(வராஹ உத்பத்தி – ஜனமேஜய பிரஷ்னம்)
A description of Vishnu | Harivamsa-Parva-Chapter-40 | Harivamsha In Tamil
பகுதியின் சுருக்கம் : விஷ்ணுவின் மகிமைகளைச் சொல்லி அவனது அவதாரங்களைக் குறித்து வைசம்பாயனரிடம் விளக்கிச் சொல்லுமாறு கேட்ட ஜனமேஜயன்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, அளவற்ற சக்தி கொண்ட விஷ்ணுவின் அவதாரங்களைக் குறித்துப் புராணங்களில் முனிவர்கள் விளக்குகின்றனர். தலைவன் {விஷ்ணு} பன்றியாக {வராகமாக} அவதரித்தான் என்று நாம் அவர்களிடம் இருந்து கேள்விப்படுகிறோம். ஆனால், அவன் (இவ்வடிவை) ஏற்பதற்கு முன்னர், அவனது வரலாறு, அவனது ஆணைகள், அவனது செயல்கள், அவனது சாதனைகள், அவனது நோக்கங்கள், அவனது ஒழுக்கம் {நடத்தை} மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் குறித்து நாம் முழுமையாக அறிந்ததில்லை.(1-3) ஒரு வேள்விக்காகக் கூடியிருந்த இருபிறப்பாளர்களின் முன்னிலையில் இந்தப் பெரும்பன்றி அவதாரத்தைக் குறித்துக் கிருஷ்ண த்வைபாயனர் {வியாசர்}[1] விளக்கிச் சொன்னதை நாம் கேட்டிருக்கிறோம்.(4)
[1] "துவைபாயனர் என்பது கிருஷ்ணரின் {வியாசரின்} மரபுப்பெயராகும். இந்தச் சொல்லின் பொருள் தீவில் பிறந்தவர் என்பதாகும். கங்கையில் இருந்த ஒரு சிறு தீவே அவரது பிறப்பிடமாகும் என்பதைக் குறிக்கும் வகையில், "தீவில் பிறந்தவர்" என்ற பொருளில் இந்தச் சொல் அமைந்திருக்கிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
ஓ! பிராமணரே, மதுசூதனன் பன்றியாக அவதரித்து, பெருங்கடலில் மூழ்கிய பூமியைத் தன் தந்தங்களால் எவ்வாறு காப்பாற்றினான் என்பதை நாம் கேட்டிருக்கிறோம்.(5) ஓ! பிராமணரே, பகைவரைக் கொல்பவனும், நுண்ணறிவுமிக்கவனுமான ஹரி, தன்னுடைய பன்றி அவதாரத்திலும், பிற அவதாரங்களிலும்[2] செய்த பல்வேறு செயல்களை இப்போது விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(6) ஓ! பிராமணரே, அந்தத் தலைவனின் பல்வேறு செயல்களையும், அவனது குணத்தையும் நீர் மட்டுமே முறையாக விளக்கவல்லவராவீர்.(7) தேவர்களின் மன்னனும், பகைவரைக் கொல்பவனுமான தலைவன் விஷ்ணு, ஏன் வஸுதேவரின் குடும்பத்தில், வாஸுதேவனாகப் பிறந்தான்?(8)
[2] "பல்வேறு காலங்களில் விஷ்ணு ஏற்ற பத்து அடிப்படை வடிவங்களே அவனது அவதாரங்களாகச் சொல்லப்படுகின்றன; மீன், ஆமை, பன்றி, சிங்க மனிதன், குள்ளன், இரண்டு ராமர்கள், கிருஷ்ணன் மற்றும் கல்கி ஆகிய அவதாரங்களே அவை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
அவன், இறவாதவர்கள் மற்றும் பக்திமான்கள் நிறைந்த தேவர்களின் நகரை விட்டுவிட்டுக் கீழே பூமிக்கு ஏன் வந்தான்?(9) எவன் தேவர்கள் மற்றும் மனிதர்களின் மன்னனோ, எவனிடம் இருந்து இந்த உலகம் உண்டானதோ அவன் ஏன் தன் தெய்வீக உடலை மனித வடிவில் மாற்றிக் கொண்டான்?(10) மனித குலத்தின் நற்சக்கரத்தைத் தனியாகச் சுழற்றுபவனும், சக்கரதாரிகளில் {சக்கராயுதம் தரித்தவர்களில்} முதன்மையானவனுமான அவன், மனித வடிவம் ஏற்பதில் தன் இதயத்தை ஏன் நிலைநிறுத்தினான்?(11) உலகத்தின் பெரும் மனிதர்கள் அனைவரையும் பாதுகாப்பவனான தலைவன் விஷ்ணு, இந்தப் பூமிக்கு ஏன் ஒரு பால்காரனாக {கோபாலனாக} வந்தான்?(12) பூதங்களோடு அடையாளங்காணப்படுபவனும், பெருங்காரணனும், பூதங்களாகவே இருப்பவனுமான ஸ்ரீகர்ப்பன்[3], பூமியில் திரிந்த ஒரு பெண்ணின் கருவறையில் எவ்வாறு இருந்தான்?(13) தேவர்களால் விரும்பப்படுபவனான அவன் மூன்று காலடிகளால்[4] மூவுலகங்களையும் கைப்பற்றி, பூமியில் மூன்று வர்க்கங்கள்[5] எனும் மூன்று வீதிகளை {பாதைகளை} அமைத்தான்.(14) அண்ட அழிவின் போது அவன் பூமியைக் குடித்து, நீரின் வடிவை ஏற்றான். அவன் மொத்த பூமியையும் ஒரே நீர்ப்பரப்பாக மாற்றினான்[6].(15) பழங்காலத்தில் அவன் பன்றியின் {வராக} வடிவை ஏற்றுத் தன் தந்தங்களால் பூமியைக் காத்தான்.(16)
[3] "ஸ்ரீ என்றால் நற்பேறு, கர்ப்பம் என்றால் கருவறை. இஃது இவையிரண்டும் இணைந்த விஷ்ணுவின் மற்றொரு பெயராகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[4] "ஓர் அசுர மன்னனான பலி இந்தியாவின் அரசுரிமையை அடைய பல வேள்விகளைச் செய்த கதை இங்கே மறைகுறிப்பாக இருக்கிறது. அதன்படி தேவர்கள் பெருங்கவலை அடைந்து விஷ்ணுவிடம் உதவியைக் கோரினர். அவன், அவர்களின் வேண்டுதலின் பேரில் குள்ள பிராமணரின் வடிவை ஏற்று, பிச்சைக்காகப் பலியிடம் சென்றான். எதைக்கேட்டாலும் கொடுப்பேனெனப் பலி சொன்ன பிறகு, மூன்று கால்களுடன் {காலடிகளுடன் கூடிய} பெரும் வடிவை ஏற்ற விஷ்ணு, மூன்றாவது காலை {அடியை} வைப்பதற்கான இடத்தைப் பலியிடம் கேட்டான். மூன்றாவதை வைப்பதற்கான இடமேதும் இல்லாததால் அவன் பலியின் தலையில் வைத்தான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[5] "தர்மம் (அறம்), உலகம் சார்ந்த லாபமான அர்த்தம், ஆசையான காமம் என்ற வாழ்வின் மூன்று வகை நோக்கங்கள். இந்த மூன்று வீதிகளும் மனிதகுலத்திற்கென அவனால் விதிக்கப்பட்டன. அறத்தால் சொர்க்கத்தையும், உலகம் சார்ந்த லாபம் பூமியையும், ஆசை அதற்கு அடியில் உள்ள உலகத்தையும் அவர்கள் அடைகின்றனர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[6] "அவன் அண்ட நுண்ணறிவின் வடிவில் ஒன்றை ஏற்றான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
அந்தத் தேவர்களில் முதன்மையானவன் {விஷ்ணு}, பழங்காலத்தில் புருஹூதனின்[7] சார்பில் அசுரர்களை வீழ்த்தி, மூவுலகங்களையும் தேவர்களுக்கு அளித்தான்.(17) சிங்க மனிதனின் {நரசிம்ம} வடிவை ஏற்ற அவன், தைத்திய தலைவனும், பெருஞ்சக்தி வாய்ந்தவனுமான ஹிரண்யகசிபுவைக் கொன்றான்[8].(18) பழங்காலத்தில், ஆழ்கடலில் சம்வர்த்தக நெருப்பின் வடிவை ஏற்ற அந்தத் தலைவன் ஆழ்கடல் உலகின் நீர் ஆகுதிகளைக் குடித்தான்.(19) ஓ! பிராமணரே, பல்லாயிரம் யுகங்களில் அந்தத் தலைவன் {விஷ்ணு}, ஆயிரம் தலைகளுடனும், ஆயிரம் கண்களுடனும், ஆயிரம் கால்களுடனும் தோன்றினான்.(20)
[7] "இஃது இந்திரனின் பெயராகும். புருவில் இருந்து அதிகம் வழிபடப்பட்ட அல்லது அழைக்கப்பட்ட ஹுதன்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[8] "கொண்டாடப்படும் பிரகலாதன் கதையை இது குறிப்பிடுகிறது. அவன் அசுரமன்னனான ஹிரண்யகசிபுவின் மகனாவான். அவன் ஹிரண்யகசிபுவின் பகைவனான விஷ்ணுவை வழிபடத் தொடங்கினான். அவன் தன் மகனைப் பல்வேறு வழிகளில் தண்டித்தான், பிறகு அவன் சிங்க மனிதனின் வடிவில் வந்த விஷ்ணுவால் அவன் கொல்லப்பட்டான்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
மொத்த உலகும் ஒரே நீர் பரப்பாக மாற்றப்பட்டு, அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் மொத்தமும் அழிந்தபோது, அவனது உந்தியில் (பெரும்பாட்டனான) பிரம்மன் ஓயும் தாமரை உதித்தது.(21) தாரகனுடனான மோதலில் அவன், தேவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு வடிவை ஏற்று, ஆயுதங்கள் அனைத்தையும் ஏந்தி அசுரர்களைக் கொன்றான்.(22) கருடனில் அமர்ந்து, பெரும் வடிவை ஏற்ற அவன், பேரசுரனான காலநேமியைக் கொன்று, பேரசுரனான தாரகனை வீழ்த்தினான்.(23) மாய சக்தியுடன் கூடிய அவன் அமுதம் தோன்றி பாற்கடலின் வடக்குக் கரையில் நித்திய யோகத்தில் ஈடுபட்டவாறு கிடக்கிறான்.(24)
அதிதி, தன் கடுந்தவங்களின் நிறைவில், தேவர்கள்ளின் மத்தைப் போல இருந்த அந்தத் தெய்வீகப் புராதன புருஷனைக் கருவில் கொண்டாள். அவளது கருவறையில் இருந்து வெளி வந்த குள்ளன் {வாமனன்}, அசுரர்களால் அடைத்துவைக்கப்பட்டிருந்த இந்திரனின் விருப்பத்தை நிறைவேற்றினான்.(25) அவன் தன் காலை உலகங்கள் அனைத்திலும் வைத்து, அசுரர்கள் அனைவரையும் நீரில் வைத்தான். தேவர்களைச் சொர்க்கத்தில் விளையாடச் செய்த அவன், இந்திரனுக்குத் தேவர்களின் அரசைக் கொடுத்தான்.(26) அவன் கார்ஹபத்ய[9], அன்வாஹார்ய[10] சடங்குகளுக்கான விதிகளை விதித்தான், தக்ஷிணை[11], தீக்ஷை[12], சமஸம்[13], உலூகலாம்[14] முதலிய வேள்விக்கான பொருட்கள் பலவற்றைப் படைத்தான்,(27) ஆகுதிகள் காணிக்கையளிக்கப்படும் நெருப்பைப் படைத்தான், வேள்விப்பீடம், குசம்[15], ஸ்ருவம்[16], ப்ரோக்ஷணீம்[17], த்ருவாம்[18] ஆகியவற்றை அமைத்தான்.(28)
[9] "இந்தப் புனித நெருப்பானது, ஓர் இல்லறத்தானால், தன் தந்தையிடம் இருந்து பெறப்பட்டு, தன் வீட்டில் நிரந்தரமாகப் பராமரிக்கப்பட்டு, தன் சந்ததிக்கும் கொடுக்கப்படுகிறது. வேள்விக் காரியங்களுக்கு இதில் இருந்தே நெருப்பு எடுக்கப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[10] "இது புது நிலவு நாளில் பித்ருக்களைக்கு மதிக்கும் வகையில் மாதந்தோறும் செய்யப்படும் சிராத்தம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[11] "கொடைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[12] "{வேள்வி / சடங்கின்} தொடக்கம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[13] "வேள்விகளில் அமிலம் போன்ற சாற்றைக் குடிப்பதற்குரிய பாத்திரம் அல்லது ஒரு வகைக் கரண்டி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[14] "இஃது அரிசியைத் தூய்மைப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு மரக் குழவி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[15] "இது புனிதமான மற்றும் அறம் சார்ந்த காரியங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வகைப் புல்லாகும்; எனவே இது வேள்விப் புல் என்றழைக்கப்படுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். தர்ப்பைப்புல்
