Sunday 22 November 2020

அசுரர்களின் தோல்வி | விஷ்ணு பர்வம் பகுதி – 142 – 086

(நிகும்பப்ரப்ருதீனாம் வதம்)

Defeat of the Asuras: They fight again | Vishnu-Parva-Chapter-142-086 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஜயந்தனிடம் வீழ்ந்த நிகும்பன்; நிகும்பனின் வரலாற்றை அர்ஜுனனுக்குச் சொன்ன கிருஷ்ணன்; சக்கரத்தால் உயிரிழந்த நிகும்பன்; ஷட்புரத்தை பிரம்மதத்தருக்குக் கொடுத்த கிருஷ்ணன்...

Krishna at war

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பேரரசே, ஜனமேஜயா, மன்னர்களும், அவர்களின் தொண்டர்களும் சிறைபிடிக்கப்பட்டதும் அசுரர்களின் மனத்தில் அச்சம் நுழைந்தது.(1) கிருஷ்ணன், அனந்தன் {பலராமன்} ஆகியோராலும், போரில் பயங்கரர்களான பிற யாதவர்களாலும் முற்றாக முறியடிக்கப்பட்ட அந்த வீரர்கள் அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர்.(2)

தானவர்களில் முதன்மையான நிகும்பன் இதைக் கண்டு கோபத்தில் நிறைந்தவனாக, "அச்சத்தால் பீடிக்கப்பட்டும், அறியாமையால் கலக்கமடைந்தும், உங்கள் உறுதிமொழியை உடைத்தும் ஏன் தப்பி ஓடுகிறீர்கள்?(3) உங்கள் உற்றார் உறவினரின் அழிவுக்குப் பழிதீர்ப்பதாக உறுதியளித்தீர்களே. இப்போது உங்கள் உறுதிமொழியை உடைத்துத் தப்பி ஓடினால் நீங்கள் எந்த உலகத்தை அடைவீர்கள்?(4) போரில் தடுக்கப்பட முடியாதவர்களான உங்கள் பகைவரை வீழ்த்தினால் நீங்கள் பலனை அறுவடை செய்வீர்கள். போர்க்களத்தில் கொல்லப்பட்ட வீரர்களோ தேவலோகத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.(5) எனினும், நீங்கள் தப்பி ஓடினால் உங்கள் வீட்டில் யாரிடம் உங்கள் முகத்தைக் காட்டுவீர்கள்? உங்கள் மனைவியர் என்ன சொல்வர்? ஐயோ, ச்சீ, ச்சீ உங்களுக்குக் கிஞ்சிற்றும் வெட்கமில்லையே" என்றான் {நிகும்பன்}.(6)

ஓ! மன்னா, இவ்வாறு சொல்லப்பட்ட அசுரர்கள், வெட்கத்தால் நிறைந்தவர்களாக, இருமடங்கு சீற்றத்துடன் திரும்பி வந்து யாதவர்களுடன் மீண்டும் போரிட்டனர்.(7) தனஞ்சயன் {அர்ஜுனன்}, பீமன், நகுலன், சகாதேவன், தர்மனின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் ஆகிய வீரர்கள், வீரத்திருவிழா நடைபெற்ற அந்த வேள்விக்களத்திற்குச் சென்றோர் அனைவரையும் தங்களுடைய பல்வேறு ஆயுதங்களால் அழித்தனர். வானத்தில் உயர்ந்து எழுந்தோர் இந்திரனின் மகனாலும் {ஜயந்தனாலும்}, இருபிறப்பாளர்களில் முதன்மையான பிரவரனாலும் கொல்லப்பட்டனர்.(8,9)

ஓ! ஜனமேஜயா, அந்தப் போர்க்களத்தில், அசுரர்களின் குருதியை நீராகக் கொண்ட ஆறு பாயத் தொடங்கியது. அவர்களின் தலைமுடிகளே அதன் பாசியும், புல்லுமாக இருந்தன. சக்கரங்கள் ஆமையாகவும், தேர்கள் நீர்ச்சுழியாகவும் இருந்தன. அது யானைகளெனும் பாறைகளால் அழகூட்டப்பட்டது.(10) கோவிந்த மலையில் உற்பத்தியாகி, கொடிகளெனும் மரங்களால் மறைக்கப்பட்டிருந்த அவ்வாறு கோழைகளின் இதயங்களைத் துன்புறுத்தியது.(11) அங்கு எழுந்த கதறல்கள் பாய்ந்து செல்லும் அவ்வோடையின் ஒலியாகின, குருதியின் நுரைகள் குமிழிகளாகின. வாள்களே மீன்களாகின. மழைக்கால நீரால் நிறைந்த ஓடையைப் போல அந்தக் குருதியாறு பாயத் தொடங்கியது.(12)

தன் தோழர்கள் அனைவரும் கொல்லப்படுவதையும், பகைவர்கள் சக்தியில் பெருகுவதையும் கண்ட நிகும்பன், தன் சக்தியால் திடீரென உயரக் குதித்தான் {வானத்தில் உயர்ந்தான்}.(13) ஓ! பரதனின் வழித்தோன்றலே, அங்கே ஜயந்தனும், பிரவரனும் போரில் தடுக்கப்பட முடியாத நிகும்பனை இடிகளுக்கு ஒப்பான கணைகளால் தடுத்தனர்.(14) தீயவனான நிகும்பன் அங்கிருந்து விலகியும், தன் உதடுகளைக் கடித்துக் கொண்டும், தன் பரிகத்தைக் கொண்டு பிரவரனைத் தாக்கி, அவனைப் பூமியில் விழச் செய்தான்.(15) அவன் விழுந்த உடனேயே இந்திரனின் மகன் {ஜயந்தன்} அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, தன் கரங்களால் அவனைத் தழுவிக் கொண்டான். அவன் உயிரோடிருப்பதை அறிந்த உடனே அவனை விட்டுவிட்டு அந்த அசுரனை நோக்கி ஓடினான்.(16) ஜயந்தன், நிகும்பனை நெருங்கி நிஸ்திரிங்ஷத்தால் {வாளால்} அவனைத் தாக்கினான். அந்தத் தைத்தியனும் அவனைப் பரிகத்தால் தாக்கினான்.(17) அடுத்தக் கணத்திலேயே இந்திரனின் மகன் நிகும்பனின் மேனியை எண்ணற்ற கணைகளால் புண்ணாக்கினான்.(18)

இவ்வாறு அந்தப் பயங்கரப்போரில் காயமடைந்த பேரசுரன் {நிகும்பன்}, "என் உற்றார் உறவினரைக் கொன்றவனும், என்னுடைய பகைவனுமான கிருஷ்ணனுடன் போர்க்களத்தில் நான் போரிட வேண்டும். இந்திரனின் மகனுடன் போரிடுவதன் மூலம் நான் ஏன் களைப்படைய வேண்டும்? {அதனால் என்ன புகழடைவேன்?}" என்று நினைத்தான்.(19) இவ்வாறு தீர்மானித்த நிகும்பன் அந்த இடத்தில் இருந்து மறைந்து, பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன் இருக்குமிடத்திற்குச் சென்றான்.(20)

பலனைக் கொன்றவனான அறம்சார்ந்த வாசவன் {இந்திரன்}, தன்னுடைய ஐராவதத்தில் அமர்ந்து கொண்டு, போரைக் காண்பதற்காகத் தேவர்களுடன் அங்கே வந்திருந்தான். தன் மகன் வெற்றியாளனாகத் திகழ்வதில் நிறைவடைந்தான். (21) அவர்களின் செயல்பாடுகளை மீண்டும் மீண்டும் புகழ்ந்து, அவனையும் {ஜயந்தனையும்}, அந்நேரத்தில் மயக்கத்தில் இருந்து விடுபட்ட பிரவரனையும் ஆரத்தழுவினான்.(22) பயங்கரம் நிறைந்த போரில் வெற்றியடைந்த ஜயந்தனைக் கண்டும், தேவர்களின் மன்னனுடைய ஆணையின் பேரிலும் தேவதுந்துபிகள் முழக்கப்பட்டன.(23)

மறுபுறம் அந்தப் பயங்கரப் போரில், வேள்விக்களத்தின் அருகில் அர்ஜுனனுடன் கேசவன் இருப்பதைக் கண்ட நிகும்பன்,(24) சிங்க முழக்கம் செய்து கொண்டே தன்னுடைய பரிகத்தால் பறவைகளின் மன்னனான கருடன், பலதேவன், சத்யகன் {சாத்யகி} ஆகியோரைத் தாக்கினான்.(25) மேலும், நாராயணன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன், பீமன், யுதிஷ்டிரன், சகாதேவன், நகுலன் ஆகியோரையும், வாசுதேவனின் மகன்களான சாம்பனையும், காமனையும் {பிரத்யும்னனையும்} தாக்கினான்.(26) வேகமாகச் செல்லக்கூடிய அந்தத் தைத்தியன், அனைத்து வகை ஆயுதங்களிலும் திறன்மிக்க அந்த வீரர்களில் எவராலும் தன்னைக் காண முடியாதவாறு தன் மாய சக்தியைப் பயன்படுத்திப் போரிட்டான்.(27)

அங்கே அவனைக் காணாத ரிஷிகேசன் (கிருஷ்ணன்), கணங்களின் தலைவனான வில்வோதகேஷ்வரனை {சிவனை} தியானித்தான்.(28) பெருஞ்சக்திவாய்ந்த வில்வோதகேஷ்வரனைக் கிருஷ்ணன் தியானித்த உடனேயே, அவனுடைய {சிவனின்} சக்தியால் கைலாச சிகரத்தைக் காண்பதைப் போல மாய சக்திகளைக் கொண்டோரில் முதன்மையான நிகும்பனை அவர்கள் அனைவராலும் காண முடிந்தது.(29) அந்த நேரத்தில் அந்த வீரன் {நிகும்பன்} அவர்கள் அனைவரையும் விழுங்கிவிடத் தயாராக இருப்பவனைப் போலத் தன் உற்றார் உறவினரைக் கொன்ற பகைவனான கிருஷ்ணனை அழைத்துக் கொண்டிருந்தான்.(30)

பார்த்தன் {அர்ஜுனன்} ஏற்கனவே தன்னுடைய காண்டீவத்தில் நாண் பூட்டியிருந்தான். அவன் அவனை {அர்ஜுனன் நிகும்பனைக்} கண்ட போது, பரிகத்தாலும், கணைகள் பிறவற்றாலும் அவனுடைய {நிகும்பனின்} உடலைத் தாக்கினான்.(31) ஓ! மன்னா, கல்லில் கூராக்கப்பட்ட அந்தப் பரிகமும், பிற கணைகளும் அவனுடைய உடலைத் தீண்டியதும் பூமியில் நொறுங்கி விழுந்து சிதறின.(32) ஓ! பரதனின் வழித்தோன்றலே, தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் இவ்வாறு கலங்கடிக்கப்படுவதைக் கண்ட தனஞ்சயன், கேசவனிடம், "என்ன இது?(33) ஓ! தேவகியின் மகனே, வஜ்ரங்களுக்கு ஒப்பான என்னுடைய கணைகள் மலைகளையும் துளைக்கவல்லவை. ஆனால் இங்கே அவை பயனற்றுப் போனதேன்? இதில் எனக்குப் பேராச்சரியம் உண்டாகிறது" என்று கேட்டான்.(34)

ஓ! பரதனின் வழித்தோன்றலே {ஜனமேஜயனே}, அப்போது கிருஷ்ணன் புன்னகைத்துக் கொண்டே, "ஓ! குந்தியின் மகனே, நிகும்பன் இவ்வளவு சக்திமிக்கவனானது எவ்வாறு என்பதை நான் விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(35) தடுக்கப்பட முடியாதவனும், தேவர்களின் பகைவனுமான இந்தப் பேரசுரன் {நிகும்பன்}, உத்தரகுரு மாகாணத்திற்குச் சென்று நூறாயிரம் {ஒரு லட்சம்} ஆண்டுகள் கடுந்தவம் பயின்றான்.(36) இதில் நிறைவடைந்த தலைவன் ஹரன் {சிவன்}, அவனுக்கு வரமளிக்க இருந்தபோது, அவன் தேவர்களாலும், அசுரர்களாலும் கொல்லப்பட முடியாத மூன்று வடிவங்களை வேண்டினான்.(37) கொடியில் காளைச் சின்னத்தைக் கொண்ட தலைவன் மஹாதேவன், "ஓ! பேரசுரா, என்னையோ, விஷ்ணுவையோ, பிராமணர்களையோ எதிர்த்து செயல்பட்டால் நீ ஹரியால் கொல்லத்தக்கவன் ஆவாய்.(38) வேறு எவராலும் உன்னைக் கொல்ல முடியாது. ஓ! நிகும்பா, நானும், விஷ்ணுவும் பிராமணர்களின் பெரும்புகலிடம் என்பதால் நாங்கள் பிராமணர்களுக்கும், விப்ரர்களுக்கும் நன்மையைச் செய்வோம்" என்றான்.(39)

ஓ! பாண்டுவின் மகனே, அந்தத் தானவனே பெருஞ்சக்திவாய்ந்தவனான இந்த நிகும்பன். வரத்தால் அடையப்பட்ட அவனது மூன்று உடல்களும் அதன்படியே அனைத்து வகை ஆயுதங்களாலும் வெல்லப்பட முடியாதவை.(40) இவன் பானுமதியை அபகரித்துச் சென்ற போது நான் அவனுடைய உடல்களில் ஒன்றை அழித்தேன்; இவனுடைய மற்றொரு அழிவற்ற உடல் இதோ ஷட்புரத்தில் வாழ்கிறது,(41) தவச் சக்தியுடன் கூடிய மூன்றாவது உடல், {தன் அன்னையான} திதிக்குத் தொண்டாற்றுகிறது. ஓர் உடலால் அவன் எப்போதும் ஷட்புரத்தில் வாழ்கிறான்.(42) ஓ! வீரா, இவ்வாறே நான் நிகும்பனின் கதை முழுவதையும் உனக்குச் சொல்லிவிட்டேன்; இனி அவனுடைய அழிவுக்கு வழிவகுக்க வேண்டும்; அவனுடைய வரலாற்றில் எஞ்சியதைப் பின்னர்ச் சொல்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}.(43)

ஓ! குருவின் வழித்தோன்றலே, அந்தக் கிருஷ்ணர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, போரில் வெல்லப்பட முடியாதவனான அந்த அசுரன் ஏற்கனவே சொல்லப்பட்ட ஷட்புரக் குகைக்குள் நுழைந்துவிட்டான்.(44) தெய்வீகனான மதுசூதனன் அதைக் கண்டதும், அந்தப் பயங்கரம் நிறைந்த ஷட்புரக் குகைக்குள் அவனைத் தேடி நுழைந்தான்.(45) அது தன்னொளியால் ஒளியூட்டப்பட்டிருந்தது, சூரியனும், சந்திரனும் தங்கள் கதிர்களை அங்கே பொழியவில்லை. விரும்பியபடியே வெப்பம், குளிர், இன்பதுன்பங்களைக் கொடுக்கவல்லதாக அந்தக் குகை இருந்தது.(46) தெய்வீகனான ஜனார்த்தனன் அந்தக் குகைக்குள் நுழைந்ததும், {ஏற்கனவே அடைக்கப்பட்டிருந்த} யாதவ மன்னர்களைக் கண்டான், பிறகு பயங்கரம் நிறைந்த நிகும்பனுடன் போரில் ஈடுபட்டான்.(47) பலதேவனின் தலைமையில் இருந்த பிற யாதவர்களும், பாண்டவர்களும் சேர்ந்து கிருஷ்ணனின் அனுமதியின் பேரில் குகைக்குள் அவனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(48)

நிகும்பன் கிருஷ்ணனுடன் போரிடத் தொடங்கினான். ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, தன் தந்தையின் {கிருஷ்ணனின்} விருப்பத்தின் பேரில் அந்தத் தானவனால் அங்கே அடைக்கப்பட்டிருந்த நண்பர்களை விடுவித்தான்.(49) ருக்மிணியின் மகனால் விடுவிக்கப்பட்ட அவர்கள் நிகும்பன் கொல்லப்படுவதைக் காணும் நோக்குடன் மகிழ்ச்சியாக ஜனார்த்தனன் இருந்த இடத்திற்கு வந்தனர்.(50) அப்போது கிருஷ்ணன் மீண்டும், "ஓ! வீரா, உன்னால் அடைக்கப்பட்ட மன்னர்களையும் விடுவிப்பாயாக" என்றான். வீரனும், பலம்வாய்ந்தவனுமான ருக்மிணியின் மகன், இதைக் கேட்டு அவர்கள் அனைவரையும் விடுவித்தான்.(51) செழிப்பை இழந்திருந்த அந்த வீர மன்னர்கள், வெட்கத்தினால் எதுவும் சொல்லாதிருந்தனர். அவர்கள் முகம் கவிழ்ந்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தனர்.(52)

கோவிந்தன், வெற்றிக்காக மிகச் சிறப்பாக முயன்று கொண்டிருந்தவனும், பயங்கரப் பகைவனுமான நிகும்பனுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.(53) ஓ! தலைவா, அப்போது கிருஷ்ணன் நிகும்பனின் பரிகத்தால் தாக்கப்பட்டான், நிகும்பனும் கிருஷ்ணனின் கதாயுதத்தால் தாக்கப்பட்டான்.(54) இவ்வாறு ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்ட அவர்கள் இருவரும் தங்கள் நினைவை இழந்தனர். இதனால் பாண்டவர்களும், யாதவர்களும் துன்புறுவதைக் கண்ட முனிவர்கள், கிருஷ்ணனுக்கு நன்மை செய்ய விரும்பி, வேதங்களில் விதிக்கப்பட்ட துதிகளால் அவனைத் துதித்து மந்திரங்களை உரைக்கத் தொடங்கினர்.(55,56) அதன் பிறகு நினைவு மீண்டவர்களான அந்தத் தானவனும், கிருஷ்ணனும் மீண்டும் தங்களைப் போரில் ஈடுபடுத்திக் கொண்டனர்.(57) ஓ! பரதனின் வழித்தோன்றலே, போரில் பயங்கரர்களான அவ்விரு வீரர்களும் மதங்கொண்ட இரண்டு காளைகளையோ, யானைகளையோ, சிறுத்தைகளையோ போல ஒருவரையொருவர் தாக்கினர்.(58)

அப்போது, ஓ! மன்னா, புலப்படாத குரலொன்று {ஓர் அசரீரி}, கிருஷ்ணனிடம், "ஓ! பெரும்பலம் கொண்டோனே, பிராமணர்களின் பாதையில் முள்ளாக இருக்கும் இவனை உன் சக்கரத்தால் கொன்று,(59) பெரும்புகழையும் அறத்தையும் ஈட்டுமாறு தலைவன் வில்வோதகேஷ்வரன் {சிவன்} உனக்கு ஆணையிட்டிருக்கிறான்" என்றது.(60)

நல்லோரின் புகலிடமும், உலகைப் பாதுகாப்பவனுமான ஹரி, இதைக் கேட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னான். பிறகு மஹாதேவனை வணங்கிவிட்டு, தைத்திய குலத்தை அழிக்கும் சுதர்சன சக்கரத்தை ஏவினான்.(61) சூரிய வட்டிலைப் போன்று பிரகாசித்த அந்தச் சக்கரம், நாராயணனின் கரத்தில் இருந்து விடுபட்டு, மிக அழகிய காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த நிகும்பனின் தலையைத் துண்டித்தது.(62) {மேகங்களைக் கண்ட ஆவலால்} மலைமுகட்டில் இருந்து பூமியில் விழும் மயிலைப் போலவே காது குண்டலங்களால் அழகூட்டப்பட்ட அவனது தலையும் பூமியில் விழுந்தது.(63) ஓ! மன்னா, உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த பெரும்பலம்வாய்ந்த நிகும்பன் கொல்லப்பட்டதில் தலைவன் வில்வோதகேஷ்வரன் நிறைவடைந்தான்.(64)

ஓ! பகைவரைக் கொல்பவனே {ஜனமேஜயா}, இந்திரனால் பொழியப்பட்ட மலர்மாரி வானத்தில் இருந்து பொழிந்தது, தேவதுந்துபிகள் முழங்கின.(65) மொத்த உலகமும், குறிப்பாக முனிவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகு, கதனின் அண்ணனான தலைவன் கேசவன், நூற்றுக்கணக்கான தைத்தியக் கன்னியரை மகிழ்ச்சியுடன் யாதவர்களுக்குக் கொடுத்தான்.(66) க்ஷத்திரியர்களை மீண்டும் மீண்டும் தேற்றி விலைமதிப்புமிக்க ரத்தினங்களையும், பல்வேறு ஆடைகளையும் அவர்களுக்குக் கொடுத்தான்.(67) அவன், பாண்டவர்களுக்குக் குதிரைகளுடன் கூடிய ஆறாயிரம் தேர்களைக் கொடுத்தான்.(68) நகரங்களை எப்போதும் பெருகச் செய்பவனான அந்தத் தார்க்ஷியவரத்வஜன் {கருடனை வாகனமாகக் கொண்ட கிருஷ்ணன்}, பிராமணரான பிரம்மதத்தருக்கு ஷட்புர நகரத்தைக் கொடுத்தான்.(69)

பெருஞ்சக்திவாய்ந்தவனும், சங்கு, சக்கர, கதாதாரியுமான கோவிந்தன், பிரம்மதத்தரின் யஜ்ஞம் நிறைவடைந்தபிறகு, பாண்டவர்களுக்கும், க்ஷத்திரியர்களுக்கும் விடைகொடுத்தனுப்பி,(70) வில்வோதகேஷ்வரன் முன்பு போதுமான அரிசி, குழம்பு, இறைச்சி, பருப்பு ஆகியவற்றைப் படைத்துப் பெருவிழா எடுத்தான்.(71) மற்போரை விரும்புபவனும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவனுமான தலைவன் ஹரி {கிருஷ்ணன்}, அவ்விழாவில் திறன்மிகு மற்போர்வீரர்களைக் கொண்டு விளையாடச் செய்து அவர்களுக்கு {அந்த மற்போர் வீரர்களுக்குச்} செல்வங்களையும், ஆடைகளையும் கொடுத்தான்.(72) அதன்பிறகு பிரம்மதத்தரை வணங்கிவிட்டு, தன் தந்தை, தாய் ஆகியோருடனும், யாதவர்கள் பிறருடனும் துவாராவதி நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(73) அந்த வீரன் {கிருஷ்ணன்}, தான் சென்ற வழியெங்கும் மக்களால் வழிபடப்பட்டவனாக, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளைக் கொண்டதும், மனநிறைவுடன் கூடிய அழகிய மக்கள் நிறைந்ததுமான அழகிய நகருக்குள் நுழைந்தான்.(74)

சக்கரபாணியால் {கிருஷ்ணனால்} ஷட்புரம் வெல்லப்பட்டதைக் கேட்பவர்களும், படிப்பவர்களும் போரில் வெற்றியை அடைவார்கள்.(75) மகனற்றவன் இதைக் கேட்பதனாலும், படிப்பதனாலும் மகனைப் பெறுவான், வறியவன் செல்வத்தை அடைவான், பிணியுற்றவன் பிணிகளில் இருந்து குணமடைவான், கட்டுண்டவன் தளைகளில் இருந்து விடுபடுவான்.(76) புஞ்சவனம்[1], கர்ப்பதானம்[2], சிராத்தம் ஆகியவற்றில் இந்தக் கதை சொல்லப்பட்டால் அது முழுமையான வெற்றியைக் கொண்டு வரும் {அழிவற்ற பலனை கொடுக்கும்}.(77)

[1] "ஒரு தாய் கருவுற்றிருப்பதற்கான முதல் அறிகுறிகளைக் கண்டதும் வீட்டில் நடைபெறும் அறச்சடங்கு இஃது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "கருவுறுவதற்கு முன் செய்யப்படும் சடங்கு" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! ஜனமேஜயா, ஒப்பற்ற பலம் கொண்டவனும், தேவர்களில் முதன்மையானவனுமான அந்த உயரான்ம தேவனின் {கிருஷ்ணனின்} வெற்றிக் கதையை எப்போதும் படிக்கும் மனிதன், தொல்லைகளில் இருந்து விடுபட்டு, இங்கிருந்து மிகச் சிறந்த உலகத்தை அடைவான்.(78) ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்ட உள்ளங்கைகளையும், பாதங்களையும் கொண்டவனும், எரியும் பெருஞ்சூரியனைப் போலப் பிரகாசிப்பவனும், பகைவரை அடக்குபவனும், முதன்மையான தலைவனும், நான்கு கடல்களையும் படுக்கையாக்கிக் கிடப்பவனும், நான்கு ஆத்மாக்களைக் கொண்டவனும்[3], ஆயிரம் பெயர்களை {சஹஸ்ரநாமங்களைக்} கொண்டவனுமான புருஷன் {ஹரி}, எப்போதும் சிறந்த இடத்திலேயே {வெற்றியாளனாக} வசிக்கிறான்" என்றார் {வைசம்பாயனர்}.(79)

[3] வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு ஆன்மாக்கள்.

விஷ்ணு பர்வம் பகுதி – 142 – 086ல் உள்ள சுலோகங்கள் : 79
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்