(அந்தகவசனம்)
Andhaka's advise to Kansa | Vishnu-Parva-Chapter-78-023 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : வஸுதேவனை நிந்தித்த கம்ஸனுக்கு அறிவுரை கூறிய அந்தகன்; கம்ஸனுக்கு அழிவுக்காலம் வந்துவிட்டதெனச் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவன் இவ்வாறு அவமதிக்கப்பட்டதைக் கண்ட முன்னணி யாதவர்கள், தங்கள் கைகளால் காதுகளைப் பொத்திக் கொண்டு, அவனது {கம்ஸனின்} வாழ்நாள் காலம் முடிந்ததென நினைத்தனர்.(1) பேசுபவர்களில் முதன்மையான அந்தகன், தன் மனம் கவலையடைந்திருந்தாலும் பொறுமையுடன் கூடியவனாக, அந்தச் சபையின் மத்தியில் வலுவான மென்சொற்களில்,(2) "ஓ! மகனே {கம்ஸா}, இத்தகைய சொற்களைச் சொல்வது உனக்குத் தகாது. உறவினர்களிடம் இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவது தகாததென்றும், குற்றமுடையதென்றும் நல்லோரால் கருதப்படுகிறது.(3) ஓ! வீரா, நீ உன்னை யாதவர்களின் குலத்தில் பிறக்காதவனெனக் கருதினால், நான் சொல்வதைக் கேட்பாயாக. யாதவர்கள் தங்களில் ஒருவனாக உன்னைக் கருத நிச்சயம் விரும்பவில்லை.(4) மாறாக உன்னைப் போன்ற ஒருவன் அவர்களின் தலைவனானதால்தான் அனைவராலும் அவர்கள் {யாதவர்கள்} நிந்திக்கப்படுகின்றனர். இக்ஷ்வாகு குலத்தின் அசமஞ்ச மன்னனே உன் வடிவில் திரும்பி வந்திருப்பதாகத் தெரிகிறது[1].(5)
[1] சித்திரசாலை பதிப்பில், "உன்னால் ஆளப்படும் விருஷ்ணி வம்சத்தார் பாராட்டத்தகுந்தவர்களல்ல. இக்ஷ்வாகு வம்சத்தின் தன் அரசைக் கைவிட வேண்டியவனாக மன்னன் ஒருவன் இருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "விருஷ்ணி குலத்தோர் உன் சொற்களைப் புகழத்தகுந்தவையாகக் கருதவில்லை. இக்ஷ்வாகு குலத்தின் மன்னன் ஒருவன் தன் சொந்த மகன்களையே மரபுரிமை இழக்கச் செய்தான்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இது யதுவையும், யதுவின் வழித்தோன்றல்களையும் மரபுரிமை இழக்கச் செய்த யயாதியைக் குறிக்கிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "எவர்களுக்கு நீ அரசனோ அந்த யாதவர்கள் கொண்டாடத்தக்கவர். இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த ஓர் அரசன் (சிசுவதத்திற்காக) தானே ஒரே அடியாக நீக்கப்பட்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில் இந்த மன்னன் யயாதி என்றும், மற்ற இரு பதிப்புகளிலும் இந்த மன்னனின் பெயர் குறிப்பு இல்லாமல் இக்ஷ்வாகு குல மன்னன் என்றும் இருக்கிறது. மன்மதநாததத்தர் குறிப்பிடுவது சகரனின் மகனான அசமஞ்சன் ஆவான். அசமஞ்சன் இயல்பிலேயே கொடூரனாக இருந்தான். அசமஞ்சனை சகரன் நாடு கடத்தினான். அந்த விபரம் மஹாபாரதம் வனபர்வம் 107ம் அத்தியாயத்தில் இருக்கிறது.
ஓ! மகனே {கம்ஸா}, நீ சடாமுடி தரித்தாலும், உன் தலையை மழித்தும் கொண்டாலும், போஜன், யாதவன், கம்ஸனெனப் பட்டப்பெயர் எதையும் வைத்துக் கொண்டாலும் உன் தலை அதன் இயல்பான வடிவிலேயே எஞ்சியிருக்கும் {உன் புத்தி அப்படியே தான் இருக்கும்}.(6) இழிந்தவனும், எங்கள் குலத்தின் சாபமாக இருப்பவனுமான உன்னை மகனாகப் பெற்ற உக்ரஸேனன் சபிக்கப்பட்டவனாக இருக்கிறான்.(7) ஓ! மகனே, ஞானிகள் ஒருபோதும் தங்கள் சாதனைகளைச் சொல்லி தங்களை அணிவகுத்துக் கொள்வதில்லை. வேதங்களால் அங்கீகரிக்கப்பட்ட {ஒருவனிடமுள்ள} குணங்கள் பிறரால் சொல்லப்படும்போதே கனியும் தன்மையை அடைகின்றன {முக்கியத்துவம் பெறுகின்றன}.(8) குலத்தை அழிப்பவனான உன்னைப் போன்ற மூடச் சிறுவன் எங்கள் மன்னனானதால், உலகின் அரச குலங்களுக்கு மத்தியில் {எங்கள்} யது குலம் இழிவடைந்திருக்கிறது.(9) சரியானவை எனக் கருதி நீ செய்த அவதூறுகளால் உன் நோக்கத்தை உன்னால் நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை, மாறாக நீ (இதன் மூலம்) உன் குணத்தையே பொதுமக்கள் முன் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறாய்.(10)
குற்றமற்ற, பெரும் வணக்கத்திற்குரிய ஆசானை அவமதிப்பது பிராமணக் கொலையை {பிரம்மஹத்தியைப்} போன்றதாகும். இஃது உனக்கு நன்மையை விளைவிக்குமென நீ கருதுகிறாயா?(11) ஓ! மகனே {கம்ஸா}, வயதில் பெரியோரின் கோபம் யோகத்தால் அடையப்பட்ட உலகங்களையும் எரித்துவிடும் என்பதால் நெருப்பைப்[2] போல அவர்கள் துதிக்கப்படவும், வணங்கப்படவும் வேண்டும்.(12) தற்கட்டுப்பாடும், மேலான புத்தியும் கொண்ட கல்விமான்கள், நீரில் மீன்களின் கதியைக் கவனிப்பதைப் போலவே மக்களின் ஒழுக்கத்தை {தர்மத்தை} நாட வேண்டும்.(13) மந்திரங்களால் புனிதப்படுத்தப்படாத படையலைப் போலவே நீ எப்போதும் இதயம் பிளக்கும் சொற்களால் நெருப்பைப் போன்ற பெரியோரை துன்புறுத்துகிறாய்.(14) நீ வஸுதேவனை அவனது மகனுக்காக நிந்திக்கிறாய். நீ சொல்லும் பயனற்ற, அருவருப்பான சொற்களை நாங்கள் கண்டிக்கிறோம்.(15)
[2] "புராதன ஆரியர்களால் நெருப்பு வணங்கப்பட்டது. முதல் மூன்று உயர்ந்த வர்ணத்தாரும் தங்கள் வீட்டில் புனித நெருப்பைப் பாதுகாக்க வேண்டியது அவசியமாக இருந்தது. அது நிரந்தரமாக வைக்கப்பட்டு ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்குக் கொடுக்கப்பட்டது. புராதன ஆரியர்கள் நெருப்பைப் புனிதமான பூதமாக வழிபட்டார்கள் என்பது வேதங்களில் இருந்து தெரிகிறது. இந்த நெருப்பு வழிபாடு சரத்துஸ்தரைப் {Zoroaster} பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் இன்னும் நிலைத்திருக்கிறது. இந்தச் செய்தி, பார்சிகளும் {சௌராஷ்டிர மதத்தினரும்}, இந்துக்களும் ஒரே வகையைச் சார்ந்தவரே என்பதை நிரூபிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
ஒரு மகன் பொல்லாதவனாக இருந்தால் அவனது தந்தையும் அவ்வாறிருப்பதில்லை, மாறாக அவன் தன் மகனின் காரணமாகப் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறான்.(16) வஸுதேவன் குழந்தையான தன் மகனை மறைத்ததன் மூலம் தன் கடமையைச் செய்யவில்லை என நீ நினைக்கலாம், ஆனால் இது குறித்து உன் தந்தையிடம் கேட்டுப் பார்.(17) வஸுதேவனைத் துன்புறுத்தி, யது குலத்தைத் தவறாகப் பேசும் நீ, யாதவர்களிடம் பகைமை பாராட்டுவதன் விளைவாக நஞ்சையே ஈட்டியிருக்கிறாய்.(18) வஸுதேவன் தன் மகனுக்கு இதைச் செய்ததன் மூலம் அநீதி இழைத்தானெனில், நீ குழந்தையாக இருக்கும்போது உக்ரஸேனன் உன்னை ஏன் கொல்லவில்லை?(19) ஒரு மகன், இறந்து போன தன் மூதாதையரைப் புத் எனும் நரகத்தில் வீழாமல் தடுக்கிறான் என்பதால், அறவிதிகளை அறிந்த மனிதர்கள், அவனுக்குப் புத்ரன்[3] என்ற பெயரைக் கொடுத்திருக்கிறார்கள்.(20)
[3] "புத்ரன் என்ற சொல் நரகத்தின் பெயரான புத் என்பதில் இருந்தும், புத்தெனும் நரகில் இருந்து காக்கும் த்ர என்ற வேரிலிருந்தும் பெறப்பட்டதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
ஸங்கர்ஷணனும் {பலராமனும்}, கிருஷ்ணனும் யது குலத்தில் பிறந்தவர்களெனினும், அவர்கள் பிறந்தது முதலே நீ அந்த இளைஞர்களின் மீது பகைமை பாராட்டி வந்தாய், அவர்களும் உன்னைத் தங்களின் பகைவனாகவே கருதுகிறார்கள்.(21) நீ வஸுதேவனிடம் கடிந்து கொண்டதற்காவும், வாஸுதேவனின் {கிருஷ்ணனின்} கோபத்தைத் தூண்டியதற்காகவும் யாதவர்கள் அனைவரின் இதயங்களும் துடிதுடிக்கின்றன.(22) இவ்வாறு நீ வஸுதேவனை நிந்தித்த, கிருஷ்ணன் உன் பகைவனாகிவிட்ட தீய சகுனங்கள் உனக்கு எதிர்கால அச்சத்தையே {உன் மரணத்தையே} முன் அறிவிக்கின்றன.(23) இரவின் முடிவில் தீய கனவுகளைக் காண்பது, பாம்புகளைக் காண்பது போன்ற பயங்கரச் சகுனங்கள் அனைத்தும் இந்த நகரம் விரைவில் விதவையாகும்[4] என்பதையே முன் அறிவிக்கின்றன.(24)
[4] "நகரின் தலைவன் விரைவில் இறப்பான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
பயங்கரக் கோளான ராகு வானத்தில் தன் பிரகாசத்தால் சுவாதி[5] நட்சத்திரத்தைப் பீடிப்பதையும், உன் பத்தாம் நட்சத்திரமான சித்திரையில்[6] காத்திருப்பதையும் இதோ பார். பயங்கரக் கோளான மங்களன் {செவ்வாய்}[7], சாய்வான கோணத்தில் அவற்றுடன் சேர்ந்திருக்கிறான்.(25) புதன்[8] தன் பயங்கரப் பிரகாசத்தால் மாலைப் பொழுதின் மேற்கு வானை மறைத்திருக்கிறான். சுக்ரன் தன் பாதையைக் கடந்து வானத்தில் திரிந்து வருகிறான்.(26) கேதுவின் வாலால் பிரிக்கப்பட்ட பரணி நட்சத்திரமும்[9] மற்ற பனிரெண்டு விண்மீன் கூட்டங்களும் சந்திரனைப் பின்தொடர்ந்து செல்கின்றன.(27) பிரகாசமான விடியல் ஒரு வட்டிலால் சூழப்பட்டுச் சூரியனைத் தடுக்கிறது, பறவைகளும், விலங்குகளும் கதறிக் கொண்டே மாறுபட்ட திசைகளில் செல்கின்றன[10].(28) பயங்கரமான நரிகள், தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டும், தணல் போன்ற மூச்சை வெளியிட்டுக் கொண்டும், சுடலைகளில் இருந்து வெளிப்பட்டு, காலையிலும், மாலையிலும் நகரத்தை நோக்கிச் செல்கின்றன.(29) பயங்கர ஒலியுடன் எரிகொள்ளிகள் பூமியில் விழுகின்றன, திடீரெனப் பூமியும் மலையின் சிகரங்கள் அனைத்தும் நடுங்குகின்றன.(30) ராகுவால் சூரியன் பீடிக்கப்படுவதால் {சூரிய கிரஹணத்தால்} பகலும் இரவு போலத் தெரிகிறது, தீய அறிகுறியான புகை மற்றும் இடியால் திசைகள் அனைத்தும் நிறைந்திருக்கின்றன.(31) மின்னல்களுடன் கூடிய அடர்த்தியான மேகங்கள் குருதி மழையைப் பொழிகின்றன, தேவர்கள் தங்கள் நிலைகளில் இருந்து நழுவுகின்றனர், பறவைகள் தாங்கள் ஓய்ந்திருக்கும் மரங்களை விட்டு அகல்கின்றன.(32) ஒரு மன்னனின் எதிர்கால மரணத்தைக் குறிப்பதாகச் சோதிடர்களால் குறிப்பிடப்படும் தீய சகுனங்கள் அனைத்தும் தோன்றுகின்றன.(33)
[5] "ஆர்க்டரஸ் {ஸ்வாதி} நட்சத்திரம் அல்லது சந்திர விண்மீன்கூட்டங்களில் ஒரே நட்சத்திரத்தைக் கொண்ட விண்மீன் கூட்டமா இது, தொன்மவியலின்படி சூரியனின் மனைவியருள் ஒன்றாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[6] "இது கன்னி ராசியில் ஒரு நட்சத்திரமாகும். கம்ஸன் ஸ்வாதி நட்சத்திரத்தின் ஆதிக்கத்தில் பிறந்தவனாவான். சித்திரை அப்போது பத்தாமிடத்தில் இருந்தது. ராஹு இங்கே பகை ஆவான். இதில் இருந்து அவனது முயற்சிகள் வீணாகும் என்பதும் அவன் மரணமடைவான் என்பதும் தெளிவாகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[7] "இது செவ்வாய்க் கிரகமாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[8] "இது புதன் கிரகமாகும். கம்ஸனின் அதிகாரம் முடிவுக்கு வரப்போகிறது என்பதை இது முன்னறிவிக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[9] "இது மூன்று நட்சத்திரங்களைக் கொண்ட புனிதமான சந்திர விண்மீன் கூட்டத்தின் பெயர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[10] சித்திரசாலை பதிப்பில், "இங்கே பயங்கரக் கோளானது {ராஹு} ஸ்வாதி நட்சத்திரத்தை மறைக்கிறது. கொடுங்கோளான செவ்வாய் சித்திரை நட்சத்திரத்தைச் சூழ்ந்து அதை விழுங்குகிறது. புதன் கோளானது மேற்கு அடிவானில் தோன்றுகிறது. சுக்கிரன் கோள் வைஷ்வானரப் பாதையை நோக்கி வேகமாக நகர்கிறது. கேதுவின் மங்கலமற்ற இருப்பு பரணி தலைமையிலான பதிமூன்று நட்சத்திரங்களின் பிரகாசத்தைக் குறைக்கிறது. அது சந்திரனைப் பின்தொடரவில்லை. முந்தைய சந்தியா கால விளைவுகள் ஒரு பரிகத்தின் ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறது (சூரியனைச் சுற்றிலும் ஒரு கோடு தெரிகிறது). பறவைகளும், விலங்குகளும் எதிரெதிர் திசைகளில் முரட்டுத் தனமாகக் கதறுகின்றன" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "கொடுங்கோளானது ஸ்வாதி நட்சத்திரத்தின் கதிர்களை விழுங்குகிறது. செவ்வாய் கோளானது வானில் உள்ள பறவைகள் விழுங்குகிறது" என்று மட்டும் இருக்கிறது. கொடுங்கோள் என்பதன் அடிக்குறிப்பில், "இது செவ்வாயாகும். ஸ்வாதி கன்னி ராசியில் {துலோம் என்பதே சரி} இருக்கிறது. செவ்வாய் கன்னியில் இருப்பதும் மங்கலமற்றதாகவே கருதப்படுகிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "(உனக்கு) கொடிய ராஹுக்ரஹமே கிரணங்களால் ஆகாயத்தில் ஸ்வாதி (துலாத்தில்) ஸபர்சம் செய்து கொண்டிருக்கிறான். பயங்கரமாகத் தோன்றும் அங்காரகக்ரஹம் வக்ர கதியுடன் சித்ரை நக்ஷத்ரத்தில் ராசி சக்ரத்தில் இருக்கிறான். ஸாயம் ஸந்த்யாகாலம் புதன் க்ரஹத்தால் கடுமையான ஒளியோடு வ்யாபிக்கப்பட்டுள்ளது. சுக்ரக்ரஹம் சூரியனைத் தாண்டி அதிவேகமாக ஸஞ்சரிக்கிறான். (துர்நிருத்த) தூமகேது நக்ஷத்ரங்களாகிய பரணி முதலிய பதின்மூன்றும், கேதுவால் பிரிக்கப்பட்டுச் சந்திரனைப் பின்தொடரவில்லை. மேக வரிசைகளுடன் கூடிய விடியற்காலை ஒளியுடன் கூடிய சூரியனை மறைக்கிறது. விலங்குகளும், பறவைகளும் சப்தமிட்டுக் கொண்டு துர்நிமித்த திசையிலேயே செல்கின்றன" என்றிருக்கிறது. சுவாதி நட்சத்திரம் முழுமையாகத் துலாம் ராசியில் இருப்பது. சித்திரை நட்சத்திரத்தின் இரண்டு பாதங்கள் கன்னிராசியிலும், இரண்டு பாதங்கள் துலாம் ராசியிலும் இருக்கும். கம்ஸன் ஸ்வாதி நட்சத்திரத்தில் பிறந்தவன். அவனது நட்சத்திரத்தில் ராகுவும், அதற்குப் பனிரெண்டாம் ராசியான கன்னியில் உள்ள சித்திரை நட்சத்திரத்தில் செவ்வாயும், மேஷ ராசியில் உள்ள பரணி நட்சத்திரத்தில் கேதுவும் இருக்கின்றன. அடிவானில் புதனும், சுக்ரனும் இருக்கின்றன. விடியலில் சூரியனை ஒரு வட்டில் சூழ்ந்திருக்கிறது. இதுவே இங்கே சொல்லப்படும் செய்தி.
நீ எப்போதும் உன் உறவினர்களுக்குத் தீங்கிழைப்பவனாகவும், உன் அரச கடமைகளைச் செய்வதில் பின்தங்கியவனாகவும், ஒன்றுமில்லாதத்தற்குக் {காரணமில்லாமல்} கோபப்படுபவனாகவும் இருக்கிறாய். எனவே உன் மரணம் உடனடியாக நிகழும்.(34) வஸுவுக்கு ஒப்பானவனும், தேவனைப் போன்றவனும், வயதில் பெரியவனுமான வஸுதேவனை உன் மூடத்தனத்தால் நீ அவமதிக்கும்போது உனக்கு அமைதியேற்படாது.(35) நீ எங்கள் குலத்தின் பகைவனாவாய். இன்று முதல் நாங்கள் உன்னிடம் கொண்ட அன்பை விரட்டுவோம். இதற்குப் பிறகு ஒருக்கணமும் உன்னை நாங்கள் துதிக்க மாட்டோம்.(36) நமக்கு மத்தியில் கொடைகளை அளிப்பவன் {தானபதி /அக்ரூரன்} (இப்போது) காட்டில் திரிந்து கொண்டிருப்பவனும், களைப்பில்லா செயல்களைச் செய்பவனும், கமலக்கண்ணனுமான கிருஷ்ணனைக் காணும் அருளைப் பெற்றிருக்கிறான்.(37) உனக்காக இந்த யது குலமே வேரோடு பிடுங்கப்படுகிறது. கிருஷ்ணன் தன் உற்றார் உறவினருடன் மீண்டும் இணைவான்.(38) விதியினால் நீ முற்றிலும் மதியிழந்தவனாகி விட்டாய். நீ விரும்பியதையெல்லாம் பேசு. வஸுதேவன் அனைத்திற்காகவும் உன்னை மன்னிப்பான்.(39) ஓ! கம்ஸா, வஸுதேவன் துணையுடன் நீயே கிருஷ்ணனிடம் சென்று, அவனது நல்லருளை நயமாக வசப்படுத்திக் கொள்வதே முறையென இப்போது நான் நினைக்கிறேன்" என்றான் {அந்தகன்}" என்றார் {வைசம்பாயனர்}.(40)
விஷ்ணு பர்வம் பகுதி – 78 – 023ல் உள்ள சுலோகங்கள் : 40
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |