடிந்து கொள்ளப்படுகிறார். எனவே நீங்கள் வெகுநேரம் இங்கே தாமதிக்காதீர்கள்.(5) உங்கள் தந்தை மகிழ்ச்சியடையும் வண்ணம் அவரது சார்பாக நல்ல இனிய பணி ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும்" என்றான் {அக்ரூரன்}.(6)

இதைக் கேட்ட கிருஷ்ணன், "ஓ! பக்திமிக்கவரே (அக்ரூரரே), நீர் விரும்பினால், மதுராவுக்கும், அவளது {மதுரையின்} அகன்ற வீதிகளுக்கும் {ராஜபாட்டைகளுக்கும் / அரசவீதிகளுக்கும்} செல்லும்போது, எவரும் அறியா வண்ணம் {யாரும் எதிர்பார்க்காதபடி} கம்ஸனின் வீட்டிற்குள் நாங்கள் நுழைவோம்" என்றான்".(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அக்ரூரனும், மனத்தால் கிருஷ்ணனை வணங்கிவிட்டு மகிழ்ச்சியான மனத்துடன் கம்ஸனிடம் சென்றான்.(8) இவ்வாறு சொன்ன அந்த வீரர்கள் இருவரும், தூண்களில் {கருத்தறியில்} இருந்து அவிழ்த்து விடப்பட்ட இரு யானைகளைப் போலவும், போரிடும் விருப்பத்துடனும் நெடுஞ்சாலைகள் எங்கும் சென்றனர்.(9) வழியில் உடை வெளுப்பவன் {வண்ணான்} ஒருவனைக் கண்டு அவனிடம் அழகிய துணிமணிகளைக் கேட்டனர்.(10) அவர்களுக்கு மறுமொழி சொன்ன அந்த வண்ணான், "நீங்கள் யார்? காட்டுவாசிகளைப் போலத் தெரியும் நீங்கள் அறியாமையினால் அச்சமில்லாமல் மன்னனின் ஆடைகளைக் கேட்கிறீர்கள்.(11) மன்னன் கம்ஸன் பல்வேறு நாடுகளில் இருந்து கொணரும் உடைகள் அனைத்துக்கும் நான் சாயம் தோய்த்துத் தருகிறேன்.(12) காட்டில் பிறந்தவர்களெனவும், மான்களோடு {விலங்குகளோடு} வளர்ந்தவர்களெனவும் நான் உங்களை {காட்டான்களாக} நினைக்கிறேன். அவ்வாறு இல்லையெனில், சாயமேற்றப்பட்ட பல்வேறு ஆடைகளில் ஏக்கம் கொண்டு ஏன் நீங்கள் அவற்றை வேண்டப் போகிறீர்கள்?(13) மூடர்களாகவும், அற்ப புத்தியைக் கொண்டவர்களாகவும் இல்லாவிட்டால் மன்னனின் அடைகளை ஏன் நீங்கள் விரும்பப் போகிறீர்கள்? ஒருவேளை நீங்கள் வாழ்வில் நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து இங்கே வந்திருக்கிறீர்கள் போலும்" என்றான்.(14)

விதியானது, அற்ப புத்தி கொண்டவனும், மூடனுமான அந்த வண்ணானுக்கு எதிராக இருந்ததாலேயே அவன் அத்தகைய நச்சுச் சொற்களைச் சொன்னான். இதனால் அவனிடம் கோபமடைந்த கிருஷ்ணன், வஜ்ரம் போன்ற தன் முஷ்டியைக் கொண்டு அவனது தலையைத் தாக்கினான். அவன் தலைபிளக்கப்பட்டவனாக உயிரற்றுப் பூமியில் விழுந்தான்.(15,16) அதன்பிறகு அந்த வண்ணானின் மனைவிமார், இறந்துபோன தங்கள் கணவனுக்காக அழுது, தலைமயிர் கலைந்தவர்களாகவும், கோபத்துடனும், விரைவாகவும் கம்ஸனின் வீட்டுக்குச் சென்றனர்.(17)

இன்சொல்லுடன் கூடிய அந்தச் சகோதரர்கள் இருவரும், மணத்தால் ஈர்க்கப்பட்ட இரு யானைகளைப் போலவே மலர்மாலைகளை விற்கும் ஒரு கடைக்குச் சென்றனர்.(18) அங்கே இன்சொல்லும், நற்தோற்றமும் கொண்ட செல்வந்தனாகக் குணகன்[1] என்ற பெயரில் ஒரு மாலை வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனிடம் ஏராளமான மாலைகள் இருந்தன.(19) இன்சொல்லுடன் கூடிய கிருஷ்ணன் மாலைகளைப் பெற விரும்பி எந்தத் தயக்கமுமின்றி அந்தக் கடைக்காரனிடம் {குணகனிடம்} "எனக்கு மாலைகளைக் கொடுப்பாயாக" என்று கேட்டான்.(20) இதைக் கேட்டு நிறைவடைந்த மாலைவியாபாரி, அழகிய சகோதரர்களான அவ்விருவருக்கும் நிறைய மாலைகளைக் கொடுத்து, "இவை அனைத்தும் உங்களுக்கே" என்றான்.(21) இதனால் நிறைவடைந்த கிருஷ்ணன், அவனுக்கு வரமளிக்கும் வகையில், "ஓ! மென்மையானவனே, என்னைச் சார்ந்தவளான செழிப்பின் தேவி {ஸ்ரீ}, ஏராளமான செல்வங்களுடன் எப்போதும் உன்னுடன் வாழ்வாள்" என்றான்.(22) தலைவணங்கிய அந்த மாலை வியாபாரி, கிருஷ்ணனின் பாதங்களைத் தீண்டி பொறுமையுடன் அந்த வரத்தை ஏற்றுக் கொண்டான்.(23) அதன் பிறகு அந்த மாலை வியாபாரி, "இவர்கள் யக்ஷர்கள்" என்று நினைத்து, பேரச்சத்தால் பீடிக்கப்பட்டவனாக மறுமொழியேதும் சொல்லாதிருந்தான்.(24)

[1] ஸ்ரீமத் பாகவதத்தில் இவனது பெயர் சுதாமன் என்றும், இவன் கிருஷ்ணனின் நண்பன் என்றும் சொல்லப்படுகிறது.

அதன்பிறகு வஸுதேவனின் மகன்கள் இருவரும் மீண்டும் நெடுஞ்சாலைக்குச் சென்று, கைகளில் குழம்புகளுடன் இருக்கும் குப்ஜையை {கூனியைத்}[2] தொலைவில் கண்டனர்.(25) அவளைக் கண்ட கிருஷ்ணன், "ஓ! தாமரைக் கண் குப்ஜையே, இந்தக் களிம்புகளை யாருக்காகக் கொண்டு செல்கிறாய் என்பதை விரைவாகச் சொல்வாயாக" என்றான்.(26) மின்னல் போல வளைந்து செல்பவளான அந்தக் குப்ஜை, இதைக் கேட்டதும் மகிழ்ச்சியடைந்த கண்களுடனும், புன்னகையுடனும், மேகங்களைப் போன்ற ஆழமான சொற்களில் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனிடம்,(27) "உனக்கு நன்மை நேரட்டும். நான் மன்னர் நீராடும் அறைக்கு {ஸ்நாநக்ருஹத்திற்கு} செல்கிறேன். நீ என் இதயத்திற்கு அன்பானவன் என்பதாலேயே நான் இங்கே நிற்கிறேன்; வா, வந்து இந்தக் களிம்பை {சந்தனக் குழம்பைப்} பெற்றுக் கொள்வாயாக. ஓ! தாமரைக் கண்ணா, அழகிய முகத்தைக் கொண்டவனே, உன்னைக் கண்டு நான் ஆச்சரியத்தால் நிறைந்திருக்கிறேன்.(28,29) ஓ! மென்மையானவனே, என்னை அறியாதவனாக இருக்கிறாயே? நீ எங்கிருந்து வருகிறாய். மன்னருக்குப் பிடித்தமானவளான நான், அவரது உடலில் சந்தனம் பூசும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன்" என்றாள்.(30)

[2] குப்ஜை என்ற சொல் அந்தப் பெண் கூன்முதுகைக் கொண்டவள் என்பதைக் குறிப்பதாகும். பாகவதத்தில் இவளது பெயர் திரிவிக்ரை என்றிருக்கிறது.

அங்கே புன்னகைத்து நின்றிருந்த குப்ஜையிடம் {திரிவிக்ரையிடம்} மறுமொழியாகக் கிருஷ்ணன், "எங்கள் உடலுக்குத் தகுந்த களிம்புகளை எங்களுக்குக் கொடுப்பாயாக.(31) ஓ! அழகிய முகத்தவளே, நாங்கள் நாடுகள் தோறும் திரியும் மற்போர் வீரர்களாவோம். நாங்கள் இப்போது மகிழ்ச்சி நிறைந்ததும், செழிப்புமிக்கதுமான இந்த நாட்டையும், இந்த வில் வேள்வியையும் காண வந்திருக்கிறோம்" என்றான்.(32)

அவள் {திரிவிக்ரை} கிருஷ்ணனிடம், "நான் உன்னைக் கண்ட மாத்திரத்தில் நீ எனக்குப் பிடித்தமானவனாகி விட்டாய். மன்னருக்குரிய இந்தக் களிம்பைத் தயங்காமல் ஏற்றுக் கொள்வாயாக" என்றாள்.(33)

அழகிய மேனியில் களிம்புகள் பூசப்பட்ட அந்தச் சகோதரர்கள் இருவரும், யமுனையின் சேற்றால் பூசப்பட்ட இரு காளைகளைப் போல அங்கே ஒளிர்ந்திருந்தனர்.(34) விளையாட்டுகளை {லீலைகளை} வகுக்கும் கலையை அறிந்தவனான கிருஷ்ணன், தன் {இரு} விரல்களைக் கொண்டு குப்ஜையின் {திரிவிக்ரையின்} கூனலை மென்மையாகத் தீண்டினான்.(35) அழகியும், புன்சிரிப்பு கொண்டவளுமான குப்ஜை {திரிவிக்ரை} (இவ்வாறு) கூன் அழுந்தியதை அறிந்து, நிமிர்ந்த கொடியைப் போல உடலசைவுகளை வெளிப்படுத்தி, உரக்கச் சிரித்தபடியே கிருஷ்ணனிடம் காதலுடன், "எங்கே செல்லப் போகிறாய்? என்னால் வேண்டப்படுபவனாக நீ இங்கே இருப்பாயாக. என்னை எடுத்துக் கொள்வாயாக" என்றாள்[3].(36,37) நித்தியமானவர்களான கிருஷ்ணனும், ராமனும் {பலராமனும்} குப்ஜையின், குப்ஜையின் சாதனைகளை அறிந்தவர்கள் என்பதால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே தங்கள் உள்ளங்கைகளைத் தட்டி சிரிக்கத் தொடங்கினார்கள்.(38) அதன்பிறகு சற்றே புன்னகைத்த கிருஷ்ணன், ஆசையால் பீடிக்கப்பட்ட குப்ஜையை அனுப்பி வைத்தான். அவர்கள், குப்ஜையின் (பிடியில்) இருந்து இவ்வாறு விடுபட்டு {அரச} சபையை நோக்கிப் புறப்பட்டார்கள்.(39)

[3] சித்திரசாலை பதிப்பில், "விளையாட்டின் திட்டங்களை அறிந்தவனான கிருஷ்ணன், தன் கைகளின் இரு விரல்களைக் கொண்டு குப்ஜையுடைய கூனின் நடுவில் மென்மையாக அழுத்தினான். அவள் தன் கூனல் நிமிர்ந்ததைக் கண்டு அழகாகப் புன்னகைத்தவாறே நிமிர்ந்து நின்றாள். அவள் உரக்கச் சிரித்தாள். அவள் மரத்தைத் தழுவும் ஒரு கொடியைப் போலத் தன் பருத்த முலைகளுடன் அழகாகத் தெரிந்தாள். அப்போது அவள் போதையுடன் கூடியவளாகக் கிருஷ்ணனிடம் காதலுடன், "எங்கே செல்கிறாய்? ஓ! அன்பனே, நான் உன்னைத் தடுக்கிறேன். நிற்பாயாக. என்னை எடுத்துக் கொள்வாயாக" என்று சொன்னாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விளையாடுபவனைப் போலக் கிருஷ்ணன் தன் கரத்தின் இருவிரல்களால் கூனலில் மென்மையாக அழுத்தினான். கிருஷ்ணன் அழுத்திய போது, கூனுடல் நிமிர்ந்தது, அழகிய புன்னகையைக் கொண்டவள் நிமிர்ந்து நின்றாள். பருத்த முலைகளைக் கொண்ட அவள் தூணைச் சுற்றும் நேரான கொடி போன்றவளாக உரக்கச் சிரித்தாள். காதலெனும் போதையில் அவள் கிருஷ்ணனிடம், "ஓ அன்புக்குரியவனே, எங்கே செல்கிறாய்? நான் உன்னைத் தடுத்து வைப்பேன். இங்கே இருந்து என்னை ஏற்றுக் கொள்வாயாக" என்றாள்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "விளையாட்டு விதிகளையறிந்த க்ருஷ்ணன் அந்தக் கூனியை கூன் முதுகு மத்தியில் இரண்டங்குலம் கை நுனியால் மெள்ள அழுத்தினான். புன்சிரிப்புடன் கூடிய அந்தக் கூனியும், கூன் அமுங்கியதையறிந்து இரண்டு ஸ்தனங்களுடைய நேர் கொடிபோல நிமிர்ந்த தேஹத்துடன் உரக்கச் சிரித்தாள். அவள் மிக்க ஸந்தோஷத்தால் ப்ரகாசித்து க்ருஷ்ணனை நோக்கி காமக் கலக்கம் தோன்றப் பேசினாள், "ப்ரியனே, எங்கே போவாய்? என்னால் தடுக்கப்பட்டிருக்கிறாய். நில், என்னை உடைமையாக்கிக் கொள்" என்றாள்" என்றிருக்கிறது.

விரஜத்தில் வளர்ந்தவர்களும், ஆயர்களைப் போன்று உடுத்தியவர்களுமான அந்தச் சகோதரர்கள் இருவரும் தங்கள் முகங்களின் சைகைகளின் மூலம் தங்கள் இதயத்தின் திட்டங்களைக் காட்டிக் கொள்ளாமல் அந்த அரண்மனைக்குள் நுழைந்தனர்.(40) இமயக் காடுகளில் பிறந்த செருக்குமிக்க இரு சிங்கங்களைப் போன்ற அந்தச் சிறுவர்கள் இருவரும் எவராலும் கவனிக்கப்படாமல் வில்வீட்டை {ஆயுத சாலையை} அடைந்தனர்.(41) புகழ்பெற்ற அந்த வில்லைக் காணும் விருப்பத்தில் இருந்த அந்த வீரர்கள் இருவரும் ஆயுதசாலைக் காவலனிடம்,(42) "ஓ! கம்ஸனின் விற்களைக் காப்பவரே, எங்கள் சொற்களைக் கேட்பீராக. ஓ! மென்மையானவரே, இப்போது கொண்டாட இருக்கும் வேள்விக்குரிய அந்த வில் எங்கிருக்கிறது?(43) நீர் விரும்பினால், கொண்டாடப்படும் அந்த வில்லை எங்களுக்குக் காட்டுவீராக" என்றனர். அப்போது, தூணுக்கு ஒப்பானதும், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் நாண்பூட்ட முடியாததும், முறிக்கப்பட முடியாததுமான அந்த வில்லை அவன் {ஆயுத சாலை காவலன்} அவர்களுக்குக் காட்டினான்.(44,45)

பலம்வாய்ந்தவனும், தாமரைக்கண்ணனுமான கிருஷ்ணன், தைத்தியர்களால் வணங்கப்படும் அந்த வில்லை மகிழ்ச்சியான மனத்துடன் தன் கையில் ஏந்தியதும் அதை வளைக்கத் தொடங்கினான். பாம்புக்கு ஒப்பானதும், கொண்டாடப்பட்டதுமான அந்த வில்லானது, கிருஷ்ணனால் வலுவாக வளைக்கப்பட்டதும் இரண்டாக முறிந்தது. வேக நடை கொண்டவனும், இளைஞனுமான அந்த வாஸுதேவன் {கிருஷ்ணன்}, இவ்வாறு அந்தச் சிறந்த வில்லை முறித்ததும், ஸங்கர்ஷணனுடன் {பலராமனுடன்} சேர்ந்து அந்த அறையைவிட்டு வெளியேறினான்.(46-48)

இதனால் பீதியடைந்த காவலன், அந்த ஆயுத சாலையில் இருந்து வெளியே வந்து, வேகமாக மன்னனை {கம்ஸனை} அணுகி, காகம் போல மூச்சுவிட்டபடியே, "உலக அழிவைப் போல ஆயுத சாலையில் நடந்த அந்த அற்புத நிகழ்வைச் சொல்கிறேன் கேட்பீராக. விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களும், தேவர்களின் மகன்களுக்கு ஒப்பானவர்களும், நீல உடையும், மஞ்சள் உடையும் அணிந்திருந்தவர்களும், களிம்புகளால் பூசப்பட்டவர்களுமான அந்த வீரர்கள் இருவரும் மனிதர்களால் கவனிக்கப்படாதவர்களாகத் திடீரென அந்தப்புரத்திற்குள் நுழைந்தனர். அவர்களுடைய உடல் புது நெருப்பைப் போன்ற பிரகாசத்துடனும், அவர்களது குழல்கள் அலங்காரமான அகன்ற குடுமிகளுடனும் இருந்தன.(50-53) அவர்கள் அழகிய ஆடைகளாலும், மலர்மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தனர். அந்த மென்மையான வீரர்கள் இருவரும், வானத்தில் இருந்து திடீரென வந்தவர்களைப் போல வில்லறைக்குள் வந்து நின்றனர். நானே இதை நேரடியாகக் கண்டேன்.(54)

அவர்களில் தாமரைக் கண்களையும், கரிய நிறத்தையும் கொண்டவனும், மஞ்சளாடையும், மலர்மாலைகளும் சூடியவனுமான வீரன், தேவர்களாலும் உயர்த்தப்பட முடியாத அந்த வில்லை உயர்த்தினான்.(55) ஓ! மன்னா, அவன் சிறுவனாக இருந்தாலும், இரும்பாலான அந்தப் பெரும் வில்லை எளிதாகவும், விரைவாகும் வலுவுடன் வளைத்து நாணும் பூட்டினான்.(56) நீண்ட கைகளைக் கொண்ட அந்த வீரன் {நாண்பூட்டப்பட்டும்} கணைகளில்லாத அந்த வில்லை வளைத்தபோது, அது பேரொலியுடன் நடுவில் முறிந்து இரண்டு துண்டுகளானது.(57) அந்த வில்லின் சொடுக்கொலியால் சூரியன் தன் ஒளியை இழந்தான், பூமி நடுங்கினாள், வானமும் சுழல்வதைப் போலத் தெரிந்தது.(58)

ஓ! பகைவரை நடுங்கச் செய்பவரே, இந்த மீமானிடப் பெருஞ்செயலைக் கண்டு ஆச்சரியமடைந்த நான், அச்சமடைந்தவனாக இந்தச் செய்தியைச் சொல்வதற்கு உம்மிடம் வந்தேன். ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்த வீரர்கள் இருவரில், ஒருவன் கைலாச மலை போன்ற நிறத்திலும், மற்றவன் அஞ்சன மலையின் {மையாலான அஞ்சனகிரியின்} நிறத்திலும் இருந்தனர். அவர்கள் யார் என்பதை நான் அறியவில்லை. தூணை {கட்டுத்தறியை} நொறுக்கும் யானையைப் போன்ற பேராற்றல் கொண்ட அந்த வீரனும், மதிப்புமிக்க அந்த வில்லை இரண்டாக முறித்துக் காற்றைப் போன்றவனாகத் தன் துணைவனுடன் வேகமாகச் சென்றுவிட்டான். ஓ! மன்னா, அவன் யார் என்பது எனக்குத் தெரியாது" என்றான்.(59-61) கம்ஸன் ஏற்கனவே அனைத்தையும் அறிந்திருந்ததால், வில் முறிக்கப்பட்டதைக் கேட்டும் ஏதும் சொல்லாதிருந்தான். அவன் காவலாளியை அனுப்பிவிட்டு தன் மிகச்சிறந்த அறைக்குள் நுழைந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(62)

விஷ்ணு பர்வம் பகுதி – 82 – 027ல் உள்ள சுலோகங்கள் : 62
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்