(ஸ்ரீக்ருஷ்ஸ்ய பதரிகாஷ்ரமகமநம்)
Garuda takes Krishna to Badarikashrama | Bhavishya-Parva-Chapter-51 | Harivamsa In Tamil
பகுதியின் சுருக்கம்: கருடன் மீதேறி பறந்து சென்ற கிருஷ்ணன் பதரிகாசிரமத்தை அடைந்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஜகத்பதியான விஷ்ணு {கிருஷ்ணன்}, பறவைகளின் மன்னனும், தார்க்ஷியனுமான கருடனைத் துரிதமாக வரும்படி மனப்பூர்வமாக அழைத்தான்.(1) ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, வேதங்களே வடிவாகக் கருதப்படுபவனும், யோகப் புதிர்களில் தேர்ச்சி பெற்றவனும், சாத்திரங்களை உண்மையாக அறிந்தவனுமான தார்க்ஷியன் பகவான் {கிருஷ்ணன்} முன்பு உடனே வந்தான்.(2) யஜ்ஞத்தை உடலாகவும், புராணங்களை ஆத்மாவாகவும், சாம வேதத்தைத் தன் குதிங்காலாகவும், ரிக் வேதத்தைக் கண்களாகவும் கொண்ட அவனது நிறம் பிங்கள வண்ணமாகவும், அவனது வடிவம் புதிரானதாகவும் இருந்தது.(3) அவனது அலகு தாமிரம் போல் சிவப்பாக இருந்தது. அவன் அமுதத்தை அபகரித்துப் போரில் சக்ரனை {இந்திரனை} வென்றவனாவான். அவனது தலை பெரிதாக இருந்தது. பாம்புகள் அவனுக்குப் பகையாக இருந்தன. அவனது தாமரைக் கண்கள் விஷ்ணுவுக்கு ஒப்பானவையாக இருந்தன.(4) தேவதேவனும், தானவிகளின் {தானவப் பெண்களின்} கர்ப்பங்களை அழிப்பவனுமான தலைவனைச் சுமக்கும் வாகனனாக அவன் இருந்தான். அவன் அசுரர்களை வெல்பவனாகவும், தன் சிறகின் அசைவுகளாலேயே ராக்ஷசர்களை வெல்பவனாகவும் இருந்தான்.(5)
ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட அந்தக் கருடன், கேசவன் முன்பு வந்து வணங்கினான். பிறகு அவன், "ஓ! விஷ்ணுவே, ஜகத்பதியே நான் உன்னை வணங்குகிறேன்.(6) ஓ! ஹரியே, தேவதேவா, உன் தாமரைப் பாதங்களுக்கு என் வணக்கம்" என்றான்.
கிருஷ்ணன் கருடன் மீது தன் கைகளை வைத்து, "ஓ! பறவைகளில் சிறந்தவனே,(7) சர்வமங்களனான சங்கரனைக் காண கைலாச மலைக்குச் செல்ல நான் விரும்புகிறேன்" என்றான்.(8)
அந்தத் தார்க்ஷியனும், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி தன் சம்மதத்தைத் தெரிவித்தான். ஜனார்த்தனன் அவனது முதுகில் அமரும்போது, அங்கே கூடியிருந்த யாதவர்களிடம், "நீங்கள் அனைவரும் விழிப்புடன் இருப்பீராக" என்றான்.(9)
ஜகன்னாதனான ஹரி வடகிழக்குத் திசையை நோக்கிச் சென்றான். பேராற்றல் படைத்த தார்க்ஷியன் மூவுலகங்களையும் நடுங்கச் செய்தான்.(10) அந்தப் பறவையானவன், ஜனார்த்தனனைத் தன் முதுகில் ஏற்றிச் சென்ற போது, தன் பாத அசைவுகளால் பெருங்கடலைக் கலங்கடித்தான், தன் சிறகசைவுகளால் உண்டான காற்றினால் மலைகளை நடுங்கச் செய்தான்.(11)
அவர்கள் ஆகாசத்தில் சென்றபோது, கந்தர்வர்களும், தேவர்களும் ஈஷ்வரனான அந்தப் புண்டரிகாக்ஷனை {கிருஷ்ணனை} வணங்கினார்கள்.(12) அவர்கள், "ஓ! ஜகன்னாதா, ஓ! உயர்ந்த தேவா, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! விஷ்ணுவே, ஓ! ஜகத்பதியே, உனக்கு மகிமை உண்டாகட்டும். ஓ! வெல்லப்பட முடியாத தேவா, ஓ! உயிரினங்கள் அனைத்தின் நன்மையை விரும்புபவனே, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(13) தைத்திய தானவர்களைக் கொன்ற உன் நரசிம்ம அவதாரத்தை நாங்கள் வணங்குகிறோம். ஓ! வெல்லப்பட முடியாத ஹரியே, மகிமைகள் அனைத்தும் உனதாகட்டும். யோகிகளின் தியான பொருளும், அவர்களுடைய வாழ்வின் இறுதி இலக்கும் நீயே.(14) ஓ! நாராயணா, ஓ! கிருஷ்ணா, ஓ! ஹரியே, ஓ! ஆதி கர்த்தாவே, ஓ! புராணாத்மனே, ஓ! பிரம்மனின் நித்திய தலைவனே நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(15) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே {சகலேஷ்வரா}, நாங்கள் உன்னை வணங்குகிறோம். நிர்க்குணனாக இருந்தாலும் {சற்குணனாக இருந்தாலும்} குணங்களைக் கடந்த எல்லையற்ற நிலையில் இருப்பவன் நீயே. பக்தர்களின் அன்புக்குரியவன் நீயே, அர்ப்பணிப்புடன் கூடிய தொண்டின் நோக்கமாக இருப்பவன் நீயே, ஓ! தானவநாசனா, நாங்கள் உன்னை வணங்குகிறோம்.(16) ஓ! அனைத்தையும் கட்டுப்படுத்துபவனே, புலப்படாத வடிவம் கொண்டவன் நீயே. எங்கள் பணிவான வணக்கத்தை ஏற்றுக் கொள்வாயாக" {என்று வேண்டினர்}.(17) இவ்வாறே தேவர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும், சித்தர்களும், சாரணர்களும் அந்த ஜகன்னாதனிடம் வேண்டினார்கள்.(18)
கிருஷ்ணன் அவர்களின் வேண்டுதல்களைக் கேட்டபடியே பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு அண்டத்தின் நன்மைக்காக விஷ்ணு கடுந்தவம் புரிந்த இடத்திற்கு தேவர்களுடனும், ரிஷிகளுடனும் சென்று சேர்ந்தான்.(19,20) அந்தத் தவத்தின் பலத்தால் விஷ்ணு தன்னை நரன் என்றும், நாராயணன் என்றும் இரு வடிவங்களாகப் பிரித்துக் கொண்டான்.(21) ஆறுகளிற்சிறந்த புனித கங்கை அந்தப் புண்ணியத்தலத்தில் வேகமாகப் பாய்ந்து செல்கிறாள்.
பிரம்மராக்ஷசனான விருத்தாசுரனைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபட இந்திரன் அங்கே பத்தாயிரம் வருடங்கள் தவம் செய்தான். அங்கே ஜனார்த்தனனை தியானிப்பதன் மூலமே சித்தர்கள் பலர் முக்தியை அடைகின்றனர்.(22,23) போர்க்களத்தில் அனைவரையும் கதறச்செய்த ராவணனைக் கொன்ற பிறகு சாத்திர போதனைகளைப் பின்பற்றுவதற்கு உதாரணமாக ராமன் அங்கே கடுந்தவம் செய்தான்.(24) ஜகன்னாதனான கேசவன் அந்தப் புண்ணியத்தலத்தில் நித்திய வாசம் செய்து கொண்டிருப்பதால், தேவர்களும், தெய்வீக முனிவர்களும் எளிதில் அங்கே முக்தியை அடைகிறார்கள்.(25) பெரும் முனிகணங்கள் எப்போதும் அங்கே வேள்விகளைச் செய்து வருகிறார்கள். அந்தப்புண்ணியத் தலத்தை நினைப்பதன் மூலமே மனிதர்கள் இம்மைக்குப் பின் மறுமையில் சுவர்க்கத்தை அடையலாம்.(26) ஓ மனிதர்களின் ஆட்சியாளா, சித்தர்கள் அதைச் சுவர்க்கத்தின் வாயிலாகக் கருதுவதால் எப்போதும் அங்கேயே வசித்து வருகின்றனர்.(27) பக்தர்கள் மட்டுமே வசிக்கும் அந்தப் புண்ணியத் தலத்தில் வசித்தால் ஓர் எதிரியும் நண்பனாகிவிடுவான். அங்கே விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் ஒருவன் எளிதில் தேவ நிலையை அடையலாம்.(28)
பத்ரிநாத் |
முற்றிலும் பகையற்ற சித்தர்களால் புகழப்படும் புண்ணியத்தலமான அந்தப் பதரிகாசிரமத்திற்குத் தேவர்களுடனும், முனிவர்களுடனும் மாலைப் பொழுதில் கிருஷ்ணன் சென்று சேர்ந்தான். மஹாபுண்ணியம் வாய்ந்த ரிஷிகள் பலர் அங்கே வசித்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான்.(29,30) தேவர்களுடன் கூடிய கிருஷ்ணன் அந்தப் பதரி தீர்த்தத்திற்கு வந்தபோது, மேற்கு அடிவானில் சூரியன் மறைந்து கொண்டிருந்தான். கூடுகளுக்குத் திரும்பும் பறவைகளின் ஒலி அங்கே சூழ்ந்திருந்தது. பசுக்களில் பால் கறக்கப்பட்டன. பல முனிவர்கள் வேள்வி நெருப்பில் நெய்யைக் காணிக்கையளிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், எண்ணற்ற சித்தர்கள் பரம்பொருளைத் தியானிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்தப் புனிதத்தலத்தில் வசிப்பவர்களால் விருந்தினர்கள் தொண்டாற்றப்பட்டனர். கண்கள் திரும்பிய இடமெல்லாம் கிட்டிய காட்சி மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. தாமரைக்கண்ணனான கிருஷ்ணன், நெய் விளக்குகளால் ஒளியூட்டப்பட்ட அந்த ஆசிரமத்தின் மத்தியில் வந்திறங்கி கருடன் மீதிருந்து இறங்கினான்" {என்றார் வைசம்பாயனர்}.(31-36)
பவிஷ்ய பர்வம் பகுதி – 51ல் உள்ள சுலோகங்கள் : 36
மூலம் - Source |