(வாமநப்ராதுர்பாவே பலேரபிஷேக꞉)
The beginning of the dwarf incarnation; Bali becomes king | Bhavishya-Parva-Chapter-40 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : வாமன அவதாரம்; தைத்தியர்களின் மன்னனாக நிறுவப்பட்ட பலி...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறே நான் உனக்கு நரசிம்ம அவதாரத்தை விளக்கிச் சொன்னேன். இனி வாமன அவதாரத்தைச் சொல்லப் போகிறேன்.(1) முற்காலத்தில் பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு குள்ள வடிவை ஏற்று, பெருஞ்சக்திவாய்ந்த பலியின் வேள்வியில் மூன்று காலடிகளால் மூவுலகங்களின் அரசை அடைந்தான்.(2) அவன் {பெருங்கடலால் சூழப்பட்டதும், யானைகள் பலவற்றால் அலங்கரிக்கப்பட்டதுமான} பூமியை விடுவித்து, அதைத் தேவர்களின் மன்னனுக்கு அளித்தான்[1]" என்றார் {வைசம்பாயனர்}.(3)
[1] இதன் பின்னர்ச் சித்திரசாலை பதிப்பில் இன்னும் அதிகச் செய்தி இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லாததும் 4 முதல் 9ம் ஸ்லோகம் வரை வருவதுமான அப்பகுதி { } என்ற அடைப்புக்குறிக்குள் கீழே தரப்படுகிறது.
{ஜனமேஜயன், "ஓ! பிராமணரே, இங்கே எனக்கோர் ஐயம் இருக்கிறது. தலைவன் நாராயணன் எவ்வாறு குள்ள வடிவை ஏற்றான் என்பதை அறிய நான் பேராவல் கொண்டுள்ளேன்.(4) தலைவன் நாராயணன், புராணங்களில் புராதன ஆன்மா எனவும், தாமரை உந்தி படைத்தவன், பெருஞ்சக்திவாய்ந்த தோள்களைக் கொண்டவன், உலகின் உண்மையான இயல்பானவன், அசைக்க முடியாத நித்தியன்,(5) ஆதியும் அந்தமும் இல்லாதவன், மூவுலகங்களின் பிறப்பிடமானவன், தலைவர்களின் தலைவன், தேவர்களின் தலைவன், கரிய மேனி கொண்டவன், உலகத்தால் வணங்கப்படுபவன்,(6) வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் சுமந்து செல்பவன், மங்கலமானவன், வேள்விகளின் ஹவ்யகவ்யங்கள் அனைத்தையும் அனுபவிப்பவன், வீழ்ச்சியற்றவன் எனவும் சொல்லப்படுகிறான். அந்தத் தலைவன், தேவர்களின் அன்னையான அதிதியின் கருவறைக்குள் எவ்வாறு நுழைந்தான்? வாசவனையே {இந்திரனையே} படைத்தவன் எவ்வாறு வாசவனின் தம்பியானான்?(7) தலைவர்களுக்கெல்லாம் தலைவனானவன், பிறவியை அடைந்த பிறகு, எவ்வாறு விஷ்ணுவின் நிலையை அடைந்தான்? ஓ! விப்ரரே, அந்தப் பேராத்மாவின் அவதாரத்தைக் குறித்த அனைத்தையும் எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(8)
வைசம்பாயனர், "ஓ! மன்னா, மஹாரிஷிகளால் வழிபடப்படும் இந்தத் தெய்வீகக் கதையைக் கேட்பாயாக. பிரம்மனால் சொல்லப்பட்டதும், பிராமணர்களால் ஓதப்படுவதுமான இதைப் புலவர்களும் புராணங்களில் பாடியிருக்கின்றனர்.(9)}
மரீசியின் மகனும், தேவர்களின் தலைவரும், உயிரினங்களின் தலைவருமான {பிரஜாபதியுமான} கசியபர், திதி, அதிதி என்ற இருவரையும் மனைவிகளாகக் கொண்டிருந்தார்.(10) உயரான்மாவான அந்தக் கசியபர், அதிதியிடம் தாதா, ஆர்யமான், மித்ரன், வருணன், அம்சன், பகன்,(11) இந்திரன், விவஷ்வான், பூஷன், பர்ஜன்யன், துவஷ்தன், விஷ்ணு ஆகிய பனிரெண்டு {12} வகைத் தேவர்களைப் பெற்றார்.(12)
அவர் {கசியபர்}, திதியிடம் பெருஞ்சக்திவாய்ந்த ஹிரண்யகசிபுவைப் பெற்றார். பெருஞ்சிறப்புமிக்கத் தைத்தியேந்திரனான ஹிரண்யாக்ஷன் அவனது தமையனாவான்.(13) ஹிரண்யகசிபுவுக்கு, பெருஞ்சக்திவாய்ந்தவர்களான பிரஹ்லாதன், ஹிராதன், சங்கிரதன், ஜம்பன், அநுஹ்ராதன் என்ற ஐந்து மகன்கள் இருந்தனர்.(14) பிரஹ்லாதனின் மகன் விரோசனனும், விரோசனனின் மகன் பலியும் ஆவர். அவர்களின் மகன்களும், பேரர்கள் அனைவரும் பெருஞ்சக்திவாய்ந்தவர்களாக, வீழ்ச்சியற்றவர்களாகவும் இருந்தனர்.(15) {பெரும் மனம் கொண்டவர்களும், மகிமைமிக்கவர்களுமான தைத்தியேந்திரர்களும், தேவர்களின் பகைவர்களும், ஒவ்வொரு நிலத்திலும் ஆயிரக்கணக்கில் கூட்டங்கூட்டமாக இருந்தனர்.(16)}
நரசிங்கத்தால் ஹிரண்யகசிபு கொல்லப்பட்டதைக் கண்ட அந்தத் தைத்தியர்கள், தேவர்களை அழிப்பதற்காகப் பலியைத் தங்கள் இந்திரனாக்கினர் {தலைவனாக்கினர்}.(17) அவன் {பலி} தர்மத்தில் எப்போதும் நிலைப்பவனாகவும், எப்போதும் வாய்மை பேசுபவனாகவும், புலன்களை வென்றவனாகவும், வீரனாகவும், ஞானங்கள் அனைத்திலும் நிபுணனாகவும்,(18) எதிர்காலத்தையும், பின்விளைவுகளையும் நன்கு புரிந்து கொண்டவனாகவும், வீழ்ச்சியற்ற கோட்பாடுகளை உணர்ந்தவனாகவும், மகிமைமிக்கவனாகவும், ஹிரண்யகசிபுவைப் போலவே தேவர்களின் பகைவனாகவும் இருந்தான்.(19) விரோசனனின் மகனான அந்தப் பலியை, தைத்தியர்கள் தங்கள் மன்னனாக நிறுவிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அவனைத் தைத்தியாதிபதியாக நியமித்து வழிபட்டனர்.(20) {ஹிரண்யகசிபுவின் இடத்தில் தைத்தியர்கள் பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் மன்னனாக நிறுவிக்கொண்டனர். பிரம்மனும் இதில் மகிழ்ச்சியடைந்தான்.(21) புனித நீர்நிலைகள் அனைத்தில் இருந்தும் கொண்டு வந்த நீரால் நிரப்பப்பட்ட பொற்குடங்களைக் கொண்டு விரோசனன் மகனான பலியை அந்த அசுர கணங்கள் தங்கள் மன்னனாக அபிஷேகம் செய்தனர்.{22} அந்தத் தானவர்கள், ஜெயம் என்று சொன்னபடியே ஒப்பற்ற வீரத்தைக் கொண்ட பலியை (மன்னனாக்கி) சிம்மாசனத்தில் அமரச்செய்தனர்.(23) தானவர்கள் அனைவரும், பெருஞ்சக்தி வாய்ந்தவர்களில் சிறந்தவனான பலியைத் தங்கள் இந்திரனாக்கி, தங்கள் தலையால் தரையைத் தீண்டி அவனை வணங்கினர்.(24)}[2]
[2] 21 முதல் 24ம் ஸ்லோகம் வரையுள்ள செய்தி மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. சித்திரசாலை பதிப்பில் இருக்கிறது.
அந்தத் தைத்திர்கள், "ஓ! தைத்திய மன்னா {பலியே}, அசைவன, அசையாதன, மூவுலகங்கள் உள்ளிட்ட மொத்த அண்டமும் ஹிரண்யகசிபுவுடைய அதிகாரத்தின் கீழ் இருந்ததை நீ நன்கறிவாய்.(25) ஓ! தேவர்களைக் கொல்பவனே, தேவர்கள் உன்னுடைய பெரும்பாட்டனைக் கொன்றுவிட்டு, மூவுலகங்களையும் களவு செய்து, இந்திரனைத் தங்கள் மன்னனாக நியமித்துக் கொண்டனர்.(26) எனவே, ஓ! தலைவா, நீ எங்கள் உதவியுடன் உன்னுடைய மூதாதையரின் அரசை மீட்பாயாக. உனக்கு நன்மை நேரட்டும், நீ உன் மூதாதையரின் அரசை மீளப் பெறுவாயாக.(27) ஆயிரக்கணக்கான அசுரர்கள் சூழ தேவலோகம் சென்று தேவர்களை வெல்வாயாக. உன் ஆற்றலும், பலமும் எல்லையற்றவை, உன் சிறப்புத் திறமைகளால் நீ உன் பாட்டனையும் விஞ்சியவனாக இருக்கிறாய்" என்றனர் {என்றார் வைசம்பாயனர்}[3].(28)
[3] சித்திரசாலை பதிப்பில் இந்த அத்தியாயத்திற்கு அடுத்தடுத்து தேவர்களுடனான போருக்கு பலி ஆயத்தமாவது, சம்பரனும், பிறரும் படைதிரட்டுவது, அவர்களுக்குக் கீழிருந்த அசுரர்களின் பெயர்கள், போருக்கு பலி புறப்பட்டுச் செல்வது, தேவர்கள் போருக்கு ஆயத்தமாவது, தேவாசுரப் போர் தொடங்குவது, ஸ்நாதகர் முதலியோர் வருவது என ஐந்து அத்தியாயங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக் கிடைக்கிறது. அதன்பிறகு வரும் அத்தியாயங்களான வேள்விகளின் வடிவில் தேவர்களும், அசுரர்களும் போரிடுவது, தரன் முதலிய தேவர்களுக்கும், நமுசி முதலிய தேவர்களுக்கும் இடையிலான போர், தேவாசுரப் போரில் குஜம்பனின் வெற்றி, விருத்திரனின் எழுச்சி, ருத்திரனுக்கும் கேசிக்கும் இடையிலான போர், காலனுக்கும் பிரஹலாதனுக்கும் இடையிலான போர், அனுராதனுக்கும் குபேரனுக்கும் இடையிலான போர், விப்ரசித்திக்கும் வருணனுக்கும் இடையிலான போர், பிருஹஸ்பதியின் அக்னி துதி, பிரஹலாதன் பலி உரையாடல், இந்திரனை வென்ற பலி என்ற பதினோரு அத்தியாயங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. மேற்கண்ட பதினேழு அத்தியாங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இவையனைத்திற்கும் அடுத்து, சித்திரசாலை பதிப்பில் "பலியிடம் வந்தடைந்த ஸ்ரீதேவி" என்ற அத்தியாயம் வருகிறது. இதற்கும், இதற்குப் பின் வரும் எழுபது அத்தியாங்களுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த 40ம் அத்தியாயத்திற்குப் பிறகு நேரடியாகப் பலியிடம் வந்தடைந்த ஸ்ரீதேவி எனும் 41ம் அத்தியாயத்திற்குச் செல்கிறது, மேலும் 6 அத்தியாயங்களுடன் வாமன அவதாரம் நிறைவடைகிறது, அதன்பிறகு வரும் 2 அத்தியாயங்களுடன் பவிஷ்ய பர்வமும், மொத்த ஹரிவம்சமும் நிறைவடைகிறது. சித்திரசாலை பதிப்பில் வரும் வாமன அவதாரத்தை முழுமையாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், அவற்றுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பு முழுமையாகக் கிடைக்காததால், இனி அடுத்து வரும் 8 அத்தியாயங்களும் மன்மதநாததத்தரின் பதிப்பை ஒட்டியே மொழிபெயர்க்கப்படும். சித்திரசாலை பதிப்பின் மொத்த அத்தியாயங்களையும் மூல மொழியிலும், பல அத்தியாயங்களை ஆங்கில மொழிபெயர்ப்பிலும் http://mahabharata-resources.org/harivamsa/harivamsa-cs-index.html என்ற சுட்டியில் அருகருகிலேயே காணலாம். சித்திரசாலை பதிப்பின் பவிஷ்ய பர்வம் 135 அத்தியாயங்களைக் கொண்டது. மன்மதநாததத்தர் பதிப்பின் பவிஷ்ய பர்வம் 48 அத்தியாங்களைக் கொண்டது.
பவிஷ்ய பர்வம் பகுதி – 40ல் உள்ள சுலோகங்கள் : 28
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |