(வைஷம்பாயநம் ப்ரதி ஜநமேஜயப்ரஷ்நம்)
Hamsa and Dimbhaka | Bhavishya-Parva-Chapter-78 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: ஹம்சன், டிம்பகன், விசக்ரன் அறிமுகம்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "தவம் செய்யும் பிராமணர்களில் சிறந்தவரே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணனின் கடந்த காலத்தைப் பற்றி மேலும் அதிகமாகக் கேட்க விரும்புகிறேன்.(1) கேசவனைக் குறித்துக் கேட்கையில் ஒருபோதும் எனக்குத் தெவிட்டுவதில்லை. சக்கரபாணியான அந்த ஹரியுடைய புனிதப் பெயர்களின் மகிமையை மேலும், மேலும் கேட்க எவன்தான் விரும்பமாட்டான்? ஹரியின் பெயர்கள், வடிவங்கள், குணங்கள் ஆகியவையும், கடந்த காலத்தைக் குறித்தவையும், புலனுணர்வுக்கு அப்பாற்பட்டவையுமான கதைகளைத் தொடர்ந்து கேட்பதே வாழ்வின் மாறா இலக்காகத் திகழ்கிறது.(2,3)
ஹம்சன், டிம்பகன் [1]ஆகியோரின் கூட்டு முயற்சிகள் உலகத்தை எவ்வாறு பாதித்தன? அவர்களின் செயல்பாடுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின என்று அறியப்படுகிறது.(4) விசக்ரன் என்ற தானவனுடனான போர் எவ்வாறு நடந்தது? ஹம்சன், டிம்பகன் ஆகியோரின் நல்ல நண்பன் அவன் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.(5) பார்க்கவரின் {பரசுராமரின்} சீடர்களான அந்த இளவரசர்கள் இருவரும் பெரும்பலமிக்கவர்களாகத் திகழ்ந்தனர். அவர்கள், சங்கரனின் ஆசிகளைப் பெற்று, ஆயுதப் பயன்பாட்டில் திறன்மிக்கவர்களாகத் திகழ்ந்தனர் என்றும் சொல்லப்படுகிறது.(6)
[1] இந்த ஹம்சனும், டிம்பகனும் ஜராசந்தனின் ஆருயிர் நண்பர்களாவர். இவர்களைக் குறித்த செய்தி மஹாபாரத சபாபர்வம் 14ம் பகுதியில் காணக்கிடைக்கிறது.
பிராமணரே, ஜகத்பதியான கேசவன், இவ்விரு மன்னர்களுடன் கடும்போரில் ஈடுபட்டான் என முன்னர் நீர் குறிப்பிட்டிருந்தீர்.(7) அவர்கள் யாருடைய மகன்கள்? ஏன் அவர்கள் கிருஷ்ணனுடன் போரிட்டனர்? மன்னா, உலகை வெல்லும் பேராவல் கொண்ட தானவனான விசக்ரன், திரிசூலம் தரித்த எண்பத்தெட்டாயிரம் தானவ வீரர்களின் ஆதரவைப் பெற்றிருந்தான்.(8,9) தானவனான அந்த விசக்ரனை வெல்ல முடியாது என்றே கருதப்பட்டது. அவன் யாதவர்களுடன் போரிட விரும்பி, அவர்களிடம் சிறு தவறையாவது, குறையையாவது காணத் தொடர்ந்து முயன்று வந்தான். இறுதியில் ஒரு பெரும்போர் நேரிட்டு விசக்ரனைக் கொல்லும் நம்பிக்கையுடன் கிருஷ்ணனே போரில் நுழைந்தபோதும், வெற்றியை அடைய அவன் {விசக்ரன்} சிறந்த முயற்சி செய்திருக்கிறான்" என்றான் {ஜனமேஜயன்}.(10)
பவிஷ்ய பர்வம் பகுதி – 78ல் உள்ள சுலோகங்கள் : 10
மூலம் - Source |