Monday 7 February 2022

துர்வாசரின் எச்சரிக்கை | பவிஷ்ய பர்வம் பகுதி – 84

(துர்வாஸஸோ பாஷணம்)

Durvasa warns | Bhavishya-Parva-Chapter-84 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்...


Durvasa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "துர்வாசர், அவ்விரு இளவரசர்களையும் சாம்பலாக்கி விடுபவரைப் போல, நெருப்புக்கு ஒப்பான தமது ஒற்றைக் கண்ணால் கோபத்துடன் அவர்களைப் பார்த்தார்.(1) மன்னா {ஜனமேஜயா}, உண்மையில் அம்முனிவர், கோபவசத்தில் மொத்த உலகத்தையும் சாம்பலாக்கப் போகிறவரைப் போல அவ்விரு இளவரசர்களையும் வெறித்துப் பார்த்தார்.(2) அன்புக்குரிய மன்னா, தமது மற்றொரு கண்ணால் பக்திமானும், நற்பேறு பெற்ற பிராமணனுமான ஜனார்த்தனனை அவர் பார்த்தார்.

பிறகு அம்முனிவர், அந்த இளவரசர்களிடம், "இங்கிருந்து உங்கள் உறவினர்களிடம் உடனே திரும்பிச் செல்வீராக.(3) தாமதிக்காமல் விரைவாக இவ்விடத்தை விட்டகல்வீராக. உங்கள் சொற்களால் உண்டான கோபத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை.(4) என் பார்வையில் இருந்து அகல்வீராக. நான் விரும்பினால் மொத்த உலகையும் சாம்பலாக்கிவிடுவேன் எனும் போது, மன்னர்களான உங்கள் இருவரைக் குறித்து என்ன சொல்வது? நல்லறிவுள்ள எந்த மனிதன்தான் இத்தகைய துணிச்சலுடன் என்னிடம் பேசத் துணிவான்?(5) மூட இளவரசர்களே, சங்கு, சக்கர, கதாதாரியான கிருஷ்ணன் வெகுவிரைவில் உங்கள் செருக்கை அழிப்பான் என்ற தகவலை மட்டும் இப்போதைக்கு உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார் {துர்வாசர்}.(6)

சந்நியாசிகளின் நற்குருவான துர்வாச முனிவர், இதைச் சொல்லிவிட்டு விலக முற்பட்ட போது ஹம்சன் வழிமறித்தான்.(7) மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, யமனைப் போன்ற கொடூரனான ஹம்சன், துர்வாசரின் கைகளைப் பிடித்து அவரது இடைக்கச்சையை {கௌபீனத்தை / கோவணத்தைக்} கிழித்தான்.(8) இதைக் கண்ட மற்ற சந்நியாசிகள் பீதையடைந்து பத்துத் திக்கிலும் தப்பி ஓடினர்.

பிராமணன் ஜனார்த்தனன், "ஐயோ, இதுவென்ன துன்பம்?" என்று கதறியும், "நீ என்ன செய்கிறாய்?" என்று தன் நண்பனான ஹம்சனிடம் சொல்லியும்,{9} அவனைத் தடுக்கத் தன்னாலான சிறந்த முயற்சியைச் செய்தான்.

துர்வாச முனிவர் ஹம்சனைக் கொல்லும் வல்லமை பெற்றவர் என்றாலும் அமைதியாக,{10} "இழிந்தவனே, அரச குடும்பத்தின் மதிப்பைக் கெடுப்பவனே, சாபத்தால் உன்னை என்னால் கொல்லமுடியும் என்றாலும், நான் துறவி என்பதால் அதைச் செய்யத் தயங்குகிறேன்.{11} யதுவின் வழித்தோன்றலும், சங்கு, சக்கர, கதாதாரியுமான ஜகந்நாதன் உன் செருக்கை விரைவில் அழிப்பான். யாதவர்களில் முதன்மையான அவன், தற்போது உன்னைப் போன்ற அசுரர்களிடம் இருந்து உலகில் நல்லவர்களைக் காப்பதில் ஈடுபட்டு வருகிறான்.{12,13} இளவரசர்களான நீங்கள் இருவரும், பரமனால் கொல்லப்பட்டு விடுதலை அடைவதால் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே. உங்கள் நண்பனும், ஆதரவாளனுமான ஜராசந்தன், தீங்கிழைக்கும் இத்தகைய சொற்களை ஒருபோதும் சொல்ல மாட்டான்.{14} அவன் பெரும் பக்திமான். தீங்கிழைக்கும் உங்கள் நடத்தையால் ஜராசந்தன் உங்கள் பகைவனாவான். நீங்கள் செய்த குற்றங்களை அறிந்தும், உங்கள் மீது கொண்ட நட்பின் காரணமாக அவன் அமைதியாக இருந்தால் அவனும் அழிவையே அடைவான். இதில் ஐயமேதுமில்லை" என்றார் {துர்வாசர்}. துர்வாச முனிவர் இதைச் சொல்லிவிட்டு, மீண்டும் ஹம்சனிடம், "இங்கிருந்து செல். உடனே செல்வாயாக" என்று சொன்னார்.{15-17}

பிறகு சந்நியாசிகளில் சிறந்தவரான அவர், {பிராமணன்} ஜனார்த்தனனிடம், "மேன்மைவாய்ந்த பிராமணா, ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்} உறுதியான பக்தி கொள்வாயாக.{18} இன்றோ, நாளையோ, நாளை மறுநாளோ நீ {சங்கு, சக்கர, கதாதாரியான} பரமனைச் சந்திப்பாய். முனிவனைப் போல எப்போதும் நீ ஒழுக்கத்தில் உறுதியாக இருப்பாய்.(9-19) சாதுக்கள் இம்மையிலோ, மறுமையிலோ ஒருபோதும் அழிவடைவதில்லை. இல்லந்திரும்பி நடந்தவை அனைத்தையும் உன் தந்தைக்கு {மித்ரஸஹருக்குச்} சொல்வாயாக" என்றார் {துர்வாசர்}".(20)

பவிஷ்ய பர்வம் பகுதி – 84ல் உள்ள சுலோகங்கள் : 20

மூலம் - Source