Thursday, 4 June 2020

சுவடுகளைத் தேடி - ஹரிவம்ச பர்வம்

Lord Vishnu and Sage Narada

ஸ்ரீஹரியின் தலைமுறையில் அவதரித்த விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் கதையைச் சொல்வதே ஹரிவம்சமாகும். பெரும் வீரர்களும், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களுமான இராமனும், கிருஷ்ணனும் பாரத வரலாற்றில் இன்றியமையாத நாயகர்கள் ஆவர். அவர்களில் மஹாபாரத மையப் பாத்திரமான கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இந்த ஹரிவம்சத்தில் புதைந்திருக்கிறது. ஹரிவம்சத்தையும் சேர்த்தால்தான் ஒரு லட்சம் ஸ்லோகங்களுக்கு நெருக்கமான எண்ணிக்கையை மஹாபாரதம் எட்டும்.

முழுமஹாபாரதம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும்போதே அடுத்ததாக ஹரிவம்சத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணம் வருவதும் போவதுமாக இருந்தது. ஹரிவம்சம் தொடர்பாக என்னென்ன பதிப்புகள் இருக்கின்றன என்று தேடியபோது, மன்மதநாததத்தர், தேசிராஜுஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் கிடைத்தன. இவற்றில் காப்புரிமை காலத்தைக் கடந்தது மன்மதநாததத்தரின் பதிப்பு மட்டும்தான். எனவே, இந்தப் பதிப்பையே மொழிபெயர்ப்பது என்று முன்பே முடிவு செய்து வைத்திருந்தேன். தமிழில் இதற்கு முன்பு ஏதேனும் பதிப்புகள் இருக்கின்றனவா என்று தேடியபோது மஹாபாரதம் பதிப்பித்த கும்பகோணம் மணலூர் வீரவல்லி ராமானுஜாச்சாரியார் {ம.வீ.ரா.} அவர்களின் மருமகன் திரு.உ.வே.எஸ்.ராமானுஜய்யங்கார் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஹரிவம்சம், http://acharya.org என்ற இணைய முகவரியில் கிடைத்தது. ஆனால் அதில் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் தவிர்க்கப்பட்டிருந்தது. எனவே, முதல்பர்வத்தை ஒப்புநோக்க இப்பதிப்பைப் பயன்படுத்த முடியவில்லை. இரண்டாம் பர்வத்தில் இருந்து நிச்சயம் பயன்படும்.

மன்மதநாததத்தர் வங்கப் பதிப்பைக் கொண்டு தன் மொழிபெயர்ப்பைச் செய்தார். அது மொத்தம் 12,494 ஸ்லோகங்களைக் கொண்டது. சித்திரசாலை பதிப்பில் 16,374 ஸ்லோகங்கள் உண்டு. தேசிராஜுஹனுமந்தராவின் மொழிபெயர்ப்பு இந்தப் பதிப்பைக் கொண்டு செய்யப்பட்டதாகும். இதைத் தவிர இருக்கும் மற்றொரு பதிப்பு 5,965 ஸ்லோகங்களைக் கொண்ட செம்பதிப்பாகும் {Critical Edition}. பிபேக்திப்ராயின் மொழிபெயர்ப்பு இந்தப் பதிப்பைக் கொண்டு செய்யப்பட்டதாகும்.

ஹரிவம்சம் பனிரெண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்டது என்றும், இதில் ஹரிவம்ச பர்வம் மற்றும் பவிஷ்ய பர்வம் என இரண்டு பர்வங்கள் இருக்கின்றன என்றும் மஹாபாரதத்தில் உள்ள ஆதிபர்வ-சங்கிரகப் பர்வத்தில் (1:2:377,378) சூதர் உக்கிரசிரவர் குறிப்பிடுகிறார். 

தொடக்க கால படைப்பு, மனிதர்களின் தோற்றம், உணவுப் பொருட்களின் தோற்றம், மன்வந்தரங்கள், காலப்பிரிவினைகள், சூரிய மற்றும் சந்திர வம்சம் பற்றிய குறிப்பு ஆகியவற்றுடன் ஹரிவம்ச பர்வத்தின் தொடக்க அத்தியாயங்கள் தொடங்குகின்றன. 1932ல் ஹென்றி டேவிட் தொர்யோ Henry David Thoreau என்ற அமெரிக்க அறிஞர், "ஏழு பிராமணர்களின் புலம்பெயர்வு The Transmigration of the Seven Brahmans" என்ற தலைப்பில் ஹரிவம்சத்தின் ஓர் அத்தியாயத்தை மொழிபெயர்த்தார். அது இந்தப் புத்தகத்தின் 21ம் அத்தியாயமாக வருகிறது. 29ம் அத்தியாயத்தில் வரும் காசி மன்னர்களின் வரலாறு, 30ம் அத்தியாயத்தில் யயாதியிடம் இருந்த தெய்வீகத் தேர் படிப்படியாக வம்சவாரியாக இறுதியில் ஜராசந்தனையும், அவனுக்குப் பிறகு கிருஷ்ணனையும் அடைந்தது என்ற குறிப்பு, 32ம் அத்தியாயத்தில் பாண்டியன், கேரளன் மற்றும் சோழன் ஆகியோர் துஷ்யந்தனின் குலவரிசையில் வந்த ஆக்ரீடனுக்குப் பிறந்தவர்கள் என்ற குறிப்பு, 38ம் அத்தியாயத்தில் வரும் சியமந்தக மணி வரலாறு, 39ம் அத்தியாயத்தில் பாண்டவர்களின் அரக்கு மாளிகை எரிந்த அதே சமயத்தில் ஸத்யபாமாவின் தந்தை ஸத்ராஜித் கொல்லப்படுவதும், அதைத் தொடர்ந்து பாண்டவர்களுக்கான நீர்க்கடனைச் செலுத்த வாரணாவதம் சென்றிருந்த கிருஷ்ணனிடம் சென்று, ஈமச் சடங்குகள் முடிவடையும் முன்பே ஸத்யபாமா மீண்டும் அவனை துவாரகைக்கு அழைத்துவந்தாள் என்ற குறிப்பு, 42ம் அத்தியாயத்தில் விஷ்ணுவின் தசாவதாரம் வேறு வரிசையில் சொல்லப்படுவது. மேலும் இதே அத்தியாயத்தில் விஷ்ணு ஸ்துதி பாடம் என்ற துதி, 53ம் அத்தியாயத்தில் மஹாபாரதத்தில் முற்பிறவியில் மஹாபிஷக் என்ற மன்னனாக சொல்லப்படும் சந்தனு அதற்கும் முற்பிறவியில் பெருங்கடலின் அவதாரமாவான் எனசொல்லப்படுவது போன்ற செய்திகள் புராண இதிகாச ஆய்வாளர்களுக்குப் புதிய திறப்புகளை அளிக்கும் செய்திகளாகும்.


நமது தமிழ் மொழிபெயர்ப்பு மன்மதநாததத்தரின் பதிப்பைக் கொண்டு செய்யப்படுவதால், இதில் மொத்தம் 12,494 ஸ்லோகங்கள் இருக்கும். எனவே, மஹாபாரதத்தில் சூதர் சொல்லியிருக்கும் எண்ணிக்கைக்கு நெருக்கமான ஸ்லோகங்களும் இதில் இருக்கும். மற்ற பதிப்புகள் அனைத்திலும் ஹரிவம்சம் மூன்று பர்வங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கையில், மன்மதநாததத்தரின் பதிப்பு இரண்டு பர்வங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், பொதுவாக வழங்கி வரும் வழக்கத்திற்கு ஏற்ற வகையில் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் அமையும் ஹரிவம்சமும் மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. முதல் பர்வமான ஹரிவம்சபர்வத்தில் மொத்தம் 3119 ஸ்லோகங்கள் இருக்கின்றன.

தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் முதல் பர்வத்தின் 31ம் அத்யாயத்தில் ஓர் அறிவிப்பு இருக்கிறது. "இந்த அத்தியாயத்தை மொழிபெயர்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அதாவது 24-11-07 அன்று archive.org வலைத்தளம் எம்.என்.தத்தின் மொழிபெயர்ப்பை வெளியிட்டிருக்கிறது. தொல்படைப்புகளையும், தொன்மையான மொழிபெயர்ப்புகளையும் மீண்டும் கொண்டு வருவது என்பது எங்கள் விருப்பமாகையால், அவை மறைந்து போய்விடக்கூடாது என்ற வகையில் எம்.என்.தத் வழங்கிய உரையை இங்கே தேவைப்படும் இடங்களில் இணைத்துக் கொள்ளப் போகிறோம். தத் அவர்கள் வங்காளப் பதிப்பையும், நாங்கள் சித்திரசாலை பதிப்பையும் பயன்படுத்துவதால், இந்தப் பதிப்புகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளின் காரணமாக எம்.என்.தத் வழங்கியிருக்கும் அனைத்துப் பத்திகளையும் இதில் பயன்படுத்திவிட முடியாது. புதிதாகச் செய்வதைவிட இது சிக்கலானதாக இருப்பினும், விக்டோரியன் மொழிநடையில் அமைந்த {எம்.என்.தத்தின்} சொற்களை மாற்றியோ, அவற்றுக்குப் பொழிப்புரை செய்தோ, வாக்கியத்தைச் சீரமைத்தோ இன்றைய எளிய ஆங்கில நடைக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப் போகிறோம். அந்த நாட்களின், அல்லது பண்டைய ஆசிரியர்களின் குறிப்பிட்ட வகையிலான அழகிய வெளிப்பாடுகளை நாம் இழக்கக்கூடாது" என்று சொல்கிறது அவ்வறிவிப்பு. இந்தப் பதிப்பும் நம் மொழிபெயர்ப்பின் ஒப்புநோக்கலுக்குப் பயன்படுவதால், வடமொழியில் உள்ள இரண்டு பதிப்புகளில் வேறுபடும் கருத்துகளை அடிக்குறிப்புகளாக இங்கு சேர்க்க முடியும்.

1897ல் திரு. மன்மதநாததத்தர் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஹரிவம்ச நூலின் தமிழாக்கமே இந்த மொழிபெயர்ப்பு என்றாலும், முன் சொன்னபடி http://mahabharata-resources.org/ என்ற வலைத்தளத்தில் திரு.தேசிராஜுஹனுமந்தராவ் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பதிப்பையும், கிண்டிலில் கிடைக்கும் பிபேக்திப்ராய் அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒப்புநோக்கியே செய்யப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் அடிக்குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

படைப்பின் கதை, பூமியின் பரிமாணம், காலப்பிரிவினை, குல வரலாறுகள், அரசவம்ச வரலாறுகள் என விரியும் அத்யாயங்களில் பல பெயர் சொற்கள் வருகின்றன. அவற்றின் உச்சரிப்புகள் மாறிவிடக்கூடாது என்பதற்காக இணையத்தில் கிடைக்கும் ஹரிவம்ச மூலத்தில் உள்ள சொற்களை எடுத்து, http://aksharamukha.appspot.com/converter என்ற வலைத்தளத்தில் உள்ளிட்டு ஒவ்வொரு அத்தியாயத்தையும் முழுமையாகத் தமிழில் ஒலிபெயர்த்து அதற்கான சுட்டியை ஒவ்வொரு அத்தியாயத்தின் அடியிலும் மூலம் - Source என்ற லிங்கில் கொடுத்திருக்கிறேன். மன்மதநாததத்தரின் ஆங்கிலப் பதிப்பு இணையத்தில் பிடிஎஃப் {PDF} வடிவில் மட்டுமே கிடைப்பதால், அதன் ஒவ்வொரு அத்யாயத்தையும் முழுமையாக எழுத்துருவில் வடித்து அதற்கான சுட்டியை ஒவ்வொரு அத்தியாயத்தின் அடியிலும் ஆங்கிலத்தில் - In English என்ற லிங்கில் கொடுத்திருக்கிறேன். எனவே ஸம்ஸ்கிருத மூலம், எம்.என்.தத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு, நமது தமிழ்மொழிபெயர்ப்பு என ஒவ்வொரு அத்தியாயத்தையும் மும்மூன்று தனித்தனி பதிவுகளாக அளித்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் மற்றவற்றோடு தொடர்பில் இருக்கும் வகையில் இணைப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறேன். முழுமஹாபாரதம் போலவே ஹரிவம்சமும் இணையத்தில் என்றும் எப்போதும் இருப்பதற்காகத்தான் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது.

வழக்கம் போலவே நண்பர் ஜெயவேலன் அவர்கள் இந்த ஹரிவம்ச மொழிபெயர்ப்பிலும், பிழைகள் திருத்தியும், தக்க இடங்களில் தகுந்த படங்களைச் சேர்த்தும், முக்கியமான இடங்களில் சொற்களின் வண்ணம் மாற்றியும் உதவியிருக்கிறார். பிப்ரவரி 8, 2020 தைப்பூச நன்னாளன்று ஹரிவம்சத்தை மொழிபெயர்க்கத் தொடங்கினேன். அதில் முதல் பர்வமான ஹரிவம்ச பர்வம் மே 28, 2020 அன்று நிறைவடைந்தது. முதல் பர்வத்தில் உள்ள 55 அத்யாயங்களை மொழிபெயர்க்க 111 நாட்கள் ஆகியிருக்கின்றன. இரண்டாம் பர்வமான விஷ்ணு பர்வத்தில், முதல் அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பை வைகாசி விசாகமான 04.06.2020 இன்று தொடங்க இருக்கிறேன். குழந்தைப் பருவம் முதலே கண்ணன் என் நாயகன். அவனது வரலாறு இந்த விஷ்ணு பர்வத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்தப் பர்வத்தை மொழிபெயர்ப்பதில் பேருவகைக் கொள்கிறேன். அனைத்தும் பரமன் சித்தம்.

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
202006041248

Labels

அக்ரூரன் அக்னி அசமஞ்சன் அதிரதன் அரிஷ்டன் அர்ஜுனன் அனு அஜமீடன் ஆபவர் ஆயு ஆஹுகன் இந்திரன் இளை உக்ரஸேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு ஊர்வசி ஊர்வர் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கபிலர் கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குரோஷ்டு குவலாஷ்வன் சகடாசுரன் சததன்வன் சத்யகர்மன் சத்ருக்னன் சந்தனு சந்திரன் சனத்குமாரர் சன்னதி சிவன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தன்வந்தரி தாரை திதிக்ஷு திரிசங்கு திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பார்வதி பிரதீபன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரஸேனன் பிராசேதஸ் பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மது மயன் மாயாதேவி மார்க்கண்டேயர் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஸுதேவன் வாயு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹரி ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு