Thursday 24 February 2022

புஷ்கரஞ்சென்ற கிருஷ்ணன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 95

(ஸ்ரீகிருஷ்ணஸ்ய புஷ்கரம் ப்ரதி கமநம்)

Krishna goes to Pushkara | Bhavishya-Parva-Chapter-95 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: புஷ்கரைக்குச் சென்ற கிருஷ்ணனும், யாதவர்களும்...


Krishna at pushkara

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "சிநியின் பேரனான சாய்தகி, துவாரகைக்குத் திரும்பி ஹம்சடிம்பகர்களுடனான தன் சந்திப்பைக் கிருஷ்ணனிடம் விரிவாகக் கூறினான்.(1) அதன்பிறகு ஒரு நல்ல காலை வேளையில் கேசிசூதனனும், கதாதாரியும், சக்கரபாணியுமான கேசவன் தன் படைத்தலைவனிடம் பின்வருமாறு ஆணையிட்டான்.(2)

{கிருஷ்ணன்}, "தேர்கள், யானைகள், குதிரைகள் அனைத்தையும் போருக்கு ஆயத்தம் செய்வாயாக. இசைக்கலைஞர்களை அழைத்து, பேரிகைகளையும், பணவங்களையும் எடுத்து வரச் சொல்வாயாக. பராசங்கள், பரிகங்கள், சூலங்கள் முதலியவற்றுடன் படைவீரர்கள் நல்ல ஆயுதபாணிகளாவதை உறுதி செய்வாயாக. குதிரைகளையும், யானைகளையும், ரதங்களையும் கொடிகளாலும், மதிப்புமிக்க ஆபரணங்களாலும் நன்கு அலங்கரிப்பாயாக" {என்றான்}.

படைத்தலைவன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு புருஷோத்தமனின் {கிருஷ்ணனின்} ஆணைகளை மேற்கொள்ளப் புறப்பட்டுச் சென்றான். யாதவ வீரர்கள் கவசங்களைத் தரித்துத் தங்கள் விற்களை எடுத்துக் கொண்டு ரதங்களில் ஏறினர்.(3-5) மன்னா {ஜனமேஜயா}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், வில்லைத் தரித்திருந்தவனுமான சாத்யகி, பெருங்கோபத்துடனும், போரிடும் ஆவலுடனும் காணப்பட்டான்.(6) முதன்மையான யாதவர்கள் பிறரும், தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு, சிங்கநாதம் செய்தவாறே புறப்படத் தயாராகினர்.(7)

ஹரி {கிருஷ்ணன்}, முறிக்கப்பட முடியாத சாரங்க வில்லை எடுத்துக் கொண்டு, தாருகனால் நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏறி நகரை {துவாரகையை} விட்டுப் புறப்பட்டுச் சென்றான்.(8) அந்நேரத்தில் அந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, உடும்புத் தோலுறைகளால் பாதுகாக்கப்பட்ட தன் நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதாயுதம், சூலம் ஆகியவற்றையும், கணைகளையும் தரித்திருந்தான். மழை மேகம்போன்ற கருவண்ணனான அவன் மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்தான். தாமரை மலர் மாலையால் அவனது மார்பு அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவன் தன் தேரில் அமர்ந்தபோது, குறிப்பிட்ட மந்திரங்களைச் சொல்லி விப்ரர்கள் துதித்தனர்.(9,10) சூதர்களும், மாகதர்களும் கிருஷ்ணனின் தேர் சாலையில் கடந்து செல்லும்போது அவனது நற்குணங்களைச் சொல்லும் பாடல்களைப் பாடித் துதித்தனர். தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்த பிறகு யாதவர்களின் படை வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.(11)

கேசவன், பயங்கர ஒலியை எழுப்பும் தன் பாஞ்சஜன்யத்தை முழக்கினான். அந்தப் பேரொலியைக் கேட்டதும் பகைவரனைவரின் இதயங்களிலும் அச்சம் நுழைந்தது.(12) மன்னா, அந்த முதன்மையான சங்கு, நிலம் முழுவதிலும், ஆகாயம் முழுவதிலும் பரவுமளவுக்குப் பயங்கர ஒலியை வெளியிட்டது.(13) கிருஷ்ணனின் முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான யாதவ வீரர்களும் தங்கள் தங்களுக்குரிய சங்குகளையும், மிருதங்கங்கள் உள்ளிட்ட எண்ணற்ற பேரிகைகளையும் முழக்கினர்.(14) உண்மையில் பேரிகைகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒன்றுபட்ட ஒலி மழைக்கால மேகமுழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது. இவ்வாறே அந்த யாதவப்படை புண்ணியத்தலமான புஷ்கரையை அடைந்தது.(15) இராஜேந்திரா {ஜனமேஜயா}, அதன்பிறகு அந்த யாதவ வீரர்கள், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காகப் புஷ்கரத் தடாகக் கரையில் காத்திருந்தனர்.(16) யாதவர்கள், அந்தப் புஷ்கரக் கரையில் முகாமிட்டுத் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்தனர்.(17)

பகவான் கோவிந்தன் அந்தப் புண்ணியத் தடாகத்தின் அழகைப் புகழ்ந்தவாறே தன் கைகளையும், முகத்தையும் கழுவிக் கொண்டு அங்கே வசிக்கும் முனிவர்கள் அனைவருக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்தான். பிறகு அவன், ஹம்சடிம்பகர்களின் வரவுக்காக அந்தக் கரையில் அமர்ந்து காத்திருந்தான். அந்நேரத்தில் அந்த விஷ்ணு பிராமணர்கள் ஓதும் வேத மந்திரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(18,19)

பவிஷ்ய பர்வம் பகுதி – 95ல் உள்ள சுலோகங்கள் : 19

மூலம் - Source