(இந்த்ரக்ருஷ்ணயோர்யுத்தம் விஷ்ணோருத்கர்ஷஶ்ச)
The fight between Krishna and Indra | Vishnu-Parva-Chapter-130-074 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனுக்கும் இந்திரனுக்கும், பிரத்யும்னனுக்கும் ஜயந்தனுக்கும், சாத்யகிக்கும் பிரவரனுக்கும், கருடனுக்கும் ஐராவதத்துக்கும் இடையில் நடந்த போர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, சூரியன் உதித்த ஒரு கணத்திற்கு {ஒரு முகூர்த்த காலத்திற்குப்} பிறகு, தன் தேரில் மனிதர்களில் முதன்மையான சாத்யகியை ஏற்றிக் கொண்டு, "என்னைப் பின்தொடர்வாயாக" எனப் பிரத்யும்னனிடம் சொல்லிவிட்டு வேட்டைக்குச் செல்லும் போலிக்காரணத்தோடு ரைவதக மலைக்குச் சென்றான்.(1,2)
அந்தத் தெய்வீகமானவன் {கிருஷ்ணன்}, ரைவதக மலையை அடைந்ததும் {தன் தேரோட்டியான} தாருகனிடம், "ஓ! தாருகா, ஓ! தேரோட்டிகளில் முதன்மையானவனே, என் தேரை உன் பொறுப்பில் எடுத்துக் கொண்டும், குதிரைகளை மேயவிட்டுக் கொண்டும் அரை நாள் வரை என்னை எதிர்பார்த்து இங்கே காத்திருப்பாயாக. இந்தத் தேரிலேயே நான் மீண்டும் துவாரகைக்குள் நுழைவேன்" என்றான்.(3,4)
சிறப்பும், நுண்ணறிவும், அளவற்ற ஆற்றலும் மிக்கவனான அந்தத் தேவன் இவ்வாறு {தாருகனிடம்} ஆணையிட்டுவிட்டு, சாத்யகியுடன் சேர்ந்து கருடனின் முதுகில் ஏறிச் சென்றான் {பறந்து சென்றான்}.(5) ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பகைவரைக் கொல்பவனான பிரத்யும்னனும், மலைகளில் செல்லவல்ல தனித்தேரில் கிருஷ்ணனைப் பின்தொடர்ந்து சென்றான்.(6) நுண்ணறிவுமிக்கவனான ஹரி, தேவர்களின் இன்பத் தோட்டமான நந்தனவனத்திலிருந்து பாரிஜாதத்தைக் கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்விடத்தை அடைந்தான்.(7) சிறப்புமிக்கவனான அதோக்ஷஜன் {கிருஷ்ணன்}, வெல்லப்படமுடியாதவர்களும், துணிவுமிக்கவர்களும், பல்வேறு ஆயுதங்களைத் தரித்தவர்களுமான தெய்வீகப் போர்வீரர்களின் படையை அங்கே கண்டான்.(8) நல்லோரின் புகலிடமும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே பாரிஜாத மரத்தை வேருடன் பிடுங்கி கருடனின் முதுகில் அதை வைத்தான்.(9) ஓ! பாரதா, அப்போது அந்தப் பாரிஜாதம் உடல்வடிவம் கொண்டு கேசவனையும், பறவைகளின் மன்னனான கருடனையும் (வேண்டுதலுடன்) அணுகியது.(10) உயரான்ம கேசவன், அந்தப் பாரிஜாதமரத்துக்கு ஆறுதலளித்து, "ஓ! மரமே, அஞ்சாதே" என்று சொல்லித் தேற்றினான்.(11) பிறகு அந்தப் பாரிஜாத மரம் (அந்தப் பறவையின் முதுகில்) பாதுகாப்பாக வைக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட அதோக்ஷஜன், கோட்டைகளில் சிறந்ததான தேவர்களின் வசிப்பிடத்தை {அமராவதி நகரை} வலம் வரத் தொடங்கினான்.(12)
அதே வேளையில், அந்தத் தேவ தோட்டத்தின் {நந்தனவனத்தின்} காவலர்கள் மஹேந்திரனிடம் ஓடிச்சென்று, "மரங்களில் மிகச் சிறந்த பாரிஜாதம் அபகரிக்கப்பட்டது" என்று சொன்னார்கள்.(13) பாகனை அடக்கியவன் (இந்திரன்) ஐராவதத்தில் ஏறிக் கொண்டும், தேரில் பின்தொடரும் ஜயந்தனுடன் சேர்ந்தும் வெளியே வந்தான்.(14) பகைவரைக் கொல்பவனான வாசுதேவன் அந்த நேரத்தில் கிழக்கு வாயிலை அடைந்திருப்பதைக் கண்ட இந்திரன், "ஓ! மதுசூதனா, என்ன நடக்கிறது?" என்று கேட்டான்.(15)
அப்போது கருடனின் முதுகில் அமர்ந்திருந்த கேசவன், சக்ரனுக்குத் தலைவணங்கி, "உமது கொழுந்தியாளின் (சத்யபாமாவின்) நோன்பைக் கடைப்பிடிப்பதற்காகவே இந்தச் சிறந்த மரத்தை எடுத்துச் செல்கிறேன்" என்றான்.(16)
சக்ரன், "ஓ! தாமரைக்கண்ணா, ஓ! பிழை செய்யாதவனே, போருக்கு என்னை அறைகூவியழைக்காமல் இம்மரத்தை நீ எடுத்துச் செல்லக்கூடாது.(17) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கேசவா, முதல் அடியை நீயே அடிப்பாயாக; என் மீது கௌமோதகி கதாயுதத்தை வீசும் உன்னுடைய உறுதிமொழி நிறைவேறட்டும்" என்றான்.(18)
ஓ! பாரதா, அப்போது கிருஷ்ணன், இடியைப் போன்று கடுமையான கூரிய கணைகளால் தேவர்களின் மன்னனுடைய சிறந்த யானையை {ஐராவதத்தைத்} துளைக்கத் தொடங்கினான்.(19) வஜ்ரபாணி {இந்திரன்} தெய்வீகமான சிறந்த கணைகளால் கருடனைத் துளைக்கத் தொடங்கினான்; பிறகு நளினமான கரங்களைக் கொண்ட கேசவனால் ஏவப்படும் கணைகள் அனைத்தையும் அறுப்பதிலும் விரைவில் வென்றான்.(20) மாதவனும், தேவர்களின் தலைவனால் ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் அறுத்தான்; பலனையும், விருத்திரனையும் கொன்றவனும் புன்னகைத்தவாறே மாதவனால் ஏவப்பட்டவற்றை அறுத்தான்.(21) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது மஹேந்திரனுடைய வில்லின் ஒலியாலும், சாரங்க வில்லின் நாணொலியாலும் சொர்க்கவாசிகள் மயக்கமடைந்தனர்.(22)
இவ்வாறு அவர்களுக்கிடையில் போர் நடந்து கொண்டிருந்தபோது, பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன் கருடனின் முதுகில் இருந்த பாரிஜாத மரத்தை அபகரிக்க முயன்றான்.(23) கம்சனைக் கொன்றவன் {கிருஷ்ணன்} அப்போது பிரத்யும்னனிடம், "(பாரிஜாத மரத்தை அபகரிப்பதில் இருந்து) அவனைத் தடுப்பாயாக" என்றான்; பெருஞ்சக்தி வாய்ந்தவனான ருக்மிணி மகனும் {பிரத்யும்னனும்} உடனே அவனை (உறுதியாக) எதிர்த்தான்.(24) வெற்றியாளர்களில் முதன்மையான ஜயந்தன் தன்னுடைய தேரில் அமர்ந்தவாறே சிரித்துக் கொண்டு கூரிய கணைகளால் ருக்மிணி மகனின் {பிரத்யும்னனின்} உடல் பகுதிகள் அனைத்தையும் துளைக்கத் தொடங்கினான்.(25) மறுபுறம் தாமரைக் கண்களைக் கொண்ட மன்மதத் தேவன் {பிரத்யும்னன்}, தன் தேரில் அமர்ந்து கொண்டே பாம்புகளைப் போலத் தெரியும் கணைகளால் இந்திரனின் மகனைத் துளைத்தான்.(26) ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது வீரனான ஜயந்தனுக்கும், ருக்மிணி மகனுக்கும் இடையில் ஒரு கடும்போர் நடந்தது.(27) ஆயுதபாணிகளில் முதன்மையான உபேந்திர மஹேந்திரர்களின் மகன்களும், வலிமைமிக்கவர்களுமான அவ்விரு வீரர்களும், தாக்குதலுக்கும், தற்காப்புக்கும் உரிய ஆயுதங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் போரிட்டனர்.(28) தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் அனைவரும் அந்தக் கடும்போரைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(29)
அதேவேளையில், ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, பெரும்பலம்வாய்ந்தவனும், பிரவரன் எனும் பெயரைக் கொண்டவனுமான தேவர்களின் தூதன் ஒருவன், கருடனின் முதுகில் இருந்த பாரிஜாதத்தை அபகரிக்க முயன்றான்.(30) ஓ! குருக்களின் வழித்தோன்றலே, இந்தப் பிரவரன், தேவர்களின் ஆட்சியாளனுடைய நண்பனாவான்; அவன் வலிமைமிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் திறன் மிக்கவனும், தன் பகைவரனைவரையும் அடக்கவல்லவனும் ஆவான்; பிரம்மனிடம் இருந்து பெற்ற வரத்தின் மூலம் அவன் கொல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான்.(31) முன்பொரு சமயம் அவன் ஜம்புத் தீவில் {ஜம்பூ த்வீபத்தில் / நாவலந்தீவில்} ஒரு பிராமணனாக {பிறந்து} இருந்து, தன் தவங்களின் அறத்தகுதியால் சொர்க்கத்தை அடைந்து, பலனைக் கொன்றவனின் {பலாசுரனைக் கொன்ற இந்திரனின்} நட்பைத் தன் சக்தியால் ஈட்டினான்.(32)
அவன் {பிரவரன்} முன்னேறி வருவதைக் கண்ட கிருஷ்ணன், சாத்யகியிடம், "ஓ! சாத்யகி, உன் கணைகளைக் கொண்டு இவ்விடத்தில் இருந்தே பிரவரனை எதிர்ப்பாயாக.(33) ஓ! சாத்யகி, கடுங்கணைகளால் நீ அவனைத் தாக்காதே; நிலையற்றதாக இருக்கும் இவனது பிராமணத்தன்மையை எல்லாவகையிலும் நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும்" என்றான்.(34)
அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், இருபிறப்பாளர்களில் முதன்மையானவனுமான பிரவரன், கருடன் மீது அமர்ந்திருந்த சாத்யகியை கூரிய அறுபது கணைகளால் துளைத்தான்.(35) ஓ! மன்னா, போர்வீரர்களில் முதன்மையான சிநியின் பேரன் {சாத்யகி}, கணைகளை ஏவப்பயன்படுத்தப்பட்ட பிரவரனின் வில்லை அறுத்து, அவனிடம்,(36) "நீ பிராமணனென்பதால் கொல்லத்தக்கவனல்ல; சென்று உனக்கான வாழ்வுமுறையைப் பின்பற்றுவாயாக; இருபிறப்பாளர்கள் குற்றமிழைத்தாலும் யாதவர்களால் கொல்லத்தகாதவர்கள்" என்றான்.(37)
ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, அப்போது பிரவரன் புன்னகைத்தவாறே, "ஓ! வீரமிக்க மனிதர்களில் முதன்மையானவனே, நீ மன்னிக்க {பொறுமைகாக்க} வேண்டியதில்லை; உன் வலிமை அனைத்தையும் பயன்படுத்திப் போரிடுவாயாக.(38) நான் ஜமதக்னியின் மகனான ராமரின் {பரசுராமரின்} சீடன், என் பெயர் பிரவரன். நான் சிறப்புமிக்கச் சக்ரனிடம் நட்பு கொண்டவன்.(39) இங்கே இருக்கும் தேவர்கள் மதுசூதனனிடம் கொண்டிருக்கும் மதிப்பினால் இந்தப் பிணக்கில் இணைய விரும்பவில்லை; ஆனால், ஓ! மாதவா, நான் இன்று இந்திரனுக்குப் பட்டுள்ள நட்புக்கடனை (இந்திரனின் பகைவனைக் கொல்வதன் மூலம்) தீர்க்க வந்திருக்கிறேன்" என்றான்.(40) பிறகு, ஓ! மன்னா, சிநியின் பேரனுக்கும், இருபிறப்பாளரில் சிறந்தவனுக்கும் இடையில் நடந்த போரில் அவர்கள் தெய்வீக ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(41) அந்த உயரான்மாக்களுக்கிடையில் போர் நடந்த போது வானம் நடுங்கத் தொடங்கியது, மலைகள் பெரிதும் கலக்கமடைந்தன.(42)
மறுபுறம், கிருஷ்ணனின் மகனாலும் ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவனை {இந்திரனின் மகனான ஜயந்தனை} வீழ்த்த முடியவில்லை, பின்னவனாலும் {ஜயந்தனாலும்} வீரர்களில் சிறந்தவனும், சிறப்புமிக்கவனுமான கிருஷ்ணனின் வீர மகனை {பிரத்யும்னனை} வீழ்த்த முடியவில்லை.(43) ஓ! மனிதர்களில் சிறந்தவனே, வீரர்களில் முதன்மையானவர்களான அவ்விருவரும், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, "தாக்கு", "பிடி" முதலிய சொற்களைச் சொல்லிக் கொண்டே போரிட்டனர்.(44) ஓ! மன்னா, சசியின் பலம்வாய்ந்த மகன் {ஜயந்தன்}, சாரங்க வில் தரிப்பவனின் (கிருஷ்ணனின்) மகனை {பிரத்யும்னனை} அறைகூவியழைத்து தெய்வீக ஆயுதத்தால் அவனைத் தாக்கினான்.(45) அப்போது கிருஷ்ணனின் மகன், கூரிய கணைகளால் பின்னப்பட்ட கணை வலையைக் கொண்டு அந்தப் பிரகாசமான ஈட்டிகளைத் தடுத்தான். இஃது அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தது.(46) ஆனால், ஓ! குருக்களின் வழித்தோன்றலே, பிரகாசமிக்கதும், பயங்கரமானதும், தானவர்களுக்கு அழிவை உண்டாக்குவதுமான அந்த ஆயுதம் ஒரு கணம் நின்று ருக்மிணி மகனுடைய தேரின் மீது விழுந்தது.(47) சிறப்புமிக்கப் பிரத்யும்னனின் தேர் அந்த ஆயுதத்தால் எரிக்கப்பட்டாலும், ஓ மனிதர்களின் ஆட்சியாளா, அதனால் ருக்மிணியின் மகனை எரிக்க முடியவில்லை.(48) ஏனெனில், ஓ! மனிதர்களின் தலைவா, நெருப்பு பேராற்றல் வாய்ந்ததாக இருப்பினும் மற்றொரு நெருப்பை அதனால் எரிக்க முடியாது. அதன்பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனான ருக்மிணியின் மகன் எரியும் தேரில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டான்.(49)
தேர்வீரர்களில் சிறந்தவனான நாராயணன் மகன் {பிரத்யும்னன்}, தேரை இழந்தவனாகக் கையில் வில்லுடன் ஆகாயத்தில் நின்றவாறு ஜயந்தனிடம்,(50) "ஓ! மஹேந்திரனின் மகனே, நீ ஏவிய தெய்வீக ஆயுதத்தினாலும், அத்தகைய நூற்றுக்கணக்கான ஆயுதங்களினாலும் என்னைக் கொல்ல இயலாது.(51) சிறந்த முயற்சியைச் செய்து இன்று உன் கல்வியையும், ஞானத்தையும் வெளிப்படுத்துவாயாக; ஆனால், ஓ! தேவனின் மகனே {ஜயந்தனே}, போரில் என்னை எவராலும் வெல்ல இயலாது.(52) ஆயுதங்களைத் தரித்தவனாக உனது தேரில் நீ வெளியே வந்த போது நான் சற்றே அஞ்சினேன்; ஆனால் இப்போதோ போரில் உன் ஆற்றலைக் கண்ட பிறகு, எனக்கு உன்னிடம் கிஞ்சிற்றும் அச்சமில்லை.(53) இனியும் உன்னால் இந்தப் பாரிஜாத மரத்தைக் கரங்களால் தீண்ட முடியாது என்பதால் நீ அதை உன் மனத்தில் மட்டுமே நினைத்து நிறைவடைவாயாக.(54) உன் ஆயுதத்தின் தழலால் நீ எரித்த மாயத் தேரைப் போன்ற ஆயிரக்கணக்கான தேர்களை என் மாய சக்திகளின் மூலம் என்னால் உண்டாக்க முடியும்" என்றான் {பிரத்யும்னன்}.(55)
பெருஞ்சக்திவாய்ந்த ஜயந்தன், இவ்வாறு சொல்லப்பட்டதும், கடுந்தவங்களின் மூலம் தான் அடைந்த ஒரு கடும் ஆயுதத்தைப் பெருஞ்சக்தியுடன் அவன் {பிரத்யும்னனின்} மீது ஏவினான்.(56) பிரத்யும்னன், பெருஞ்சக்தியுடன் ஏவப்பட்ட அந்த ஆயுதத்தைத் தன் கணைவலையால் எதிர்த்தான்; இந்திரனின் மகன் மேலும் நான்கு கணைகளை அடுத்தடுத்து ஏவினான்.(57) ஓ! பாரதா, அந்த ஆயுதங்கள் ஆகாயத்தின் அனைத்துத் திக்குகளையும் அடைத்தன; பிறகு அவன் ருக்மிணியின் மகனை மேலும் ஐந்து கணைகளால் வானத்தில் முழுமையாக மறைத்தான்.(58) தேவர்களில் முதன்மையானவன் {ஜயந்தன்} ஏவிய சுடர்மிக்க நெருப்பைப் போன்ற கணைகளும், பயங்கரமான ஆயுதங்கள் அனைத்தும் பிரத்யும்னன் மீது அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாய்ந்தன.(59) அந்த ஆயுதங்களையும், கணைகள் அனைத்தையும் கிருஷ்ணனின் மகன் தன் கணைகளால் தடுத்தான்; பிறகு வேறு கூரிய கணைகளால் அவன் ஜயந்தனையும் துளைத்தான்.(60) அப்போது புனிதச் செயல்களைச் செய்யும் தேவர்கள், உயரான்ம பிரத்யும்னனின் கரநளினத்தையும், உறுதியையும் கண்டு மகிழ்ச்சி முழக்கம் செய்தனர்.(61)
ஓ! பாரதா, சிநியின் வீர வழித்தோன்றலும் {சாத்யகியும்}, பிரவரனுடைய வில்லின் நாணை அறுத்து, மற்றொரு கூரிய கணையால் அவனது விரலுறையையும் {கையுறையையும்} அறுத்தான்.(62) பிரவரன், மஹேந்திரனால் தனக்குக் கொடுக்கப்பட்டதும், இடியின் ஒலிக்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு சிறந்த வலிமைமிக்க வில்லை எடுத்துக் கொண்டான்.(63) இருபிறப்பாளர்களில் முதன்மை வீரனான பிரவரன், அந்த வலிமைமிக்க வில்லைக் கொண்டு பிரகாசமானவையும், சூரியனின் கதிர்களைப் போலப் பிரகாசிப்பவையுமான அனைத்து வகைக் கணைகளையும் ஏவத் தொடங்கினான்.(64) அவன் சிநியின் வலிமைமிக்கப் பேரனுடைய அழகிய வில்லை அறுத்து, எண்ணற்ற கணைகளால் அவனது உடற் பகுதிகள் அனைத்தையும் துளைத்தான்.(65) அதன்பிறகு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, சிநியின் பேரன், அதிகச் சக்தியைத் தாங்கவல்ல மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான்; அப்போது அந்த நுண்ணறிவுமிக்கவன், அந்தப் போரில் பிரவரனை மிகக் கடுமையாகத் துளைத்தான்.(66) கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் கவசங்களை அறுத்தனர்; இதயத்திற்கே ஊடுருவிச் செல்லவல்ல கூரிய கணைகளால் அவர்கள் ஒருவருக்கொருவர் சதைகளைச் சிதைத்தனர்.(67) வீரனான பிரவரன், எட்டு கூரிய கணைகளால் மீண்டும் சாத்யகியின் வில்லை அறுத்து, மேலும் மூன்றால் அவனையும் துளைத்தான்.(68) சாத்யகி மற்றொரு வில்லை எடுக்க நினைத்தபோது, பெருங்கரநளினம் கொண்ட அந்த இருபிறப்பாளன், பகைவரை நோக்கி ஏவவல்ல கதாயுதம் கொண்டு அவனைத் தாக்கினான்.(69) அப்போது வில்லால் கடுமையாகத் தாக்கபட்டிருந்த நுண்ணறிவுமிக்கச் சாத்யகி, தன் வில்லை எடுக்காமல், தன் வாளையும், கேடயத்தையும் புன்னகையுடன் எடுத்துக் கொண்டான். ஆனால் துணிவுமிக்கப் பிரவரன் முழுமையாக நூறு கணைகளை ஏவி அந்த வாளையும், கேடயத்தையும் அறுத்தான்.(70)
யதுக்களைத் திளைக்கச் செய்பவனான சாத்யகி ஆயுதமற்றவனாக இருப்பதைக் கண்ட பிரத்யும்னன், மேகமற்ற வானைப் போன்ற பிரகாசமான மற்றொரு வாளை அவனுக்குக் கொடுத்தான்.(71) ஆனால் பிரவரனோ, அந்த வாள் தன் உரிமையாளனின் கைப்பிடிக்குள் வந்தபோது புன்னகையுடன் அதையும் அறுத்தான்.(72) அதன்பிறகு அவன் நேரான கூரிய கணைகளால் சாத்யகியின் தோலைச் சிதைக்கத் தொடங்கினான்; அந்த இருப்பிறப்பாளன் ஓர் ஈட்டியால் {வேலால் / சக்தி ஆயுதத்தால்} அவனுடைய மார்பில் தாக்கி மகிழ்ச்சியில் முழங்கினான்.(73) அவன் {சாத்யகி} மயங்கியதைக் கண்ட பிரவரன், கருடனின் முதுகில் இருக்கும் பாரிஜாதத்தை அபகரிக்கும் நோக்கில் தன் தேரில் அவனை {கருடனை} நோக்கிச் சென்றான்.(74) அப்போது அவன் {பிரவரன்} தன் தேருடன் சேர்ந்து முழுமையாக நான்கு மைல்கள் {ஒரு கவ்யூதி = 4000 தண்டங்கள் = 2 குரோசங்கள்} தொலைவுக்குத் தள்ளி விழுந்து மயங்கும் அளவுக்குக் கருடன் அவனைத் தன் சிறகுகளால் மிகக் கடுமையாகத் தாக்கினான்.(75) ஓ! மன்னா, அப்போது ஜயந்தன், இவ்வாறு தூக்கிவீசப்பட்ட அந்தப் பிராமணனை விரைந்து சென்று தூக்கித் தன் தேரில் ஏற்றிக் கொண்டு அவனைத் தேற்றினான்.(76) மறுபுறம் பிரத்யும்னன், மீண்டும் மீண்டும் மயங்கி விழும் சிநியின் பேரனான தன் சிற்றப்பனை {சாத்யகியைத்} தழுவி (அவனது பலத்தை மீட்பதற்காக) உற்சாகமூட்டித் தேற்றினான்.(77) மதுசூதனன் தன் வலக்கரத்தால் சாத்யகியைத் தீண்டினான்; இந்தத் தீண்டல் பட்ட உடனேயே பின்னவன் {சாத்யகி} வலியில் இருந்தும் துன்பத்தில் இருந்தும் விடுபட்டான்.(78) அப்போது போர்வீரர்களில் முதன்மையானவர்களான பிரத்யும்னனும், சாத்யகியும் (பாரிஜாதத்தைக் காப்பதற்காக) பாரிஜாதத்தின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் தங்களை நிறுத்திக் கொண்டார்கள்.(79)
மறுபுறம், ஓ! பாரதா, உயரான்ம மஹேந்திரன், ஒரே தேரில் மீண்டும் போரிடத் திரும்பும் ஜயந்தனையும், பிரவரனையும் கண்டு, புன்னகையுடன் அவர்களிடம்,(80) "இறகுபடைத்த படைப்புகளின் மன்னனான கருடனின் அருகில் ஒருபோதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் செல்லாதீர்கள்; வினதையின் மகன் அபரிமித வலிமைபடைத்தவன்.(81) நீங்கள் இருவரும் எனக்கு இடப்புறத்திலும், வலப்புறத்திலும் நின்று கொண்டு (கிருஷ்ணனுடன்) நான் போரிடுவதைப் பார்ப்பீராக" என்றான்.(82) இவ்வாறு சொல்லப்பட்ட அவ்விரு வீரர்களும், சக்ரனின் இருபுறத்தையும் அடைந்து, இந்திரனுக்கும் ஜனார்த்தனனுக்கும் இடையில் நடந்த போரைக் கண்டனர்.(83)
அப்போது இந்திரன், கணைகளாலும், சிறந்தவையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான ஒலியைக் கொண்டவையும், வலிமைமிக்கவையுமான ஆயுதங்களாலும் கருடனுடைய உடலின் அனைத்துப் பகுதிகளையும் துளைத்தான்.(84) ஆனால் பெருஞ்சக்திவாய்ந்தவனும், பகைவரை அடக்கும் வீரனுமான அந்த வினதையின் மகன் {கருடன்}, அந்தக் கணைகளைச் சற்றும் மதிக்காமல் அலட்சியம் செய்து, சக்ரனின் யானையை {ஐராவதத்தை} நோக்கி வேகமாகப் பறந்து சென்றான்.(85) அப்போது வலிமைமிக்கவர்களும், பெருஞ்சக்திவாய்ந்தவர்களும், துணிவுமிக்கவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான அந்தப் பறவையானவனும், யானையானவனும் மிகக் கடுமையாகப் போரிடத் தொடங்கினர்.(86) யானைகளின் மன்னனான ஐராவதன், உரக்கப் பிளிறியபடியே தன் தந்தங்களாலும், துதிக்கையாலும், தலையாலும் பாம்புகளின் பகைவனை {கருடனைத்} தாக்கத் தொடங்கினான்.(87) மறுபுறம் கடும்பலம்வாய்ந்த வினதையின் மகனும், தன் கூரிய நகங்களினாலும், சிறகடிப்புகளாலும் இந்திரனின் யானையைத் தாக்கினான்.(88) பறவைக்கும், யானைக்கும் இடையிலான அந்தப் போர், பார்வையாளர்களின் இதயத்தில் அச்சத்தையும், மொத்த அண்டத்திற்கும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஒரு கணத்திற்குள் பயங்கரமடைந்தது.(89) அதன்பிறகு, ஓ! பாரதா, வலிமைவாய்ந்த கருடன், அச்சத்தை ஏற்படுத்தும் தன்னுடைய உகிர்களுடன் கூடிய கடும் நகங்களால் ஐராவதத்தின் தலையைத் தாக்கினான்.(90) ஓ! ஜனமேஜயா, கடுமையான காயத்தால் பீடிக்கப்பட்ட அந்த யானையானவன் ஆகாய உயரத்தில் இருந்து, நாம் வாழும் இந்தத் தீவில் இருக்கும் {ஜம்பூத்வீபத்தின்} மலைகளில் சிறந்த பாரியாத்ரத்தின் உச்சியில் விழுந்தான்.(91) அவன் அவ்வாறு விழுந்தபோதும் வலிமைமிக்கச் சக்ரன், கருணையாலும், நட்பாலும், ஏற்கனவே தான் செய்து கொடுத்த உறுதிமொழியாலும் அவனைவிட்டு விலகாமல் இருந்தான்.(92) பரமபுத்தியைக் கொண்டவனும், பிழைசெய்யாதவனும், வலிமைமிக்கவனுமான கிருஷ்ணன், பாரிஜாத மரத்தைச் சுமக்கும் கருடனுடன் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(93)
கிருதனை {விருத்திரனைக்} கொன்றவன் {இந்திரன்} இவ்வாறே பாரியாத்ர மலைக்குக் கொண்டு வரப்பட்டான். ஐராவதம் மீண்டும் பலம்பெற்றதும் கிருஷ்ணனுக்கும், இந்திரனுக்கும் இடையிலான போர் மீண்டும் நடந்தது.(94) ரத்தினங்கள் பதிக்கப்பட்டவையும், வடிவில் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கவனமாகக் கடினமாக்கிக் கல்லில் கூர்த்தீட்டப்பட்டவையுமான கணைகளைக் கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் தாக்கினர்.(95) ஓ! மன்னா, சொர்க்கத்தின் வஜ்ரதாரி {இந்திரன்}, ஐராவதத்தின் பகைவனான கருடன் மீது தன் வஜ்ரத்தைப் பேரொலியுடன் மீண்டும் மீண்டும் ஏவினான்.(96) ஆனால், உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவனும், ஆற்றல்வாய்ந்தவனும், எவராலும் கொல்லப்பட முடியாதவனுமான பறவைகளின் மன்னன் இடி போன்ற அந்தத் தாக்குதல்கள் அனைத்தையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்.(97) ஆனால் வஜ்ரத்தின் மீதும், தன் அண்ணனான தேவமன்னன் சக்ரனின் மீதும் கொண்ட மதிப்பினால் ஒவ்வொரு முறையும் அந்தப் பறவைகளின் மன்னன், தன் சிறகில் இருந்து ஓர் இறகை உதிர்த்தான்.(98) அப்போது, ஓ! மன்னா, அந்தப் பாரியாத்ர மலையின் பகுதிகள் அனைத்தும் கருடனின் சுமையால் நடுங்கி நொறுங்கி பூமிக்குள் புதைந்தன.(99) கிருஷ்ணனிடம் உள்ள மதிப்பைக் காட்டுவதற்காக அஃது {அந்த மலை} இனிய ஒலியை வெளியிட்டது, அப்போது அதோக்ஷஜன் பூமிக்கு மேலே இருக்கும் அதன் மிகச் சிறு பகுதியை மட்டுமே கண்டான்.(100) அதன் பிறகு அவன் அதைக் கைவிட்டு கருடனின் முதுகில் வானத்திற்கு உயர்ந்தான்; அனைத்தையும் படைத்தவனும், உலகங்களைப் பாதுகாப்பவனுமான அவன் {கிருஷ்ணன்} பிரத்யும்னனிடம்,(101) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, என் சக்தியின் உதவியால் துவாரகைக்குச் சென்று தாருகனுடன் சேர்ந்து தாமதமில்லாமல் என் தேரைக் கொண்டு வருவாயாக.(102) ஓ! கௌரவங்களை அளிப்பவனே, பலபத்ரரிடமும் {பலராமரிடமும்}, குகுரர்களின் ஆட்சியாளரிடமும் {உக்ரசேனரிடமும்}, நாளை நான் இந்திரனை வீழ்த்திவிட்டுத் துவாரகை திரும்புவேன் என்று சொல்வாயாக" என்றான்.(103)
அறம்சார்ந்தவனும், பலம்வாய்ந்தவனுமான பிரத்யும்னன், "அவ்வாறே ஆகட்டும்" என்று தன் தந்தையிடம் மறுமொழிகூறிவிட்டு, துவாரகைக்குச் சென்று தன் தந்தையின் சொற்களை உக்ரசேனனிடமும், பலபத்ரனிடமும் சொன்னான்.(104) அதன் பிறகு, ஓ! பாரதா, அவன் தாருகனுடன் சேர்ந்து கிருஷ்ணனின் தேரில் ஒரு மணிநேரத்திற்குள் போர் நடக்கும் இடத்திற்குத் திரும்பி வந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(105)
விஷ்ணு பர்வம் பகுதி – 130 – 074ல் உள்ள சுலோகங்கள் : 105
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |