(ப்ருதூபாக்யானம்)
origin of the earth!| Harivamsa-Parva-Chapter-06 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : பிருதுவுக்கும், பூமாதேவிக்கும் இடையில் நடந்த உரையாடல்; பூமியைச் சமப்படுத்திய பிருது; பிருதுவின் மூலம் உண்டாகிய மூன்று தொழில்கள்; பல்வேறு காலக்கட்டங்களில் பூமாதேவியிடம் கறக்கப்பட்ட பலன்கள்; புதிய பூமி; பிருதுவின் மகள் பிருத்வி; மேதஸால் நிறைந்த மேதினி...
பிருது, "எவன் ஒருவன், தன் தரப்பைச் சார்ந்த அல்லது எதிர் தரப்பைச் சார்ந்த ஒருவனுக்காக பல உயிர்களை அழிக்கிறானோ, அவன் இம்மையில் பாவம் இழைத்தவனாவான்.(1) தீங்கு நிறைந்த ஒருவனைக் கொல்வதன் மூலம் பலர் மகிழ்ச்சியடைந்தால் அதில் சிறியதாகவோ, பெரியதாகவோ எந்தப் பாவமும் பற்றாது.(2) ஒரு தீய மனிதனை அழிப்பதன் மூலம் பலருக்கு நன்மை நேருமேயானால், அத்தகைய செயல் அறமீட்டலுக்கே வழிவகுக்கும்.(3) எனவே, ஓ! பூமியே, நான் என் குடிமக்களின் நன்மைக்காக உன்னைக் கொல்லப் போகிறேன். உலகின் நன்மைக்காக நான் இடும் இந்தக் கட்டளையை நீ நிறைவேற்றவில்லையெனில், என் ஆணையைப் புறக்கணிக்கும் உன்னை நான் இந்தக் கணையால் கொல்வேன். என்னை நானே (பூமிக்கடியில்) புதைத்துக் கொண்டு என் குடிமக்களை நான் எப்போதும் காத்திருப்பேன்.(4,5) ஓ! அறச் சடங்குகளை எப்போதும் நோற்பவளே, என் குடிமக்களைக் காக்கவல்லவள் என்பதால், என் ஆட்சிக் காலத்தில் நீ அவர்களுக்கு உயிர் கொடுப்பாயாக.(6) நீ எனக்குப் பாலைத் தருவாயாக. அப்போது நான் உன் அழிவுக்காக எடுத்த இந்தப் பயங்கரக் கணையை விலக்கிக் கொள்வேன்" என்றான் {பிருது}.(7)
பூமி, "ஓ! வீரா, நீ சொன்ன அனைத்தையும் நான் மெய்யாகவே செய்வேன். வழிமுறைகளுடன் மேற்கொள்ளப்படும் பணிகள் எப்போதும் வெற்றியை அடைகின்றன.(8) எனவே, குடிமக்கள் அனைவரும் காக்கப்படும் வழிமுறைகளை நீ நாடுவாயாக. என்னுடைய இந்தக் கன்றைப் பார். இதனிடம் பற்று கொண்ட நான் பாலைத் தருவேன்.(9) ஓ! அறவோரில் முதன்மையானவனே, என் பால் எங்கும் அடையும் வகையில் நீ என் பரப்பை நேர் செய்வாயாக {சமப்படுத்துவாயாக}" என்றாள்".(10)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அதன் பேரில் வேனனின் மகன் {பிருது}, தன் வில்லின் முனையைக் கொண்டு ஆயிரக்கணக்கான மலைகளை வேரோடு பிடுங்கியதால், அவை (எண்ணிக்கையில்) பெரிதாக பல்கிப் பெருகின.(11) பிறகு, வேனனின் மகனான பிருது பூமியின் பரப்பை நேர் செய்தான். முந்தைய மன்வந்தரத்தில் அவள் நேரற்ற பரப்பைக் கொண்டிருந்தாள்.(12) பூமியானவள் இயல்பாகவே நேராகவும், நேரில்லாமலும் இருந்தாள்; இதுவே சாக்ஷுஷ மன்வந்தரத்தில் அவளுடைய நிலையாகும்.(13) முந்தைய மன்வந்தரத்தில் பூமி நேரற்றவளாக இருந்ததால், நகரங்களாகவும், கிராமங்களாகவும் அவள் முறையாகப் பகுக்கப்படாதிருந்தாள்.(14) தானியங்களோ, பசு வளர்ப்போ, உழவோ, வணிகமோ அப்போது இல்லை. மெய்யோ, பொய்யோ, பேராசையோ, செருக்கோ அப்போது இல்லை.(15)
ஓ! மன்னா, இப்போது வைவஸ்வத மன்வந்தரம் தொடங்கியதும் வேனனின் மகனான பிருதுவிடம் இருந்தே உழவு, வணிகம் மற்றும் பசு வளர்ப்பு ஆகியன {ஆகிய தொழில்கள்} உண்டாகின.(16) ஓ! பாவமற்றவனே, அந்த நேரத்தில், பூமியில் எந்த இடங்கள் நேர் {சமம்} செய்யப்பட்டனவோ அங்கே மக்கள் தங்கள் வசிப்பிடங்களை அமைத்துக் கொள்ள விரும்பினர்.(17) பிறகு மக்கள் பெருஞ்சிரமத்துடன் கனிகள் மற்றும் கிழங்குகளை உண்டு வாழ்ந்தனர். இதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(18) மனிதர்களில் முதன்மையானவனும், வேனனின் பலமிக்க மகனுமான பிருது, ஸ்வாயம்பூ மனுவை ஒரு கன்றாக மாற்றி, அனைத்து வகை தானியங்களையும் தன் கைகளாலேயே பூமியிடம் கறந்தான்.(19) ஓ! குழந்தாய், அந்த உணவை நாள் தோறும் உண்டே இப்போதும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பூமி மீண்டும் முனிவர்களாலும் கறக்கப்பட்டாள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். சோமன் அவர்களுடைய கன்றானான்; பெருஞ்சக்தி கொண்டவரும், அங்கீரஸின் மகனுமான பிருஹஸ்பதி அவளைக் கறந்தார். ஓ! பரதனின் வழித்தோன்றலே, வேதங்கள் {பால் கொள்ளும்} பாத்திரங்களாகின, பிரம்மத்திடம் நித்திய அர்ப்பணிப்பே ஒப்பற்ற பாலானது.(20,21)
(கையில் தங்கப் பாத்திரங்களுடன் கூடிய) புரந்தரன் {இந்திரன்} தலைமையிலான தேவர்கள் அனைவராலும் அவள் மீண்டும் கறக்கப்பட்டாள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(22) மகவான் (இந்திரன்) கன்றானான், தலைவன் சூரியன் அவளைக் கறந்தான். அப்போது தொடர்ச்சியாகப் பொழிந்த பாலிலேயே {அமுதத்திலேயே} தேவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.(23)
(கைகளில்) வெள்ளிப்பாத்திரங்களுடன் கூடியவர்களும், அளவிலா சக்தி படைத்தவர்களுமான பித்ருக்களால் பூமி மீண்டும் கறக்கப்பட்டாள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(24) பலமிக்க விவஸ்வானின் மகன் கன்றானான், லோகங்களை (உலகங்களை) அழிப்பவனான அந்தகன் அவளைக் கறந்தான்.(25)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, நாகர்கள், தக்ஷகனைக் கன்றாக்கி, தங்கள் உள்ளங்கைக் குழிகளைப் பாத்திரமாக்கி அவளைக் கறந்து நஞ்சைப் பாலாக அடைந்தனர்.(26) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ஓ! மன்னா, நாகர்கள் அவளைக் கறந்தபோது, பலம் நிறைந்த ஐராவதனும் திருதராஷ்டிரனும் அவளைக் கறப்பவர்களானார்கள்.(27) அந்த நஞ்சைக் கொண்டே கடும் நஞ்சு கொண்ட பெரும் பாம்புகள் தங்கள் பயங்கர வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் நஞ்சிலேயே வாழ்கிறார்கள், நஞ்சையே கொடுக்கிறார்கள், நஞ்சே அவர்களது சக்தியாக அமைந்திருக்கிறது.(28)
அசுரர்கள், பகைவரை வெல்வதற்கான மாய சக்தியை அடைவதற்காக இரும்புப் பாத்திரங்களுடன் பூமியைக் கறந்தனர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(29) பிரஹலாதனனின் மகன் விரோசனன் அவர்களின் கன்றானான், பெரும்பலம் கொண்டவரும், தைத்தியர்களின் புரோஹிதரும், இரண்டு தலைகளைக் கொண்டவருமான மது அவளைக் கறந்தான்.(30) அந்த மாய சக்தியைக் கொண்டு அசுரர்கள் தங்கள் மாயங்களைப் பயன்படுத்திவருகின்றனர். அளவற்ற ஞானம் கொண்ட அசுரர்கள் அதன் மூலம் பெரும் பலமிக்கவர்களானார்கள்.(31)
ஓ! ஏகாதிபதி, பழங்காலத்தில் காட்சியில் இருந்து நித்தியமாக மறைந்து போகும் ஆற்றலைப் பெறும் நோக்கில் மெருகற்ற பாத்திரங்களுடன் கூடிய யக்ஷர்களால் பூமியானவள் மீண்டும் கறக்கப்பட்டாள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(32) பெரும் பிரகாசமும், பக்தியும் கொண்ட யக்ஷர்கள் வைஸ்ரவணனை {குபேரனைத்} தங்கள் கன்றாக்கினர். மணிநாபனின் {மணிவரனின்} தந்தையும், ரஜதநாபன் என்ற பெயரைக் கொண்டவரும், மூன்று தலை கொண்டவருமான தவசியே (பூமியைக்) கறந்தார். அதன் மூலமே (மற்றொருவரின் உடலுக்குள் மறைந்து போகும் சக்தியின் மூலமே} அவர்கள் இப்போதும் வாழ்ந்து வருகின்றனர். இதைப் பெருமுனிவரான நாரதர் சொல்லியிருக்கிறார்.(33,34)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இறந்த உடல்களின் {சடலங்களின்} மண்டையோடுகளுடன் கூடிய ராட்சசர்களும், பிசாசங்களும், தங்கள் பிள்ளைகளுக்கு நிறைவை அளிக்கும் நோக்கில் பூமியை மீண்டும் கறந்தனர்.(35) ஓ! குரு குலத்தின் மகிமையாக இருப்பவனே, ரஜதநாபன் அவர்களுக்காக (பூமியைக்) கறந்தார். ஸுமாலி கன்றானான், பாலுடன் குருதி வந்தது.(36) குருதி நிறைந்த அந்தப் பாலைக் கொண்டு யக்ஷர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள் மற்றும் பிற பூதங்களும் தங்கள் உயிர்களைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.(37)
ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, கந்தர்வர்களும், அப்சரஸ்களும், இனிய நறுமணத்திற்காக சித்திரரதனைக் கன்றாக்கி, தாமரைப் பாத்திரங்களுடன் அவளை மீண்டும் கறந்தனர்.(38) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, பெரும் பலம் மிக்கவனும், உயர் ஆன்மா கொண்ட கர்ந்தவர்களின் மன்னனும், சூரியனுக்கு ஒப்பானவனுமான ஸுருசி அவர்களுக்காக (அவளைக்) கறந்தான்.(39)
ஓ! மன்னா, உடல் வடிவத்துடன் கூடிய மூலிகைகள் மற்றும் பல்வேறு ரத்தினரங்களுக்காக மலைகள் அவளை மீண்டும் கறந்தன என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(40) ஹிமவான் கன்றானான், பெரும் மலையான ஸுமேரு (அவளைக்) கறந்தான். வேறு பெரும் மலைகள் பாத்திரங்களாக இருந்தன, அதன் மூலம் அந்த மலைகள் அளவுகளில் பெருகுகின்றன.(41)
ஓ! மன்னா, பழங்காலத்தில் எரிந்து போன மரங்கள் மற்றும் செடிகொடிகளை மீட்டெடுப்பதற்காக பலாச {புரச மர} இலைகளுடன் கூடியவையாக மரங்கள் ஒருமுறை அவளைக் கறந்தன என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(42) மலர்ந்திருந்த சால {ஆச்சா / குங்கிலிய} மரம் அவளைக் கறந்தது, பிலக்ஷ {ஆல} மரம் கன்றானது.
அனைவரையும் தாங்குபவளும், தூய்மைப்படுத்துபவளுமான பூமி, அசையும் மற்றும் அசையாத மொத்த படைப்பின் பிறப்புக்கும், பாதுகாப்புக்குமான கருவியாக இருக்கிறாள். கறக்கப்படும்போது அவள் விருப்பத்திற்குரிய பொருட்கள் அனைத்தையும் கொடுக்கிறாள்; தானியங்களை விளைவிக்கிறாள்.(43,44) பெருங்கடல் வரை பரந்திருக்கும் அவள் மேதினி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறாள். அவளுடைய மொத்த பரப்பும், மது கைடபர்களின் கொழுப்பால் நிறைந்திருந்தது. எனவே அவள் பிரம்மனாலும், பிறராலும் மேதினி என அழைக்கப்பட்டாள்[1].(45) ஓ! பரதனின் வழித்தோன்றலே, வேனனின் மகனான மன்னன் பிருதுவால் அவள் ஆளப்பட்டபோது, அவனுடைய மகளாகிய அவள் பிருத்வி என்ற பெயராலும் அழைக்கப்படலானாள்.
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மேதஸ் என்பது கொழுப்பைக் குறிக்கும் சொல்லாகும். மேதஸில் நனைந்திருப்பதால் அவள் மேதினியென அழைக்கப்பட்டாள். மேலதிக குறிப்புகள் வால்மீகி இராமாயணத்தின் பாலகாண்டத்தில் இருக்கின்றன" என்றிருக்கிறது.
பிருதுவால் பகுக்கப்பட்டு, தூய்மை செய்யப்பட்ட பூமியானவள், தானியங்கள், சுரங்கங்கள், நகரங்கள் மற்றும் மாகாணங்கள் நிறைந்தவளானாள். ஓ! மன்னர்களில் சிறந்தவனே, வேனனின் மகன் அவ்வளவு பலமிக்க மன்னனாக இருந்தான்.(46,47) அனைத்து உயிரினங்கள் மதிப்புக்குரியவனாகவும், துதிக்கத் தகுந்தவனாகவும் அவன் இருந்தான் என்பதில் ஐயமில்லை. நித்திய பிரம்மத்தில் பிறந்தவனும், பெரும் பிராமணர்களாலும் துதிக்கப்படத் தகுந்தவனுமான பிருது, வேதங்களையும், அவற்றின் பிரிவுகள் அனைத்தையும் நன்கு படித்தவனாவான். பலமிக்கவனும், முதன்மையானவனும், வேனனின் மகனுமான பிருது, அரசுகளை விரும்பும் பெரும் மன்னர்களாலும் துதிக்கப்படத் தகுந்தவனாவான். வீரர்களில் முதல் மன்னனான பிருது, போரில் வெற்றியை விரும்பும் வீரமிக்கப் போர்வீரர்களின் துதிக்கும் தகுந்தவனாவான்.(48-50)
மன்னன் பிருதுவின் பெயரைச் சொல்லிவிட்டு போர்க்களத்தைவிட்டு வெளியேறும் போர்வீரன், பயங்கரம் நிறைந்த போர்களிலும் வெற்றியாலும், மகிமையாலும் மகுடம் சூட்டப்படுவான்.(51) அனைவருக்கும் வாழ்வாதாரத்தை அளித்த சிறப்புமிக்க மன்னன் பிருது, வணிகம் செய்யும் செல்வந்தர்களான வைசியர்களின் துதிக்கும் தகுந்தவனாவான்.(52) முதல் மன்னன் {பிருது}, உயர்ந்த நன்மையில் விருப்பம் கொண்டவர்களும், மூன்று வர்ணங்களுக்கும் தொண்டாற்றுபவர்களுமான தூய்மையான சூத்திரர்களின் துதிக்கும் தகுந்தவனாவான்.(53) ஓ! ஏகாதிபதி, இவ்வாறே, பல்வேறு கன்றுகளையும், கறந்தவர்களையும், பல்வேறு வகை பால்களையும், பாத்திரங்களையும் நான் சொன்னேன். இன்னும் நான் உனக்கு எதை விவரிக்க வேண்டும்?" {என்று கேட்டார் வைசம்பாயனர்}.(54)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 06ல் உள்ள சுலோகங்கள் : 54
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |