Thursday 7 May 2020

விஷ்ணுவின் அவதாரங்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 41

(விஷ்ணு அவதார வர்ணனம்)

The Incarnations of Vishnu | Harivamsa-Parva-Chapter-41 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : விஷ்ணுவின் அவதாரங்களைக் குறித்து ஜனமேஜயனுக்கு விளக்கிச் சொன்ன வைசம்பாயனர்...

Dashavatar

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! குழந்தாய், சாரங்க வில்லைக் கொண்ட ஹரி குறித்து நீ கேட்டிருக்கும் கேள்வி உண்மையில் மிகப் பெரியதாகும். விஷ்ணுவின் மகிமையை என் சக்திக்கு உட்பட்ட அளவில் விளக்கிச் சொல்கிறேன் கேட்பாயாக.(1) உன் நற்பேற்றாலேயே, விஷ்ணுவின் ஆற்றலைக் குறித்துக் கேட்க நம் மனம் விரும்புகிறது. இந்தத் தலைவனின் தெய்வீகப் பிறப்பைச் சொல்கிறேன் கேட்பாயாக.(2) அவன் நித்தியமான ஆயிரம் கண்களையும், ஆயிரம் முகங்களையும், ஆயிரம் கால்களையும், ஆயிரம் தலைகளையும், ஆயிரம் கைகளையும், ஆயிரம் நாவுகளையும், ஆயிரம் தோள்களையும் கொண்டவனாகவும், ஆயிரம் பிறவிகளைக் கொண்டவனாகவும், ஆயிரம் மகுடங்கள் சூடிப் பிரகாசமாக இருப்பவனாகவும் வேதங்களை நன்கறிந்த பிராமணர்கள் அவனைக் குறித்துச் சொல்கின்றனர்.(3,4) வேள்வி {ஸவனம் / ஒரு குறிப்பிட்ட சடங்கு}, ஆகுதி {ஹவனம்}, ஹவ்யம்[1], ஹோதா[2], புனிதப் பாத்திரங்கள், வேள்விப்பீடம் {வேதி}, தொடக்கம் {தீக்ஷை}, சரு[3], ஸ்ருவம்,(5) ஸ்ருக், ஸோமம், சூர்ப்பம்,[4] முஸலம்,[5] ப்ரோக்ஷணம், தக்ஷிணாயனம்,[6] அத்வர்யு, ஸாமகம், ஸத்ஸ்யம்,[7] ஸதனம் ஸதஸ்,[8](6) யூபம், ஸமித், குசம், தர்வீ,[9] சமஸம், உலூகலம், பிராக்வம்சம்,[10] வேள்வி {யஜ்ஞம்}, வேள்விக்களம் (யஜ்ஞபூமி}, புரோஹிதர் {ஹோதா}, சயனம்,[11](7) சிறு மற்றும் பெரும் தேர்கள், அசையும் படைப்பு, தவம் {சித்தம்}, பெரும்பலன் {அர்த்தம்}, ஸ்தண்டிலம்,[12] குசாம்,(8) மந்திரம், வேள்விக்காணிக்கைகளைச் சுமந்து செல்லும் நெருப்பு, பாகம்,[13] பாகவஹம்,[14] அக்ரேபுஜயம்,[15] ஸோம்புஜம்,[16] க்ருதார்சி,[17] உதாயுதம்[18] ஆகியவையாகவும்,(9) வேள்வியின் நித்திய தலைவனாகவும் அவனே இருக்கிறான். தேவர்களின் நுண்ணறிவுமிக்கத் தலைவனும், மார்பில் ஸ்ரீவத்ஸவத்தைக் கொண்டவனுமான விஷ்ணு, ஆயிரக்கணக்கான வடிவங்களில் அவதரித்துள்ளான் {வந்து பிறந்திருக்கிறான்}. எதிர்காலத்தில் இன்னும் ஆயிரக்கணக்கில் அவதரிப்பான். பிரம்மன் இதைச் சொல்லியிருக்கிறான்.(10,11)

[1] தேவர்களுக்கான உணவு. [2] புரோஹிதர். [3] ஒரு வகை உணவு. [4] புடைப்பதற்குரிய கூடை. [5] அரிசியைத் தூய்மைப்படுத்துவதற்கான ஓர் உலக்கை. [6] பலியுணவை {ஆகுதியைக்} காணிக்கையளித்தல். [7] வேள்வியில் கலந்து கொள்பவர்கள். [8] புரோஹிதக் கூட்டத்திற்கான ஒரு வீடு [9] அகப்பை [அ] கரண்டி. - என மன்மதநாததத்தர் ஆங்காங்கே விளக்கியிருக்கிறார்.

[10] "பலியுணவுக்கு {ஆகுதிக்கு} வேண்டிய பொருட்களை வைத்திருக்கும் அறைக்கு எதிரில் இருப்பதும், வேள்வியில் கூடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் தங்குவதற்கு உரியதுமான ஓர் அறை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[11] மற்றும் [12] - "ஒரு வேள்விக்காக அமைக்கப்பட்டதும், சமமானதும், சதுரவடிவைக் கொண்டதும், செங்கற்களால் செய்யப்பட்டதுமான ஒரு நிலம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[13] நெருப்பின் ஒரு பகுதி. [14] காயத்ரி மற்றும் பிற மந்திரங்கள். [15] நெருப்பு

[16], [17], [18] நெருப்பின் பெயர்கள் - மற்றவை முந்தைய குறிப்புகளில் விளக்கப்பட்டிருக்கின்றன - என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, உன்னால் கேட்டுக் கொள்ளப்பட்டது போலவே, தேவர்களின் மன்னனும், பகைவரைக் கொல்பவனும், தெய்வீகமானவனும், தலைவனுமான விஷ்ணு தேவலோகத்தைவிட்டு வஸுதேவனின் குலத்தில் ஏன் பிறந்தான் என்ற புனிதமான மற்றும் தெய்வீகமான கருப்பொருளை நான் விரிவாகச் சொல்லப்போகிறேன். அனைத்தின் ஆன்மாவான அவன், தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் நன்மைக்காகவும், உலகங்கள் அனைத்தின் செழிப்பிற்காகவும், தன்னுடைய பெரும்பணிக்காகவும் பல்வேறு அவதாரங்களை எடுத்தான்.(12-14) பல நற்குணங்களால் நிறைந்த அந்தத் தலைவனின் புனிதமான மற்றும் தெய்வீகமான அவதாரங்களை, அளவைகள் {உதாராபிகள்} மற்றும் பெரும் ஸ்ருதிகளில் பதிவு செய்யப்பட்டவாறே நான் விளக்கிச் சொல்லப் போகிறேன்.(15) ஓ! ஜனமேஜயா, உன்னைத் தூய்மை செய்து கொண்டும், உன் வாக்கைக் கட்டுப்படுத்திக் கொண்டும் அவற்றைக் கேட்பாயாக. புனிதமான இந்த உயர்ந்த புராணம், வேதங்களுக்கு நிகரானதாகும்.(16) விஷ்ணுவின் தெய்வீகக் கதையைச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக. ஓ! பாரதா, அறம் அழியும்போதெல்லாம் அதை நிறுவுவதற்காக அந்தத் தலைவன் அவதரிக்கிறான்.(17)

ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அவன் நல்லியல்பு {சத்வ} குணத்தின் ஒரு வடிவமாக இருந்தான். அந்த வடிவில் அவன் சொர்க்கத்தில் தொடர்ந்து கடுந்தவம் செய்து கொண்டிருந்தான்.(18) அவனது இரண்டாவது வடிவம்[19], உயிரினங்களுக்கு அழிவைக் கொண்டு வருவதற்கான யோகத் துயிலைக் கொண்டதாகும்; இந்த உறக்கத்தில் இருந்து தவறான ஆன்மப் பண்பாடு கொண்ட மனிதர்கள் உண்டாகின்றனர்.(19) ஆயிரம் யுகங்கள் உறங்கிய பிறகு பணிக்காக அவன் மீண்டும் தோன்றுகிறான். ஓராயிரம் யுகங்கள் நிறைவடைந்ததும், தேவர்களுக்குத் தேவனும், பிரம்மனின் பாட்டனும், அண்டத்தின் தலைவனுமான விஷ்ணு தோன்றும்போது, லோகபாலர்கள் அனைவரும், சந்திரன், சூரியன், நெருப்பு {அக்னி}, பிரம்மன், கபிலர், பரமேஷ்டி, தேவர்கள், ஏழு முனிவர்கள் {சப்தரிஷிகள்}, பெருஞ்சிறப்புமிக்கவனும், முக்கண்ணனுமான தேவன், சிவன், பெருங்கடல்கள் மற்றும் மலைகள் ஆகியோர் அனைவரும் அவன் வடிவில் தோன்றுகின்றனர்[20].(20-22)

[19] "இஃது அவனது ராஜசீக வடிவத்தை, அல்லது இருள் குணத்தை {தமோகுணத்தைக்} கொள்ளும் அவனது வடிவத்தைக் குறிப்பிடுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[20] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "ஆயிரம் யுகங்கள் இளைப்பாறலுக்குப் பின் அவன் படைப்பின் பணியை மீண்டும் புதிதாகத் தொடங்குகிறான். பின்னர் அவன் பெரும்பாட்டனான பிரம்மன், திசைகள் மற்றும் துணைத்திசைகளின் தேவர்கள், சந்திரன், சூரியன், நெருப்பு, கபிலர், பரமேஷ்டி, தேவர்கள், ஏழு முனிவர்கள், பெருஞ்சிறப்புமிக்க முக்கண் தேவன் சிவன், காற்று, பெருங்கடல்கள் மற்றும் மலைகளாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறான்" என்றிருக்கிறது.

பெரும் ஸனத்குமாரர், மற்றும் படைப்பின் தந்தையான உயரான்ம மனு ஆகியோரும் (அவனது வடிவில் தோன்றுகின்றனர்). புராதனனும், நெருப்பைப் போன்று பிரகாசிப்பவனுமான அந்தத் தலைவனே அனைத்து வடிவங்களைப் படைத்தான்.(23) பெருஞ்சக்திவாய்ந்த அந்தப் புருஷன் {விஷ்ணு}, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தையும் அழித்த பிறகு, தேவாசுரர்கள், பாம்புகள் மற்றும் ராட்சசர்கள் ஆகியோரையும் அழித்த பிறகு, தடுக்கப்பட முடியாதவர்களான மது மற்றும் கைடபன் ஆகிய இரு தானவர்களையும் பெருங்கடலின் மத்தியில் கொன்று, இறுதி விடுதலைக்கான {முக்திக்கான} வரத்தையும் அவர்களுக்கு அளித்தான்.(24,25)

பழங்காலத்தில், தாமரை உந்தி கொண்ட அந்தத் தலைவன் பெருங்கடலின் நீரில் கிடந்த போது அவனது உந்தியில் இருந்து தேவர்களும், முனிவர்களும் உதித்தனர்.(26) வேதங்கள் மற்றும் ஸ்ருதிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இஃது அந்தத் தலைவனின் தாமரை அவதாரமாகும்.(27) அடுத்ததாக அந்தத் தலைவன் பன்றியாக அவதரித்தது ஸ்ருதிகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேவர்களில் முதன்மையான விஷ்ணு, {யஜ்ஞ வராஹ மூர்த்தி என்றழைக்கப்படும்} ஒரு பன்றியின் வடிவை ஏற்று, பரந்துவிரிந்த பெருங்கடலில் மூழ்கிய பூமாதேவியை, அவளது காடுகள் மற்றும் மலைகளுடன் தன் தந்தத்தின் மூலம் உயர்த்தினான்.(28)

(நான்கு) வேதங்கள் அவனது கால்களாகின, வேள்விப்பீடம் அவனது தந்தமானது, வேதங்கள் அவனது பற்களாகின, ஈமக்குவியல் அவனது வாயானது, நெருப்பே அவனது நாவானது, தர்ப்பங்கள் அவனது உடலின் மயிர்களாகின. பெருந்தவசியான பிரம்மன் அவனது தலையானான், பகல்களும், இரவுகளும் இந்த மூத்த புருஷனின் கண்களாகின, வேதங்களின் பல்வேறு அங்கங்கள், அவனது காதுகளின் ஆபரணங்களாகின, மூதாதையர்கள் {பித்ருக்கள்} அவனது மூக்காகினர், ஸாம வேத ஓதல் அவனது பெருங்குரலானது. அவன் அறமும், வாய்மையுமாக இருந்தான். தவம் அவனது மூக்குத்துளையானது; பயங்கர விலங்குகள் அவனது நகங்களாகின, அவன் நீண்ட கரங்களைக் கொண்டிருந்தான். காற்று அவனது ஆன்மாவாகவும், மந்திரம் அவனது இடையாகவும், புனிதப்படுத்தப்பட்ட சோமச்சாறு அவனது குருதியாகவும், வேள்விப் பீடங்கள் அவனது தோள்களாகவும் இருந்தன. ஹவி அவனது மணமானது, ஹவ்யமும், கவ்யமும் அவனது சக்திகளாகின, பிராக்வம்சவம் அவனது உடலானது. பல்வேறு தீக்ஷை வடிவங்களின் மூலம் புனிதப்படுத்தப்பட்டவனாகவும், பிரகாசமானவனாகவும் அவன் இருந்தான். தக்ஷிணை அல்லது கொடை அவனது இதயமாக இருந்தது. தவசியும், பெரியவனுமான அவன், வேத மந்திரங்களைத் தன் உதடுகளின் ஆபரணமாகக் கொண்டிருந்தான். அறவழியில் நிற்கும் பெரும் வீரர்கள் அவனது ஆபரணங்களாகினர். பல்வேறு அளவைகள் அவனது அசைவாகின. புனித உபநிஷத் அவனது இருக்கையானது. அவனது மனைவியின் தோற்றம் அவனுக்கு உதவியாக இருந்தது[21], அவன் மேரு மலையின் சிகரத்தைப் போல நெடியவனாக இருந்தான். ஆயிரந்தலைகளைக் கொண்ட இந்தப் பரம தேவனே பூமியை மீண்டும் நிறுவியவனாவான்.(29-37) இவ்வாறே பழங்காலத்தில், உயிரினங்களுக்கு நன்மை செய்வதற்காக அந்தத் தலைவன், வேள்விப்பன்றியின் வடிவை ஏற்றுப் பெருங்கடலின் நீரில் இருந்து பூமியை உயர்த்தினான்.(38) இதுவே பன்றி அவதாரமாகும்.

[21] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "மனைவியற்றவர்கள் யாகம் செய்ய முடியாது என்பதால் அவனுடைய நிழலே அவனது மனைவியாக இருந்தது" என்றிருக்கிறது.

இனி, சிங்கமனித {நரசிம்ம} வடிவை ஏற்று ஹிரண்யகசிபுவைக் கொன்ற அவனது அவதாரத்தைக் குறித்துக் கேட்பாயாக.(39) ஓ! மன்னா, புராதனப் பொற்காலத்தில், தைத்தியர்களாகப் பிறந்தவர்களில் முதல்வனும், தேவர்களின் பகைவனுமான ஹிரண்யகசிபு மிகச் சிறந்த தவத்தைச் செய்து வந்தான்.(40) அவன் நீரின் மத்தியில், உறுதியான அமைதி நோன்பை நோற்றபடியே {மௌன விரதம் இருந்தபடியே} பதினோராயிரத்து ஐநூறு {11500} ஆண்டுகளைக் கழித்தான்.(41) ஓ! பாவமற்றவனே, அவனது தற்கட்டுப்பாடு, உள்ளச்சமநிலை, விதிகளைக் கடைப்பிடித்த தவம், பிரம்மச்சரிய நோன்பு ஆகியவற்றில் பிரம்மன் நிறைவடைந்தான்.(42)

அப்போது, ஓ! பெரும் மன்னா {ஜனமேஜயா}, அனைத்தின் தலைவனும், தெய்வீகமானவனும், அனைத்திலும் முதன்மையானவனும், பிரம்மஞானத்தைக் கொண்டவனும், தானே உதித்தவனுமான பிரம்மன், அன்னப்பறவைகளால் இழுக்கப்பட்டதும், சூரியனைப் போன்றதுமான தன்னுடைய பிரகாசமான தேரில், ஆதித்யர்கள், வஸுக்கள், சத்யஸ்கள், மருத்துகள், தேவர்கள், ருத்திரர்கள், விஷ்வர்கள், யக்ஷர்கள், ரக்ஷர்கள், கின்னரர்கள், ஆறுகள், கடல்கள், விண்மீன்கள், முஹூர்த்தங்கள், வானுலாவும் உயிரினங்கள், கோள்கள், தெய்வீக முனிவர்கள், முதுமுனிகளான சித்தர்கள், முனிவரெழுவர் {சப்தரிஷிகள்}, பெரும் அரசமுனிகள் மற்றும் அப்சரஸ்கள் சூழ அவனிடம் வந்தான். அவன் அந்தத் தைத்தியனிடம் {ஹிரண்யகசிபுவிடம்}, "ஓ! உறுதியான நோன்புகளைக் கொண்டவனே, நீ என் சீடனாவாய். நான் உன் தவத்தில் நிறைவடைந்தேன். ஒரு வரத்தை வேண்டுவாயாக; நீ விரும்பிய பொருட்களை அடைவாயாக; உனக்கு நன்மை விளையட்டும்" என்றான் {பிரம்மன்}.(43-48)

ஹிரண்யகசிபு {பிரம்மனிடம்}, "ஓ! பெரும்பாட்டனே, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள், மனிதர்கள், பிசாசங்கள் ஆகியோர் எவ்வழிமுறையினாலும் என்னைக் கொல்ல முடியாத வகையிலும், முனிவர்கள் கோபமடையும்போதும் என்னைச் சபிக்க முடியாத வகையிலும், ஆயுதங்கள், மலைகள், மரங்கள், உலர்ந்த அல்லது ஈரமான பொருட்கள், அல்லது எந்தப் பொருட்களாலும் என்னை அழிக்க முடியாத வகையிலுமான வரத்தை நான் வேண்டுகிறேன். பணியாட்களையும், படைகளையும் கொண்டிருந்தாலும், தன் கரங்களின் வீச்சாலேயே என்னைக் கொல்ல இயன்ற ஒருவன் மட்டுமே என்னை அழிப்பவனாக இருக்கட்டும். நானே, சந்திரனாகவும், சூரியனாகவும், காற்றாகவும், நெருப்பாகவும், ஆகாயமாகவும், விண்மீன்களாகவும், பத்துத் திசைகளாகவும், ஆசையாகவும், கோபமாகவும், வருணனாகவும், வாசவனாகவும், யமனாகவும், வளங்கள் மற்றும் யக்ஷர்களின் தலைவனாகவும், கிம்புருஷர்களின் மன்னனாகவும் இருக்க வேண்டும்" என்று கேட்டான்.(49-54)

ஓ! பேரரசே, தைத்தியர்களின் மன்னனால் {ஹிரண்யகசிபுவால்} இவ்வாறு சொல்லப்பட்டது, தானே உதித்த அந்தத் தேவன் {பிரம்மன்}, புன்னகைத்தவாறே, "ஓ! குழந்தாய், பேரற்புதமானவையும், தெய்வீகமானவையுமான இந்த வரங்களை நான் உனக்குக் கொடுக்கிறேன். விரும்பும் பொருட்கள் அனைத்தையும் நிச்சயம் நீ அடைவாய்" என்றான்.(55,56)

இதைச் சொன்னவனும், தெய்வீகமானவனுமான பெரும்பாட்டன் {பிரம்மன்}, பிராமண முனிவர்கள் இருக்கும் தன் வசிப்பிடமான வைராஜத்திற்கு வானுலகின் வழியே சென்றான். தேவர்களில் முதன்மையானவனும், நீரில் உதித்தவனுமான அந்தத் தேவன் {பிரம்மன்}, தைத்திய மன்னன் ஹிரண்யகசிபுவுக்கு இந்தத் தெய்வீக வரம் கொடுத்ததைக் கேட்ட இந்திரன் தலைமையிலான தேவர்கள், இது குறித்து அந்தப் படைப்பாளனிடம் {பிரம்மனிடம்} கேட்டனர். தேவர்கள், நாகர்கள், கந்தர்வர்கள் மற்றும் முனிவர்கள் ஆகியோர் வரங்கள் கொடுக்கப்பட்டதைக் கேட்டுப் பெரும்பாட்டனின் முன்பு தோன்றினர்.(57-59)

தேவர்கள் {பிரம்மனிடம்}, "ஓ! தலைவா, இந்த வரத்தின் மூலம் அந்த அசுரன் எங்களை ஒடுக்கப் போகிறான். அமைதியடைந்து, அவனுடைய அழிவுக்கான வழிவகையைச் செய்வீராக" என்றனர்.(60)

அனைத்தையும் அறிந்தவனும், தானே உதித்த தேவும், ஹவி, கவ்யம் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவனும், புலப்படாதவனும், அழிவற்றவனும், தலைவனுமான அந்தப் பிரஜாபதி {பிரம்மன்}, அனைவருக்கும் நன்மையைத் தரும் அந்தச் சொற்களைக் கேட்டான். (61,62) {பிரம்மன்}, "அவன், தன்னுடைய தவத்தின் பலன்களை நிச்சயம் அடைய வேண்டும். அவன் அவற்றை அனுபவித்ததும், தலைவன் விஷ்ணு அவனைக் கொல்வான்" என்றான். தாமரையில் உதித்த தேவனிடம் இருந்து அந்தச் சொற்களைக் கேட்ட தேவர்கள் அனைவரும், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக, தங்கள் தங்களுக்குரிய தெய்வீக வசிப்பிடங்களுக்குச் சென்றனர்.(63,64)

தைத்தியன் ஹரிண்யகசிபு, வரத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே செருக்கு நிறைந்தவனாக உயிரினங்கள் அனைத்தையும் ஒடுக்கத் தொடங்கினான்.(65) அவன் முதலில், ஆசிரமங்களில் உறுதியான நோன்புகளுடன் வாழ்ந்து வந்தவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்கும், வாய்மை நிறைந்தவர்களுமான பெரும் முனிவர்களை ஒடுக்கும் பணியைச் செய்தான்.(66) தைத்தியனான ஹிரண்யகசிபு, மூவுலகங்களின் தேவர்கள் அனைவரையும் வீழ்த்தி அவர்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தேவலோகத்திலேயே வாழ்ந்து வந்தான்.(67) செருக்கால் நிறைந்திருந்த அவன் தேவலோகத்தில் வாழ்ந்தவரை, தேவர்களால் வேள்விக் காணிக்கைகளை ஏற்க முடியவில்லை; அவை தைத்தியர்களின் உரிமையாகின.(68)

ஆதித்யர்கள், விஷ்வர்கள், வஸுக்கள் ஆகியோர், பெருஞ்சக்தி கொண்ட நாராயணனும், பாதுகாப்பின் தலைவனும், தேவர்கள் மற்றும் வேள்விகளோடு அடையாளங்காணப்படும் பிரம்மமும், பிராமணர்களின் தலைமைத் தேவனும், நித்தியமானவனும், நிகழ், கடந்த மற்றும் எதிர் காலங்களாக இருப்பவனும், உலகங்கள் அனைத்தாலும் துதிக்கப்படுபவனும், அனைத்தையும் அறிந்தவனுமான விஷ்ணுவின் புகலிடத்தை நாடினார்கள்.(69,70) தேவர்கள், "ஓ! தேவர்களின் மன்னா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, ஹிரண்யகசிபுவிடம் கொண்ட அச்சத்தில் இருந்து எங்களைக் காப்பாயாக. எங்கள் அனைவருக்கும், பிரம்மனுக்கும், பிறருக்கும் பரமத் தலைவன் நீயே. பெருந்தேவனும், பேராசானும் நீயே. ஓ! முற்றுமலர்ந்த தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்டவனே, ஓ! பகைவரை அழிப்பவனே, அசுரர்களின் அழிவைக் கொண்டு வருவதற்கு எங்களுக்கு உதவிபுரிவாயாக" என்று கேட்டனர்.(71,72)

விஷ்ணு, "ஓ! இறப்பற்றவர்களே, உங்கள் அச்சத்தைக் கைவிடுவீராக. பாதுகாப்பை உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஓ! தேவர்களே, முன்பைப் போலவே எந்த நேரத்திலும் நீங்கள் தேவலோகத்தை அடைவீர்கள். செருக்கால் நிறைந்தவனும், இறப்பற்றவர்களாலும் கொல்லப்பட முடியாதவனுமான இந்தத் தானவர்களின் மன்னனை நான் கொல்வேன்" என்றான்".(73,74)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தலைவனான ஹரி, இதைச் சொல்லிவிட்டு, தேவர்களின் மன்னன் மற்றும் பிறரின் துணையை விட்டகன்று, பாதிச் சிங்கம், மற்றும் பாதி மனிதனைக் கொண்ட வடிவை ஏற்றான். சிங்கமனிதனின் வடிவில் இருந்த ஹரி, தன் உள்ளங்கைகளைப் பிசைந்தபடியே, ஹிரண்யகசிபுவின் சபைக்குச் சென்றான்.(75,76) அவனுடைய நிறம் மேகம் போன்றதாகவும், அவனது குரல் அதன் முழக்கத்தைப் போன்றும் இருந்தது. அவன் மேகம் போன்ற பிரகாசத்தையும், திரள்களையும் கொண்டிருந்தான்.(77) பிறகு அவன், புலியைப் போன்ற ஆற்றலைக் கொண்டவனும், வலிமைமிக்கத் தைத்தியர்களால் பாதுகாக்கப்பட்டவனும், பெரும் சக்தி கொண்டவனும், செருக்குமிக்கவனுமான அந்தத் தைத்தியனைத் தன் கைகளாலேயே கொன்றான்.(78) இதுவே சிங்கமனித {நரசிங்க} அவதாரமாகும். அடுத்தது குள்ள {வாமன} அவதாரமாகும். பெருஞ்சக்திமிக்க விஷ்ணு, பழங்காலத்தில் தைத்தியர்களுக்கு அழிவைத் தரும் இந்த வடிவை ஏற்று, பலியின் வேள்வியில் இருந்த அசுரர்களைத் தன்னுடைய மூன்று காலடிகளால் திகைக்கச் செய்தான்.(79,80)

விப்ரசித்தி, சிபி, சங்குரயன், சங்கு, அயசிரன், சங்குசிரன், பெருஞ்சக்திமிக்க ஹயக்ரீவன், கடுமை நிறைந்த கேதுமான், உக்ரன், ஸோக்ரன், வியக்ரன், மஹாஸுரன், புஷ்கரன், புஷ்கலன், ஷியோஸ்ப்யன், அஸ்வபதி, பிரஹ்லாதன், அஸ்வசிரன், கும்பன், ஸம்ஹ்ராதன், ககனப்ரியன், அமிஹ்ராதன், ஹரி, ஹரன், வராஹன், சங்கரன், ருஜன், சரபன், சலபன், குபனன், கோபனன், கிரதன், பிருஹத்கீர்த்தி, மஹாஜிஹ்வன், சங்குகர்ணன், மஹாஸ்வனன், தீர்க்கஜிஹ்வன், அர்கநயனன், மிருதுசாபன், மிருதுப்ரியன், வாயு, கரிஷ்டன் {யவிஷ்டன்}, நமுசி, சம்பரன், விஜ்வரமஹான், சந்த்ரஹந்தன், குரோதஹந்தன், குரோதவர்த்தனன், காலகன், காலகேயன், விருத்ரன், குரோதன், விரோசனன், கரிஷ்டன், வரிஷ்டன், பிரலம்பன், நரகன், இந்த்ரதாபனன், வாதாபி, பலதர்ப்பிதன், கேதுமான், அஸிலோமன், புலோமன், வாஷ்கலன் {வாக்கலஹன்}, பிரமதன், மதன், வைஷிகன் {ஸுவஸ்ருமன்}, காலவதனன், கராலன், கைசிகன், சரன், ஏகாக்ஷன், சந்த்ரஹா, ராஹு, ஸம்ஹாராஷ்வன், மஹிஷ்வன், சதாக்னீ, சக்ரஹஸ்தன், பரிகபாணி, அஷ்மன் மற்றும் பிண்டிபாலனுடன் கூடியவர்களும், கைகளில் ஆயுதங்களுடன் கூடியவர்களுமான அசுரர்கள், கதாயுதம், முத்கலம் மற்றும் பரஷ்வ ஆயுதம் கொண்டவர்கள், கதாயுதங்கள், தண்டாயுதங்கள், பரிகங்கள் மற்றும் வேறு ஆயுதங்களைக் கொண்டவர்கள், அதிபயங்கர வடிவங்களைக் கொண்டவர்கள், ஆமை மற்றும் கோழியின் வடிவங்களை ஏற்றவர்கள், முயல்கள், கழுதைகள், ஒட்டகங்கள், பன்றிகள், பயங்கர மகரங்கள், ஓநாய்கள், எலிகள், தவளைகள், சிறுத்தைகள், பூனைகள், யானைகள், முதலைகள், ஆடுகள், காட்டுப்பன்றிகள், பசுக்கள், எருமைகள், கோதங்கள், மான்களைப் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், கருடனையும், வாள்களையும், மயில்களையும் போன்ற முகங்களைக் கொண்டவர்கள், யானைத் தோலாலான கவசங்களை அணிந்தவர்கள், உடும்பு தோலணிந்தவர்கள், மரவுரியணிந்த சிலர், தலைப்பாகைகள், மகுடங்கள் அணிந்தவர்கள், அசுர காதுகுண்டலங்களை அணிந்தவர்கள், கிரிடிங்களை அணிந்தவர்கள், நீண்ட குடுமிகளைக் கொண்டவர்கள், சங்கு போன்ற கழுத்தைக் கொண்டவர்கள் எனப் பல்வேறு உடைகளை அணிந்தவர்களும், பல்வேறு வகை மாலைகளால் தங்களை அலங்கரித்துக் கொண்டவர்களுமான எண்ணற்ற தைத்தியர்கள், எரியும் ஆயுதங்களை எடுத்து கொண்டு பெருஞ்சக்திமிக்க ரிஷிகேசனை {ஹ்ருஷீகேசனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்தனர்.(81-98) {அந்தந்த சந்தர்ப்பங்களில்} மிகப் பயங்கர வடிவத்தை ஏற்ற அந்தத் தலைவன், தன் கைகளாலும், கால்களாலும் அந்த அசுரர்களைக் கலங்கடித்து, அவர்களிடம் இருந்து பூமியை உடனே விடுவித்தான்.(99) அவன் தன் காலடியை பூமியில் வைத்தபோது, சூரியனும் சந்திரனும் அவனது மார்பில் இருந்தன, அவன் தன் காலடியை வானில் வைத்தபோது, அவை அவனது உந்தியில் கிடந்தன.(100) அவன் (இவை அனைத்தையுவிடச்) சிறந்த இடத்தில் தன் காலை வைத்தபோது, அவை அந்தப் பெருஞ்சக்திகொண்ட விஷ்ணுவின் கால்முட்டிகளில் கிடந்தன. இருபிறப்பாளர்களால் இது சொல்லப்பட்டிருக்கிறது.(101) தேவர்கள் அனைவரிலும் முதன்மையான தலைவன் விஷ்ணு, முன்னணி அசுரர்கள் அனைவரையும் கொன்று, பூமியைக் காத்து, தெய்வீக அரசைத் தேவர்களின் மன்னனிடம் கொடுத்தான்.(102) இவ்வாறே நான் பெரும் விஷ்ணுவின் குள்ள {வாமன} அவதாரத்தைச் சொன்னேன். வேதங்களை நன்கறிந்த பிராமணர்கள், விஷ்ணுவின் மகிமையென அதை விளக்குகின்றனர்.(103)

அனைத்தின் ஆன்மாவாக இருக்கும் பெரும் விஷ்ணு, அடுத்ததாகப் பெரும் பொறுமைவாய்ந்த தத்தாத்ரேயராக அவதரித்தான். தேவர்கள் மறைந்து, அறப்படைப்புகள், வேள்விகள், நான்கு வர்ணங்கள் ஆகியவற்றுக்கு அழிவு நேர்ந்து, வாய்மை தொலைந்து, பொய்மை செழித்து, உயிரினங்களுக்கும், அறத்திற்கும் அழிவு நேர இருந்தபோது, அந்தத் தலைவன், நான்கு வேதங்களையும், வேள்விகளையும், நான்கு வர்ணங்களையும் மீண்டும் நிறுவினான்.(104-107) வரம் தருபவரும், நுண்ணறிவுமிக்கவருமான தத்தாத்ரேயர், ஹைஹய மன்னன் கார்த்தவீரியனுக்கு ஒரு வரத்தை அளித்து, "ஓ! மன்னா {கார்த்தவீர்யார்ஜுனா}, உன்னுடைய இந்தக் கரங்கள் இரண்டும் என் வரத்தின் சக்தியால் ஆயிரமாகும். ஓ! பூமியின் தலைவா, நீ அறம் அறிந்தவனாக இருந்து மொத்த பூமியையும் ஆள்வாய். உன் பகைவர்களால் உன்னைக் காணவும் இயலாது" என்றார்.(108-110). ஓ! பகைவரைக் கொல்பவனே, ஓ! பேரரசே {ஜனமேஜயா}, பேரற்புதம் நிறைந்ததும், மங்கலமானதுமான விஷ்ணுவின் அந்த அவதாரத்தை நான் கேட்டது போலவே உனக்குச் சொன்னேன்.(111)

இந்த அவதாரத்தில் ராமர் {பரசுராமர்}, அர்ஜுனனின் {கார்த்தவீர்யார்ஜுனனின்} ஆயிரங்கரங்களைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்திருந்ததும், தடுக்கப்படமுடியாததுமான அவனது படைக்கு மத்தியில் வைத்து அவனைப் போரிட்டுக் கொன்றான்.(112) பிருகுவின் மகனான ராமர் {பரசுராமர்}, மன்னன் அர்ஜுனனை, அவனுடைய தேரில் இருந்து பூமிக்கு இழுத்து வந்து, உற்றார் உறவினருடன் சேர்ந்து கொண்டு மேகம் போல முழங்கிக் கொண்டிருந்த அந்த மன்னனைத் தாக்கி, தன் வாளால் அவனது ஆயிரங்கரங்களையும் துண்டித்தார்.(113,114) மேரு மற்றும் மந்தர மலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த பூமியில் கோடிக்கணக்கான க்ஷத்திரியர்கள் இருந்தனர். அவர் {பரசுராமர்}, பூமியை இருபத்தோரு முறை க்ஷத்திரியர்களற்றதாகச் செய்தார்.(115) பிருகுவின் மகனும், பெருந்தவசியுமானவர் {பரசுராமர்}, தம் பாவங்கள் அனைத்தையும் தணிப்பதற்காக ஒரு குதிரை வேள்வியைச் செய்தார்.(116) பிருகுவின் மகன் {பரசுராமர்}, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய அந்த வேள்வியால் பெரும் மகிழ்ச்சியடைந்து, மரீசியின் மகனான காசியபருக்குப் பூமிக்கொடை அளித்தார்.(117) பெருந்தயாளரும், தேர்வீரர்களில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவருமான ராமர் {பரசுராமர்}, அந்த வேள்வியில் வேகமாகச் செல்லும் குதிரைகள், தேர்கள், அளவற்ற தங்கம், பசுக்கள் மற்றும் யானைகளைக் கொடையளித்தார்.(118) தேவனைப் போன்ற பிரகாசமுடைய அந்தப் பிருகுவின் மகன் {பரசுராமர்}, மிகச் சிறந்த மலையான மஹேந்திர மலையில் வாழ்ந்து கொண்டு, இப்போதும் கடுந்தவங்களைச் செய்து வருகிறார்.(119) இது, பெரியவனும், நுண்ணறிவுமிக்கவனும், தேவர்களில் முதன்மையானவனும், மார்பில் ஸ்ரீவத்ஸத்தின் மறைமெய்க்குறியை மார்பில் தாங்குபவனுமான விஷ்ணுவின் ஜாமதக்னேய அவதாரமாகும்.(120)

வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், தலைவனுமான ஈஷ்வரன், இருபத்துநான்காம் யுகத்தில், தனக்கு முன்பு விஷ்வாமித்ரரை அனுப்பி, தன்னையே நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, மன்னன் தசரதனின் மகனான ராமன் என்று இவ்வுலகில் கொண்டாடப்பட்டான். தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்டிருந்த அவன், சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் இருந்தான்.(121,122) பெருஞ்சிறப்புமிக்க அந்தத் தலைவன் {விஷ்ணு}, உலகை ஆதரிப்பதற்காகவும், ராட்சசர்களை அழிப்பதற்காகவும், அறத்தை வளர்ப்பதற்காகவும் இவ்வாறு பிறந்தான்[22].(123) முனிவர்கள், மனிதர்களின் மன்னனான அவனை {ராமனை}, பூதங்களின் தலைவர்களுடைய உடலாக நியமித்தனர். தேவர்களாலேயே தடுக்கப்பட முடியாதவர்களும், தற்கட்டுப்பாட்டுடன் கூடிய தவசிகளின் வேள்விகளைத் தடுத்தவர்களுமான தேவர்களின் பகைவரை அழிப்பதற்காக விஷ்வாமித்ரர், அந்த நுண்ணறிவுமிக்கவனுக்கு {ராமனுக்குப்} பல்வேறு ஆயுதங்களின் பயன்பாடு குறித்துக் கற்பித்தார். வலுவானவர்களில் முதன்மையான அந்த உயரான்மா (இளவரசன் {ராமன்}), அவர்களின் {தேவர்களின்} சார்பாக மாரீசன் மற்றும் ஸுபாஹு என்ற இரண்டு ராட்சசர்களைக் கொன்றான்.(124-126)

[22] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமனனின் இந்தக் கதையை ஏகவன்யம் என்றழைக்கப்படும் ஒரே வீச்சில் சொல்ல வேண்டும். எனினும், படிக்கும் வசதிக்காக இங்கே இது பிரித்தே சொல்லப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.

முன்பொரு சமயம், உயரான்ம ஜனகனின் வேள்வியில் அவன் {ராமன்} விளையாட்டு போல ஹரனின் வில்லை எளிதாக எடுத்தான்.(127) ராகவன் {ராமன்}, லக்ஷ்மணனின் துணையுடன் பதினான் ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தான். அவன் அறத்தின் வடிவங்கள் அனைத்தையும் அறிந்து, எப்போதும் அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டவாறே பதினான்கு ஆண்டுகள் தவம் செய்தான்.(128) உலகில் நன்கறியப்பட்ட அழகிய சீதை, எப்போதும் அவனது அருகிலேயே இருந்தாள். முன்பு லக்ஷ்மியாக அறியப்பட்ட அவள் தன் கணவனைப் பின்தொடர்ந்து வந்தாள்.(129) அவன் ஜனஸ்தானத்தில் வாழ்ந்தபடியே தேவர்களின் பணியை நிறைவேற்றினான். ராகவன் பதினான்காண்டுகள் இந்தக் கடுந்தவங்களைப் பயின்றான். லக்ஷ்மணன், சீதையின் பாதச்சுவடுகளைப் பின்பற்றியபடியே அவனது பணியாளாக அங்கே இருந்தான்.(130) விராதன் மற்றும் கபந்தன் என்ற இரண்டு ராட்சசர்கள் பயங்கரமான ஆற்றலைக் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு கந்தர்வனின் சாபத்தால் அவர்கள் அவ்வாறு இருந்தனர். ராமன், நெருப்பைப் போல எரிபவையும், சூரியன் அல்லது மின்னலின் கதிர்களைப் போன்றவையும், இந்திரனின் வஜ்ரத்தைப் போன்று வலுவானவையும், பொன்மயமான இறகுகளைக் கொண்டவையுமான கணைகளை ஏவி அவ்விருவரையும் கொன்றான்.(131,132) பெருஞ்சக்தி கொண்ட ராமன், சுக்ரீவனின் சார்பில் மன்னன் வாலியுடன் போரிட்டு, சுக்ரீவனை அரியணையில் அமர்த்தினான்.(133)

தேவர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், பிசாசங்கள் ஆகியோரும் ராவணனைக் கொல்ல இயலாதவர்களாக இருந்தனர். அவன் போர்க்களத்தில் எவனாலும் வீழ்த்த இயலாதக் கடினமானவனாக இருந்தான். செவ்வஞ்சனக் குவியலின் நிறத்தில் இருந்த ராவணன், லட்சக்கணக்கான ராட்சசர்களைத் தன் பாதுகாவலர்களாகக் கொண்டிருந்தான். மூவுலகங்களையும் அவன் அச்சுறுத்திக் கொண்டிருந்தான். அவன், வெல்லப்பட முடியாதவனாகவும், தடுக்கப்பட முடியாதவனாகவும், செருக்கும், சக்தியும் நிறைந்த ஒரு புலியைப் போன்றவனாகவும் இருந்தான். தேவர்களால் அவனைக் காணவும் இயலவில்லை. அவன் கொண்டிருந்த வரத்தால் அவன் செருக்கில் நிறைந்திருந்தான். ராமன், தன் அமைச்சர்களின் துணையுடன் கூடியவனும், பெருஞ்சக்திவாய்ந்தவனும், பேருடல் படைத்தவனும், பெரும் மேகத்திற்கு ஒப்பானவனும், ராட்சசர்களின் மன்னனுமான ராவணனை, அவனது படையுடன் சேர்த்துப் போரில் கொன்றான்.(134-137)

பழங்காலத்தில் ராமன், தம்பிகள், அமைச்சர்கள் மற்றும் படையுடன் கூடியவனும், நிச்சயமான தீயவனும், பெருங்கொடுமை செய்து வந்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், புலஸ்தியரின் மகனுமான ராவணனைக் கொன்றான். மதுவின் மகனும், (தான் பெற்ற) வரத்தினால் செருக்கில் நிறைந்திருந்தவனும், போரில் திறன்மிக்கவனும், வீரத் தானவனுமான பேரசுரன் லவணன், மதுவனத்தில் நடந்த போரில் ராமனால் கொல்லப்பட்டான். வேறு ராட்சசர்களும் அவனால் கொல்லப்பட்டனர்.(138-140) அறவோரில் முதன்மையான ராமன், இந்த அருஞ்செயல்களைச் செய்து, பத்து குதிரை வேள்விகள் செய்வதற்கான பொருட்களைத் தொடர்ந்து திரட்டினான்.(141)

ராமனின் ஆட்சிக்காலத்தில், மங்கலமற்ற ஓரொலியும் கேட்கப்படவில்லை, பகைக்காற்றுகள் ஒருபோதும் வீசியதில்லை, எவரும் தங்களுடைமையை இழந்தாரில்லை.(142) விதவைகள் யாரும் புலம்பியழவில்லை, எவரும் தீப்பேற்றில் உழலவில்லை, ராமனின் ஆட்சியில் மொத்த உலகமும்[23] அமைதியாக இருந்தது.(143) நீர் மற்றும் காற்றுத் தடைகளால் உயிரினங்களுக்கு அச்சமேற்பட வில்லை, சிறுவர்களுக்கு ஈமச்சடங்குகளைச் செய்யும் நிலை முதியவர்களுக்கு ஏற்படவில்லை. க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்குத் தொண்டாற்றினர்., வைசியர்கள் க்ஷத்திரியர்களைப் பின்பற்றினர், சூத்திரர்கள் செருக்கற்றவர்களாக மேன்மையான மூன்று வர்ணங்களுக்கும் தொண்டாற்றினர். பெண்கள் ஒருபோதும் தங்கள் கணவர்களை அவமதிக்கவில்லை, கணவர்களும் ஒருபோதும் தங்கள் மனைவிகளைத் தவறாக நடத்தவில்லை. மொத்த உலகமும் அமைதியாகவும், கள்வர்களிடம் இருந்து விடுபட்டதாகவும் இருந்தது. ராமன் மட்டுமே தலைவனாகவும், அனைவரையும் பாதுகாப்பவனாகவும் இருந்தான்.(145,146) ராமனின் ஆட்சியில் மக்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர், ஆயிரம் மகன்களைக் கொண்டிருந்தனர், எந்த உயிரினமும் எந்த நோயாலும் துன்புறாதிருந்தன.(147) ராமனின் ஆட்சியில் தேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் உலகில் ஒன்றாகத் திரண்டிருந்தனர்.(148)

[23] "உலகம் என்ற சொல்லின் மூலம் வட மற்றும் தென்னிந்தியா, மேலும் மிகத் தொலைவில் இருந்த சிலோனை {இலங்கையையும்} சேர்த்து இருந்த மொத்த நிலத்தையே ஆசிரியர் பொருள் கொள்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. சம்ஸ்க்ருதப் படைப்புகளில், உலகம் என்ற சொல் மொத்த இந்தியாவையும் குறிப்பிடுவதற்காகப் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதை அடிக்கடி காணலாம்.

புராணங்களை நன்கறிந்தவர்களும், உண்மைகள் அனைத்தின் பிறப்பிடமாக ராமனைக் கருதுபவர்களுமான மனிதர்கள், அந்த நுண்ணறிவு மிக்கவனின் பெருமையைக் குறித்து இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றனர்.(149) "அயோத்யையின் மன்னன் ராமன், பச்சை நிறத்தையும், கருங்கண்களையும், அமுதம் போன்ற இனிய பேச்சையும், ஒளிரும் முகத்தையும், முட்டி வரை நீண்ட கரங்களையும், அழகான முகத் தோற்றத்தையும், சிங்கம் போன்ற தோள்களையும் கொண்டிருந்தான். அவன் பதினோராயிரம் {11,000} ஆண்டுகள் ஆட்சி செய்தான். அந்த உயரான்ம மன்னனின் நாட்டில் ரிக், யஜுர், சாம வேதங்கள் ஓதப்படும் ஒலிகளும், விற்களின் நாணொலிகளும், "கொடையளிப்பீர், உண்பீர்" என்ற பேச்சொலிகளும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன" {என்பது அந்தப் பாடல்}.(150-152) சுறுசுறுப்பு மிக்கவனும், தசரதனின் மகனும், சாதனையாளனும், சுயப் பிரகாசத்தால் ஒளிர்ந்தவனுமான ராமன், தன் காந்தியில் சூரியனையும் கடந்திருந்தான்.(153) பெருஞ்சக்திவாய்ந்த ராகவன், நூற்றுக்கணக்கான புனித வேள்விகளைச் சரியாகச் செய்து, மிகச் சிறந்த கொடைகளை அளித்து, அயோத்யையை விட்டு தேவலோகத்துக்குச்  சென்றான்.(154) அனைத்தையும் அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலுமான ராமன், ராவணனுக்கும், அவனுடைய உற்றார் உறவினர் அனைவருக்கும் இவ்வாறு அழிவைக் கொண்டு வந்து, தேவர்களின் உலகுக்குத் திரும்பச் சென்றான்".(155)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மாதுர கல்பத்தில், மனித குலத்தின் நன்மைக்காக உயரான்ம கேசவன், நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கும் {கிருஷ்ண} அவதாரத்தை எடுத்தான்.(156) இந்த அவதாரத்தில், அந்தப் பலமிக்கத் தலைவன் {கிருஷ்ணன்}, சால்வன், மைந்தன், துவிவிதன், கம்சன், அரிஷ்டன், விருஷபன், கேசி, தைத்தியதாரியான பூதனை, யானையான குவலயப்பீடன், சாணூரன், முஷ்டி ஆகியோரையும், மனித வடிவில் இருந்த இன்னும் பிற தைத்தியர்களையும் கொன்றான்.(157,158) அற்புதச் செயல்களைச் செய்பவனான அவனால் பானனின் ஆயிரம் கைகள் துண்டிக்கப்படன. அசுரன் நரகனும், பெருஞ்சக்தி கொண்ட யவனனும் {காலயவனனும்} போரில் அவனால் கொல்லப்பட்டனர்.(159) {மேற்கண்ட} மன்னர்களின் ரத்தினங்கள் அனைத்தையும் பலவந்தமாக அவன் அபகரித்தான். பூமியில் இருந்த தீய மன்னர்கள் அனைவரும் அவனால் கொல்லப்பட்டனர்[24].(160) தலைவன் விஷ்ணு, பதினெட்டாவது {தே.ரா.ஹ.ரா. பதிப்பில் இருபத்தெட்டாவது} மஹாயுகத்தில் அடங்கிய துவாபர யுகத்தில் ஒன்பதாவது அவதாரம் முடிந்த பிறகு, ஜாதுகர்னரை முன்பே அனுப்பி வைத்து, வேத வியாசராகத்[25] தன் பிறப்பை அடைந்தான்.(161) ஒன்றாக இருந்த வேதம், அந்த உயரான்மாவால் நான்காகப் பிரிக்கப்பட்டது. ஸத்யவதியின்[26] மகனான இந்த வியாசரே, பாரதர்களின் குலத்தைப் பெருகச் செய்தார்[27].(162)

[24] பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவன், நரகனையும், பெரும்பலம் கொண்ட யவனனையும் போரில் கொன்றான். தீய நடத்தை கொண்டவன் {நரகன்}, தன் சக்தியை பூமியில் வெளிப்படுத்தி, மன்னர்களின் வளங்கள் அனைத்தையும் கைப்பற்றி மன்னர்கள் பலரைக் கொன்றான். உலகங்களின் நன்மைக்காக இவ்வழியில் அந்தப் பேரான்மா அவதரித்தான்" என்றிருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், மன்னர்களின் வளம் அபகரிப்பு என்ற செய்தி காணப்படவில்லை. மூலத்தில் இந்த ஸ்லோகம், "ஹ்ருயிதானி ச² மஹீ-பானாம் ஸர்வ-ரத்னானி தேஜஸா | து³ராசா²ரா꞉ ச² நிஹதா꞉ பார்தி²வா꞉ ச² மஹீதலே" என்றிருக்கிறது. ஸம்ஸ்க்ருத அறிஞர்களின் துணை கொண்டு, மூலத்தில் இருந்து சொல்பிரித்து இதில் பொருள் கொள்ள வேண்டும்.

[25] "வேதங்கள், நமது இறையியலின் தொடக்ககாலப் படைப்புகளாகும். அவை முன்பே இருந்த வேதங்களின் விதிக்கு இணக்கமாக நடைபெற்ற படைப்போடு இணைந்திருந்தன என்பது மரபாகும். எனினும் அவை சிதறின; அவை தொலைந்து போனதாகச் சில புராணங்கள் சொல்கின்றன; பல வருடங்கள் கழித்து அவற்றை ஒரு முனிவர் தொகுத்து, நாம் இன்று அறியும் வடிவை அவற்றுக்குக் கொடுத்தார். அவை ரிக், யுஜுஸ், சாமன், அதர்வண் என்பனவாகும். அடிப்படையில் வளமானவர்களிடம் இருந்து பாராட்டைப் பெறும் ரிக்வேதம், துதிகள் துதிக்கப்படும்போதும், அதிதேவதைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் பாடல்களைப் பாடும்போதும் விதிப்படி படிப்பதற்குரியதாகும்; யஜுஸ், முக்கியமாகப் பலியுணவுகள் மற்றும் வேள்விகள் தொடர்புடையதாகும், மேலும் சந்திரனின் மாற்றங்களுக்கு ஏற்ப முழுமையாகச் செய்யப்படும் குறிப்பிட்ட சில சடங்குகள் தொடர்பான துதிகளும், பித்ருக்களின் பலியுணவுக்கான விதிமுறைகளும் அதில் அடங்கும்; சாம வேதம், மெல்லிசையுடன் பாடக்கூடிய பாடல்வரிகளைக் கொண்டதாகும்; பின்னர் வந்ததாகக் கருதப்படும் அதர்வ வேதம், பாடல்களையும் மந்திரங்களையும் கொண்டதாகும், அதிலும் பெரும்பகுதி பகைவரை அழிக்கும் நோக்கத்திற்குப் பயன்படும் மந்திரங்களைக் கொண்டதாகும். இந்தத் தொகுப்பே அதன் ஆசிரியருக்கு, வியாசர் அல்லது தொகுப்பாளர் என்ற பெயரைப் பெற்றுத் தந்தது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[26] "ஸத்யவதி, மீனின் வடிவில் இருந்த ஓர் அப்சரஸின் மகளாவாள். அவள் ஒரு மீனவனிடம் கொடுக்கப்பட்டாள். பாரசரர் என்ற பெயரைக் கொண்ட ஒரு முனிவர், அவளைக் கண்டதும் காமவயப்பட்டார். அவர் அவளை அறிந்தார், அவளும் காலத்தில் யமுனையில் இருந்த ஒரு தீவில் ஒரு மகனைப் பெற்றாள். இந்த மகனே வியாசராவார். மஹாபாரதம், ஆதிபர்வம் பகுதி 63ல் காண்க" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[27] தேசிராஜு ஹனுந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது வைதீகம் என்பதால் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்த அவதாரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இங்கே விடுபட்டிருக்கும் {மத்ஸ்ய மற்றும் கூர்ம அவதாரங்களைச் சேர்த்துக் கொண்டு} தசாவதாரங்களில் தத்தாத்ரேயரை நீக்கினால், வேதவியாசரை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தசாவதாரத்தில் உள்ள தசம் என்ற சொல் பல என்ற பொருளையும் கொண்டதாகும். வழக்கமாகப் பட்டியலிடப்படும் அவதாரங்களைத் தவிர்த்து, பஸ்மாஸுர வதத்தில் வரும் மோகினி, அமுதம் பகிர்ந்தளிக்கும் அப்சரஸ், கபில முனிவர், ஹயக்ரீவர் என விஷ்ணுவின் பல அவதாரங்கள் இன்னும் அதிகமாக நம்மிடையே இருக்கின்றன" என்றிருக்கிறது.

ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனித குலத்தின் நன்மைக்காக எடுக்கப்பட்ட தலைவனின் இந்த அவதாரங்கள் சொல்லப்பட்டன. இனி எதிர்கால அவதாரங்களைக் குறித்து நான் சொல்லப் போகிறேன்.(163) அந்தத் தலைவன் மீண்டும் மனித குலத்தின் நன்மைக்காகச் சாம்பலம் என்ற கிராமத்தில் விஷ்ணூயஸஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு பிராமணரின் வீட்டில் கல்கியாகத் தோன்றுவான்.(164) அவன், தனது பத்தாம் அவதாரத்திற்குப் பின், தனக்கு முன்பு யாஜ்ஞவல்கியரை அனுப்பி, மாறும் தன்மையுள்ள நிலையற்ற அறிவியலை நம்புகிறவர்களும், தற்காலத்தை எப்போதும் புகழ்ந்து வேள்விகளைப் பழிப்பவர்களுமான புத்தமதத் தொண்டர்களிடம்[28] வாதத்தில் ஈடுபடுவான். அவன் அவர்களை வீழ்த்திய பிறகு, கங்கை மற்றும் யமுனையின் சங்கத்தில் தன் தொண்டர்களுடன் மறைவான். குடும்பங்கள் {குலங்கள்} அனைத்தும் அழிந்து, அமைச்சர்கள் மற்றும் வீரர்களுடன் கூடிய மன்னர்கள் அனைவரும் அழிவடையும்போது, மக்களைக் கவனிக்க எவரும் இருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் உட்பூசலால் கொல்லப்பட்டு, ஒருவனின் வளங்களை மற்றவன் கொள்ளையிடும்போது, துயரால் பீடிக்கப்படும் மக்கள் அழத் தொடங்குவார்கள். இவ்வாறு, கலியுகத்தின் முடிவில் தீப்பேற்றால் பீடிக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும், அந்த யுகத்தோடு சேர்ந்து அழிவைச் சந்திக்கும்.(165-168)

[28] மூலத்தில் புத்த மதம் குறித்த எந்தச் சுட்டும் இருப்பதாகத் தெரியவில்லை. தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பில், "பத்தாம் அவதாரத்திற்குப் பின், விஷ்ணு, மனித குல நன்மைக்காகச் சாம்பலம் என்றழைக்கப்படும் ஒரு தொலைதூரக் கிராமத்தில் விஷ்ணூயஸஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு பிராமணரின் வீட்டில் கல்கியாகத் தோன்றுவான். அதற்கு முன்பு, க்ஷணீகவாதம், பாவ்யஸம்பன்னங்கள் போன்ற பொருள் முதல் வாதங்களையும், நாத்திகக் கோட்பாடுகளை முதன்மையாகக் கொள்ளும் பாஷாண்ட மற்றும் விதண்டா வாதங்களையும் மறுப்பதில் ஈடுபடுவதற்காகவும், அனைத்து வகை வாதங்களுக்கும் மேலாகச் சடங்குகளை மேலோங்கச் செய்வதற்காகவும் யாஜ்ஞவல்கிய முனிவரையும், இன்னும் பல முனிவர்களையும் அவன் அனுப்புவான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் புத்தமதம் குறித்த எந்தச் சுட்டும் இல்லை.

கலியுகம் முடிந்ததும், முறையான வரிசையில் சத்ய யுகம் மீண்டும் தோன்றும். இஃது இயல்பான வரிசையின் விளைவேயன்றி நெறிபிறழ்வேதுமில்லை.(169) இவையும், தேவர்களையும் உடன் கொண்ட இன்னும் பல்வேறு தெய்வீக அவதாரங்களும், பிரம்மஞானத்தை அறிந்த முனிவர்களால் புராணங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.(170) உலகங்கள் அனைத்தையும் ஆளும் தலைவனின் அவதாரங்களைக் குறித்த ஒரு சுருக்கத்தை மட்டுமே நான் சொல்லியிருக்கிறேன். எதைச் சொல்வதன் மூலம் தேவர்களும் மகிழ்ச்சியடைவார்களோ, எதில் ஸ்ருதிகள் மற்றும் புராணங்கள் அனைத்தும் இருக்கின்றனவோ {மேற்கண்ட சுருக்கமான} அதையே நான் சொல்லியிருக்கிறேன்.(171,172) அளவற்ற சக்தி கொண்ட விஷ்ணுவின் அவதாரங்களை எவன் குவிந்த உள்ளங்கைகளுடன் சொல்வானோ, அல்லது எவன் கேட்பானோ, அவனுடைய பித்ருக்கள் மகிழ்ச்சியை அடைகின்றனர். இந்த யோகத் தலைவனின் மாய விளையாட்டுகளை ஒரு மனிதன் கேட்டால், அவன் தான் செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, அந்தத் தலைவனின் தயவால் அறம், செழிப்பு, தவமெனும் செல்வம், மற்றும் பல்வேறு இன்பநுகர் பொருட்களையும் அடைவான்" {என்றார் வைசம்பாயனர்}[29].(173,174)

[29] ஹரிவம்சத்தின் இந்த 41ம் பகுதியில் சுட்டப்படும் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள், 1. தாமரை அவதாரம் (41:19-27), 2. வராகம் (41:28-38), 3. நரசிம்மம் (41:39-79), 4. வாமனன் (41:80-103), 5. தத்தாத்ரேயர் (41:104-111), 6. பரசுராமர் (41:112-120), 7. தசரதராமன் (41:121-155), 8. கிருஷ்ணன் (41:156-160), 9. வியாசர் (41:161-162), 10. கல்கி (41:163-168) என்பனவாகும்.

ஹரிவம்ச பர்வம் பகுதி – 41ல் உள்ள சுலோகங்கள் : 174
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்