(உபயஸைந்யயோ꞉ புஷ்கரதீர்தப்ரவேஷம்)
Pushkara Battlefield | Bhavishya-Parva-Chapter-96 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: புஷ்கரைக்கு வந்த ஹம்சனும், டிம்பகனும்; ஹம்ச டிம்பகர்களின் நண்பனான தானவன் விசக்ரன்; விசக்ரனின் நண்பனான தைத்தியன் ஹிடிம்பன்; இரு படைகளும் போர்க்களம் புகுந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "மன்னா, அதே வேளையில் ஹம்சனும், டிம்பகனும் தங்கள் விற்களையும், கணைகளையும் எடுத்துக் கொண்டு, அலங்காரக் கொடிகளுடன் கூடிய எண்ணற்ற தேர்கள் சூழ புஷ்கரத் தீர்த்தத்திற்கு வந்தனர்.(1) அவ்விரு இளவரசர்களின் முன்பு, மொத்த உலகத்தையும் விழுங்கப் போவதைப் போலத் தோன்றும் இரண்டு பூதங்கள் இருந்தனர். அவர்கள் {அந்தப் பூதங்கள்} மேனியெங்கும் பஸ்மத்தைப் பூசிக்கொண்டு சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டிருந்தனர்.(2) மேலும் ருத்ராக்ஷங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அவர்கள் தங்கள் நெற்றிகளில் மூவரி திலகங்களைச் சூடியிருந்தனர். உலகை அழிப்பதற்காக வந்திருக்கும் இரு ருத்திரர்களைப் போல அவர்கள் தெரிந்தனர்.(3) அந்தப் பூதங்கள் இருவரையும் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான படைவீரர்கள் வந்தனர். ஹம்சடிம்பகர்கள் பத்து அக்ஷௌஹிணி அளவுக்குப் படையைக் கொண்டிருந்தனர்.(4)