(ந்ருஸிம்ஹம் த்ருஷ்ட்வா தாநவாநாம் விஸ்மய꞉ ப்ரஹ்லாதவாக்யம் ச)
The asuras are filled with surprise at seeing man-lion form | Bhavishya-Parva-Chapter-38 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : நரசிங்கத்தின் தோற்றம்; நரசிம்மனை அடையாளம் கண்ட பிரஹலாதன், ஹிரண்யகசிபுவிடம் பேசியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஹிரண்யகசிபுவும், தானவர்கள் அனைவரும் அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனை {நரசிம்மனைக்} காலச் சக்கரம் போலவும், சாம்பலால் மறைக்கப்பட்ட நெருப்பைப் போலவும் கண்ட போது,(1) சடாமுடியுடனும், சந்திரனைப் போன்ற பிரகாசத்துடனும் கூடிய அந்தச் சிங்க மனிதனின் {நரசிம்மத்தின்} வடிவ அழகு, பரந்திருக்கும் அந்தப் பெரிய சபா மண்டபத்தில் எங்கும் நிறைந்திருந்தது.(2)
சங்கையும், குந்தமலரையும், சந்திரனையும் போன்றிருந்த அந்த வடிவத்தைக் கண்ட தானவர்கள், "என்ன அற்புதமான வடிவம் இஃது" என்று ஆச்சரியமடைந்தனர்.(3) அந்த வடிவத்தின் பிரகாசத்தால் சுடப்பட்ட அந்தப் பேரான்மாக்கள் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, காலதர்மத்தின்படி நரசிங்கத்தின் கண்களால் தூண்டப்பட்ட(4) ஹிரண்யகசிபுவின் வீர மகன் பிரஹலாதன், சிங்கத்தின் வடிவில் அங்கே வந்திருப்பது தலைவனே {விஷ்ணுவே} எனத் தன் தெய்வீகப் பார்வையில் கண்டான்.(5) {இதற்கு முன்பு ஏற்கப்படாத தங்க மலையைப் போன்ற உடலைத் தலைவன் ஏற்றிருப்பதைக் கண்ட தானவர்களும், ஹிரண்யகசிபுவும் ஆச்சரியம் அடைந்தனர்.(6)}
அப்போது, பிரஹ்லாதன், "ஓ! பெருந்தோள்களைக் கொண்ட மஹாராஜா, தைத்தியர்களில் மூத்தவரே, {ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே}, நாம் ஒருபோதும் சிங்கமனிதனின் {நரசிங்க} வடிவைக் கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை.(7) இந்தத் தெய்வீக வடிவம் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! பயங்கரம் நிறைந்த இந்த வடிவம் தைத்தியர்களின் அழிவுக்காகவே தோன்றியிருப்பதாக என் மனம் சொல்கிறது(8). தேவர்கள், பெருங்கடல்கள், ஆறுகள், இமயம், {பாரியாத்ரம் மற்றும்} பிற மலை எல்லைகள்,(9) நட்சத்திரங்களுடன் கூடிய சந்திரன், ஆதித்யர்கள், அஷ்வினிகள், வருணன், {தனதம் (செல்வம்), வருணன்}, யமன், சசிபதியான சக்ரன் {இந்திரன்},(10) மருத்துகள், {தேவர்கள்}, ரிஷிகள், நாகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பிசாசங்கள், பயங்கரர்களான ராட்சசர்கள் ஆகியோர் அனைவரும்(11) இவனுடைய {இந்த நரசிம்மனின்} உடலில் இருக்கின்றனர். பிரம்மனும், தலைவன் சிவனும் இவனது நெற்றியில் தோன்றுகின்றனர். படைப்புகளில் அசைவனவும், அசையாதனவும்,(12) நம்மோடு சேர்ந்த தைத்தியர்கள் அனைவரும், {நூற்றுக்கணக்கான ஆகாய விமானங்களுடன் கூடிய} இந்தச் சபாமண்டபமும்,(13) மூன்று உலகங்களும் பளிங்கில் பிரதிபலிக்கும் சந்திரனைப் போல இவனில் தெரிகின்றன.(14) {பிரஜாபதியான மஹாத்மா மனு, கிரஹங்கள், யோகங்கள், பூமி, வானம், உத்பாதங்கள், திருதி (நிறைவு), ஸ்மிருதி, ரஜஸ், சத்வ குணங்கள், தவம், தற்கட்டுப்பாடு,(15) உயரான்ம சனத்குமாரர், விஷ்வதேவர்கள், அப்சரஸ்கள், குரோதம், காமம், ஆணவம், மோஹம், பித்ருக்கள் ஆகியோர் அனைவரும் இந்த நரசிங்கத்தில் காணப்படுகின்றனர்.(16)" என்றான் {பிரஹலாதன்}.
தைத்திய மன்னனின் மகனும், நுண்ணறிவுமிக்கவனுமான பிரஹ்லாதன், இவ்வாறு சொல்லிவிட்டு சற்றே தலைகவிழ்ந்தவாறு, கிழக்குத் திக்கை நோக்கி தியானம் செய்யத் தொடங்கினான்" என்றார் {வைசம்பாயனர்}. (17)}[1]
[1] 15 முதல் 17ம் ஸ்லோகம் வரையுள்ள செய்திகளும், இந்த அத்தியாயத்தில் { } என்ற அடைப்புக்குறிக்குள் உள்ளவை அத்தனையும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. இவை சித்திரசாலை பதிப்பில் உள்ளவை.
பவிஷ்ய பர்வம் பகுதி – 38ல் உள்ள சுலோகங்கள் : 17
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |