(யமுனாவர்ணனம்)
An account of Kalya | Vishnu-Parva-Chapter-66-011 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் அழகு; யமுனை ஆற்றின் வர்ணனை; காளியன் மடு...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "தாமரைக் கண்ணனும், கருநீலவண்ணனும், அழகிய முகத்தைக் கொண்டவனும், விரும்பிய வடிவங்களை ஏற்கவல்லவனும், காக்கை இறகைச் சூடியவனுமான கிருஷ்ணன் ஒருநாள் ஸங்கர்ஷணன் {பலராமன்} இல்லாமல் தனியாக அந்த அழகிய காட்டில் திரியத் தொடங்கினான். ஸ்ரீவத்ஸமெனும் மறைக்குறியைத் தன் மார்பில் தாங்கிய அவன், முயல் குறியோடு கூடிய சந்திரனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(2) அங்கதங்கள் {தோள்வளைகளைச்} சூடிய அவனது கரங்களும், மென்வண்ணம் கொண்டு நகரும் அவனது சிறு பாதங்கள் இரண்டும் பிரகாசமான தாமரைகளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தன. உலகுக்கு மகிழ்ச்சியை உண்டாக்குபவையும், தாமரையின் மகரந்தத்திற்கு ஒப்பானவையுமான அவனது மஞ்சள் ஆடைகள் {பீதாம்பரங்கள்} இரண்டும் மாலை நேர மேகங்களைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(4) பருத்தவையும், பசுக்களை மேய்ப்பதில் ஈடுபட்டிருப்பவையும், தேவர்களால் வழிபடப்படுபவையுமான அவனது கைகளில் கயிறுகளும், கழிகளும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.(5)
அழகிய உதடுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததும், தாமரையைப் போன்றதுமான அவனுடைய அழகிய வாயில் இருந்து கருநீலத் தாமரைக்கு ஒப்பான இனிய நறுமணம் வெளிப்பட்டது.(6) கலைந்த கேசங்களுடன் பளபளத்த அவனது முகம், கருவண்டுகளால் சூழப்பட்ட தாமரையைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது.(7) புதிதாய் மலர்ந்த அர்ஜுன, கதம்ப மற்றும் நீப {கடப்ப} மலர்களின் மொட்டுகளால் அமைக்கப்பட்டிருந்த மாலையானது, வானத்தில் நட்சத்திரங்களின் மாலையைப் போல அவனது தலையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.(8) மழைக்கால மேகங்களின் கருநீல வண்ணம் கொண்ட அந்த வீரன் {கிருஷ்ணன்}, தன் கழுத்தைச் சுற்றி அதே நிறத்திலான மாலையுடன், பாத்ர {புரட்டாசி} மாதத்தின் அவதாரம் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(9) அவனது கழுத்தைச் சுற்றி இருந்த கயிற்றில் கட்டப்பட்டிருந்த தூய்மையான இலைகள், மயிலிறகின் மூலம் எழும்பிய மெல்லிய தென்றலால் அசைக்கப்பட்டு அங்கே அழகாக ஒளிர்ந்து கொண்டிருந்தன.(10)
இவ்வாறு ஒவ்வொரு நாளும் அந்த இளைஞன், காட்டில் ஏதோவோரிடத்தில் பாடியும், ஏதோவோரிடத்தில் விளையாடியும், நடந்தும், ஏதோவோரிடத்தில் தன் பசுக்களை நிறைவடையச் செய்வதற்காகத் தான் விரும்பியவாறு பர்ணம் மற்றும் ஊதுகுழலில் இனிய இசையை அமைத்தும் திரிந்து வந்தான்.(11,12) பலமிக்கவனும், பிரகாசமானவனும், மேகம் போன்ற கருநீல வண்ணம் கொண்டவனுமான கிருஷ்ணன், அற்புதம் நிறைந்த அந்தக் காட்டில் திரிந்தும், மரங்களில் இருந்து உண்டாகும் இனிய காற்றால் வருடப்பட்டும் பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.(13) அது {அந்தக் காடு} மயில்களின் அகவல்களை ஒத்து அதிர்ந்தது, அங்கிருந்த குகைகள் மனிதர்களிடம் காமத்தைத் தூண்டும் மேகமுழக்கங்களை எதிரொலித்தன.(14) அது வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதிதாய் முளைத்த புல், கொப்புகள் மற்றும் தாமரைகளால் அது மறைக்கப்பட்டிருந்தது.(15) அது பல நீரூற்றுகள் நிறைந்ததாகவும், ஆசையை வெளிப்படுத்தும் மகளிரின் மூச்சுக்காற்றைப் போன்ற தாமரையின் மகரந்த நறுமணத்துடன் கூடியதாகவும் இருந்தது.(16,17)
ஒரு நாள் அந்தக் காட்டில் தன் பசுக்களுடன் அவன் திரிந்து கொண்டிருந்தபோது, உயர்ந்த கிளைகளுடன் கூடிய ஒரு முதன்மையான மரத்தை அங்கே கண்டான்.(18) அடர்த்தியான இலைகளால் சூழப்பட்டிருந்த அஃது ஒரு மேகத்தைப் போலப் பூமியில் நிலைத்திருந்தது. உயரத்தால் பாதி வானை அஃது எட்டிக் கொண்டிருந்தது, மேலும் அங்கே காற்றின் இன்பத்தை அனுபவிக்க முடிந்தது.(19) நீலம் மற்றும் வேறு பல்வேறு வண்ணங்களுடன் கூடிய கனிகளால் மறைக்கப்பட்டதாகவும், பல்வேறு பறவைகள் அடிக்கடி வருவதும் போவதுமாக இருந்த அது வானவில்லுடன் கூடிய ஒரு மேகத்தைப் போலத் தோன்றியது.(20) மலர்க்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் வேர்களின் காரணமாக வளைந்திருப்பவையும், வீடுகளுக்கு ஒப்பானவையுமான மரங்களில் காற்றும், மேகமும் ஒரே நேரத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிந்தது.(21) மழை மற்றும் சூரியனின் கதிர்களை எதிர்த்துப் பாதுகாப்பு வழங்கக்கூடியதாக இருந்த அந்தப் பெரும் மரம், உண்மையாகவே தன் நற்செயல்களால் பிற மரங்களை ஆண்டு வருவதுபோலத் தெரிந்தது.(22) பாவமற்ற தலைவனான கிருஷ்ணன், மலைச்சிகரத்திற்கு ஒப்பான இந்தப் பாண்டீரக ஆல மரத்தைக் கண்டு அங்கே வாழ விரும்பினான்.(23) அதன்பிறகு, தன் வயதைக் கொண்ட ஆயர்குலச் சிறுவர்களுடன் விளையாட்டில் ஈடுபட்டு, தேவர்களின் நகரத்தில் இருப்பதைப் போல அங்கே அந்த நாளை கழித்தான்.(24)
கிருஷ்ணன் அந்தப் பாண்டீரக மரத்தின் அடியில் விளையாடத் தொடங்கிய போது, மற்ற கோபாலச் சிறுவர்கள் தங்கள் முரட்டு விளையாட்டுகள் பலவற்றால் அவனை மகிழ்வித்தனர்.(25) ஆயர்கள் அங்கே பாடத் தொடங்கினர், மகிழ்விக்க விரும்பும் சிறுவர்கள் கிருஷ்ணனுடன் தொடர்புடைய பல்வேறு பாடல்களை அங்கே பாடினர்.(26) பணவ இசையின் துணையுடன் அவர்கள் இவ்வாறு பாடிக் கொண்டிருந்தபோது, சக்திவாய்ந்த கிருஷ்ணனும் சிலநேரங்களில் தன் புல்லாங்குழலையும், தும்பியையும் {சுரைக்காய் வீணையையும்} இசைத்தான்.(27)
காளைகளின் கண்களைக் கொண்ட கிருஷ்ணன் ஒரு நாள் தன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்த போது, கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் நிறைந்த யமுனைக்கரைக்குச் சென்றான்.(28) அங்கே அவன் நீரில் வீசிக் கொண்டிருக்கும் இனிமை நிறைந்த காற்றைக் கண்டான்; நெய்தல் மற்றும் தாமரைகளுடன் பளபளப்பாக இருந்தவளும், ஆறுகளில் முதன்மையானவளுமான யமுனை, தன் அலைகளின் மூலம் பார்த்துக் கொண்டிருப்பவளைப் போலத் தெரிந்தாள்.(29) அவளது படிக்கட்டுகள் அனைத்தும் நன்கு சமமானவையாகவும், அவளது நீர் சுவையானதாகவும் இருந்தன; அவள் பல தடாகங்களைக் கொண்டிருந்தாள், அவளது நீரோட்டமும் வலுவாக இருந்தது. (அவளது கரையில் இருந்த) மரங்கள் அனைத்தும் நீர்க்காற்றால் நடுங்கிக் கொண்டிருந்தன.(30) அன்னப்பறவைகள், காரந்தவங்கள் {வாத்துகள்}, ஸாரஸங்களின் {கொக்குகளின்} இனிய ஒலிகளை எதிரொலிப்பவளாகவும், சக்கரவாகங்கள் மற்றும் இணைகளாகத் திரியும் பிற நீர்க்கோழிகள் அடிக்கடி வந்து செல்லும் இடமாகவும் அவள் இருந்தாள்.(31) அவளது நீரானது, நீர் விலங்குகள் நிறைந்ததாகவும், நற்குணங்கள் அனைத்துடன் கூடியதாகவும், நீரில் பிறந்த பல்வேறு மலர்களால் பலவண்ணங்களைக் கொண்டதாகவும், நீரில் பிறந்த பாசிப்பவளங்களின் மூலம் மஞ்சளாகவும் இருந்தது.(32)
கடந்து செல்லும் நீரோட்டங்கள் அவளது பாதங்களாகவும், கரை அவளது இடையாகவும், சுழல் அவளது உந்தியாகவும், தாமரைகள் அவளது உடல்மயிராகவும்,(33) கரையின் குழிகள் வயிறாகவும், அலையின் மூன்று வளைவுகள் நெற்றிச் சுருக்கங்களாகவும், கரையின் பக்கங்கள் அவளது பரந்த முகமாகவும், நுரைகள் பற்களாகவும், அன்னப்பறவைகள் அவளது புன்னகையாகவும்,(34) நெய்தல்கள் {அல்லது செந்தாமரைகள்} உதடுகளாகவும், நீரில் பிறந்த மலர்கள் கண்களாகவும், மடுக்கள் வளைந்த புருவங்களாகவும், தடாகங்கள் நெற்றியாகவும், பவளங்கள் {பாசிகள்} அழகிய தலைமயிராகவும்,(35) நீண்ட பரந்த நீரோடைகள் அவளது நீண்ட கரங்களாகவும், பாம்புகள் காதுகளாகவும், வாத்துகள் குண்டலங்களாகவும், தாமரைகள் அவளது அழகிய கண்களாகவும், கரைகளில் வளர்ந்த மரங்கள் ஆபரணங்களாகவும், மீன்கள் இடையின் ஆபரணங்களாகவும் {மேகலையாகவும்},(36,37) பிற வகைப் பவளங்கள் பட்டுடையாகவும், ஸாரஸங்களின் {கொக்குகளின்} ஒலி நூபுரங்களாகவும் {சிலம்புகளாகவும்}, காச மலர்கள் அவளது உடையாகவும், அன்னப்பறவைகள் மற்றும் ஆமைகள் மங்கலக் குறிகளாகவும்,(38) மீன்கள் மற்றும் முதலைகள் சந்தனக் குழம்பாகவும், அகழிகளில் விளையாடும் விலங்குகளும் மனிதர்களும் எழுச்சிமிக்க அவளது முலைகளாகவும் இருந்தன.(39) விலங்குகள் அவளது நீரைக் கலங்கடித்தன, அவளது கரைகள் முனிவர்களின் ஆசிரமங்கள் நிறைந்தவையாக இருந்தன. பெருங்கடலின் அரசியான இந்த அழகிய யமுனையைக் கண்ட கிருஷ்ணன், அவளை மேலும் அழகுறச் செய்பவனைப் போல அங்கே திரிந்து கொண்டிருந்தான்.(40,41)
இவ்வாறு உலவிக் கொண்டிருந்தபோது அங்கே அவன் மேகங்களால் மகுடம் சூட்டப்பட்ட வானத்திற்கு ஒப்பானதும், ஆழமான நீரைக் கொண்டதுமான ஒரு பெரிய மடுவைக் கண்டான். அஃது ஒரு யோஜனை {9 மைல்கள்} தொலைவுக்குப் பரந்திருந்தது, தேவர்களாலும் அதைக் கடக்க முடியாததைப் போல இருந்தது. அதன் நீர் ஆழமானதாகவும், பெருங்கடலைப் போன்று அசைவற்றதாக இருந்தது. விலங்குகளாலும், நீர்வாழ் விலங்குகளாலும், நீர்க்கோழிகளாலும் அது கைவிடப்பட்ட பகுதியாக இருந்தது.(42,43) கரைகளில் பாம்புகளுடன் அங்கே இருந்த குளங்களைக் கடப்பதற்கு மக்கள் பெரும் அல்லலடைந்தனர். நஞ்சுமிக்க மரங்களில் இருந்து உண்டாகும் புகையால் அது {அந்த மடு} சூழப்பட்டிருந்தது.(44) ஒரு நாளில் மூன்று முறை நீராட விரும்பும் முனிவர்களால் அதன் நீரை அனுபவிக்க முடியவில்லை. விலங்குகளுக்கும் தகாததாக இருக்கும் அது {அந்த மடு} நீர் தேவைப்படும் மனிதர்களுக்குப் பயன்படும் என எவ்வாறு சொல்ல முடியும்?(45) பறவைகளும் அதன் மேலே வானத்தில் பறந்து திரிய முடியாது, புல்லும் கூட அதில் விழுந்த உடனேயே எரிந்து விடும்.(46) அனைத்துப் பக்கங்களிலும் ஒரு யோஜனை {9 மைல்} தொலைவுக்குப் பரந்திருக்கும் அந்த மடுவை தேவர்களாலும் அணுக முடியாது. மேலும் அங்கே இருந்த மரங்கள், பயங்கர நஞ்சுமிக்க நெருப்பால் எரிக்கப்பட்டன.(47)
பேரிடர்களில் இருந்து விடுபட்டிருந்த அந்த மாகாணத்தில், விரஜத்தில் {பிருந்தாவனத்தின் ஆய்ப்பாடியில்} இருந்து ஒரு குரோசம் {2.5 மைல்} தொலைவில் இத்தகைய பெரிய மடுவைக் கண்ட கிருஷ்ணன் சிந்திக்கத் தொடங்கினான்,(48) "ஆழமானதும், பெரியதுமான இந்த மடு யாருடையது? மைத்திரளின் குவியலுக்கு ஒப்பானவன் என நான் ஏற்கனவே கேள்விப்பட்டவனும்,(49) பாம்புகளை உண்டு வாழும் பறவைகளின் மன்னனான கருடனுக்கு அஞ்சி பெருங்கடலைவிட்டு அகன்றவனுமான காளியன்(50) இங்கு வாழ்ந்து வருகிறான் என நான் நினைக்கிறேன். பெருங்கடலுக்குப் பாயும் யமுனை அவனாலேயே மாசடைந்திருக்கிறாள்.(51) பாம்புகளின் மன்னனான அவனுக்கு {காளியனுக்கு} அஞ்சியே இங்கே ஒருவரும் வாழ்வதில்லை. அந்தப் பாம்புமன்னனின் அமைச்சர்களால் பாதுகாக்கப்படுவதும், அவனுக்கு நன்மை செய்வதும், புற்கள், பல்வேறு மரங்கள் மற்றும் செடிகொடிகளால் நிறைந்திருப்பதுமான இந்தப் பயங்கரக் காடானது, வானத்தைப் போல அடையமுடியாததாகவும், நஞ்சுமிக்க உணவைப் போலத் தீண்டத்தகாததாகவும் இருக்கிறது.(52-54)
பாசிப்பவளங்கள், மரங்கள் மற்றும் செடிகொடிகள் நிறைந்தவையும், அவனது {காளியனின்} பணியாட்களால் பாதுகாக்கப்படுபவையுமான கரைகளும் அவனுக்கு நன்மையைச் செய்கின்றன. இதன் இரு கரைகளிலும் செயற்கையான இரு வீதிகள் இருப்பது தெரிகிறது {வழிதேடும்படியாக மறைக்கப்பட்டிருப்பது தெரிகிறது}.(55) எனினும், நான் இந்தப் பாம்புகளின் மன்னனை வெல்ல வேண்டும். விரஜத்தில் {கோகுலத்தில்} வசிப்போருக்குப் பயன்படும் வகையில் இந்த மடுவின் நீரை மாற்றவும், இனிமை நிறைந்த காற்று இங்கே வீசவும், படிக்கட்டுகளைப் பயன்படுத்தத்தக்கனவாக மாற்றவும் நான் அந்தப் பாம்பை வீழ்த்த வேண்டும்.(56,57) எப்போதும் தீய வழிகளையே பின்பற்றும் இந்தத் தீயவர்களை வெல்வதற்காகவே நான் கோபனாக {ஆயனாகப்} பிறந்து, கோபர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறேன்.(58) எனவே, நான் ஒரு குழந்தையைப் போல விளையாடிக் கொண்டு இந்தக் கதம்ப மரத்தில் ஏறி இந்த மடுவுக்குள் குதித்துக் காளியனை வெல்லப் போகிறேன்.(59) இதைச் செய்வதால் மேன்மையான என் கரங்களின் சக்தியை அனைவரும் அறிந்து கொள்வார்கள்" {என்று சிந்தித்தான் கிருஷ்ணன்}" என்றார் {வைசம்பாயனர்}.(60)
விஷ்ணு பர்வம் பகுதி – 66 – 011ல் உள்ள சுலோகங்கள் : 60
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |