Saturday, 16 May 2020

தேவர்களின் போர் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 46

(தே³வாஸுரஸங்க்³ராமவர்ணனம்)

The battle of the gods | Harivamsha-Parva-Chapter-46 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : சந்திரனைப் போரிடத் தூண்டிய இந்திரன்; அசுரப்படையைக் கலங்கடித்த வருணனும், சந்திரனும்; மற்றொரு மாயையை உண்டாக்கிய மயன்; அக்னி மற்றும் வாயு தேவர்களை ஏவிய விஷ்ணு; மீண்டும் வீழ்ந்த அசுரப்படை; போர்க்களம் புகுந்த காலநேமி...

Kalanemi

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தேவர்களைப் பெருகச் செய்பவனும், தேவர்களின் மன்னனுமானவன் {இந்திரன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, பனியைத் தன் ஆயுதமாகக் கொண்ட சோமனை முதலில் போருக்கு அனுப்பினான்.(1)

சக்ரன் {இந்திரன் வருணனிடம்}, "ஓ! சுதாகரா[1], அசுரர்களை அழிப்பதற்காகவும், தேவர்களை வெற்றியடையச் செய்வதற்காகவும், சுருக்குக்கயிற்றை ஏந்தியவனுக்கு {பாசதரனுக்கு_வருணனுக்கு}[2] உதவி செய்யவும் புறப்பட்டுச் செல்வாயாக.(2) ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவனும், சூரியனுக்கே தலைவனுமான நீ ஒப்பற்ற சக்தியைக் கொடையாகப் பெற்றிருக்கிறாய்[3]. சாறுகளின் ஞானத்தைக் கொண்டவர்கள், உன்னைச் சாறுகள் அனைத்துடன் அடையாளங்காணப்படுபவனாகக் கருதுகிறார்கள்.(3) பெருங்கடலிலும் உன்னுடைய சுற்றுப்பாதையிலும் பெருக்கமும், சுருக்கமும் வெளிப்படுகின்றன. அண்டத்துடன் காலத்தை இணைத்து பகல்களையும் இரவுகளையும் நீயே உண்டாக்குகிறாய்[4].(4) குழிமுயலுக்கு ஒப்பான பூமியின் நிழல் உன்னுடலில் இருக்கிறது. விண்மீன்களில் பிறந்த சோமதேவர்களும் இதை அறியமாட்டார்கள்[5].(5)

[1] "இது சந்திரனின் பெயராகும். இந்து தொன்மங்களின்படி சந்திரன் அமுதத்தின் சுரங்கமாவான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின பதிப்பிலும் இங்கே சோமா என்று அழைப்பதாகவே இருக்கிறது.

[2] "இது சுருக்குக்கயிற்றை {பாசத்தைத்} தன் ஆயுதமாகக் கொண்ட வருணனின் பெயராகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும், "ஒளிக்கோள்கள் அனைத்தின் தலைவன்" என்றே இருக்கிறது.

[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "தொடர்ந்து ஒன்றுக்கொன்று தொடர்புறும் வளர்தலும், தேய்தலும், அல்லது அலையின் உள்வாங்கலும், பெருக்கமும் உன்னிலும், பெருங்கடலிலும் வெளிப்படுகின்றன. அதேவேளையில் நீங்கள் இருவரும் தேய்ந்து உள்வாங்கும் உங்கள் பகுதிகளை மீட்டெடுக்கவல்லவர்களாக இருக்கிறீர்கள். அதேபோலவே, அசுரர்களை எதிர்த்துப் போரிடுவதற்காகப் பெருங்கடலின் தேவனான வருணனுடன் கரங்கோர்ப்பாயாக. இரவும், பகலும் நீ சுழல்வதால், கால அளவீட்டுக்கு நீயே அளவுகோலாக இருக்கிறாய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "உன்னுடைய வளர்ச்சியும், தேய்வும் பெருங்கடலிலும், வானத்தில் நீ வலம் வருவதிலும் வெளிப்படையாகத் தெரிகிறது. இரவும், பகலும் நீ வலம் வருவதே அண்டத்தில் காலத்தை அளக்கும் தரமாகப் பயன்படுத்தப்படுகிறது" என்றிருக்கிறது.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பளபளப்பான உன் மேற்பரப்பில் குழிமுயலாக வெளிப்படும் உலகின் நிகழ் குறிக்கப்பட்டுள்ளது, விண்மீன்களின் அறிவியலில் திறன்பெற்ற சோதிடர்களும் அதன் உண்மைத்தன்மையை அறிய முடியாதென வாதிடுகிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "குழிமுயலின் தடயம் உன் மடியில் இருக்கிறது, அஃது உலகங்களின் நிழலன்றி வேறேதுமில்லை. சோம தேவனை அறியோதவனால் நட்சத்திரங்களைக் குறித்து அறிந்தவனாக இருக்க மாட்டான்" என்றிருக்கிறது.

சூரியப் பாதைக்கும், பிற ஒளிக்கோள்களுக்கும் மேல் நீ இருக்கிறாய். உன்னுடல் மற்றும் கதிர்களால் உலகுக்கு ஒளியூட்டி நீ இருளை விலக்குகிறாய்.(6) வெண்கதிர்களையும், குளிர்ந்த உடலையும் கொண்டவனும், ஒளிக்கோள்களின் தலைவனுமான நீ, உன் மடியில் குழிமுயலைக் கொண்டவனாகவும், காலத்தின் புலப்படாத ஆன்மாவாகவும், வேள்விகளில் வழிபடப்படுபவனாகவும், வேள்விகளின் சாறாகவும், நித்தியனாகவும்,(7) கோள்களின் மன்னனாகவும், செயலின் பிறப்பிடமாகவும், நீரில் பிறந்தவனாகவும், குளிர்ந்த கதிர்களைக் கொண்டவனாகவும், அமுதச் சுரங்கமாகவும், நிலையற்றவனாகவும், வெண் குதிரைகளைக் கொண்டவனாகவும் இருக்கிறாய்.(8) அழகு பொருந்தியவற்றின் அருளாகவும், சோமதேவர்களின் சோமனாகவும், உலகங்கள் அனைத்திலும் எழில்மிகுந்தவனாகவும் நீ இருக்கிறாய். இருளை விலக்கும் நீ கதிர்களின் மன்னனாக இருக்கிறாய்.(9) வருணனுக்கும், அவனது படைக்கும் நீ துணையாக இருந்து, போரில் எங்களை எரிக்கும் இந்த அசுர மாயையை அழிப்பாயாக" என்றான் {இந்திரன்}.(10)

சோமன் {சந்திரன் இந்திரனிடம்}, "ஓ! அண்டத்தின் தலைவா, ஓ! தேவர்களின் மன்னா, போருக்காக நீ என்னிடம் கேட்டதை நான் செய்வேன். அசுர மாயையை விலக்கவல்ல பனியை நான் பொழிவேன்.(11) இந்தப் பெரும்போரில் தானவர்கள், பனியால் மறைக்கப்பட்டும், என் குளிரால் எரிக்கப்பட்டும், தங்கள் மாயாசக்திகளையும், அகந்தையையும் இழக்கப் போவதை நீ காண்பாய்" என்றான்".(12)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பயங்கரம் நிறைந்த தானவர்கள், மேகத்திரள்களைப் போலச் சந்திரனால் வெளியிடப்பட்ட புகைபோன்ற பனிப்பொழிவில் மறைக்கப்பட்டனர்.(13) பாசதரனான வருணனும், வெண்கதிர்களைக் கொண்ட சந்திரனும் தங்கள் பாசக்கயிற்றின் வீச்சுகளாலும், பனிப்பொழிவினாலும் அந்தப் பெரும்போரில் அசுரர்களைக் கொல்லத் தொடங்கினர்.(14) நீரின் தலைவர்களான அவ்விருவரும், போர்க்களத்தில் நீரைப் பொழிந்தும், பாசக்கயிறு மற்றும் குளிரைக் கொண்டும் போரிட்டுப் பொங்கும் கடல்களைப் போலத் திரியத் தொடங்கினர்.(15) அண்ட அழிவின் போது அபரிமிதமான மழையைப் பொழியும் பிரவர்த்தக மேகத்தால் உலகம் மறைக்கப்படுவதைப் போல, அந்தத் தானவப் படையும், வருணன் மற்றும் சோமனின் நீரால் மறைக்கப்பட்டது.(16) சந்திரனும், வருணனும் தங்கள் கதிர்களையும், பாசக்கயிற்றையும் எடுத்துக் கொண்டு தைத்திய மாயையை அழித்தனர்.(17) குளிர்ந்த நீரால் சோர்ந்தும், பாசக்கயிற்றால் பிணைக்கப்பட்டும் சிகரங்களை இழந்த மலைகளைப் போல இருந்த தைத்தியர்கள், (முற்றிலும்) செயலற்றவர்களாக ஆனார்கள்.(18) சந்திரனால் கொல்லப்பட்டும், குளிரால் நசுக்கப்பட்டும், பனியால் தங்கள் உடல்கள் மறைக்கப்பட்டும் அணைந்த நெருப்பைப் போல அந்தத் தைத்தியர்கள் கீழே விழத் தொடங்கினர்.(19) அசுரர்களின் பல்வேறு தேர்களும் தங்கள் மிளிர்வை இழந்து, வானிலிருந்து கீழே விழவும், மேலே எழவும் தொடங்கின.(20)

தானவன் மயன், பனியால் மறைக்கப்பட்டும், பாசக்கயிற்றால் கட்டப்பட்டும் இருந்த தானவர்களின் முன்பு மீண்டும் மற்றொரு பெரும் மாயை வெளிப்படுத்தினான்.(21) அப்போது அவன், தன் மகன் கிரௌஞ்சனால் உண்டாக்கப்பட்டதும், விரும்பிய இடம் எங்கும் செல்லவல்லதுமான மாயப் பெருமலையை வானத்தில் பரப்பினான். அது கற்களாலும், பாறைகளாலும் நிறைந்திருந்தது. அதன் சிகரங்கள் பெருமரங்களால் மறைக்கப்பட்டிருந்தன., அதன் குகைகளில் சிங்கங்களும், புலிகளும், யானைகளும் நிறைந்திருந்தன. கதறும் மான்களாலும், காற்றில் அசையும் மரங்களாலும் அது நிறைந்திருந்தது.(22-24) அந்த மாய மலையானது, பாறைகளையும், மரங்களையும் பொழிந்து, தேவர்களைக் கொன்று, தானவர்களை மீட்டது.(25) அதன்பிறகு, சந்திரனாலும், வருணனாலும் உண்டாகப்பட்ட மாயை விலகி, அந்தப் போர்க்களத்தில் மயனின் மாயை இரும்பு மேகங்கள் மற்றும் பாறைகளால் தேவர்களை மறைத்தது.(26)

மலைகளின் திரட்சியாலும், மரங்கள் நிறைந்திருந்ததாலும் ஏற்கனவே சமமற்றதாக இருந்த பூமியானது, எவரும் கடக்கக் கடினமான மலைகளால் அடர்த்தியாக மறைக்கப்பட்டது.(27) சில தேவர்கள் பாறைகளால் காயமடைந்தனர், சிலர் கற்களால் தாக்குண்டனர், அந்தப் போரில் வேறு சிலர் மரங்களால் சுற்றி வளைக்கப்பட்டனர்.(28) கதாதரன் (விஷ்ணுவைத்) தவிரத் தேவர்களின் படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் தங்கள் விற்களை இழந்தனர், அவர்களது ஆயுதங்கள் நொறுங்கின. அவர்கள் அனைவரும் செயற்றவர்களானார்கள்.(29) ஆனால், அண்டத்தின் அழகிய தலைவனான கதாதரன், போரில் நிலைத்திருந்தாலும், தன் பொறுமையின் காரணமாகக் கிஞ்சிற்றும் கலக்கமடையவோ, கோபமடையவோ இல்லை.(30) சரியான காலத்தைக் குறித்த ஞானம் கொண்டவனும், அண்ட அழிவின் போது தோன்றும் மேகத்திற்கு ஒப்பானவனுமான ஜனார்த்தனன், தேவர்களும், அசுரர்களும் தாக்கப்படுவதைக் காணும் பொருட்டும், சரியான காலத்திற்காகவும் போர்க்களத்தில் காத்திருந்தான்.(31)

அதன்பிறகு அவன், போர்க்களத்தில் மயனால் உண்டாக்கப்பட்ட மாயை அழிக்குமாறு நெருப்பு மற்றும் காற்றிடம் {அக்னி மற்றும் வாயு தேவர்களிடம்} ஆணையிட்டான்.(32) விஷ்ணுவின் ஆணைப்படி ஒன்றோடொன்றாக இணைந்த நெருப்பும், காற்றும், பெருகி வரும் தழல்களை மேலும் பெருக்கி அந்த மாயையை அழித்தன.(33) காட்டுப் போக்கில் பெருகும் நெருப்பாலும், காற்றாலும் அந்த மாய மலை எரிக்கப்பட்டு அந்தப் போரில் அழிக்கப்பட்டது.(34) நெருப்பால் உதவப்பட்ட காற்றானது, அண்ட அழிவுக் காலத்தில் பெருகுவதைப் போலப் பெருகிற்று. மேலும், காற்றால் உதவப்பட்ட நெருப்பானது அசுரர்களின் படையை எரித்தது.(35) காற்று வீசத் தொடங்கியதும், நெருப்பு அதைப் பின்தொடர்ந்தது; அசுரர்களின் படைக்கு மத்தியில் நெருப்பும், காற்றும் விளையாடிக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை அஃது ஏற்படுத்தியது.(36) தானவர்கள் அனைவரும் எரிக்கப்பட்டு, அவர்களது தேர்கள் கீழே விழத்தொடங்கும்போது, நெருப்பு தன் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய போது, அசுரர்களைக் கொல்வதைத் தவிர்த்துக் காற்றைப் போலத் தேர்கள் அனைத்துப் பக்கங்களில் கீழே விழுந்து கொண்டிருந்த போது, தைத்தியர்கள் செயலற்றவர்களாகி, மூவுலகங்களும் அவர்களது கட்டுகளிலிருந்து விடுபட்டபோது, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் தேவர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டனர்.(37-39)

ஆயிரங்கண் தேவன் {இந்திரன்} வெற்றியடைந்து, அசுரன் மயன் தோல்வியைச் சந்தித்தபோது, அனைத்துத் திசைகளும் தெளிவடைந்து, அறச்சடங்குகள் நீடிக்கத் தொடங்கின.(40) சந்திரனின் பாதை தெளிவடைந்தது, சூரியன் அதன் வழியில் வைக்கப்பட்டது, பூதங்கள் அனைத்தும் தங்கள் இயல்பான வகைக்கு மீண்டன, நல்லொழுக்கத்தை விரும்பும் மனிதர்கள் சுகமாக இருந்தனர்.(41) இறந்தோரின் ஆட்சியாளன் {மிருத்யு} எந்தப் பாகுபாடுமின்றித் தன் பணியைச் செய்யத் தொடங்கினான், நெருப்பில் பலியுணவுகள் படைக்கப்பட்டன, தேவர்கள், வேள்விக் காணிக்கைகளில் தங்கள் பங்கைப் பெறவும், தேவலோகத்தைப் பயன்படுத்தவும் உரிமைபெற்றனர்[6].(42) திக்பாலர்கள், தங்கள் தங்களுக்குரிய மாகாணங்களில் திரியத் தொடங்கினர், தவம் செய்ய விரும்பிய தூய மனிதர்கள் புகழடையத் தொடங்கினர், பக்தியில்லாத மனிதர்கள் எவரும் இல்லை என்ற நிலை இருந்தது.(43) தேவர்களைச் சார்ந்தவர்கள் மகிழ்ந்திருந்தனர், தைத்தியர்களைச் சார்ந்தவர்கள் அடங்கியிருந்தனர். அறம் {தர்மம்} மூன்று கால்களையும், மறம் {அதர்மம்} ஒரு காலின் வடிவையும் ஏற்று நின்றன.(44) பெரும் வாயில் திறந்திருந்தது, அறவழிகள் தோன்றின, உலகின் ஆசிரமங்களும் {வாழ்வுமுறைகளும்}, வர்ணங்களும் தங்கள் கடமைகளைச் செய்யத் தொடங்கின.(45) திரிந்து கொண்டிருந்த மன்னர்கள், தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கத் தொடங்கினர், தேவர்களைத் துதிக்கும் துதிகள் பாடப்பட்டன.(46) பாவங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன, பயங்கரச் செருக்குத் தணிக்கப்பட்டது, நெருப்பு மற்றும் காற்றுக்குரிய அந்தப் போர் முடிவுக்கு வந்தது. அவை {காற்றும், நெருப்பும்} வெற்றியடைந்ததால் மக்கள் அவற்றுக்கு மேன்மையை வழங்கினர்.(47)

[6] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நெருப்பில் இடப்படும் பலியுணவுகளில் தங்கள் பங்கை தவறாமல் பெற்ற தேவர்கள், பலியுணவை அளிப்பவர்கள் சொர்க்கத்திற்குச் செல்லும் வழக்கமான பயணத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சொர்க்கத்தின் நிமித்தமாகத் தேவர்களுக்குச் செய்யப்படும் வேள்விகளைச் செய்யத் தொடங்குவது உறுதிசெய்யப்பட்டது" என்றிருக்கிறது.

காலநேமி என்ற பெயரைக் கொண்ட புகழ்பெற்ற தானவன் {ஹிரண்யகசிபுவின் மகன்}, காற்றுக்கும், நெருப்புக்கும் அசுரர்கள் அஞ்சுவதைக் கேட்டுப் போர்க்களத்தில் தோன்றினான்.(48) அவனது மகுடம், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய முகடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது; அங்கதத்தால் அவன் அலங்கரிக்கப்பட்டிருந்தான், மந்தர மலையைப் போன்ற நூற்றுக்கணக்கான வெள்ளி ஆயுதங்கள், அவனது நூறு கரங்களை அலங்கரித்தன.(49) அவன் நூறு முகங்களையும், நூறு தலைகளையும் கொண்டிருந்தான். அந்த அழகிய அசுரன், நூறு சிகரங்களைக் கொண்ட ஒரு மலையைப் போல அங்கே தோன்றினான்.(50) கோடை காலத்தில் புல் குவியலில் பெருகும் நெருப்பைப் போல அவன் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவன், புகை போன்ற மயிரையும், பச்சைவண்ண தாடியையும், பெரும் பற்களையும், உதடுகளால் அலங்கரிக்கப்பட்ட முகத்தையும் கொண்டிருந்தான். அவன் மூன்று உலகங்களுக்கும் இடைப்பட்ட வெளியில் மிகப்பெரும் பரிமாணத்துடன் கூடிய பேருடலுடன் வாழ்ந்திருந்தான்.(51,52) அவன் வானத்தைத் தன் கரங்களால் உயர்த்தி, மலைகளைத் தன் கால்களால் வீசி, நீர் நிறைந்த மேகங்களைத் தன் மூச்சால் சிதறடித்தான்.(53)

பெரியவையும், சிவந்தவையும், கோணலாகத் தெரிபவையுமான கண்களுடன் கூடியவனும், இந்திரன் போன்ற பலமிக்கவனுமான அந்தத் தானவன் {காலநேமி},(54) எரித்துவிடுபவனைப் போலத் தேவர்களைக் கண்டு முழங்கி, பத்துத் திக்குகளையும் மறைத்தான். அண்ட அழிவின் போது தோன்றும் பசித்த, செருக்குமிக்க மிருத்யுவைப் போல அந்தத் தானவன் அணுகுவதை அவர்கள் {தேவர்கள்} கண்டனர்.(55) மாலைகளால் மறைக்கப்பட்டவனும், அசையும் மலைகளைப் போல உயர்ந்திருந்தவனுமான அந்தத் தானவன், அழகிய உள்ளங்கையைக் கொண்ட தன் வலது கையில் உயர்ந்திருந்தவையும், நன்கு பளபளப்பாக்கப்பட்ட விரல்கவசங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தன் விரல்களை "கொல்லப்பட்ட தானவர்களே எழுவீராக" எனச் சொல்வது போல உயர்த்தினான்.(56,57)

அச்சத்தால் பீடிக்கப்பட்ட தேவர்கள், பகைவருக்குக் காலனைப் போன்ற காலநேமியைப் போரில் கண்டனர்.(58) அந்தக் காலநேமி, மூன்று காலடிகளைக் கொண்ட இரண்டாம் நாராயணனைப் போலச் செல்வதை உயிரினங்கள் கண்டன.(59) காற்றால் அசையும் உடையுடன் கூடிய அந்த அசுரன், தன் முன்னங்காலை உயர்த்தி, தேவர்களை அச்சத்தால் பீடித்தபடியே போர்க்களத்திற்கு வந்தான்.(60) காலநேமி, அசுர மன்னன் மயனுடன் சேர்ந்து கொண்டு போருக்குச் செல்லத் தொடங்கினான். அவர்கள் இந்திரனையும், விஷ்ணுவையும் போலத் தோன்றினர்.(61) அப்போது, காலனைப் போல அணுகும் பயங்கரம் நிறைந்த காலநேமியைக் கண்ட தேவர்கள் அனைவரும் கவலையில் நிறைந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(62)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 46ல் உள்ள சுலோகங்கள் : 62
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நரகாசுரன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி மதிராதேவி மது மதுமதி மயன் மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாயு விகத்ரு விதர்ப்பன் விப்ராஜன் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு