Tuesday, 24 March 2020

சூரியனின் சந்ததி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 09

(வைவஸ்வதோத்பத்தி)

Account of the Sun's Offspring - Emergence of Vaivasvata Manu | Harivamsa-Parva-Chapter-09 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : சூரியனின் பிறப்பு; வைவஸ்வத மனு, யமன், யமுனையின் பிறப்பு; சஜனையின் நிழலில் பிறந்த சாயாதேவி; சாவர்ணி மனு, சனீஸ்வரன் பிறப்பு; சூரியனின் கடுமையைக் குறித்துச் செதுக்கிய விஸ்வகர்மன்; அஸ்வினி தேவர்களின் பிறப்பு; விஷ்ணுவின் சக்கரத்தை வடிவமைத்த விஸ்வகர்மன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பகைவரை அடக்குபவனே, கசியபர், தக்ஷனின் மகளான அதிதியிடம் விவஸ்வானை {சூரியனைப்} பெற்றார். அவன் {துவாஷ்டிரியின் / விஸ்வகர்மாவின் மகளான} ஸஜனா {ஸஞ்சனா} தேவியை மணந்தான்.(1) அந்த அழகிய மங்கை ஸுரேணு என்ற பெயரில் மூவுலகங்களிலும் கொண்டாடப்பட்டாள். உயர் ஆன்மா கொண்டவனும், தெய்வீகமானவனுமான மார்த்தாண்டனின் (சூரியனின்) மனைவியும், அழகும், இளமையும் கொண்டவளுமான அவள், தன் கணவனின் அழகில் நிறைவடைந்தாளில்லை[1]. இந்தப் பூமியில் உள்ள பெண்களின் மத்தியில், ஸஜனை பெரும் தவச் சக்திகளைக் கொடையாகப் பெற்றிருந்தாள். சூரியனின் கதிர்களால் எரிந்த உடலுடன் கூடிய அவள் அழகாகத் தெரியவில்லை.(2-4) கசியபர் அறியாமையில் இருந்தவளிடம் (அதிதியிடம்) அன்புடன் "உன் கரு[2] இறக்கவில்லை" என்று சொன்னதால், அவன் மார்த்தாண்டன் என்றழைக்கப்பட்டான்.(5)


[1] தேஸிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் "தன் கணவனின் எரிக்கும் முகம் மற்றும் பளபளக்கும் ஒளியால் அவள் பெரும் சங்கடத்தை உணர்ந்தாள்" என்றிருக்கிறது.

[2] "அதிதி அடைபட்ட பகுதிக்குள் இருந்தபோது, புதன் அவளிடம் பிச்சை எடுக்கச் சென்றான். அவள் இருந்த நிலையில் அவள் வருவதற்குக் காலதாமதமாகவே "குழந்தை இறக்கும்" என்று அவளைச் சபித்தான். இதனால் அவள் நிறம் மங்கினாள். இவை யாவற்றையும் தமது தவச் சக்தியால் அறிந்த கசியபர் அந்தக் குழந்தையைக் காத்தார்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

ஓ! என் குழந்தாய், சூரியனின் கதிர்கள் எப்போதும் பெரும் சக்திமிக்கவை, மேலும் அதைக் கொண்டே கசியபரின் மகன் {விவஸ்வான் / சூரியன்} மூவுலகங்களையும் ஒடுக்குகிறான்.(6) ஓ! கௌரவர்களில் முதன்மையானவனே, ஒளியுடல்களில் சிறந்தவனான ஆதித்யன், ஸஜனையிடம் ஒரு மகள் மற்றும், குடிமுதல்வர்களான இரு மகன்களையும் சேர்த்து மூன்று பிள்ளைகளைப் பெற்றான்.(7) முதலில் வைவஸ்வத மனு பிறந்தான், அதன் பிறகு குடிமுதல்வனான சிராத்ததேவன் {சிராத்தங்களின் தேவனான யமன்} பிறந்தான்; யமனும், யமுனையும் இரட்டையர்களாகப் பிறந்தனர்.(8) விவஸ்வானின் இருள் முகத்தை எதிர்கொள்ளமுடியாமலும், தன் வடிவைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும் அவள் தன்னுடைய நிழலில் இருந்து சவர்ணையை {சாயா தேவியைப்}[3] படைத்தாள்.(9) ஸஜனை மாயையில் திறம்பெற்றவளாக இருந்ததனால் உடனே எழுந்த அவளுடைய நிழலானவள் {சவர்ணை}, கரங்களைக் கூப்பியபடி அவளை வணங்கினாள்.(10)

[3] பிபேக் திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சாயா என்றால் நிழல் அல்லது பிரதிபலிப்பு என்ற பொருளைத் தரும். சவர்ணம் என்பது ஒரே நிறம் என்ற பொருளைத் தரும். சாயா என்பது சவர்ணா என்றும் அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.

அவள் {சாயாதேவி}, "ஓ! தூய புன்னகை கொண்டவளே, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! அழகியே, உனக்குத் தொண்டு செய்யும் எனக்கு ஆணையிடுவாயாக" என்றாள்.(11)

ஸஜனை, "உனக்கு நன்மை உண்டாகட்டும், நான் இப்போது என் தந்தையின் இல்லத்திற்குச் செல்கிறேன். நீ என்னுடைய இந்த வீட்டில் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்வாயாக.(12) நீ என்னுடைய இந்த மகன்களையும், இளமையுடன் கூடிய என் மகளையும் பார்த்துக் கொள்வாயாக. இந்த இரகசியத்தை ஒருபோதும் தேவனிடம் (சூரியனிடம்) வெளிப்படுத்தாதே" என்றாள்.(13)

அந்த நிழல், "சூரியன் என் கூந்தலைப் பற்றாதவரை, அல்லது என்னைச் சபிக்காதவரை நான் உன் இரகசியத்தை வெளிப்படுத்த மாட்டேன். ஓ! தேவி, மகிழ்வுடன் நீ செல்வாயாக" என்றாள் {சாயா தேவி}".(14)

வைசம்பாயனர் சொன்னார், "கவனமாகச் சவர்ணையிடம் "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்ன தவசி ஸஜனை, நாணத்துடன் இருப்பவளைப் போலத் துவஷ்டாவிடம் {துவஷ்டிரியிடம் / தன் தந்தையான விஸ்வகர்மனிடம்} சென்றாள்.(15)

அவள் தன் தந்தையை {துவாஸ்டிரியை / விஸ்வகர்மனைச்} சந்தித்தபோது, அவன் மீண்டும் மீண்டும் அவளை எச்சரித்து, கணவனிடம் செல்லுமாறு அவளிடம் கேட்டுக் கொண்டான்.(16) பிறகு அந்தக் களங்கமற்ற (மங்கை) தன் அழகை மறைத்துக் கொண்டு, ஒரு பெண்குதிரையின் வடிவை ஏற்று, உத்தரக் குருவுக்கு (மாகாணத்திற்குச்) சென்று அங்கே மேயத் தொடங்கினாள்.(17) இரண்டாம் ஸஜனையை (உண்மையானவளாக) எடுத்துக் கொண்ட ஆதித்யன் அவளிடம் ஒரு மகனைப் பெற்றான்.(18) இந்தத் தலைவன், முதலில் பிறந்த மனுவைப் போல இருந்தானெனவே மக்கள் அவனைச் சாவர்ணி மனுவாகப் பணியமர்த்தினர்.(19) அவன் சாவர்ணி மனுவானான். அவளுடைய இரண்டாம் மகன் சனி என்ற பெயரில் அறியப்பட்டான்.(20)

ஓ! குழந்தாய், அந்தப் போலி ஸஜனை, தன் மகனிடம் காட்டிய அன்பை முதலில் பிறந்த குழந்தைகளிடம் காட்டவில்லை.(21) {வைவஸ்வத} மனு அவளை அதற்காக மன்னித்தான், ஆனால் யமனால் முடியவில்லை. குழந்தைத்தனத்தாலும், கோபத்தாலும், எதிர்கால மகிமையினாலும், விவஸ்வானின் மகனான யமன், தன் காலால் மிதிக்கப் போவதாக அவளை அச்சுறுத்தினான்.(22) ஓ! மன்னா, பெருங்கவலையில் பீடிக்கப்பட்ட சாவர்ணியின் தாய் கோபத்தில், "உன் கால் {உடைந்து} வீழட்டும்" எனச் சபித்தாள்.(23) ஸஜனை இட்ட சாபத்தின் காரணமாகக் கவலையும், பதட்டமும் அடைந்து, அவளது சொற்களால் பீடிக்கப்பட்ட யமன், தன் தந்தையிடம் {சூரியனிடம்} கூப்பிய கரங்களுடன் சென்று அனைத்தையும் சொன்னான்.(24)

அவன் தன் தந்தையிடம், "சாபம் விலக ஏற்பாடு செய்வீராக. தன் மகன்கள் அனைவரிடமும் நிகரான அன்பைக் காட்டுவதே ஒரு தாயின் கடமையாகும்.(25) அவள் எங்களை அலட்சியம் செய்துவிட்டு எப்போதும் இளைய மகனிடமே {சனீஸ்வரனிடமே} அன்புடன் இருக்கிறாள். எனவே நான் என் காலைத் தூக்கினேன் என்றாலும் அஃது அவளது உடலில் படவில்லை.(26) குழந்தைத்தனத்தினாலோ, அறியாமையினாலோ நான் செய்த இந்தக் குற்றத்தை நீர் மன்னிக்க வேண்டும்; ஏனெனில் ஒரு மகனாயிருந்து, என் மதிப்பிற்குரிய தாயை அவமதித்ததனால், மெய்யாகவே என் கால் வீழும். ஒரு மகன் கெட்ட மகனானாலும், ஒரு தாய் ஒரு போதும் கெட்டவளாக மாட்டாள். ஓ! ஒளியுடல்களில் முதன்மையானவரே, ஓ! உலகத்தின் தலைவரே, நான் என் தாயால் சபிக்கப்பட்டிருக்கிறேன். உமது உதவியினால் என் கால் வீழாதிருக்கட்டும்" என்றான்.(27-29)

விவஸ்வான் {சூரியன்}, "மகனே, உண்மை நிறைந்தவனும், பக்திமானுமான உனக்குக் கோபமேற்பட்டதற்கு நிச்சயம் ஒரு வலுவான காரணம் இருக்க வேண்டும்.(30) உன் தாயின் சொற்களுக்கு மாறாகச் செய்ய என்னால் முடியாது; ஓ! உயர்ந்த ஞானம் கொண்டவனே, உன் காலில் உள்ள சதையை எடுத்துக் கொண்டு புழுக்கள் பூமியின் பரப்பில் விழட்டும், அதன் பிறகு நீ மகிழ்ச்சியை அடைவாய். இவ்வாறு நடந்ததும் உன் தாயின் சொற்கள் உண்மையாகிவிடும்.(31,32) மேலும் நீயும் சாபத்தின் விளைவிலிருந்து காப்பாற்றப்படுவாய்" என்றான்.

பிறகு, ஆதித்யன் ஸஜனையிடம், "குழந்தைகள் அனைவரிடமும் நிகரான அன்பைக் காட்ட வேண்டும். ஏன் நீ மீண்டும் மீண்டும் ஒருவனிடம் பாகுபாடு காட்டுகிறாய்? {ஒருவனிடம் மட்டும் ஏன் அதிக அன்பைக் காட்டுகிறாய்?}" என்று கேட்டான். அதை {அந்தக் கேள்வியைத்} தவிர்ப்பதற்காக அவள் சூரியனுக்குப் பதிலேதும் சொல்லாதிருந்தாள்.(33,34) பிறகு, அவன் யோகத்தில் தன் சுயத்தைக் குவித்து உண்மையைக் கண்டறிந்தான். ஓ! குருவின் வழித்தோன்றலே, அவளுக்கு அழிவு நேரும் வகையில் சபிப்பதற்காகத் தலைவன் சூரியன் அவளது கூந்தலைப் பற்றினான். உடன்பாட்டின் வரம்புகள் இவ்வாறு மீறப்பட்டதால் அவள் விவஸ்வானிடம் உண்மையைச் சொன்னாள்[4].(35,36)

[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "சூரிய தேவனான ஆதித்யன் மங்கை சாயையிடம், "குழந்தைகள் அனைவரையும் நிகராக நடத்தாமல் ஏன் நீ ஒருவனுக்கு மட்டும் அதிக ஆதரவைத் தருகிறாய்?" என்று மீண்டும் மீண்டும் கேட்டாலும், அவள் அவனுக்குப் பதிலளிக்காமல், ஒவ்வொரு முறையும் வஞ்சப் புன்னகையுடன் பேச்சை மாற்றி விடுவாள். அவன் தன்னை நீண்ட காலம் கட்டுப்படுத்திக் கொண்டாலும், அவனது கேள்விகளுக்கும் அவளது வஞ்சப் புன்னகைகளுக்கும் இடையில் நீண்ட காலம் கடந்து போனாலும், அவன் வழியேதும் கண்டடைந்தானில்லை. அல்லது தாய்க்கும், மகனுக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டடைந்தானில்லை. ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் சூரிய தேவன் பெருங்கோபமடைந்தவனாக அவளைச் சபிக்க நினைத்து அவளது கூந்தலைப் பற்றினான். சாயையின் கூந்தல் பிடிக்கப்பட்டபோது அவளுக்கும் சஞ்சனைக்கும் {ஸஜனைக்கும்} இடையில் நடந்த இரகசிய ஒப்பந்தத்தை அவள் வெளியிட வேண்டி வந்தது. அவள் நடந்தவாறே அனைத்தையும் வெளியிட்டாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "ஆதித்யன் சம்ஜையிடம் {ஸஜனையிடம்}, "மகன்கள் அனைவரும் சரிநிகரானவர்களே. ஆயினும், நீ ஏன் ஒருவனிடம் அதிக அன்பைக் காட்டுகிறாய்?" என்று கேட்டான். விவஸ்வானால் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டும், அவள் மறுமொழியேதும் கூறாதிருந்தாள். ஓ! குரு குலத்தின் வழித்தோன்றலே, இதனால் அந்தச் சிறப்புமிக்கவன் அவளைச் சபிக்கவும், அழிக்கவும் விரும்பினான். பிறகு அவள் விவஸ்வானிடம் அனைத்தையும் உண்மையாகச் சொன்னாள்" என்றிருக்கிறது.

அனைத்தையும் கேட்ட விவஸ்வான் கோபமடைந்தவனாகத் துவஷ்டாவை {விஸ்வகர்மாவை} அணுகினான். அவனும் {விஸ்வகர்மனும்}, தன்னை எரிக்கும் நோக்கில் வந்தவனை (சூரியனை} முறையாகத் துதித்து, அவனது கோபத்தைத் தணித்தான்.(37) துவஷ்டா {துவாஷ்டிரி / விஸ்வகர்மன்}, "உன்னுடைய இந்தப் பெரும்பிரகாச வடிவம் அழகாய்த் தெரியவில்லை. உன் மிளிர்வைத் தாங்க இயலாத ஸஜனை மஞ்சள் காட்டில் திரிந்து வருகிறாள்.(38) பெண் குதிரையின் தோற்றத்தில் நாள்தோறும் கடுந்தவத்தில் ஈடுபட்டு வருபவளும், தூய ஒழுக்கம் கொண்டவளுமான உன் மனைவியை நீ இன்று காண்பாயா?(39) இலைகளை உண்டு, ஒரு பெண் துறவியின் வாழ்வை வாழ்ந்து வரும் அவள் மிகவும் மெலிந்திருக்கிறாள்; அவளது கூந்தல் சடையானது. யானையின் துதிக்கையால் நசுக்கப்பட்ட தாமரையைப் போல அவள் கலங்கியிருக்கிறாள். ஓ! கதிர்களின் தலைவா, ஓ! தேவர்களின் மன்னா, ஓ! பகைவரைக் கொல்பவனே, நீ என் கருத்தை ஏற்றால் யோகத்திலிருப்பவளும், தவசக்தியுடன் கூடியவளும், புகழத்தகுந்தவளுமான அந்தக் காரிகைக்காக {ஸஜனைக்கா} உன்னுடைய இந்த வடிவை அழகானதாக மாற்றிக் கொள்வாயாக" என்றான்.(40,41)

சூரியனின் கதிர்கள் கோணலானவையாகவும், மிக நீண்டவையாகவும் இருந்தன {அவன் விபாவஸுவாக இருந்தான்}. இத்தகைய ஒரு தெய்வீக வடிவைக் கொடையாகக் கொண்ட சூரியன் நற்தோற்றம் கொண்டவனாக இல்லை.(42) எனவே அந்தக் குடிமுதல்வன் {சூரியன் / விவஸ்வான்}, துவஷ்டாவின் சொற்களில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்து, அந்தத் தெய்வீகக் கலைஞனிடம் {தெய்வீகத்தச்சனான விஸ்வகர்மனிடம்} தன் வடிவை அழகுறச் செய்ய ஆணையிட்டான்.(43) அதன் பேரில், துவஷ்டா {விஸ்வகர்மா} பிரகாசமிக்கவனான மார்த்தாண்டனை {சூரியனை} அணுகினான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, அவன் மீது தன் உளியை வைத்து அவனுடைய பளபளப்பைச் செதுக்கினான்.(44) இவ்வாறு அவனுடைய பிரகாசம் குறைக்கப்பட்ட போது, மிக அழகிய தோற்றத்தைவிட, அவனுடைய புதிய வடிவம் மிக அழகாயிருந்தது.(45) கதிர்களின் தலைவனுடைய அந்த வடிவம் இவ்வாறே எளிமையானது. அதுமுதல் சூரியதேவனின் முகம் சிவப்பானது.

உளியால் செதுக்கப்பட்டபோது மார்த்தாண்டனின் முகத்தில் இருந்து விழுந்த அவனுடைய பிரகாசமான பகுதிகளில் இருந்து உதித்த பனிரெண்டு ஆதித்யர்களும் அவனுடைய வாயில் {முகத்தில்} இருந்து தோன்றினார்கள். அவர்கள் தாதன், அர்யமான், மித்ரன், வருணன், அம்ஸன், பகன், இந்திரன், விவஸ்வான், பூஷன், பத்தாவதாகப் பர்ஜன்யன், துவஷ்டா, மற்றும் அனைவருக்கும் இளையவனாக விஷ்ணு ஆகியோராவர்.(46,47) தன் உடலில் பிறந்த ஆதித்யர்களைக் கண்டு அவன் பெரும் மகிழ்வையடைந்தான். அப்போது நறுமணப் பொருட்கள், மலர்கள், ஆபரணங்கள் மற்றும் ஒரு பிரகாசமான மகுடம் ஆகியவற்றைக் கொண்டு அவனை வழிபட்ட துவஷ்டா {விஸ்வகர்மன்}, "ஓ! தேவா, பெண்குதிரையின் வடிவை ஏற்றுப் பச்சைப் புல்வெளிக் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் உன் மனைவியிடம் செல்வாயாக" என்றான்.

அப்போது அவன், தன் யோக சக்தியால் விளையாட்டாக அதே போன்ற ஒரு வடிவை ஏற்றுக் கொண்டு, பெண் குதிரையின் வடிவில் இருந்த தன் மனைவியைத் தொலைவில் கண்டான். ஓ! மன்னா, பெண் குதிரையின் வடிவையேற்று அங்கே அச்சமின்றித் திரிந்து கொண்டிருந்த அவள், தன் ஆற்றல், தவம் மற்றும் நோன்புகளின் காரணமாக எவராலும் துன்பப்படுத்தப்பட முடியாதவளாக இருந்தாள். அப்போது குதிரை வடிவில் இருந்த பலம்வாய்ந்த சூரியன் அவளைத் தன் வாயால் அறிந்தான்.(48-53) அவனை வேறு எவனோ என நினைத்த அந்தப் பெண் குதிரை {ஸஜனை} அவனது விருப்பத்திற்கு வசப்படவில்லை. அப்போது, மருத்துவர்களில் முதன்மையானவர்களான அஸ்வினி இரட்டையர்கள் அவனது நாசித் துளைகளில் இருந்து பிறந்தனர்[5]. அவர்கள் எட்டாவது குதிமுதல்வனான மார்த்தாண்டனின் மகன்களாவர். ஆதித்யன், பெண்குதிரையின் வடிவில் இருந்த ஸஜனையிடம் அஸ்வனி இரட்டையர்களைப் பெற்றான். பிறகு, அவன் தன் அழகிய வடிவத்துடன் தன் மனைவியின் முன்பு தோன்றினான்.(54-56) ஓ! ஜனமேஜயா, அவள் (ஸஜனை) தன் கணவனைக் கண்டதும் பெரிதும் மகிழ்ந்தாள்.

[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "குதிரை வடிவில் இருந்த சூரிய தேவன் எதிர் முனையில் இருந்து, முன்விளையாட்டுக்காக ஸஞ்சனையை {ஸஜனையை} நெருங்கினான். ஆனால் அவன் தன்னுடைய ஆணல்ல என்ற சிறு ஐயத்தில் இனச்சேர்க்கையில் பங்குகொள்வதைத் தவிர்க்கும் வகையில் சூரிய தேவனின் வித்தைத் தன் நாசிகளில் விழச் செய்து தும்மினாள். சஞ்சனை தன் மூக்கில் இருந்து தும்மிய சூரியதேவனின் வித்தில் இருந்து அஸ்வினி குமாரர்கள் என்றழைக்கப்படும் இரட்டை தேவர்கள் எழுந்தனர். இவர்கள் மருத்துவர்களுக்கு மத்தியில் சிறந்த இரட்டை தேவர்களாவர். ஒருவன் நாஸத்யன் என்றும், மற்றவன் தஸ்ரன் என்றும் அழைக்கப்படுகின்றனர். பெண் அஸ்வமான, அதாவது பெண் குதிரையான அஸ்வினியால் {ஸஜனையால்} பெறப்பட்டதால் அவர்கள் அஸ்வினி குமாரர்களானார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அந்தச் சிறப்புமிக்கவன் {சூரியன்}, குதிரையின் வடிவை ஏற்றுக் கொண்டு, அவள் முன்பு வந்தான். எனினும், விவஸ்வானை வேறொருத்தியின் கணவனாக நினைத்த அவள், அவனுடன் கலவிக்கு மறுத்து, அவனது விந்தை அவளது மூக்கின் வழியாக வெளியேற்றினாள். தேவர்களின் தலைமை மருத்துவர்களான அஸ்வினிகள் இதிலிருந்து உண்டாகினர். நாஸத்யன், தஸ்ரன் என்ற பெயர்களில் அஸ்வினி இரட்டையர்கள் அறியப்படுகின்றனர்" என்றிருக்கிறது.

தன்னுடைய தவறுக்காக இதயப்பூர்வமாகப் பெரிதும் வருந்திய யமன், தன் குடிமக்களை {பித்ருக்களை} நீதியுடன் ஆண்டதால் அவன் தர்மராஜா {அறமன்னன்} என்று அழைக்கப்பட்டான். தன் குடிமக்களை நிறைவடையச் செய்த தன் புனிதச் செயலால் அவன் பித்ருக்களின் காவலனாக நியமிக்கப்பட்டு, குடிமுதல்வன் என்ற கண்ணியமான நிலைக்கு உயர்த்தப்பட்டான். தவசி சாவர்ணி மனு ஒரு குடிமுதல்வனாக {பிரஜாபதியாக} இருந்தான், எதிர்காலச் சாவர்ணி மன்வந்தரத்தில் அவனே மனுவாக இருப்பான். பெருஞ்சக்தி வாய்ந்த அந்த மனு {சாவர்ணி மனு} இப்போதும் மேரு மலையின் சிகரத்தில் தவம் செய்து கொண்டிருக்கிறான்.(57-60) அவனுடன் பிறந்தவனான ஸனைச்சரன் {சனீஸ்வரன்}, கோள் {கிரகம்} என்ற நிலையை அடைந்தான். அஸ்வினிகள் என்றறியப்பட்டவர்கள் தேவலோகத்தின் மருத்துவர்களானார்கள்.(61) ஓ! மன்னா, சேவதனும் குதிரைகளின் மருத்துவனானான்[6].

[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில், "அவனுடன் பிறந்தவனான ஸனைச்சரன் சனி என்ற கோளானான். இரட்டையர்களான நாஸத்யனும், தஸ்ரனும் தேவர்களின் மருத்துவர்களானார்கள். அவர்கள் தொலைவிலுள்ள சொர்க்கத்தில் தேவர்களின் மருத்துவர்களாக இருந்தாலும், தங்களை வணங்கும் எவருக்கும் உடல்நலனையும், அமைதியையும் அளிக்கிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், மன்மதநாத தத்தரின் பதிப்பிலுள்ள சேவதனின் குறிப்பும் இல்லை, தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பிலுள்ள "அனைவரின் மருத்துவர்கள்" என்ற குறிப்பும் இல்லை.

துவஷ்டா {விஸ்வகர்மன்}, அந்தப் பிரகாசத்தைக் கொண்டு விஷ்ணுவின் சக்கரத்தைப் படைத்தான். தானவர்களை அழிக்கும் நோக்கில் உண்டாக்கப்பட்ட அந்தச் சக்கரம் போரில் ஒருபோதும் கலங்கடிக்கப்பட்டதில்லை. அவர்களின் இரட்டையராக உடன் பிறந்த யமுனை, உலகைத் தூய்மைப்படுத்தும் ஆறுகளில் முதன்மையானவளானாள். மனு, இந்த உலகில் சாவர்ணி மனு என்றறியப்பட்டான்.(62-64) அவனுடைய இரண்டாவது மகனும், மனுவுடன் பிறந்தவனுமான ஸனைச்சரன் கோளின் நிலையை அடைந்து உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்டான்.(65) தேவர்களின் பிறப்பு குறித்த இந்தக் கதையைக் கேட்பவனோ, இதைத் தியானிப்பவனோ பேரிடர்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு, பெரும்புகழை அடைவான்.(66)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 09ல் உள்ள சுலோகங்கள் : 66
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்