(பாரிஜாதோத்பத்திகதனம்)
Satyabhama's grief | Vishnu-Parva-Chapter-124-068 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : சத்யபாமாவின் துக்கத்திற்கான காரணத்தைக் கேட்டறிந்த கிருஷ்ணன்; பாரிஜாத மரம் கொணர்வதாக உறுதி கூறல்; பாரிஜாத மலரின் மகிமையைச் சொன்ன நாரதர்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதா, பொறாமையுடன் கூடிய சினத்தின் ஆதிக்கத்தில் இருந்தவளும், கற்புடையவளும், அழகியுமான சத்யபாமாவிடம் மீண்டும் நாராயணன் {கிருஷ்ணன்} பின்வரும் வகையில் அன்புடன் பேசினான்.(1)
அந்த மங்கல தேவன் {ஸ்ரீ பகவான்}, "ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவளே, (உன்னை இந்த அவல நிலையில் கண்டு) என் அங்கங்கள் அனைத்தும் துன்பத்தில் எரிவதாகத் தெரிகிறது. நீ இவ்வளவு வருந்துவதற்கான காரணம் யாது?(2) ஓ! அங்கங்கள் அனைத்திலும் அழகானவளே {சர்வாங்க சுந்தரியே}, தீங்கேதும் இல்லையென்றால், உன் அன்புக்குரிய கணவன் இதைக் கேட்பது முறையென்றால், உன் துன்பத்திற்கான காரணத்தை எனக்கு வெளிப்படுத்துமாறு என் உயிருக்காக உன்னிடம் மன்றாடிக் கேட்கிறேன்" என்று கேட்டான்.(3)
அப்போது பூமியை நோக்கிய முகத்தோடு அமர்ந்திருந்த சத்யபாமா நோன்புகளில் எப்போதும் உண்மை நிறைந்தவனான தன் கணவனிடம் துன்பத்தின் ஆவியால் தடைபட்ட குரலுடன் இவ்வாறு பேசினாள்.(4) {சத்யபாமா}, "ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவரே, ஓ! கேசியை அழித்தவரே, ஓ! கௌரவங்களை அளிப்பவரே, கடந்து சென்ற நாட்களில் என் கௌரவத்தையும், செழிப்பையும் நிலைநிறுத்தியவர் நீரே. அந்தச் செழிப்பும், கௌரவமும் {சௌபாக்யமும்} தான் இப்போது புகழுடன் இருக்கின்றன.(5) ஓ! தேவா, உமது மனைவியர் அனைவரின் மத்தியிலும் நானே உமது பேரன்புக்குரியவள் என்ற நிலையே பிறர் அனைவருக்கும் மேலெனப் பெருமையுடன் என்னைத் தலை நிமிரச் செய்தது.(6) ஆனால், என்னுடைய சக்காளத்திகளாலும், பிறராலும் நான் இன்று ஏளனம் செய்யப்பட்டேன் என்று பிறர் சொன்னதைக் கேட்டு வந்து என் பணிப்பெண்கள் என்னிடம் சொன்னார்கள்.(7) நாரதர் உமக்களித்த பாரிஜாத மலரை, (எளியவளான) என்னை முற்றிலும் புறக்கணித்து, உமது அன்புக்குரியவளிடம் நீர் கொடுத்ததாக நான் கேட்டேன்.(8) மதிப்புமிக்கப் பொருட்கள் அனைத்திலும் சிறந்ததை (அந்தப் பாரிஜாத மலரை) அவளிடம் கொடுத்ததன் மூலம் அவளிடம் நீர் கொண்ட அன்பும், மதிப்பும் மேலானது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்.(9) நாரதர் உமது முன்னிலையில் உமது அன்புக்குரிய மனைவியைத் துதித்திருக்கிறார், அவள் துதிக்கப்படுவதைக் கேட்டு நீரும் நிச்சயம் நிறைவடைந்திருக்கிறீர்.(10) நாரதர் உமது முன்னிலையில் அவளைப் புகழ்வதற்குக் காரணமேதும் இருந்தாலும், அதன் தொடர்ச்சியாக இந்தப் பேறற்றவளின் பெயர் அங்கே சொல்லப்பட்டது ஏன்?(11) ஓ! தலைவா, உமது அன்பெனும் (இனிய) மதுவைப் பருகியதால் நான் வருந்த வேண்டுமெனில், இதில் நான் ஏதும் செய்யாதிருப்பதே சிறந்தது. எனக்குத் தயவு செய்து உமது அனுமதியை வழங்குவீராக.(12) ஓ! தாமரைக் கண்களைக் கொண்டவரே, என்னைத் தவிர வேறொருத்தியைக் கௌரவிப்பீரென நான் கனவிலும் நம்பாதிருந்தேன்; ஐயோ, ஆனால், பிறர் கண் எதிரிலேயே மெய்வாழ்வில் அது நடந்தேறியது.(13) ஒப்பற்ற சக்திகளைக் கொண்ட நாரத முனிவர் அவளிடம் அன்பு கொண்டிருக்கலாம். ஆனால், ஓ! தலைவா, அந்தக் காட்சியில் உமது இருப்பே என்னுடைய இந்தத் துன்பத்திற்குக் காரணமாகும் {அதை நீர் பார்த்துக் கொண்டிருந்தீர் என்ற நினைப்பே என் துன்பத்திற்குக் காரணமாகும்}.(14)
மனிதர்கள் கௌரவத்திற்காகவே வாழ்கின்றனர் என்று நீர் என்னிடம் சொல்லியிருக்கிறீர். எனவே, இவ்வாறு மதிப்பிழந்திருக்கும் நான் இனியும் வாழ விரும்பவில்லை.(15) என் பாதுகாப்பின் தோற்றுவாயே இன்று என் அச்சத்தின் தோற்றுவாயாக மாறியிருக்கிறது. அனைத்திலும் என்னைப் பாதுகாப்பவரே இன்று அவ்வாறு செய்வதில்லை {என்னை பாதுகாக்கவில்லை}.(16) ஐயோ, ஓ! தலைவா, இவ்வாறு உம்மால் கைவிடப்பட்ட நான் என்ன கதியை அடையப் போகிறேன்? உம்மால் கைவிடப்பட்ட நான் நிச்சயம் வெள்ளை அல்லியின்[1] நிலைக்குக் குறைக்கப்படுவேன்.(17) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, உம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவளாக இருப்பினும், தேவர்கள் விரும்பாத செயலெதையோ மூடத்தனத்தால் இன்று செய்ததன் விளைவால் உமது வெறுப்புக்குப் பாத்திரமாகியிருக்கிறேன்.(18) உம்முடைய அன்புக்குரிய மனைவியாக இருந்தாலும் உம்மால் இப்போது புறக்கணிக்கப்படும் நான், வசந்த கால மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இந்த ரைவதக் குன்றுகளை எவ்வாறு காண்பேன்?(19) இப்போதோ உமது வெறுப்புக்குப் பாத்திரமாகியிருக்கும் பேறற்றவளான நான், குயிலிசையுடன் கூடியதும், மலர்களின் நறுமணம் நிறைந்ததுமான தூய தென்றலை (இவ்விடத்தில்) எவ்வாறு சுவாசிப்பேன்.(20)
[1] "வெள்ளை அல்லியானது, நிலவின் ஒளிக்கற்றைகள் விழாமல் நாள் விடியும்போது வாடிவிடும். இங்கே சொல்லப்படும் குமுதவதி என்பதற்கு வேறு பொருள் இருக்கலாம். அஜன் என்ற மன்னனுக்கு இதே பெயரில் ஒரு மனைவி இருந்தாள். அவள் தன் கணவனுக்கு முன்பே இறந்தாள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "உம்மால் கைவிடப்படும் நான் எங்குச் செல்வேன்? நிச்சயம் என் பற்றுகள் அனைத்தையும் இழந்து குமதவதியின் வழியிலேயே செல்வேன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உம்முடன் சேராமல் பிரிந்து, சந்திரன் இல்லாது அல்லிப்பூ அடைந்த கதியை நான் அடைவேன்" என்றிருக்கிறது.
ஓ! தலைவா, உமது மடியில் அமர்ந்து கடலின் நீரில் விளையாடிய நான், மகிழ்ச்சியற்ற என்னுடைய இந்த நிலையில் மீண்டும் எவ்வாறு அதை {அந்தக் கடலைப்} பார்ப்பேன்?(21) கடந்து சென்ற நாட்களில் என்னிடம் நீர், "ஓ சத்ராஜித்தின் மகளே, உன்னைவிட அன்புக்குரிய மனைவி வேறொருத்தி எனக்கில்லை என்றறிவாயாக" எனச் சொன்னீர். அந்த உறுதிமொழி என்னாயிற்று? இல்லையெனில் அதை நினைவில் கொண்டவர் யார்?[2](22) எனது மாமியார் என்னைப் பெரும் மதிப்புடையவளாகவும், மகிழ்ச்சியடைபவளாகவும் கண்டாள். ஆனால் பேறற்றவளான அந்தப் பெண்ணரசி உள்ளபடியே {இதன் மூலம்} உம்மால் அவமதிக்கப்பட்டாள்.(23) ஓ! தலைவா, உம்முடைய மனைவியருக்கிடையே என்னை அறிய மாட்டீரெனில் வெளிப்படுத்தாத, மறைவான உமது அன்பால் ஏற்படப்போகும் நன்மையென்ன?(24) ஓ! பகைவரை அடக்குபவரே {கிருஷ்ணரே}, இவ்வளவு வஞ்சகராகவும், கபடக்காரராகவும் இதற்கு முன்பு நான் உம்மை அறிந்ததில்லை; ஆனால் இப்போதோ, நிலையற்றவராகவும், வஞ்சகராகவும், என் எதிரியை (சக்காளத்தியைச்) சார்ந்தவராகவும் அறியவருகிறேன்[3].(25) ஓ! கள்வரே, உம்முடைய உள்ளார்ந்த ரகசிய எண்ணங்களை நீர் மறைக்க முயன்றாலும், உமது பேச்சு, குணம், அறிகுறி {வர்ணம், கார்யம், ரூபம்} ஆகியவற்றின் மூலம் நான் அறிந்து கொண்டேன். கபடரே, என் எதிரியின் சார்பாளரே, உமது நாவில் மட்டுமே தேன் இருக்கிறது. ஆனால் நீரோ வஞ்சகராக இருக்கிறீர்" என்றாள் {சத்யபாமா}.(26)
[2] "நான் போகும்போது என்னுடன் யார் இருப்பார் என மற்றொரு வகையில் இந்த ஸ்லோகத்திற்குப் பொருள் கொள்ளலாம். ஆனால் அது வலிந்து பெறப்படும் பொருளாகவே இருக்கும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "கிருஷ்ணனைக் கடவுளாக அடையாளம் காணும் வகையில் இந்த ஸ்லோகத்திற்கு உருவகமான ஒரு பொருளைக் கூற ஸ்ரீதரரின் உரையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அது தனித்துவமானதாக இருந்தாலும் சூழலுக்குப் பொருந்தாததாக இருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "நீர் வஞ்சகர், மோசடி செய்பவன் என்று நான் ஒருபோதும் அறிந்ததில்லை. இன்றோ நீர் நிலையற்றவர், மக்களை வஞ்சிப்பவர் என நான் அறிகிறேன்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "உம்மை இவ்வளவு ஒழுக்கமற்றவராக நான் நினைக்கவில்லை. இப்போது அந்த மனுஷி பக்கம் பிரியர், மற்றோருக்கு வஞ்சகராகவும் அறியப்பட்டீர்" என்றிருக்கிறது.
சத்ராஜித்தின் மகள் {சத்யபாமா}, பொறாமையின் ஆதிக்கத்தில் சினம் நிறைந்தவளாக இருந்தபோது தேவனைப் போன்ற கிருஷ்ணன் அவளுக்கு ஆறுதலளிக்கும் வகையில் பின்வரும் முறையில் அவளிடம் பேசினான்.(27) {கிருஷ்ணன்}, "ஓ! தாமரைக் கண்ணாளே, அவ்வாறு சொல்லாதே, நீயே என் இதயத்தை ஆளும் அன்புக்குரியவள். என் அன்பே இது குறித்து நான் இன்னும் என்ன சொல்லப் போகிறேன். முற்றாக உன்னவனாக என்னை நீ அறிவாயாக.(28) குற்றங்குறையற்ற செயல்களைச் செய்யும் நாரத முனிவர் அவள் (ருக்மிணி) மீது கொண்ட மதிப்பினாலோ, வெறுமனே தயாள குணத்தாலோ என்னை நிறைவடையச் செய்வதற்காக என் முன்னிலையில் வைத்து அவளிடம் பாரிஜாத மலரைக் கொடுத்தார் என்பதில் ஐயமில்லை; (ஆனால் அதை நான் என் கைகளால் கொடுக்கவில்லை). ஓ! தூய புன்னகை கொண்டவளே, ஆறுதலடைவாயாக; முதலும், இறுதியுமாக நான் செய்த இந்த ஒரே குற்றத்திற்காக என்னை மன்னிப்பாயாக.(29,30) ஓ! பெருங்கோபம் கொண்டவளே, ஓ! மெல்லிடையாளே, பாரிஜாத மலர்களை நீ விரும்பினால் அதை நான் உனக்குத் தருவேன் என ஊக்கத்துடன் சொல்கிறேன்.(31) சொர்க்கத்தின் தோட்டங்களில் இருந்து மரங்களில் சிறந்த பாரிஜாத மரத்தையே கொண்டு வந்து நீ விரும்பும் வரை உன் மாளிகையில் வைத்திருப்பேன் (ஒரு மலரைப் பற்றிப் பேசியென்ன?)" என்றான் {கிருஷ்ணன்}.(32)
ஹரியால் இவ்வாறு பேசப்பட்டதும், அவனிடம் ஆழமான அன்பைக் கொண்ட அந்தப் பெண், "ஓ! குற்றங்குறையற்றவரே, உம்மால் அந்த மரத்தை இங்கே கொண்டு வர முடியுமென்றால் என் சினம் அகலும், அதுவே எனக்குப் பெரும் நிறைவைத் தரும். ஏனெனில், ஓ! அதோக்ஷஜா, அப்போது நானே தலைவியும், உமது மனைவியரின் மத்தியில் சிறப்பாக மதிக்கப்பட்டவளும் ஆவேன்" என்றாள்.(33,34) ஒப்பற்றவனும், தெய்வீகமானவனும், உலகின் பிறப்பிடமும், சிதைவுக்கு அப்பாற்பட்டவனுமான அந்த மதுசூதனன், அவளிடம், "அப்படியே ஆகட்டும். இதுவே என் முதன்மையான கவலையாக இருக்கும்" என்றான்".(35)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பெரும்படைகளை வென்றவனே, மங்கலனான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நல்லோரால் உயர்வாக மதிக்கப்பட்டவளும், கம்சனைக் கொன்றவனிடம் ஆழமான அன்பைக் கொண்டவளுமான சத்யபாமா பெரும் நிறைவடைந்தாள்.(36) அனைவரின் தலைவனும், அனைத்துப் பொருட்களின் பாதுகாவலனும், நல்லோரின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுபவனுமான அந்த உலகத் தலைவன் {கிருஷ்ணன்} நீராடிவிட்டு, அவசியக் கடமைகள் அனைத்தையும் செய்தான்.(37) ஓ! மன்னா, அந்தத் தலைவன் அப்போது முனிவர்களில் சிறந்த நாரதரை நினைத்தான். அவ்வாறு நினைத்தவுடனேயே அவரும் பெருங்கடலின் நீரில் தன் தூய்மைச் சடங்குகளைச் செய்துவிட்டு அங்கே வந்தார்.(38) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நல்லோரின் புகலிடமாக இருப்பவனும், சத்யபாமாவால் நன்கு கவனிக்கப்பட்டவனுமான கிருஷ்ணன், (மனோ சக்தியின் மூலம்) அங்கே வந்த நாரதரை முறையாக வழிபட்டான்.(39) சத்ராஜித்தின் மகளே {சத்யபாமாவே} அந்த முனிவரின் பாதங்களைக் கழுவினாள்; தலைவன் கிருஷ்ணனே தங்கக் கமண்டலத்தில் இருந்து நீரை ஊற்றினான்.(40)
அந்த முனிவர் சுகமாக அமர்ந்த பிறகு, உலகங்களின் ஆசானும், உயரான்மாவுமான கேசவன் அவருக்கு மதிப்பளித்து, பாலில் கொதிக்க வைக்கப்பட்ட அரிசியாலான உணவை (அல்லது இனிமையான உணவை) கவனமாக அவருக்குக் கொடுத்தான்.(41) பெரும் நுண்ணறிவுமிக்கவரும், பேசுபவர்கள் அனைவரிலும் சிறந்தவருமான அந்த முனிவர் பெரும் மதிப்புடன் அந்த உணவை உண்டு, உலகங்களின் படைப்பாளனால் அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தைச் சுவைத்தார்.(42) ஓ! தலைவா, மனமுவந்த உணவில் மனம் நிறைந்த நாரதர், தமது வாயை கழுவிக் கொண்டு, மனநிறைவுடன் தம் ஆசியை ஏற்றுக் கொள்ளும் கிருஷ்ணனுக்கு ஆசி கூறினார்.(43)
அதன் பிறகு நாரதர், ஈரமான தமது வலக்கரத்தை நீட்டி, தமது முன் வணங்கி நின்றவளும், தெய்வீக அழுகுடன் கூடியவளுமான சத்ராஜித்தின் மகளிடம் இவ்வாறு பேசினார்.(44) {நாரதர்}, "ஓ! ராணி, நீ இப்போது இருப்பது போலவே எப்போதும் உன் கணவனிடம் அர்ப்பணிப்புள்ளவளாகவும், நம்பிக்கைக்குரியவளாகவும் இருப்பாயாக. எனது அற நோன்புகளுடைய சக்தியின் மூலம் நீ சிறப்பான நற்பேறுகளைப் பெறுவாயாக" என்றார்.(45)
ஓ! மன்னா, அந்த முதன்மையான முனிவர் இவ்வாறு சொன்னதும், ஹரியின் பேரன்புக்குரிய மனைவியான சத்யபாமா, (அவரை வணங்கிய நிலையில் இருந்து) பெரும் மகிழ்ச்சியால் நிறைந்தவளாக எழுந்தாள்.(46) அளவில்லா சக்திகளையும், நுண்ணறிவையும் கொண்ட ஆளுமையான கிருஷ்ணன், அந்த முனிவரிடம் {நாரதரிடம்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு அவரது உணவில் எஞ்சியவற்றை உண்டான்.(47) ஓ! பாரதா, அவசியச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேறிய சத்யபாமாவும், தன் சிறப்புமிக்கக் கணவனின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாகத் தன் அந்தப்புரத்திற்குள் நுழைந்தாள்.(48) சிறிது நேரம் கழித்துக் கிருஷ்ணனின் ஆணையின் பேரில் மீண்டும் வெளியே வந்து, அந்த உயரான்ம முனிவருக்குத் தலைவணங்கி, கிருஷ்ணனின் அருகில் அமர்ந்து கொண்டாள்.(49)
இவ்வாறு சிறிது நேரம் (சுகமாக) அமர்ந்த பிறகு நாரதர் கிருஷ்ணனிடம், "ஓ! அதோக்ஷஜா, நான் இப்போது உன்னிடம் விடைபெற்றுக் கொண்டு சக்ரனின் உலகத்திற்குச் செல்ல விரும்புகிறேன்.(50) இன்று அங்கே தேவர்களும், கந்தர்வர்களும், அப்சரஸ்களும் முதன்மை தேவனான ஈசானனை வணங்கிவிட்டு, அவனை {ஈசானனைப்} புகழும் பாடல்களைப் பாடுவார்கள்.(51) ஓ! தலைவா, இந்திரனின் வசிப்பிடத்தில் ஒவ்வொரு மாதமும் தேவர்களின் தேவனை (சிவனை) வணங்கும் இத்தகைய வழிபாடும், அவனை மதிக்கும் வகையில் கந்தர்வர்களின் ஆடல்களும் அரங்கேறும்.(52) அந்தத் தேவதேவன் தன் மனைவியான உமையின் துணையுடனும், தன் தொண்டர்களின் கவனிப்புடனும், தேவர்களில் முதன்மையானவனும், மலைகளை அழிப்பவனுமான தன்னை மதிக்கும் வகையில் கொண்டாடப்படும் விழாக்களை மறைந்திருந்து காண்பான்.(53) நேற்று நான் அங்கே அழைக்கப்பட்டேன்; ஓ! உயர்ந்த பிரகாசம் கொண்டவனே, மரங்கள் அனைத்தின் மன்னனான பாரிஜாதத்தின் அழகிய மலரை உனக்களிப்பதற்காகவே நான் இங்கே வந்தேன்.(54) அந்தச் சிறந்த மரத்தின் மலர் தேவர்களால் மட்டுமே அனுபவிக்கத்தகுந்த ஆடம்பரமாக இருப்பினும், ஓ! தலைவா, நீ அனுபவிப்பதற்காக மட்டுமே நான் அதைக் கொண்டு வந்தேன்.(55) ஓ! தாமரைக் கண்ணா, அந்த மரம் (இந்திரனின் மனைவியான) சசியின் விருப்பத்திற்குரியதாக இருக்கிறது, தினமும் அவளால் முறையாக வழிபடப்படுகிறது, (எல்லையற்ற) செழிப்பையும் அஃது அவளுக்குக் கொண்டு வருகிறது.(56)
சிறப்புமிக்கவரான கசியபர், அதிதியின் அற நோன்புகளில் நிறைவடைந்தவராகப் புண்யகம் என்றறியப்படும் நோன்பை அவள் நிறைவேற்றும் வகையில் பெரும் பாரிஜாத மரத்தை உண்டாக்கினார்.(57) பெருஞ்சக்திவாய்ந்தவரும், தவத்தால் கிட்டும் சக்திகள் அனைத்தின் கொள்ளிடமுமான கசியபர், அதிதியின் தொண்டால் நிறைவடைந்தவராக அவளுக்கு ஒரு வரத்தை வழங்க விரும்பினார்.(58) நற்பேறு பெற்றவளான அந்தப் பெண்மணி {அதிதி} அப்போது, "ஓ! முனிவர்களில் முதன்மையானவரே, விரும்பிய போதெல்லாம் அனைத்து வகை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும்,(59) நான் நினைத்த போது பாடவும், ஆடவும் கூடிய குணங்களைக் கொண்டவளாகவும், ஓ! தவமெனும் செல்வத்தைக் கொண்ட வலிமைமிக்கவரே, எப்போதும் இளமையுடன் நீடிப்பவளாகவும் இருக்கும் வகையிலான வரத்தை எனக்குத் தருவீராக.(60) மாசுகள் அனைத்தில் {மாதவிடாய்களில்} இருந்தும், கவலைகள் அனைத்தில் இருந்தும் எப்போதும் விடுபட்டவளாகவும், கணவனிடம் எப்போதும் அர்ப்பணிப்புமிக்கவளாகவும், எப்போதும் அறச் செயல்களைச் செய்பவளாகவும் நான் இருக்கும் வகையிலான வரத்தை எனக்கு அளிப்பீராக" என்று கேட்டாள் {அதிதி}.(61)
அப்போது அவர் {கசியபர்}, தம் மனைவியான அதிதியை நிறைவடையச் செய்வதற்காக ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றவல்லதும், எப்போதும் நறுமணமிக்க மலர்களால் மறைக்கப்பட்டதுமான பாரிஜாத மரத்தை உண்டாக்கினார்.(62) எப்போதும் தெரியும் வகையில் மூன்று கிளைகளைக் கொண்ட அந்த மரம், அதைப் பார்ப்பவர்கள் அனைவரின் இதயங்களுக்கும் மகிழ்ச்சியூட்டியது. அந்தப் பெரும் மரத்தில் அனைத்து வகை மலர்களும் காணப்படுகின்றன.(63) அழகிய காரிகையர் சிலர் இவற்றைப் போன்ற மலர்களால் தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர்; வேறு சிலர் பலவித வண்ணங்களிலான மலர்களைச் சூடி தங்களை அழகூட்டிக் கொள்கின்றனர், இன்னும் சிலர் (அந்த மரத்திலேயே வளரும்) ரத்தினங்களால் தங்களை அழகூட்டிக் கொள்கின்றனர்.(64) கசியபர் மந்தார மரத்தின் சாரத்தை எடுத்து இதைப் படைத்தார்; எனவே இந்தச் சிறந்த மரம் (மரங்கள் அனைத்திலும் முதன்மையானது என்றறியப்படும் வகையில்) பெருஞ்சிறப்பை அடைந்திருக்கிறது.(65)
அருளப்பட்டவளான அதிதி, புண்யக நோன்பை நிறைவேற்றுவதற்காகவும், அதிலிருந்து செழிப்பையும், நற்பேற்றையும் ஈட்டுவதற்காகவும் அந்த மரத்துடன் கசியபரைக் கட்டி அவரை என்னிடம் {தானமாகக்} கொடுத்தாள்.(66) அதிதி, தன்னுடைய புண்யக நோன்பை நிறைவேற்றுவதற்காகக் கசியபரின் கழுத்தில் மலர்மாலையைச் சுற்றி அவரை என்னிடம் கொடுத்தாள் {தானம் அளித்தாள்}.(67) நான் உரிய பிணையைப் பெற்றுக் கொண்டு தவமெனும் செல்வத்தைக் கொண்ட அவரைப் பின்னர் விடுவித்தேன். அதே போலவே இந்திரனின் மனைவியும் {சசியும்}, தன்னுடைய செழிப்பை அதிகரிப்பதற்காக அவனை {இந்திரனை} எனக்களித்தாள்.(68) இதே வகையிலேயே சோமன் ரோஹிணியாலும், செல்வத்தின் தலைவனான குபேரன், ருத்தியாலும் {தானமாக என்னிடம்} கொடுக்கப்பட்டனர். எனவே, பாரிஜாத மரம் அதிகச் செழிப்பைத் தரவல்லது என்பதில் ஐயமில்லை.(69) விஷ்ணுபதியெனும் {கங்கை} ஆற்றுக்கு அக்கரையில் (பரத்தில்) வளர்வதால் அது பாரிஜாதம் என்றழைக்கப்பட்டது. அது மந்தார மலர்களையும் சுமப்பதால் மந்தாரம் என்றும் சொல்லப்படுகிறது.(70) அம்மரத்தைக் குறித்துச் சரியாக அறியாத மனிதர்கள், "இஃது என்ன மரம்?" என்று கேட்டதால் அது கோவிதாரம் என்றும் அழைக்கப்படுகிறது.(71) இந்தச் சிறந்த மலரை உண்டாக்கும் சிறந்த மரமானது, மந்தாரம், கோவிதாரம், பாரிஜாதம் என்ற பல்வேறு பெயர்களில் அறியப்படுகிறது" என்றார் {நாரதர்}".(72)
விஷ்ணு பர்வம் பகுதி – 124 – 068ல் உள்ள சுலோகங்கள் : 72
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |