(விருந்தாவனப்ரவேசம்)
Their departure for Vrindavana | Vishnu-Parva-Chapter-64-009 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிருந்தாவனத்திற்கு மாற்றப்பட்ட ஆய்க்குடி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தடுக்கப்படமுடியாதவையான ஓநாய்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பதைக் கண்டு அந்தக் கிராமத்தில் வாழும் ஆண்களும், பெண்களும் தங்களுக்குள் ஓர் ஆலோசனையை நடத்தினர்.(1) {அவர்கள்}, "இந்தக் காட்டில் இனியும் நாம் வாழ்வது உகந்ததல்ல. நாம் மகிழ்ச்சியாக வாழவும், பசுக்கள் விரும்பியவாறு மேயவும் தக்க மற்றொரு பெருங்காட்டுக்கு நாம் செல்ல வேண்டும்.(2) பயங்கரம் நிறைந்த இந்த ஓநாய்கள் விரஜத்தை {ஆயர்பாடியை} மொத்தமாக அழிப்பதற்கு முன்னர் எந்தத் தாமதமும் இன்றி விலைமதிக்கப்பட முடியாத நம் பசுக்களுடன் இன்றே நாம் புறப்பட வேண்டும்.(3) கரிய முகத்தையும், பழுப்பு நிற அங்கங்கள், பற்கள் மற்றும் நகங்களைக் கொண்டவையுமான இந்த ஓநாய்கள் இரவில் பயங்கரமாக ஊளையிடுகின்றன.(4) "ஓநாய்களால் உண்ணப்படுபவன் என் மகன், என் சகோதரன், உண்ணப்படுவது என் கன்று, என் பசு" என்று ஒவ்வொரு வீட்டிலும் அழுகுரல் கேட்கிறது" {என்று தங்களுக்குள் ஆலோசித்தனர்}.(5)
கோபிகைகளின் {ஆய்ச்சியரின் / கோபியரின்} அழுகுரலையும், பசுக்களின் துன்பம்நிறைந்த ஒலியையும் கேட்டு ஒன்றுகூடிய ஆயர்கள், எந்தத் தாமதமுமின்றித் தங்கள் இடத்தை மாற்ற விரும்பினர். தேவர்களின் குருவை {பிருஹஸ்பதியைப்} போன்றவனான நந்தன், பசுக்களின் நலத்திற்காகத் தங்கள் இடத்தை வேறெங்கும் அமைத்துக் கொள்ளும் வகையில் அவர்கள் பிருந்தாவனம் செல்ல விரும்புவதையும், இக்காரியத்தில் அவர்கள் உறுதியாக இருப்பதையும் அறிந்து, பின்வரும் கனமான சொற்களைச் சொன்னான்.(6-8) {அவன்}, "இன்றே செல்லும் உறுதியோடு நீங்கள் இருந்தால், எத்தாமதமுமின்றி விரஜவாசிகளை {ஆயர்பாடியில் வசிப்போரை} ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொள்ளுங்கள்" என்றான்.(9)
அதன்பிறகு அந்தக் கிராமத்தில் {இடைச்சேரியில்}, "இவ்விடம் பிருந்தாவனத்திற்கு மாற்றப்படுகிறது. எனவே, நீங்கள் உங்கள் பசுக்கள், மற்றும் கன்றுகளைத் திரட்டிக் கொண்டும், வண்டிகளில் உங்கள் பாத்திரங்களைக் கட்டிக்கொண்டும் ஆயத்தமாவீராக" என்று குற்றேவலர்கள் அறிவித்தனர்.(10,11) நற்பொருள் சொன்ன நந்தனின் இச்சொற்களைக் கேட்டு விரைந்து செல்வதற்காக அவர்கள் அனைவரும் எழுந்தனர்.(12) அப்போது, "வருவீர், புறப்படுவீர், ஏன் தாமதம்? உங்கள் வண்டிகளை ஆயத்தப்படுத்துவீர். எழுவீர், செல்வீர்" என அங்கே அமளி ஏற்பட்டது.(13) சுறுசுறுப்பான கோபர்கள் மற்றும் கோபியருடனும், அவர்களின் எண்ணற்ற வண்டிகளுடனும் ஆயத்தமாக இருந்த அந்தக் கிராமமானது, முழங்கும் கடலைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்றது.(14) தலைகளில் குடங்களுடன் வரிசையாக அணிவகுத்த ஆய்ச்சியர்கள், வானத்தில் இருந்து வெளிவரும் விண்மீன்களைப் போல விரஜத்தை {ஆயர்பாடியை} விட்டு வெளியேறினர்.(15) நீலம், மஞ்சள் மற்றும் ஒளிரும் கச்சைகளால் தங்கள் மார்பை மறைத்திருந்த ஆய்ச்சியர் வீதியில் செல்லும்போது வானவில்லைப் போலத் தோன்றினர்.(16) மேனியில் தொங்கும் அணைக்கயிற்றுச் சுமையைச் சுமக்கும் ஆயர்கள் சிலர், கிளைகள் மற்றும் இலைகளால் மறைக்கப்பட்ட அழகிய மரங்களைப் போலத் தெரிந்தனர்.(17) ஒளிரும் வண்டிகள் சுற்றிலும் நகரவும், ஆயர்களின் அந்தக் கிராமம், காற்றினால் புரட்டப்படும் படகுகள் நிறைந்த கடலைப் போலத் தெரிந்தது.(18) இவ்வாறு மிகக் குறைந்த நேரத்தில் பொருட்கள் அனைத்தையும் இழந்து, {சிந்திய தானியங்களை எடுக்க வந்த} காக்கைகளால் நிறைந்திருந்த அது {விரஜ கிராமம்} பாலைவனம் போலத் தோன்றியது.(19)
பிருந்தாவனம் எனும் காட்டைப் படிப்படியாக அடைந்த அவர்கள், அங்கே பசுக்களின் நலத்திற்காகப் பெரிய வசிப்பிடங்கள் பலவற்றை அமைத்தனர்.(20) வண்டிகளுக்காக அமைக்கப்பட்ட வீதிகளுடன் பிறை போல அமைந்திருக்கும் அக்காடானது அகலத்தில் ஒரு யோஜனையும், சுற்றளவில் இரண்டு யோஜனையும் கொண்டதாக இருந்தது.(21) {நன்கு வளர்ந்த} முட்செடிகள், {அடி முதல் நுனி வரை முட்களைக் கொண்ட} முள்மரங்கள், பரந்து விரிந்த கிளைகள் ஆகியவற்றால் அஃது அனைத்துப் பக்கங்களிலும் பாதுகாக்கப்பட்டிருந்தது.(22) அழகிய மத்துகள், கழிகள், கழுவுவதற்கான நீர் நிறைந்த குடங்கள், கயிறுகள் மற்றும் பாசங்களால் கட்டப்பட்டிருந்த தண்டுகள் {முளைகள்}, எழுப்பப்பட்ட தூண்கள், புரட்டப்பட்ட வண்டிகள், மத்துக்கழியின் உச்சியில் கட்டப்பட்ட கயிறுகள், குடிசைகளை மறைக்கும் புற்கள் {வைக்கோல்கள்}, புல்லால் அமைக்கப்பட்ட கொட்டகைகள், அங்கேயும் இங்கேயுமென விளையாடும் மரங்களின் கிளைகள், கூடுகள் நிறைந்த மரங்கள், தூய்மையான பசுத்தொழுவங்கள், நன்கு நிலைநிறுத்தப்பட்ட உரல்கள், மேற்கில் வைக்கப்பட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பு, உடைகள் மற்றும் தோல்விரிப்புகளுடன் நன்கு விரிக்கப்பட்ட படுக்கைகள் ஆகியவற்றால் அது {அந்தப் புதிய கிராமம்} அழகூட்டப்பட்டது.(23-27)
கோபிகைகள் நீரைக் கொண்டு வந்தும், மரங்களின் கிளைகளை அகற்றியும் அந்தக் காட்டைத் தூய்மைப்படுத்தத் தொடங்கினர்.(28) கோடரிகளுடன் கூடிய இளைய மற்றும் முதிய ஆயர்கள், மரங்களை எளிதாக வீழ்த்தத் தொடங்கினர்.(29) கோபர்களின் இந்த வசிப்பிடம் {பிருந்தாவனத்தில் அமைந்த இந்தக் கோகுலம்} சோலைகள், அழகிய வசிப்பிடங்கள், இனிய கிழங்குகள், கனிகள் மற்றும் நீர் நிறைந்ததாக மிக அழகாகத் தோன்றியது.(30)
முன்பு இந்தக் காட்டில் திரிந்த கிருஷ்ணன், பசுக்களின் நலத்திற்காக அந்தக் காட்டை மகிழ்ச்சியான இதயத்துடன் கண்டிருந்தான். பல்வேறு பறவைகளின் கூடுகளால் நிறைந்ததும், நந்தனத் தோட்டத்திற்கு ஒப்பானதுமான பிருந்தாவனம் எனும் காட்டை இவ்வாறு அடைந்த பசுக்கள் அனைத்தும் கறந்தபோதெல்லாம் பெரும் மகிழ்ச்சியுடன் பாலைக் கொடுத்தன.(31,32) பயங்கரமான கோடை காலத்தின் இறுதி மாதத்தில் தேவர்களின் மன்னன் {இந்திரன்} அங்கே அமுத மழையை வழக்கமாகப் பொழிந்து வந்தான். அதன்படியே அங்கே மக்கள் எந்த நோயாலும் பாதிக்கப்படாமல் இருந்தனர், காய்கறிகள் அனைத்தும் அங்கே ஏராளமாக விளைந்தன. மனிதர்களின் நன்மைக்காக மதுசூதனன் வாழும் அந்த இடத்தில் கன்றுகளும், அப்பாவி மக்களும் எந்த நோயாலும் பீடிக்கப்படவில்லை, அழிவையும் அடையவில்லை.(33,34)
இவ்வழியில், கிருஷ்ணன் எங்கு வசிக்க நினைத்தானோ அந்த இடத்தில் இளமையுடன் கூடிய ஸங்கர்ஷணனும் {பலராமனும்}, ஆயர்களும், பசுக்களும் வாழத் தொடங்கினர்.(35)
விஷ்ணு பர்வம் பகுதி – 64 – 009ல் உள்ள சுலோகங்கள் : 35
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |