Wednesday 13 October 2021

துவாரகையைப் பாதுகாப்பீர் | பவிஷ்ய பர்வம் பகுதி – 50

(துவாரவதீரக்ஷணே யாதவான் ப்ரதி ஸ்ரீக்ருஷ்ணஸ்ய வசநம்)

Krishna addresses Yadavas to protect Dvaravati | Bhavishya-Parva-Chapter-50 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : சாத்யகி, உத்தவர், பலராமன் ஆகியோரிடம் துவாரகாபுரியின் பாதுகாப்பை ஒப்படைத்த கிருஷ்ணன்...

Udhhava and Krishna

ஸ்ரீ பகவான் {கிருஷ்ணன்} சொன்னான்: "ஓ! போர்வீரர்களில் முதன்மையானவனே, என் அன்புக்குரிய சாத்யகி, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. கவசத்துடனும், கதாயுதம், வில் மற்றும் கணைகளுடனும் நகரைப் பாதுகாப்பதை உன் தனிப்பொறுப்பாகக் கொள்வாயாக.(1) ஓ! யது வம்சத்தின் பலம்வாய்ந்த வீரா, இஃது எண்ணற்ற க்ஷத்திரியர்களின் வசிப்பிடமாகும். நீ அவர்களின் தலைவன் என்பதால் இரவில் உறக்கத்தையும் கைவிட்டு இந்நகரைப் பாதுகாக்க வேண்டியது உன் கடமையாகும்.(2) இப்போதைக்கு சாத்திரங்களைக் கற்பதிலும், அவற்றின் பொருளை விளக்குவதிலும் இருந்து விலகுவாயாக. சாத்திரங்களின் அடிப்படையில் உன் நண்பர்களுடன் வாதம் செய்வதை இப்போதைக்குக் கைவிடுவாயாக.(3) நீ பலமிக்கவன், திறன்மிக்கப் போர்வீரன், ஞானமுடையவன், தனுர்வேத விற்பன்னன். இந்நகரத்தின் புகழ் கெடாமல் இருக்க உன்னால் ஆனதில் சிறந்ததைச் செய்வாயாக" {என்றான் கிருஷ்ணன்}.(4)

சாத்யகி சொன்னான்: "ஓ! ஜகந்நாதா, ஓ! அன்புக்குரிய ஜனார்த்தனா, என்னால் இயன்றதில் சிறந்ததைச் செய்து நீ சொன்னவற்றைப் பின்பற்றுவேன். உன் ஆணைகளை எப்போதும் என் சிரம் மேற்கொள்வேன் என நான் உறுதியளிக்கிறேன்.(5) ஓ! மாதவா, ஒரு பணியாளனைப் போல நான் பலராமரின் ஆணைகளையும் பின்பற்றுவேன். நீ திரும்பி வரும்வரை நான் இந்நகரைப் பாதுகாப்பேன்.(6) ஓ! கோவிந்தா, ஓ! மாதவா, உன் கருணை எனக்கிருந்தால் பகைவரை அழிக்கும் காரியத்தில் என்னால் இயலாதது ஏதுமில்லை.(7) சக்ரன், யமன், குபேரன், பாசக்கயிற்றைக் கொண்ட வருணன் ஆகியோரே போரிட வந்தாலும் உன் அருளால் அவர்களை என்னால் வீழ்த்த முடியும் எனும்போது, பௌண்டரகனைக் குறித்துச் சொல்வதற்கென்ன இருக்கிறது?(8) ஓ! தலைவா, ஹரியே, நான் விழிப்புடன் இருப்பேன் என்பதில் உறுதிகொண்டு நீ விரும்பிய இடத்திற்குச் சென்று வருவாயாக" {என்றான் சாத்யகி}.

பிறகு, தாமரைக் கண்ணனான கிருஷ்ணன், உத்தவரிடம்,(9) "உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டு என் ஆணைகளைப் பின்பற்றுவீராக. உமது புத்தி சொல்லும் வழிகளைப் பின்பற்றித் துவாராவதியைக் காப்பீராக.(10) ஓ! மென்மையானவரே, நீரே சிறந்த வழிகளை அறிவீர் என்பதால் விழிப்புடன் இருந்து நமக்கு உதவி செய்வீராக. இது தொடர்பாக மேலும் உமக்குச் சொல்ல நான் நாணுகிறேன்.(11) கற்றறிந்த அறிஞர்களில் நீர் முதன்மையானவர். உம்மைப்போன்ற அறிவாளிகளின் முன்பு தன் கருத்துகளைச் சொல்ல மேதாவி எவனும் துணியமாட்டான்.(12) எது செய்யப்பட வேண்டும், எது செய்யப்படக்கூடாது என்பனவற்றை நன்கறிந்தவர் நீர். எனவே, ஓ! விருஷ்ணி குலத்தைப் பாதுகாப்பவரே, இதற்கு மேலும் உம்மிடம் நான் எதையும் சொல்ல முயலேன்" என்றான் {கிருஷ்ணன்}.(13)

உத்தவர், "கோவிந்தா, பிரபுவே, ஏன் என்னை இவ்வாறு புகழ்கிறாய்? நீ என்னை அதீதமாகப் புகழ்ந்தாலும், இஃது உன் அன்பின் வெளிப்பாடு, பாசத்தின் வெளிப்பாடு என்பதை நான் அறிவேன்.(14) கேசவா, ஜகந்நாதா, நான் இப்போது எவ்வாறு இருக்கிறேனோ, இந்நிலை உன்னருளால் ஏற்பட்டது. உன் கருணையை அடைந்தவனிடம் எதுதான் குறைவாக இருக்கும்?(15) ஜகம் அனைத்தையும் படைத்தவன் நீயே. அவற்றை அழிப்பவனும் நீயே. காரணம், காரியம் ஆகியவையும், பேசுபவன், கேட்பவன் ஆகியோரும், சான்றும் நீயே.(16) பரப்ரம்மத்தை அறிந்த முனிவர்கள், தியானப் பொருளாகவும், தியானமாகவும், தியானிப்பவனாகவும் உன்னையே ஏற்கின்றனர். தேவர்களைப் பகைப்பவரை தண்டிப்பவன் நீயே, பக்திமான்களைக் காப்பவன் நீயே.(17) எங்கள் தலைவனும், பாதுகாவலனும் நீயே. நாங்கள் இன்னும் உயிருடன் இருப்பது உன்னாலே. நம் பகைவர்கள் வீழ்த்தப்பட்டதும் உன்னாலே. நான் உன்னிடம் சொல்லும் ராஜதந்திரங்கள் எவையும் உன்னால் ஈர்க்கப்பட்டு என்னால் சொல்லப்பட்டவை என்பதே என் புரிதலாகும்.(18) வேதங்களின் வடிவமானவன் என்பதால் எங்களை மங்கலப் பாதையில் வழிநடத்தக் கூடியவன் நீயே. எங்கள் செயல்கள் அனைத்தின் இலக்கும் உன் மகிழ்ச்சியாகவே இருக்க வேண்டும் என்பது என் உறுதியான நம்பிக்கை.(19) உன் கோட்பாடுகளில் உள்ள சிக்கல்களைப் புரிந்து கொள்வது மிகக் கடினம் என்பது நீதிமான்கள் அனைவரின் கருத்தாகும். ஓ! ஜனார்த்தனா, நான்கு வகை அரசியல் நீதிகள் சாம, தான,(20) பேத, தண்டம் ஆகியவை. ஒருவன் சிரமத்தில் இருந்தாலோ, பிறரை அமைதியடையச் செய்ய விரும்பினாலோ அவன் இந்த நான்கு கோட்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தன்னைவிட பலவீனமாக இருக்கும்போது தண்டக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். பகைவன் தனக்கு இணையானவனாக இருக்கும்போது சாமக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும்.(21) ஒரு பகைவன் தன்னை விட பலமிக்கவனாக இருந்தால் தானக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளையும் பயன்படுத்த இயலாத போது, ஒருவன் பேதக் கோட்பாட்டைப் பயன்படுத்த வேண்டும். அரசியல் நீதியைக் கற்றவர்களின் கருத்து இதுவே ஆகும்.(22) எவனும், அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கொள்கையைத் தானே தீர்மானிக்க வேண்டும். வேறென்ன சொல்வது? இத்தகைய ஞானங்கள் அனைத்தின் கொள்ளிடம் நீயே" என்றார் {உத்தவர்}".(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ! மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, இதைச்சொல்லிவிட்டு உத்தவர் அமைதியடைந்தார். பகவான் விஷ்ணு {கிருஷ்ணன்},(24) இதே போலவே பெரும் வலிமைமிக்க காமபாலனிடமும் {பலராமனிடமும்}, மனிதர்களின் ஆட்சியாளரான மன்னர் உக்கிரசேனரிடமும், ஹார்திக்கியனிடமும் {கிருதவர்மனிடமும்} பேசினான்.(24,25) பிறகு அவன் காமபாலனிடம் {பலராமனிடம்}, "அன்புக்குரிய அண்ணா, காலத்தைக் கடத்தாமல், நகரைப் பாதுகாப்பதே உமது முக்கியக் காரியமாக இருக்க வேண்டும்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, நகரைப் பாதுகாக்க நீர் விரும்பினால் இவ்வுலகில் நமக்கு எவரால் இடர் விளைவிக்க முடியும்?(27) எப்போதும் கதாதாரியாக இருப்பீராக. விளையாட்டுக்கும், கேளிக்கைகளுக்கும் இது நேரமல்ல.(27) பிரபுவே, நாம் கேலிப்பொருளாகாதிருக்க எப்போதும் துவாரகையின் நலத்தைக் கவனத்தில் கொள்வீராக. உமது கதாயுதத்தை எடுத்துக் கொண்டு நகரைப் பாதுகாக்க வேண்டியவற்றைச் செய்வீராக.(28) இக்காரியத்தில் அனைவரையும் நீர் ஊக்கப்படுத்த வேண்டும். எவரும் உற்சாகமிழக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்வீராக" என்றான் {கிருஷ்ணன்}. இதற்கு ராமனும் {பலராமனும்}, "அவ்வாறே ஆகட்டும்" என்றான்.(29) அந்த ஆணைகளைத் தங்கள் சிரமேற்கொண்டு விருஷ்ணி குலத்தோர் அனைவரும் தங்கள் வசிப்பிடங்களுக்குச் சென்ற போது, ஜகந்நாதன் கைலாச மலைக்குப் புறப்பட ஆயத்தமானான்".(30) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 30

மூலம் - Source

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்