(ஸ்ரீக்ருஷ்ணஸ்ய கைலாஸகமநவிசாரம்)
Krishna ponders on trip to Kailasa | Bhavishya-Parva-Chapter-49 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : கைலாசம் செல்ல முடிவெடுத்து சில ஏற்பாடுகளைச் செய்த கிருஷ்ணன்; யாதவர்களுக்கு கிருஷ்ணன் சொன்ன அறிவுரைகள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இரவு கடந்து கிழக்கு அடிவானில் சூரியன் எழுந்தபோது, ஜனார்த்தனன் நெருப்புவேள்வியின் மூலம் தன் காலைச்சடங்குகளைச் செய்து தக்ஷிணைகளைக் கொடுத்தான்.(1) பிராமணர்களுக்குச் செல்வத்தையும், பசுக்களையும் கொடையளித்தான். ஜகத்பதியான கிருஷ்ணன், விப்ரர்களில் தகுதியுடைய துவிஜர்களை நமஸ்கரித்து ஆஸ்தான மண்டபத்திற்குள் பிரவேசித்தான்.(2) அங்கே அவன் ஆசனத்தில் அமர்ந்து விருஷ்ணி குல வீரர்கள் அனைவரையும் அழைத்தான். பலபத்ரன் {பலராமன்}, சிநி புத்திரன் {சாத்யகி}, ஹார்திக்யன் {கிருதவர்மன்}, சுகன், சாரணன்,(3) உக்கிரசேனன், மஹாபுத்திமானும், நீதிகளை அறிந்தவருமான உத்தவர் ஆகியோரையும் அழைத்தான். அவரது வழிநடத்தலின் பேரில் யதுகுலத்தவர் சுகமாக வாழ்ந்து வந்தனர்.(4) உத்தவர் தர்மவானாகவும், யது, விருஷ்ணிகளின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். தேவர்கள் நெறிமுறைகளுடன் கூடியவர்களாக இருந்தாலும் அந்த மஹாத்மாவின் {உத்தவரின்} உத்திகளில் அச்சம் கொண்டவர்களாக இருந்தனர்.(5)
யாதவர்கள் அனைவரும் கூடிய பிறகு, குறிப்பாக எவருடைய ஞானத்தால் கிருஷ்ணன் உலகத்தை ஆண்டானோ அந்த உத்தவரும் வந்த பிறகு கிருஷ்ணன் அவர்களிடம், "ஓ! யாதவர்களே, என் உயிர் உத்தவரே, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பீராக.(6,7) உக்கிரசேனரே, என் குழந்தைப் பருவத்தில் இருந்து துஷ்டர்களைக் கொல்வதைக் கடந்த காலத்தில் இருந்து நீர் கண்டு வருகிறீர். அஃது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.(8) யாதவர்களே, நான் பாலனாக இருந்தபோது பூதனையையும், கேசியையும் கொன்றேன், பசுக்களைப் பாதுகாப்பதற்காகக் கோவர்த்தன கிரியைத் தூக்கினேன்.(9) தேவர்கள் அனைவரின் முன்னிலையில் சக்ரன் எனக்கு அபிஷேகம் செய்து வைத்தான். கம்சனும், இரு மல்லர்களும், சாணூரனும், முஷ்டிகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(10)
உக்ரசேனர் அபிஷேகம் செய்விக்கப்பட்டார், நான் துவாரகையை நிறுவினேன். அந்தக்காலத்திலும் அசுர மன்னர்கள் பலர் என்னால் கொல்லப்பட்டனர்.(11) யாதவர்களே, உக்ரசேனரே, வீரனான ஜராசந்தனைக் கொல்வதற்கான உத்திகளைப் பீமருக்கு {பீமசேனருக்கு} ஏற்படுத்தி, அந்தக் கொடூரன் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைந்தேன்.(12) கோமந்த மலையில் இருந்து திரும்பும்போது சிருகாலனும், தானவனான நரகனும் என்னால் கொல்லப்பட்டனர்.(13)
க்ஷத்திரியர்களில் முதன்மையானவர்களே இவ்வாறு பூமியின் சுமையை நான் அகற்றினேன். இருப்பினும், நரகாசுரனின் நண்பனான பௌண்டரகன் இன்னும் எஞ்சியிருக்கிறான்.(14) பெருஞ்சக்தி வாய்ந்த போர்வீரர்களின் தலைவனாக இருக்கும் அவன் என்னைப் பகைத்துக் கொண்டிருக்கிறான். துரோணரின் சீடனான அந்தப் பௌண்டரகன், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும், பிரம்மாஸ்திரத்தை ஏவவல்லவனாகவும்,(15) போர்க்கலையில் திறன்மிக்கவனாகவும், சாத்திரங்களை அறிந்தவனாகவும், நீதிமானாகவும், ஜமதக்னேயரை {பரசுராமரைப்} போலவே போரில் விருப்பம் கொண்ட மன்னனாகவும் இருக்கிறான்.(16) அவனே என் பெரும் எதிரியாக இருக்கிறான். அவன் எப்போதும் என்னிடம் குறை {நான் செய்யும் தவறைக்} காண காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குச் சிறு வாய்ப்புக் கிடைத்தாலும் துவாரகையைத் தாக்குவான். அதன் மூலம் பேரிடர் நேரிடும். புண்டரத்தை ஆட்சி செய்யும் பௌண்டரகனை அரைகுறையாக முயற்சி செய்யும் எவனாலும் வீழ்த்த முடியாது.(17,18)
நான் உயிரினங்களின் தலைவனான சங்கரனைக் காண கைலாசம் செல்லும்போது, யாதவர்களை வீழ்த்திவிடும் நம்பிக்கையில் அவன் துவாரகையைத் தாக்க எத்தனித்தால் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.(19,20) நான் செல்லும் நோக்கம் நிறைவேறி திரும்பும் வரையில், நகரைக் காக்கும் காரியத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.(21) இங்கே வந்து யாதவர்கள் அனைவரையும் வீழ்த்த அந்த ராஜேந்திரனால் இயலும் என நான் நினைக்கிறேன். எனவே, நீங்கள் கட்கம், பாசம், பரசு ஆகியவற்றுடன் எப்போதும் காவல் காப்பீராக.(22) பகைவன் நம் நகருக்குள் நுழைவதற்கு ஏதுவாக உள்ள வழிகளில் தடைகளை ஏற்படுத்திக் கவனமாகக் காவல் காப்பீராக. எப்போதும் மஹாதுவாரத்தை {பிரதான வாயிலை} அடைத்தே வைத்திருப்பீராக.(23) நகருக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரேயொரு சாலையை மட்டும் திறந்து வைத்திருப்பீராக. நகரை விட்டு வெளியேற விரும்பும் எவரும் முதலில் மன்னரிடம் அனுமதியைப் பெற வேண்டும்.(24) மன்னரின் அனுமதியின்றி எவரும் நகருக்குள் அனுமதிக்கப்படக்கூடாது. இக்காரியத்தில் காவலர்கள் மிகக் கவனமாகவும், கண்டிப்புடனும் இருக்க வேண்டும். நான் திரும்பும் வரை இந்த ஏற்பாடு அமலில் இருக்கட்டும்.(25) நகருக்கு வெளியே வேட்டையாடச் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். உண்மையில் சின்னச் சின்னக் காரியங்களுக்காக எவரும் நகரை விட்டு வெளியேறக்கூடாது. வந்து போகும் ஒவ்வொருவரின் அடையாளங்களும் கவனமாக உறுதி செய்யப்பட வேண்டும்.(26) நான் திரும்பும் வரை இந்தக் கட்டுப்பாடுகளை நீங்கள் அமல்படுத்த வேண்டும்" என்றான் {கிருஷ்ணன்}. இவ்வாறு யாதவர்களை அறிவுறித்திய கிருஷ்ணன், சாத்யகியிடம் திரும்பி அவனிடம் பேசினான்.(27)
பவிஷ்ய பர்வம் பகுதி – 49ல் உள்ள சுலோகங்கள் : 27
மூலம் - Source |