Friday, 3 July 2020

விரஜத்திற்குச் சென்ற அக்ரூரன் | விஷ்ணு பர்வம் பகுதி – 80 – 025

(அக்ரூராகமனம்)

Akrura goes to Viraja | Vishnu-Parva-Chapter-80-025 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கோகுலத்தில் கிருஷ்ணனைக் கண்ட அக்ரூரன்...

Akrura

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மந்தக் கதிர்களுடன் கூடிய சூரியன் மறைந்தபோது, மாலை வேளையின் சிவந்த வானில் சந்திர வட்டில் பழுப்பு வண்ணமடைந்தபோது,(1) பறவைகள் தங்கள் கூட்டில் நுழைந்தபோது, வேள்வி செய்பவர்களால் நெருப்பு மூட்டப்பட்ட போது, திசைகள் சற்றே இருண்டபோது,(2) அந்த வசந்த கால இனிய இரவில் அந்த ஆயர்களின் கிராமத்தில் சுகப் பறவைகளும், வலாஹங்களும், பிற பறவைகளும் உறங்கியபோது, இறைச்சியை விரும்பும் இரவுலாவிகள் {ஊனுண்ணும் விலங்குகள்} மகிழ்ச்சியடைந்தபோது[1],(3) இரவில் இந்திரகோபங்கள் {மின்மினிப்பூச்சிகள்} மகிழ்ந்திருந்தபோது, வேத கல்வி கற்றல் முடியும் வேளை வந்தபோது, இல்லறவாசிகளின் அக்னிஹோத்ரத்திற்கு அவசியத் தேவையான பாலைக் கொதிக்க வைக்க வேண்டிய வேளை தோன்றிய போது, தவசிகள் {வானப்ரஸ்தர்கள்} நெருப்பில் ஆகுதிகளைக் காணிக்கை அளிக்கத் தொடங்கியபோது,(4,5) பசுக்கள் திரும்பி, கன்றுகளுடன் (தண்டுகளில்) கட்டப்பட்டுப் பால் கசிந்தபோது, மாடுகளைக் கட்டுவதற்கான நீண்ட கயிறுகளுடன் ஆயர்கள் உரத்தவொலியுடன் பசுக்களின் பெயரைச் சொல்லி அழைக்கத் தொடங்கி அவற்றை இட்டுச் சென்றபோது,(5-7) காட்டில் இருந்து திரும்பியவர்களும், கனமான விறகுச் சுமையால் தோள்கள் வளைந்தவர்களுமான கோபர்களால் பசுஞ்சாணம் எரிக்கப்பட்ட போது, பகல் முடிந்து, இரவு தொடங்கிச் சந்திரன் எழுந்து ஒளிர்ந்த போது, சூரியக் கதிர்களின் மறைவுடன் நாள் கடந்து, சந்திரனின் ஒளிக் கதிர்களுடன் இரவு தொடங்கிய போது,(8-10) வானம் நெருப்பைப் போன்ற பிரகாசத்தில் வளர்ந்த போது, அக்ரூரன், தன் நண்பர்களுடன் சேரப்போகும் செய்தியைச் சொல்லும் நோக்கத்துடன் பறவைகளுடன் சேர்ந்து தானும் கூடுகளுக்குள் நுழைவதைப் போலத் தன் தேரில் விரஜத்தை அடைந்தான்.(11-13) கொடைகளை அளிப்பவனான அவன் {தானபதியான அக்ரூரன்}, அங்கே நுழைந்ததும் கேசவன் {கிருஷ்ணன்}, ரோஹிணியின் மகன் {பலராமன்}, நந்தகோபன் ஆகியோரைக் குறித்து {ஆங்காங்கே} அடிக்கடி விசாரித்தான்.(14)

[1] சித்திரசாலை பதிப்பில், "விரஜவாசிகள் உறங்கிக் கொண்டிருந்த போது, நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருந்தபோது, இரவில் உலவுபவை (நரிகள்) இறைச்சியை உண்ண எதிர்பார்த்து மகிழ்ந்திருந்தபோது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கோபர்களின் வசிப்பிடங்களில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது, நரிகள் ஊளையிட்டபோது, இறைச்சியுண்ணும் நோக்கில் சுற்றிலும் இருந்த இரவுலாவிகள் மகிழ்ந்திருந்தபோது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஆயர்கள் உறங்க ஏற்பாடு செய்கின்றனர். நரிகள் ஊளையிடுங்கின்றன. மாம்ஸ உணவை விரும்பி இரவில் திரியும் பிராணிகள் மகிழ்கின்றன" என்றிருக்கிறது.

அதன்பிறகு, பெரும்பலம் வாய்ந்தவனும், தயாளனும், வஸுவுக்கு ஒப்பானவனுமான அந்த இளவரசன் {அக்ரூரன்}, தன் தேரில் இருந்து இறங்கி நந்தனின் வீட்டிற்குள் நுழைந்தான்.(15) அவன், மகிழ்ச்சி நிறைந்த முகத்துடனும், கண்ணீர் நிறைந்த கண்களுடனும் வாயிலுக்குள் நுழைந்த உடனேயே, பால் கறக்கும் இடத்தில் கன்றுகளின் மத்தியில் ஒரு காளையைப் போல நிற்கும் கிருஷ்ணனைக் கண்டான்.(16) கிருஷ்ணனைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சியை அடைந்தவனும், பக்திமானுமான அந்த அக்ரூரன், கனமான சொற்களுடன் {தழுதழுத்த சொற்களில்}, "ஓ! கேசவா, இங்கே வா" என்றான்.(17) அண்ட அழிவின் போது ஆலிலையில் கிடப்பவனும், பலியின் விதியை நேர் செய்யும் வேளையில் குள்ளன் {வாமனன்} வடிவை ஏற்றவனும், மூவுலகின் செழிப்பால் {ஸ்ரீயால்} தொண்டாற்றப்படுபவனுமான வாஸுதேவனை {கிருஷ்ணனை} பிள்ளைப்பருவத்திற்கும், இளமைப் பருவத்திற்கும் இடையில் முதிரா இளைஞனின் நிலையில் கண்ட அவன் {அக்ரூரன்}, மீண்டும் மீண்டும் அவனைப் புகழ்ந்து தனக்குள்ளேயே,(18) "இந்தத் தாமரைக் கண்ணன், பெருமலையின் வடிவம் கொண்டவனும், நீர் பெருகுங்கடலுக்கு ஒப்பானவனும், ஆற்றலில் சிங்கத்தையும், புலியையும் போன்றவனாவான்.(19) போரில் தடுக்கப்பட முடியாதவனான இவன் தன் மார்பில் ஸ்ரீவத்சமெனும் மாயக் குறியையும், பகைவர்கள் கொல்லப்படும் களத்தைப் போன்ற நன்கலங்கரிக்கப்பட்ட கைகளையும் கொண்டவனாவான்.(20) 

இப்போது ஆயரின் வேடத்தில் இருக்கும் இவன், அண்டத்தில் முதலில் வணங்கப்படத் தகுந்தவனும், உபநிஷத்தையே வடிவமாகக் கொண்டவனுமான விஷ்ணுவின் அவதாரம் ஆவான். (பற்றார்வம் கொண்டவனை {பக்தி கொண்டவனான என்னைக்} கண்டதில்) இவனது மயிர் சிலிர்த்திருக்கிறது.(21) மகுடத்திற்குத் தகுந்த இவனது தலை குடைக்கு ஒப்பாக இருக்கிறது. இவனது காதுகளில் சிறந்த குண்டலங்கள் இரண்டும், இவனது பரந்த மார்பில் கழுத்தாரமும் இருக்கின்றன. நீண்டு பருத்திருக்கும் இவனது கரங்கள் இரண்டும் இவனது அழகை அதிகரிக்கின்றன.(22,23) ஆயிரம் பெண்களால் கவனிக்கப்படுபவனும், மஞ்சளாடை உடுத்தியவனுமான இவனது உடலானது மதனையே {காமனான மன்மதனையே பொறாமையால்} கலக்கமடையச் செய்யும்.(24) பூமியின் புகலிடமாகத் திகழ்வனவும், மூவுலகங்களையும் மறைத்தனவுமான கால்களைக் கொண்ட அந்தத் தலைவனே {விஷ்ணுவின்} பூமியில் இறங்கி வந்திருக்கிறான்.(25) இவனது அழகிய வலக்கரம் சக்கரத்தைத் தாங்கத் தகுந்ததாகவும், இவனது இடக்கரம் கதாயுதத்தைத் தாங்க விரும்புவதாகவும் தெரிகிறது.(26) அவனே தன் முதல் பாதத்துடன்[2] இங்கே பூமியில் {கிருஷ்ணனாக} இறங்கியிருக்கிறான். தேவர்களில் முதன்மையான அவனே {விஷ்ணுவே} பூமியில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்.(27)

[2] "அவனது உண்மையான வடிவம் குணங்களேதும் அற்றதாகும். விஷ்வம், தைஜஸம், பிரக்ஜம், துரியம் என்பன அவனது நான்கு பாதங்களாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். சித்திரசாலை பதிப்பில், "அவன் உலகின் நன்மைக்காகத் தோன்றியிருக்கிறான். தேவர்களில் சிறந்தவனான அவன் இப்போது பூமியில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சுமைகளைச் சுமப்பதில் முதன்மையானவன் அவன். தேவர்களில் சிறந்தவன் அவன். அவனே பூமியில் அவதரித்து இப்போது ஒளிர்ந்து கொண்டிருக்கிறான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.இராமானுஜ ஐயங்கார் பதிப்பில், "தேவர்களின் [ரக்ஷாபாரத்தை] வஹிக்கும் தேவதேவன் பரமாத்மாவின் முதல் ஸ்தானமான பரமபதநாதன் [நாராயணன்] நம் க்ஷேமத்துக்கு இப்புவியில் அவதரித்து க்ருஷ்ணனாக ப்ரகாசிக்கிறான்" என்றிருக்கிறது.

எதிர்கால அறிவைக் கொண்ட பிராமணர்கள், கிட்டத்தட்ட அழிந்துவிட்ட யது குலத்தைத் தலைவன் கோபாலன் பெருக்குவானெனச் சொல்லி இருக்கிறார்கள்.(28) நீர்த்தாரைகள் பெருங்கடலை நிறைப்பதைப் போலவே, இவனது சக்தியால் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான யாதவர்களின் குடும்பத்தை {குலத்தை} நிறைப்பான்.(29) பகைவரின் படைத்தலைவர்கள் கொல்லப்படும்போது, முழுமையானதும், நித்தியமானதும், செழிப்பானதுமான இந்த அண்டம் பொற்காலத்தில் இருந்ததைப் போல இவனது ஆணைகளுக்குக் கீழ்ப்படியும்.(30) பூமியில் இருக்கும்போது இவன் மொத்த உலகையும் அடக்குவான்; மன்னனாக இல்லாவிட்டாலும் தலையில் மகுடந்தரித்தவர்கள் அனைவரையும் இவன் ஆள்வான்.(31) பழங்காலத்தில், தன் மூன்று காலடிகளால் பலியை வென்று, தேவலோகத்தில் தேவர்களின் மன்னனாகப் புரந்தரனை நிறுவியதைப் போலவே இவன் மூவுலகங்களையும் தன்னிரு கால்களால் அடக்கி குடிமுதல்வரான உக்ரஸேனரை நிச்சயம் {மதுராவில்} நிறுவுவான்.(32,33)

பெருங்கடலைப் போன்ற பகைமைகளை உண்டாக்குபவனும், மன்னர்கள் தொடர்பான புராணங்கள் பலவற்றை அறிந்தவனும், புராதனப் புருஷனும், வேதங்களில் பிராமணர்களால் பாடப்பட்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்} மனிதனைப் போல வாழ விரும்பும்போது, அனைத்து உலகங்களும் பின்பற்றும் வகையிலான முன்னுதாரணமாக நிச்சயம் இவன் திகழ்வான்.(34,35) நான் இன்று என் மனத்தில் விஷ்ணுவின் தெய்வீகத்தை {விஷ்ணுத்வத்தை} முறையாகத் துதிக்கப் போகிறேன்.(36) ஆன்ம அறிவுடன் கூடிய மஹாரிஷிகள் இவனை மீமானிடனாக {மனித சக்திக்கு அப்பாற்பட்டவனாக} அறிகிறார்கள். மனிதர்களுக்கு மத்தியில் தோன்றி, நமக்கு உற்ற உறவினனாக இருக்கும் இவன் நிச்சயம் மீமானிடனே ஆவான்.(37) எவ்வாறிருப்பினும், இரவில் கிருஷ்ணனுடன் ஆலோசித்து, இவன் விரும்பினால் இவனையும், கோபர்களையும் மதுராவுக்கு அழைத்துச் செல்வேன்" என்று நினைத்தான் {அக்ரூரன்}.(38)

கிருஷ்ணனைக் கண்ட அவன் {அக்ரூரன்}, அறிவைக் கருவாகக் கொண்டவையும், பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவையுமான எண்ணங்களைத் தனக்குள் இவ்வாறு தொகுத்துக் கொண்டு, நந்தகோபனின் அவைக்குள் {வசிப்பிடத்திற்குள்} நுழைந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(39)

விஷ்ணு பர்வம் பகுதி – 80 – 025ல் உள்ள சுலோகங்கள் : 39
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்