Friday 25 September 2020

நரகாசுரன் கொல்லப்பட்டான் | விஷ்ணு பர்வம் பகுதி – 120 – 064

(நரகவதம்)

The defeat of the Asura Naraka | Vishnu-Parva-Chapter-120-064 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : நரகன் அபகரித்து வைத்திருந்த பதினாறாயிரம் கன்னியர்; துவாரகையில் அமைந்திருந்த கிருஷ்ணனின சபைக்கு வருகை தந்து, நரகனை அழிக்க வேண்டிய இந்திரன்; கிருஷ்ணனுடன் சென்ற சத்யபாமா; முரு, நிசுந்தன், ஹயக்ரீவன் ஆகியோரைக் கொன்ற கிருஷ்ணன்; நரகாசுரனுடன் போர்; நரகன் கொல்லப்பட்டதும், குண்டலங்களைத் தந்த பூமாதேவி...

Krishna Cleaves the Danava Narakasura with his Discus

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பெரும் முனிவரே, பெருஞ்சக்திவாய்ந்த விஷ்ணு {கிருஷ்ணன்}, ருக்மியை அழித்துவிட்டு துவாரகைக்கு வந்த பிறகு என்ன செய்தான் என்பதை எனக்கு விரிவாகச் சொல்வீராக" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அழகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், தாமரைக் கண்களைக் கொண்டவனும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான விஷ்ணு, அவர்களால் {யாதவர்களால்} சூழப்பட்டவனாகத் துவாரகையை நோக்கித் தன் மனத்தைத் திருப்பினான்.(2) அவன் அடைந்த பல்வேறு செல்வங்களையும், ரத்தினங்களையும் ராட்சசர்களின் {நைருதர்களின்} மூலம் தன் வீட்டுக்குக் கொண்டு வரச் செய்தான். வரங்களை அடைந்த தானவ, தைத்திய பேரசுரர்களும் அந்நேரத்தில் பல தடைகளை ஏற்படுத்தினர்; ஆனால் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட மாதவன் {கிருஷ்ணன்} அவர்கள் அனைவரையும் அழித்தான்.(3,4) ஓ! மன்னா, மாதவன் துவாரகையில் வாழ்ந்து வந்த போது, தேவர்களின் மன்னனுடைய {இந்திரனின்} பெரும் பகைவனும், தேவர்களுக்குப் பயங்கரனுமான தானவன் நரகன் அவனது வழியில் பல தடைகளை ஏற்படுத்தினான்.(5) மூர்த்திலிங்கத்தில்[1] வசித்துத் தேவர்கள் அனைவரையும் ஒடுக்கிவந்த அந்தத் தானவன், எப்போதும் தேவர்களையும், ரிஷிகளையும் எதிர்த்து வந்தான்.(6)

[1] சித்திரசாலை பதிப்பில், "மூர்த்தி லிங்கம் என்பது பிராக்ஜோதிஷ நகரத்தின் மற்றொரு பெயர் என உரையாசிரியர் நீலகண்டர் கருதுகிறார்" என்ற குறிப்புக் கிடைக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "நரகன் பூமாதேவியின் மகனாவான். அவன் பிராக்ஜோதிஷபுரத்தில் வாழ்ந்து வந்தான். மூர்த்திலிங்கம் என்பது பிராக்ஜோதிஷபுரமெனக் கருதப்படுகிறது. அவன் பூமியின் மகன் என்பதால் பௌமன் என்றும் அறியப்பட்டான். மூர்த்திலிங்கம் என்பதற்குப் பூமியின் வடிவத்தை ஏற்றுக் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "லிங்க ரூபமுடைய க்ருஹத்தில் எல்லாத் தேவர்களையும் மிகத் துன்புறுத்தும் அந்நரகாஸுரன், அப்போது தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தொல்லை செய்தான்" என்றிருக்கிறது.

யானையின் வடிவை ஏற்ற அந்தப் பௌமன் {நரகாசுரன்}, துவஷ்டாவின்[2] மகளும், அழகிய அங்கங்களைக் கொண்டவளுமான கசேரு, பதினான்கு வயதை அடைந்த போது அபகரித்துச் சென்றான்.(7) ஜோதிஷத் தலைவன் {பிராக்ஜோதிஷ மன்னன் நரகன்}, அழகிய கன்னியரில் சிறந்தவளான அவளை அபகரித்துச் சென்று, கவலையும், அச்சமும் இல்லாதவனாகச் செருக்குடன் பின்வரும் சொற்களைச் சொன்னான்.(8) அவன், "தேவர்களிடமும், மனிதர்களிடமும் இருக்கும் அனைத்து வகை ரத்தினங்களையும், பூமியில் ஒளிர்பவையும், மொத்தப் பெருங்கடலில் உள்ளவையுமான செல்வங்கள் அனைத்தையும்,(9) தைத்திய, தானவர்களுடன் கூடிய அசுரர்கள் அனைவரும் இன்று முதல் எனக்கு (காணிக்கையாக) அளிக்கட்டும்" என்றான்.(10) இவ்வகையில் அந்தப் பௌமன் (நரகன்) சிறந்த ரத்தினங்களையும், பல்வேறு வகைத் துணிமணிகளையும் அடைந்தான். ஆனால் அவன் அவற்றைப் பயன்படுத்தாமல் இருந்தான்[3].(11)

[2] துவஷ்டா என்பது பொதுவாகத் தேவதச்சனான விஷ்வகர்மனைக் குறிக்கும்

[3] ஸ்லோக எண்கள் 7 முதல் 11 வரையுள்ள செய்தியானது மற்ற மூன்று பதிப்புகளுடனும் ஒப்புநோக்கப்பட்டு, சித்திரசாலை பதிப்பில் உள்ளது போல மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் உள்ளபடியே மொழி பெயர்த்தால் இந்தச் செய்தி பின்வருமாறு அமையும், "ஒருகாலத்தில் பிராக்ஜோதிஷ மன்னனும், பூமியின் மகனுமான நரகன் கசேரு என்றழைக்கப்படும் இடத்திற்குச் சென்றான். அங்கே யானையின் வடிவை ஏற்றுக் கொண்ட அவன் துவஷ்டாவின் மகளான அழகிய சதுர்தசியைப் பலவந்தமாக அபகரித்துச் சென்றான். அச்சமும், கவலையுமற்ற அவன் மூடத்தனமாக, "இந்நாள் முதல் ராட்சசர்களும், தைத்தியர்களும், தானவர்களும் தேவர்களிடமும், மனிதர்களிடமும் உள்ள ரத்தினங்கள் அனைத்தையும், மொத்த பூமியிலும், பெருங்கடலிலும் உள்ள ரத்தினங்கள் அனைத்தையும் என்னிடம் கொண்டு வரட்டும்" என்றான். பூமியின் மகனான அவன் இதைச் சொல்லிவிட்டு, செல்வங்களையும், துணிமணிகளையும் கொள்ளையடிக்கத் தொடங்கினான். ஆனால் அவற்றை அவன் அனுபவிக்காமல் இருந்தான்".(7-11)

பலம்வாய்ந்தவனான அந்த நரகன், தேவர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள் ஆகியோரிடம் உள்ள கன்னிகையர் அனைவரையும், ஏழு வகை அப்சரஸ்களையும் கவர்ந்து சென்றான்.(12) இவ்வாறு ஒற்றைப் பின்னலுடன் கூடிய {கன்யா விரதம் பேணும்} தூய்மையான கன்னிகையர் பதினாறாயிரத்து நூறு {16100} பேர் {அவனிடம்} கொண்டு வரப்பட்டனர்.(13) பலம்வாய்ந்தவனான பௌமன் {நரகன்}, தைத்தியனான முரனின் ஆட்சிப்பகுதிக்கு அருகில் அளகையில் {அளகாபுரியில்} உள்ள மணி மலையில் {மணிபர்வதத்தில்} அவர்களுக்காக {அந்தக் கன்னிகையருக்காக} ஒரு வீட்டை அமைத்தான்.(14) அங்கே முரனின் பத்து மகன்களும், அந்தக் கன்னியரும்,[4] முன்னணி ராட்சசர்கள் பிறரும் பிராக்ஜோதிஷ மன்னனின் ஆணையை ஏற்று அவனைத் துதித்து வந்தனர். ஓ! மன்னா பேரசுரனும், வரம்பெற்றவனுமான அந்த நரகன் நீலக் கடற்கரையில் வாழ்ந்து வந்தான்.(15) அசுரர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் திரண்டாலும் கூட இந்தப் பேரசுரன் செய்த பயங்கரச் செயல்களைச் செய்ய முடியாது.(16)

[4] இங்கே பிற பதிப்புகள் மூன்றையும் ஒப்பு நோக்கி சித்திரசாலை பதிப்பில் உள்ளது போலச் சில சொற்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

ஓ! ஜனமேஜயா, பூமாதேவிக்குப் பிறந்தவனும், பிராக்ஜோதிஷத்தைத் தலைநகராகக் கொண்டவனுமான அந்தப் பேரசுரன் நரகன், {தேவர்களின் அன்னையான} அதிதியின் காது குண்டலங்களை அடைவதற்காக அவளையும் ஒடுக்கினான்.(17) அவன், போரில் பயங்கரர்களும், ஹயக்ரீவன், நிசுந்தன், வீரன், பஞ்சநதன் என்ற பெயர்களைக் கொண்டவர்களுமான வாயில்காப்போர் நால்வரை கொண்டிருந்தான்.(18) அந்தப் பேரசுரனும், முரனும், அவனது ஆயிரம் மகன்களும் வரங்களைப் பெற்றவர்களாக இருந்தனர். வடிவப்பழுது கொண்டவர்களான ராட்சசர்கள், தேவர்களின் பாதையில் தடையை ஏற்படுத்தியும், நற்செயல்களைச் செய்வோரை அச்சுறுத்தியும் வந்தனர்.(19) அவனை {நரகாசுரனை} அழிப்பதற்காகவே வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை ஏந்தியவனுமான ஜனார்த்தனன், வசுதேவன் மூலம் தேவகியிடம் பிறந்தான்[5].(20) தேவர்கள் தங்களுக்குள் ஆலோசனை செய்து, பெரும்புருஷனும், பூமியில் ஆற்றலுக்காக நன்கறியப்பட்டவனுமான மாதவன் வசிப்பதற்காகத் துவாரகா நகரத்தைத் தேர்ந்தெடுத்தனர்.(21) பெருங்கடலால் சூழப்பட்டதும், ஐந்து மலைகளால் அழகூட்டப்பட்டதுமான அந்தத் துவாராவதி நகரம், அழகில் இந்திரனின் நகரைவிட {அமராவதியைவிட} சிறந்திருந்தது.(22) தேவர்களின் சபாமண்டபத்திற்கு ஒப்பானதும், ஒரு யோஜனை அளவு கொண்டதும், தங்கத்தாலான பெரும் வாயில்களைக் கொண்டதுமான அந்நகரின் சபாமண்டபம் தாசார்ஹம் {தாசார்ஹீ} என்ற பெயரில் கொண்டாடப்பட்டது; ராமகிருஷ்ணர்களின் தலைமையிலான விருஷ்ணி, அந்தகக் குல முன்னணி உறுப்பினர்கள் அங்கே நாள்தோறும் தங்கள் பணிகளைச் செய்து வந்தனர்.(23,24)

[5] 17 முதல் 20 வரையுள்ள ஸ்லோகங்கள் பிற பதிப்புகள் மூன்றையும் ஒப்பு நோக்கி, அவற்றுக்குப் பொதுவாக அமையும் வகையில் மாற்றப்பட்டிருக்கின்றன.

ஓ! பாரதர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, ஒரு காலத்தில் யாதவர்கள் அந்த மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, தெய்வீக மணங்கமழும் தென்றல் அங்கே வீசியது, மலர்மாரியும் அங்கே பொழிந்தது.(25) ஒரு கணத்தில் ஒளி வலையால் மறைக்கப்பட்ட பேரொலி வானத்தில் கேட்டது. அந்த ஒளிக்குள் தேவர்கள் சூழ வெள்ளை யானையில் அமர்ந்திருக்கும் வாசவன் {இந்திரன்} தென்பட்டான்.(26,27) ராமன் {பலராமன்}, கிருஷ்ணன், மன்னன் உக்ரசேனன் ஆகியோரும் முன்னணி யாதவர்கள் பிறரும் வெளியே சென்று தேவர்களின் மன்னனை வரவேற்றனர்.(28) அதன் பிறகு அந்த யானைகளின் தலைவனிடம் {ஐராவதத்தில்} இருந்து விரைவாக இறங்கி வந்த தேவர்களின் மன்னன் {இந்திரன்}, ஜனார்த்தனனையும், பலதேவனையும், மன்னன் ஆஹுகனையும் {உக்ரசேனனையும்} ஆரத்தழுவிய பிறகு,(29) வயதுக்கும், தகுதிக்கும் ஏற்ற வகையில் பிற யாதவர்களையும் தழுவினான். அதன்பிறகு ராமகிருஷ்ணர்களால் துதிக்கப்பட்ட அவன் அந்த மகத்தான சபா மண்டபத்திற்குள் நுழைந்தான்.(30) தேவர்களின் மன்னன் அங்கே அமர்ந்து, அதைப் புகழ்ந்து, அர்க்கியத்தையும், விருந்தோம்பலுக்கான பிற பொருட்களையும் முறையாக ஏற்றுக் கொண்டான்.(31)

அப்போது பெருஞ்சக்திவாய்ந்த வாசவன் {இந்திரன்}, தன் தம்பியின் (கிருஷ்ணனின்) மங்கல முகத்தைத் தன் கரங்களால் தீண்டிப் பின்வரும் தெளிவான சொற்களைச் சொன்னான்.(32) {இந்திரன்}, "ஓ! தேவகியின் மகனே, ஓ! மதுசூதனா, ஓ! பகைவரைக் கொல்பவனே, நான் வந்த காரணத்தைக் கேட்பாயாக.(33) பேரசுரன் நரகன், பிரம்மனால் தனக்கு அளிக்கப்பட்ட வரத்தால் செருக்கடைந்த மூடத்தனத்தில், அதிதியின் காது குண்டலங்களைக் களவாடினான்.(34) எப்போதும் தேவர்களுக்கும், பிராமணர்களுக்கும் பகையாகச் செயல்பட்டு வரும் அவன், சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான். எனவே நீ அந்தப் பாவியைக் கொல்வாயாக.(35) வினதையின் மகனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், எப்போதும் வானத்தில் திரிபவனுமான இந்தக் கருடன் உன்னை அங்கே கொண்டு செல்வான்.(36) ஓ! உபேந்திரா, பூமியின் மகனான நரகன் எந்த உயிரினத்தாலும் கொல்லப்பட முடியாதவனாவான். நீ அந்தப் பாவியை உடனே கொன்று திரும்புவாயாக" என்றான்.(37)

தேவர்களின் மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தாமரைக் கண்ணனுமான கேசவன், நரகனைக் கொல்வதாக உறுதியளித்தான்.(38) அவன், தன் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, சத்யபாமாவுடன் சேர்ந்து கருடனின் முதுகில் அமர்ந்து கொண்டு சக்ரனுடன் விரைவாகப் புறப்பட்டுச் சென்றான்[6].(39) அந்தக் கேசவன், முன்னணி யதுக்களின் கண்களுக்கு முன்பாகவே பெருஞ்சக்திவாய்ந்த கருடனின் துணையுடன், காற்று தேவர்களின் ஏழு பகுதிகளையும் {ஸப்த மருத்துகளின் இடங்களையும்} கடந்து உயர எழுந்தான்.(40) யானைகளின் தலைவன் மீது அமர்ந்திருந்த தேவர்களின் மன்னனும், கருடனின் மீது அமர்ந்திருந்த ஜனார்த்தனனும், {அவர்கள் சென்ற} தொலைவின் காரணமாகச் சூரியனையும், சந்திரனையும் போலத் தோன்றினர்.(41) அப்போது வானத்தில் அவர்களது மகிமைகளைப் பாடிக் கொண்டிருந்த கந்தர்வர்களும், அப்சரஸ்களும் மெதுவாக மறைந்தனர்.(42) பிறகு கிருஷ்ணன் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கிய தேவர்களின் மன்னன் {இந்திரன்} தன் வசிப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றதும், அவன் {கிருஷ்ணன்} பிராக்ஜோதிஷ நகரத்திற்குச் சென்றான்.(43) அப்போது கருடனின் சிறகடிப்பால் காற்று முரண்திசையில் வீசியது, பயங்கர ஒலியெழுப்பும் மேகங்களால் பறவைகள் அஞ்சின.(44) வானுலாவும் அந்தப் பறவையின் உதவியால் தான் விரும்பிய இடத்தை விரைவில் அடைந்த மாதவன், தொலைவிலிருந்தே வாயில் காப்போர் எங்கிருக்கின்றனர் என்பதைக் கண்டு அங்கே சென்றான்.(45) மணி மலையின் வாயிலை அடைந்த அவன், யானைகளையும், குதிரைகளையும், தேர்வீரர்களையும், கத்தி போன்று கூரிய ஆறாயிரம் சுருக்குக் கயிறுகளையும் {இரு முனைகளிலும் கத்திகள் தொங்கும் ஆறாயிரம் மௌரவப் பாசங்களையும் கண்டான்}.(46)

[6] சித்திரசாலை பதிப்பின் அடிக்குறிப்பில், "பூமாதேவியின் ஒப்புதலுடன் மட்டுமே நரகனின் மரணம் நேர முடியும். எனவே பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவின் ஒப்புதலுடன் மட்டுமே நரகனைக் கொல்ல முடியும் என நீலகண்டர் தன் உரையில் விளக்குகிறார். ஹரிவம்சத்தின் தென்பாடத்தில் சத்யபாமாவுக்கும், நரகனுக்கும் இடையில் நடந்த போர் ஒரு முழு அத்தியாயமாகச் சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.

அழகனும், {கருடன் மீதிருந்தவனும்}, நாற்கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம், வாள் ஆகியவற்றை ஏந்தியவனும், கழுத்தில் காட்டு மலர்மாலை சூடியவனும், மார்பில் ஸ்ரீவத்ஸமெனும் சந்திரன் போன்ற மாயக்குறியைத் தாங்கியவனும், மின்னலின் துணையுடன் கூடிய சூரியனையோ, சந்தினையோ போன்ற பிரகாசமுடைய மகுடந்தரித்தவனும், நீலக் கடல் போலத் தெரிந்தவனும், மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனுமான கிருஷ்ணனைக் கண்டும்,(47,48) வஜ்ரத்தின் இடிக்கு ஒப்பான அவனது வில்லின் நாணொலியைக் கேட்டும் வந்திருப்பவன் விஷ்ணு என்பதைத் தானவர்கள் புரிந்து கொண்டனர்.(49) காலனுக்கு ஒப்பானவனும், வைரத்தாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான பேரசுரன் முரு, தன் சக்தி ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அவனை {கிருஷ்ணனை} நோக்கி விரைந்து சென்று அவன் மீது அந்தப் பேராயுதத்தை ஏவினான்.(50) எரிகொள்ளியைப் போலத் தன்னை நோக்கி வரும் அந்தச் சக்தி ஆயுதத்தைக் கண்ட வாசுதேவன், பொன் இறகுகளைக் கொண்ட தன் கணைகளை எடுத்தான்.(51) பெருஞ்சக்திவாய்ந்தவனான வாசுதேவன், மின்னலைப் போல் எரிந்து கொண்டிருந்த அந்தக் கணையை ஏவியபோது அஃது அந்தச் சக்தி ஆயுதத்தை இரண்டாக அறுத்தது.(52) அந்தச் சக்தி ஆயுதம் வெட்டப்பட்ட போது கோபத்தில் கண்கள் சிவந்த முரு, பெரும் கதாயுதம் ஒன்றை எடுத்து, தேவர்களின் மன்னன் வஜ்ரத்தை ஏவுவதைப் போல அதை ஏவினான்.(53) தேவர்களில் முதன்மையான கேசவன், பிறைவடிவம் கொண்ட தன் ஆயுதத்தை {அர்த்தச்சந்திர பாணத்தைக்} காது வரை இழுத்துப் பொன்னாலான அந்தக் கதாயுதத்தின் நடுப்பகுதியில் வெட்டினான். அதன் பிறகு ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தத் தானவனின் {முருவின்} தலையைக் கொய்தான்.(54,55)

அந்தத் தேவகி மகன் {கிருஷ்ணன்}, இவ்வாறு முருவையும், அவனது நண்பர்களையும் கொன்று, அவனது சுருக்குக் கயிறுகளையும் {பாசங்களையும்} அறுத்துப் பெருஞ்சக்திவாய்ந்த நரகனின் ராட்சசப் படைவீரர்களையும் கொன்றான்.(56) அவன் அந்த மலையைக் கடந்ததும், நிசுந்தனையும், திதியின் மகனான ஹயக்ரீவனையும், பல்வேறு வழிகளில் போரிடவல்ல பிற வீரர்களையும் கொண்ட தானவப் படையைக் கண்டான்.(57) அதன் பிறகு, பெருஞ்சக்தி வாய்ந்தவனான நிசுந்தன், வேகமாகத் தன் தேரில் ஏறி, பொன்னாலான தெய்வீகக் கவசத்தை அணிந்து கொண்டு, தன் படையின் மூலம் கேசவனின் பாதையில் தடையை ஏற்படுத்தினான்.(58) அதன் பிறகு அவன் {நிசுந்தன்}, {கார்முகம் என்ற தன் தெய்வீக வில்லை எடுத்துக் கொண்டு}, கேசியையும், மதுவையும் கொன்றவவனை {கேசவனை/ மதுசூதனனை} பத்துக் கணைகளால் துளைத்தான்.(59) அவனோ {கிருஷ்ணனோ} சிறகு படைத்த எழுபது கணைகளால் அந்தத் தானவனைப் பதிலுக்குத் தாக்கி, அவனது கணை தன்னை நெருங்கும் முன்பே வானத்தில் அதை அறுத்தான்.(60) அப்போது கேசவனை அவனது {நிசுந்தனின்} படை முற்றிலும் சூழ்ந்து கொண்டது. தேவர்களில் முதன்மையான ஜனார்த்தனன் அவனது கணை வலையால் மறைக்கப்பட்டிருந்தாலும்,(61) அந்தத் தானவர்களைக் கண்டு பெருஞ்சீற்றமடைந்து, மேகம்போன்ற ஆயுதங்களையும், கணைகள் பிறவற்றையும் மழையாகப் பொழிந்து அந்தத் தானவப்படையை எதிர்த்தான்.(62,63) அதன் பிறகு அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்து ஐந்து கணைகளால் தாக்கி, அவர்களின் முக்கியப் பகுதிகளை மேகம் போன்ற ஆயுதங்களால் துளைத்தான். அப்போது அந்தத் தானவப் படை அச்சத்தால் நிறைந்து போர்க்களத்தைவிட்டுத் தப்பி ஓடியது. இவ்வாறு தன் படை தப்பி ஓடுவதைக் கண்ட அவன் {நிசுந்தன்} மீண்டும் போரிட்டான்.(64,65) அவன் கணைமாரியால் கேசவனை மறைத்தான். அப்போது சூரியனோ, வானமோ, பத்துத் திக்குகளோ புலப்படவில்லை.(66)

அதன்பிறகு புருஷர்களில் முதன்மையான ஹரி, சாவித்ரம் என்ற பெயர் கொண்ட தெய்வீக ஆயுதம் ஒன்றை எடுத்துக் கொண்டு போர்க்களத்தில் அவனது கணைகளை வெட்டி வீழ்த்தினான்.(67) பெருஞ்சக்திவாய்ந்த கிருஷ்ணன், தன் கணைகளால் தானவர்களின் கணைகளை வெட்டி, ஒரு கணையால் அவனது {நிசுந்தனின்} குடையையும், மூன்றால் அவனது தேரின் அச்சையும் வெட்டி வீழ்த்தினான். மேலும் நான்கு கணைகளால் அவனது நான்கு குதிரைகளை அழித்து,(68,69) ஐந்தால் அவனது சாரதியைக் கொன்று, ஒன்றால் அவனது கொடிக்கம்பத்தை வெட்டி வீழ்த்தினான். தேவர்களில் முதன்மையான கிருஷ்ணன், பழங்காலத்தில் தேவர்கள் ஆயிரம் வருடங்கள் போரிட்டும் வெல்லப்படமுடியாத அந்த நிசுந்தனின் தலையைக் கூர் முனை கொண்ட பல்லத்தால் அறுத்தான்.(70,71)

மலையைப் போன்ற பிரகாசம் கொண்ட ஹயக்ரீவன், அசுரர்களில் முதன்மையான நிசுந்தன் இவ்வாறு கொல்லப்பட்டதைக் கண்டு, பெரும்பாறை ஒன்றை எடுத்து பெருவிசையுடன் அதை எறிந்தான்.(71,72) ஆயுதப் பயன்பாட்டை நன்கறிந்தவர்களில் முதன்மையான விஷ்ணு, மேகம்போன்ற தன் தெய்வீக ஆயுதத்தை {பார்ஜன்யாயுதத்தை} எடுத்து அந்தப் பாறையை ஏழு துண்டுகளாக நொறுக்கினான்,(73) அந்தக் கற்கள் பூமியில் விழுந்தன. ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, சாரங்க வில்லில் இருந்து ஏவப்பட்ட பல்வேறு வண்ணங்களிலான பெருங்கணைகளால், தேவாசுரப் போரைப் போன்று பல்வேறு ஆயுதங்கள் நிறைந்த பயங்கரப் போர் அங்கே நேரிட்டது.(74) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜனார்த்தனன் இவ்வாறு கருடன் மீது அமர்ந்து கொண்டு அசுரர்களை அழிக்கத் தொடங்கினான்;(75,76) நாராயணனை அணுகிய தானவர்கள் அனைவரும் பெரும் கலப்பையால் தாக்கப்பட்டு, கணைகளாலும், வாள்களாலும் கொல்லப்பட்டனர்.(77) சிலர், {சுதர்சனச்} சக்கரத்தின் நெருப்பால் எரிக்கப்பட்டு வானில் இருந்து விழுந்தனர், சிலர் அருகில் நெருங்கி கடும் முகத்துடன் தங்கள் ஆவியை {உயிரை} விட்டனர்.(78) பல வழிகளில் போரிடவல்ல சில அசுரர்கள், கிருஷ்ணனின் கணைகளால் சிதைக்கப்பட்டாலும், நீர்த்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரியைப் பொழியத் தொடங்கினர்.(79) மலர்ந்த கின்சுக மரங்களைப் போல மேனியில் குருதி பூசப்பட்ட அவர்கள் தங்கள் நொறுங்கிய ஆயுதங்களுடன் அச்சத்தால் நிறைந்து ஓட்டம் பிடித்தனர்.(80) இதனால் கோபத்தில் கண்கள் சிவந்து வெந்த தானவன் ஹயக்ரீவன், காற்றின் வேகத்துடன் கூடியவனாகப் பத்துப் பாகம் உயர்ந்த {அறுபது அடி உயரம் கொண்ட வனஸ்பதி [பாதிரி]} மரத்தைப் பிடுங்கினான்.(81) மேகவண்ணம் கொண்ட ஹயக்ரீவன், அம்மரத்தை வேரோடு பிடுங்கி விரைந்து சென்று, தன் பயிற்சியின் விளைவால் அந்த மரம் காற்றில் கடந்து செல்லும் போது ஏற்படும் பேரொலி அனைவராலும் கேட்கப்படும் வகையில் அதை எறிந்தான். ஜனார்த்தனன் ஓராயிரம் கணைகளால் அம்மரத்தைப் பல துண்டுகளால் வெட்டி,(82,83) ஒரு கணையால் ஹயக்ரீவனின் மார்பில் தாக்கினான். நெருப்பு போல எரிந்த அந்தக் கணை,(84) பெரும் வேகத்துடன் அந்தத் தானவனின் மார்புக்குள் நுழைந்து, அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்தபடியே வெளியே வந்தது.(85) பயங்கரனும், அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான ஏற்கனவே தேவர்களுடன் ஓராயிரம் வருடம் தனிமையில் போரிட்டவனும், தடுக்கப்பட முடியாதவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனுமான ஹயக்ரீவனை ஜனார்த்தனன்  கொன்றான்.(86) புருஷர்களில் முதன்மையானவனும், பகைவரைக் கொல்பவனும், தலைவனுமான அந்தத் தேவகியின் மகன் கிருஷ்ணன், கடும் முகம் கொண்டவனும், கொடியவனுமான ஹயக்ரீவனை, லோஹிதங்க மாகாணத்தில் மதில்களால் சூழப்பட்ட ஒரு நகரத்தில் இவ்வாறு கொன்றுவிட்டு, எட்டு லட்சம் {800000} தானவர்களையும் கொன்றுவிட்டு பிராக்ஜோதிஷ நகருக்குப் புறப்பட்டுச் சென்றான்.(87,88)

பெருஞ்சக்தி கொண்ட கேசவன், ஒளிர்ந்து கொண்டிருந்த பிராக்ஜோதிஷ நகரத்திற்குள் நுழைந்து,(89) பல போர்களைச் செய்து, நரகனின் தொண்டனான பேரசுரன் பஞ்சனனைக் கொன்று, தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். மேக முழக்கத்தையும், சுழலையும் போன்ற பயங்கரமான அந்த முழக்கம், மூவுலகம் எங்கும் கேட்டுக் கொண்டிருந்தது. அவ்வொலியைக் கேட்ட வீரன் நரகனின் கண்கள் கோபத்தால் சிவந்தன.(90,91) தன்னுடைய தெய்வீகத் தேரில் ஏறிக் கொண்ட அவன் {நரகாசுரன்}, மாலை நேரச் சூரியனைப் போல ஒளிர்ந்தான். இரும்பாலான எட்டுச் சக்கரங்களைக் கொண்ட அது {அந்தத் தேர்} பொன் வண்ணத்தாலும், சிவப்பு வண்ணத்தாலும் பூசப்பட்டதாகவும், அகன்ற இருக்கைகளைக் கொண்டதாகவும்,(92) தங்கக் கொடிமரத்தில் தங்கக் கொடிகளையும், முக்கோணக் கொடிகளையும் கொண்டதாகவும் இருந்தது. வைரங்களாலும் {வைடூரியங்களாலும்}, முத்துக்களாலும் அமைந்த அச்சைக் கொண்டதாகவும்,(93) ஆயிரம் குதிரைகளால் இழுக்கப்படுவதாகவும், இரும்பு வலையால் மறைக்கப்பட்டதாகவும், பல்வேறு ஆயுதங்கள் நிறைந்ததாகவும, பொன்னாலானதாகவும் இருந்தது.(94) அந்நேரத்தில் நரகனின் முகம் எரிகொள்ளியைப் போலப் பிரகாசிப்பதாகத் தெரிந்தது. வெண்மையானதும், சந்திரனைப் போன்றதுமான மார்புக் கவசத்துடன் அவன் அழகாகத் தெரிந்தான். சூரியனைப் போன்ற ஒளிமிக்க மகுடம் அவனது தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. காது குண்டலங்களால் அவனது காதுகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(95,96) கடும் முகமும், பழுப்பு வண்ணம் கொண்டவர்களும், பேருடல் படைத்தவர்களுமான தைத்தியர்களும், தானவர்களும், பல்வேறு கவசங்களைத் தரித்துக் கொண்டு ராட்சசர்களுடன் சேர்ந்து வெளிப்பட்டனர்;(97) அவர்களில் சிலர் வாள்களையும், கேடயங்களையும் கொண்டிருந்தனர், சிலர் கணைகளையும், அம்பறாத்தூணிகளையும் கொண்டிருந்தனர், சிலர் சக்திகளையும், சிலர் ஈட்டிகளையும் {சூலங்களையும்} கொண்டிருந்தனர்.(98) நல்ல உடற்கட்டைப் பெற்றவர்களும், போரில் திறம்பெற்றவர்களுமான அந்த வீரர்கள், யானைகளையும், குதிரைகளையும் செலுத்திக் கொண்டு, பூமி அதிர அந்த நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(99) காலனைப் போன்றவனான நரகன், தைத்தியர்கள் சூழ வந்த போது, ஆயிரக்கணக்கான பேரிகள், சங்குகள், மிருதங்கங்கள், பணவங்கள் ஆகியவற்றின் ஒலிகள் மேக முழக்கத்திற்கு ஒப்பாக அனைத்துப் பக்கங்களிலும் கேட்டது.(100)

கடும் முகம் கொண்ட அந்த வீரர்கள் ஒற்றுமையுடன் சேர்ந்து கிருஷ்ணன் காத்திருந்த இடத்திற்குச் சென்று அவனோடு போர்புரியத் தொடங்கினர். அந்தப் படைவீரர்கள் தங்கள் கணைமாரியால் வாசுதேவனை மறைத்தனர்.(101,102) அவர்கள், ஆயிரக்கணக்கான சக்திகளையும், கதாயுதங்களையும், வேல்களையும், கணைகளையும் ஏவி ஆகாயத்தை மறைத்தனர்.(103) கருநீல மேகம் போலத் தெரிந்த ஜனார்த்தனன், மேக முழக்கத்தைப் போல நாணொலி எழுப்பும் தன் சாரங்க வில்லை அப்படியும், இப்படியும் அசைத்து,(104) தானவர்கள் மீது கணைமாரியைப் பொழியத் தொடங்கினான். பெருஞ்சக்தி வாய்ந்த அந்தப் படைவீரர்கள் இதன் காரணமாகப் பெரிதும் தாக்கப்பட்டனர்.(105) இவ்வாறே அந்த இடத்தில் அவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, கடுந்தோற்றம் கொண்ட ராட்சசர்களுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நடந்தது; கிருஷ்ணனின் கணைகளால் காயமடைந்த தானவர்கள் முறியடிக்கப்பட்டனர்.(106) சில தானவர்களின் கைகள் நொறுங்கியிருந்தன; சிலரின் தலையிலும், கழுத்திலும் காயம் ஏற்பட்டிருந்தது; சிலர் சக்கரத்தால் இரண்டாகப் பிளக்கப்பட்டிருந்தனர்; மேலும் சிலர் கணைகளால் மார்பில் காயமடைந்திருந்தனர்.(107) தேர்வீரர்களிலும், யானை மாவுத்தர்களிலும், குதிரைப்படையினரிலும் சிலர் இரண்டாக வெட்டப்பட்டிருந்தனர், சிலர் கணைகளாலும், வேல்களாலும் காயமடைந்திருந்தனர்.(108) இவ்வாறே யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும் கொண்டிருந்த அந்த மொத்தப் படையும் முழுமையாக நொறுங்கியிருந்தது. அப்போது அவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, நரகனுக்கும் இடையில் ஒரு பயங்கரப் போர் நேரிட்டது.(109)

நான் சுருக்கமாகச் சொல்கிறேன் கேட்பாயாக. தேவர்களுக்குப் பயங்கரனும், பேராற்றல் வாய்ந்தவனுமான நரகன், புருஷர்களில் முதன்மையான மதுசூதனனுடன் அந்த மதுவைப் போலவே போரிட்டான். காலனைப் போன்ற அந்த வீர நரகன், அந்தப் போரில் சிவந்த கண்களுடன்(110,11) சக்ரனின் வில்லுக்கு ஒப்பான {கார்முகம் என்றழைக்கப்பட்ட} பெரும் வில்லை எடுத்த போது, சூரியனின் கடுங் கதிரைப் போன்ற ஒரு கணையை எடுத்துக் கொண்ட கேசவன்,(112) தெய்வீக ஆயுதங்களால் அவனது தேரை நிரப்பினான். பெருஞ்சக்திவாய்ந்த நரகன் பெரும் ஆயுதம் {மஹாபாதம்} ஒன்றை எடுத்துக் கொண்டு,(113) போர்வெறி கொண்டவனும், மின்னலைப் போன்று பிரகாசிக்கும் முகத்தைக் கொண்டவனும், மதுசூதனனுமான அந்தப் பெரும் ஜனார்த்தனனை எதிர்கொண்டபோது, அவன் தன்னுடைய சக்கரத்தால் அந்த ஆயுதத்தை வெட்டி,(114) கணை ஒன்றால் அவனுடைய தேரோட்டியை யமனுலகுக்கு அனுப்பி வைத்தான். பிறகு அந்த மதுசூதனன் பத்துக் கணைகளால் குதிரைகளுடன் கூடிய தேரையும், கொடிமரங்களையும் அழித்து,(115) மற்றொரு கணையால் அவனது கவசத்தையும் அறுத்தான். குதிரைகள் கொல்லப்பட்டு, சட்டை இழந்த பாம்பைப் போலக் கவசமும் அறுக்கப்பட்ட அந்த வீர தானவன் நரகன்,(116) மின்னலைப் போன்ற பிரகாசமிக்க இரும்பு ஈட்டியை {சூலத்தைத்} திடீரென எடுத்து, அதைச் சுழற்றி வீசினான்.(117) அற்புதச் செயல்களைச் செய்யும் கிருஷ்ணன், பொன்னால் மறைக்கப்பட்ட அந்த ஈட்டி தன்னை நோக்கி வருவதைக் கண்டு கத்தி வடிவம் கொண்ட தன்னுடைய ஆயுதத்தால் {க்ஷுரப்ரத்தால்} அதை இரண்டாக வெட்டி வீழ்த்தினான்.(118) இவ்வாறே பெருஞ்சக்திவாய்ந்தவனும், கடும் முகம் கொண்ட ராட்சசனுமான நரகனுடன் மிகச் சிறந்த ஆயுதங்கள் நிறைந்த பயங்கரப் போர் நடந்தது.(119) நரகனுடன் போரிட்டுக் கொண்டிருந்த பயங்கரனான ஜனார்த்தனன், ஒரே கணத்தில் தன் பிரகாசமிக்கச் சக்கரத்தால் அவனை {நரகாசுரனை} இரண்டாக வகுந்தான்.(120) சக்கரத்தால் இரண்டாக வெட்டப்பட்ட அவனது உடல், இடியால் தகர்க்கப்பட்ட மலையைப் போலப் பூமியில் இரண்டாக விழுந்தது. கிருஷ்ணனைப் போன்ற கருமேகங்களால் சூரியன் மறைக்கப்பட்டதைப் போலத் தெரிந்தது.(121,122) சக்கரத்தால் வெட்டப்பட்ட அவனது தலை, வஜ்ரத்தால் தகர்க்கப்பட்ட தாது மலையைப் போலப் போர்க்களத்தில் தோன்றியது[7].(123)

[7] நரகாசுரனைக் கொல்லும் இந்தப் பகுதி மஹாபாரதம் வனபர்வம் அத்யாயம் 141ல் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. 

தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்ட பூமி {பூமாதேவி}, காது குண்டலங்கள் இரண்டுடன் கோவிந்தனிடம் வந்து, "ஓ! கோவிந்தா, பொம்மைகளுடன் விளையாடும் சிறுவனைப் போல விளையாடுகிறீர். நீர் கொடுத்தவனை உமது கையால் நீரே கொன்றுவிட்டீர். எனினும், ஓ! தலைவா, நீர் நரகனைக் கொல்வதற்குக் காரணமான இந்தக் குண்டலங்களை ஏற்றுக் கொண்டு அவனது பிள்ளைகளைக் காப்பீராக" என்றாள் {பூமாதேவி}" என்றார் {வைசம்பாயனர்}.(126)

விஷ்ணு பர்வம் பகுதி – 120 – 064ல் உள்ள சுலோகங்கள் : 126
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்