(பாராயணபர்வக்ரமேண மஹாபாரதஷ்ரவணபலம்)
The fruits of the recitation of the Bharata | Bhavishya-Parva-Chapter-107 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : ஒவ்வொரு பர்வத்தின் நிறைவிலும் என்னென்ன கொடைகள் அளிக்கப்பட வேண்டும்; மஹாபாரதம் உரைப்பவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடை; மஹாபாரதம் கேட்பவருக்கும், படிப்பவருக்கும் உண்டான பலன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! மதிப்பிற்குரிய ஐயா, கல்விமான்கள் எந்த விதிகளின்படி பாரதத்தைக் கேட்கிறார்கள்? அதன் பலன்கள் என்னென்ன? அது நிறைவடையும்போது வழிபடப்பட வேண்டிய தேவர்கள் யாவர்?{1} ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் செய்ய வேண்டிய ஈகைகள் என்னென்ன? அதைச் சொல்பவர் எவ்வாறு இருப்பது உகந்தது? இவை அனைத்தையும் எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.{2}(1,2)
வைசம்பாயனர், "ஓ! மன்னா பாரதம் எவ்வாறு கேட்கப்பட வேண்டும் என்பதையும், அதன் பலன்கள் என்னென்ன என்பதையும் கேட்பாயாக. ஓ! மன்னா, உன் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறேன் கேட்பாயாக.(3)
தேவலோகத்தில் வாழும் தேவர்கள் பூமிக்கு விளையாட வந்தனர். அவர்கள் தங்கள் பணியை முடித்துவிட்டுத் தங்கள் உலகத்திற்கே திரும்பிச் சென்றனர்.{4} பூமியில் தேவர்களின் பிறப்பையும், ரிஷிகளின் பிறப்பையும் சொல்கிறேன் கவனமாகக் கேட்பாயாக.{5} ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, ருத்திரர்கள், சாத்யர்கள், விஷ்வேதேவர்கள், ஆதித்யர்கள், அஷ்வினி ரெட்டையர்கள், லோகபாலர்கள், மஹாரிஷிகள்,{6} குஹ்யர்கள், கந்தர்வர்கள், நாகர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள், தர்மன், பிரம்மன் {சுயம்பு}, காத்யாயன முனிவர்,{7} மலைகள், ஆறுகள், பெருங்கடல்கள், அப்சரஸ்கள், கோள்கள், வருடங்கள், அயனங்கள், பருவகாலங்கள்,{8} அசைவன, அசையாதன, தேவர்கள், அசுரர்கள் ஆகியோர் அனைவரும் (வரலாறாகத் திகழும் இந்த) பாரதத்தில் அடிக்கடி சொல்லப்படுவது காணப்படுகிறது.{9} அவர்களின் பெயர்களையும், சிறப்புமிக்கச் செயல்களையும் கேட்பதன் மூலம் ஒரு மனிதன் செய்த கொடும்பாவங்களில் இருந்தும் உடனடியாக விடுபடுகிறான்.{10)
இந்த வரலாற்றை {இதிஹாஸத்தை} முறையாகவும், வரிசையாகவும் ஒருவன் கேட்டால், புலன்களைக் கட்டுப்படுத்தி, ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி ஒருவன் இந்தப் பாரதத்தில் தேர்ச்சியடைந்தால், அவன் அந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஈகை புரிய வேண்டும்.{11,12} அவன், மதிப்புடனும், தன் சக்திக்குத் தகுந்த அளவிலும் பல்வேறு ரத்தினங்களையும், மாடுகளில் பால் கறப்பதற்கான பாத்திரங்களையும், நன்கு அலங்கரிக்கப்பட்ட திறன்கொண்ட கன்னிகைகளையும்,{13} பல்வேறு வாகனங்களையும், வீடுகள், நிலங்கள், ஆடைகள், பொன், குதிரைகள், மதங்கொண்ட யானைகளால் சுமக்கப்படும் படுக்கைகள், வாகனங்கள், நன்கு கட்டப்பட்ட தேர்கள் ஆகியவற்றைப் பிராமணர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{14,15} சிறந்தவை எவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்கள் எவற்றையும் அவன் இருபிறப்பாளர்களுக்குக் கொடுக்க வேண்டும். அவன் தன்னையும், தன் மனைவியையும், பிள்ளையும் கூடக் கொடையாக அளிக்கலாம் எனும்போது இன்னும் சொல்ல ஏதுமில்லை.{16} ஒருவன் இந்தக் கொடைகளை மதிப்புடன் கொடுத்தால், அவனால் பாரதத்தில் தேர்ச்சியடையமுடியும். ஒருவன் தன் சக்திக்கு ஏற்றபடி, நல்லோர், தொண்டாற்றுவோர், வாய்மை நிறைந்தோர், எளியோர், தற்கட்டுப்பாடுடையோர், மதிப்புமிக்கோர் ஆகியோரை நிறைவடையச் செய்வதன் மூலம் ஆன்ம சக்திகளை எவ்வாறு அடையலாம் என்பதைக் கேட்பாயாக.{17,18}
இந்தப் பாரதத்தைச் சொல்பவன் தூய நடத்தையும், ஒழுக்கமும் கொண்டவனாக, வெள்ளை ஆடை உடுத்துபவனாக, தற்கட்டுப்பாடு உடையவனாக, தீக்ஷை பெற்றவனாக, சாத்திரங்கள் அனைத்தையும் நன்கறிந்தவனாக, மதிப்புமிக்கவனாக, தீமையற்றவனாக இருக்க வேண்டும். அவன் வாய்மை நிறைந்தவனாகவும் மதிப்புக்குத் தகுந்தவனாகவும், காலம் அறிந்து செயல்படுபவனாகவும் இருக்க வேண்டும்.{19,20}(4-20) அவன் அதைத் விரைவாகவோ, மெதுவாகவோ தெளிவான அசைவுகளுடன் எளிதில் படிக்க வேண்டும்.{21} அவன் படிக்கும்போது சொற்களையும், எழுத்துகளையும் அழுத்தமாக உச்சரிக்க வேண்டும். அவன் குவிந்த மனத்துடனும், நல்ல உடல்நலத்துடனும், உற்சாகத்துடனும் அதைப் படிக்க வேண்டும்.{22} நாராயணனையும், உயிரினங்களில் மேன்மையான நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கிவிட்டு ஒருவன் பாரதத்தை உரைக்க வேண்டும் என்பது விதியாகும்.{23}(22,23) ஓ! பாரதக் குலத்தின் பெரும் மன்னா, ஒருவன் விதிமுறைகளைப் பின்பற்றி, தன்னைத் தூய்மை செய்து கொண்டு பாரதம் கேட்டால், அத்தகைய மனிதன் பலன்களை அறுவடை செய்கிறான்.{24}
அதைத் தொடக்கம் முதல் ஹரிவம்சத்தின் இறுதி வரையில் கேட்ட பிறகு அவன், பிராமணர்களுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும்.{25} ஒரு முறை அதைக் கேட்கும் மனிதன், அக்னிஷ்டோம வேள்வி செய்த பலனை அடைந்து, தேவலோகத்து அப்சரஸ்களால் நிறைந்த ஒரு விமானத்தையும் அடைகிறான். பெரும் மகிழ்ச்சியுடன் அவன் தேவர்களுடன் தியுலோகத்திற்குச் செல்கிறான்.{26} ஒருவன் இருமுறை அதைக் கேட்டால், அதிராத்ர வேள்வி செய்த பலன்களை அடைந்து, ரத்தினங்களால் நிறைந்த தெய்வீகத் விமானங்களைச் செலுத்தி,{27} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து, தெய்வீக நறுமணப்பொருட்களையும் அனுபவித்து, தெய்வீகக் கவசம் தரித்துத் தேவர்களின் நிலத்தில் எப்போதும் வாழ்வான்.{28} அவன் மூன்று முறை கேட்டால், துவாதஷாஹ வேள்வியின் பலன்களை அடைகிறான். மேலும் அவன் சொர்க்கத்தில் பல லக்ஷம் வருடங்கள் தேவனைப் போல வாழ்கிறான்.{29} அவன் அதை நான்கு முறை கேட்டால், வாஜபேய வேள்வி செய்த பலன்களை அடைகிறான். அவன் அதை ஐந்து முறை கேட்டால், இருமடங்கு பலன்களை அடைந்து சொர்க்கத்திற்குச் செல்கிறான்.{30} சூரியனைப் போலவும், எரியும் நெருப்பைப் போலவும் பிரகாசமிக்கத் தேரில் தேவர்களுடன் அமர்ந்து சென்று, தேவலோகத்தில் இந்திரனின் அரண்மனையில் லக்ஷக்கணக்கான ஆண்டுகள் இன்புறுகிறான்.{31}
அவன் அதை ஆறுமுறை கேட்டால், நான்கு மடங்கு பலன்களையும், ஏழுமுறை கேட்டால் அதைவிட மூன்று மடங்கு பலன்களையும் அடைகிறான்.{32} மேலும் விரும்பிய இடமெல்லாம் செல்வதும், கைலாச மலைச் சிகரத்தைப் போலப் பெரியதும், வைடூரியம், பவளம், வைரம் ஆகியவற்றால் அமைந்த இருக்கைகளைக் கொண்டதுமான தேரைச் செலுத்திக் கொண்டு அப்சரஸ்களுடன் சேர்ந்து இரண்டாவது சூரியனைப் போல எங்கும் திரிந்து கொண்டிருப்பான்.{33} அவன் அதை எட்டு முறை கேட்டால் ராஜசூய வேள்வி செய்த பலனை அடைந்து, சந்திரக் கதிர்களைப் போன்றவையும், மனோவேகம் கொண்டவையுமான குதிரைகளால் இழுக்கப்படும் அழகிய தேரைச் செலுத்திக் கொண்டு சந்திரனை விட அழகிய முகங்களைக் கொண்ட அழகிய கன்னிகைகளைக் காண்பான்.{34,35} அவன் அப்சரஸ்களின் மடியில் உறங்கிக் கொண்டே அவர்களுடைய மேகலை மற்றும் பிற ஆபரணங்களின் கிங்கிணி மணியொலியைக் கேட்பான்.{36}
அவன் அதை ஒன்பது முறை கேட்டால் வேள்விகளின் மன்னனான வாஜிமேதத்தின் பலன்களை அடைவான்.{37} மேலும், கந்தர்வர்கள், அப்சரஸ்களால் நிறைந்ததும், பொன்னாலான சாளரங்களைக் கொண்டதும், பொன்தூண்களால் அலங்கரிக்கப்பட்டதும், வைர இருக்கைகளைக் கொண்டதுமான தேரில் அமர்ந்து கொண்டு,{38,39} தெய்வீக மாலைகளையும், ஆடைகளையும் அணிந்து கொண்டும், சந்தனக் குழம்பைப் பூசிக் கொண்டும், தேவர்களின் துணையுடன் தேவலோகத்தில் இன்புற்றிருப்பான்.{40} அதைப் பத்து முறை கேட்டு இருபிறப்பாளரை வணங்குவதன் மூலம் ஒருவன், பாடுவதில் திறம்பெற்ற கந்தர்வர்களாலும், அப்சரஸ்களாலும் நிறைந்ததும், சிறு மணிகளின் வலையால் உண்டாகும் ஒலியைக் கொண்டதும், கொடிகளாலும், முக்கோணக் கொடிகளாலும், ரத்தினம் போன்ற இருக்கைகளாலும், வைர வாயில்களாலும், அலங்கரிக்கப்பட்டும், தங்க வலைகளால் சூழப்பட்டதுமான தேரைச் செலுத்துவான்.{41-43} அவன், சூரியனைப் போன்ற மகுடத்தை அணிந்து, பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, தெய்வீக மாலைகளையும், களிம்புகளையும் தரித்துக் கொண்டு, தேவலோகத்திலேயே திரிந்து வருவான்.{44,45} அவன் தேவர்களின் தயவால் பெருஞ்செழிப்பை அடைவான். இவ்வாறு அவன், தேவர்களின் மன்னனுடைய உலகத்தில், கந்தர்வர்கள், அப்சரஸ்களுடன் சேர்ந்து இருபத்தோராயிரம் ஆண்டுகள் இன்புற்றிருப்பான். அவன் பல்வேறு லோகங்களில் அமரனைப் போல வாழ்ந்திருப்பான்.{46,47}
அதன்பிறகு அவன் படிப்படியாகச் சந்திரலோகத்திலும், சூரிய லோகத்திலும் வாழ்ந்து, சிவலோகம் சென்று பிறகு விஷ்ணு லோகத்தை அடைகிறான்.{48,49} ஓ! மன்னா, இஃது இவ்வாறே நடக்கும்; இதுகுறித்து ஒருவன் விவாதிக்கக்கூடாது. அவனை மதிப்புடன் போற்ற வேண்டும் என என் ஆசான் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{50} ஒருவன் தன் மனத்தில் விரும்பும் எதையும், அதை உரைப்பவனுக்குக் கொடுக்க வேண்டும். யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், சுமை இழுக்கும் விலங்குகள், தங்கக் குண்டலங்கள், பொன் கயிறுகள்,{51} பல்வேறு ஆடைகள், நறுமணப் பொருட்கள் ஆகியவற்றை அவன் கொடுக்க வேண்டும். அவன் தேவனைப் போல இருக்க வேண்டும், அதன் பிறகு அவன் விஷ்ணுவின் உலகத்தை அடைவான்.{52}
அதன் பிறகு, ஓ! மன்னா, பாரதம் உரைக்கப்படும் ஒவ்வொரு பர்வத்திலும் ஒருவன் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்க வேண்டும். நான் அவற்றைச் சொல்கிறேன்.{53} ஓ! மன்னா, ஓ! பரதனின் வழித்தோன்றல்களில் முதன்மையானவனே, ஒரு பிராமணரின் பிறவி {ஜாதி}, நாடு, செல்வம், பெருமை, அறவொழுக்கம் ஆகியவற்றை அறிந்த க்ஷத்திரியன்{54}, முதலில் அவரை ஆசி வழங்கச் செய்து பணியைத் தொடங்க வேண்டும். ஒரு பர்வம் முடிந்த பிறகு அவன் தன் சக்திக்கு ஏற்ற வகையில் அந்த இருபிறப்பாளருக்குக் கொடைகளை வழங்க வேண்டும்.{55} அவன் அதை உரைப்பவருக்கு முதலில் ஆடைகளையும், நறுமணப் பொருட்களையும் கொடுக்கவேண்டும், அதன் பிறகு இனிய பாயஸம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.{56}
ஆஸ்தீக பர்வம் உரைக்கப்படும் நேரத்தில் அவன் முதலில் பிராமணர்களுக்கு இன்பண்டங்களைக் கொடுத்து ஊக்கப்படுத்தி, பிறகு கொடைகளை அளிக்க வேண்டும்.{57} சபா பர்வம் உரைக்கப்பட்ட பிறகு அவன் பிராமணர்களுக்குக் காய்கறி உணவை அளிக்க வேண்டும்.{58} ஆரண்ய பர்வம் உரைக்கப்படும் போது அவர்களுக்குக் கனிகளும், கிழங்குகளும் கொடுக்க வேண்டும். ஆரண்ய பர்வம் உரைக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்குக் குடுவை நிறைய நீரும், இன்பண்டமும், காட்டில் விளையும் இனிய கனிகளும், கிழங்குகளும் கொடுத்து உணவும் பரிமாற வேண்டும்.{59,60} விராட பர்வம் உரைக்கப்படும்போது அவன் பல்வேறு ஆடைகளைக் கொடையளிக்க வேண்டும். ஓ! பாரதர்களில் சிறந்தவனே, உத்யோக பர்வம் உரைக்கப்படும்போது,{61} அவன் பிராமணர்களை மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரித்து ஊக்கப்படுத்தி, இனிய பண்டங்களையும் பல்வேறு உணவுகளையும் பரிமாற வேண்டும். ஓ! மன்னா, பீஷ்ம பர்வம் உரைக்கப்படும்போது,{62} அவன் பிராமணர்களுக்குச் சிறந்த வாகனங்களையும், நல்ல சுவைமிக்க உணவையும் அளிக்க வேண்டும். துரோண பர்வம் உரைக்கப்படும்போது, பிராமணர்களுக்கு நிறைவாக அவன் உணவளிக்க வேண்டும், அதன் பிறகு விற்களையும், கணைகளையும், வாள்களையும் அவர்களுக்குக் கொடையளிக்க வேண்டும்.{63} கர்ண பர்வம் உரைக்கப்படும்போது, கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன் கூடியவனாக அவன் பிராமணர்களுக்கு நன்கு சமைத்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{64}(24-64)
சல்லிய பர்வம் உரைக்கப்படும்போது அவன் மது, வெல்லப்பாகு {மோதகம்}, மற்றும் இனிய உணவுகளைக் கொடுக்க வேண்டும்.{65} கதா பர்வம் {சௌப்திக பர்வம்} உரைக்கப்படும்போது அவன் வாற்கோதுமை உணவை அளிக்க வேண்டும். ஸ்திரீ பர்வம் படிக்கப்படும்போது அவன் பிராமணர்களுக்கு ரத்தினங்களைக் கொடுக்க வேண்டும்.{66} ஐஷிக பர்வம் உரைக்கப்படும்போது அவன் முதலில் நெய்யைக் கொடுக்க வேண்டும், அதன்பிறகு நன்கு சமைத்த உணவைக் கொடுக்க வேண்டும்.{67} சாந்தி பர்வம் உரைக்கப்படும்போது காய்கறி உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஆஸ்ரமவாசிக பர்வம் உரைக்கப்படும்போது பிராமணர்களுக்குக் காய்கறி உணவைக் கொடுக்க வேண்டும்,{68} அஷ்வமேத பர்வம் உரைக்கப்படும்போது தன் இதயம் விரும்பும் உணவை பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். மௌசல பர்வம் உரைக்கப்படும்போது மாலைகளையும், களிம்புகளையும் அவன் கொடையளிக்க வேண்டும்.{69}(65-69) மஹாபிரஸ்தான பர்வம் உரைக்கப்படும்போது அவன் சிறந்த அரிசியைக் கொடையளிக்க வேண்டும். ஸ்வர்கபர்வம் முடித்ததும் பிராமணர்களுக்கு ஹவிஸ் அரிசியைக் கொடையளிக்க வேண்டும்.(70)
ஹரிவம்சம் நிறைவடைந்ததும் ஒருவன் ஆயிரம் பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பசுவையும், ஒரு பொன் நாணயத்தையும் கொடையாக அளிக்க வேண்டும்.{71} இதைச் செய்ய முடியாதவனாக இருந்தால் அவன் அதில் பாதி அளவு செய்யலாம். ஒவ்வொரு பர்வம் நிறைவடையும்போதும் விவேகமுள்ள ஒரு மனிதன், அதை உரைப்பவருக்கு ஒரு புத்தகத்தையும்,{72} பொன் நாணயத்தையும் கொடையளிக்க வேண்டும். ஹரிவம்ச பர்வம் நிறைவடைந்ததும் அவன் பிராமணர்களுக்குப் பாலும், அரிசியும் {பாயஸம்} கொடையளிக்க வேண்டும்.{73}(65-73)
ஒரு முழுமையான சுலோகத்தையோ, அரை சுலோகத்தையோ, ஒற்றைச் சொல்லையோ, ஒரு சுலோகத்தின் ஓரேயொரு அக்ஷரத்தையோ கவனமாகக் கேட்டாலும் அவன் நிச்சயம் விஷ்ணுவின் அன்புக்குரிய பக்தனாகிறான்.{74} மொத்த ஹரிவம்சத்தையும் கேட்ட பிறகு ஒருவன் அதைச் சொன்னவனையும், அவனது மனைவியையும் முறையாக வணங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் லக்ஷ்மிநாராயணர்களே உண்மையில் வழிபடப்படுகிறார்கள்.{75} அதைச் சொல்பவனை வழிபட்டு, அவனுக்கு நிலமும், உடையும், அற்புதப் பசுவையும் கொடையளிப்பவன் தேவகியின் மகனான கிருஷ்ணனையே வழிபடுகிறான்[1].{76}
[1] 74 முதல் 76 வரையுள்ள சுலோகங்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் விடுபட்டிருக்கின்றன. இந்த சுலோகங்களின் பொருள் சித்திரசாலை பதிப்பின் மொழிபெயர்ப்பின் துணை கொண்டு இங்கே தமிழாக்கப்பட்டிருக்கிறது.
சாத்திரங்களை நன்கறிந்தவனும், நல்லோரால் மதிக்கப்படுபவனும், வெள்ளாடை உடுத்தியவனும், அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனுமான ஒருவன், ஒவ்வொரு பர்வத்தின் முடிவிலும் தற்கட்டுப்பாட்டுடன் ஸம்ஹிதங்களை முடிக்க வேண்டும்.{77} பிறகு அவற்றைப் பட்டுத்துணியில் மறைத்து ஒரு புனிதமான இடத்தில் அவற்றை வைத்து, மாலைகளாலும், நறுமணப்பொருட்களாலும் அவற்றைத் துதிக்க வேண்டும்.{78} பக்திமான்களால் மெச்சப்படும் இத்தகைய தற்கட்டுப்பாடுடைய மனிதன், மஹாபாரதத்தையும், ஹரிவம்சத்தையும் வழிபட வேண்டும்.{79} அதன்பிறகு அவன் இறைச்சி, பல்வேறு பொருட்கள், பானங்கள், பொன், பசுக்கள், ஆடைகள் ஆகியவற்றை வினியோகிக்க வேண்டும்.{80} தற்கட்டுப்பாடுயை மனிதன் எப்போதும் மூன்று தோலங்களை {முப்பத்துமூன்று கிராம்களைக்} கொண்ட பொன்னைக் {திரிபலம் ஸ்வர்ணம்} கொடுக்க வேண்டும். இயலாத மனிதன் அதில் பாதியோ, கால் பங்கோ கொடுக்க வேண்டும்.{81} அவன் தன் இதயம் விரும்பும் பல்வேறு பொருட்களைப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டும். உரைப்பவரை அவன் தன் ஆசானைப் போல மதிப்புடன் நடத்த வேண்டும். அதன் பிறகு அவன் தேவர்கள் அனைவரின் பெயரையும், குறிப்பாக நரநாராயணர்களின் பெயரைச் சொல்ல வேண்டும்.{82} அதன்பிறகு பிராமணர்களை மாலைகளாலும், நறுமணப் பொருட்களாலும் அலங்கரித்துப் பல்வேறு கொடைகளைக் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் அவன் ஒவ்வொரு பர்வத்திலும் அதிராத்ர வேள்வி செய்த பலனை அடைவான்.{83,84}(74-84)
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, எழுத்துகளையும், சொற்களையும் உரக்கப்படிப்பவனும், இனிய குரலைக் கொண்டவனுமான ஒருவனே உரைப்பவனாகி, பாரதத்தின் எதிர்காலப் பகுதியை {பவிஷ்ய பர்வத்தை} இருபிறப்பாளர்களின் முன்னிலையில் உரைக்க வேண்டும்.{85} முதலில் அவன், அதை உரைப்பவனை நன்கு அலங்கரித்து அவனுக்கு விருந்தளித்த பிறகு, இருபிறப்பாளர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதன் பிறகு அவன் உரைத்தவனைத் துதிக்க வேண்டும்.{86} உரைப்பவன் நிறைவடைந்தால், ஒருவன் நித்தியமான மிகச் சிறந்த அருளைப் பெறுவான். பிராமணர்கள் நிறைவடைந்தால் தேவர்கள் அனைவரும் தணிவடைகிறார்கள்.{87}(86-87) எனவே, ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, நல்லோர் முதலில் இருபிறப்பாளர்களுக்குத் தங்கள் இதயம் விரும்பும் கொடைகளைக் கொடுத்து நிறைவடையச் செய்ய வேண்டும்.(88) ஓ! மனிதர்களில் முதன்மையானவனே, இவ்வாறே நான் உரைகளை விளக்கிச் சொன்னேன். நான் உன் கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டேன் எனவே நீ இக்காரியத்தில் மதிப்புடன் நடப்பாயாக.{89}
ஓ! பெரும் மன்னா, மிகச் சிறந்த அருளை அடைய விரும்புகிறவன், பாரதப் பாராயணத்தை நிச்சயம் கேட்டு, அதன் நிறைவில் அதற்கான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.{90} ஒருவன் தினமும் பாரதத்தைக் கேட்டுப் பாராயணம் செய்ய வேண்டும். எவன் பாரதத்தைத் தன் வீட்டில் கொண்டிருக்கிறானோ அவன் வெற்றியை அடைவான்.{91} பாரதம் மிகப் புனிதமானது; பாரதத்தின் பல்வேறு அத்தியாயங்களும் இங்கே விளக்கப்பட்டன. தேவர்களும் இதைப் படிக்கிறார்கள். பாரதம் மிகச் சிறந்த புகலிடமாக இருக்கிறது.{92}(86-92) பாரதம், சாத்திரங்கள் அனைத்திலும் மேன்மையானது. பாரதத்தின் மூலம் ஒருவனால் மோக்ஷத்தை {முக்தியை} அடைய முடியும்.{93} இதையே நான் உனக்குச் சொல்வேன். ஒரு மனிதன் மஹாபாரதத்தையும், பூமி, பசு, சரஸ்வதி, பிராமணர், கேசவன் ஆகியோரின் பெயர்களையும் உரைத்தால் அவன் ஒருபோதும் அழிவடைய {துன்பத்தை அடைய} மாட்டான்.{94}
ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வேதங்கள், ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் தொடக்கம், நடுப்பகுதி, முடிவு ஆகியவற்றில் ஹரி விளக்கப்படுகிறான்.{95} பெரும் நிலையை {பரமகதியை} அடைய விரும்பும் மனிதன் விஷ்ணுவின் மகிமைமிக்கச் செயல்களும், ஸ்ருதிகளும் உரைக்கப்படுவதை நிச்சயம் கேட்க வேண்டும்.{96} பவித்ரமான இந்தப் பெரும் பணியானது அறத்தை விளக்குவதில் முக்கியம்வாய்ந்ததும், அனைத்து குணங்களையும் கொண்டதுமாகும்.{97} தலைமை குணங்களை அடைய விரும்புகிறவன் இதைக் கேட்க வேண்டும். உண்மையற்ற இந்த உலகில் ஹரிவம்சத்தைக் கேட்கும் ஒருவன், விரும்பிய பொருட்கள் அனைத்தையும் அடைவான் எனத் துவைபாயனர் {வியாசர்} சொல்லியிருக்கிறார்.{98} ஹரிவம்சம் முழுமையாக உரைக்கப்படுவதைக் கேட்டு முடித்த ஒருவன், ஆயிரக்கணக்கான அஷ்வமேதங்களையும், நூற்றுக்கணக்கான வாஜபேய வேள்விகளையும் செய்த பலனை அடைகிறான்.{99}
ஓ! விஷ்ணு, பிறப்பும் சிதைவும் அற்றவன் நீயே, தியானிக்கப்படத் தகுந்த ஒரே ஒருவன் நீயே. திரளாகவும், நுட்பமாகவும் இருப்பவன் நீயே, உணர்வைக் கடந்தவன் நீயே. சகுன பிரம்மமாகவும், நிர்குண பிரம்மமாகவும் இருப்பவன் நீயே. யோகிகளால் மட்டுமே தங்கள் ஞானத்தால் உன்னைப் புரிந்து கொள்ள முடியும். மூவுலகங்களின் ஆசானும், படைப்பாளனும் நீயே. உன் புகலிடத்தையே நான் நாடுகிறேன்.{100} பாரதம் உரைக்கப்பட்டதன் முடிவில் அனைவரும் துன்பங்களில் இருந்து விடுபடட்டும், அனைவரும் நலமடையட்டும், அனைவரும் விரும்பிய பொருட்களை அடையட்டும்" என்றார் {வைசம்பாயனர்}.{101}(93-101)
பவிஷ்ய பர்வம் பகுதி – 107ல் உள்ள சுலோகங்கள் : 101
மூலம் - Source | ஆங்கிலத்தில் - In English |