[16] "இது மரத்தினால் செய்யப்பட்டதும், வட்டமான இரு குழிகளைக் கொண்டதும், வேள்வி நெருப்பில் நெய்யை ஊற்றுவதற்குப் பயன்படுவதுமான ஓர் அகப்பையாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[17] "அசையாமல் வைப்பதற்குரிய ஒரு பொருள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[18] "ஆலிலையின் வடிவில் அமைந்த ஒரு வேள்விக் குடுவையாகும். இது கொட்டைக்களை மரத்தில் செய்யப்படுவதாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
வேள்வி செய்த பிறகு செய்யும் நீராடலில் மூவகையான அமுத நன்மைகளைப் படைத்தான். இருபிறப்பாளர்களை ஹவ்யமும்[19], கவ்யமும்[20] கொடுக்கச் செய்தான், முன்னதை {ஹவ்யத்தைத்} தேவர்களும், பின்னதை {கவ்யத்தைப்} பித்ருக்களும் எடுத்துக் கொள்ளச் செய்தான்.(29) பரமேஷ்டியால் (பிரம்மனால்) விதிக்கப்பட்ட விதிகளின் படியே பழங்காலத்தில் அவன் {விஷ்ணு}, பல்வேறு வேள்வி மந்திரங்களின்[21] மூலம், யூபங்கள்[22], ஸமிதங்கள்[23], ஸுருசங்கள்[24], சோமங்கள்[25], புனிதமான பரிதீகள்[26] மற்றும் வேறு பல வேள்விப் பொருட்களிலும், வேள்வி நெருப்பை அமைக்கும் அறையிலும், யஜமானர்கள்[27] மற்றும் மேத[28] வகைப்பாட்டிலும், பிற சிறந்த வேள்விகளிலும் பிரிவினைகளை அமைத்தான். (30-32)
[19] "ஆகுதியில் காணிக்கையளிக்கத் தகுந்தது. தேவர்களுக்கான காணிக்கை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[20] "பித்ருக்களுக்கான உணவுக்காணிக்கை அல்லது ஆகுதி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[21] "ஓர் அறச்சடங்கைச் செய்யும்போது ஓதப்படும் பாடல்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[22] "இது பொதுவாக மூங்கிலில் செய்யப்படும், அல்லது கருங்காலி மரத்தில் செய்யப்படும் ஒரு வேள்வித் தண்டு அல்லது தூண் ஆகும். இதில் தான் வேள்விப் பலி கட்டப்படும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[23] "நெருப்பை மூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் விறகு, மரம் மற்றும் புல் முதலியன" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[24] "ஒரு கரண்டி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[25] "குடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் இதே பெயர் கொண்ட ஒரு செடியின் சாறாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[26] "இது வேள்வி நெருப்பு ஏற்றப்படும் குழி அமைந்த ஒரு மரச்சட்டம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[27] "வேள்வியைச் செய்பவர்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[28] "ஒரு வகை வேள்வி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
யுகங்களின் பல்வேறு வகைகளை அமைத்து, மனிதர்கள் அனைவருக்கும் முன்பாகத் தன் வலிமையை வெளிப்படுத்திய அவன், க்ஷணம்[29], லவம்[30], காஷ்டை[31], கலை[32], தற்காலம், கடந்த காலம், எதிர்காலம், காலப்பிரிவினை, முகூர்த்தம்[33], திதி[34], மாதங்கள், ஒளிப்பக்கங்கள் {பக்ஷங்கள்}, வருடங்கள், பருவ காலங்கள், ஆயுளின் மூன்று பிரிவினைகள், குணப் பெருக்கம், அசையும் மற்றும் அசையான உயிரினங்களின் அழகு, மூன்று வர்ணங்கள்[35], மூன்று உலகங்கள்[36], மூன்று வேதங்கள்[37], மூன்று நெருப்புகள்[38], மூன்று காலங்கள்[39], மூன்று வகைச் செயல்கள்[40], மூன்று உபாயங்கள்[41] (வழிமுறைகள்), மூவகைக் குணங்கள்[42] ஆகியவற்றையும் படைத்தான்.(33-35)
[29] "முப்பது கலைகளுக்கு இணையான கால அளவு அல்லது நான்கு நிமிடங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[30] "ஒரு கண்சிமிட்டலுக்கு ஆக்ககூடிய நேரத்தில் அறுபதில் ஒரு பங்கு நேரம் என்ற மிக நுட்பமான காலப்பிரிவு" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[31] "ஒரு கலையில் முப்பதில் ஒரு பங்கு காலம் அல்லது பதினெட்டுக் கண்சிமிட்டல்களுக்கு ஆகும் காலம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[32] "ஒரு காலப்பிரிவினை" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[33] "ஒரு பகல் மற்றும் இரவில் முப்பதில் ஒரு பங்கு காலம், அல்லது நாற்பத்தெட்டு நிமிடங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[34] "ஒரு சந்திர நாள், ஒரு மாதத்தில் முப்பதில் ஒரு பங்கு காலம்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[35] "புரோஹதி சாதி, அல்லது பிராமணர்கள், படை சாதியான க்ஷத்திரியர்கள், வணிகச் சாதியான வைசியர்கள் ஆகிய மூன்று சாதிகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[36] "சொர்க்கம், பூமி, பாதாளம் என்ற மூன்று உலகங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[37] "ரிக், யஜூர், சாமம் என்ற மூன்று வேதங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[38] "வீட்டில் இருந்து எடுக்கப்பட்டுத் தெற்கு வைக்கப்படும் தக்ஷிணாக்னி, வீட்டில் எப்போதும் பாதுகாக்கப்படும் கார்ஹபத்யாக்னி, காணிக்கைகள் ஆகுதியாகச் செலுத்தப்படும் ஆஹவனியாக்னி எனப்படும் மூன்று நெருப்புகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[39] "நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[40] "நல்லியல்பு {சத்வ}, இருள் {தமஸ்} மற்றும் அறியாமை {ஆசை / ரஜஸ்} ஆகிய குணங்கள் சார்ந்த மூவகைச் செயல்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[41] "சுயத்தின் அழிவு, செல்வமீட்டல், கடுமையான கல்வி ஆகியவையே முக்தியை அடைவதற்கான மூவகை வழிமுறைகள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[42] "நல்லியல்பு {சத்வம்}, இருள் {தமஸ்}, அறியாமை {ரஜஸ்} என்ற மூவகைக் குணங்கள்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
முடிவிலாத செயல்களின் மூலம் மூவுலங்களையும் முன்பே படைத்தவன் அவனே. பூதங்களையும், குணங்களையும், அவற்றோடு அடையாளங்காணப்படும் அனைத்தையும் படைத்தவன் அவனே.(36) மனித குலத்திற்கு மத்தியில் பிறப்பையும், இறப்பையும் அறிமுகம் செய்து, அண்டத்தில் அவர்களைத் திரியச் செய்தவன் அவனே. ஒரு விலங்கின் வடிவில் எங்கும் விளையாடிக் கொண்டிருப்பவன் அவனே. அண்டத்தின் தலைவனும் அவனே.(37) நல்லோரின் புகலிடமும், தீயோரைத் தண்டிப்பவனும் அவனே. நான்கு வர்ணங்களின் பிறப்பிடமும், நான்கு ஹோத்ரர்களின்[43] பாதுகாவலனும் அவனே.(38) நால்வகை ஞானத்தின் ஆசானும், நான்கு ஆசிரமங்களின்[44] பாதுகாவலனும் அவனே. திசைகள், வானம், காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றோடு அடையாளங்காணப்படுபவன் அவனே.(39) சூரியன், சந்திரன் மற்றும் கதிர்களுடன் அடையாளம் காணப்படுபவன் அவனே. யோகிகளின் தலைவன் அவனே, இரவை முடிவுறச் செய்பவன் அவனே. மிகச் சிறந்த ஒளி மற்றும் நாம் கேள்விப்படும் தபங்கள் ஆகியவற்றோடு அடையாளங்காணப்படுபவன் அவனே.(40)
[43] "நான்கு வகைப் புரோகிதர்கள்" என் மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
[44] "மாணவன் {பிரம்மச்சாரி}, இல்லறத்தான் {கிருஹஸ்தன்}, துறவி {வானப்ரஸ்தன்} மற்றும் பிச்சைக்காரன் {ஸந்நியாசி} என்ற வாழ்வின் நான்கு நிலைகள்" என் மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
ஆன்மாக்கள் அனைத்தையும் இணைக்கும் ஒரு சரடு அவனே என்றும், மொத்த அண்டமும் அவனது வடிவமே என்றும் முனிவர்கள் சொல்கிறார்கள். வேதங்களும், அனைத்துப் படைப்புகளும் நாராயணனில் இருக்கின்றன.(41) பேரறமும் {உயர்ந்த தர்மமும்}, மிகச் சிறந்த நிலையும் {உயர்ந்த கதியும்} நாராயணனே. வாய்மை நாராயணனில் இருக்கிறது, {உயர்ந்த} தபமும் அவனில் இருக்கிறது.(42) முக்தி நாராயணனில் இருக்கிறது, மிகச் சிறந்த புகலிடம் நாராயணனே. ஆதித்யனும், பிற தேவர்களும் அவனே, அசுரர்களைக் கொன்றவன் அவனே.(43) அண்ட அழிவின் போது அனைத்தையும் அழிப்பவன் அவனே. அனைத்தையும் அழிக்கும் கால தேவனுக்கே காலன் அவனே. மனித குலத்தில் மதிப்புமிக்கப் பல்வேறு வகைகளை அமைத்திருப்போரின் (மனு மற்றும் பிறரின்) தலைவன் அவனே, மனித குலத்தைத் தூய்மைப்படுத்தும் (கங்கை மற்றும் பிறரைவிட) மிகப் புனிதமானவன் அவனே.(44)
வேதங்களை அறிந்தோரின் கல்விப் பொருள் அவனே; தற்கட்டுப்பாடு கொண்டோரின் (முனிவர்களின்) தலைவன் அவனே; அழகிய பொருட்கள் அனைத்தையும் விட அழகன் அவனே; நெருப்பு போன்ற பிரகாசம் கொண்டவர்களுக்கு நெருப்பைப் போன்றவன் அவனே.(45) மனிதர்களின் மனமும், தவசிகளின் தவச் சக்தியும், கடும் அறவோரின் அறநெறியும், சக்தி மிக்கோரின் சக்தியும், படைப்புகள் அனைத்தின் படைப்பாளனும், அனைத்து உலகங்களின் மிகச் சிறந்த பிறப்பிடமும் அவனே.(46) சிலைகளை நாடுவோரின் தெய்வச்சிலையும், அசைவைக் கொண்டோருக்கு அசைவும் அவனே. ஆகாயம் காற்றின் பிறப்பிடமாகும், காற்று, நெருப்பின் உயிராகும்.(47) தேவர்களின் உயிர் சக்தி நெருப்பாகும், நெருப்பின் உயிர் மதுசூதனனாவான்.
சாற்றின் மூலம் குருதி உண்டாகிறது, குருதியின் மூலம் சதை உண்டாகிறது.(48) சதையில் இருந்து கொழுப்பும், கொழுப்பில் இருந்து எலும்புகளும், எலும்புகளில் இருந்து நரம்புகளும், நரம்புகளில் இருந்து விந்து நீரும் உண்டாகின்றன.(49) கருவுறும் கருவியாக விந்துநீரே இருக்கிறது. சாறாக இருக்கும் வேரான இதன் செயல்முறையின் மூலமே இவை அனைத்தும் உண்டாகின்றன. அவற்றில் முதல் பகுதி நீராகும், எனவே அது சௌம்யம்[45] என்றழைக்கப்படுகிறது. இரண்டாவது உட்பொருள், கருவறையில் இருக்கும் நெருப்பாகும். இவ்வாறு நெருப்புக்கு ஒப்பான விந்து நீரும் குருதியால் அமைந்ததாகும். சாறுகள் அனைத்தின் சாரமான விந்து நீரானது, அதிகமான சளியால் {கபத்தால்} படைக்கப்படுகிறது, கோடிக்கணக்கான பருப்பொருட்களின் மூலம் குருதி உண்டாகிறது. சளியின் {கபத்தின்} இருப்பிடம் இதயமும், பித்தத்தின் இருப்பிடம் உந்தியுமாகும். உடலில் இருக்கும் இதயமே மனத்தின் இருப்பிடமாக அறியப்படுகிறது. உந்திக்குழிக்குப் பின்னால் பசியானது நெருப்பாக இருக்கிறது. மனம் பிரஜாபதியாகவும் {பிரம்மனாகவும்}, சளி {கபம்} சோமனாகவும், பித்தம் அக்னியாகவும் (நெருப்பின் தேவனாகவும்) அறியப்படுகின்றன. இவ்வாறு மொத்த உலகமும் நெருப்போடு அடையாளங்காணப்படுகிறது.(51-54)
[45] "(உடற்கூறியலில்) ஊனீர் என்ற ரத்தச்சிவப்பணுக்களை ரத்தம் பெறுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
மேகம் உண்டாவதைப் போலக் கருவுறுதல் நடைபெறும்போது, பரமாத்மனுடன் கூடிய காற்று அங்கே நுழைகிறது[46].(55) பிறகு அது பல்வேறு அங்கங்களை உண்டாக்கி அதற்கு ஊட்டமளிக்கிறது. உடலுக்குள் உள்ள உயிர் காற்று ஐந்தாகப் பிரிந்து படிப்படியான விகிதங்களை அடைகிறது.(56) பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன் ஆகியவை ஐந்து உயிர் காற்றுகளாகும். உடலின் மிக முக்கியப் பகுதியான இதயத்துக்குப் பிராணன் ஊட்டமளிக்கிறது.(57) கால் வரையுள்ள உடலின் கீழ் பகுதிகளுக்கு அபானன் ஊட்டமளிக்கிறது. நெஞ்சு மற்றும் உடலின் மேல் பகுதிக்கு உதானன் ஊட்டமளிக்கிறது. பெரும்பலம் தேவைப்படும் பணிகளைச் செய்வதற்குப் பயன்படும் உயிர் காற்று வியானன் என்றழைக்கப்படுகிறது. சமானன் என்ற உயிர் காற்று உடல் முழுவதிலும் இருந்து, உந்திப் பகுதியில் தங்கி, குடிக்கப்படும், உண்ணப்படும் எதையும் அதனதற்குரிய இடங்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது. (உயிர் காற்றுகள் பகுக்கப்பட்ட பிறகு) உயிரினங்கள் பூமியைக் குறித்த அறிவைத் தங்கள் புலனங்களின் மூலம் அடைகின்றன.(58)
[46] "புகை, ஒளி, நீர் மற்றும் காற்றின் உதவியால் மேகம் பெருகுவதைப் போலவே, உணவு, நெருப்பு மற்றும் நீரால் ஊட்டமளிக்கப்படும் கருவும் வளர்கிறது. இங்கே குறிப்பிடப்படும் காற்று உயிர் சக்தியைக் குறிக்கிறது. ஆன்மாவானது உயிர் சக்தியின் வடிவிலேயே நுழைகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.
நிலம், காற்று, ஆகாயம், நீர் மற்றும் ஒளி ஆகியவை புலன்களாக மாற்றப்படுகின்றன. பிறகு அவை உடலின் குறிப்பிட்ட பகுதிகளைக் கைப்பற்றித் தங்களுக்குரிய செயல்பாடுகளைச் செய்கின்றன. நீரைத் தன்னுள் கொண்ட நாக்கானது, சாற்றை உறிஞ்சுகிறது; ஒளியைத் தன்னுள் கொண்ட கண்ணானது வடிவங்களைக் காண்கிறது; காற்றைத் தன்னுள் கொண்ட தோலானாது ஒலியைக் கேட்கிறது. நிலத்தின் மாற்றமே கடினமான பகுதியாகும். உயிர் காற்றானது காற்றின் வடிவமாற்றமாக இருக்கிறது; துளைகள் அனைத்தும் ஆகாயத்தில் இருந்து தோன்றுகின்றன; நீர்ப்பகுதி நீராகவும்; கண்ணானது, ஒளியின் வடிவமாகவும், ஐம்பூதங்களின் சக்தியான மனமானது புலன்களின் தலைவனாகவும் இருக்கின்றன. மனமானது தன் சக்தியால் புலன்களைத் தங்களுக்குரிய பொருட்களை உணர வைக்கிறது.(59-61) அந்தப் பெரும்புருஷன், எப்போதும் இருக்கும் உலகங்களை இவ்வாறு படைத்துவிட்டு, அழியக்கூடிய இவ்வுலகில் ஏன் மனிதனாகப் பிறந்தான்?(62)
ஓ! பிராமணரே {வைசம்பாயனரே}, இதுவே என் ஐயமாகும், இதுவே என்னை ஆச்சரிப்படுத்துகிறது. மனித குலத்திற்கு சக்தியாக இருப்பவனே ஒரு மனிதனாகப் பிறக்கிறான்.(63) நான் என் குடும்பத்தைக் குறித்தும், என் மூதாதையரின் குடும்பங்களைக் குறித்தும் கேட்டேன். இனி விஷ்ணு மற்றும் விருஷ்ணிகளின் குடும்பங்களை உரிய வரிசையில் கேட்க விரும்புகிறேன்.(64) அந்த விஷ்ணு பேரற்புதன் எனத் தேவர்களும், அசுரர்களும் சொல்கின்றனர்.(65) உலகம் முழுவதையும் ஆச்சரியப் படுத்தியவையும், நன்கறியப்பட்டவையுமான விஷ்ணுவின் செயல்கள் மற்றும் பெரும் வலிமையையும், ஆற்றலையும் கொண்ட அவனது அற்புதமான, மகிழ்ச்சியான கதையை உண்மையாகவே எனக்கு விளக்கிச் சொல்வீராக" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(66)
ஹரிவம்ச பர்வம் பகுதி – 40ல் உள்ள சுலோகங்கள் : 66
மூலம் - Source | | ஆங்கிலத்தில் - In English |