(நாராயண ஆஷ்ரம வர்ணனம்)
An account of Narayanashrama | Harivamsha-Parva-Chapter-50 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : பிரம்மலோகத்தில் நாராயணாஷ்ரமத்தில் நுழைந்த விஷ்ணு; விஷ்ணுவின் துயில்; விஷ்ணு உறங்கும்போது அவனது கடமைகளைச் செய்யும் இந்திரன்; விஷ்ணுவுடன் பிறந்த மாயை; முனிவர்கள் வேண்டியது; விஷ்ணு விழித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு ரிஷிகளால் வழிபடப்பட்ட அந்தத் தேவன் {நாராயணன்}, புராணங்களில் விளக்கப்பட்டுள்ளபடியே நாராயணனின் ஆசிரமமான பிரம்மனின் தெய்வீக வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்[1].(1) அவன் {நாராயணன்}, அந்த ரிஷிகள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் வழிபட்டு, தாமரையில் உதித்த தலைமைத் தேவனான பிரம்மனை வணங்கி ஏற்கனவே குறிப்பிடப்பட்ட உலகத்திற்குள் நுழைந்தான்.(2) அந்தத் தலைவன், தன் பெயரையே கொண்ட நாராயண ஆசிரமத்திற்குள் நுழைந்த பிறகு தன் ஆயுதங்கள் அனைத்தையும் விட்டான்.(3) அங்கே அவன், பெருங்கடலுக்கு ஒப்பான தன் வசிப்பிடம் தேவர்களாலும், இறப்பற்ற முனிவர்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டான்.(4)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "பிரம்மலோகத்தைச் சேர்ந்த முனிவர்களின் வணக்கத்தைப் பெற்றுக் கொண்ட தேவன் ஸ்ரீஹரி, பிரம்மனின் பணிவிணக்கத்தைப் பெற்று பிரம்மனின் வசிப்பிடத்திற்குச் சென்று, நாராயணாஷ்ரமம் என்றழைக்கப்படுவதும், புனிதமானதும், புராணங்களில் புகழப்படுவதும், பிரம்மலோகத்திலேயே இருப்பதுமான நாராயணனின் ஆசிரமத்திற்குள் நுழைந்தன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "முனிவர்களால் வணங்கப்பட்ட தலைவன் ஹரி, புராதனமானதும், தெய்வீகமானதும், நாராயணனின் ஆசிரமல்லாமல் வேறில்லாததுமான பிரம்மனின் வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்" என்றிருக்கிறது.
அந்த வசிப்பிடம், சம்வர்த்தக மேகங்கள் மற்றும் பிற மேகங்களால் மறைக்கப்பட்டு, விண்மீன்கள் உலகின் இருளால் சூழப்பட்டு, தேவர்களும், அசுரர்களும் அடைவதற்கு அப்பால் இருந்தது.(5) அங்கே காற்று வீசுவதில்லை, சூரியனும், சந்திரனும் ஒளிர்வதில்லை. அது தாமரை உந்தி தேவனுடைய உடலின் பிரகாசத்தால் மறைக்கப்பட்டிருந்தது.(6) ஆயிரம் தலைகளுடன் சடாமுடி தரித்த அந்தத் தேவன் {நாராயணன்} அங்கே நுழைந்து, படுத்துக்கிடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான்.(7) கரிய கண்களைக் கொண்டதும், மனிதர்களின் இறுதி நாட்களை அறிந்ததும், மரணம் போன்றதுமான துயில் {உறக்கம்} அந்த உயரான்ம தேவன் முன்பு தோன்றியது.(8)
புலன்களை ஆளும் திறனை அடைந்தவனும், நோன்பு நோற்பவர்களில் முதன்மையானவனுமான ஹரி, பெருங்கடலின் நீரைப் போலக் குளிர்ந்த தெய்வீகப் படுக்கையில் தன்னைக் கிடத்திக் கொண்டான்[2].(9) ரிஷிகளும், தேவர்களும், அண்டத்தைப் படைப்பதற்காக இவ்வாறு துயில் கொண்டவனும், எல்லாம் வல்லவனுமான பெரும் விஷ்ணுவை வழிபடத்தொடங்கினர்[3].(10) அவன் உறங்கிக் கொண்டிருந்தபோது, சூரியனைப் போன்ற பிரகாசமிக்கதும், தொடக்கமும் முடிவுமாக இருக்கும் குடிமுதல்வன் பிரம்மனின் (பிரம்மன் அமர்வதற்குண்டான) இருக்கையுமான ஒரு தாமரை அவனது உந்தியில் உதித்தது.(11) ஆயிரம் இதழ்களையும், அழகிய வண்ணத்தையும் கொண்ட அந்தத் தாமரை, மென்மையானதாகவும், நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. பெரும் முனிவனான பிரம்மன், மாசற்ற ஆசையின் சரடான தன் கையை உயர்த்தி, காலத்தால் கொண்டுவரப்படும் உலகங்கள் அனைத்தின் மாற்றங்களுக்குரிய சக்கரத்தைச் சுழற்றுகிறான்[4].(12)
[2] "இது விஷ்ணுவின் சமாதி அல்லது தீவிர தியானம் குறித்த ஓர் உருவகக் கதை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[3] "இவ்வாறு சமாதியில் ஈடுபட்டான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[4] "பிரம்மனால் அண்டத்தின் படைப்பு நிகழ்த்தப்பட்டது என்பது இங்கே பொருள். உலகில் வெளிப்படும் மாற்றங்கள் அனைத்தும் அவனது பணிகளே. இந்தப் படைப்பும் அவனது ஆசையின் விளைவே. முதலில் அவன் விருப்பத்தை வளர்க்கிறான், பிறகு படைப்புத் தொழிலில் ஈடுபடுகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
அவனுடைய மூச்சுக் காற்றின் மூலம் அசைக்கப்பட்டு, அவனது வாயில் இருந்து குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} வெளிவருகிறார்கள். சில வேளைகளில் அவர்கள் கீழே விழுகிறார்கள், சில வேளைகளில் அவர்கள் மேலே உயர்கிறார்கள்.(13) இவ்வாறு அவனால் படைக்கப்படும் மனிதர்கள், மீண்டும் பிரம்மனால் நான்கு வகையினராகப் பிரிக்கப்படுகின்றனர். பிறகு வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள பணிகளைச் செய்வதன் மூலம் அவர்கள் தங்கள் இலக்குகளை அடைகின்றனர்.(14) பிரம்மனாலும், இறப்பிலிகளான ரிஷிகளாலும் கூட இவ்வாறு தமஸில் மறைக்கப்பட்டு யோகத் துயிலில் ஈடுபடும் விஷ்ணுவைப் புரிந்து கொள்ள முடியாது[5].(15) நாராயணன் எப்போது உறங்குகிறான், எப்போது தன் படுக்கையில் அமர்ந்து கொள்கிறான் என்பதைப் பெரும்பாட்டனின் தலைமையிலான பிராமண முனிவர்களால் காண முடியாது.(16) இந்த உடலில் விழித்திருப்பவன் எவன்? துயில்பவன் எவன்? இயன்றும், பணியைச் செய்யாதவன் எவன்? பல்வேறு இன்பநுகர் பொருட்களில் இன்புற்றிருப்பவன் எவன்? பிரகாசிப்பவன் எவன்? நுட்பத்திலும் நுட்பமானவன் எவன்?(17)
[5] "இஃது இருள் {தமோ} குணமாகும். விஷ்ணு, படைக்கும் விருப்பத்தைக் கொள்ளும்போது, தன் வடிவத்தைத் தியானத்தில் ஈடுபடுகிறான் என்பது இந்த வாக்கியத்தின் பொருளாகும். சத்வம் அல்லது நல்லியல்பின் குணம் அவனில் பேராதிக்கம் செலுத்தும்போது, அவன் படைப்புத் தொழிலில் இருந்து முற்றிலும் ஓய்கிறான். அவன் படைப்பதில் விருப்பம் கொள்ளும்போது, தமஸ், அல்லது இருளின் குணம் அவனில் ஆதிக்கம் செலுத்துகிறது. அவனில் ஏற்படும் இந்த விருப்பத்தின் பிறப்பிடமே படைப்பின் வேராக இருக்கிறது. நம் முன்பு இருக்கும் மொத்த அண்டமும் அவனது விருப்பத்தின் விளைவில் வந்த வெளிப்பாடே ஆகும். இந்து தொன்மவியலின்படி படைப்பும் {தோற்றமும்}, கலைப்பும் {அழிவும்} இடைவிடாமல் நடந்து கொண்டே இருக்கின்றன. இந்தப் படைப்புகள் ஒவ்வொன்றும் தலைவனின் தூய்மையான, முற்றான விருப்பத்தைச் சார்ந்திருக்கிறது. உயர்ந்த தலைவனான விஷ்ணு, படைக்கும் விருப்பத்தை வளர்க்கும்போது, அவன் தன் சொந்த வடிவைத் தியானிப்பதில் ஈடுபடுகிறான். இவ்வாறு தியானிப்பதே, உறக்கமென உருவகமாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தியானத்தில் இருந்தே, இந்தப் பெரும்பணிக்கான ஏற்பாடுகளைச் செய்யும் பிரம்மன் உண்டாகிறான். ஆனால் அவனும் தலைவனின் விருப்பத்தைச் சார்ந்திருக்கிறான். அடுத்ததாகப் பிரம்மன், பல்வேறு குடும்பங்களை {குலங்களை} தோற்றுவிப்பவர்களான குடிமுதல்வர்களை உண்டாக்குகிறான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
ஸ்ருதிகளில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு வாதங்களின் மூலம் ரிஷிகள் அவனது இருப்பைக் கண்டுபிடிக்க முயல்கின்றனர். பிறப்பாலோ, செயலாலோ எவராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியாது.(18) புராதன ரிஷிகள் அவனது மகிமைகளைப் புராணங்களில் பாடியிருக்கின்றனர். அவனால் தொகுக்கப்பட்ட பாடல்களின் மூலம் அவனது வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.(19) அவனது புராதன வரலாறும் தேவர்களுக்கு மத்தியில் கேள்விப்படப்படுகிறது. பெரும் புராணங்களுக்குப் பிறகு, அவனது செயல்களைப் போற்றும் பதிவுகள் வேறேதும் இல்லை.(20)
வேதங்கள், மனிதர்களின் பழக்க வழக்கங்கள் தொடர்பான ஸ்ருதிகள் அனைத்தும், தேவர்களின் தேவனான அவனது ஆற்றலால் நிறைந்திருக்கின்றன.(21) அனைத்து உயிரினங்களின் பிறப்பிடமான அந்தத் தலைவன், உலகங்கள் அனைத்தும் படைக்கப்படும் நேரத்தில் தோன்றுகிறான். அந்த மதுசூதனன், தானவர்களின் அழிவுக்காக விழித்திருக்கிறான்.(22) இறப்பற்றவனான இந்தப் புருஷன் உறங்கச் செல்லும்போது, தேவர்களாலும் அவனைக் காண முடியாது. அவன் கோடையின் முடிவில் உறங்கச் சென்று, மழையின் முடிவுக்குப் பிறகு விழித்துக் கொள்கிறான்.(23) அவன், வேதங்கள், வேள்விகள் மற்றும் பிற துணை சடங்குகளோடு அடையாளங்காணப் படுபவனாவான். புருஷர்களில் முதன்மையான இவனே, விளக்கப்படும் வேள்விகளின் போக்காக {வேள்வி வழிகளாக} இருக்கிறான்.(24)
அவன் உறங்கும்போது, மந்திரங்களால் புனிதப்படும் வேள்விகள் அனைத்தும் நிறுத்தப்படுகின்றன. கூதிர்கால வேள்வி நடைபெறும்போது மதுசூதனன் விழிக்கிறான்.(25) விஷ்ணு உறங்கச் செல்லும்போது, நீரின் தலைவனான புரந்தரன், அவனது கடமைகள் அனைத்தையும் செய்து நீரைப் பொழிகிறான்.(26) இருள் என்றும், உறக்கம் என்றும் உலகில் இருப்பதும், மன்னர்களுக்கு மரண இரவைப் போன்றதுமான மாயையானது, போரிடுவதன் மூலம் ஒருவரையொருவர் கொல்வோருக்குச் சீரழிவைக் கொண்டு வருகிறது.(27) இருளெனும் தன்னுடலால் அஃது {அந்த மாயை} இரவுகளையும், பகல்களையும் அழிக்கிறது. மேலும் இந்தப் பயங்கர மாயை, உலகின் உயிரினங்கள் அனைத்தினுடைய பாதி வாழ்நாளை {வாழ்வில் பாதி நாட்களைக்} களவாடுகிறது.(28)
பெருங்கடலில் கிட்டத்தட்ட முழுகியவர்களைப் போல, இந்த உறக்கத்தால் பீடிக்கப்பட்டு, மீண்டும் மீண்டும் கொட்டாவி விடும் மக்கள் சிலரால், இதன் {இந்த மாயையின்} சக்தியைத் தாங்கிக் கொள்ள முடியாது.(29) {அதிக} உணவு அல்லது {வீண்} உழைப்பால் உண்டாகும் உறக்கம், இவ்வுலகில் மனிதர்கள் எவருக்கும் நன்மையை உண்டாக்காது.(30) இவ்வுலகில் உயிரினங்களின் கனவு முடிந்ததும் அது வலுவிழக்கிறது; மேலும் அஃது, அவர்களின் மரண வேளையில் அவர்களின் உயிர்க் காற்றுகள் அனைத்தையும் அழிக்கிறது.(31) நாராயணனைத் தவிரத் தேவர்களில் எவராலும், இந்தத் துயிலின் சக்தியைத் தாக்குப்பிடிக்க இயலாது. இந்த மாயை அல்லது தோற்ற மயக்கமானது, அனைவரையும் அழிக்கும் விஷ்ணுவின் உடலிலேயே தோன்றிய பெண் துணையாகும்.(32)
