Thursday, 26 March 2020

வைவஸ்வத மனுவின் சந்ததி | ஹரிவம்ச பர்வம் பகுதி – 10

(ஐலோத்பத்திவர்ணனம்)

Vaivaswata Manu's Offspring - Emergence of lady Ila | Harivamsa-Parva-Chapter-10 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : வைவஸ்வத மனுவின் மகன்கள்; மனு செய்த வேள்வி; வேள்வியில் உண்டான இளை; இளைக்கும் புதனுக்கும் பிறந்த ஐலன்; பூமியைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்துக் கொண்ட மனுவின் மகன்கள்; வைவஸ்வத மனுவின் நான்காவது மகன் ஸர்யாதியின் பேரன் ரேவதன்; குசஸ்தலை நாட்டை அடைந்த ரேவதன் மகன் ரைவதன்; பிரம்மலோகத்தில் இசை பயின்ற ரைவதனும் அவனுடைய மகள் ரேவதியும்; பலராமன் ரேவதி திருமணம்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! பாரதர்களில் முதன்மையானவனே, வைவஸ்வத மனுவுக்கு, இக்ஷ்வாகு, நாபாகன், திருஷ்ணு, சர்யாதி, நரிஷ்யன் {நரிஷ்யந்தன்}, பிரங்ஷன் {பிரமசு}, நாபாகாரிஷ்டன், கொருஷன் {கரூஷன்}, மற்றும் பிருஷத்ரன் என ஒன்பது மகன்கள் இருந்தனர்.(1,2) ஓ! மன்னா, சந்ததியை விரும்பிய குடிமுதல்வன் {வைவஸ்வத} மனு, ஒரு வேள்வியை மித்ரன் மற்றும் வருணனின் முன்னிலையில் செய்தான்.(3) ஓ! பரதனின் வழித்தோன்றலே, இந்த ஒன்பது மகன்களும் பிறப்பதற்கு முன்னர் அந்த {வைவஸ்வத} மனு, நிகழ்வேள்வியில் மித்ரன் மற்றும் வருணனின் பகுதிகளுக்குப் பலியுணவு {காணிக்கை / படையல்} அளித்தான். இந்தக் பலியுணவு அளிக்கப்பட்ட போது, தேவர்களும், கந்தர்வர்களும், மனிதர்களும், தவசிகளும் பெரும் மகிழ்ச்சியை அடைந்து, ஆச்சரியமடைந்து, "ஓ!, இவனது தவசக்தி அற்புதமானது. ஓ!, இவனது சாத்திர அறிவு அற்புதமானது" என்றனர்.(4-6)


அந்த வேள்வியில்தான், தெய்வீக ஆடை உடுத்தியவளும், தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தெய்வீக கவசம் பூண்டவளுமான இளை பிறந்தாள் என்பது மரபு.(7) கையில் தண்டக்கோலுடன் கூடிய {வைவஸ்வத} மனு, அவளிடம் {இளையிடம்}, "ஓ! அழகியே, என்னைப் பின்தொடர்வாயாக" என்றான். அவள், சந்ததியை விரும்பிய அந்தக் குடிமுதல்வனிடம் {பிரஜாபதியான மனுவிடம்} அறமுறையிலான பின்வரும் மறுமொழியை அளித்தாள்.(8)

இளை, "ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, மித்ரன் மற்றும் வருணனின் சக்தியில் நான் பிறந்தேன், எனவே நான் அவர்களிடம் செல்லப் போகிறேன். அறநெறிசார்ந்த என் ஒழுக்கத்தை அழிக்க வேண்டாம்" என்றாள்.(9)

இளை, மனுவிடம் இதைச் சொல்லிவிட்டு மித்ரன் மற்றும் வருணனை அணுகினாள். அந்த அழகி தன் கரங்களைக் கூப்பியபடி அவர்களிடம், "நான் உங்கள் சக்தியில் பிறந்தேன்; மனு தம்மைப் பின்தொடரும்படி கேட்டுக் கொண்டார். நான் செய்ய வேண்டியதென்ன என்பதைச் சொல்வீராக" என்றாள்.(10,11)

இவ்வாறு அவர்களிடம் பேசியவளும், பக்திமிக்கவளும், கற்புடையவளுமான இளையிடம், மித்ரனும், வருணனும் என்ன சொன்னார்கள் என்பதைச் சொல்கிறேன் என்னிடம் கேட்பாயாக.(12) அவர்கள், "ஓ! அழகிய இடை கொண்ட அழகியே, உன்னுடைய அறம், பணிவு, தற்கட்டுப்பாடு, வாய்மை ஆகியவற்றால் நாங்கள் நிறைவடைந்தோம்.(13) எனவே, ஓ! பெரும் பெண்ணே, நீ எங்கள் மகளாகக் கொண்டாடப்படுவாய். ஓ! அழகியே, {வைவஸ்வத} மனுவின் குலத்தைத் தழைக்கச் செய்வதற்காக, ஸுத்யும்னன் என்ற பெயரில் நீ அவனுடைய மகனாக மூன்று உலகங்களினாலும் கொண்டாடப்படுவாய். அறவோனாகவும், உலகால் விரும்பப்படுபவனுமாக மனுவின் குலத்தை நீ பெருகச் செய்வாய்" என்றனர்.(14,15)

அவள், இதைக் கேட்டுவிட்டுத் தன் தந்தையிடம் (மனுவிடம்) திரும்ப இருந்தபோது, வழியில் இணைசேரும் நோக்கத்துடன் புதனால் அழைக்கப்பட்டாள்.(16) சோமனின் {சந்திரனின்} மகனான புதன் அவளிடம் புரூரவனை {ஐலனைப்} பெற்றாள். அந்த மகனை ஈன்ற பிறகு இளை ஸுத்யும்னனானாள்[1].(17) ஓ! பரதனின் வழித்தோன்றலே, பெரும் பக்திமான்களாகிய உத்கலன், கயன் மற்றும் சக்திமிக்க வினதாஷ்வன் ஆகிய மூவரும் ஸுத்யும்னனின் குருதி தொடர்புடைய உறவினராவர் {மகன்களாவர்}.(18) ஓ! மன்னா, {நாட்டின் / உலகின்} வடக்குப் பகுதி உத்கலனிடமும், மேற்குப் பகுதி வினதாஷ்வனிடமும், கயை நகரம் கயனிடமும் இருந்தன.(19) ஓ! பகைவரை அடக்குபவனே, {வைவஸ்வத} மனு சூரியனுக்குள் நுழைந்ததும், அவனுடைய மகன்கள் பூமியைப் பத்துப் பகுதிகளாகப் பிரித்தனர்.(20) அவர்களில் மூத்தவனும், காடுகள் மற்றும் சுரங்கங்களுடன் கூடிய பூமியை வேள்வியூபங்களால் குறித்தவனுமான இக்ஷ்வாகு, நடுப்பகுதியை {மத்திய பகுதியை} அடைந்தான்.(21)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் இது பிரத்யும்னன் என்றிருக்கிறது. இஃது அச்சுப்பிழையாக இருக்க வேண்டும். தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக் திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் ஸுத்யும்னன் என்றே இருக்கிறது.

பெண்ணின் இயல்பைக் கொண்டிருந்ததால் ஸுத்யும்னன் இதை (நடுப்பகுதியை) அடையவில்லை. ஓ! குருக்களில் முதன்மையானவனே, வசிஷ்டருடைய சொற்களின்படி, உயர்ஆன்மா கொண்டவனும், பக்திமானுமான மன்னன் ஸுத்யும்னன், பிரதிஷ்டான மாகாணத்தில் {பிரதிஷ்டானபுரத்தில்}[2] நிறுவப்பட்டான். பெருஞ்சிறப்புமிக்க ஸுத்யும்னன் அந்த நாட்டை அடைந்ததும், அதைப் புரூரவனுக்கு {ஐலனுக்கு} வழங்கினான். அவனே பிரதிஷ்டானத்தை ஆளவும் செய்தான்[3]. உத்கலன் மூவுலகங்களிலும் திருஷ்டகேது, அம்பரீஷன் மற்றும் தண்டன் என்று கொண்டாடப்படும் மூன்று மகன்களைப் பெற்றான்.(22-24) அவர்களில் உன்னதமான தண்டன், தவசிகளின் வசிப்பிடமாக உலகத்தில் கொண்டாடப்படும் மிகச் சிறந்த தண்டகாரண்யத்தை (தண்டனின் காட்டை) நிறுவினான்.(25) அதற்குள் நுழைந்த உடனேயே மனிதன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான். ஓ! பரதனின் வழித்தோன்றலே, ஐலனைப் பெற்ற பிறகு, ஸுத்யும்னன் என்ற பெயரால் கொண்டாடப்பட்டவனும், இளை என்ற பெயரில் ஆணும் பெண்ணுமாக இருந்தவனும், மனுவின் மகனுமான ஸுத்யும்னன் சொர்க்கத்திற்குச் சென்றான்.(26,27)

[2] "பிரதிஷ்டானம் அல்லது பிரயாக் என்பது நவீன கால வடமேற்கு மாகாண அரசு அமைந்துள்ள அலகாபாத் ஆகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார். இது 1897ல் எழுதப்பட்டது. தற்காலத்தில் மிகச் சமீபத்தில் இந்த அலகாபாத் மீண்டும் பிரயாக் என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கிறது. ஆனால் மஹாராஷ்டிர மாநிலம், ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள பைத்தான் நகரமே இதிகாச கால பிரதிஷ்டானம் என்று நம்பப்படுவதாக விக்கிப்பீடியா தகவல் சொல்கிறது. இதன் அருகில் மற்றுமிரு இதிகாச கால நகரங்களான மாஹிஷ்மதி மற்றும் உஜ்ஜயின் ஆகியவை இருக்கின்றன.

[3] பெருஞ்சிறப்புமிக்க ஸுத்யும்னன் பிரதிஷ்டான நாட்டை அடைந்து, தானே ஆண்ட பிறகு, அதைப் புரூரவனுக்கு வழங்கினான் என்று இருக்க வேண்டும். தேசிராஜு ஹனுமந்தராவ் மற்றும் பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் அவ்வாறே இருக்கிறது.

ஓ! பரதனின் வழித்தோன்றலே, ஸகர்கள் {வைவஸ்வத மனுவின் ஐந்தாவது மகனான} நாரிஷ்யந்தனின் மகன்களும், மன்னர்களில் முதன்மையான அம்பரீஷன் {வைவஸ்வத மனுவின் இரண்டாவது மகனான} நாபாகனின் மகனுமாவர்.(28) {வைவஸ்வத மனுவின் மூன்றாவது மகனான} திருஷ்ணுவின் மகன் தார்ஷ்டகன், ரணதிருஷ்ட க்ஷத்ரன் {தாக்கப்பட முடியாத போர் வீரன்} என்றும் அறியப்பட்டான். கரூஷனின் மகன்கள் போரில் பயங்கரர்களான க்ஷத்ரிய காரூஷர்களாவர்.(29) ஓ! பரதனின் வழித்தோன்றலே, இவ்வழியில் வலிமைமிக்கவர்களும், பலமிக்கவர்களுமான ஓராயிரம் க்ஷத்திரியர்கள் பிறந்தனர், {வைவஸ்வத மனுவின் ஏழாவது மகனான} நாபாகரிஷ்டனின் மகன்கள் (பிறப்பால்) க்ஷத்திரியர்களாக இருப்பினும், வைசியர்களின் நிலையை அடைந்தார்கள்.(30) {வைவஸ்வத மனுவின் ஆறாவது மகனான} பிராங்சு {பிரம்சு} ஷர்யாதி என்ற பெயரில் கொண்டாடப்பட்ட ஒரு மகனைக் கொண்டிருந்தான். பலமிக்கத் தண்டன், நரிஷ்வந்தனின் மகனாவான். {வைவஸ்வத மனுவின் நான்காவது மகனான} ஸர்யாதி ஒரு மகனையும், மகளையும் இரட்டையர்களாகக் கொண்டிருந்தான். மகனின் பெயர் ஆனர்த்தன் ஆகும், மகள் ஸுகன்யை சியவனரின் மனைவியானாள். உயர்ந்த பிரகாசம் கொண்ட ரேவன் {ரேவதன்} ஆனர்த்தனின் வாரிசானான்.(31,32) அவனது நகரமான குசஸ்தலை ஆனர்த்த மாகாணத்தில் இருந்தது. குகுத்மி என்ற பெயரையும் கொண்டவனும், ரேவனின் {ரேவதனின்} மகனுமான ரைவதன், அறவோனாக இருந்தான்.(32) குசஸ்தலை நாட்டை அடைந்த அவன் {ரைவதன்}, நூறு மகன்களின் தந்தையானான். அவனும் {ரைவதன்}, அவனுடைய மகளும் {ரேவதியும்}, இசைக் குறிப்புகளைப் பிரம்மனிடம் இருந்து பெற்றனர். ஓ! தலைவா, {பிரம்மலோகத்தில் இருந்த} அவனுக்குப் பல யுகங்கள் ஒரு கணத்தைப் போலக் கடந்து சென்றன. அவன் இளைமை நிலையிலேயே, யாதவர்களால் நிறைந்திருந்த தன் சொந்த நகரத்திற்குத் திரும்பிச் சென்றான்.(33-35) வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தலைமையிலான விருஷ்ணி குலத்தோராலும், போஜனின் வழித்தோன்றல்களாலும் பாதுகாக்கப்பட்ட துவாராவதி நகரத்தில் அழகிய காரிகையர் பலர் இருந்தனர்.(36)

ஓ! பகைவரைக் கொல்பவனே, இந்த விபரங்கள் அனைத்தையும் அறிந்த ரைவதன், நோன்பு நோற்பவளும், ரேவதி என்ற பெயரைக் கொண்டவளுமான அந்தக் கன்னிகையை {தன் மகளை} பலராமனுக்கு {திருமணம் முடித்துக்} கொடுத்தான்.(37) (தன் மகளைக்) கொடுத்த பிறகு, அவன் கடுந்தவங்களைச் செய்வதற்காகச் சுமேரு மலையின் சிகரத்திற்குச் சென்றான். ராமன் {பலராமன்} ரேவதியின் துணையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(38)

ஹரிவம்ச பர்வம் பகுதி – 10ல் உள்ள சுலோகங்கள் : 38
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English

Labels

அக்ரூரன் அக்னி அங்கிரஸ் அசமஞ்சன் அதிதி அதிரதன் அநிருத்தன் அந்தகன் அரிஷ்டன் அருந்ததி அர்ஜுனன் அனு அஜபார்ஷன் அஜமீடன் அஸ்தி ஆபவர் ஆயு ஆரியா தேவி ஆஹுகன் இந்திரன் இளை உக்ரசேனன் உக்ராயுதன் உசீநரன் உதங்கர் உத்தவர் உபரிசரவசு உமை உல்பணன் உஷை ஊர்வசி ஊர்வர் ஏகலவ்யன் ஔர்வர் கக்ஷேயு கங்கை கசியபர் கண்டரீகர் கண்டாகர்ணன் கண்டூகன் கதன் கபிலர் கமலாதேவி கம்ஸன் கருடன் கர்க்கர் கர்ணன் காதி காந்திதேவி கார்த்தவீர்யார்ஜுனன் காலநேமி காலயவனன் காலவர் காளியன் கிருஷ்ணன் குசிகன் குணகன் குணவதி கும்பாண்டன் குரோஷ்டு குவலயாபீடம் குவலாஷ்வன் கூனி கைசிகன் கைடபன் கோடவி சகடாசுரன் சக்ரதேவன் சங்கன் சததன்வன் சத்யகர்ணன் சத்யகர்மன் சத்யபாமா சத்ருக்னன் சத்வதன் சந்தனு சந்திரவதி சந்திரன் சம்பரன் சரஸ்வதி சனத்குமாரர் சன்னதி சாணூரன் சாத்யகி சாந்தீபனி சாம்பன் சால்வன் சிசுபாலன் சித்திரலேகை சித்திராங்கதன் சிருகாலன் சிவன் சுக்ரன் சுசீமுகி சுநாபன் சுனீதன் சூரன் சூரியன் சைசிராயணர் சௌதி டிம்பகன் தக்ஷன் தசரதன் தந்தவக்ரன் தமகோஷன் தரதன் தன்வந்தரி தாரை திதி திதிக்ஷு திரிசங்கு திரிவிக்ரை திருமிலன் திரையாருணன் திலீபன் திவோதாஸன் துந்து துந்துமாரன் துருவன் துர்வாசர் துஷ்யந்தன் தூம்ரவர்ணன் தேவகன் தேவகி தேவாவ்ருதன் தேனுகன் நந்தன் நந்தி நரகாசுரன் நரசிம்மன் நஹுஷன் நாரதர் நாராயணன் நாராயணி நிகும்பன் நிசுந்தன் நித்ராதேவி நீபன் பஞ்சஜனன் பத்மாவதி பத்ரன் பப்ரு பயோதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலராமன் பலி பாணன் பார்வதி பானு பானுமதி பிரதீபன் பிரத்யும்னன் பிரபாவதி பிரமர்த்தனன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரலம்பன் பிரவரன் பிரஸேனன் பிரஹலாதன் பிராசேதஸ் பிராப்தி பிருது பிருதை பிருஹதாஷ்வன் பிருஹஸ்பதி பீஷ்மகன் பீஷ்மர் புதன் புரூரவன் பூதனை பூமாதேவி பூரு பூஜனி பௌண்டரகன் மதிராதேவி மது மதுமதி மயன் மனு மஹாமாத்ரன் மாயாதேவி மாயாவதி மார்க்கண்டேயர் மித்ரஸஹர் முசுகுந்தன் முரு முருகன் முஷ்டிகன் யசோதை யது யயாதி யுதிஷ்டிரன் ரஜி ராமன் ருக்மவதி ருக்மி ருக்மிணி ரேவதி ரைவதன் ரோஹிணி லவணன் வசிஷ்டர் வராகம் வருணன் வஜ்ரநாபன் வஸு வஸுதேவன் வாமனன் வாயு விகத்ரு விசக்ரன் விதர்ப்பன் விப்ராஜன் விப்ருது வியாசர் விரஜை விருஷ்ணி விஷ்ணு விஷ்வாசி விஷ்வாமித்ரர் விஷ்வாவஸு விஸ்வகர்மன் வேனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு ஜயந்தன் ஜராசந்தன் ஜனமேஜயன் ஜனார்த்தனன் ஜஹ்னு ஜாம்பவான் ஜியாமோகன் ஜ்வரம் ஸகரன் ஸத்யபாமா ஸத்யவிரதன் ஸத்ராஜித் ஸத்வான் ஸஹஸ்ரதன் ஸ்ரீதாமன் ஸ்ரீதேவ ஸ்வேதகர்ணன் ஹம்சன் ஹயக்ரீவன் ஹரி ஹரியஷ்வன் ஹரிஷ்சந்திரன் ஹிரண்யகசிபு ஹிரண்யாக்ஷன்