Thursday 23 December 2021

துவாரகையைத் தாக்கிய பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 68

(பௌண்ட்ரகஸ்ய த்வாரகாவரோதம்)

Paundraka attaks Dwaraka | Bhavishya-Parva-Chapter-68 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: கிருஷ்ணனிடம் செய்தியைச் சொன்ன நாரதர்; துவாரகையை நோக்கிப் படையெடுத்து வந்த பௌண்டரகன்...

Paundrakas conquest on Dwaraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "மன்னா, பௌண்டரகன் தன் பலத்தின் மீது கொண்ட செருக்கில் மிதந்து கொண்டிருந்தான். அந்தச் சபையில் அவன் விப்ரர்களில் சிறந்த நாரத முனிவரிடம் கோபத்துடன் பின்வரும் சொற்களை மறுமொழியாகக் கூறினான்:(1) "முனியே, நீர் என்ன சொல்கிறீர்? நான் மன்னன், என்னைச் சுற்றிலும் எண்ணற்ற துவிஜர்கள் சூழ்ந்திருந்தாலும், அடுத்தவரைச் சபிப்பதில் நீர் மகிழ்ச்சி அடைகிறீர். உம்மை அதிருப்தியடையச் செய்ய அஞ்சுகிறேன் என்பதால் நீர் விரும்பியவாறு எங்கு வேண்டுமானாலும் செல்வீராக" {என்றான் பௌண்டரகன்}.

பௌண்டரகன் இதைச் சொன்னதும், காற்றின் வழியில் பயணிப்பவரான நாரத முனிவர், கிருஷ்ணன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். நாரதர் சொன்னதைக் கேட்ட கிருஷ்ணன், "துவிஜர்களில் சிறந்தவரே, அவன் முற்றான நிறைவுடன் முழுமூடனாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்ளட்டும். நாளை நான் அவனது செருக்கை அழிப்பேன்" என்றான்.(2-5)

பதரிகாசிரமப் புனிதத்தலத்தில் அமர்ந்திருந்த கிருஷ்ணன், இதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தான். அதேவேளையில் வலிமைமிக்கப் பௌண்டரகன், தன் பெரும்படையுடன் துவாரகை நோக்கிப் புறப்பட்டுச் சென்றான்.(6) அந்த மன்னனின் பெரிய படையில் ஆயிரக்கணக்கான குதிரைகளும், எண்ணற்ற யானைகளும், கோடிக்கணக்கான ஆயுதங்களைத் தரித்த படைவீரர்களும் இருந்தனர். மன்னன் பௌண்டரகன் வெற்றி அடையும் தீர்மானத்துடன் துவாரகைக்குப் புறப்பட்டுச் சென்றான்.(7) அந்த மன்னனிடம் லட்சக்கணக்கான காலாட்படை வீரர்கள் இருந்தனர். ஏகலவ்யன் உள்ளிட்ட பிற மன்னர்களும் அவனை ஆதரித்தனர்.(8) அந்த மன்னனின் படையில் எட்டாயிரம் தேர்களும், பத்தாயிரம் யானைகளும், ஆயிரம் கோடி காலாட்படை வீரர்களும் இருந்தனர்.(9)

அந்த வீர மன்னன் {பௌண்டரகன்} தன் படைகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்த போது, உதயகிரியின் மேலிருக்கும் சூரியனைப் போலவே தோன்றினான்.(10) அவன் நடுராத்திரியில் துவாரகாபுரியைத் தாக்க நினைத்தான். அந்த நள்ளிரவில் ஒளியூட்டுவதற்காகக் காலாட்படை வீரர்கள் தீப்பந்தங்களை ஏந்திச் சென்றனர்.(11) இவ்வாறு அந்தப் பௌண்டரகன், ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு, கோட்டைகளால் நன்கு பாதுகாக்கப்பட்ட துவாரகையை நோக்கி முன்னேறினான்.(12)

மன்னா {ஜனமேஜயா}, பௌண்டரக மன்னன், கையில் தீப்பந்தத்துடன், ஈட்டிகள், வாள்கள், கதாயுதங்கள், பரிகங்கள், தோமரங்கள், சக்திகள், கணைகள், திரிசூலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்கள் நிரப்பப்பட்ட தேரில் துவாரகையை நோக்கிச் சென்றான். கொடிகள் பலவும், கிங்கிணி மணிகளும் அந்தத் தேருக்கு மேலும் அழகூட்டின. விற்களும், கதாயுதங்களும் அதனதனுக்குரிய இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. சூரியனையோ, அக்னியையோ போன்று பிரகாசமிக்க அந்தப் பெருந்தேரானது, அண்ட அழிவின் போது முழங்கும் மேகங்களைப் போலவோ, பெரும் பேரிகைகளைப் போலவோ செல்லுமிடமெல்லாம் பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்தது.(13-16)

பெரும் செல்வாக்குடன் இருந்த மன்னன் பௌண்டரகன், ஜகத்பதியான கிருஷ்ணனையும், அவனை ஆதரிக்கும் விருஷ்ணி குல வீரர்கள் பலரையும் கொல்ல நினைத்தான். அவன் நகரத்தின் வாசலை அடைந்த போது, உறுதிமிக்க மன்னர்கள் பலர் அவனுக்குத் துணையாக இருந்தனர். அங்கேயே அவன் தன் படைமுகாமை அமைத்தான். பிறகு அவன் {பௌண்டரகன்} தன் அமைச்சர்களிடம் பின்வருமாறு பேசினான்:(17,18) "போர் பேரிகைகளை முழக்குவீராக. "யாதவர்களே, எங்கள் மன்னனுக்குரிய கப்பத்தைக் கட்டுவீராக, அல்லது நகரத்தை விட்டு வெளியே வந்து எங்களுடன் போரிடுவீராக. கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்டிருக்கும் யாதவர்கள் அனைவரையும் கொல்லும் விருப்பத்தில் பெருஞ்சக்திவாய்ந்த பௌண்டரக மன்னன் இங்கே போரிட வந்திருக்கிறான்" என்று என் பெயரில் அறிவிப்பீராக" என்றான் {பௌண்டரகன}.(19,20)

இவ்வாறு பௌண்டரகனால் ஆணையிடப்பட்ட அமைச்சர்கள் தங்கள் முகாமை விட்டு வெளியேறி யாதவர்களில் சில ஒற்றர்களைச் சந்தித்தனர். அந்நேரத்தில் எங்கும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தீப்பந்தங்கள் தென்பட்டன. உண்மையில் அதற்குள் பகைவரிடையே மோதல்கள் வெடித்திருந்தன. தங்கள் ஆயுதங்களைக் கூர்த்தீட்டிய க்ஷத்திரிய மன்னர்கள், சிங்கங்களைப் போல முழங்கிக் கொண்டே, "விருஷ்ணி குல வீரர்கள் எங்கே? ஜகந்நாதன் எங்கே? பெரும் வீரனான சாத்யகி எங்கே? கிருதவர்மன் எங்கே? யாதவர்களின் மகுட ரத்தினமான பலராமன் எங்கே?" என்று கேட்டனர். பௌண்டரகனின் போர்வீரர்கள் கிருஷ்ணனின் வசிப்பிடமான துவாரகையை அணுகும் முன்பே தங்கள் ஆயுதங்களைப் பொழியத் தொடங்கினர்" {என்றார் வைசம்பாயனர்}.(21-25)

பவிஷ்ய பர்வம் பகுதி – 68ல் உள்ள சுலோகங்கள் : 25

மூலம் - Source