Wednesday 1 April 2020

திரிசங்கு | ஹரிவம்ச பர்வம் பகுதி – 13

(திரிசங்குசரிதம்)

Legend of Trishankhu | Harivamsa-Parva-Chapter-13 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : விஷ்வாமித்ரரின் சந்ததியைப் பாதுகாத்த ஸத்யவிரதன்; வசிஷ்டரின் பசுவைக் கடத்தி உண்ட ஸத்யவிரதன்; ஸத்யவிரதன் திரிசங்கு என்ற பெயரைப் பெற்றது; திரிசங்குவை உடலோடு சொர்க்கம்புகச் செய்த விஷ்வாமித்ரர்; திரிசங்குவின் மகன் ஹரிஷ்சந்திரன்; ஹரிஷ்சந்திரனின் கொடிமரபில் வந்த ஸகரன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஸத்யவிரதன், தான் கொண்ட பக்தி, கருணை, உறுதி ஆகியவற்றால் எப்போதும் பணிவுடன் விஷ்வாமித்ரரின் சந்ததியைப் பாதுகாத்தான்.(1) அவன், காட்டு மான்கள், கரடிகள், எருமைகள் ஆகியவற்றைக் கொன்று அவற்றின் இறைச்சியை விஷ்வாமித்ரருடைய ஆசிரமத்தின் அருகில் உள்ள மரங்களில் கட்டினான்.(2) தன் தந்தையான மன்னன் {திரையாருணன்} காட்டுக்குச் சென்றதும், அவனது {தன் தந்தையின்} கட்டளையின் பேரில் மாற்றான் மனைவியைக் கொள்வதில்லை என்ற நோன்பை நோற்று ஒரு பயிற்சியாளனாகப் பனிரெண்டு ஆண்டுகள் காட்டில் இருந்தான்.(3) வசிஷ்ட முனிவர், அரசுப் புரோகிதராக இருந்தபடியால், அவரே அயோத்யா நகரத்தையும், நாட்டையும் பாதுகாத்து வந்தார்.(4)


ஸத்யவிரதனும், தன் குழந்தைத்தனத்தாலும், எதிர்காலத்தில் தான் அடைய வேண்டிய மகிமைக்காகவும், மடமையினால் வசிஷ்டரிடம் பெருங்கோபம் கொண்டான்.(5) ஓ! மன்னா, அவனுடைய தந்தை தன் சொந்த மகனான ஸத்யவிரதனைக் கைவிட்டபோது, வசிஷ்டர் அவனைத் தடுக்கவில்லை.(6) ஏழு காலடிகள் எடுத்து வைப்பதன் மூலம் திருமணச் சடங்குகள் அனைத்தும் விலக்கப்படுகின்றன {நடைமுறையில் இருந்து நீக்கப்படுகின்றன}. எனினும், முணுமுணுக்கப்படும் அந்த மந்திரங்களை ஸத்யவிரதனால் கேட்க முடியவில்லை.(7) ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயா}, "இஃது அறமென அந்த உறுதிமொழி குறிப்பிட்டாலும், வசிஷ்டர் என்னைக் காக்கவில்லை" என்று நினைத்த ஸத்யவிரதன் உண்மையில் அவரிடம் பெருங்கோபம் கொண்டான்[1].(8)

[1] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "எந்தவொரு மணமகனும், மணமகளும், ‘ஸகா ஸப்தாபடீ மம’ என்ற மந்திரத்தைச் சொன்னபடியே திருமணச் சடங்கில் உள்ள நெருப்பைச் சுற்றி ஏழு முறை வலம் வரவில்லையெனில் அவர்கள் திருமணம் செய்யப்பட்டவர்களாக அறிவிக்கப்படமாட்டார்கள். அத்தகைய காலம் வரை அந்த மணமகள் வனிதையாகவே {திருமணமாகாத பெண்ணாகவே} இருக்கிறாள். இந்த விதிநிலையை வசிஷ்டர் அறிந்திருந்தாலும், நான் திருமணமாகாத ஒரு வனிதையையே கவர்ந்திருந்தாலும், என் தந்தை "மாற்றான் மனைவியை அபகரித்தவன்" என என்னை அறிவித்துத் தேவையில்லாமல் சீற்றமடைந்தபோது அவர் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். இதுவே ஸத்யவிரதன் வசிஷ்டருக்கு எதிராக வளர்த்து வந்த மனக்குறையாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஒன்றாகச் சேர்ந்து ஏழு காலடிகள் வைத்ததும் திருமண மந்திரங்கள் நிறைவடைகின்றன. ஆனால் ஸத்யவிரதன் இந்த ஏழு காலடிகளை நம்பவில்லை. ஓ! பரதக் குலத்தின் வழித்தோன்றலே, "வசிஷ்டர் தர்மத்தை அறிவார். எனினும் அவர் என்னைக் காத்தாரில்லை" இதுவே ஸத்யவிரதன் வசிஷ்டரின் வளர்த்து வந்த கோபத்தைத் தூண்டும் எண்ணமாகும்" என்றிருக்கிறது.

பெரும் வசிஷ்டர் அப்போது ஏன் தன்னைக் காப்பாற்றவில்லை என்று ஸத்யவிரதன் நன்கு சிந்தித்தாலும் அவனால் அவரது நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை.(9) உயரான்மா கொண்ட அவனுடைய தந்தை அவனிடம் நிறைவு கொள்ளவில்லை, எனவே, பகனைக் கொன்றவனும் {இந்திரனும்} பனிரெண்டு வருடங்களாக மழையைப் பொழியவில்லை.(10) பூமியில் கடுந்தவங்களைச் செய்ததன் மூலம் அவன் (அந்தப் பாவத்திலிருந்து) தன் குடும்பத்தை விடுவித்தான்.(11) அவன் தன் தந்தையால் கைவிடப்பட்டபோது, வசிஷ்டர் அவனுடைய (ஸத்யவிரதனின்) மகனை அரியணையில் அமர்த்தும் நோக்கம் கொண்டிருந்ததால் அந்தத் தவசி அவனைத் தடுக்கவில்லை.(12)

பனிரெண்டு வருடங்களாகக் கடுந்தவங்களைச் செய்து வந்தவனும், வலிமை நிறைந்த இளவரசனுமான ஸத்யவிரதன், ஒரு நாள் இறைச்சியேதும் காணாமல், கோபம், அறியாமை, களைப்பு, பசி ஆகியவற்றால் பீடிக்கப்பட்டவனாக, விரும்பிய அனைத்தையும் அருளவல்லதும், உயரான்ம வசிஷ்டருடையதுமான கறவை பசுவைக் கண்டான்.(13,14) ஓ! ஜனமேஜயா, அவன் குடி, மடமை, சோர்வு, கோபம், பசி, அவசரம், கோழைத்தனம், பேராசை {மோகம்}, காமம் ஆகியவற்றால் பீடிக்கப்பட்டவனாக அந்தப் பசுவைக் கொன்றான்.(15) அவன் அதன் இறைச்சியை உண்டு, விஷ்வாமித்ரரின் பிள்ளைகளையும் அதை உண்ணச் செய்தான். இதைக் கேட்ட வசிஷ்டர் கோபமடைந்தார்.(16)

இதனால் கோபமடைந்தவரான அந்த மதிப்புக்குரிய முனிவர் {வசிஷ்டர்}, அந்த இளவரசனிடம் {ஸத்யவிரதனிடம்}, "தீயவனே, (பாபம் எனும்) இந்த வேலை உன் மீது ஏவுகிறேன்; உன் மீது {ஏற்கனவே} வேறிரு பாப வேல்கள் (தைக்காதிருந்தால்) மெய்யாகவே உன் மீது இதை ஏவியிருக்கமாட்டேன்.(17) தந்தையின் மனக்குறை, ஆசானின் கறவை பசுவைக் கொன்றது, தடைசெய்யப்பட்ட இறைச்சியை உண்டது என்ற மூன்று அத்துமீறல்களை நீ செய்திருக்கிறாய்" என்றார் {வசிஷ்டர்}[2]".(18)

[2] "இந்தப் பத்தியை இன்னும் சிறிது தெளிவு படுத்த வேண்டும். அவன் ஏற்கனவே தந்தையின் மனக்குறை, ஆசானின் பசுவைக் கொன்றது என்ற இரண்டு அத்துமீறல்களைச் செய்திருக்கிறான். இப்போதோ தடைசெய்யப்பட்ட இறைச்சியை உண்டதன் மூலம் மற்றொரு அத்துமீறலையும் செய்கிறான். இந்த மூன்று அத்துமீறல்களும் மூன்று வேல்களாகக் குறிப்பிடப்படுகின்றன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தந்தையின் மனக்குறை, ஆசானின் பசுவைக் கொன்றது, தடைசெயப்பட்ட இறைச்சியை உண்டது ஆகியன அவன் மீது மூன்று வேல்களாக இருந்ததால் அவன் திரிசங்கு என்றழைக்கப்பட்டான்.(19) விஷ்வாமித்ர முனிவர் திரும்பியதும், தன் மனைவியும், பிள்ளைகளும் திரிசங்குவால் {ஸத்யவிரதனால்} பாதுகாக்கப்படுவதைக் கண்டு, மனநிறைவடைந்து, அவனுக்கு ஒரு வரமளித்தார்.(20) அந்த முனிவர் அந்த இளவரசனுக்கு வரமளிக்க முன்வந்தபோது, அவன் உடலோடு சொர்க்கத்திற்குச் செல்லும் (வரத்தை) அவரிடம் இரந்தான்.(21) பனிரெண்டு ஆண்டுகள் நீடித்த பஞ்சம் என்ற அச்சம் விலகியபோது, அந்த முனிவர் {விஷ்வாமித்ரர்}, அவனை {ஸத்யவிரதனை / திரிசங்குவை} அரியணையில் அமரவைத்து, அவனது புரோகிதராகச் செயல்படத் தொடங்கினார்.(22) பெருஞ்சக்தி கொண்ட அந்தக் குசிக மகன் {விஷ்வாமித்ரர்}, தேவர்கள் அனைவரின் முன்னிலையிலும், பெருந்தவசியான வசிஷ்டரின் முன்னிலையிலும் அவனை உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்பினார்.(23) அவன் {ஸத்யவிரதன்}, கேகய குலத்தில் பிறந்தவளும், ஸத்யரதை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒருத்தியைத் தன் மனைவியாகக் கொண்டான். அவன் {ஸத்யவிரதன்/திருசங்கு} அவளிடம் பாவமற்ற இளவரசனான ஹரிஷ்சந்திரனைப் பெற்றான்.(24)

மன்னன் ஹரிஷ்சந்திரன் திரைசங்கவன்[3] என்றழைக்கப்பட்டான். அவன் ராஜசூய வேள்வியொன்றைச் செய்து தலைமை தலைவனானான் {சாம்ராட் / சக்ரவர்த்தி ஆனான்}. ஹரிஷ்சந்திரனுக்கு ரோஹிதன் என்ற பெயரில் வலிமைநிறைந்த ஒரு மகன் இருந்தான். அவன் தன் நாட்டின் முன்னேற்றத்திற்காக ரோஹிதபுரம் என்ற நகரை உண்டாக்கினான்.(26) அந்த அரசமுனி {ரோஹிதன்}, தன் நாட்டையும், குடிமக்களையும் ஆட்சி செய்து, உலகின் பயனின்மையில் உறுதியடைந்து, அந்த நகரை பிராமணர்களுக்குக் கொடையாக அளித்தான்.(27) ரோஹிதனின் மகன் ஹரிதனாவான், அவனுடைய {ஹரிதனின்} மகன் சஞ்சு {சேஞ்சு} ஆவான். அவனுக்கு {சஞ்சுவுக்கு} விஜயன், ஸுதேவன் என்ற பெயர்களில் மகன்கள் இருவர் இருந்தனர்.(28)

[3] "திரிசங்குவின் மகன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

விஜயன், க்ஷத்திரியர்கள் அனைவரையும் வீழ்த்தியதால் அந்தப் பெயரைப் பெற்றான். அவனுடைய {விஜயனின்} மகன் ருருகன் அற ஆன்மா கொண்டவனாகவும், வேத கல்வி பயின்றவனாகவும் இருந்தான்.(29) ருருகனின் மகன் விருகன் ஆவான். அவனுக்கு {விருகனுக்கு} பாகு {பாஹுகன்} பிறந்தான். அந்தப் பொற்காலத்திலும் அந்த மன்னன் {பாகு} பேரறமற்றவனாக இருந்ததால் ஹைஹயர்கள், தாலஜங்கர்கள் ஆகியோரோடு கூடிய ஷகர்கள், யவனர்கள், காம்போஜர்கள், பாரடர்கள் {ப்பாரடர்கள்}, பஹ்லவர்கள் மற்றும் பிற க்ஷத்திரிய குலங்கள் சேர்ந்து அவனை வீழ்த்தினர்.(30,31) பாகுவின் மகன் நஞ்சுடன் பிறந்ததால் ஸகரன் என்றழைக்கப்பட்டான். ஔர்வரின் {அவுர்வரின்} ஆசிரமத்திற்கு வந்த அவன் {ஸகரன்} அந்தப் பார்க்கவரால் முன்னிறுத்தப்பட்டான்.(32) ஓ! குருக்களில் முதன்மையானவனே, பார்க்கவரிடம் {ஔர்வரிடம்} இருந்து நெருப்பாயுதத்தை {ஆக்னேயாஸ்திரத்தை} அடைந்தவனும், பெரும் பலம் கொண்டவனும், அறவோனுமான மன்னன் ஸகரன், ஹைஹயர்கள் மற்றும் தாலஜங்கர்கள் அனைவரையும் கொன்று, உலகமனைத்தையும் வென்று, க்ஷத்திரியர்களான ஷகர்கள், பஹ்லவர்கள், பாரடர்கள் {ப்பாரடர்கள்} ஆகியோரின் நெறிமுறைகளை இழக்கச் செய்தான்[4]" {என்றார் வைசம்பாயனர்}.(33,34)

[4] தேசிராஜு ஹனுமந்தராவின் பதிப்பில், "நீதிமிக்கப் பேரரசனான ஸகரன், முழுப் பூமியையும் ஒரே குடையின் நிழலில் கொண்டு வந்து, தாலஜங்கர்கள், ஹைஹயர்கள், ஷகர்கள், பஹ்லவர்களின் அரசை இழக்கச் செய்தான். இவ்வாறே தர்மமறிந்தவனான அந்தப் பேரரசன் ஸகரன், க்ஷத்திரியர்களின் நெறிமுறை வழக்கத்தை நிறுவினான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மத்தை அறிந்த அந்த அழிவில்லாதவன், ஷகர்கள், பஹ்லவர்கள், பாரடர்கள் மற்றும் பிற க்ஷத்ரியர்களால் பின்பற்றப்பட்ட தர்மத்தை {அதர்மத்தை} விலக்கினான்" என்றிருக்கிறது.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 34
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்