(கிருஷ்ணஸ்ய த்வாரகாப்ரவேஷம்)
Krishna's entrance into Dwaraka and reception | Vishnu-Parva-Chapter-156-100 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனின் மாளிகை சிறப்பு; பாரிஜாத மரம் நடப்பட்டது; பதினாறாயிரம் பெண்களைக் கௌரவித்தல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு மிகச்சிறந்த கண்களைக் கொண்ட கிருஷ்ணன் துவாரகையைப் பார்த்துக் கொண்டிருந்த போது, நூற்றுக்கணக்கான மாளிகைகளுடன் கூடிய தன் வீட்டைப் பார்த்தான்.(1) வெண்ணிறத்துடன் ரத்னமயமான தூண்கள் கோடிக்கணக்கானவற்றையும், நெருப்பைப் போன்று ஒளிரும் ரத்னங்களுடன் கூடிய ஒரு வாயிலையும், அங்கேயும், இங்கேயுமென வைக்கப்பட்டிருந்த பிரகாசமிக்கப் பொன் இருக்கைகள் எண்ணற்றவற்றையும் அங்கே அவன் கண்டான்.(2) ஸ்படிகத் தூண்களைக் கொண்டதும், மொத்தமாகப் பொன்னால் கட்டப்பட்டதுமான ஒரு பெரும் மாளிகை அவனது சபையாக இருந்தது.(3)
