Sunday 19 December 2021

பௌண்டரகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 66

(பௌண்ட்ரகவ்ருத்தாந்தராம்பம்)

Paundraka | Bhavishya-Parva-Chapter-66 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சபையில் உரையாற்றிய பொண்டரகனின் தற்பெருமை...

Paundraka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்},    "அதேவேளையில், கல்விமானும், வலிமைமிக்கப் போர்வீரனும், விருஷ்ணி குலத்தைப் பகைக்கும் விரதம் கொண்டவனும், கிருஷ்ணனிடம் பொறாமை கொண்டவனும், பலமிக்க மன்னர்களில் முதன்மையானவனுமான பௌண்டரகன், தனக்கு அடங்கிய சிற்றரசர்கள் அனைவரையும் விரைவாக அழைத்துத் தன் சபையில் அவர்களிடம் பின்வருமாறு பேசினான்:(1,2)

{பொண்டரகன்}, "பலமிக்க மன்னர்கள் அனைவரையும் வீழ்த்தி, பிருத்வி முழுவதையும் நான் வென்றேன். விருஷ்ணி குலம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. கிருஷ்ணன் தரும் ஆதரவினால் அவர்கள் கர்வத்துடன் இருக்கின்றனர்.(3) கிருஷ்ணனைப் புகலிடமாகக் கொண்ட அவர்கள் தங்கள் வரிகளைக் கட்ட மறுக்கின்றனர். அகந்தை கொண்ட கிருஷ்ணன், தன் வலிமைமிக்கச் சக்கரத்தின் மீது கொண்ட நம்பிக்கையில் என்னைப் புறக்கணிக்கிறான்.(4) சக்கரம், சங்கு, கதாயுதம், வில், கணைகள் ஆகியவற்றை நம்பி அந்த இடையன் கர்வத்தில் இருக்கிறான். ஆயுதங்களின் பலமே அவனைச் செருக்கில் மிதக்க வைக்கிறது.{5}

உண்மையில், நானே வாசுதேவன் என்றாலும், செருக்கில் மிதக்கும் அந்த இடையன் என் பெயரைக் களவாடிவிட்டான். அவனது சக்கரத்தை வீழ்த்தவல்லதும், அவனது செருக்கை சல்லி, சல்லியாக நொறுக்கவல்லதும், உறுதிமிக்கதுமான சுதர்சன சக்கரம் என்னிடம் இருக்கிறது. மதிப்புமிக்க மன்னர்களே, என் சக்கரம் ஆயிரம் ஆரங்களைக் கொண்டதாகும், அதனால் விரும்பிய வடிவங்கள் பலவற்றையும் ஏற்க முடியும். அது நிச்சயம் அழிவற்றதுமாகும்.{6-8} பயங்கர நாணொலியை எழுப்பும் தெய்வீக வில்லான அற்புத சாரங்கம் என்னிடமும் இருக்கிறது. என்னுடைய பெரிய கதாயுதம் கௌமோதகி என்றழைக்கப்படுகிறது. இரும்பாலான அஃது ஓராயிரம் பாரங்கள்[1] எடை கொண்டதாகும்.(5-10) யமனே அஞ்சக்கூடியதும், கிருஷ்ணனின் வாளை எளிதாக அழிக்கக்கூடியதுமான நந்தக வாள் என்னிடம் உள்ளது.(11) கவசம் பூண்டும், கதாயுதம், வாள், சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் கொண்டும் போர்க்களத்தில் கிருஷ்ணனை நான் வெல்வேன். இதில் ஐயமேதும் இல்லை.

[1] 1 பாரம் என்பது 68 கிலோகிராமாகும் என்று விக்கிபீடியா சொல்கிறது. அதுவே 96 கிலோகிராம் என்று விஸ்டம்லிப் (wisdomlib.org) வலைத்தளம் சொல்கிறது. அஃதாவது அந்தக் கதாயுதம் 68000 முதல் 96000 கிலோகிராம் {68 முதல் 96 டன்} வரை எடை கொண்டதாகும்.

இப்போதிலிருந்து நீங்கள் அனைவரும் என்னைக் கதாயுதம், சக்கரம், சங்கு, வில் ஆகியவற்றைத் தரித்தவன் என்றே {அதாவது கதீ என்றும், சக்ரீ என்றும், சங்கீ என்றும் சாரங்கி என்றும்} அழைக்க வேண்டும்.(12,13) மேலும் நீங்கள் வாசுதேவனென என்னை அழைக்கவேண்டுமேயன்றி யது குலத்தை ஆதரிக்கும் அந்த இடையனை அல்ல. நான் அவனைக் கொல்வதன் மூலம் சச்சரவுகளை அகற்றி உண்மையான வாசுதேவன் ஆவேன்.(14) மஹாத்மாவான நரகன் என் ஆருயிர் நண்பனாவான். போரில் அவனை அந்த இடையன் கொன்று விட்டான். என்னை நீங்கள் வாசுதேவனாக ஏற்காவிட்டால் உங்களைத் தண்டிக்கும் வகையில் பத்தாயிரம் தங்க நாணயங்களையும், பெரும் அளவிலான நெற்குவியல்களையும் எனக்கு வலுக்கட்டாயமாகச் செலுத்த வைப்பேன்" {என்றான் பௌண்டரகன்}.(15)

மன்னா, அந்த ராஜேந்திரன் {பௌண்டரகன்} இந்த மூடச் சொற்களைப் பேசி முடித்ததும், சபையில் இருந்த மன்னர்களில் சிலர் சங்கடத்துடன் கூடியவர்களாக அமைதியாக இருந்தனர். அந்த மன்னர்கள் வலிமைமிக்கவர்களாக இருப்பினும், எப்போது விவேகத்துடன் செயல்பட வேண்டும் என்பதை அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(16,17) மற்ற மன்னர்கள் தங்கள் தலைகளை அசைத்து, "சரிதான், அப்படியே செய்வோம்" என்று சொல்லி பௌண்டரகனைத் துதித்தனர். பெருஞ்செருக்கில் பெருகிய அவர்கள், "நிச்சயம் நாம் கிருஷ்ணனை வீழ்த்துவோம்" என்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(18) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 66ல் உள்ள சுலோகங்கள் : 18

மூலம் - Source