(விருகவர்ணனம்)
Krishna wishes to go to Vrindavana and produces wolves | Vishnu-Parva-Chapter-63-008 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கோகுலத்தைப் பிருந்தாவனத்திற்கு மாற்ற விரும்பி சூழ்ச்சி செய்த கிருஷ்ணனும், பலராமனும்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வழியில் கிருஷ்ணனும், ஸங்கர்ஷணனும் {பலராமனும்} தங்கள் குழந்தைப் பருவத்தை விரஜத்தில் {ஆயர்பாடியில்} கழித்து, ஏழு வயதை அடைந்தனர்.(1) அவர்கள், அடர்நீலம் மற்றும் மஞ்சள் ஆடைகளை அணிந்து, மேனியில் மஞ்சள் மற்றும் வெள்ளை அங்கராகங்களை {நறுமணத் திரவியங்களைப்} பூசி, காக்கை இறகுகளை {காகபக்ஷங்களைச்} சூடிக்கொண்டு பசுக்களை மேய்த்து வந்தனர்.(2) அந்த அழகிய சிறுவர்கள் இருவரும் காட்டுக்குச் செல்லும்போது காதுக்கு இனிய இசையைத் தரும் பணவங்களை இசைத்து, மூன்று தலை பாம்புகளைப் போல அங்கே ஒளிர்ந்து வந்தனர்[1].(3) சில வேளைகளில் அவர்கள் தங்கள் காதுகளில் மயிலின் இறகுகளையும், தங்கள் தலைகளில் இலைகளாலான மகுடங்களையும், தங்கள் மார்பில் காட்டு மலர் மாலைகளையும் சூடி, வளர்ந்த மரங்கள் இரண்டைப் போல ஒளிர்ந்து வந்தனர்.(4) சில வேளைகளில் தங்கள் தலைகளில் தாமரைகளால் அமைந்த மகுடத்தைச் சூடி, கயிற்றைப் புனித நூலாக மாற்றி, தங்கள் கைகளில் சுரைக்காய்களை {சுரைக்காய் கமண்டலங்களைக்} கட்டித் தொங்க விட்டபடி புல்லாங்குழலை இசைத்து வந்தனர்.(5) சிலவேளைகளில் ஒருவரோடொருவர் விளையாடியும், சிரித்துக் கொண்டும், இலைகளால் அமைந்த படுக்கையில் கிடந்து உறங்கி மகிழ்ந்தனர்.(6) இவ்வாறு ஆயர்குலச் சிறுவர்களாக வாழ்ந்த அவர்கள், இரண்டு இளங்குதிரைகளைப் போல இங்கேயும், அங்கேயும் இன்பமாகத் திரிந்து அந்தக் காட்டை அழகுறச் செய்தனர்.(7)
[1] சித்திரசாலை பதிப்பில், "அழகிய முகங்களைக் கொண்டவர்களான அச்சிறுவர்கள் இருவரும், காதுகளுக்கு இனிமையானதும், பனை ஓலைகளாலானதுமான ஊதுகுழல்களை இசைத்தனர். (அவ்வாறு ஊதுகுழல்களை ஊதும்போது) மூன்று தலை பாம்புகளைப் போலக் காட்டில் பளபளத்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அழகிய முகத்தையுடைய அவ்விருவரும் காட்டையடைந்து இலை ஊதலை, காதுக்கு இனிமையாக ஊதிக் கொண்டு (ஊதலில் இருகைகளும் முகமும் சேர்ந்து) மூன்று தலை பாம்பு போல் சோபித்தனர்" என்றிருக்கிறது.
