Monday, 15 June 2020

மழைக்காலம் | விஷ்ணு பர்வம் பகுதி – 65 – 010

(பிராவ்ருட்வர்ணனம்)

An account of the rainy season | Vishnu-Parva-Chapter-65-010 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : பிருந்தாவனத்தில் மழைக்காலம் குறித்த வர்ணனை...

Rainy Season in Vrindavana

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "இவ்வாறு பிருந்தாவனத்தில் வாழ்ந்து வந்தவர்களும், வஸுதேவனின் மகன்களுமான அந்தப் பேரழகர்கள் இருவரும் பசுக்களை மேய்த்துக் கொண்டு அங்கே திரியத் தொடங்கினர்.(1) ஆயர்களுடன் விளையாடியும், யமுனை ஆற்றில் நீராடியும் அவர்கள் கோடை காலத்தை மகிழ்ச்சியாகக் கழித்தனர்.(2) அதன்பிறகு மனிதர்களின் மனத்தில் ஆசையை உண்டாக்கும் மழைக்காலம் வந்ததும், வானவில்லைக் கொண்ட மேகங்கள் தங்கள் உள்ளடக்கமாகக் கொண்ட நீரைப் பொழியத் தொடங்கின.(3) புதிய நீரை இழுத்துச் சிதறிக் கிடக்கும் மேகங்களால் சூரியன் முற்றிலும் மறைக்கப்பட்டான். புதிதாய் முளைத்த புற்களால் தரை கண்ணுக்குப் புலப்படாமல் போனது.(4) புதிய மேகங்களால் தன் பரப்புத் துலக்கப்பட்ட பூமாதேவி இளமைநிறைந்த ஒரு காரிகையைப் போலத் தெரிந்தாள்.(5)

புது மழையில் நனைந்த காடுகளும், காட்டு வழிகளும் புழுதியற்றதாகி, சக்கரகோபங்களால் {மின்மினிப்பூச்சிகளால்} நிறைந்திருந்தன[1].(6) இஃது இனிமையாக அகவும் மயில்கள் நடனமாடும் காலமாகும். அவை குதூகலம் மேலிட தங்கள் கேகா இசையைப் பொழிய {அகவத்} தொடங்கின.(7) அற்புதம் நிறைந்த மழைக்காலத்தில் தங்கள் இளமையை அடைபவையும், வண்டுகளின் ஒரே உணவாக இருப்பவையுமான அழகிய கதம்ப மலர்களை மேகங்கள் பளபளப்பாக்கத் தொடங்கின.(8) அந்தக் காடு, கதம்ப மலர்களின்[2] மணத்தால் மணமூட்டப்பட்டு, குடஜ {மலை மல்லி} மலர்களின்[3] மணத்தால் புன்னகைத்தது. மேகங்களின் மூலம் அதன் {மலையின்} வெப்பம் அழிந்தது {தணிந்தது}, மழைப்பொழிவால் பூமி நிறைவடைந்தாள். சூரியக் கதிர்களால் சுட்டெரிக்கப்பட்ட மலைகளும், காடும் மேகங்களால் நீர் தெளிக்கப்பட்டதும் புகையை வெளியிடுபவை போலத் தோன்றின. பயங்கரக் காற்று மற்றும் வானத்தில் எழும் பெரும் மேகங்களுடன் பூமியானவள், ஒரு பேரரசனின் நகரத்தைப் போன்ற தோற்றத்தை ஏற்றாள்.(9,10)

[1] "இது (பல்வேறு வகைகளைச் சார்ந்த இந்திரகோபங்களில் ஒரு வகை) பூச்சியாகும்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[2] "இது பொதுவாகச் சொல்லப்படும் கதம்ப மரத்தின் மலர்" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

[3] "இஃது ஒரு மருத்துவச் செடி" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

அங்கேயும், இங்கேயும் கதம்ப மற்றும் வாழை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததும், இனிமை நிறைந்த நீப {கடப்ப} மரங்கள் நிறைந்திருந்ததுமான அந்தக் காடு, எரியும் நெருப்பைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தது.(11) இந்திரனின் மழையால் நனைந்த பூமியின் மணத்தை நுகர்ந்தும், {அந்த மணம்} காற்றால் பரவியும் மக்கள் காமத்தால் பீடிக்கப்பட்டனர்.(12) வெறிக் கொண்ட வண்டுகள் முரலும் ஒலியாலும் {இசையாலும்}, தவளைகள் கத்தும் ஒலியாலும், மயில்களின் அற்புத அகவல்களாலும் பூமி நிறைந்திருந்தது.(13) மழைப்பொழிவால் பெருகும் ஓடைகளுடன் கூடிய ஆறுகள் தங்களை விரிவாக்கிக் கொண்டு, தங்கள் கரைகளில் வளர்ந்த மரங்களை அடித்துச் செல்லத் தொடங்கின. அவற்றில் எங்கும் வேகமாக நகரும் சுழல்களும் காணப்பட்டன.(14) தொடரும் மழையினால் கலக்கமடைந்தும், சிறகுகள் தளர்ந்தும் இருந்த பறவைகள், தங்களின் இயல்பே அமைதியெனும் வகையில் மரங்களின் கிளைகளை விட்டு அகலாமல் இருந்தன.(15)

நீர்த்தாரைகள் விழும் ஒலியால் நிறைந்தவையும், நீருண்டவையுமான புதிய மேகங்களின் கருவறையில் மூழ்குபவனைப் போலச் சூரியன் தெரிந்தான்.(16) பூமியானவள் புதிய புற்களை மாலைபோலச் சூடிக் கொண்டாள். நிலக்குறிகளாக அமைந்த பெரும் மரங்கள், வேரோடு முறிந்தன, எங்கும் நீர் சூழ்ந்திருந்தது. இதன் காரணமாகப் பாதைகளைக் காணக் கடினமாக இருந்தது.(17) பெரும் மரங்கள் நிறைந்த மலைகள், வஜ்ரங்களால் தாக்கப்பட்டவை போலவும், அவற்றின் சிகரங்கள் நீர்த்தாரைகளில் அடித்துச் செல்லப்படுபவை போலவும் தோன்றிற்று.(18) மழையின் நீர்த்தாரைகள் பாய்வதால் காட்டின் நிலம் நீரால் நிரம்பியிருந்தது, தடாகங்களின் கரைகள் நிரம்பி வழிந்தன.(19) அந்த மழைக்காலத்தில் ஏற்படும் மேக முழக்கங்களைத் தொடர்ந்து, பூமியில் மேகங்களே இறங்கி வருவதைப் போல யானைகள் தங்கள் துதிக்கைகளைத் தூக்கிக் கொண்டு அங்கேயும், இங்கேயும் ஓடிக் கொண்டிருந்தன.(20)

இவ்வாறு மழைபெய்து கொண்டிருந்தபோது, ரோஹிணியின் மகன் {ரோஹிணேயன் / பலராமன்} நீருண்ட மேகங்களைக் காணும் வகையில் தனிமையில் கிருஷ்ணனிடம்,(21) "ஓ! கிருஷ்ணா, மின்னலெனும் ஒளிரும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்தில் கார்மேகங்களைக் காண்பாயாக. அவை உன் மேனியின் நிறத்தைக் களவாடியவை போல இருக்கின்றன.(22) உன் உறக்கத்திற்கான நேரமிது. வானம் உன் உடலைப் போன்றிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பருவகாலத்தில் நீ இரகசியமாக வாழ்வதைப் போலவே சந்திரனும் வாழ்கிறான் {மறைந்திருக்கிறான்}.(23) மழையின் வருகையுடன், மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும் வானம், நீல மேகங்களின் காரணமாக அடர் நீலத்தை வளர்த்துக் கொண்டும், செந்நீலத் தாமரைகளைப் போல ஒளிர்ந்து கொண்டும் பேரெழிலுடன் திகழ்கிறது.(24) ஓ! கிருஷ்ணா, நீருண்ட கார் மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும் அழகிய கோவர்த்தன மலை, பசுக்களை வளர்க்கும் என்ற பொருளுடைய தன் பெயரையே பொய்யாக்கிக் கொண்டிருக்கிறது[4].(25)

[4] "கோவர்த்தனம் என்ற சொல்லில் கோ என்றால் பசுக்கள் என்றும், வர்த்தனம் என்றால் ஊட்டம் என்றும், இரண்டும் சேர்த்துப் பசுக்களை ஊட்டத்துடன் வளர்க்கும் இடம் என்றும் பொருள் கொள்ளலாம். பசுக்கள் எந்தத் தடையுமின்றி வளரும் வகையில் அந்த மலை அவ்வளவு அழகாக அமைந்திருக்கிறது. ஆனால் மழைக்காலத்தில் அந்த மலையானது மேகங்களால் மறைக்கப்படுவதால் பசுக்களால் அங்கே மேய முடிவதில்லை. எனவே அந்த மலையுடைய பெயரின் உண்மைப் பொருள் பொய்யாகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

மழை பொழிவதால் காமத்தில் மயங்கியிருக்கும் கருவண்டுகள் காடெங்கிலும் மகிழ்ச்சியாகத் திரிந்து கொண்டிருக்கின்றன.(26) ஓ! தாமரைக் கண்ணா, மிக மென்மையான பச்சைப் பசும்புற்கள், புது வெள்ளத்தால் ஏராளமாக வளர்ந்து, பூமியை மறைக்க முயல்வதுபோலத் தெரிகிறது.(27) இந்த மழைக்காலத்தால், நீரூற்றுகள் நிறைந்த மலை, நீர் நிறைந்த காடு, தானியங்கள் சூழ்ந்த விளைநிலங்கள் ஆகியவற்றின் அழகை அதிகரிக்கச் செய்ய முடியவில்லை.(28) ஓ! தாமோதரா, வேகமாகச் செல்லும் காற்றால் செலுத்தப்படும் இந்த மேகங்கள், தங்கள் பயங்கர முழக்கங்களால் அந்நிய நாடுகளில் வாழ்வோரின் வீடு திரும்பும் ஆசையை அதிகரிக்கச் செய்து, தங்கள் வெட்கத்தை வெளிப்படுத்துகின்றன.(29) ஓ! ஹரி, ஓ! மூன்று காலடிகளைக் கொண்டோனே {திரிவிக்ரமா}, உன் இரண்டாம் காலடி[5] {வானம்}, கணைகளும், நாண்கயிறுமற்ற வானவில்லின் மூன்று வண்ணங்களால் பளபளப்பாகிறது.(30)

[5] "பலி என்ற அசுரனின் வேள்வியில் அவன், பூமியில் தன் முதல் காலடியையும், ஆகாயத்தில் இரண்டாம் காலடியையும் வைத்தததை இது குறிப்பிடுகிறது" என மன்மதநாததத்தர் இங்கே விளக்குகிறார்.

இந்தச் சிராவண {ஆவணி} மாதத்தில் சூரியன் தன் அழகை இழந்திருக்கிறான். எரிப்பவையான அவனது கதிர்கள் மேகங்களால் குளிர்கின்றன, ஆயிரங்கதிர்களைக் கொண்டவன் என்றாலும் ஏதுமற்றவனைப் போல அவன் {சூரியன்} தெரிகிறான்.(31) எங்கும் பரவும் மேகங்கள், கடல் நீரைப் போலக் கலங்கி, தொடரும் மழையின் துணையுடன் வானத்தையும், பூமியையும் ஒன்றாக்குவதைப் போலத் தெரிகிறது.(32) பூமியில் பாயும் மழையின் தாரைகளும், நீப {கடப்ப}, கதம்ப, அர்ஜுன மலர்களின் நறுமணத்தால் மணப்பதும், ஆசையைத் தூண்டவல்லதுமான காற்றும், கனமழையைப் பரவலாகப் பொழியும் மேகங்களால் மறைக்கப்பட்டிருக்கும் வானமும், ஆழமான பெருங்கடல் போலத் தெரிகின்றன.(33,34) மழையின் வடிவில் பிரகாசமான நாராசங்களைத் தரித்தும், மேகத்தையே கவசமாக, வானவில்லையே வில்லாகக் கொண்டும், வானம் போருக்கு ஆயத்தமாவதைப் போலத் தெரிகிறது.(35)

ஓ! எழில்முகம் கொண்டவனே, மேகங்களால் மறைக்கப்படும் மலைகளும், காடுகளும், மரநுனிகளும் மிக அழகாகத் தெரிகின்றன.(36) யானைப்படைக்கு ஒப்பான வானம், நீரைப் பொழியும் மேகங்களால் சூழப்பட்டு, பெருங்கடலின் வண்ணத்தை ஏற்றிருக்கிறது.(37) இளஞ்செடிகளை அசைத்தும், பெருங்கடலின் ஆழத்தை அழித்தும், நீர்த்துளிகளுடன் அங்கே பயங்கரமாக வெடித்தும் வீசும் காற்றானது, குளிரால் அனைத்தையும் ஒடுக்குகிறது.(38) சூரியன் மறைந்த பிறகு இரவில் பார்வையில் இருந்து மறையும் சந்திரனுடனும், தொடர்ந்து மழையைப் பொழியும் மேகங்களுடனும் வானத்தின் எந்தப் பகுதியும் {எத்திசையும்} அழகாகத் தெரியவில்லை.(39) காற்றால் நிறைந்த தோல் பைகளுக்கு ஒப்பானவையும், கடந்து செல்பவையுமான மேகங்கள் நிறைந்த வானமானது, நகர்ந்து செல்லும் ஓர் உயிருள்ள பொருளைப் போலத் தெரிந்தது.(40) மக்களால் பகலுக்கும், இரவுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை. நான் இன்னும் என்ன சொல்வது? ஓ! கிருஷ்ணா, வெப்பத்தில் இருந்து விடுபட்டு, மழையால் அலங்கரிக்கப்பட்டு, சைத்திரரதத் தோட்டத்தைப் போன்று அழகாகத் தெரியும் பிருந்தாவனத்தைப் பார்" என்றான் {பலராமன்}.(41)

இவ்வாறு கிருஷ்ணனின் அண்ணனான அந்த அழகிய பலராமன், மழைக்காலத்தின் நன்மைகளை விளக்கிவிட்டு விரஜத்திற்குள் {கோகுலத்திற்குள்} நுழைந்தான். ஒருவரையொருவர் நிறைவடையச் செய்த கிருஷ்ணனும், பலராமனும் அப்போது தங்கள் துணையாக இருந்த ஆயர்களுடன் அந்தப் பரந்த காட்டில் திரியத் தொடங்கினர்" என்றார் {வைசம்பாயனர்}.(42,43)

விஷ்ணு பர்வம் பகுதி – 65 – 010ல் உள்ள சுலோகங்கள் 43
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English