Wednesday 6 October 2021

புத்திர பிரார்த்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 48

(கிருஷ்ணம் ப்ரதி ருக்மிண்யா꞉ புத்ரப்ரார்தநாகதநம்)

Rukmini asks Krishna for a son | Bhavishya-Parva-Chapter-48 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : கிருஷ்ணனிடம் பிள்ளை வரம் வேண்டிய ருக்மிணி; கைலாச மலையில் மஹாதேவனைச் சந்திக்கத் தீர்மானித்த கிருஷ்ணன்; பதரிகாசிரமத்தின் மகிமை...

Rumini and Krishna

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஒரு காலத்தில் விஷ்ணுவும், தேவதேவனுமான பகவான் ஜனார்த்தனன், சங்கரனைச் சந்திக்கக் கைலாச மலைச் சிகரத்திற்குச் சென்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்.(1) தத்துவங்களில் சிறந்தவர்களும், தவச் சக்தி கொண்டவர்களுமான நாரதர் உள்ளிட்ட பெரும் தவசிகள் பலரும், செந்நீல வண்ணனான மஹாதேவனை தரிசிக்கச் சென்றனர்.(2) விப்ரரே, அங்கே நீண்ட காலத்திற்கு முன்பு கேசவன் உத்தம தவம் செய்து தேவதேவனான சங்கரனை அர்ச்சித்து வழிபட்டான் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.(3) அங்கே ஆதி தேவர்களான அவ்விருவரும் {ஹரியும், சிவனும்} ஒருவரையொருவர் தரிசித்தனர். இந்திரனின் தலைமையிலான தேவர்களும் அங்கே சென்று சங்கரனையும், ஹரியையும் வழிபட்டனர்.(4)

மஹாதேவர்களான அவ்விருவரும் தனித்தனி வடிவங்களில் தோன்றினாலும் ஒருவரே என்றும், அவர்கள் ஒருவராயிருந்தாலும் பல்வேறு காலங்களுக்குரிய செயல்களைச் செய்வதற்கு வெவ்வேறு வடிவங்களை ஏற்றனர் என்றும், அண்டத்தைப் படைக்கும், காக்கும், அழிக்கும் காரணர்கள் இவ்விருவரே என்றும் சொல்லப்படுகிறது.(5) அவர்கள் பரஸ்பரம் ஒத்துழைத்து ஜகத்தை ஆளுகின்றனர் {என்றும் சொல்லப்படுகிறது}. கைலாச மலையில் அவ்விருவரும் சந்தித்தது எவ்வாறு என்ற கதையை எனக்கு உரைப்பீராக.(6) உயர்ந்த மஹாரிஷிகள் புருஷோத்தமர்களான அவ்விருவரையும் ஒன்றாகக் கண்டபோது என்ன செய்தனர்? இவை அனைத்தையும் எனக்கு விரிவாக உரைப்பீராக.(7) எங்கும் நிறைந்திருப்பவனும் {விஷ்ணுவும்}, எப்போதும் வெல்லும் உயர்ந்தவனும் {ஜிஷ்ணுவும்}, புராதனனுமான கிருஷ்ணன், பாம்புகளை ஆபரணங்களாக அலங்கரித்த சங்கரனை எவ்வாறு கைலாச மலையில் கண்டான் என்பதை எனக்கு விரிவாக உரைப்பீராக" என்று கேட்டான்.(8)

வைசம்பாயனர் சொன்னார், "மனிதர்களில் உத்தமனே, கிருஷ்ணன் எவ்வாறு கைலாச மலைக்குச் சென்றான்? அங்கே ரிஷபவாகனனும், தேவேசனுமான சங்கரனை எவ்வாறு கண்டான்? எவ்வாறு தவம் செய்தான்? அவ்வளவு முனிவர்களும் எவ்வாறு அங்கே சென்றனர்? என அனைத்தையும் சொல்கிறேன். கவனமாகக் கேட்பாயாக.(9,10) பகவானான துவைபாயனரிடம் {வியாசரிடம்} கேட்டது போலவே, கருட வாகனனான கேசவனை நமஸ்கரித்து, என் புத்திக்கு எட்டியதை நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.(11) ஓ! மன்னா, நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பாயாக. பக்திமானும், கல்விமானுமான ஒருவன், தொண்டு செய்யும் குணம் இல்லாதவர்களிடமும், கொடூரர்களிடமும், தவத்தை ஏற்காதவர்களிடமும், வேத கல்வியில் விருப்பம் இல்லாதவர்களிடமும் இதைச் சொல்லக்கூடாது. இவ்வுரையைக் கேட்பதன் மூலம் ஒருவன் சொர்க்கவாசத்தையும், செல்வத்தையும், தூய்மையான புத்தியையும் அடைவான்.(12,13)

இவ்விருவருக்கும் {விஷ்ணுவுக்கும், சிவனுக்கும்} இடையில் வேற்றுமையில்லை என்பது பக்திமான்கன் அனைவரின் தியான பொருளும், வேதத் தீர்மானமும் ஆகும். இந்த உண்மை உபநிஷதங்கள் பலவற்றில் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களை நன்கறிந்தவர்களும், தபோபலம் கொண்டவர்களும், நாரத முனிவரைப் போன்றவர்களுமான மஹாரிஷிகள் பலரும் விஷ்ணுவுடன் கூடிய சிவனின் அடையாளத்தை தியானிக்கிறார்கள்.(14,15) மங்கல ஆளுமைகளான விஷ்ணுவும், சிவனும் கைலாச மலையில் சந்தித்துக் கொண்ட அந்தக் கொண்டாடத்தக்க நிகழ்வு மிகப் புனிதமானதாகும். ஓ! மன்னா, நரகனைப் போன்ற பேரசுரர்கள் பலர் கொல்லப்பட்டு, மிகச்சிலரே எஞ்சியிருந்தபோது, விருஷ்ணி வழித்தோன்றல்களுடனும், தன் அன்புக்குரிய மனைவியான ருக்மிணி தேவியுடனும் சேர்ந்து ஜகன்னாதன் {கிருஷ்ணன்} பூமியை ஆண்டு வந்தான்.(16-18)

அப்போது ஓரிரவில் அந்த ஜகத்பதி {கிருஷ்ணன்}, தன் ராணியுடன் {ருக்மிணியுடன்} இன்புற்று மகிழ்ச்சியாக உறங்கிக் கொண்டிருந்தான்.(19) பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருக்மிணி தேவி தன் கணவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, தேவேசரே, உம்மிடம் இருந்து ஒரு புத்திரனை அடைய நான் விரும்புகிறேன்.(20) பிரபுவே, அவன் உம்மைப் போலவே அழகிய வடிவம் கொண்டவனாகவும், பெருஞ்சக்திவாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். தவச் சக்தியால் பேராற்றல் வாய்ந்தவனாக இருக்க வேண்டும், விருஷ்ணி வம்சத்தின் தலைவனாக அவன் அறியப்பட வேண்டும்.(21) சாத்திரங்கள் அனைத்தையும் கற்றவனாகவும், தன்னை உணர்ந்த ஞானிகளில் முதன்மையானவனாகவும் இருக்க வேண்டும். இக்குணங்களைக் கொண்ட ஒரு புத்திரனை எனக்கு அருள்வீராக.(22) நீரே கொடுப்பவர், படைப்பவர், அனுபவிப்பவர், நீரே ஜகத்பதி. எங்களுக்கு அனைத்தையும் தர வல்லவர் நீரே.(23) ஓ! கேசவரே, தேவேசரே, உமக்குத் தொண்டு புரிகையில் தங்கள் புத்தியை உம்மிலே நிலைக்கச் செய்யும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்று நீர் நன்கறியப்பட்டிருக்கிறீர்.(24) ஓ! ஜனார்த்தனரே, ஜகத்பதியே, என்னை உமது பக்தையாக நீர் கருதினால், என்னிடம் நீர் கருணை கொண்டிருந்தால் பெருஞ்சக்திவாய்ந்த மகனை எனக்குக் கொடுப்பீராக" என்றாள் {ருக்மிணி}".(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ருக்மியின் பகைவனும், யது குலத்தின் மகிமையும், தேவேசனும், யதுக்களின் தலைவனுமான கிருஷ்ணன், தன் மஹிஷியான ருக்மிணி இந்தக் கோரிக்கையை வைத்தபோது, "பாமிநியே {என் அன்புக்குரிய அழகிய பெண்ணே}, உன் கனவு புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(26,27) தேவி, நீ என் நித்திய பக்தையாக இருக்கிறாய். நம் பகைவரை அழிக்கும் புத்திரனை நான் உனக்குத் தருவேன்.(28)

ஓர் இல்லறத்தான் புத்திரனைக் கொண்டு தன் பகைவரை வெல்லலாம். நரகத்தின் மறுபெயர் புத் ஆகும். துக்கம் மற்றொரு வகை நரகமாகும்.(29) ஒரு புத்திரன் தன் பெற்றோரை புத் எனும் நரகில் இருந்து காக்கிறான். இம்மையிலும், மறுமையிலும் புத்திரனே ஆதாயம் என்பதால் அனைவரும் அவனை விரும்புகின்றனர். என் அன்புக்குரியவளே, புத்திரனைக் கொண்டவனுக்கு அனந்தலோகத்தின் கதவுகள் திறந்திருக்கும்.(30) கணவன் தன் மனைவியின் கருவறைக்குள் புகுந்து தானே புத்திரனாகிறான். அந்நேரத்தில் மனைவி அவனது மாதாவாகிறாள். பத்து மாதங்கள் கழிந்ததும், அவனே புதிய உடலுடன் கருவறையில் இருந்து வெளியே வருகிறான்.(31)

புத்திரவந்தனை {புத்திரனுடன் கூடிய ஒருவனைக்} கண்டு இந்திரனே அச்சமடைகிறான். அவன் {இந்திரன்}, "என் செழிப்பெதனை இவன் பகிரப் போகிறான்?" என்று நினைக்கிறான். புத்திரனற்றவன் மரணத்திற்குப் பிறகு நல்ல உலகங்களை அடைவதில்லை. இருப்பினும் குபுத்திரனை {இழிந்த மகனைப்} பெறுவதை விடப் புத்திரனற்றவனாக இருப்பதே சிறந்தது.(32) இழிந்த மகனைப் பெற்றவன் நரகத்திற்குச் செல்வான், நல்ல மகனைப் பெற்றவன் சுவர்க்கத்திற்குச் செல்வான். எனவே ஒருவன், பணிவுள்ளவனும், கல்விமானும், கடமையுணர்வு கொண்டவனும், கருணையுள்ளவனுமான ஒரு மகனையே எப்போதும் விரும்ப வேண்டும்.(33)

ஒருவன் நல்ல ஞானம் அடையும்போது பணிவையும் அடைகிறான். மகனைப் பெற விரும்பும் ஞானிகள், கல்விமானும், பக்திமானுமான ஒரு மகனையே வேண்டுவார்கள்.(34) எனவே, நான் கல்விமானும், அறமனம் கொண்டவனுமான ஒரு மகனை உனக்குத் தருவேன். அத்தகைய நல்ல மகனை அடைவதற்கு நான் இப்போதே கைலாச மலைக்குச் செல்லப் போகிறேன்.(35) அங்கே நான் அனைத்து உயிரினங்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனும், நீலலோஹிதனும் {செந்நீல வண்ணனுமான} மஹாதேவனை வழிபட்டு, உனக்காக ஒரு மகனை அவனிடம் பெற்று வருவேன்.(36) நீக்கமற எங்கும் நிறைந்தவனும், அழிவற்றவனும், பிறப்பற்றவனுமான அந்த விரூபாக்ஷனை {சிவனை}, பிரம்மசரியத்துடன் கூடிய என் தவத்தால் நிறைவடையச் செய்து அவனது அருளைப் பெறுவேன்.(37) சங்கரனின் தரிசனத்தைப் பெற இன்றே நான் புறப்படுகிறேன். என் தவத்தில் நிறைவடைந்ததும் நிச்சயம் அவன் எனக்கு ஒரு மகனை அருள்வான்.(38)


பத்ரிநாத்_உத்திரகாண்ட்

நான் அங்கே சென்றதும் மஹாதேவனையும், உமாதேவியையும் வணங்கி அவர்களை நிறைவடையச் செய்வேன். {கைலாசம் செல்லும்} வழியில், முனிவர்களால் தொண்டாற்றப்படுவதும், வேள்வி நெருப்பின் புகையாலான மேகங்களை எப்போதும் கொண்டதும், புண்ணியமானதுமான பதரிக்கு {பத்ரிநாத்} முதலில் செல்வேன். அந்தப் புண்ணியத்தலம், கங்கையின் நீரால் எப்போதும் நனைக்கப்படுகிறது, எண்ணற்ற பறவைகளும், சிங்கங்கள், புலிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகளும் அங்கே திரிகின்றன.(39,40) அங்கே பதரிப்பழங்கள் {இலந்தைக் கனிகள்} நிறைந்திருக்கின்றன. கிளைவிட்டு கிளை தாவும் குரங்குகளும் எப்போதும் அங்கே காணப்படுகின்றன. வாழை தோப்புகளால் அலங்கரிக்கப்பட்ட பெரும் மரங்கள் பலவும், பழத்தோட்டங்கள் பலவும் அங்கே இருக்கின்றன.(41) வேத கல்வியில் மூழ்கியிருப்பவர்களும், வேதங்களின் தீர்மானத்தை அறிந்தவர்களும், வாதங்களில் வேதச் சான்றுகளைக் குறிப்பிடுபவர்களுமான பெரும் முனிவர்கள் வசிக்கும் இடமாக அது திகழ்கிறது.(42) முற்றான தன்னுணர்வைப் பெற்றவர்களும், "இதுவே தத்துவம், இதுவே உண்மை" என்பதை உறுதியாக நம்புகிறவர்களுமான பல ஆன்மாக்களால் அந்தப் புனிதத்தலம் {பதரிகாசிரமம்} நம்பிக்கையுடன் துதிக்கப்படுகிறது.(43) இதிஹாசங்களையும், புராணங்களையும் நன்கறிந்தவர்களும், இறந்த பின்னர் சுவர்க்கத்தை அடைய விரும்புகிறவர்களுமான மஹாரிஷிகள் அந்தப் புனிதத்தலத்தில் தொண்டாற்றுகின்றனர்.(44) பதரிகாபுரி என்று கொண்டாடப்படும் அந்தப் புனிதத்தலத்திற்கு நான் செல்வேன்" என்று சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டான் ஜனார்த்தனன்" {என்றார் வைசம்பாயனர்}.(45) 

பவிஷ்ய பர்வம் பகுதி – 48ல் உள்ள சுலோகங்கள் : 45

மூலம் - Source