தாமரைக் கண்களைக் கொண்ட இவள் {மாயை}, நாராயணனின் முகத்தில் காணப்பட்டாள். உயிரினங்கள் அனைத்தையும் கலங்கடிக்கும் இவள், எந்த நேரத்திலும் உலகங்கள் அனைத்தையும் உண்டுவிடக் கூடியவளாவாள்.(33) மனித குலத்தின் நன்மைக்காக இவள் விஷ்ணுவால் பராமரிக்கப்படுகிறாள். தன் கணவனுக்குத் தொண்டு செய்யும் கற்புநிறைந்த பெண்ணாக இவள் அனைவராலும் போற்றப்படுகிறாள்.(34) தலைவன் விஷ்ணு, இந்த உறக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக நித்திய உலகைக் கலங்கடித்து, நாராயண ஆசிரமத்தில் உறங்கினான்.(35) அந்த உயரான்ம தேவன் இவ்வாறு உறங்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளும், மிகச்சிறந்த சத்ய, திரேதா யுகங்களும் கடந்து சென்றன.(36) துவாபர யுகத்தின் நெருக்கத்தில், மனித குலத்தின் துயரங்களைக் கண்டு, பெரும்பிரகாசம் கொண்ட தேவனின் மகிமைகளைப் பெரும் முனிவர்கள் பாடத் தொடங்கிய போதே அவன் விழித்தான்.(37)
ரிஷிகள், "ஓ! தலைவா, ஏற்கனவே அனுபவிக்கப்பட்ட ஒரு மாலையைத் தூக்கி எறிவதைப் போல உன் சுயமாகப் பிறந்த இந்த உறக்கத்தைப் கைவிடுவாயாக. பிரம்மனும், தேவர்கள் அனைவரும் உன்னைக் காணக் காத்திருக்கின்றனர்.(38) ஓ! ரிஷிகேசா, தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், பிரம்ம ஞானத்தை நன்கறிந்தவர்களும், அவனது மகிமைகளைப் பாடுபவர்களுமான இந்த ரிஷிகள் அனைவரும் உன்னை வரவேற்கின்றனர்.(39) ஓ! விஷ்ணு, நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று மற்றும் நீரென்ற ஐம்பூதங்களோடும் அடையாளங்காணப்படும் இந்த முனிவர்களின் மங்கலச் சொற்களைக் கேட்பாயாக.(40) ஓ! தேவர்களும், சப்தரிஷிகளும், இந்த முனிவர்கள் அனைவரும், அழகிய தெய்வீகப் பாடல்களால் உன் மகிமைகளைப் பாடுகின்றனர்.(41) ஓ! பேரொளி கொண்டவனே, ஓ! ஆயிரம் இதழ் தாமரையை உந்தியில் கொண்டவனே, தேவர்களின் சில முக்கிய வேலைகளுக்காக நீ தேவைப்படுகிறாய்" என்றனர்".(42)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ரிஷிகேசன், நீரின் அளவைக் குறைத்து, இருளை அகற்றி, பேரழகில் ஒளிர்ந்தபடியே எழுந்தான்.(43) அவன், உலகத்திற்காகப் பெரிதும் வருந்துபவர்களும், தன்னிடம் ஏதோ பேச விரும்பியவர்களுமான தேவர்கள் அனைவரையும், பெரும்பாட்டனையும் அங்கே கண்டான்.(44) உறக்கத்தால் சோர்வில் இருந்து விடுபட்ட கண்களுடன் கூடிய தலைவன் நாராயணன், நல்ல ஞானத்தாலும், தொலைநோக்குப் பார்வையாலும் நிறைந்த சொற்களில் அவர்களிடம் பேசினான்.(45)
விஷ்ணு, "ஓ! தேவர்களே, உங்கள் சச்சரவு தோன்றியது எங்கே? உங்கள் அச்சம் யாரிடம் இருந்து வந்தது? தேவையை உணர்வது யார்? {தேவையை உணர்வது} எதற்காக? நான் உங்களுக்கு உதவுவது எவ்வாறு?(46) தானவர்களின் மூலம் உலகிற்குப் பேரிடரேதும் ஏற்பட்டதா? மனிதர்கள் தங்கள் பலவீனத்தினால் ஏதேனும் தீப்பேற்றை அடைந்தனரா? தாமதமேதும் இல்லாமல் இவை அனைத்தையும் நான் அறிய விரும்புகிறேன்.(47) மிகச் சிறந்த என் படுக்கையைத் துறந்து, உங்களுக்கு நன்மை செய்வதற்காகப் பிரம்மவாதிகளின் மத்தியில் நான் நிற்கிறேன். நான் உங்களுக்குச் செய்ய வேண்டியதென்ன?" என்று கேட்டான் {விஷ்ணு}" என்றார் {வைசம்பாயனர்}.(48)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 50ல் உள்ள சுலோகங்கள் : 48
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |