(கம்ஸயோஷிதாம் விலாபம்)
Lamentations of Kansa's wives | Vishnu-Parva-Chapter-86-031 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கம்ஸனின் மனைவியரான அஸ்தியும், பிராப்தியும், அன்னையான பத்மாவதியும் அழுது புலம்பியது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கம்ஸனின் மனைவியர்[1], கொல்லப்பட்டவனாக ஒளிமங்கும் கோள்களைப் போல வீழ்ந்து கிடக்கும் தங்கள் கணவனைச் சூழ்ந்து கொண்டனர்.(1) அவனது மனைவியர், சிங்கம்போன்ற தங்கள் அரசக் கணவன் கொல்லப்பட்டுப் பூமியில் கிடப்பதைக் கண்டு அழுது புலம்பத் தொடங்கினர்.(2) {அவர்கள்} "ஓ! நீண்ட கரங்களைக் கொண்டவரே, வீர நோன்புகளை எப்போதும் நோற்கும் உம்மைப் போன்ற வீரனின் மனைவியான நாங்கள் அனைவரும், நீர் கொல்லப்பட்டதால் நண்பர்கள் அற்றவர்களாகவும், நம்பிக்கைகள் சிதைக்கப்பட்டவர்களாகவும் ஆனோம்.(3) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, உமக்கு விதிக்கப்பட்ட இந்த மரணத்தைக் கண்டு நாங்கள் நம் உறவினர்களோடு சேர்ந்து அவலநிலையில் அழுது புலம்புகிறோம்.(4) ஓ! பெரும்பலம்வாய்ந்த தலைவா, நீர் மரணமடைந்ததால் உம்மால் கைவிடப்பட்ட நாங்கள் வேரறுந்தவராக இருக்கிறோம்.(5) ஐயோ, கலவியாசையால் பீடிக்கப்பட்டுக் கோபத்தில் கொடிகளைப் போல நடுங்கும் எங்களை இனி படுக்கையறைக்கு அழைத்துச் செல்லப்போவது யார்?[2](6)
[1] ஜராசந்தனின் மகள்களான அஸ்தி, பிராப்தி என்ற இருவர் கம்ஸனின் மனைவியராக இருந்தனர். மஹாபாரதம் சபா பர்வம் 14ம் பகுதி 31ம் ஸ்லோகத்தில் இவர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
[2] சித்திரசாலை பதிப்பில், "கலவியை விரும்புகிறவர்களும், கோபமாகவும், இலைகளற்ற கொடிகளைப் போலவும் நடந்து கொள்ளும் எங்களைப் படுக்கையில் கிடந்து கொஞ்சப் போவது யார்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அங்கங்கள் வெளிறி கலவி விரும்பி நாங்கள் அசையாத கொடிகளைப் போல இருக்கும்போது எங்களைப் படுக்கைக்கு அழைத்துச் செல்லப்போவது யார்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கலவியாசையால் ப்ரணய கோபத்துடன் கொடி போல் அலையும் எங்களை எவன் படுக்கைக்கு அழைத்துப் போவான்?" என்றிருக்கிறது.
ஓ! மென்மையானவரே {கம்ஸனே}, சூரியன், நீரில்லாத {குளத்தில் உள்ள} தாமரையை {வாட்டுவதைப்} போல மூச்சுகள் நிறைந்த உமது அழகிய முகத்தை வாட்டலாமா?(7) ஓ! குண்டலங்களை எப்போதும் விரும்புபவரே, உமது கழுத்துடன் கூடிய காதுகள் குண்டலங்களின்றி ஒளியிழந்திருக்கின்றன.(8) ஓ! வீரரே, ரத்தினங்கள் பதிக்கப்பட்டதும், சூரியனைப் போன்று பிரகாசிப்பதும், உமது தலையில் அழகைப் பெரிதும் கூட்டுவதுமான அந்த மகுடம் எங்கே?(9) நீர் பரலோகம் சென்றுவிட்டீர், உமது அந்தப்புரத்தை அலங்கரிக்கும் உமது மனைவியரான இந்த ஆயிரம் பேரும் எவ்வாறு தங்கள் நாட்களை அவலநிலையில் கழிக்கப் போகிறார்கள்?[3](10) கற்புள்ள மனைவியர் {பதிவ்ரதைகள்} தங்கள் கணவனின் துணையை அனுபவிப்பதில் ஒருபோதும் ஏமாற்றம் அடைவதில்லை, அவனால் கைவிடப்படுவதுமில்லை; {அவ்வாறிருக்கையில்} எங்களை ஏன் விட்டுச் சென்றீர்?(11) ஐயோ, காலம் பெருஞ்சக்திவாய்ந்தது; நீர் பகைவருக்குக் காலனாய் இருந்தாலும் முறையாகப் பணி செய்யும் காலனால் விரைவாக எடுத்துச் செல்லப்படுகிறீர்.(12)
[3] சித்திரசாலை பதிப்பில், "உமது அந்தரப்புரத்தின் அழகைக் கூட்டியவர்களும், அழுது புலம்புபவர்களும், உமது மனைவியருமான நாங்கள் பலரும், நீர் இவ்வுலகைவிட்டுச் சென்ற பிறகு என்ன செய்யப் போகிறோம்?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மனைவியரும், மகளிருமான நாங்கள் உமது அந்தப்புரத்தை அலங்கரித்து வந்தோம். இப்போது நீர் பரலோகம் சென்ற பிறகு இந்தப் பரிதாபத்திற்குரியவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "பரலோகம் சென்றபின் உனது அந்தப்புரத்துக்குச் சோபை செய்யும் அபலைகளான மஹிஷிகளால் வாழ்வது எப்படி?" என்றிருக்கிறது.
ஓ! தலைவா {கம்ஸனே}, கவலையடையத்தகாத நாங்கள் உம்மால் மகிழ்ச்சியில் வளர்க்கப்பட்டோம். எங்கள் தலைவனை இழந்த நாங்கள், எவ்வாறு அவலநிலையில் எங்கள் நாட்களைக் கழிக்கப் போகிறோம்?(13) குணத்தில் கவனம் கொள்ளும் பெண்களுக்குக் கணவன் மட்டுமே புகலிடமாவான். ஆனால் அத்தகைய எங்கள் கணவனை சக்திவாய்ந்த காலன் கொன்றுவிட்டான்.(14) நீரில்லாமல் விதவைத்தன்மையால் {வைதவ்யத்தால்} பீடிக்கப்பட்டவர்களும், அழுகையெனும் ஆழ்கடலில் மூழ்குபவர்களும், கவலையால் பீடிக்கப்பட்ட இதயங்களுடன் கூடியவர்களுமான நாங்கள் எங்கே செல்வோம்?(15) ஐயோ, மனிதர்களின் இயக்கம் {வாழ்க்கை} நிலையற்றது. நாங்கள் உம்முடன் எங்கள் நாட்களைக் கழித்தபடியே உமது மடியில் விளையாடிக் கொண்டிருந்தோம். இப்போது ஒரே கணத்தில் உம்மிடம் இருந்து நாங்கள் பிரிக்கப்பட்டோம்.(16) ஓ! கௌரவங்களை அளிப்பவரே, நீரிந்தப் பேரழிவைச் சந்தித்ததால் நாங்களும் பேராபத்தை அடைந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒரே வகையில் விதவைத் தன்மையை {வைதவ்யத்தை} அடைந்திருப்பதால் ஒரே வகைக் கொடுமையை இழைத்திருக்கிறோமென {பாவத்தையே செய்திருக்கிறோம் எனத்} தெரிகிறது.(17) ஐயோ, நாங்கள் அனைவரும் உம்மை விரும்பினோம், நீரும் எங்களை தெய்வீக இன்பங்களுடன் கவனித்துக் கொண்டீர். எங்களைக் கைவிட்டு விட்டு இப்போது எங்கே சென்றீர்?(18)
ஓ! உலகின் தலைவா {கம்ஸனே}, ஓ! கௌரவங்களை அளிப்பவரே, ஓ! தேவனுக்கு ஒப்பானவரே, தலைவனிடம் இருந்து பிரிந்த எங்களுக்கு நீரே நாயகன். ஓ! தலைவா, நாங்கள் {அன்றில்} பறவையைப் போல அழுது புலம்புகிறோம்; எங்களுக்கு மறுமொழி கூறுவதே உமக்குத் தகும்.(19) ஓ! அரசத் தலைவா, உமது உற்றார் உறவினரை கவலையில் ஆழ்த்தி, உமது மனைவியரை அழுது புலம்பச் செய்து நீர் செல்வது (எங்களுக்கு) கொடூரமாகத் தெரிகிறது.(20) ஓ! தலைவா, ஓ! வீரரே, நீர் உமது மக்களை விட்டுச் செல்வதால், பரலோகத்தின் காரிகைகள் மிக அழகானவர்கள் என்று உண்மையாகத் தோன்றுகிறது.(21) ஓ! வீரரே, உமது மனைவியர் அழுது புலம்புவதை நீர் கேட்காமல் இருப்பதன் காரணமென்ன?(22) ஐயோ, தங்கள் மனைவியரைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அவர்களைக் கைவிட்டுவிட்டுப் பரலோகத்திற்கு அணிவகுத்துச் செல்லும் மனிதர்கள் இரக்கமற்றவர்கள்.(23) வீரர்கள் தேவலோகப் பெண்களை விரும்புவதாலும், அவர்களும் அவர்களையே {தேவலோகப் பெண்களும் வீரர்களையே} விரும்புவதாலும் வீரக்கணவர்களை அடையாமல், அன்புள்ள கணவர்களை அடைவதே பெண்களுக்கு நல்லது.(24)
ஐயோ, அத்தகைய வீரக்கணவரைப் புலப்படாமல் கொண்டுபோகும் காலன் எங்கள் உயிர்ப்பகுதியைப் பிளந்துவிட்டான்.(25) ஓ! உலகத்தின் தலைவா, போரில் ஜராசந்தன் படையினரைக் கொன்று, பகைவர் பிறரை வென்ற நீர் சாதாரண மனிதனின் கைகளில் மரணமடைந்தது ஏன்?(26) ஐயோ, இந்திரனுடன் கணைப்போரில் ஈடுபட்டும் தேவர்களால் உம்மை வெல்ல முடியவில்லை. {அவ்வாறிருக்கையில்} ஒரு மனிதன் உம்மை எவ்வாறு கொன்றான்?(27) கலங்கடிக்க முடியாத பெருங்கடலையே உமது கணைமழையால் கலங்கடித்துப் பாசம் {கயிறு} தரித்த வருணனைக் கைப்பற்றி அவனது வளங்கள் அனைத்தையும் நீர் அபகரித்தீர்.(28) வாசவன் {இந்திரன்} தேவையான மழையைப் பொழியாத போது, குடிமக்களுக்காக உமது கணைகளைக் கொண்டு மேகங்களைத் துளைத்துப் பலவந்தமாக மழையைப் பொழியச் செய்தீர்.(29) உமது ஆற்றலால் வீழ்த்தப்பட்ட மன்னர்கள் அனைவரும் மதிப்புமிக்க ரத்தினங்களையும், ஆடைகளையும் உமக்கு அனுப்பி வைத்தனர்.(30) ஐயோ, உமது ஆண்மையைப் பகைவர்கள் அறிந்திருந்தனர், நீர் தேவரைப் போல இருந்தீர். {அவ்வாறு இருக்கையில்} வாழ்வை முடிக்கும் பேரிடர் உமக்கு நேர்ந்தது எவ்வாறு?(31) ஓ! தலைவா, நீர் கொல்லப்பட்டதால் நாங்கள் விதவைகள் என்ற பெயரை அடைந்தோம். நாங்கள் பித்தர்களில்லை என்றாலும் அவ்வாறே ஆகி மரணம் பீடிக்கக் காத்திருக்கிறோம்.(32) ஓ! தலைவா, நீர் போவதெனத் தீர்மானித்தால் ஏன் எங்களை மறந்து சென்றீர்? இதைச் சொற்களில் சொல்வதற்கும் முடியாத அளவுக்கு நீர் களைத்திருந்தீரா?(33) ஓ! தலைவா, ஓ! மதுராவின் மன்னா {கம்ஸனே}, அச்சத்தால் நாங்கள் உமது பாதம் பணிகிறோம். இதனால் தணிவடைந்து தொலைதூர உலகில் இருந்து திரும்பி வருவீராக.(34) ஓ! வீரரே, புல்லிலும், புழுதியிலும் எவ்வாறு நீர் கிடக்கிறீர்? பூமியில் இவ்வாறு நெடுஞ்சாண்கிடையாகக் கிடப்பதால் உமது உடல் துன்புறவில்லையா?(35) ஐயோ, இந்த உறக்கத்தால் எங்களைப் பீடித்தவன் எவன்? இந்தப் பெண்களின் மேனியை இரக்கமில்லாமல் தாக்கியவன் எவன்?(36) உயிர் வாழ வேண்டிய பெண் அழுது வருந்த வேண்டும். எங்கள் கணவரைப் பின்தொடரப் போகும் நாங்கள் ஏன் அழ வேண்டும்?" {என்று கம்ஸனின் மனைவியர் அழுது புலம்பினர்}.(37)
அதே வேளையில், "என் மகன் எங்கே? எங்கே என் மகன்?" என்று பரிதாபகரமாக நடுங்கி, உரக்க அழுதபடியே கம்ஸனின் அன்னை {பத்மாவதி} அங்கே வந்தாள்.(38) ஒளியிழந்த சந்திரனைப் போலக் கிடக்கும் தன் மகனைக் கண்ட அவளது இதயம் பிளப்பதைப் போலத் தெரிந்தது, அவள் மீண்டும் மீண்டும் தன் நனவை இழந்தாள்.(39) அவள் தன் மகனைக் கண்டு, "ஐயோ, நான் கெட்டேன்" என்று கதறியபடியே தன் மருமகள்களுடன் சேர்ந்து அழுது புலம்பினாள்.(40) மகன்களிடம் அன்பு கொண்டவளான அவள், தன் மகனின் {கம்ஸனின்} தலையைத் தன் மடியில் கிடத்திக் கொண்டு, அவல நிலையில் அழுது புலம்பினாள்.(41) {அவள்}, "ஓ! மகனே, ஓ! உற்றார் உறவினரின் மகிழ்ச்சியைப் பெருக்குபவனே, ஓ! வீரனின் நோன்பில் எப்போதும் அர்ப்பணிப்புள்ளவனே, இவ்வளவு விரைவாக நீ சென்றதேன்?(42) ஓ! மகனே, நோன்புகளை நோற்பவனே, மனிதர்கள் அனைவரின் முன்னிலையில் நீ ஏன் உறங்கிக் கிடக்கிறாய்? மன்னர்கள் இவ்வாறு பூமியில் கிடக்கலாகாது.(43) பழங்காலத்தில் ராட்சசர்கள் அனைவரும் கூடியிருந்தபோது, உலகங்கள் அனைத்திலும் உள்ள பலவான்களில் முதன்மையானவனான ராவணன், சாதுக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பின்வரும் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான்.(44) "நான் பலத்தில் சிறந்தவனெனினும், தேவர்களை அழிப்பவனெனினும், பயங்கரமானதும், தடுக்கப்பட முடியாததுமான ஒரு பேராபத்து உற்ற உறவினனால் எனக்கு உண்டாகும்" {என்றான் ராவணன்}.(45) உயிரை அழிக்கும் அத்தகைய பேரிடர் என் உறவினர்கள் மூலமே நுண்ணறிவுமிக்க என் மகனுக்கு ஏற்பட்டது" {என்று அழுது புலம்பினாள்}.(46)
அதன்பிறகு அவள், கன்றிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு பசுவைப் போல அழுது கொண்டே தன் கணவனான முதிர்ந்த மன்னன் உக்ரஸேனனிடம்,(47) "ஓ! பக்திமிக்க மன்னரே வாரும், இடியால் தகர்ந்த மலையைப் போல வீரனுக்குரிய படுக்கையில் கிடக்கும் உமது அரச மகனைப் பாரும்.(48) ஓ! மன்னா, காலனின் வசிப்பிடத்திற்குச் சென்று சடல {பிரேத} நிலையை அடைந்த உமது மகனுக்கான ஈமச் சடங்குகளைச் செய்வீராக.(49) அரசுகள், வீரர்களால் அனுபவிக்கத்தகுந்தவை; நாம் வீழ்த்தப்பட்டோம். கிருஷ்ணனிடம் சென்று கம்ஸனனின் ஈமச் சடங்குகளைக் குறித்துக் கேட்பீராக.(50) பகைமையானது மரணத்தால் முடிவடையும், பகைவனின் மரணத்தால் அது {பகைமை} முடிவடையும். எனவே, இவனது ஈமச் சடங்குகள் செய்யப்பட வேண்டும். சடலம் என்ன தீங்கிழைத்தது?" என்று கேட்டாள்.(51)
துயரம் நிறைந்த இதயத்துடன் போஜ மன்னனிடம் {உக்ரஸேனனிடம்} இதைச் சொன்ன கம்ஸனின் அன்னை, தன் மகனின் முகத்தில் தன் பார்வையைச் செலுத்தியவாறே மீண்டும் அழுது புலம்பத் தொடங்கினாள்,(52) {அவள்}, "ஓ! மன்னா, உன்னைப் போன்ற ஒருவனைக் கணவனாக அடைந்து தங்கள் ஆசைகள் பாழாகிப் போன உன் மனைவியர் இனி என்ன செய்வார்கள்?(53) தடாகத்தில் வற்றும் நீர் போலக் கிருஷ்ணனின் ஆளுகையின் கீழ் உள்ளவரும், முதியவருமான உன் தந்தையை இனி நான் எவ்வாறு பார்த்துக் கொள்வேன்?(54) ஓ! மகனே, நான் உன் அன்னை; என்னிடம் நீ ஏன் பேசாமல் இருக்கிறாய்? உனது அன்புக்குரிய மக்களை விட்டுவிட்டு தொலை தூர உலகத்திற்கு நீ சென்றுவிட்டாய்.(55) ஓ! வீரா, தவிர்க்கப்பட முடியாதவனான காலன், அறநெறிகளை நன்கறிந்தவனான உன்னைப் போன்ற மகனைப் பேறற்றவளான இந்தப் பெண் {நான்} அறியாமல் கொண்டு போகிறான்.(56) ஓ! குலத்தின் தலைவா, கௌரவங்களையும், பல்வேறு கொடைகளையும் உன்னிடம் பெற்றுக் கொண்டு உன் குணங்களை விரும்பிய உன் பணியாட்கள் இப்போது அழுது கொண்டிருக்கிறார்கள்.(57) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, ஓ! நீண்ட கரத்தையும், பெரும்பலத்தையும் கொண்டவனே, எழுவாயாக, உன் வீட்டு மக்களையும், வறியோரையும் காப்பாயாக" என்றாள் {கம்ஸனின் தாயான பத்மாவதி}.(58)
பெருந்துயரால் பீடிக்கப்பட்ட கம்ஸனின் மனைவிமாரும் இவ்வாறு அழுது கொண்டிருக்கையில், மாலைக் கதிர்களால் தாக்கப்பட்ட {சிவந்த} சூரியன் மறையத் தொடங்கினான்" என்றார் {வைசம்பாயனர்}.(59)
விஷ்ணு பர்வம் பகுதி – 86 – 031ல் உள்ள சுலோகங்கள் : 59
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |