Saturday 8 February 2020

ஹரிவம்சம் அறிமுகம் - மன்மதநாததத்தர்

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹரிவம்சம் அல்லது ஹரியின் (ஸ்ரீகிருஷ்ணனின்) தலைமுறை என்பது பெருங்காப்பியமான மஹாபாரதத்தின் பின்தொடர்ச்சியாகும். விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகிய இருபெரும் குலங்களின் கதையைச் சொல்லுமாறு சௌதியிடம், சௌனகர் வைக்கும் வேண்டுகோளுடன் இந்தப் படைப்புத் தொடங்குகிறது. முதல் அத்தியாயம் ஒன்பதாம் ஸ்லோகத்தில், அவர் {சௌனகர்}, "ஓ! லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, குருக்களின் பிறப்பு மற்றும் வரலாற்றை விளக்குகையில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வரலாற்றை உரைக்க நீ மறந்துவிட்டாய். அவர்களின் வரலாற்றை உரைப்பதே உனக்குத் தகும்" என்று கேட்கிறார். குருக்களின் கதையைச் சொல்லும் படைப்பே மஹாபாரதமென்பதில் ஐயமில்லையென்றாலும், அது புராணம் என்று குறிப்பிடப்படும்போது, அந்த உரையில் சற்றே நமக்குக் குழப்பமேற்படுகிறது. மஹாபாரதத்தில் காணப்படாத கிருஷ்ணனுடைய குடும்பக் கதையை விரிவாகச் சொல்வதே ஆசிரியரின் நோக்கம் என்பது இந்த வாக்கியத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.

உண்மை இயல்பின் அடிப்படையில் இந்தப் படைப்பானது, புராணம் என்றழைக்கப்பட வேண்டுமா? ஒரு காவியச் செய்யுள் தொகை என்றழைக்கப்பட வேண்டுமா? என்பதை உறுதி செய்து கொள்வது மிகக் கடினமானதாக இருக்கிறது. நடை மற்றும் வடிவத்தில் இது புராணங்களை ஒத்திருந்தாலும், புராணங்களின் வரிசையிலோ, உபபுராண வரிசையிலோ இது பட்டியலிடப்படவில்லை. புராணங்கள், அதிலும் மிகக் குறிப்பாக விஷ்ணு புராணத்தில் இருப்பது போலவே ஹரிவம்சத்திலும், படைப்பின் கதை, பூமியின் பரிமாணம், காலப்பிரிவினை, குல வரலாறுகள் மற்றும் அரசவம்ச வரலாறுகள் ஆகியவற்றை நாம் காணலாம். சில வேளைகளில் அவற்றில் ஒன்று மற்றொன்றின் பொழிப்புரை எனக் கொள்ளும் அளவுக்கு அவை ஒன்றையொன்று ஒத்திருப்பதாகத் தெரிகின்றன. கிருஷ்ணனின் தொடக்கக் கால வாழ்க்கை மற்றும் அவன் செய்த சில அற்புதங்கள் ஆகியன விஷ்ணு புராணத்தில் உள்ளவை போன்றே இருக்கின்றன. இந்தப் படைப்பு புராணங்களின் பட்டியலில் சேர்க்கப்படவில்லையெனினும், இவை ஒவ்வொன்றும் ஒரே நோக்கத்திற்காக, ஒரே பாணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகத் தெரிகிறது. மஹாபாரதத்தில் விடுபட்ட பெரும் விபரங்களை அளிப்பதால் இது மஹாபாரதத்தின் தொடர்ச்சி {கிலா} என்று அழைக்கப்படுகிறது. எனினும், ஸ்ரீகிருஷ்ணனின் வாழ்க்கைக் கதையை விரிவாகச் சொல்வதாலும், எப்போதும் அதிகாரமிக்கதாகக் கருதப்பட்டு வருவதாலும் இதில் பேரார்வம் ஏற்படுகிறது.

பழங்காலத்தைச் சேர்ந்த பிற சம்ஸ்கிருத படைப்புகளைப் போலவே இந்தப் படைப்புத் தொகுக்கப்பட்ட நாளை உறுதி கொள்வதும் கிட்டத்தட்ட இயலாததாக இருக்கிறது. நமது இலக்கியங்களுக்கான முறையான வரலாற்றை நாம் கொண்டிருக்கவில்லை என்பதாலும், பல்வேறு படைப்புகளில் பல முரண்பட்ட கூற்றுகள் இருப்பதாலும், காலம் குறித்த கேள்விக்குத் தீர்வாக உள் ஆதாரங்களை {அகச்சான்றுகளையே} நாம் நம்பியிருக்கமுடியாது. மஹாபாரதம், இராமாயணம் மற்றும் புராணங்கள் ஆகியன வேதங்களுக்கு மிகப் பிற்காலத்தில் எழுதப்பட்டன என்பது பொதுவான நம்பிக்கையாகும். ஆனால் வேத இலக்கியங்களில் இந்தப் படைப்புகள் பற்றிய குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.

அதர்வண வேதத்தில் இதிஹாஸம், புராணம் மற்றும் கதை என்ற பெயர்கள் நமக்குக் கிடைக்கின்றன. சதபத பிராமணத்தில் இதிஹாஸங்கள் மற்றும் புராணங்கள் எனக் குறிப்பிடப்படும் மற்றொரு வாக்கியத்தை நாம் காணலாம். "ரிக் வேதம், சாம வேதம், அதர்வண வேதம், இதிஹாஸங்கள், புராணங்கள், உபநிஷத்துகள், சூத்திரங்கள், ஸ்லோகங்கள் முதலிய" என்ற உரை அதில் இருக்கிறது. புராணங்கள், இதிஹாஸங்கள் என்ற பெயரின் கீழ் வரும் இலக்கிய வகை வேத காலத்திலேயே இருந்தது என்பதைத் தெளிவாக நிறுவும் இதுபோன்ற பல வாக்கியங்களும் கிடைக்கின்றன. இந்தக் கூற்றுகளிலிருந்து, இந்தப் படைப்புகள் உண்மையில் எப்போது எழுதப்பட்டன என்ற தீர்வுக்கு வருவது மிகக் கடினமாகும். இந்தப் படைப்புகளின் பல்வேறு அத்தியாயங்கள் எழுதப்படுவதற்கு முன்பே பல நூற்றாண்டுகளாக, வாய் வழியாகவே தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்தன. இதன் பிறகும், சமகால நிகழ்வுகளைக் குறிப்பிடும் வடிவில் பல இடை செருகல்கள் பல்வேறு எழுத்தாளர்களால் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பண்டைய இந்து எழுத்தாளர்கள், ஆசிரியர்கள் என்று தங்களை அறியும் எண்ணத்தை ஒருபோதும் விரும்பாதவர்களாக, மிக அடக்கமானவர்களாக இருந்தனர். அறியப்படாத அந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட பல படைப்புகள் அவர்களின் குருக்கள், அல்லது ஆன்ம வழிகாட்டிகளின் பெயர்களில் படைக்கப்பட்டன. எனவே உள் இருக்கும் ஆதாரங்களின் {அகச்சான்றுகளின்} மூலம் தேதி அல்லது ஆசிரியத்தன்மையைத் தீர்மானிக்க முயற்சிப்பது சரியானதல்ல. பல்வேறு படைப்புகளில் காணப்படும் வளர்ச்சியின் அடிப்படையில் நமது முடிவுகளின் துல்லியத்தைச் சோதிக்க உள் ஆதாரங்களை {அகச்சான்றுகளைப்} பயன்படுத்திக் கொண்டு தோராயமான தேதியைக் கொடுப்பதே ஒரே நல்ல நடைமுறையாகும். இந்து இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளை ஆய்வு செய்யும்போது, அவதாரக் கோட்பாடு, குறுங்குழு சார்ந்த வழிபாட்டு முறைகள் ஆகியன வேத எழுத்தாளர்கள் முற்றிலும் அறியாதன என்பதையும், இராமணயம் மற்றும் மஹாபாரதம் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகச் சிறிய பகுதிகளாகவே அப்போது இருந்திருக்கக்கூடும் என்பதையும் நாம் காண்கிறோம். எனினும், முழு இறையியலும், அவதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைப் புராணங்களில் நாம் காண்கிறோம். பல்வேறு குழுக்களுக்கான சடங்குகள் மற்றும் விழாக்கள் ஆகியன அவற்றில் நிச்சயம் வகுக்கப்பட்டிருக்கின்றன, கடுமையும், அதிகாரமும் மிக்க சாதி {வர்ண} விதிகளும் அவற்றில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர, அத்தியாயங்களின் வடிவில் பொதுவாக விளக்கப்படும் வேதாந்த, சாங்கிய கோட்பாடுகளையும் நாம் காண்கிறோம். இந்தப் படைப்புகள் தொகுக்கப்பட்ட உண்மையான தேதி எதுவாக இருந்தாலும், மஹாபாரதம் மற்றும் இராமாயணம் ஆகியவற்றுக்கு மிகப் பிற்காலத்தவை என்பதை இது தெளிவாக நிறுவுகிறது. ஹரிவம்சம், மஹாபாரதத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், நடை, காரியப் பொருளைக் கையாளும் விதம், படைப்புக் கதை மற்றும் குடும்பக் கதைகள் ஆகிய ஆதாரங்களில் இருந்து, அந்தப் பெரும்படைப்புக்கு மிகப் பிற்காலத்தில் எழுதப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. புராணங்கள் தொகுக்கப்பட்ட அதே காலத்தில் இஃது எழுதப்படவில்லை எனக் கொண்டாலும் அதற்கு முன்பே இஃது எழுதப்பட்டிருக்க முடியாது.

ஸ்ரீகிருஷ்ணனின் வாழ்க்கை மற்றும் அவன் செய்த அற்புதங்கள் ஆகியற்றுடன் அவனது குடும்பக் கதையையும் ஹரிவம்சம் கொண்டுள்ளது என்பதை நான் முன்பே சொன்னேன். இந்தப் படைப்பிற்கும், பல்வேறு படைப்புகளுக்கும் மைய நாயகனாக இருப்பவன் வரலாற்று மனிதனா? தொன்மக் கதாப்பாத்திரமா? என்பது குறித்து நான் சில சொற்களைச் சொல்ல வேண்டுமென நினைக்கிறேன். இந்து இலக்கியங்களில் பரிச்சயமில்லாத அந்நியர்கள் அவனைக் காதல் நாயகனான ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் எனக் கருதுகிறார்கள். கவித்துவமான பல்வேறு படைப்புகளும், புராணங்களின் வரிசையில் பிரம்ம வைவர்த்த புராணமும் இந்தக் கருத்தை அடைவதற்குக் காரணமாக இருப்பவை. மஹாபாரதம் மற்றும் அவனுடைய வாழ்க்கை குறித்த வேறு அதிகாரமிக்க எழுத்துகளையும் படித்தவனும், நடுநிலையாளனுமான எந்த மாணவனும், அற்புத சக்தியையும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட புத்தியையும் கொண்ட அவன் {கிருஷ்ணன்}, நிச்சயம் வரலாற்றில் வாழ்ந்த உண்மையான மனிதனே என்பதை ஒப்புக்கொள்வான். சிறந்த அரசியல்வாதியாகவும், சிறந்த தொலைநோக்குப் பார்வை கொண்டவனாகவும் அவன் இருந்தான். மனிதர்களின் வரலாற்றில் இத்தகைய கலவை மிக அரிதானதாகும். கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் குருக்ஷேத்திரப் போர் வரலாற்று நிகழ்வாக இருந்தால், மைய வடிவம் ஏன் வரலாற்றுப் பாத்திரமாக இருக்கக்கூடாது என்பதை நாம் காணத் தவறுகிறோம். ஆரியர்களின் வரலாற்றில் ஸ்ரீகிருஷ்ணன் மகத்தான வடிவமாவான். உயர்ந்த அறக்கருத்துகள் நிறைந்த அவனது வாழ்க்கை நம் முன்னோர்களின் மகத்துவத்தை இன்னும் மிகப் பிரகாசமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள கோடிக்கணாக்கான மக்களை மட்டும் அவனது போதனைகள் ஆளவில்லை, மாறாக மேற்கத்திய மக்களாலும் போற்றப்பட்டு, மதிக்கப்படுகின்றன. மெஸர்ஸ் டுப்புய்ஸ் (Messrs Dupuis) மற்றும் வோல்னி (Volney) போன்ற எழுத்தாளர்கள், "கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் அற்புதங்களைச் சொல்லும் வரலாறு இந்தியக் கிருஷ்ணனிடம் இருந்து இரவலாகப் பெறப்பட்டது” என்று தங்கள் படைப்புகளில் வாதிடும் அளவுக்குச் சென்றிருக்கிறார்கள். பல அற்புதங்கள் செய்தவனாகச் சொல்லப்படுவதால் கிருஷ்ணன் தொன்மக் கதாப்பாத்திரமாகக் கொள்ளப்பட்டாலும், இத்தகைய அற்புதங்கள் செய்ததாகச் சொல்லப்படும் வேறு எந்தத் தீர்க்கத்தரிசியையும் எவ்வாறு வரலாற்றுப் பாத்திரமாகக் கொள்ள முடியும்?

ஹரிவம்சம், இந்துக்களின் பெருந் தீர்க்கதரிசியுடைய வாழ்க்கையையும், குடும்பத்தையும் {குலத்தையும்} சொல்கிறது. எனவே, இத்தகைய ஒரு படைப்பின் ஆங்கில மொழியாக்கம் பொதுமக்களின் வரவேற்பை நிச்சயம் பெறும் என நம்புகிறேன்.

- மன்மதநாததத்
1897

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்