Tuesday 8 September 2020

கிருஷ்ணனை வரவேற்ற உக்ரசேனன் | விஷ்ணு பர்வம் பகுதி – 112 – 056

(துவாரவதீப்ரயாணஸங்கேதம்)

Ugrasena receives Krishna | Vishnu-Parva-Chapter-112-056 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குசஸ்தலியில் இடம்பார்க்கச் சென்ற கருடன்; மதுராவில் கிருஷ்ணனை வரவேற்ற உக்ரசேனன்; குசஸ்தலிக்குப் புலம்பெயரும் ஆலோசனை...

Rama and Krishna being received at the Court of the King Ugrasena at Mathura

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பிராமணரே, சக்ரனின் ஆற்றலைக் கொண்ட தலைவன் கிருஷ்ணன் விதர்ப்ப நகரில் இருந்து புறப்பட்ட போது, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகனை {கருடனை வாகனமாகப்} பயன்படுத்தவில்லை; பிறகு ஏன் அவனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்? வினதையின் மகன் {கருடன்} என்ன செய்தான்? ஓ! பெரும் முனிவரே, நான் இதில் ஆவல் நிறைந்தவனாக இருக்கிறேன்; ரகசியத்தைச் சொல்வீராக" என்று கேட்டான்.(1,2)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! மன்னா, பெருஞ்சக்திவாய்ந்த வினதையின் மகன் {கருடன்} விதர்ப்ப நகரில் இருந்து புறப்பட்ட பிறகு, அவன் மனிதர்கள் செய்வதற்கு அரிதான அருஞ்செயலைச் செய்தான் அதைக் கேட்பாயாக.(3) ஓ! தலைவா, தேவர்களின் தேவனான ஜனார்த்தனன் மதுரா நகருக்குப் புறப்படும் முன்னர் அங்கே {விதர்ப்ப நகரில்} கூடியிருந்த மன்னர்களின் முன், "போஜ மன்னரால் ஆளப்படும் அழகிய மதுரா நகருக்கு நான் செல்லப் போகிறேன்" என்றான். அழகனும், நுண்ணறிவுமிக்கவனுமான வினதையின் மகன் சிறிது நேரம் சிந்தித்த பிறகு வாசுதேவனை வணங்கிவிட்டு, கூப்பிய கரங்களுடன் அவனிடம் பேசினான்.(4-6)

கருடன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தேவா, நான் ரைவதனின் நகரமான குசஸ்தலிக்கும், அழகிய ரைவத மலைக்கும், அதன் அருகில் நந்தவனத்திற்கு ஒப்பான காட்டுக்கும் செல்லப் போகிறேன்.(7) அழகிய நகரமான குசஸ்தலியை ராட்சசர்கள் கைவிட்டனர். அது ரைவத மலையின் அடிவாரத்தில், பெருங்கடலின் கரையில் அமைந்திருக்கிறது. மரங்களால் நிறைந்ததாகவும், மலர்களின் இழைகளாலும், செடிகொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. யானைகளும், பாம்புகளும் அங்கே பரவலாக இருக்கின்றன, கரடிகள், குரங்குகள், பன்றிகள், எருமைகள், மான்கள் ஆகியனவும் அங்கே வசிக்கின்றன. நான் (அவ்விடத்தை) முற்றிலும் சோதித்து, அஃது உன் வசிப்பிடமாகத் தகுந்ததா எனப் பார்க்கப் போகிறேன். ஓ! தலைவா, பெரிதாக இருக்கும் அந்நகரம் நீ வசிப்பதற்குத் தகுந்ததாக இருந்தால், அங்கிருக்கும் முட்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு நான் திரும்பி வருகிறேன்" என்றான் {கருடன்}".(8-10)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பெரும்பலம்வாய்ந்தவனான அந்தப் பறவைகளின் தலைவன் {கருடன்}, தேவர்களின் மன்னனான ஜனார்த்தனின் முன்பு இவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அவனை வணங்கிவிட்டு மேற்குத் திசை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(11) கிருஷ்ணனும், யாதவர்களுடன் சேர்ந்து அழகிய மதுரா நகருக்குள் நுழைந்தபோது, ஆடற்பெண்டிருடனும், குடிமக்களுடனும் நகரைவிட்டு வெளியே வந்த உக்ரசேனன், வெற்றியாளனான கிருஷ்ணனைக் கௌரவித்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(12)

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பேரரசன் உக்ரசேனன், எண்ணற்ற மன்னர்களால் கிருஷ்ணாபிஷேகம் {மன்னர்களுக்கு இந்திரனாகக் கிருஷ்ணன் பட்டாபிஷேகம்} செய்யப்பட்டதைக் கேட்டதும் என்ன செய்தான்?" என்று கேட்டான்.(13)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "எண்ணற்ற மன்னர்களால் கிருஷ்ணன் பேரரசனாக நிறுவப்பட்டதையும், இந்திரன் தன் தூதனான சித்திராங்கதன் மூலமாக அமைதியை ஏற்படுத்திக் {சமாதானம் செய்து} கொண்டதையும்,(14) ஒவ்வொரு மன்னனுக்கும் ஒரு லட்சம், ஒவ்வொரு பேரரசனுக்கும் ஓர் அர்வுதம் {ஒரு கோடி}, சாதாரண மனிதன் ஒவ்வொருவனுக்கும் பத்தாயிரம் என அங்கே வந்திருந்த எவரும் வெறுங்கையோடு போகாதபடியும், தேவர்களின் ஆணைப்படியும், கிருஷ்ணனின் விருப்பப்படியும் நிதிகள் மற்றும் செல்வத்தின் அருள்நிறைந்த தலைவனால் {குபேரனால்} செல்வம் பகிர்ந்தளிக்கப்பட்டதையும்,(15,16) தன் மக்கள் சொல்வதைக் கேட்டும், {அதைக் கண்ட} மக்களின் நடத்தை குறித்துப் பிறர் {ஒற்றர்கள்} சொன்னதைக் கேட்டும், உக்ரசேனன், பாதுகாப்பைத் தரும் தேவர்களின் கோவில்களில் பெரும்பூஜை செய்தான்.(17,18) வசுதேவனின் வீட்டு வாயில்களின் இரு புறங்களும், கொடிகள், முக்கோணக் கொடிகள், மற்றும் மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. அவன் {உக்ரசேனன்}, சுப்பிரபை என்றழைக்கப்படும் கம்சனின் சபா மண்டபத்தையும், கொடிகளாலும், பல்வேறு வகைத் துணிகளாலும் அலங்கரித்தான்.(19,20)

கோபுரத்தில் பேரரசன் கிருஷ்ணன் அமரும் அறையின் கதவுகள் அந்த மன்னனால் அமுதத்தால் பூசப்பட்டன[1].(21) அங்கே அனைத்துப் பக்கங்களிலும் ஆடலும் இசையும் நிகழ்ந்து கொண்டிருந்தன. அந்த நகரம், கொடிகளாலும், காட்டு மலர் மாலைகளாலும், நீர் நிறைந்த குடுவைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(22) மன்னன் நெடுஞ்சாலையெங்கும் சந்தன நீர் தெளித்துத் தரையில் துணிவிரிப்புகளை விரித்து வைத்தான்.(23) சாலைகளின் இரு பக்கங்களிலும் பாத்திரங்களில் தூபங்கள் வைக்கப்பட்டிருந்தன. அகில், வெல்லம் கலந்த குங்கிலியம் ஆகியன தொடர்ந்து எரிக்கப்பட்டன.(24) முதிய பெண்கள் மங்கலப் பாடல்களைப் பாடினர், இளம்பெண்கள் தங்கள் இல்லங்களில் ஆவலுடன் திரிந்து வந்தனர்.(25)

[1] சித்திரசாலை பதிப்பில், "வாயில்களும், கோபுரங்களும் வெண்களிமண்ணால் பூசப்பட்டன. மன்னர்களின் இந்திரன் (உக்ரசேனன்), மன்னர்களின் இந்திரனுக்காக (கிருஷ்ணனுக்காக) ஒரு திறந்த சபா மண்டபத்தைக் கட்டினான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ராஜேந்திரனான கிருஷ்ணன் இருக்குமிடத்தில் வெள்ளைச் சாந்து பூசச் செய்தான். அப்படியே தோரணத்தையும் (கோபரு முகப்பட்டையையும்) கோபுரத்தைச் சாந்து பூசச் செய்தான் என்றிருக்கிறது.

பேரரசன் உக்ரசேனன் நகரில் இவ்வாறு விழாவைத் தொடங்கி வைத்துவிட்டு, வசுதேவனின்[2] அரண்மனைக்குச் சென்று, அவனிடம் இந்த இனிய செய்தியைச் சொல்லிவிட்டும், ராமனுடன் ஆலோசித்துவிட்டும் {கிருஷ்ணனின்} தேருக்குச் சென்றான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே வேளையில் பாஞ்சஜன்ய சங்கின்[3] பேரொலி கேட்டது.(26,27) அந்தச் சங்கொலியைக் கேட்டுப் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், சூதர்கள், வந்திகள், மாகதர்கள் உள்ளிட்ட மொத்த மதுரா நகரமும் ஒரு பெரும்படையின் துணையுடனும் ராமனைத் தங்கள் முன்பு கொண்டும் {நகரை விட்டு} வெளியே வந்தது. உக்ரசேனன் அர்க்கியத்தையும், கிருஷ்ணனின் பாதங்களைக் கழுவுவதற்கான நீரையும் சுமந்து சென்றான்.(28,29)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இங்கே மீண்டும் உக்ரசேனன் என்றே இருக்கிறது. பொருள் சேராததால் மற்ற பதிப்புகளைக் கொண்டு இங்கே திருத்தப்பட்டிருக்கிறது.

[3] மற்ற இரு பதிப்புகளிலும் சங்கு என்று மட்டுமே உள்ளது. பாஞ்சஜன்யம் குறிப்பிடப்படவில்லை. காண்டவப் பிரஸ்தம் எரிக்கப்படுவதற்கு முன்புதான் கிருஷ்ணனுக்குச் சக்கரமும், கௌமோதகி கதாயுதமும் கிடைத்தது. இதை மஹாபாரதம், ஆதிபர்வம் 227ம் அத்தியாயத்தின் 23 முதல் 28ம் ஸ்லோகங்கள் வரையுள்ள செய்தியின் மூலம் அறியலாம். பாஞ்சஜன்யம் பஞ்சனன் என்ற அசுரனை அழித்தபோது கிடைத்தது. இதை விஷ்ணுபர்வம் 33ம் அத்தியாயத்தில், 17ம் ஸ்லோகத்தின் மூலம் அறியலாம். 

பேரரசன் உக்ரசேனன், சிறிது தொலைவுக்குச் சென்றதும், கிருஷ்ணனின் பார்வைக்குள் தான் வந்ததும், {மேற்கொண்டு} கால் நடையாகச் செல்ல விரும்பி தன் வெண்தேரில் இருந்து கீழே இறங்கினான்.(30) அவன் தெய்வீக ரத்தனங்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தேரில் அமர்ந்திருப்பவனும், தேவர்களின் மன்னனுமான ஹரியைக் கண்டு, பகைவரின் படையைக் கொல்பவனும், தாமரைக் கண்ணனுமான ராமனிடம் மகிழ்ச்சியால் தடைபட்ட {பின்வரும்} சொற்களைச் சொன்னான்.(31,32) ரத்தினங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவனாகவும், தன் மார்பை அலங்கரிக்கும் காட்டு மலர் மாலையால் சூரியனைப் போல ஒளிர்பவனாகவும், சாமரங்கள், குடைகள், கருடச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளுடன் கூடியவனாகவும் இருந்த கிருஷ்ணன், அரச சின்னங்களில் பளபளக்கும் வகையில் எழுஞாயிற்றின் பேரெழிலுடன் திகழ்ந்தான்.(33,34)

(உக்ரசேனன் சொன்னான்), "ஓ! பெரியவனே, இதன்பிறகும் தேரில் செல்வது எனக்குத் தகாது. இதை நினைத்தே நான் கீழே இறங்குகிறேன். நீ தேரில் செல்வாயாக.(35) கேசவனின் வடிவத்தில் மதுராவுக்கு வந்திருக்கும் விஷ்ணு, கடல் போன்ற மன்னர்களின் கூட்டத்தில் தேவர்களின் மன்னனாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான்" {என்றான் உக்ரசேனன்}.(36) (அப்போது) பெரும்பிரகாசம் கொண்டவனான கிருஷ்ணனின் அண்ணன் {பலராமன்} மன்னனுக்கு {உக்ரசேனனுக்கு} மறுமொழி கூறினான்.(37)

{பலராமன் உக்ரசேனனிடம்}, "ஓ! மன்னா, மன்னர்களில் சிறந்தவனான அவன் {கிருஷ்ணன்} வந்து கொண்டிருக்கும் வேளையில் அவனது மகிமைகளைப் பாடுவது முறையல்ல. இவ்வாறு செய்யாமலே ஜனார்த்தனன் உம்மிடம் நிறைவுடன் இருக்கிறான்.(38) தானே தணிந்திருப்பவனைத் துதிப்பதால் என்ன பயன்? நீர் அவனது மகிமைகளைப் பாடுவதும், {அவனைச் சந்திக்க வந்திருக்கும்} உமது வருகையும் ஒன்றே.(39) கிருஷ்ணன், குடிமுதல்வன் {ராஜாதிராஜன்} என்ற மதிப்பை அடைந்திருந்தாலும் உமது வீட்டிற்கு வருகிறான் எனும்போது, தெய்வீகமான, மீமானிடத் துதிகளால் அவனைத் துதிப்பதில் என்ன பயன்?" என்று கேட்டான் {பலராமன்}. இவ்வாறு ஒருவரோடொருவர் பேசிக் கொண்டே அவர்கள் கேசவனை அடைந்தனர்.(40)

பேச்சாளர்களில் முதன்மையான கிருஷ்ணன், கைகளில் அர்க்கியத்துடன் வரும் மன்னன் உக்கிரசேனனைக் கண்டு தன் தேரை நிறுத்தி,(41) "ஓ! மதுராவின் மன்னா {உக்ரசேனரே}, 'நீர் மதுராவின் தலைவராக இருப்பீராக' என்று அறிவித்து உம்மை நான் நிறுவியிருக்கும்போது, அதற்கு மாறாக நான் செயல்படுவது தகாது.(42) ஓ! மன்னா, அர்க்கியத்தையும், என் கால் கழுவுவதற்கும், வாய் அலம்புவதற்குமுரிய நீரை நீர் எனக்குத் தருவது முறையாகாது. இதுவே என் இதயம் உணரும் விருப்பமாகும்.(43) உமது நோக்கத்தை அறிந்தே நான் 'நீரே மதுராவின் மன்னர்' எனச் சொல்கிறேன். அதற்கு மாறாகச் செயல்படாதீர்.(44) ஓ! மன்னா, {நான் அடைந்த} நிலத்திலும், கொடையிலும் உமக்கு உரிய பங்கை நான் கொடுக்கிறேன். வேறு மன்னர்களுக்கு நான் செய்ததைப் போலவே ஆபரணங்களோ, ஆடைகளோ இன்றி ஒரு லட்சத்தில் ஒரு பகுதியான உமது பங்கை {ஒரு லட்சம் தங்க நாணயங்களை} ஏற்கனவே இருப்பில் வைத்திருந்தேன்.(45,46) ஓ! மன்னா, பொன், குடை, சாமரங்கள், கொடிகள், தெய்வீக ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் உமது வெண்தேரில் ஏறுவீராக.(47) சூரியனின் காந்தியைக் கொண்ட உமது மகுடத்தைச் சூடிக் கொண்டு, உமது மகன்கள், பேரப்பிள்ளைகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக மதுரா நகரை ஆட்சி செய்து, உமது பகைவரை வீழ்த்தி, போஜ குலத்தைப் பெருகச் செய்வீராக.(48) தேவர்களின் மன்னனான வஜ்ரதாரி {இந்திரன்}, தெய்வீக ஆபரணங்களையும், ஆடைகளையும் அனந்தனுக்கும் {பலராமருக்கும்} சௌரிக்கும் {சூரனின் மகனான வசுதேவருக்கும்} அனுப்பி வைத்தான்.(49) அந்த அபிஷேக விழாவின் போது, மதுராவின் குடிமக்களுக்கென ஒதுக்கப்பட்ட ஆயிரம் குடம் பொன் நாணயங்களில் சூதர்கள், வந்திகள், மாகதர்கள் ஒவ்வொருவருக்கும் ஓராயிரமும், முதியவர், கணிகையர் மற்றும் பிறர் ஒவ்வொருவருக்கும் நூறும், மன்னர் உக்ரசேனருடன் வாழும் பிறருக்கும், விக்ருதுவுக்கும், யாதவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்தாயிரமும் கொடுக்க வேண்டுமெனத் தேவர்களின் மன்னன் {இந்திரன்} ஆணையிட்டிருக்கிறான்" என்றான் {கிருஷ்ணன்}"[4].(50-52)

[4] சித்திரசாலை பதிப்பில், "மதுராவாசிகள் அனைவருக்கும் பத்துப் பொன் நாணயங்களும், சூதர், வந்தி, மாகதர் ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் (பொன் நாணயங்களும்), முதிய பெண்டிர், கணிகையரின் குழுகளுக்குப் பத்தாயிரம் (பொன் நாணயங்களும்}, விக்ருது போன்ற முக்கியத் தலைவர்களுக்குப் பத்தாயிரம் பொன்னும் கொடுக்க வேண்டுமென இந்திரன் ஒதுக்கியிருக்கிறான்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "எல்லா மதுரை வாஸிகளுக்குப் பத்து, பத்துக்களாகத் தங்க நாணயங்கள், ஸூத, மாகத வந்திகளான இசை வல்லுனர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஆயிரமாக "தீனாரக" தங்க நாணயங்கள்; விருத்த ஸ்திரிகள், பணிப்பெண்களுக்குத் தனித்தனி நூறு தீனாரகங்கள். அரசன் மெய்க் காவலர், விகத்ரு முதலியவர்களுக்குத் தனித்தனி பத்தாயிரம் தீனாரகங்கள். இவ்வாறு இந்திரனால் பங்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றிருக்கிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஜனாரத்தனன், படைவீரர்கள் அனைவரின் முன்னிலையிலும் பேரரசன் உக்ரசேனனை இவ்வாறு கௌரவித்துப் பெரும் மகிழ்ச்சியுடன் மதுரா நகருக்குள் நுழைந்தான்.(53) தெய்வீக ஆபரணங்கள், மாலைகள், ஆடைகள், களிம்புகள் ஆகியவற்றின் காரணமாகத் தேவர்கள் சூழ தேவலோகத்தில் வாழ்பவனைப் போல அவன் தெரிந்தான்.(54) பேரி, படஹம், சங்கு, துந்துபி ஆகியவற்றின் ஒலிகளாலும், யானைகளின் பிளிறல்களாலும், குதிரைகளின் கனைப்பொலிகளாலும், வீரர்களின் சிங்க முழக்கங்களாலும், தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளாலும் அங்கே மேகங்களின் முழக்கத்தைப் போன்ற பேராரவாரம் ஏற்பட்டது.(55,56) வந்திகள் அவனது புகழைப் பாடித் துதிக்கத் தொடங்கினர், குடிமக்கள் எண்ணற்ற கொடைகளால் அவனை வணங்கினர். இவற்றால் அந்த ஹரி கிஞ்சிற்றும் ஆச்சரியமடைந்தானில்லை.(57) இயல்பால் உயர்ந்த மனம் கொண்டவனாகவும், அகங்காரமற்றவனாகவும் இதற்கு முன்பே இதைவிட அதிகம் கண்டவனாகவும் அவன் இருந்தான். அதன் காரணமாக அவன் ஆச்சரியமேதும் அடையவில்லை.(58) மதுராவாசிகள், சூரியனைப் போன்று பிரகாசமான தன்னொளியின் காந்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்த மாதவனின் வருகையைக் கண்டு ஒவ்வொரு அடியிலும் அவனை வணங்கினர்.(59)

{அவர்கள்}, "ஸ்ரீயின் வசிப்பிடமும், பாற்கடலில் வாழ்பவனுமான நாராயணன் இவனே. இவன் தன் பாம்பு படுக்கையை விட்டுவிட்டு மதுரா நகருக்கு வந்திருக்கிறான்.(60) தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவனான பலியைக் கட்டிப் போட்டு, வஜ்ரதாரியான வாசவனிடம் மூவுலகங்களின் அரசுரிமையை ஒப்படைத்தவன் இவனே.(61) கேசியைக் கொன்றவனான இவன் {கேசவன்/ கிருஷ்ணன்}, பலசாலிகளில் முதன்மையான கம்ஸனையும், தைத்தியர்கள் பிறரையும் கொன்றுவிட்டு, இந்தப் போஜ மன்னனிடம் {உக்ரசேனனிடம்} மதுரா நாட்டை அளித்திருக்கிறான்.(62) இவன் குடிமுதல்வன் {ராஜாதிராஜன்} என்ற மதிப்பை அடைந்தும் தனக்குத் தானே அபிஷேகம் செய்து கொள்ளாமல், அரச அரியணையில் தானே அமராமல் மதுராவின் அரசை உக்ரசேனனிடம் அளித்திருக்கிறான்" என்றனர்.(63)

வந்திகளும், மாகதர்களும், சூதர்களும் குடிமக்கள் இவ்வாறு பேசுவதைக் கேட்டு, "ஓ! சாதனைகளின் பெருங்கடலே {குணசாகரமே}, உன் ஆற்றலாலும், சக்தியாலும் செய்யப்பட்ட அருஞ்செயல்களை ஒரே நாவு படைத்த மனிதர்களான எங்களால் எவ்வாறு பாட முடியும்?(64,65) தெய்வீக புத்தி கொண்டவனும், ஆயிரந்தலைகளைக் கொண்டவனுமான பாம்புகளின் மன்னன் வாசுகியே கூட, தன்னுடைய இரண்டாயிரம் நாவுகளாலும் உன் சாதனைகளில் சிலவற்றையே சொல்ல முடியும்.(66) இந்திரனால் அனுப்பப்பட்ட அரியணை, பூமியின் மன்னர்களுக்குப் பேராச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது முன் எப்போதும் நடந்ததில்லை, இனி எக்காலத்திலும் நடக்கப் போவதுமில்லை.(67) தேவலோகத்தில் இருந்து சபா மண்டபமும், குடங்களும் இறங்கி வருவதும் இதற்கு முன் கேள்விப்பட்டதுமில்லை, காணப்பட்டதுமில்லை. எனவே இதை நாங்கள் அற்புதமெனக் கருதுகிறோம்.(68) ஓ! கேசவா, தேவர்களில் முதன்மையான உன்னைப் போன்ற ஒரு மகனைக் கருவில் கொண்டவளும், மங்கையரில் சிறந்தவளுமான தேவகி, மனிதர்களாலும், தேவர்களாலும் துதிக்கப்படும் உன்னுடைய தாமரை முகத்தை அன்பு நிறைந்த தன்னுடைய கண்களால் கண்டதால் அருளப்பட்டவளாக இருக்கிறாள்" என்றனர்.(69,70)

சகோதரர்களான ராமன், கிருஷ்ணன் இருவரும், உக்ரசேனனைத் தங்கள் முன்பு விட்டு, குடிமக்களால் பாடப்படும் தங்கள் புகழ் குறித்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டே வாயிலை அடைந்தனர், மன்னனும் {உக்ரசேனனும்} அர்க்கியத்தையும், அவர்களின் கால்களைக் கழுவுவதற்கும், வாய் அலம்புவதற்கும் உரிய நீரையும் அனுப்பி மீண்டும் மீண்டும் அவர்களை வழிபட்டான்.(71,72) சக்திவாய்ந்தவனும், நுண்ணறிவுமிக்கவனுமான உக்ரசேனன், கேசவனின் தேரை அடைந்து, தலைவணங்கி, ஒரு யானையில் ஏறி நீரைப் பொழியும் மேகங்களைப் போலப் பொன்மாரி பொழியத் தொடங்கினான்.(73)

அழகிய மாதவன் {கிருஷ்ணன்}, இவ்வாறு தன் மேல் பொன்மாரி பொழியப்பட்டதும் தன் தந்தையின் {வசுதேவனின்} வீட்டிற்கு வந்து, மதுராவின் மன்னனான உக்ரசேனனிடம்,(74) "ஓ! தலைவா, குடிமுதல்வனென்ற {ராஜாதிராஜனென்ற} மதிப்பை நான் அடைந்திருந்தாலும், தேவர்களின் மன்னனால் கொடுக்கப்பட்ட இந்த அரியணை மன்னனின் {உமது} அரண்மனையிலேயே வைக்கப்பட வேண்டும்.(75) என் கரத்தின் பலத்தால் அடையப்பட்டிருந்தாலும், மதுரா மன்னனின் சபா மண்டபத்திற்கு வர நான் விரும்பவில்லை. ஓ! தலைவா, நான் உம்மை அமைதியடைச் செய்கிறேன். கோபமடையாதீர்" என்றான்[5]".(76)

[5] மன்மதநாததத்தரின் பதிப்பில் கிருஷ்ணன் உக்ரசேனனிடம் இதைச் சொல்வது போல வந்தாலும், மற்ற இரு பதிப்புகளிலும் உக்ரசேனன் கிருஷ்ணனிடம் இதைச் சொல்வது போல வருகிறது. அது பின்வருமாறு. சித்திரசாலை பதிப்பில், "மதுராவின் மங்கலத் தலைவன் (உக்ரசேனன்) மதுசூதனனிடம் "ஓ! தலைவா, நீ மன்னர்களின் மன்னராக இருக்கிறாய். தேவர்களின் மன்னனால் கொடுக்கப்பட்ட அரச சிம்மாசனம் என் அரண்மனையில் பொருத்தப்படுவதே தகுந்தது. உன்னுடைய கரங்களின் சக்தியால் நீ அடைந்த மதுராவின் தலைவனுடைய சபாமண்டபத்திற்குள் உன்னை நான் நுழையச் செய்வேன். ஓ! தலைவா, நிறைவடைவாயாக. கோபங்கொள்ளாதே" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "மதுரை நாயகன் ஸ்ரீமான் உக்ரஸேனன், மதுஸூதனனை நோக்கிச சொன்னான்: ப்ரபுவே, ராஜாதிராஜனாகிய பதவியை ஏற்று எனது ராஜக்ருஹத்தில் இந்திரனால் கொடுக்கப்பட்ட ஸிம்மாஸனத்தை ஸ்தாபிப்பது பொருத்தமானது. மதுரை மன்னன் கம்ஸன், புஜபலத்தால் சம்பாதிக்கப்பட்டுள்ள ஸபைக்கு அழைத்துச் செல்வேன். பகவனே, அனுகிரஹிக்க வேண்டும். கோபம் கொள்ளக் கூடாது" என்றிருக்கிறது.

ஓ! மன்னா, ஜனமேஜயா, அந்த நேரத்தில், வசுதேவனும், தேவகியும், ரோஹிணியும் ஒரு சொல்லும் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சியில் நிறைந்திருந்தனர்.(77) ஓ! மன்னா, அப்போது கம்ஸனின் அன்னை, காலத்தின் முக்கியத்துவத்தையும், இடத்தின் முக்கியத்துவத்தையும் கருத்தில் கொண்டு, அவனால் {கம்ஸனால்} அடையப்பட்டிருந்த பல்வேறு நாடுகளின் செல்வத்தையும், கொடைகளையும் எடுத்துக் கொண்டு, கேசவனிடம் சென்று அவற்றை அவனது பாதங்களில் அர்ப்பணித்தாள். இதைக் கண்ட கிருஷ்ணன், உக்ரசேனனை அழைத்து இனிய சொற்களில் சொல்லத் தொடங்கினான்.(78,79)

கிருஷ்ணன் {உக்ரசேனரிடம்}, "உமது மகன்கள் இருவரையும் காலமே அபகரித்துச் சென்றது; செல்வத்திற்காகவோ, மதுரா நாட்டுக்காகவோ நான் அவர்களைக் கொல்லவில்லை.(80) ஓ! மதுராவின் மன்னா, என் கரங்களின் வலிமையால் உமது பகைவரை வென்று ஏராளமான கொடைகளுடன் கூடிய பல்வேறு வேள்விகளைச் செய்வீராக.(81) ஓ! மன்னா, கம்ஸனின் மரணத்தால் உண்டான மனத்துயரையும், அச்சத்தையும் கைவிடுவீராக. இந்தச் செல்வங்கள் அனைத்தையும் நான் உமக்கே திருப்பித் தருகிறேன்; இவற்றை ஏற்றுக் கொள்வீராக" என்றான்.(82)

கிருஷ்ணன், இவ்வாறு அந்த மன்னனுக்கு {உக்ரசேனனுக்கு} ஆறுதலளித்துவிட்டு பலராமனுடன் சேர்ந்து தன் பெற்றோரிடம் சென்றான்.(83) அங்கே பெருஞ்சக்திவாய்ந்த வீரர்களான அவ்விருவரும் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் தங்கள் பெற்றோரிடம் தலைவணங்கி நின்றனர்.(84) ஓ! ஜனமேஜயா, அந்த நேரத்தில் தேவலோகத்தைவிட்டு தேவர்களின் தலைநகரமே கீழே இறங்கி வந்ததைப் போல மதுரா நகரம் தன் வடிவைக் கைவிட்டது.(85) வசுதேவனனின் இல்லத்தைக் கண்ட குடிமக்கள் அதைப் பூமியாகக் கருதாமல் தேவலோகமாகக் கருதினர்.(86) வீரர்களான பலதேவனும், கேசவனும், வசுதேவரின் இல்லத்திற்குள் இவ்வாறு நுழைந்து, மதுராவின் மன்னனான உக்ரசேனனுக்கும், அவனது ராணிக்கும் விடைகொடுத்து அனுப்பினர். அதன்பிறகு அவர்கள் தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சிறிது நேரம் திரிந்து வந்து மாலை வேளைக்கான சடங்குகளைச் செய்தனர். பிறகு சுகமாக அமர்ந்து கொண்டு ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடினர்.(87,88)

அதேவேளையில் அங்கே ஒரு பயங்கரப் பேரிடர் நேர்ந்தது. வானில் மேகங்கள் சிதறின, பூமியும், மலைகளும் நடுங்கின, பெருங்கடல் கலங்கியது, பாம்புகள் அஞ்சின, யாதவர்கள் நடுங்கி பூமியில் விழுந்தனர்.(89,90) அசைவற்றவர்களான ராமனும், கிருஷ்ணனும் இவ்வாறு அவர்கள் விழுவதைக் கண்டும், பெருஞ்சிறகுகளின் படபடப்பொலியில் இருந்தும் பறவைகளில் முதன்மையான கருடன் அணுகி வருவதை உணர்ந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் தங்கள் அருகே கருடனைக் கண்டனர். மென்வடிவம் கொண்டவனும், தெய்வீக மாலைகளாலும், களிம்புகளாலும் அலங்கரிக்கப்பட்டவனுமான வினதையின் மகன் {கருடன்} அவர்கள் இருவருக்கும் தலைவணங்கிவிட்டு இருக்கையில் அமர்ந்தான்.(91,92)

போர் ஆலோசகனும், நுண்ணறிவுமிக்கவனுமான வினதையின் மகன் {கருடன்} வந்ததைக் கண்ட மதுசூதனன் {கிருஷ்ணன்}, "ஓ! தேவ படையின் பகைவரைக் கலங்கடிப்பவனே, ஓ! வினதையின் இதயத்திற்கு மகிழ்ச்சியை அளிப்பவனே, ஓ! பறவைகளில் முதன்மையானவனே, ஓ! கேசவனுக்குப் பிடித்தமானவனே, இங்கே உன் வரவு மங்கலமானதாக இருக்கட்டும்" என்றான்.(93,94) தேவனைப் போன்றவனேயான கிருஷ்ணன், பலத்தில் தனக்கு நிகரானவனிடம் இதைச் சொல்லிவிட்டு மீண்டும் அவனிடம் பேசினான்.(95) கிருஷ்ணன், "ஓ! பறவைகளில் முதன்மையானவனே, போஜ மன்னனின் {உக்ரசேனரின்} பெரிய அந்தப்புரத்திற்கு நாம் செல்வோம். அங்கே சுகமாக அமர்ந்து கொண்டு நம் இதயம் வெளிப்படும் ஆலோசனைகளைச் செய்வோம்" என்றான்".(96)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வினதையின் மகனுடன் போஜ மன்னனின் அந்தப்புரத்திற்குச் சென்ற பலம் வாய்ந்தவர்களான கிருஷ்ணனும், பலதேவனும் ஆலோசனையில் ஈடுபட்ட போது, முன்னவன் {கிருஷ்ணன்},(97) "ஓ! வினதையின் மகனே, மன்னன் ஜராசந்தனை நம்மால் கொல்ல முடியாது. இவ்வாறே விதிக்கப்பட்டிருக்கிறது. ஒப்பற்ற வலிமை கொண்ட அவன் பெரும்படையாலும், பலம்வாய்ந்த மன்னர்களாலும் சூழப்பட்டிருக்கிறான்.(98) மகத மன்னனின் படையில் படைவீரர்கள் பலர் இருப்பதால் நூறு வருடங்களானாலும் நம்மால் அதை {அந்தப் படையை} அழிக்க முடியாது.(99) எனவே, ஓ! பறவைகளின் மன்னா {கருடா}, மதுரா நகரில் வாழ்வது நமக்கு நன்மை தராது என நான் உனக்குச் சொல்கிறேன். இதுவே {மதுராவை விட்டுச் செல்வதே} என் விருப்பமாகும்" என்றான் {கிருஷ்ணன்}.(100)

கருடன், "ஓ! தேவர்களின் தேவா, உன்னை வணங்கி விடைபெற்றுக் கொண்டு, நீ வசிப்பதற்குத் தகுந்த இடத்தைக் காண்பதற்காக நான் குசஸ்தலிக்குச் சென்றேன்.(101) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அங்கே சென்று மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்ட அந்த நகரை படைக்கலப் பார்வையுடன் வானில் இருந்து உற்று நோக்கினேன்.(102) அந்த நகரம் பெருங்கடலின் நீர் நிறைந்த பரந்த மாகாணத்தில் அமைந்திருக்கிறது. அனைத்துப் பக்கங்களிலும் கடலால் சூழப்பட்டிருக்கும் அஃது {தேவர்களாலும் கைப்பற்றப்பட முடியாததாகவும்},(103) அனைத்து வகை ரத்தினங்களின் சுரங்கமாகவும், விரும்பிய பொருட்களை அருளும் மரங்கள் நிறைந்ததாகவும், அனைத்துப் பருவங்களுக்கும் உரிய மலர்களால் அனைத்துப் பக்கங்களில் மறைக்கப்பட்டதால் எழில் மிக்கதாகவும் இருக்கிறது;(104) அனைத்து வகை ஆசிரமத்தாரும் வசிக்க ஏற்றதாகவும், அனைத்து வகை விருப்பங்களையும் நிறைவடையச் செய்வதாகவும், ஆண்களும், பெண்களும் நிறைந்ததாகவும், எப்போதும் இன்பம் நிறைந்ததாகவும்,(105) அகழிகள், மதில்களால் சூழப்பட்டதாகவும், கோபுரங்கள், வாயில்கள், முற்றங்கள், சாலைகள் ஆகியவற்றால் பளபளப்பதாகவும்,(106) பெருங்கதவுகள், வாயில்கள், தாழ்பாள்கள், {வியப்புக்குரிய} பொறியமைவுகள் பலவற்றைக் கொண்டதாகவும், பொன் சுவற்றால் அலங்கரிக்கப்பட்டதாகவும், தேர்வீரர்கள், குதிரைகள், யானைகள் நிறைந்ததாகவும்,(107) தெய்வீக மலர்களாலும், கனிகளாலும் மறைக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மரங்களால் {மக்களால்} நிறைந்ததாகவும், கொடிகளாலும், பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டதாகவும், பெரிய அரண்மனைகளைக் கொண்டதாகவும்,(108) பகைவருக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், மன்னர்களால் தலைமைதாங்கப்படும் பிற நகரங்களில் இருந்து ஒதுங்கி தனித்தும் இருக்கிறது.(109)

ஓ! தேவா, அங்கே நந்தவனத்திற்கு ஒப்பானதும், மலைகளில் சிறந்ததுமான ரைவதம் இருக்கிறது. நீ அதையே உன் வாயிலின் ஆபரணமாக அமைத்துக் கொள்ளலாம்.(110) ஓ! தேவர்களில் முதன்மையானவனே, அந்நகரம் உன் மகன்களாலும் {உன் நாட்டுப் பெண்களும்}[6] விரும்பத்தக்கதாக இருக்கிறது. நீ அங்கே சென்று வாழ்வாயாக.(111) இந்திரனின் தலைநகரான அமராவதியைப் போலவே உன்னுடைய நகரமும் துவாராவதி என்ற பெயரில் மூவுலகங்களிலும் கொண்டாடப்படும்.(113) ஓ! தேவா, ஒளிமிக்க ரத்தினங்கள், முத்துகள், பவளங்கள், வைரங்கள், வைடூரியங்கள் ஆகியவற்றையும், மூவுலகங்களிலும் விளையும் பிற ரத்தினங்களையும் கொண்டு தேவர்களின் சபா மண்டபத்தைப் போன்றவையும், நூற்றுக்கணக்கான தெய்வீகத் தூண்களைக் கொண்டவையும், அனைத்து வகை ரத்தினங்களாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டவையும், தெய்வீகக் கொடிகள், பதாகைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டவையும், தேவர்களாலும், கின்னரர்களாலும் பாதுகாக்கப்படுபவையும், சூரியனாலும், சந்திரனாலும் ஒளியூட்டப்படுபவையுமான வெண்மாளிகைகள் பலவற்றை அங்கே நீ கட்டுவாயாக" என்றான் {கருடன்}".(114-116)

[6] சித்திரசாலை பதிப்பில், "ஓ! தேவர்களில் சிறந்தவனே, அங்கே சென்று உன் வசிப்பிடத்தை அமைத்துக் கொள்வாயாக. அந்த நகரம் பெண்கள் திரிவதற்குத் தகுந்ததாக இருக்கிறது" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "அங்குச் சென்று தேவஸ்ரேஷடனே வாஸஸ்தானத்தை அமைக்கச் செய். அதைத் தேவாலயமாகச் செய், பெண்களின் ஸஞ்சாரமும் அடிக்கடி அமையப் போகிறது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பைத் தவிர மற்ற இரு பதிப்புகளிலும் மகன்கள் என்ற சொல் காணப்படவில்லை.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "வினதையின் மகன் {கருடன்}, கேசவனிடம் இதைச் சொல்லிவிட்டு, இருவரையும் வணங்கிவிட்டுத் தன் இருக்கையில் அமர்ந்தான்.(117) ராமனுடன் கூடிய கிருஷ்ணன், தங்களுக்கு நலம்பயக்கும் வகையில் சொல்லப்பட்ட அவனது சொற்களைத் தியானித்து, தன் பாராட்டைக் கருடனுக்குத் தெரிவிக்கும் வகையில் மிகச் சிறந்த கொடைகளாலும், மதிப்புமிக்க ஆடைகளாலும் அவனைக் கௌரவித்து, விடை கொடுத்து அனுப்பினான். அதன் பிறகு அவர்கள் இருவரும் தேவலோகத்தில் உள்ள இரு தேவர்களைப் போல அங்கே இன்புற்றிருந்தனர்.(118,119) பெருஞ்சிறப்புமிக்கப் போஜ மன்னன் {உக்ரசேனன்}, கருடன் சொன்னதைக் கேட்டு, பின்வரும் அமுத மொழியில் கேசவனிடம் அன்புடன் பேசினான்.(120)

அவன் {உக்ரசேனன்}, "ஓ! கிருஷ்ணா, ஓ! யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, ஓ! பெருந்தோள்களைக் கொண்டவனே, ஓ! பகைவரைக் கொல்பவனே, நான் சொல்லப்போவதைக் கேட்பாயாக. ஓ! மகனே, நீ எங்களை விட்டுச் சென்றால், கணவனைப் பிரிந்த பெண்ணைப் போல இந்த மதுரா நகரிலோ, வேறு எந்த நாட்டிலோ எங்களால் மகிழ்ச்சியாக வாழ இயலாது. ஓ! கௌரவங்களை அளிப்பவனே, உன் தோள்களின் பாதுகாப்பில் நாங்கள் இருக்கும்போது, மன்னர்கள் அனைவரின் துணையுடன் இந்திரனே வந்தாலும் நாங்கள் அவர்களுக்கு அஞ்சமாட்டோம். ஓ! யதுக்களில் முதன்மையானவனே, வெற்றியடைவதற்காக நாங்களும் {உன்னோடு} வருவோம்" என்றான் {உக்ரேசேனன்}.(121-124)

தேவகியின் மகன் {கிருஷ்ணன்}, அந்த மன்னனின் {உக்ரசேனனின்} சொற்களைக் கேட்டுப் புன்னகைத்தவாறே, "ஓ! மன்னா, நீர் விரும்பிய அனைத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை" என்றான் {கிருஷ்ணன்}" {என்றார் வைசம்பாயனர்}[7].(125)

[7] இந்த அத்தியாயத்தில் 120 முதல் 125 வரையுள்ள ஸ்லோகங்கள் இந்தப் பர்வத்தின் 47ம் அத்தாயத்தில் உள்ள 19 முதல் 24 வரையுள்ள ஸ்லோகங்களைப் போன்று இருக்கின்றன.)

விஷ்ணு பர்வம் பகுதி – 112 – 056ல் உள்ள சுலோகங்கள் : 125
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English