Friday 5 June 2020

அசுரர்கள் பிறப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 57 – 002

(கம்ஸஸங்கேதம் ஆர்யானுசாஸனம்)

An account of the birth of demons | Vishnu-Parva-Chapter-57-002 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : தேவகியின் கருவைக் கொல்ல முயற்சி செய்த கம்ஸன்; பலராமனைக் கர்ப்பம் மாற்றவும், ஷட்கர்ப்பர்களைத் தேவகி கர்ப்பத்தில் வைக்கவும் நித்ராதேவியைத் துதித்து ஏற்பாடு செய்த விஷ்ணு...

Lord Vishnu and Nithradevi

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பின்னர் கோபத்துடன் கூடிய கம்ஸன், நல்லெண்ணம் கொண்ட தன் அமைச்சர்கள் அனைவரிடமும், "(எட்டாவதாகப் பிறக்கும்) தேவகியின் குழந்தையை அழிக்க எப்போதும் நீங்கள் ஆயத்தமாக இருப்பீராக.(1) நாம் ஐயங்கொள்ளும் பேரழிவு ஒழிக்கப்பட வேண்டும். எனவே, தொடக்கத்தில் இருந்தே தேவகியின் கருக்கள் அனைத்தையும் அழிப்பீராக.(2) தேவகி, காவலர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டவளாக அந்தப்புரத்தில் நம்பிக்கையுடன் உலவட்டும். அவள் கருவுறும்போது அவளைக் கவனமாகப் பாதுகாப்பீராக.(3) அவள் கருவுற்ற உடனேயே, என் அந்தப்புரத்துப் பெண்கள் முதலில் இருந்தே மாதங்களைக் கணக்கிட வேண்டும். பிரசவ நேரத்தை அறிந்து சரியெனக் கருதுவதை நாம் செய்வோம்.(4) என் நன்மையில் ஈடுபடும் அலிகள் மற்றும் பெண்கள், வஸுதேவனை இரவும் பகலும் மயக்க நிலையிலேயே அந்தப்புரத்தில் வைத்திருக்க வேண்டும். எவரும் அவனிடம் ரகசியத்தை வெளியிடக்கூடாது {காரணத்தைச் சொல்லக் கூடாது}.(5) மக்கள் இந்த மனித முயற்சிகளால் தங்கள் நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும். என்னைப் போன்றோர் விதியின் போக்கை எவ்வாறு தவிர்க்கிறோம் என்பதைக் கேட்பீராக.(6) நல்ல முறையில் பயன்படுத்தப்படும் மந்திரங்கள், முறையாக நிர்வகிக்கப்படும் மருந்துகள், கவனிப்பு மற்றும் பக்தி ஆகியன கெட்டவிதியைக்கூட உகந்ததாக மாற்ற வல்லவை ஆகும்" என்றான் {கம்ஸன்}".(7)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நாரதரிடம் இருந்து தன் மரணத்தைக் குறித்துக் கேட்ட கம்ஸன், அச்சத்தின் காரணமாகத் தேவகியின் கருவை அழிப்பதெவ்வாறு என ஆலோசனைகளை நடத்தத் தொடங்கினான்.(8) மறுபுறம், சக்தி வாய்ந்தவனான விஷ்ணு, கம்ஸனின் வெளிப்படையான மற்றும் பயங்கரமான முயற்சிகளை மறைந்திருந்து {அந்தர்மியாக} அறிந்து, சிந்திக்கத் தொடங்கினான்,(9) "போஜனின் வழித்தோன்றலான கம்ஸன், தேவகியின் முதல் ஏழு குழந்தைகளை அழிப்பான். எட்டாவதாக அவள் கருத்தரிக்கும்போது அவளது கருவறையில் நான் வாழ வேண்டும்" {என்று நினைத்தான்}.(10) இவ்வாறு தியானித்துக் கொண்டிருந்தபோது அவனது மனம், நீரில் வாழ்பவர்களான ஹம்ஸன், ஸுவிக்ராதன், தமனன், ரிபுமர்தனன், குரோதஹர்த்தன் என்ற ஷரகர்ப்ப {ஷட்கர்ப்ப}[1] தானவர்களிடம் பறந்து சென்றது.(11) காலநேமியின் மகன்களான ஷரகர்ப்பர்களைப் போன்ற இறப்பிலிகள், தேவர்களைப் போன்ற பலமிக்கவர்களாகவும், பிரகாசமான மேனி கொண்டவர்களாகவும், போரில் திறன்மிக்கவர்களாகவும் இருந்தனர்.(12) ஷரகர்ப்ப தைத்தியர்கள், தங்கள் பாட்டனான ஹிரண்யகசிபுவை விட்டகன்று, சடாமுடி தரித்துக் கொண்டு, கடுந்தவங்களைச் செய்து அனைத்தின் பெரும்பாட்டனை வழிபட்டனர். அவர்களிடம் நிறைவடைந்த பிரம்மன் அவர்களுக்குப் பின்வரும் வரத்தை அளித்தான்.(13,14)

[1] மற்ற பதிப்புகள் அனைத்திலும் இந்தப் பெயர் ஷட்கர்ப்பர்கள் என்றே இருக்கிறது. ஹம்ஸன் முதல், குரோதஹர்த்தன் வரை உள்ள இந்த ஐந்து பெயர்கள் வேறெந்தப் பதிப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஷட்கர்ப்பர்கள் என்றால் ஆறு கர்ப்பங்கள் என்று பொருள்.

பிரம்மன், "ஓ! தானவர்களில் முதன்மையானவர்களே, நான் உங்கள் தவம் மற்றும் துறவில் பெரும் நிறைவடைந்தேன். உங்கள் விருப்பங்களைத் தெளிவாக என்னிடம் வெளிப்படுத்தினால் நான் அவை அனைத்தையும் உங்களுக்கு அருள்வேன்" என்றான்.(15)

பிரம்மனின் சொற்களால் ஊக்கமடைந்த அந்தத் தைத்தியர்கள் {ஷட்கர்ப்பர்கள்}, "ஓ! தலைவா, நீர் எங்களிடம் நிறைவடைந்தால், இந்தச் சிறந்த வரத்தை எங்களுக்கு அளிப்பீராக.(16) ஓ! பிரம்மா, நீர் எங்களுக்கு வரமளிப்பதாக இருந்தால், தேவர்கள், பெரும் உரகர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சரணர்கள், மனிதர்கள் மற்றும் சாபங்களையே தங்கள் ஆயுதமாகக் கொண்டவர்களும், எப்போதும் தவங்களில் ஈடுபடுபவர்களுமான பெரும் முனிவர்கள் ஆகியோரால் கொல்லப்பட முடியாதவர்களாக எங்களை ஆக்குவீராக" என்று கேட்டனர்.(17-18)

பெரும்பாட்டன், அவர்களின் தவத்தால் இதயத்தில் பெரும் மகிழ்ச்சியடைந்து, அவர்களிடம் அன்புடன், "நீங்கள் வேண்டியவை அனைத்தும் அப்படியே ஆகும்" என்றான்.(19)

அந்தச் சுயம்பு {பிரம்மன்}, ஷரகர்ப்பர்களுக்கு இந்த வரத்தைக் கொடுத்துவிட்டுத் தேவலோகத்திற்குச் சென்றான். அதன்பிறகு ஹிரண்யகசிபு அவர்களிடம் {ஷட்கர்ப்பர்களிடம்}, கோபம் நிறைந்த சொற்களில்,(20) "நீங்கள் என்னை அலட்சியம் செய்து, தாமரையில் உதித்த பிரம்மனிடம் வரம் வேண்டியதன் மூலம் என் பகைவர்கள் ஆனீர்கள்.(21) எனவே நான் உங்களிடம் அன்பு கொள்ளாமல் உங்களனைவரையும் கைவிடுகிறேன். ஷரகர்ப்பர்கள் என்ற பகட்டான பெயரை உங்களுக்கு அளித்த தகப்பனே, கருவில் இருக்கப் போகும் உங்கள் அனைவரையும் கொல்வான்.(22) ஓ! பேரசுரர்களான ஷரகர்ப்பர்களே, நீங்கள் அனைவரும் வரிசையாகத் தேவகியிடம் பிறப்பீர்கள், உங்களைக் கம்ஸன் கொல்வான்" என்றான் {ஹிரண்யகசிபு}".(23)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதன்பிறகு விஷ்ணு, ஹிரண்யகசிபுவின் சாபத்தால் நீரின் கருவறையில் வாழ்ந்து வந்த ஷரகர்ப்ப அசுரர்கள் இருக்கும் இடத்தை அடைந்தான். அங்கே அவர்கள் மரணம் போன்ற உறக்கத்தால் பீடிக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டான்.(24,25) வாய்மையே தன் ஆற்றலாகக் கொண்ட விஷ்ணு, கனவு நிலையில் ஷரகர்ப்பர்களின் உடலுக்குள் நுழைந்து, அவர்களது உயிர் மூச்சுகளை இழுத்து உறக்கத்தின் {நித்ராதேவியின்} கவனிப்பில் விட்டான்.(26) அவன் {விஷ்ணு}, "ஓ! உறக்கமே {நித்ரே}, முன்னணி தானவர்களான இந்த ஷரகர்ப்பர்கள் அனைவரின் உயிர் காற்றுகளையும் என் ஆணையின் பேரில் எடுத்து, தேவகியின் கருவறையில் இவர்களை வரிசையாக வைப்பாயாக.(27,28) இவர்கள் அவளது கருவறையில் பிறந்து, யமனின் வசிப்பிடத்திற்குச் செல்வார்கள். கம்ஸனின் முயற்சிகள் வீணாகும், தேவகியின் உழைப்பு வெற்றியால் மகுடம் சூட்டப்படும்.(29) என்னைப் போலவே நீயும் பூமியில் சக்திவாய்ந்தவளாகவும், அனைத்து உயிரினங்களால் துதிக்கப்படுபவளாகவும் இருக்கும் வகையில் நான் உனக்குத் தயவைப் காட்டுவேன்.(30)

அதன் பிறகு, தேவகியின் ஏழாவது கருவில் என் மென்மையான கூறு {அம்ஸம்} கருத்தரிக்கும்போது, என்னுடைய அண்ணனான அவனை {பலராமனை} ஏழாம் மாதத்தில் எடுத்து, ரோஹிணியின் கருவறையில் வைப்பாயாக.(31) சந்திரனைப் போன்றவனான என் அண்ணன் இவ்வாறு கருவறையில் இருந்து எடுக்கப்படுவதால் தன் இளமையில் ஸங்கர்ஷணன் என்ற பெயரால் அழைக்கப்படுவான்.(32) கம்ஸன் {தன் மனத்தில்}, 'தேவகி ஏழாவது முறை அச்சத்தால் வேளை தவறி {அகாலத்தில்} குழந்தையை ஈன்றாள்' என்று நினைத்துக் கொண்டு, எட்டாம் முறை நான் அவளது கருவறையில் இருக்கும்போது மிகக் கவனமாக இருப்பான்.(33) ஓ! தேவி, நீ நலமாக இருப்பாயாக; கம்ஸனின் பசுக்களுக்கு அதிகாரியான நந்தனின் பேரன்புக்குரிய மனைவியும், கோபியரில் சிறந்தவளுமான யசோதையால் எங்கள் குலத்தில் ஒன்பதாவதாக நீ கருத்தரிக்கப்படுவாய். மாதத்தின் ஒன்பதாவது தேய்பிறையில் {கிருஷ்ண பக்ஷம் நவமி திதியில்} நீ பிறப்பாய்.(34,35) நானும், அபிஜித்[2] ஆதிக்கத்தின் கீழுள்ள நடு இரவில் கருவறையில் இருந்து மகிழ்ச்சியாக வெளிவருவேன் {பிறப்பேன்}.(36)

[2] "நட்சத்திரங்கள் அல்லது சந்திரனைத் தலைவனாகக் கொண்ட நட்சத்திரங்களில் ஒன்று" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். இங்கே குறிப்பிடப்படும் அபிஜித் நட்சத்திரம் என்பது உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருவோணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அடங்கிய ஆகும். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் நமக்குத் தெரியும். வான் கணிதத்தின் தொடக்கக் காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்ன. விம்சோத்திரி தேசா கணிதத்திற்குப் பிறகு 27 நட்சத்திரங்களாக அவை சுருக்கப்பட்டன. அதில் விடுபட்டது இந்த அபிஜித் நட்சத்திரமாகும். கிருஷ்ணன் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். புருஷோத்தமன் மற்றும் ஹரிந்திரநாத் ஆகியோரின் பதிப்பிலும், பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இந்த அபிஜித் நட்சத்திரக் குறிப்பு காணப்படவில்லை. மூலத்தில் தேடியதிலும் இந்நட்சத்திரத்தின் பெயர் காணப்படவில்லை, நீலகண்டரின் உரையிலேயே இது காணப்படுகிறது. எனவே இதை அபிஜித் நட்சத்திரம் என்று கொள்ளாமல் அபிஜித் யோகம் என்றே கொள்ளப்பட வேண்டும். உ.வே.எஸ்.ராமானுஜய்யங்காரின் பதிப்பில், "நான் நடு இரவில் அபிஜித் யோகத்தின் முற்பகுதியில் ஸுகமாகவே கர்ப்பத்தில் இருந்து வெளிவருவேன்" என்றிருக்கிறது.

ஓ! உறக்கமே {நித்ரே}, கம்ஸனின் ஆட்சி மிகப் பயங்கரமானதாக இருக்கிறது. எனவே, {யசோதை கருவுற்ற} எட்டாவது மாதத்தில் நாம் ஒரே நேரத்தில் பிறப்போம் (வஸுதேவனால் மாற்றப்படுவோம்).(37) நான் யசோதையிடம் எடுத்துச் செல்லப்படுவேன், நீ தேவகியிடம் எடுத்துச் செல்லப்படுவாய். நமது பரிமாற்றத்தின் மூலம் கம்ஸன் கலக்கமடைவான் {குழம்பிப்போவான்}.(38) பிறகு அவன், உன் காலைப் பிடித்து இழுத்துக் கல்லில் மோதச் செய்வான்; உடனே நீ வானத்தில் எழும்பி உன் நித்திய லோகத்தை அடைவாய்.(39) ஓ! தேவி, உன் முகம் ஸங்கர்ஷணனின் முகத்தைப் போன்று பிரகாசத்துடனும், உன் உடல் என்னுடலைப் போன்று கருநீலத்துடனும், உன் கரங்கள் என் கரங்களைப் போன்ற நீளமானவையாகவும் இருக்கும்.(40) ஓ! உறக்கமே {நித்ரே}, நீ மூன்று தலைகளைக் கொண்ட கதாயுதத்தை ஏந்தி, தங்கக்கைப்பிடியுடன் கூடிய வாளையும் ஏந்தி, மது நிறைந்த குடுவையையும், தூய்மையான தாமரையையும் ஏந்தி, நீல நிற ஆடையால் அலங்கரிக்கப்பட்டு, மார்பைச் சுற்றி மஞ்சள் துணியால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்போது, சந்திரக் கதிர்களைப் போன்று ஒளிரும் ஆரத்தால் அலங்கரிக்கப்பட்ட மார்பைக் கொண்டவளாக, தெய்வீகமான இரண்டு குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட காதுகள் இரண்டைக் கொண்டவளாக, சந்திரனைப் போன்று ஒளிரும் முகத்தைக் கொண்டவளாக நீ தேவர்களின் வீதியை {சொர்க்கலோகத்தை} அடைவாய்.(41-43) ஓ! தேவி, அற்புதமான கிரீடம் மற்றும் மயிர்வலைகள், மயிலிறகுக் கொடிகள் மற்றும் அங்கதங்களால் அலங்கரிக்கப்பட்டு, பத்துத் திக்குகளுக்கும் அழகூட்டியபடி, பயங்கரப் பூதகணங்களால் சூழப்பட்டவளாக, பாம்புகளுக்கு ஒப்பான உன் பயங்கரக் கரங்களுடன் பிரம்மச்சரிய நோன்பு நோற்பவளாக நீ தேவலோகத்தில் நுழைவாய்.(44-46) தேவர்களின் நாட்டை {தேவலோகத்தை} நீ அடையும்போது, ஆயிரம் கண்களைக் கொண்டவனான இந்திரன், என்னால் விதிக்கப்பட்ட விதிகளின்படி நீரை உன் மேல் தெளித்து, தேவதைக்கான கௌரவத்தை உனக்கு அளித்து, உன்னைத் தன் தங்கையாக ஏற்பான். குசிகரின் குலத்தில் சேர்க்கப்படும் நீ, கௌசிகீ என்ற பெயரால் அழைக்கப்படுவாய்.(47,48)

பின்னர் வாசவன் {இந்திரன்}, விந்திய மலையை வசிப்பிடமாக உனக்கு வழங்கும்போது, நீ ஆயிரம் மாகாணங்களுடன் இந்த உலகை அலங்கரிப்பாய்.(49) மூவுலகங்களிலும் விரும்பியபடி திரிந்து கொண்டிருக்கும்போது நீ எவனுக்காவது வரமளித்தால், அவன் உடனடியாக அதன் பலனை அடைவான்.(50) ஓ! தேவி, அங்கே பூதகணங்களால் பின்தொடரப்பட்டு, என்னை உன் மனத்தில் நினைத்து சும்பன், நிசம்பன் என்ற இரண்டு அசுரர்களையும், அவர்களின் தொண்டர்கள் அனைவரையும் நீ கொல்வாய்.(51) ஓ! உறக்கமே {நித்ரே}, இறைச்சிக் காணிக்கை அளிக்கப்படுவதை நீ பெரிதும் விரும்புபவள். எனவே, நவமியில்[3] விலங்குகளின் பலியோடு கூடிய வழிபாட்டை நீ பூமியில் அடைவாய்.(52) என் ஆற்றலை அறிந்த மனிதர்களின் மத்தியில் எவன் உன்னை வணங்குவானோ, அவனுக்குக் குழந்தைகள், செல்வம் உள்ளிட்ட இவற்றில் எதையும் அடைவது கடினமாக இருக்காது.(53) பெருங்காட்டில் களைத்திருப்பவர்கள், பெருங்கடலில் மூழ்குபவர்கள், கள்வர்களால் தாக்கப்படுபவர்கள் போன்றோர் அனைவரையும் நீ ஆபத்துகளில் இருந்து காப்பாய்.(54) ஓ! மங்கலப் பெண்ணே, {பின்வரப் போகும் துதியைச் சொல்லி} பக்தியுடன் உன்னை நிறைவடையச் செய்யும் எவனையும் நான் கொல்லமாட்டேன், அவன் என் கரங்களால் அழிவை அடையமாட்டான்[4]" என்றான் {விஷ்ணு}" என்றார் {வைசம்பாயனர்}.(55)

[3] "இது மாதத்தின் ஒன்பதாவது தேய்பிறை நாள் {கிருஷ்ணபக்ஷ நவமி} ஆகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். புருஷோத்தமன் மற்றும் ஹரிந்திரநாத் ஆகியோரின் பதிப்பில், "பூதகணங்களால் பின்தொடரப்படும் நீ, மது மற்றும் இறைச்சியை விரும்புவாய். நவமி நாளில் (மாதத்தின் ஒன்பதாவது தேய்பிறையில்) விலங்கு பலியுடன் கூடிய வழிபாட்டை நீ பெறுவாய்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீ பூதகணங்களால் பின்தொடரப்படுவாய். நீ எப்போதும் இறைச்சியையும், வேள்விகளையும் விரும்புவாய். ஒன்பதாவது சந்திரநாளில் விலங்கு பலிகளுடன் கூடிய சடங்குகளின்படி நீ வழிபடப்படுவாய்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "கண், மாம்ஸம் நிவேதனம் ப்ரியமுடை நீ பூதங்களால் பின் தொடரப்பட்டு நவமி திதியில் ம்ருக பலியோடு கூடிய பூஜையை அடைவாய்" என்றிருக்கிறது.

[4] உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மங்கள தேவதையே, உன்னை இந்த ஸ்தோத்திரத்தால் பக்தியுடன் துதிப்பவர்கள் எனக்குப் பிரியமானவர்கள், நானும் அவர்களுக்குப் பிரியமானவன்" என்றிருக்கிறது.

விஷ்ணு பர்வம் பகுதி – 57 – 002ல் உள்ள சுலோகங்கள் : 55
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்