(ந்ருஸிம்ஹக்ருதோ தைத்யமாயாநிராஸ꞉)
Narasimha removes daityas illusion| Bhavishya-Parva-Chapter-38b | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம் : போர் வர்ணனை; அசுரர்கள் செய்த மாயைகள்; அவற்றை விலக்கிய நரசிங்கன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கழுதை போன்றவர்களும், கழுதை முகம் படைத்தவர்களும், மகரங்களையும், நஞ்சுமிக்கப் பாம்புகளையும் போன்றவர்களும், குரங்குகளையும், பன்றிகளையும் போன்ற முகம் கொண்டவர்களும்,(1) இளஞ்சூரியன், தூமகேது, சந்திரன், பிறைச் சந்திரன், சுடர்மிக்க நெருப்பு,(2) அன்னங்கள், சேவல்கள் போன்ற முகத்தைக் கொண்டவர்களும், பிணியால் பீடிக்கப்பட்ட முகங்களையும், அச்சந்தரும் முகங்களையும், ஐந்து முகங்களைக் கொண்டவர்களும், பாம்புகள், காகங்கள், கழுகுகள் போன்ற முகங்களைக் கொண்டவர்களும்,(3) மின்னல் போன்ற நாவுகளைக் கொண்டவர்களும், மூன்று தலைகளைக் கொண்டவர்களும், எரிகொள்ளிகளைப் போன்றும், பெரும் முதலை, நீர்யானை போன்ற முகங்களைக் கொண்டவர்களும், தங்கள் பலத்தில் செருக்கு கொண்டவர்களுமான தானவர்கள்,(4) போரில் கைலாச மலையைப் போல நெடிதுயர்ந்து நின்ற மிருகேந்திரனின் {நரசிம்மனின்} உடலில் கணைகளைப் பொழிந்தனர். எவராலும் கொல்லப்பட முடியாதவனான மிருகேந்திரனுக்கு அந்தக் கணைகள் துன்பத்தைத் தரவில்லை.(5)
இவ்வாறு பாம்புகளைப் போலப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த கோபக்கார தானவர்கள், மீண்டும் அந்த மிருகேந்திரனின் உடலில் பயங்கரக் கணைகளைப் பொழிந்தனர்.(6) மிருகேந்திரன் மீது அந்தத் தானவர்கள் ஏவிய பயங்கரக் கணைகள் யாவும், மலைகளில் மறைந்து போகும் விட்டில் பூச்சிகளைப் போல வானத்தில் கரைந்தன.(7) கோபமடைந்த தைத்தியர்கள், எங்கும் சுடர்விட்ட தெய்வீக சக்கரங்களை அந்த மிருகேந்திரன் மீது ஏவினர்.(8) சூரியன், சந்திரன், யுக முடிவில் வானில் பளபளக்கும் கோள்கள் ஆகியவற்றைப் போன்ற சுடர்மிக்க அந்தச் சக்கரங்களால் வானம் முற்றாக மறைக்கப்பட்டது.(9) அந்தச் சக்கரங்கள், பயங்கர மேகங்களின் குடலுக்குள் நுழையும் சூரியன், சந்திரன், மற்றும் கோள்களைப் போல அந்த மிருகேந்திரனின் வாய்க்குள் நுழைந்து தங்கள் ஒளியை இழந்தன.(10) பேரான்மாவான மிருகேந்திரன், நெருப்பின் தழல்களைப் போலச் சுடர்விடும் அந்தச் சக்கரங்கள் அனைத்தையும் விழுங்கினான்.(11)
தைத்தியன் ஹிரண்யகசிபு, ஹுதாசனனின் {அக்னியின்} ஒளியைப் போலப் பயங்கரமாகச் சுடர்விடுவதும், வேகமாகச் செல்லவல்லதுமான சக்தி ஆயுதம் ஒன்றை மீண்டும் ஏவினான்.(12) சக்தி ஆயுதங்களில் சிறந்த அந்த ஆயுதம் தன்னை நோக்கி வருவதைக் கண்ட தலைவன் மிருகேந்தரன், பயங்கரமான ஹுங்காரம் செய்தபடியே அதை நொறுக்கினான்.(13) மிருகேந்திரனால் நொறுக்கப்பட்ட அந்தச் சக்தி ஆயுதம், தீப்பொறிகளுடன் வானில் இருந்து விழும் பெரும் எரிகொள்ளியைப் போல ஒளிர்ந்து கொண்டே பூமியில் விழுந்தது.(14) அவன் மீது ஏவப்பட்ட கணைச் சரங்கள், நீலோத்பல மலர்களால் ஆன மாலையைப் போலத் தொலைவில் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(15) அவன் {நரசிங்கன்}, தான் விரும்பியபடியே முழக்கம் செய்து கொண்டும், தன் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும், துரும்புகளைப் பறக்கவிடும் கொடுங்காற்றைப் போல எளிதாக அந்த அசுரர்களின் படையை விரட்டினான்.(16)
அப்போது தைத்தியேந்திரன் {ஹிரண்யகசிபு}, மலைகளைப் போன்று பெரியவையும், மலைச் சிகரங்களைப் போல ஒளிமிக்கவையுமான பாறைகளை வானத்தில் இருந்து மழையாகப் பொழிந்தான்.(17) அந்தப் பாறைகள் அந்தச் சிங்கத்தின் பேருடலில் விழுந்ததும், பத்துத் திக்குகளிலும் சிதறிப் போகும் விட்டில் பூச்சிகளைப் போலச் சிதறின.(18) ஓ! பகைவரை ஒடுக்குபவனே, திதியின் மகன்கள், நீருண்ட மேகங்கள் மழையைப் பொழிந்து மலையை மறைப்பதைப் போலப் பாறைகளால் அந்தச் சிங்கத்தை மறைத்தனர்.(19) பெருங்கடலால் மலையை அசைக்க முடியாததைப் போலவும், பெரும் வேகம் கொண்டவனானாலும் வலிமைமிக்கவர்களில் சிறந்தவனை அசைக்க முடியாததைப் போலவும் உறுதியாக நின்று கொண்டிருந்த அந்தத் தலைவனை அவற்றால் அசைக்க முடியவில்லை.(20)
பாறை மழை அழிக்கப்பட்டபோது, எங்கும் பரவக்கூடியதுமான நீர் மழையானது அங்கே கணைகளைப் போல அடர்த்தியாகப் பொழிந்தது.(21) பெரும் வேகம் கொண்டவையும், நீராலானவையுமான ஆயிரக்கணக்கான கணைகள் திசைகளிலும், துணைத்திசைகளிலும் பரவி வானத்தை மறைத்தன.(22) நீர்மழையாலும், வேகமாக வீசும் காற்றாலும், பெரும் மழையாலும் எவரும் எதையும் அறிய முடியாத நிலை தோன்றியது.(23) வானம், பூமி எங்கிலும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்த மழைத்துளிகளால் பூமியில் விழுந்த பிறகும் அவனைத் தீண்ட முடியவில்லை.(24) மழை வெளியே பொழிந்து கொண்டிருந்தது. நீருண்ட மேகங்களால், மிருகேந்திரனின் வடிவில் நின்று கொண்டிருந்த தலைவன் மீது அந்த மாயப் போரில் மழையைப் பொழிய முடியவில்லை.(25)
ஆரவாரமாகப் பொழிந்த பாறை மழை அழிக்கப்பட்டு, நீர் மழையும் வற்றிய பிறகு, நெருப்பைப் போன்றும், காற்றைப் போன்றும் எங்கும் தோன்றும் மாயையைத் தானவர்கள் உண்டாக்கினர்.(26) எரியும் தழல் பொதிகள் சுடர்விட்டுக் கொண்டே வானில் இருந்து பெரும் வேகத்துடன் எங்கும் விழுந்தன.(27) உயரான்மாவும், பேரொளி படைத்தவனுமான தைத்தேந்திரனால் {ஹிரண்யகசிபுவால்} இவ்வாறு உண்டாக்கப்பட்ட அந்நெருப்பால் அளவற்ற பேரொளியைக் கொண்டவனை எரிக்க இயலவில்லை.(28) அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான இந்திரன், நீருண்ட மேகங்களைக் கொண்டு நீராலான பெருமழையைப் பொழியச் செய்து அந்த நெருப்பை அணைத்தான்.(29)
இவ்வாறு மாயை அழிக்கப்பட்டபோது, அந்தத் தானவன் {ஹிரண்யகசிபு}, போர்க்களமெங்கும் பயங்கரமான காரிருளை உண்டாக்கினான்.(30) உலகம் இருளால் சூழப்பட்டு, தைத்தியர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்தபோது, நரசிங்கன் தன்னொளியால் சூரியனைப் போல ஒளிர்ந்தான்.(31) திரிகூட மலையில் மூவழிகளில் பாயும் கங்கையைப் போலப் போர்க்களத்தில் நிற்கும் தலைவனின் நெற்றி சுருங்கி மூன்று கோடுகளை வெளிப்படுத்துவதைத் தானவர்கள் கண்டனர்" என்றார் {வைசம்பாயனர்}[1].(32)
[1] இந்த அத்தியாயம் முழுவதும் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. எனவே சித்திரசாலை பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த அத்தியாயத்திற்கு 38ஆ என்று எண் கொடுக்கப்படுகிறது.
பவிஷ்ய பர்வம் பகுதி – 38ஆவில் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |