Thursday 2 April 2020

சூரிய வம்ச மன்னர்கள் | ஹரிவம்ச பர்வம் பகுதி – 15

(ஆதித்யஸ்ய வம்சானுகீர்த்தனம்)

Dynasty of Solar kings | Harivamsa-Parva-Chapter-15 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : சூரிய வம்ச மன்னர்களின் பட்டியல்...

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாள முனிவரே, எந்த நோன்பின் மூலம் வீரர்களும், பலம்நிறைந்தவர்களுமான ஸகரனின் அறுபதாயிரம் மகன்கள் மகிமையை அடைந்தனர்?" என்று கேட்டான்.(1)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஸகரனுக்கு, தவ நோன்புகளினால் பாவங்கள் எரிக்கப்பட்ட இரு மனைவியர் இருந்தனர். அவர்களில் மூத்தவள் கேசினி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவளும், விதர்ப்ப மன்னனின் மகளுமாவாள்.(2) அவனது இளைய மனைவி {ஈலினி}[1], பூமியில் ஒப்பற்ற அழகியும், அறம்சார்ந்தவளும், அரிஷ்டநேமியின் மகளுமாவாள்.(3) ஓ! மன்னா, ஔர்வர் அவர்களுக்கு அளித்த வரங்களைக் கேட்பாயாக. அவர்களில் ஒருத்தி அறுபதாயிரம் மகன்களைப் பெற வேண்டும் என்றும், மற்றவள் குலத்தைத் தழைக்கச் செய்யும் (ஒரே) ஒரு மகனை மட்டும் தன் இதயத்தில் வேண்ட வேண்டும் என்றும் விரும்பினார். அவர்களில் பேராசை கொண்டவள் வலிமைமிக்கப் பல மகன்களை வேண்டினாள்.(4,5) மற்றவள், குடும்பத் தகைமையைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய ஒரே ஒரு மகனை வேண்டினாள்.

[1] அவளது பெயர் ஈலினி என்று தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில் காணக்கிடைக்கிறது.

அந்தத் தவசி{ஔர்வர்} அவளுக்கு அதே வரத்தை அளித்தார். ஸகரன் கேசினியிடம் அசமஞ்சன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றான்.(6) பெரும்பலம் கொண்ட அந்த மன்னன் பஞ்சஜனன் என்ற பெயரையும் கொண்டிருந்தான். வதந்தியென்ன என்றால் மற்றவள், வித்துகளுடன் கூடிய நீண்ட சுரைக்காயொன்றை பெற்றாள் என்பதாகும். அதற்குள் தானியங்களைப் போல அறுபதாயிரம் கருக்கள் இருந்தன. அவை உரிய நேரத்தில் முறையாக வளர்ந்தன.(8) தந்தையானவன் {ஸகரன்} அந்தக் கருக்களைத் தெளிந்த நெய்யால் நிரம்பிய பாத்திரங்களில் {குடங்களில்} அவற்றை வைத்து, அவற்றைப் பாதுகாக்க இணையான எண்ணிக்கையில் செவிலிகளை நியமித்தான்.(9) பத்து மாதங்கள் நிறைவடைந்ததும், உரிய நேரத்தில் சுகமாக வெளிப்பட்ட ஸகரனின் மகன்கள் அவனது மகிழ்ச்சியைப் பெருகச் செய்தனர்.(10)

இவ்வழியிலேயே, ஓ! மன்னா, ஸகரனின் அறுபதாயிரம் மகன்களும் சுரைக்காயில் இருந்து தோன்றினர்.(11) நாராயணனின் சக்தியால் எரிக்கப்பட்ட போது, அவர்களில் ஒருவன் மட்டுமே உயிரோடு எஞ்சி பஞ்சஜனன் என்ற பெயரில் மன்னனான்[2].(12) பஞ்சஜனனின் மகன் சக்திமானான அம்சுமானாவான், அவனுடைய மகன் திலீபன், கட்வாங்கன் என்றும் அழைக்கப்பட்டான்.(13) சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்து, இங்கே பிறந்து, ஒரு கணத்திற்குள் அவன் தன் நுண்ணறிவு மற்றும் வாய்மையால் மூவுலகங்களையும் கொள்ளையடித்தான்.(14) ஆறுகளில் சிறந்த கங்கையைக் கீழே கொண்டு வந்தவனும், பெரும் பலமிக்கவனும், பெரும் மன்னனுமான பகீரதன் திலீபனின் மகனாவான்.(15) உன்னதமானவனும், சிறப்புமிக்கவனும், ஆற்றலில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவனுமான அந்த மன்னன் {பகீரதன்}, அவளைப் பெருங்கடலுக்குக் கொண்டு வந்த பிறகு அவளைத் தன் மகளாகக் கருதினான். எனவே, குலங்களைக் குறிப்பிடும் முனிவர்களால் அவள் பாகீரதி என்று அழைக்கப்படுகிறாள்.(16)

[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "இவ்வாறே பேரரசன் ஸகரன், சுரைக்காயின் உள்ளே இருந்து ஒரே நேரத்தில் ஆறுபதாயிரம் மகன்களைப் பெற்றான். பின்னர் அவர்கள் அனைவரும் வேள்விக் குதிரையைக் காண பூமியை அகழ்ந்த போது கபில முனிவரின் வடிவில் இருந்த நாராயணனின் நெருப்புப் பார்வையில் தங்கள் உடல்கள் எரிக்கப்பட்டனர். எனினும், ஸகரனின் மூத்த மனைவியான மங்கை கேசினியால் பெறப்பட்டவனும், பஞ்சஜனன், அல்லது அசமஞ்சன் என்ற பெயரைக் கொண்டவனுமான மகன் மட்டுமே இருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "இவ்வழியிலேயே அந்தப் பூமியின் தலைவன், சுரைக்காயில் இருந்து பிறந்த அறுபதாயிரம் மகன்களைப் பெற்றிருந்தான். நாராயணனின் சக்தியால் ஊடுருவப்பட்டிருந்தாலும், மன்னன் பஞ்சஜனன் என்ற ஓர் உயரான்ம மகன் இருந்தான்" என்றிருக்கிறது. இதற்கு முந்தைய பகுதியான ஹரிவம்ச பர்வம் 14ம் அத்தியாயத்தின் 25, 26ம் ஸ்லோகத்தில், அந்த அறுபதாயிரம் மகன்களில் நால்வரை தவிர அனைவரும் எரிந்தனர் என்றும், அவர்களின் பெயர்கள் பர்ஹகேது, ஸுகேது, தர்மரதன் மற்றும் பஞ்சஜனன் என்றும் குறிப்பிடப்பட்டிருப்பது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.

பகீரதனின் மகன் கொண்டாடப்படும் மன்னனான ஸுருதன் ஆவான். பேரறவோனான நாபாகன் ஸுருதனின் மகனாவான்.(17) நபாகனின் மகன் அம்பரீஷன், அவனது {அம்பரீஷனின்} மகன் ஸிந்துத்வீபன், அவனது {ஸிந்துத்வீபனின்} மகன் பலமிக்க அயுதாஜித் ஆவான்.(18) அயுதாஜித்தின் மகன் சிறப்புமிக்க ருதபர்ணனாவான். அவன் {ருதபர்ணன்}, பலம் நிறைந்தவனாகவும், தெய்வீகப் பகடையாட்டத்தை நன்கறிந்தவனாகவும், மன்னன் நளனின் நண்பனாகவும் இருந்தான்.(19) மன்னன் ஆர்த்தபர்ணி ருதபர்ணனின் மகனாவான், அவனது {ஆர்த்தபர்ணியின்} மகனான மன்னன் ஸுதாஸன் இந்திரனின் நண்பனானான்.(20)

மன்னன் ஸௌதாஸன் ஸுதாஸனின் மகனாவான். கல்மாஷபாதன் என்ற பெயரில் {மித்ரஸகன் என்ற பெயரிலும்} கொண்டாடப்பட்ட அவன் தன் நண்பர்களிடம் பெரும்பற்று கொண்டவனாக இருந்தான்.(21) கல்மாஷபாதனின் மகன் ஸர்வகர்மன் என்ற பெயரில் அறியப்பட்டான், அவனுடைய {ஸர்வகர்மனின்} மகன் கொண்டாடப்படும் அனரண்யனாவான்.(22) அனரண்யனுக்கு நிக்மன் {நிக்னன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான், அவனுக்கு {நிக்மனுக்கு} அனமித்ரன் {அனிமித்ரன்} மற்றும் ரகு என்ற இரு முன்னணி மன்னர்கள் மகன்களாக இருந்தனர்.(23) அனமித்ரனின் மகன் கல்விமானும், பக்திமானுமான துலிதுஹன் ஆவான். அவனுடைய {துலிதுஹனின்} மகன், ராமனின் பாட்டனான திலீபன் ஆவான்.(24) திலீபனின் மகன் பெருங்கரம் கொண்டவனான ரகு ஆவான். பெருஞ்சக்திவாய்ந்த மன்னன் ரகு அயோத்தியாவில் இருந்து ஆட்சி செய்தான்.(25)

ரகுவுக்கு அஜன் பிறந்தான், அஜனின் மகன் தசரதனாவான். அற ஆன்மாவும் சிறப்புமிக்கவனுமான ராமன் தசரதனின் மகனாவான்.(26) ராமனின் மகன் குசன் என்ற பெயரைக் கொண்டவனாவான். அவனுடைய {குசனின்} மகன் அதிதி, அவனுடைய {அதிதியின்} மகன் நிஷாதனாவான்.(27) நிஷாதனின் மகன் நளன், அவனுடைய {நளனின்} மகன் நபனாவான். நபனின் மகன் புண்டரீகன், அவனுடைய மகன் க்ஷேமதன்வன் என்ற பெயரைக் கொண்டவனாவான்.(28) க்ஷேமதன்வனின் மகன் பலம்வாய்ந்த தேவானீகன், அவனுடைய மகன் பெரும் அஹீனகு.(29) அஹீனகுவின் நன்மகன் மன்னன் ஸுதன்வனாவான், அவனுக்கு மகனாக மன்னன் அனலனாவான்.(30) அனலனின் மகன் அறம்சார்ந்த உக்தனாவான், அவனுடைய {உக்தனின்} மகன் உயரான்ம (மன்னன்) வஜ்ரனாபனாவான்.(31) அவனுடைய {வஜ்ரநாபனின்} மகன், பெருங்கல்விமானும், தியுஷிதாஷ்வன் {வியுஷிதாஷ்வன்}என்ற பெயரில் அழைக்கப்படுபவனுமான சங்கன் ஆவான். அவனுடைய {சங்கனின்} மகன் கல்விமானான அர்த்தஸித்தியாவான்.(32) அவனுடைய {அர்த்தஸித்தியின்} மகன் ஸுதர்சனன், அவனுடைய {ஸுதர்சனின்} மகன் சீக்ரன், அவனுடைய {சீக்ரனின்} மகன் மரு ஆவான்.(33) மரு, கலை {கலாபம்} என்ற தீவில் யோகம் பயின்றான். அவனுடைய {மருவின்} மகன் சிறப்புமிக்க மன்னனான பிருஹத்பலனாவான்.(34) ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, புராணங்களில் நளன் என்ற பெயரில் இரு மன்னர்கள் கொண்டாடப்படுகின்றனர். அவர்களில் ஒருவன் வீரசேனனின் மகனாவான், மன்றறவன் இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலாவான்.(35)

இவ்வாறே இக்ஷ்வாகு குலத்தின் முதன்மையான தலைவர்களை வரிசையாக உனக்குச் சொல்லியிருக்கிறேன். அளவற்ற சக்தி கொண்ட இம்மன்னர்களே சூரிய வம்சத்தைச் சார்ந்தவர்களாவர். உயிரினங்களுக்கு ஊட்டமளித்து வளர்க்கும் சிராத்ததேவனான ஆதித்யனின் படைப்பைப் படிப்பதன் மூலம் ஒரு மனிதன் சந்ததியையும், சூரியனைப் போன்ற அதே நிலையையும், பாபங்கள் மற்றும் அகந்தையில் இருந்து விடுபடும் நிலையையும், நீண்ட வாழ்நாளையும் {ஆயுளையும்} அடைகிறான்" {என்றார் வைசம்பாயனர்}.(37,38)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 38
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்