ஒருநாள் அழகிய தாமோதரன் {கிருஷ்ணன்}, ஸங்கர்ஷணனிடம் {பலராமனிடம்}, "ஓ! ஐயா, எங்கும் விளையாடியதன் மூலம் நாம் இந்தக் காட்டைக் கிட்டத்தட்ட முழுதாகக் கெடுத்துவிட்டோம். இனியும் நம்மால் ஆயர்குலச் சிறுவர்களுடன் இங்கே விளையாட முடியாது.(8) இது புற்கள் மற்றும் கொப்புகள் இல்லாததாக இருக்கிறது, மரங்களை ஆயர்கள் வேரோடு சாய்த்துவிட்டார்கள். இந்த அழகிய காடு நம்மால் அழிக்கப்பட்டுவிட்டது.(9) (மரங்களுடன்) அடர்ந்திருந்த காடுகள் மற்றும் தோட்டங்கள் அனைத்தும் இப்போது வானத்தைப் போல வெறுமையாகத் தெரிகின்றன.(10) சுவர்கள் மற்றும் மரத்தாள்ப்பாள்களால் பாதுகாக்கப்பட்ட பசுத்தொழுவங்களில் நித்திய அழகுடன் இருந்த மரங்கள் அனைத்தும், பசுத்தொழுவங்களின் நெருப்பால் {அடுப்புத் தீயால்} அழிக்கப்பட்டன.(11)
நம்மருகே இருந்த மரங்கள், மற்றும் புற்கள் அனைத்தும் இப்போது இங்கிருந்து பெருந்தொலைவில் உள்ளன.(12) நீர், மரங்கள், சோலைகள், மற்றும் பிற இடங்களும் இந்தக் காட்டில் அரிதாகிவிட்டன. தேடினாலும் நாம் ஓய்ந்திருக்க ஓரிடத்தைக் காண முடியவில்லை. இது மகிழ்ச்சியற்றதாக மாறிவிட்டது, மரங்களும் காணப்படவில்லை.(13) இந்தப் பரந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களால் மரங்கள் அழிக்கபட்டன. பயனற்ற மரங்களில் இருந்து பறவைகள் பறந்து சென்று விட்டன.(14) பறவைகளற்ற இந்தக் காடு, குழம்பும், காய்கறிக் கூட்டுகளும் இல்லாத சோற்றைப் போன்று அருவருப்பை ஏற்படுத்துகிறது. இனிமைநிறைந்த காற்றும் இங்கே வீசுவதில்லை.(15) இந்தக் காட்டில் விளைந்த மரங்களும், காய்களும் இப்போது விற்கப்படுகின்றன. புற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன, இந்தக் கிராமம் {கோகுலம்} இப்போது ஒரு நகரத்தின் தோற்றத்தில் இருக்கிறது.(16) கோபர்களின் கிராமம் {கோகுலம்} மலையின் ஆபரணமாகும், காடு கோகுலத்தின் ஆபரணம், பசுக்கள் காட்டின் ஆபரணம். அவையே {பசுக்களே} நமக்கு மிகச் சிறந்த புகலிடமும் {மேலான கதியும்} ஆகும்.(17) விரஜவாசிகளில் செல்வந்தர்கள், புதிய மரங்களும், புற்களும் நிறைந்த மற்றொரு காட்டுக்குச் செல்லட்டும்; ஆயர்களின் பெரிய கிராமங்கள் மூடப்பட்ட கதவுகளுடனும், வயல்கள் நிறைந்த வீடுகளுடனும் இருக்கும்போது அவை சக்ரசாரி[2] பறவைகளைப் போல அழகாகத் தெரிவதில்லை.(18,19) மலமும், சிறுநீரும் புல்லில் படும்போது அதன் சாறு நஞ்சாகிறது. பசுக்கள் அதை மேய விரும்புவதில்லை, அது பாலுக்கும் நல்லதல்ல.(20) கிட்டத்தட்ட வெறும் நிலமாக இருக்கும் காட்டை விட்டுச் சமவெளியாக இருக்கும் அழகான புதிய காடுகளில் நம் பசுக்களுடன் நாம் திரிய விரும்புகிறோம். ஆயர்களின் வசிப்பிடமான இந்த இடத்தை {கோகுலத்தை} அங்கே நாம் மாற்றிக் கொள்வோம்.(21)
[2] "இஃது ஒரு வகைக் காட்டுப் பறவை. கூட்டில் அடைக்கப்படும்போது அவை சுகமாக உணராததைப் போலக் கிராமங்களும், நகரங்களைப் போலவே வாயில்களால் நன்கு பாதுகாக்கப்படும்போது அவை தங்கள் இயல்பான அழகை இழக்கின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "புல்லும், விறகும் அதிகமாகக் கிடைக்கும் மற்றொரு காட்டிற்கு நாம் செல்ல வேண்டும். பசுக்கள் இதற்கு முன்பு உண்ணப்படாத புதிய பச்சைப் புற்களை உண்ண விரும்புகின்றன. எனவே, விரஜத்தின் செழிப்பை நாடி புதுப் புற்கள் கிடைக்கும் காட்டுக்கு நாம் செல்ல வேண்டும். கதவுகள் சாத்தப்பட்டதும், மறைக்கப்பட்டதும், வீடுகள் மற்றும் வயல்கள் நிறைந்ததுமான இடங்கள் நாம் வசிப்பதற்கு உகந்தவையல்ல. சுதந்திரமாக நகரும் பறவைகளைப் போல (நிரந்தர வசிப்பிடமற்ற ஹம்ச மற்றும் சாரதப் பறவைகளைப் போல) வெவ்வேறு இடங்களில் உள்ள விரஜமே {ஆய்ப்பாடியே} உலகில் புகழ்பெற்றது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "முயல் குட்டிகளை ஈனக் காணப்படும் மற்றொரு சிறந்த காட்டுக்கு நாம் செல்ல வேண்டும். பசுக்கள் தாங்கள் விரும்பிபடி அங்கே புற்களை மேயலாம். புதிய புல் நிறைந்த காடு இருக்கும் விரஜத்தின் மிகச் செழிப்பான இடத்திற்குச் செல்வோம். கதவுகள் அடைக்கப்பட்ட இடமாகவோ, வீடுகளும், வயல்களும் அடைக்கப்பட்ட இடமாகவோ அஃது இருக்காது. இவ்வுலகில் விரும்பியபடி உலவத் தகுந்த இடமாகவே விரஜம் புகழ்பெற்றிருக்கிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.இராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "நுனி வாடாத இளம் புற்களையும், விறகுகளையும் உடைய வேறு காட்டிற்குச் செல்வோம். பசுக்களும், புதிய புற்களை மேய்வதற்கு விரும்புகின்றன. ஆயர்கள் கதவு பூட்டு இல்லாதவர்கள். வீடு நிலம் அற்றவர்கள். உலகின் கோபர்கள் சக்கரம் போல் (ஓரிடம் நில்லாமல்) சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? ஆகையால் புதுப் புற்களுடைய வேறொரு காட்டிற்கு (கோ) தனிகர்களான நாம் போவோம்" என்றிருக்கிறது.
நல்லியல்புகள் அனைத்துடன் கூடியதும், முட்கள் மற்றும் பூச்சிகளில் {தத்துக்கிளிகளில்} இருந்து விடுபட்டதுமான ஏராளமான புற்கள் நிறைந்த அழகிய காடொன்று யமுனையின் கரையில் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் பெயர் பிருந்தாவனமாகும். கனிகள், நீர் மற்றும் கதம்ப மரங்களால் அது நிறைந்திருக்கிறது.(22,23) அனைத்துப் பருவங்களுக்கும் தஞ்சம் அளிக்கக்கூடிய வகையில் அந்தக் காட்டில் எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் காடுகள் அனைத்தும் ஆயர்கள் மகிழ்ச்சியாக உலவித் திரியும் வகையில் மிக அழகானவையாகும்.(24) {இந்திரனின்} தெய்வீக நந்தவனத்தின் அருகில் இருக்கும் மந்தர மலையைப் போல உயர்ந்த சிகரத்துடன் கூடிய பெருமலையான கோவர்த்தனம் அதன் {பிருந்தாவனத்தின்} அருகிலேயே இருக்கிறது.(25) உயர்ந்த கிளைகளைக் கொண்டதும், ஒரு யோஜனை விரிந்ததும், பாண்டீரம் என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு பெரிய ஆலமரம் அந்த மலையின் மத்தியில் இருக்கிறது.(26) {இந்திரனின்} நந்தவனத்தில் பாயும் நளினி ஆற்றைப் போன்றதும், ஓடைகளில் முதன்மையானதுமான காளிந்தி {ஆறு}, தலை மயிரை இரண்டாகப் பிரிக்கும் வகிடு போன்ற கோடாக அதன் {பிருந்தாவனத்தின்} நடுவில் ஓடிக் கொண்டிருக்கிறது.(27) நாம் எப்போதும் பெரும் மகிழ்ச்சியுடன் கோவர்த்தன மலை, பாண்டீர மரம் மற்றும் அழகான காளிந்தி ஆற்றைப் பார்த்துக் கொண்டிருப்போம்.(28) ஓ! ஐயா, உமக்கு நன்மை நேரட்டும். ஈர்ப்புகள் ஏதும் இல்லாத இந்தக் காட்டைவிட்டு வெளியேறி, அங்கே ஆயர்களின் வசிப்பிடத்தை அமைப்பீராக. ஆயர்களை அச்சுறுத்த இப்போது நாம் இடர்களை உண்டாக்குவோம்" என்றான் {கிருஷ்ணன்}.(29)
நுண்ணறிவு கொண்ட கிருஷ்ணன் இவ்வாறு பேசிக்கொண்டே சிந்தனையில் ஈடுபட்டான். அவனது {கிருஷ்ணனின்} உடல் மயிர்களில் இருந்து கொழுப்பு, குருதி மற்றும் இறைச்சியை உண்டு வாழும் நூற்றுக்கணக்கான ஓநாய்கள் எழுந்தன. அவை வெளியே வந்தவுடனேயே, விரஜ கிராமத்தையே விழுங்கிவிடுவதைப் போல அனைத்துத் திசைகளிலும் ஓடின.(30,31) அவை தங்கள் கன்றுகள், பசுகள் மற்றும் பெண்கள் மீது பாய்வதைக் கண்ட ஆயர்கள் பேரச்சத்தால் பீடிக்கப்பட்டனர். கரிய முகம் கொண்டவையும், ஸ்ரீவத்ஸமெனும் மறைக்குறியைக் கொண்டவையும், கிருஷ்ணனின் உடலில் இருந்து வெளிவந்தவையுமான அந்த ஓநாய்கள், ஐந்து, பத்து, முப்பது, இருபது, நூறு எனக் குழுக்களாக அங்கே திரிந்து ஆயர்களின் அச்சத்தை அதிகரித்தன.(32-34) கோபர்களின் மொத்த நிலத்தையும் இவ்வாறு அச்சுறுத்திய அந்த ஓநாய்கள், கன்றுகளைத் தின்று, இரவில் சிறுவர்களை அபகரித்து, அதை {விரஜத்தை} நாசமாக்கின.(35) அப்போது காட்டுக்குள் புகுந்து பசுக்களை மேய்ப்பதற்கும், வேறு எதையும் கொணர்வதற்கும், ஆற்றுக்குச் செல்வதற்கும் எவரும் துணியவில்லை.(36) உண்மையில் அச்சத்தால் பீடிக்கப்பட்டு, அசைவற்றவர்களாக இருந்த அவர்கள், கவலை நிறைந்த மனத்துடனேயே அங்கே வாழத் தொடங்கினர். அங்கங்களை நகர்த்தவும், உடலை அசைக்கவும் கூட அஞ்சியவர்களாக இருந்த விரஜவாசிகளிடம் புலிகளைப் போன்ற சக்தி கொண்ட அந்த ஓநாய்கள் அச்சத்தை உண்டாக்கின. அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி வாழ்ந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(37,38)
விஷ்ணு பர்வம் பகுதி – 63 – 008ல் உள்ள சுலோகங்கள் : 38
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |