(தேனுகவதம்)
The destruction of Khara and Dhenuka | Vishnu-Parva-Chapter-68-013 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கோவர்த்தன மலைக்கு வடக்கே ஒரு பனங்காட்டைக் கண்ட கிருஷ்ணனும், பலராமனும்; தேனுகன் என்ற அஸுரன் பலராமனைக் கடித்தது; தேனுகனைக் கொன்ற பலராமன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "யமுனையின் மடுவில் கிருஷ்ணனால் பாம்புகளின் மன்னன் {காளியன்} வீழ்த்தப்பட்ட பிறகு, ராமனும் {பலராமனும்}, கேசவனும் {கிருஷ்ணனும்} அங்கே திரியத் தொடங்கினர்.(1) வஸுதேவனின் வீர மகன்களான அவ்விருவரும், தங்கள் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச்[1] சென்று, {அந்த மலையில் இருந்து} வடக்கே யமுனைக் கரையில் அமைந்துள்ள பெரும் பனங்காட்டைக் கண்டனர்.(2,3)
[1] "வடமேற்கு மாகாணத்தில் உள்ள மதுரா என்ற நகரில் இருந்து சில மைல்கள் தொலைவில் இதே பெயரில் உள்ள ஒரு மலை இன்னும் கூட இருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். மன்மதநாததத்தர் இதை எழுதும்போது இருந்த மாநிலங்கள் வேறு. அப்போது இந்தியா சுதந்திரம் அடையவில்லை. அவர் இங்கே குறிப்பிடும் அந்த மலை இப்போது உத்திரப்ரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் இருந்து 13 மைல்கள் {21 கி.மீ.} தொலைவில் இருக்கிறது. இப்போது இருக்கும் அமைப்பின்படி கோவர்த்த மலைக்குக் கிழக்கில்தான் யமுனை பாய்கிறது. சித்திரசாலை பதிப்பில், "அவ்விரு வீரர்களும், கோவர்த்தன மலைக்கு வடக்கே, யமுனைக் கரையில் அழகிய பனங்காட்டைக் கண்டனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "துணிச்சல் மிக்க அவ்விருவரும், கோவர்த்தன மலைக்கு வடக்கே யமுனையின் கரையில் பெரியதும், அழகானதுமான ஒரு பனங்காட்டைக் கண்டனர்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கோவர்த்தன மலைக்கு வடக்கில் யமுனைக் கரையிலுள்ள பெரிய அழகிய பனங்காட்டை அந்த வீரர் இருவரும் கண்டனர்" என்றிருக்கிறது.
அவர்கள் அதைக் கண்டதும் பெரிதும் மகிழ்ந்து புதிதாய் முளைத்த இரு மரக்கன்றுகளைப் போலப் பனையோலைகளால் மறைக்கப்பட்ட அந்த அழகிய பனங்காட்டில் திரியத் தொடங்கினர்.(4) அது நல்ல சமமாகவும், குளுமையாகவும், கருப்பு மண்ணாலும், ஏராளமான புற்களாலும் பூசப்பட்டதாகவும், கற்கள் மற்றும் மண்ணாங்கட்டிகளில் இருந்து விடுபட்டதாகவும் இருந்தது.(5) கருநீல நிறத்தைக் கொண்டவையும், நெடியவையும், தொங்கும் கனிகள், மற்றும் கிளைகளுடன் கூடியவையுமான பனை மரங்கள், யானையின் துதிக்கைகளைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(6)
இவ்வாறு திரிந்து கொண்டிருந்தபோது, பேசுபவர்களில் முதன்மையான தாமோதரன் {கிருஷ்ணன்}, ஸங்கர்ஷணனிடம் {பலராமனிடம்}, "ஓ! மதிப்புக்குரிய ஐயா {அண்ணா}, கனிந்த பனங்கனிகளின் நறுமணத்துடன் இந்தக் காட்டு நிலம் மணக்கிறது.(7) இனியவையும், கனிந்தவையுமான இந்த அடர் நீலக் கனிகளை நாம் இருவரும் விரைந்து கொய்வோம். நுகரும் உறுப்புக்கு {மூக்குக்கு} இதன் மணம் மிக இனிமையானதாகவும், விரும்பத்தகுந்ததாகவும் இருப்பதால், நிச்சயம் இஃது அமுதம் போன்று சுவைமிக்கதாகவே இருக்கும். இதுவே எனது உறுதியான நம்பிக்கையாகும்" என்றான்.(8,9)
தாமோதரனின் சொற்களைக் கேட்ட ரோஹிணியின் மகன் {பலராமன்}, கனிகளை வீழ்த்தும் நோக்கில் சிரித்துக் கொண்டே {பனை}மரங்களை உலுக்கினான்.(10) பெரும் பயன்மிக்கதாக இருந்தாலும் பாலைவனம் போலத் தோன்றிய அந்தப் பனங்காடு, ராட்சசர்களின் வசிப்பிடத்தைப் போல மனிதர்கள் நாடவும், பயணிக்கவும் தகுதியற்றதாக இருந்தது.(11) பெரிய வடிவம் கொண்டவனும், பயங்கரம் நிறைந்தவனும், கழுதையின் வடிவத்தைக் கொண்டவனுமான தேனுகன் என்ற தைத்தியன், கழுதைக்கூட்டத்தால் சூழப்பட்டவனாக எப்போதும் அங்கே வாழ்ந்து வந்தான்.(12)
தீய மனம் கொண்ட அந்தக் கழுதையானவன், மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளை அச்சுறுத்தியபடியே அந்தப் பனங்காட்டைப் பாதுகாத்து வந்தான்.(13) பனங்கனிகள் விழும் ஒலியைக் கேட்ட அவன், ஒரு யானையைப் போல அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பெருஞ்சினம் கொண்டான்.(14) அசைவற்ற கண்களையும், விரிந்த உதடுகளையும் கொண்ட அந்தத் தைத்தியன், கோபத்தால் தன் பிடரிமயிரை உதறியும், மகிழ்ச்சியால் தன் வாலை உயர்த்திக் கொண்டும், தன் குளம்பால் பூமியைத் தேய்த்துக் கொண்டும் பனங்கனிகளின் ஒலியைப் பின்தொடர்ந்து ரோஹிணியின் மகன் {பலராமன்} இருக்கும் இடத்தை அடைந்தான்.(15,16)
பற்களையே தன் ஆயுதமாகக் கொண்ட அந்தத் தைத்திய தலைவன் கரன் {தேனுகன்}[2], வடிவில் தன் கொடிக்கு {பனைமரத்துக்கு} ஒப்பான அழிவற்ற ரோஹிணியின் மகனை {பலராமனை} பனைமரத்தினடியில் கண்டு, திடீரென அவனைக் கடித்துப் பின்புறமாகத் திரும்பி தன் நீண்ட பின்னங்கால்களால் அவனுடைய மார்பை உதைத்தான்.(17,18) அப்போது (ஸங்கர்ஷணன் {பலராமன்}), கழுதையின் வடிவில் இருந்த அந்தத் தைத்தியனின் கால்களைப் பிடித்துத் தலை மற்றும் தோள்களைச் சுழற்றி பனை மரத்தின் உச்சிக்கு அவனைத் தூக்கி ஏறிந்தான்.(19) தொடைகளும், இடையும், கழுத்தும், முதுகும் சேதமடைந்தவனும், வடிவம் சிதைந்தவனுமான அவனும் பனங்கனிகளுடன் சேர்ந்து பூமியில் விழுந்தான்.(20) பலதேவன் {பலராமன்}, இவ்வாறு அந்தக் கழுதை இறந்ததையும், அழகை இழந்ததையும் கண்டு, அவனது மற்ற உறவினர்களையும் மரத்தின் உச்சிக்குத் தூக்கி எறிந்தான். அந்நேரத்தில் அங்கே பனங்கனிகள், மற்றும் கழுதைகளின் உடல்களால் மறைக்கப்பட்டிருந்த தரை, மேகங்களால் மறைக்கப்பட்ட கூதிர் கால வானைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(22)
[2] நாம் ஒப்பிட்டு வரும் மற்ற மூன்று பதிப்புகளிலும் கரன் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. தேனுகனே பலராமனைக் கடிக்கிறான். மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்த அத்தியாயத்தின் தலைப்பே கரன் மற்றும் தேனுகனின் அழிவு என்று இருக்கிறது. இந்த அத்தியாயத்தில் இந்த ஓர் இடத்தைத் தவிர வேறு எங்கும் கரன் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. வாக்கியங்களின் அமைப்பையும், நடையையும் பார்க்கும்போதும் இது தேனுகனைத் தவிர வேறொருவனைக் குறிப்பது போலத் தெரியவில்லை. மூலத்தில், "தாலானாம் தமதோ⁴ த்³ருஷ்ட்வா ஸ த்⁴வஜாகாரமவ்யயம் | ரௌஹிணேயம் க²ரோ து³ஷ்ட꞉ ஸோ(அ)த³ஸ²த்³த³ஸ²னாயுத⁴꞉" என்றிருக்கிறது. பலராமனும் பீஷ்மரைப் போலவே பனைமரக் கொடி கொண்டவன்.
இவ்வாறு ஒரு கழுதையின் வடிவில் இருந்த அந்தத் தைத்தியனும், அவனது தொண்டர்களும் கொல்லப்பட்டபோது, அந்தப் பனைமரக்காடு மீண்டும் கண்கவர் தோற்றத்தை ஏற்றது.(23) மிகச்சிறந்ததும், வெண்மையானதுமான அந்தப் பனைமரக்காட்டில் அச்சம் விலகியபோது, பசுக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் அங்கே திரியத் தொடங்கின.(24) காடுகளில் திரிபவர்களான கோபர்கள் {ஆயர்கள்} அந்தக் காட்டுக்குள் நுழைந்து, கவலையும், அச்சமும் அற்றவர்களாக அனைத்துப் பக்கங்களிலும் உலவத் தொடங்கினர்.(25) யானையைப் போன்ற சக்திவாய்ந்தவர்களான வஸுதேவனின் இரண்டு மகன்களும் பசுக்கள் அனைத்துப் பக்கங்களிலும் சுகமாகத் திரிவதைக் கண்டு, அங்கே புல்லாலான இருக்கைகளை {பாய்களைப்} பரப்பி, சுகமாக அமர்ந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(26)
விஷ்ணு பர்வம் பகுதி – 68 – 013ல் உள்ள சுலோகங்கள் : 26
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |