(புஷ்கரப்ராதுர்பாவ:)
Attributes of God | Bhavishya-Parva-Chapter-07 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : கடவுளின் குணங்கள் குறித்து வைசம்பாயனரிடம் கேட்ட ஜனமேஜயன்; வைசம்பாயனரின் விடை...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}[1], "ஓ! யோகத்தை அறிந்தவர்களின் தலைவரே, தேவர்களும், ரிஷிகளும் அண்டத்தில் எவ்வாறு பிறந்தனர் என்பதையும், பெருங்கடலின் நீரில் கிடந்து உறங்கும் தாமரை உந்தியோனின் {பத்மநாபனின்} சக்தியையும் எனக்கு விரிவாக விளக்கிச் சொல்வீராக. அவனது மகிமைகளைக் கேட்டு நான் இன்னும் தணிவடையவில்லை.(1,2) புருஷோத்தமன் எவ்வளவு காலம் அங்கே கிடந்தான்? காலத்தின் பிறப்புக்குக் காரணனான அவன் அந்த நேரத்தில் ஏன் உறங்கிக் கொண்டிருந்தான்?(3) தேவர்களின் தெய்வீக மன்னனான அவன் எவ்வளவு காலத்திற்குப் பிறகு விழித்தான்? விழித்தெழுந்ததும் அவன் ஏன் இந்த அண்டத்தைப் படைத்தான்?{4} ஓ! பெரும் முனிவரே, முன்பிருந்த குடிமுதல்வர்கள் யாவர்? அந்த நித்திய புருஷன் ஏன் உலகங்களைப் படைத்தான்?{5}
[1] சென்ற அத்தியாயத்தில் சௌதி சௌனகரிடம், "இன்னும் நீர் கேட்கவிரும்புவதென்ன என்பதை எனக்குச் சொல்வீராக. அதை நான் உமக்கு விளக்கிச் சொல்கிறேன்" என்று கேட்பதாக முடிகிறது. அதற்கு அடுத்து வரும் இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே தொடர்பில்லாமல் ஜனமேஜயன் கேள்வி கேட்பதாக அமைகிறது.
ஓ! முனிவரே, முன்பு அசைவனவும், அசையாதனவும், தேவர்கள், அசுரர்கள், பாம்புகள், ராட்சசர்கள், காற்று, நெருப்பு, வானம், பூமி ஆகியவையும் அழிந்த போது, பெருஞ்சக்திவாய்ந்தவனும், தேவர்களின் ஆசானும், பெரும்பூதங்களின் மன்னனுமான அந்தத் தலைவன், பூதங்கள் அனைத்தும் எதனுள் மூழ்கியிருந்ததோ அந்தப் பரந்து விரிந்த ஒரே பெருங்கடலில் எவ்வாறு உறங்கிக் கிடந்தான்?{6-8}(4-8) ஓ! பிராமணரே, நான் உமது புகலிடத்தை நாடியிருக்கிறேன் என்பதால் நாராயணனின் மகிமைகளை நிச்சயம் நீர் எனக்கு விளக்கிச் சொல்ல வேண்டும்.(9) ஓ! மதிப்புமிக்க ஐயா, பக்திமான்களால் புகழத்தக்க அந்தப் பெருந்தேவனின் கடந்த கால, எதிர்கால அவதாரங்களை எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான்.(10)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குரு குலத்தின் பாவமற்ற வழித்தோன்றலே, நாராயணனின் மகிமைபொருந்திய செயல்பாடுகளைக் கேட்கும் ஆவல் கொண்ட நீ உண்மையில் உன் குலத்துக்குத் தகுந்தவனே.(11) ஓ! மன்னா, தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தி குறித்து ஸ்ருதிகளில் பதியப்பட்டவாறே முதல்வர்களும், புராதனர்களுமான தேவர்களிடம் கேட்ட பிராமணர்களிடம் இருந்து நாங்கள் அறிந்தவற்றை உள்ளபடியே கேட்பாயாக.(12) ஓ! பாரதா, பராசரரின் மகனும், எழில்மிகு ஆசானும், பிருஹஸ்பதியைப் போன்று சக்திவாய்ந்தவருமான துவைபாயனர் {வியாசர்}, மனத்தைக் குவித்து {தியானித்து} தாமரை உந்தி படைத்த தேவனின் சக்தியைக் கண்டு அதை விளக்கிச் சொல்லியிருக்கிறார்.{13} நான் ஏற்கனவே கேட்டதை உள்ளபடியே உனக்கு விளக்கிச் சொல்கிறேன். நான் ரிஷியாக இருந்தாலும் என்னால் அதை முழுமையாக அறிய இயலவில்லை.{14}(13,14) ஓ! மன்னா, அண்டத்தைப் படைத்த படைப்பாளனாலும் முழுமையாக அறிய முடியாத பெரும்புருஷன் நாராயணனை வேறு எவரால் அறிந்து கொள்ள முடியும்?(15)
ஓ! பாவமற்றவனே, அனைத்துடனும் அடையாளங் காணப்படுபவனும், கோட்பாடுகளின் பிறப்பிடமுமான அண்டத்தின் படைப்பாளனாலும், பெரும் ரிஷிகளாலும், தேவர்களாலும் பெரும்புதிராகக் கருதப்படுவதை உண்மையில் நான் கேட்டிருக்கிறேன்.{16} ஆன்ம ஞானத்தை அறிந்தவர்கள் அவனையே தியானிக்கிறார்கள். அவனே கர்மத்தின் திறன்மிகுந்த காரணனாகவும், தேவர்களில் தலைமைத் தேவனாகவும், எவராலும் காணப்படாதவனாகவும் இருக்கிறான்.{17} அவன் தொடக்கமும், முடிவும் அற்றவனாவான். மஹாரிஷிகள் அறிய முனையும் நித்திய உண்மை அவனே ஆவான். தேவர்களின் ஞானமாக இருப்பவனும், வேதங்களை நன்கறிந்தோரால் தூய அறிவாக அறியப்படுபவனும் அவனே.{18} புலன் நுகர் பொருட்களைப் படைப்பவனும், ஹிரண்யகர்ப்பனாக இருந்து பூதங்களையும் படைப்பவனும் அவனே. புத்தியும், மனமும், க்ஷேத்ரக்ஞனும், மகிமையின் கோட்பாடும், புருஷனும், பரமாத்மாவும் அவனே.{19} அனைத்துக்கும் சாட்சியான காலமாகவும், எதனிலும் சார்பற்றவனாகவும் இருப்பவன் அவனே.{20} ஐந்து முக்கிய மூச்சுகளாகவும் {பிரதான வாயுக்களாகவும்}, அவற்றின் செயல்பாட்டுக்குக் காரணனாகவும், உண்மையானவனாகவும், சிதைவற்றவனாகவும் இருப்பவன் அவனே.{21} நம் செயல்பாடுகளுக்குக் காரணனாகவும், நாம் செய்ய வேண்டியதையும், செய்யக்கூடாததையும் வகுப்பவனாகவும் இருப்பவன் அவனே.{22} அவனை நாம் அனைத்து வழிமுறைகளினாலும் நாடவும், {அவனைக் குறித்துப்} பேசவும், {அவனைக் குறித்துக்} கேட்கவும் வேண்டும்.{23} சொர்க்கமாகவும், முக்தியாகவும், பல்வேறு மாற்றங்களாகவும், புதிர் நிறைந்த உலகமாகவும், நமது ஆசானாகவும் இருப்பவன் அவனே. நாராயணனைக் குறித்தே நான் உனக்கு விளக்கிச் சொல்கிறேன்.{24} ஓ! மன்னா, வாய்மை, பொய்ம்மை, செயல், விளைவு, கடந்தகாலம், எதிர்காலம், அசைவன, அசையாதன, நித்தியமானவை என மூவுலகங்களிலும் இருக்கும் அனைத்தும் தாமரை உந்தி படைத்த தலைவனான அந்தப் பெரும்புருஷனிடமிருந்தே வெளிப்பட்டன" என்றார் {வைசம்பாயனர்}[2].{25}(16-25)
[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் விஷ்ணு பர்வம் பாதியில் இருந்தே ஸ்லோக எண்கள் இவ்வாறே மொத்த மொத்தமாகக் கொடுக்கப்படுகின்றன. இருப்பினும் இதுவரை சித்திரசாலை பதிப்பை ஒப்புநோக்கி நாம் தனித்தனி ஸ்லோக எண்களைக் கொடுத்து வந்தோம். இந்த அத்தியாயத்தில் இருந்து 33ம் அத்தியாயம் வரை சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் நிறைவடையாததால், முன்பைப் போல் இப்போது ஸ்லோக எண்களைப் பிரித்து அளிக்க முடியவில்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளவாறே ஸ்லோக எண்களை மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன். { } என்ற அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஸ்லோக எண்கள் உத்தேசமான அடிப்படையில் ஒரு வசதிக்காக இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன.
பவிஷ்ய பர்வம் பகுதி – 07ல் உள்ள சுலோகங்கள் : 25
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |