(தே³வாஸுரஸங்க்³ராமவர்ணனம்ி)
The fight between the gods and demons | Harivamsha-Parva-Chapter-45 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : தேவாசுரப் போரில் மயனின் மாயத்தீயால் சாதக நிலையை அடைந்த அசுரர்கள்; மாயத்தீயின் வரலாற்றை இந்திரனிடம் சொன்ன வருணன்; ஊர்வரின் கடுந்தவம்; ஊர்வரின் மகன் ஔர்வன்; ஔர்வனுக்கு வரமளித்த பிரம்மன்...
{வைசம்பாயனர்}, "அதன்பிறகு, ஒருவரையொருவர் வெல்ல விரும்பிய தேவ மற்றும் அசுரப் படைகளுக்கு இடையில் ஒரு பயங்கரப்போர் நடைபெற்றது.(1) பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருந்த தானவர்கள், மலைகளோடு மோதும் மலைகளைப் போலத் தேவர்களுடன் போரிட்டனர்.(2) இவ்வாறு தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில், நியாயமான முறையிலும், நியாயமற்ற முறையிலும், பணிவுடனும், செருக்குடனும் ஓர் அற்புதப் போர் நடைபெற்றது.(3) அப்போது வேகமாகச் செல்லும் குதிரைகளால் இழுக்கப்பட்ட தேர்களும், கைகளில் வாள்களுடன் கூடிய படைவீரர்களும் வானத்தில் இருந்து விழுந்தனர். கதாயுதங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இவற்றாலும், கணைகள், முழுமையாக வளைக்கப்பட்ட விற்கள் மற்றும் தண்டங்களுடன் கூடிய அந்தத் தேவாசுரப் போர் மிகப் பயங்கர நிலையை அடைந்தது. அஃது உலகமெங்கும் பீதியை உண்டாக்கி, அண்ட அழிவின் போது சுழலும் மேகங்களைப் போன்ற ஒரு பயங்கரத் தோற்றத்தை ஏற்படுத்தியது.(4-6)
தானவர்கள், தங்கள் கைகளால் பரிகங்களையும், கற்களையும் வீசி, அந்தப் போரில் இந்திரனையும், தேவர்கள் பிறரையும் தாக்கத் தொடங்கினர்.(7) அந்தப் பெரும்போரில் வெற்றிக்கான அறிகுறிகள் அனைத்துடன் தோன்றிய பெரும்பலம் மிக்கத் தானவர்களால் பெரிதும் தாக்கப்பட்ட தேவர்களின் (முகங்கள்) நிறம் மங்கின. திதியின் மகன்களுடைய ஆயுதங்களின் வலைப்பின்னல்களால் அவர்கள் கலங்கடிக்கப்பட்டனர்; அவர்களது {தானவர்களின்} பரிகங்களால் அவர்களின் {தேவர்களின்} தலைகள் துண்டிக்கப்பட்டன, அவர்களது உடல்கள் சிதைக்கப்பட்டன, அவர்களது காயங்களில் இருந்து ஏராளமான குருதி வெளியேறியது.(8,9) தானவர்களின் சுருக்குக்கயிறுகளால் {பாசங்களால்} சிதைக்கப்பட்டு, அவர்களது கணைகளால் காயமடைந்து, அவர்களது பெண்களின் மாயைகளால் பீடிக்கப்பட்ட தேவர்கள் அசைவற்று நின்றனர்.(10) கலக்கமடைந்திருந்த அவர்கள் உயிர்வாழ்வதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. தேவர்கள் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தாதவாறு அசுரர்கள் அவர்களைச் செயலற்றவர்களாக்கினர்.(11)
தேவர்களின் ஆயிரங்கண் மன்னன் {இந்திரன்}, தன் வஜ்ரத்தைக் கொண்டு தானவர்களின் கணைகளை அறுத்துத் தாக்குப்பிடித்து, அவர்களது மாயப் பாசத்தை விலக்கியபடியே தானவர்களின் பயங்கரப் படைக்குள் புகுந்தான்.(12) அவன் தன் கரிய ஆயுதங்களால் முன்னணியில் நின்று கொண்டிருந்த தைத்தியர்கள் அனைவரையும் கொன்று, மொத்த அசுரப் படையையும் இருளில் மறைத்தான்.(13) தேவர்களின் மன்னனுடைய {இந்திரனின்} சக்தியால் இவ்வாறு இருளில் மூழ்கிய அவர்களால் {அசுரர்களால்}, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.(14) அதன்பிறகு மாயச் சுருக்குக் கயிற்றில் இருந்து விடுபட்ட தேவர்கள், இருளில் மூழ்கியிருந்த தானவர்களை மிகக் கவனமாகக் கொல்லத் தொடங்கினர்.(15) இவ்வாறு தாக்கப்பட்டு, நினைவை இழந்து, இருளின் காரணமாகக் கரு வண்ணத்தில் இருந்த தானவர்கள், சிறகுகள் துண்டிக்கப்பட்ட மலைகளைப் போலக் கீழே விழத் தொடங்கினர்.(16) பூதங்களைப் போன்ற மேங்களைக் கொண்டதும், இருளில் பீடிக்கப்பட்ட பெருங்கடலுக்கு ஒப்பானதுமான தானவர்களின் மன்னனுடைய அரண்மனை, அப்போது இருளின் வடிவம் போலவே தோற்றமளித்தது.(17)
தானவன் மயன், இருளெனும் மாயையை எரித்து, அழிவுக்கால நெருப்புக்கு ஒப்பான காட்டுத்தீயெனும் மிகப் பயங்கர மாயையை {ஔர்வ நெருப்பை} உண்டாக்கினான். மயன் உண்டாக்கிய மாயை இருளனைத்தையும் அழித்தபோது, தைத்தியர்கள், சூரியனைப் போன்ற பிரகாசமான வடிவங்களை ஏற்று மீண்டும் போர்க்களத்தில் தோன்றினர்.(18-19)
மாயக் காட்டுத்தீயால் எரிக்கப்பட்ட தேவர்கள், பனியில் கிடந்த சோமனின் முன்பு தோன்றினர். காட்டுத்தீயால் மிளிர்வழிந்து, அதனால் எரிக்கப்பட்ட தேவர்கள், துயரால் பீடிக்கப்பட்டவர்களாக வஜ்ரதாரியான தங்கள் மன்னனிடம் {இந்திரனிடம்} சென்று இதைச் சொல்லி அவனது புகலிடத்தை நாடினர். மயனின் மாயையால் தேவர்களின் படைவீர்கள் பீடிக்கப்பட்டு, தானவர்களால் எரிக்கப்பட்டபோது, தேவர்களின் மன்னனால் அழைக்கப்பட்ட வருணன் இவ்வாறு {பின்வரும் கதையைச்} சொன்னான்.(20-22).
வருணன், "ஓ! தேவர்களின் மன்னா, பழங்காலத்தில் பிராமண முனிவரான பிருகுவின் மகனும் {பிருகுவின் வழித்தோன்றலும்}, சக்திமிக்கவரும், பிரம்மன் செய்ததைப் போன்ற சாதனைகளால் அலங்கரிக்கப்பட்டவருமான ஊர்வர் கடுந்தவங்களைச் செய்து வந்தார். நித்தியனான சூரியனைப் போல அவர் தமது தவங்களால் மொத்த உலகையும் பீடித்து வந்தார். தேவர்கள் மற்றும் தவசிகளுடன் கூடிய பிராமண முனிவர்கள் அவர் முன்பு தோன்றினர்.(23,24) {வேறு காரியத்திற்காக அங்கே வந்திருந்த} தானவ மன்னன் ஹிரண்யகசிபு, பெருஞ்சக்திமிக்க அந்த ரிஷியிடம் அதை {அவர்கள் வந்திருப்பதைச்} சொன்னான்.(25)
அப்போது அந்தப் பிராமண முனிவர்கள், பின்வரும் புனிதச் சொற்களை அவரிடம் சொன்னார்கள்: "தனியாக, பிள்ளையேதுமற்றவனாக, உன் குலத்தைத் தழைக்கச் செய்யும் சிந்தனையே இல்லாதவனாக நீ இருப்பதால், இந்த ரிஷிக்குடும்பம் இப்போது அழியப்போகிறது. நீ பிரம்மச்சரிய வாழ்வைப் பின்பற்றி இந்தக் கடுந்தவங்களைச் செய்து வருகிறாய்.(26,27) தற்கட்டுப்பாடுடைய ரிஷிகளின் குடும்பங்கள் பலவும், சந்ததியேதும் இல்லாததன் விளைவால் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. ஒரேயோருடல்தான் இருக்கிறது.(28) சந்ததியில்லாமல் இந்தக் குடும்பங்கள் அனைத்தும் அழிவை அடைந்தால், அவர்கள் பெருகுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லாமல் போகும். தவசிகளில் முதன்மையான நீ பிரம்மனின் பிரகாசத்துடன் இருக்கிறாய்.(29) எனவே, உன் குலத்தைப் பெருக்கவும், உன்னை நீயே பெருக்கிக் கொள்ளவும் நினைப்பாயாக. உன் பெருஞ்சக்தியை அர்ப்பணித்து உன்னுடைய இரண்டாம் உடலை உண்டாக்குவாயாக" என்றனர்.(30)
இவ்வாறு ரிஷிகளால் சொல்லப்பட்டதும், தற்கட்டுப்பாடுடைய அந்தத் தவசி மனம் கலங்கியவராக அவர்களைப் பழித்து,(31) "காட்டில் கிழங்குகளை உண்டு வாழ்வதும், ஆரியர்களின் அறங்களைப் பின்பற்றுவதும் முனிவர்களின் நித்திய கடமை என்று பழங்காலத்தில் விதிக்கப்பட்டுள்ளது.(32) பிரம்மனிடம் இருந்து பிறந்த பிராமணர்களால் நன்கு பயிலப்பட்ட பிரம்மச்சரிய நோன்பு அந்தப் பிரம்மனையே கலங்கடித்தது. இல்லறத்தாராக வாழும் பிராமணர்களின் மூன்று கடமைகள், புரோகிதர்களாகப் பணியாற்றுவதும் {யஜனம்}, கற்பிப்பதும் {அத்யாபனம்}, கட்டணம் ஏற்பதும் {ப்ரதிக்ரஹம் / கொடைபெறுதலும்}[1] ஆகும். ஆசிரமத்தில் வாழும் நமது கடமை (பிரம்மச்சரிய நோன்பைக் கடைப்பிடித்துக்) காட்டில் வாழ்வதே ஆகும்.(33,34) கடுந்தவங்களைப் பயின்று, எண்ணம், சொற்கள், செயல்கள் ஆகியவற்றில் கற்பை {தூய்மையை} முதன்மையாகக் கொண்டு, நீரை உணவாக்கி வாழும் முனிவர்களும், காற்றை உண்டு வாழ்பவர்களும், தந்தூலூகலிகர்களும்[2], அஷ்மகுட்டர்களும்[3], தசநாபர்களும்[4], பஞ்சாதபர்களும்[5] மிகச்சிறந்த நிலையை {கதியை} அடைகின்றனர்.(35,36) எண்ணம், சொற்கள் மற்றும் செயல்களில் கொள்ளும் கற்பின் {தூய்மையின்} மூலமே பிராமணர்கள் தங்கள் பிராமணத்தன்மையை அடைகின்றனர். மிகச்சிறந்த உலகத்தில் வாழும் பிரம்மவாதிகள் இதைப் பதிவு செய்திருக்கின்றனர்.(37)
[1] தக்ஷிணை ஏற்பதாக இருக்க வேண்டும்.
[2] "இவர்கள் தானியத்தை நசுக்காமல் {பல்லைக் கொண்டே நசுக்கி} உண்ணும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "இவர்கள் எதையும் {எந்த உணவையும்} கல்லால் உடைத்து, சிதைத்து உண்ணும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[4] "இவர்கள் மலைச்சிகரத்தில் தவம் பயிலும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[5] "இவர்கள் நெருப்பின் மத்தியில் தவம்பயிலும் துறவிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
பொறுமை பிரம்மச்சரியத்தில்[6] வசிக்கிறது, தவம் பிரம்மச்சரியத்தில் இருக்கிறது, அதை {பிரம்மச்சரியத்தைப்} பயிலும் பிராமணர்கள் தேவலோகத்தை அடைகின்றனர்.(38) ஸித்தியில்லாமல்[7] யோகமில்லை, யோகமில்லாமல் புகழேதும் இல்லை. இவ்வுலகில் பிரம்மச்சரியத்தைவிட மகிமையான தவம் வேறேதும் இல்லை.(39) ஒருவன், ஐம்பூதங்களையும், ஐம்புலன்களையும் அடக்கி பிரம்மச்சரியம் பயில வேண்டும். பிரம்மச்சரியத்தைவிடப் பெரிய தவம் வேறென்ன இருக்கிறது?(40) சந்நியாசிகள் செய்ய வேண்டிய யோகப் பயிற்சி இல்லாமல் மயிரை மழித்துக் கொள்வதும், (மறுமைக்கச் செல்ல வேண்டிய) உறுதிப்பாடு கொள்ளாமல் (மக்களை நிறைவடையச் செய்வதற்காகச் சாந்திராயணம் போன்ற) கடும் நோன்பை நோற்பதும், பிரம்மச்சரியமில்லாமல் அறம் பயில்வதுமென்ற இந்த மூன்றும் தம்பம்[8] {ஏய்ப்பு} என்று சொல்லப்படுகின்றன.(41) பிரம்மன், தன் மனத்தில் பெற்ற சந்ததியைப் படைத்தபோது, மனைவி எங்கே இருந்தாள்? உடனுறைவு எங்கே நிகழ்ந்தது? மனக்கலக்கம் எங்கே இருந்தது?(42)
[6] "எண்ணம், சொற்கள் மற்றும் செயல்களில் கற்பு" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[7] "யோகப்பயிற்சிகளின் நிறைவை அடைதலையும், அதன் நோக்கத்தை அடைவதையும் இது குறிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[8] "இதற்கு வஞ்சனை என்று பொருள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
தற்கட்டுப்பாடுடைய முனிவர்களான நீங்கள் பெருந்தவச் சக்தி கொண்டவர்கள். எனவே நீங்கள், குடிமுதல்வப் பணிகளின் மூலம் உங்கள் மனத்தில் பிறக்கும் சந்ததியைப் படைப்பீராக.(43) தவசிகள் தங்கள் மனத்தில் பிறக்கும் பிறப்பிடத்தின் மூலம் சந்ததியை உண்டாக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், தங்கள் மனைவியரிடம் பிள்ளைகளைப் பெறவும் கூடாது.(44) பக்திமான்களான நீங்கள் அனைவரும் பல்வேறு அறப் பயிற்சிகள் குறித்துச் சொன்னது, முற்றான முறைகேடாக எனக்குத் தோன்றுகிறது.(45) நான் ஒரு மனைவியை மணந்து கொள்ளாமல், மனத்தோடு அடையாளங்காணப்படுவதும், ஆன்மாவைக் கொண்டதுமான என்னுடைய இந்தப் பிரகாசமான உடலைக் கொண்டு, என் உடலில் பெறப்படும் ஒரு மகனை உண்டாக்குவேன்.(46) காட்டின் விதிமுறைகளின்[9] மூலம் என்னுடைய இந்த உடலில் இருந்து, உயிரினங்களை எரிக்கவல்ல இரண்டாம் உடலொன்றை நான் படைக்கப்போகிறேன்" என்றார் {ஊர்வர்}.(47)
[9] "காட்டில் வாழும் முனிவர்களால் பின்பட்டப்படும் விதிமுறைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
அதன்பிறகு அவர் {ஊர்வர்} தபத்ததில் ஈடுபட்டு, தமது தொடையை நெருப்பில் இட்டு, ஒரு தர்ப்பையைக்[10] கொண்டு ஒரு மகனைக் கொடுக்கவல்ல அரணியைக்[11] கடைந்தார். அப்போது அண்டத்தையே எரிக்க விரும்பும் ஒரு மகனின் வடிவில் தழல்கள் சூழ்ந்த நெருப்பானது திடீரென்று வெளி வந்தது.(48,49) அனைத்தையும் அழிக்கவல்லதும், கோபம் நிறைந்ததுமான அந்த ஔர்வ நெருப்பானது, மூவுலகங்களையும் எரிக்க விரும்புவதைப் போல ஊர்வரின் தொடைகளைப் பிளந்து வந்தது[12].(50)
[10] "குசம் அல்லது வேள்விப்புல்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[11] "அரைப்பதன் மூலம் நெருப்பை மூட்டவல்ல மரம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[12] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "பிறகு, தவத்தில் ஈடுபட்ட ஊர்வர், இரண்டு அரணிக்குச்சிகளைத் தேய்த்து, அவற்றில் சடங்குக்கான நெருப்பை உண்டாக்கி, நெருப்பை மூட்டத் தன் தொடையில் தர்ப்பைப் புல்லைவைத்து, நெருப்பைப் போன்ற மகனைப் பெற ஒற்றை எண்ணத்துடன் தொடர்ந்து கவனித்து வேத மந்திரங்களுடன் அதைப் பற்ற வைத்தார். அப்போது திடீரென விறகில்லா தழல்களில் முறுக்கிப்பின்னப்பட்டதும், அண்டத்தையே எரித்துவிடும் பேராவல் கொண்டவதுமான ஒரு தனியுரு ஊர்வ முனிவரின் தொடையைப் பிளந்து கொண்டு தோன்றிற்று. மூவுலகங்களையும் சாம்பலாக்கவல்ல சீற்றம் கொண்டதும், ஊர்வ முனிவரிடமிருந்து வெளியே வந்ததும், அனைத்தையும் அழிக்கவல்லதுமான அந்த நெருப்பானது ஔர்வ நெருப்பு என்று அழைக்கப்பட்டது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "ஊர்வர் தவம் செய்தார். கொஞ்சம் தர்ப்பைப் புல்லை எடுத்து, அதைத் தமது தொடையில் பிசைந்தார். அவர் தமது சக்திகளைக் கொண்டு, நெருப்பை மூட்டவும், உண்டாக்கவும் அவை இரண்டையும் பயன்படுத்தினார். அந்த நெருப்பில் இருந்து அண்டத்தை எரிக்க விரும்பும் மகன் ஒருவன் உண்டானான். அவன் ஊர்வரின் தொடையைத் துளைத்ததன் மூலம் தோன்றியதால் ஔர்வ நெருப்பு என்று அறியப்பட்டான்" என்றிருக்கிறது.
அவன் {ஔர்வநெருப்பு} பிறந்த உடனேயே, தன் தந்தையிடம் {ஊர்வரிடம்}, "ஓ! தந்தையே, நான் பசியால் பீடிக்கப்படுகிறேன். என்னை விட்டால் மொத்த உலகையும் நான் உண்டுவிடுவேன்" என்றான்.(51) தேவலோகம் வரை உயர்ந்த தழல்களுடன் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், அனைத்தையும் அழிக்கும் அந்த நெருப்பானது, பத்து திசைகளையும், பூதங்கள் அனைத்தையும் முற்றாக எரித்து, தன்னைப் பெருக்கிக் கொண்டது.(52) அதே வேளையில் அனைத்து உயிரினங்களின் ஆசானான தலைவன் பிரம்மன், அந்த முனிவர் தமது சிறப்புமிக்க மகனைப் பெற்ற இடத்திற்குச் சென்றான்.(53) அங்கே அவன் {பிரம்மன்}, முனிவர்களுடன் கூடிய உலகங்கள், ஊர்வரின் தொடையில் பிறந்த நெருப்பு மகனுடன் சுடர்விட்டெரிவதையும், ஔர்வ நெருப்பின் கோபத்தால் தாக்கப்படுவதையும் கண்டான்.(54)
அப்போது பிரம்மன், ஊர்வ ரிஷியைக் கௌரவித்து, அவரிடம், "உலகின் மீது கருணை கொண்டு, உன் மகனின் சக்தியைத் தாங்குவாயாக. ஓ! விப்ரா, உன்னுடைய இந்த மகனுக்குப் பொறுமையெனும் மிகச் சிறந்த நற்பண்பை நான் வழங்குவேன். மேலும் நான் அவனுக்குச் சிறந்த வாழ்விடங்களையும், அமுதம்போன்ற உணவையும் வழங்குவேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவனே, வாய்மைநிறைந்த என்னுடைய இந்தச் சொற்களைக் கேட்பாயாக" என்றான்.(56)
ஊர்வர் {பிரம்மனிடம்}, "நான் அருளப்பட்டவன் ஆனேன். தலைவன் என் பிள்ளைக்குப் பேரருளைக் கொடுத்து, இந்த ஆதரவையும் அவனுக்குக் கொடுத்திருப்பதால் நான் பேருதவியைப் பெற்றவனானேன்.(57) என்னுடைய மகானான இவன் விரும்பத்தக்க இளமையை அடையும்போது, ஹவ்யங்களால் கௌரவிக்கப்படும் மகிழ்ச்சியை எவ்வாறு அடைவான்? அவனது வீடு {வசிப்பிடம்} எங்கே இருக்கும்? அவனது உணவாக இருக்கப்போவது எது? பலம் திரண்டவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான இவனுக்கு என்ன வகை உணவை ஏற்பாடு செய்வீர்?" என்று கேட்டார்.(58,59)
பிரம்மன் {ஊர்வரிடம்}, "இந்தப் பிள்ளை ஒரு பெண்குதிரைக்கு ஒப்பான பெருங்கடலின் வாய்க்குள் {துளைக்குள்} வாழ்ந்து வருவான் {எனவே படபா முகாக்னி என்றழைக்கப்படுவான்}. ஓ! விப்ரா, நான் நீரில் பிறந்தவன், எனவே இவனது உடல் நீராலானதாக இருக்கும்.(60) நான் எப்போதும் நீர் உணவை உண்டு நீரிலேயே வாழ்கிறேன். நான் உன் மகனுக்கு {நீராகிய} இந்த உணவையே கொடுப்பேன். அவன் அதை உட்கொள்ளட்டும்.(61) ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, ஒரு யுகம் முடியும் வேளையில், இந்த நெருப்பு உலகங்கள் அனைத்தையும் எரிக்கும். அவனுடன் சேர்ந்து நான் உலகங்களை மீண்டும் மீண்டும் விழுங்குவேன்.(62) இந்த நெருப்பானவன், என்னால் அழிவுக்கால நீரில் வாழச் செய்யப்படுகிறான். அவன், தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்களுடன் கூடிய உயிரினங்கள் அனைத்தையும் எரிப்பான்" என்றான்.(63)
புனிதமாக்கப்பட்ட நெருப்பின் தழல்களால் சூழப்பட்ட ஔர்வன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, தன் தந்தையின் முன்பு தன் பிரகாசத்தைக் கைவிட்டு, பெருங்கடலின் வாய்க்குள் புகுந்தான்.(64)
அதன்பிறகு, பிரம்மனும், பெரும் முனிவர்கள் பிறரும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். அவர்கள், ஔர்வ நெருப்பின் சக்தியைக் கேட்டுத் தங்கள் தங்களுக்குரிய வழிகளில் சென்றனர்.(65) அற்புதம் நிறைந்த இந்தக் காரியத்தைக் கேட்ட ஹிரண்யகசிபு, தன் அங்கங்கள் அனைத்தையும் தரையில் கிடத்தி, ஊர்வரை வழிபட்டு, பின்வரும் சொற்களில்,(66) "ஓ! மதிப்புக்குரிய ஐயா, உலகங்கள் அனைத்தும் கண்ட இந்தக் காரியம் அற்புதம் நிறைந்தது. ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, பெரும்பாட்டன் உமது தவங்களில் நிறைவடைந்திருக்கிறார்.(67) ஓ! பெரும் நோன்புகளை நோற்பவரே, என் செயல்பாடுகளுக்காக நான் பாராட்டத் தகுந்தவனாக இருந்தால், என்னை உமது பணியாளாகவும், உமது மகனின் பணியாளாகவும் அறிவீராக.(68) உம்மை வழிபடுவதில் ஈடுபடும் என்னைக் காண்பீராக. ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, நான் தோல்வியைச் சந்தித்தால், அஃது உமது தோல்வியாகவே இருக்கும்" என்றான்.(69)
ஊர்வர், "நீ என்னை உன் ஆசானாக ஏற்றதால் நான் அருளப்பட்டவனும், கௌரவிக்கப்பட்டவனும் ஆனேன். ஓ! உறுதியான நோன்புகளை நோற்பவனே, தவங்களால் இனி உனக்கு அச்சமேதும் ஏற்படாது.(70) என் மகனை உண்டாக்கிய விறக்கற்ற நெருப்பாலும் எளிதில் தீண்டமுடியாத இந்த மாய நெருப்பை நீ எடுத்துக் கொள்வாயாக.(71) இந்த மாயை உன் குடும்பத்தின் எதிரிகளைக் கொல்ல உனக்கு உதவும்; இஃது உன் படையைப் பாதுகாத்து, பகைவரின் படையை எரிக்கும்" என்றார்.(72) தானவர்களின் மன்னனான ஹிரண்யகசிபு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி அந்த முதன்மையான முனிவரை வணங்கிவிட்டு நிறைவடைந்தவனாகத் தேவலோகத்திற்குத் திரும்பினான்".(73)
வருணன், "இதுவே தேவர்களால் தாங்க முடியாததும், ஊர்வரின் மகனான ஔர்வரால் பழங்காலத்தில் படைக்கப்பட்டதுமான அந்த மாயையாகும்.(74) அந்தத் தைத்தியன் {ஹிரண்யகசிபு} இறந்ததும் அது தன் சக்தியை இழந்திருக்க வேண்டும். அதை {அந்த மாயாநெருப்பைப்} படைத்தவரே பழங்காலத்தில் அதற்கு ஒரு சாபத்தைக் கொடுத்திருக்கிறார்.(75) இந்த மாயைக்கு எதிராக நம்மால் போராட முடிந்தால் தேவர்களின் மன்னன் மகிழ்ச்சியடைவார்[13]. ஓ! சக்ரா {இந்திரா}, நீரில் பிறந்தவனான என் நண்பன் நிஷாகரனை {சந்திரனை} எனக்குக் கொடுப்பாயாக.(76) நான் அவனுடனும், யதோஸ்களுடனும்[14] சேர்ந்து, என் புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, உன் உதவியின் முலம் நிச்சயம் இந்த மாயை அழிப்பேன்" என்றான் {வருணன்}" என்றார் {வைசம்பாயனர்}.(77)
[13] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "தேவர்கள் கூடத் தாங்கிக் கொள்ள முடியாததும், சடங்கின் நெருப்பால் உண்டானதும், ஊர்வ முனிவரால் படைக்கப்பட்டதுமான அது பயங்கரமான நரகமும், நெருப்பை உண்டாக்கும் பெருநெருப்பும் ஆகும். அந்த நெருப்பின் தீவிரம், தைத்தியனான ஹிரண்யகசிபுவின் வீழ்ச்சிக்குப் பிறகு குறைந்திருக்க வேண்டும் என்றாலும் நம்மை எதிர்கொள்ள இன்னும் அஃது உயிருடன் இருக்கிறது என்றே நான் ஐயுறுகிறேன். மேலும் பழங்காலத்தில், சந்திரனின் சக்தியில் இருந்து அதைப் படைத்தவனே அதைச் செயலிழக்கச் செய்வதற்குரிய வழியையும் ஏற்படுத்தியிருக்கிறான். அதற்கான எதிர்வினை சந்திரக் கதிர்களே ஆகும். அந்த நெருப்பை எளிதாக விரட்டுவதே நமது நோக்கமென்றால், ஓ! இந்திரா, நீரில் இருந்து எழுந்து, இரவை உண்டாக்குபவனான சந்திரனின் உதவியை எனக்குக் கொடுப்பாயாக. அவனுடனும், வேறு சில நீர்வாழ் உயிரினங்களுடனும் சேர்ந்து, உன்னுடைய நல்லருளின் துணையையும் கொண்டு அந்தச் சுழல்நெருப்பை நான் முறியடிப்பேன். இதில் ஐயமேதுமில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "தாக்குப்பிடிக்க முடியாத மாயையான இதனைத் தேவர்களாலும் எதிர்கொள்ள முடியாது. இது முன்பு ஊர்வரின் மகனான ஔர்வரால் உண்டாக்கப்பட்ட நெருப்பாகும். அந்தத் தைத்தியன் {ஹிரண்யகசிபு} சென்ற பிறகும் அந்த நெருப்பு நிச்சயம் சக்தியை இழக்கவில்லை. பழங்காலத்தில் படைப்பாளன் தன் சக்தியைப் பயன்படுத்தி நமக்காகவே இந்தச் சாபத்தைப் படைத்தான். ஓ! சக்ரா, ஓ! சிறப்புமிக்கவனே, நீ மகிழ்ச்சியடையவும், இதை எதிர்கொள்ளவும் விரும்பினால், நீரில் இருந்து பிறந்தவனும், உன் நண்பனுமான சந்திரனை எனக்குக் கொடுப்பாயாக. உன் உதவிகளின் மூலம் நான் இந்த மாயை நிச்சயம் அழிப்பேன்" என்றிருக்கிறது.
[14] "நீர்வாழ் உயிரினங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.