Wednesday 7 July 2021

கசியபரிடமும், பிரம்மனிடமும் சென்ற தேவர்கள் | பவிஷ்ய பர்வம் பகுதி – 42

(தேவகணை꞉ ஸஹ கஷ்யபாதித்யோர்-ப்ரஹ்மஸதநகமநகதநம்)

The gods go to Kashyapa for finding out means for the destruction of Bali | Bhavishya-Parva-Chapter-42 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : அதிதியிடம் சென்ற இந்திரன்; தேவர்களை பிரம்மலோகம் அழைத்துச் சென்ற கசியபர்; பிரம்ம சபை வர்ணனை...

Brahmas Hall

ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! இருபிறப்பாளர்களிலும், முனிவர்களிலும் முதன்மையானவரே, தைத்தியர்களால் {திதியின் மகன்களால்} வெல்லப்பட்ட தேவர்கள் {அதிதியின் மகன்கள்}அதன்பிறகு என்ன செய்தனர்? அவர்கள் தேவலோகத்தை எவ்வாறு மீட்டனர்?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர், "தேவர்களின் மன்னன், அழகிய தெய்வீகக் குரலொன்றை {அசரீரியைக்} கேட்டு, கிழக்கில் அமைந்திருக்கும் மிகச் சிறந்த இடமான அதிதியின் வசிப்பிடத்திற்கு தேவர்களுடன் சென்றான்.(2) புரந்தரன் அங்கே சென்றதும், தான் கேட்ட தெய்வீகச் செய்தியின் ஒவ்வொரு சொல்லையும் அதிதியிடம் சொன்னான்.(3)

அதிதி, "ஓ! குழந்தாய், உன்னாலும், அமரர்கள் அனைவராலும் விரோசனன் மகனான பலியைக் கொல்ல முடியாது. ஆயிரம் தலைகளைக் கொண்ட புருஷனைத் தவிர, வேறு எவனாலும் அவனைக் கொல்ல முடியாது.{4,5} எனினும், உன் தந்தையும், வாய்மை நிறைந்தவருமான கசியபரிடம் தைத்தியனான மஹாபலியின் அழிவைக் குறித்து நான் கேட்கப் போகிறேன்" என்றாள்.{6}(4-6)

அதன்பிறகு சூரர்கள், அதிதியுடன் சேர்ந்து கசியபரிடம் சென்றனர்.{7} அங்கே, தேவர்களின் முதல் ஆசானான அந்தப் பெருந்தவசி, தண்ணீரினால் வெப்பந்தணிந்த ஒளியுடன் கூடிய சூரியனைப் போல அழகாகவும், எரியும் தழலைப் போலப் பிரகாசத்துடனும் இருப்பதைக் கண்டனர்.{8} அவர், தம்முடைய தண்டத்தை வைத்துவிட்டு, மேனியில் மான் தோலுடுத்தி தவம் பயின்று கொண்டிருந்தார்.{9} அவருடைய உடல் மரவுரியாலும், மான்தோலாலும் மறைக்கப்பட்டிருந்தது. மந்திரங்கள் ஓதி தூண்டப்படும்போது அவதரிக்கும் நெருப்பைப் போல அவர் பிரம்ம சக்தியுடன் எரிந்து கொண்டிருந்தார்.{10}

சூரர்கள், அசுரர்கள் ஆகியோரின் தந்தையான தலைவர் மாரீசர் {மரீசியின் மகனான கசியபர்}, பிரம்மவாதிகளில் முதன்மையானவராகவும், சூரியனைப் போன்ற ஒளி கொண்டவராகவும் இருந்தார்.{11} அவர் அனைவரையும் படைத்தவராகவும், குடிமுதல்வர்களில் மிகச் சிறந்த தலைவராகவும் இருந்தார். அவர் தமது பேரனின் மேனியில் மூன்றாவது குடிமுதல்வராகப் பிறந்திருந்தார்.{12}

பிரம்மனின் மனத்தில் பிறந்த மகன்கள் அவரிடம் பேசுவதைப் போலவே அந்த முன்னணி வீர தேவர்களும், அதிதியும் அந்தக் கசியபரை கை கூப்பி வணங்கி,{13} அசரீரியின் மூலம் சொல்லப்பட்ட தெய்வீக செய்தியையும், தைத்தியர்களில் முதன்மையான பலி அமரர்களால் வெல்லப்பட முடியாதவனாக இருப்பதையும் அவரிடம் சொன்னார்கள்.{14}

கசியபர், தம் மகன்களின் சொற்களைக் கேட்டுப் பிரம்மலோகத்திற்குச் செல்ல விரும்பி அவர்களிடம் {தேவர்களிடம்},{15} "ஓ! பாவமற்றவர்களே, வேதம் ஓதும் ஒலியால் நிறைந்திருக்கும் பிரம்மனின் வசிப்பிடத்திற்கு நாம் செல்வோம். நீங்கள் கேள்விப்பட்டதை அங்கே பிரம்மனிடம் உண்மையாகச் சொல்லுங்கள்" என்றார்".{16}(7-16)

வைசம்பாயனர், "அதன் பிறகு தேவர்களும், அதிதியும் கசியபரைப் பின்தொடர்ந்து தேவரிஷிகளால் நிறைந்திருந்த பிரம்மனின் அரண்மனைக்குச் சென்றனர்.{17} தேவர்கள் அனைவரும் விலைமதிப்பற்ற, மிக அழகிய விமானங்களில் சென்று ஒரு கணத்தில் பிரம்மலோகத்தை அடைந்தனர்.{18} ஆன்மத்திரளாக இருக்கும் நித்தியனான பிரம்மனைக் காணும் விருப்பத்தில் அவர்கள் அங்கே இருந்த பெரிய சபா மண்டபத்திற்குச் சென்றனர்.{19} இனிய சாம மந்திரங்கள் பாடப்படும் அந்த மண்டபத்தைக் கண்டதும் அவர்கள் பெரும் நிறைவையடைந்தனர்.{20} வேதங்களையும், அவற்றின் அங்கங்களையும் நன்கறிந்தவர்களும், அறச்சடங்குகளைச் செய்பவர்களுமான மஹாரிஷிகள் ஓதும் ரிக் மந்திரங்களை அவர்கள் கேட்டனர். ஓதப்படும் வேத மந்திரங்களின் ஒலி அந்தச் சபையில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.{21} அங்கே வந்து வேதம் ஓதுவதைக் கேட்ட சூரர்கள், தங்களை மேனி தூய்மையடைந்தவர்களாகக் கருதினர். மனப்புலன்கள் குவிந்து, அமைதியை அடைந்து பிரம்மத்தை மனத்தில் நிலைக்கச் செய்த அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தவர்களாக ஒருவரையொருவர் கண்டனர்[1].(17-27)

[1] மன்மதநாததத்தரின் பதிப்பில், 21ம் ஸ்லோகத்தில் இருந்து 27ம் ஸ்லோகம் வரையுள்ள செய்தி முழுமையாக இல்லை. ஆனால் ஸ்லோக எண் 27 இந்த இடத்தில் சரியாகப் பொருந்துகிறது. சித்திரசாலை பதிப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு இல்லாததால் இதைச் சரிபார்க்க முடியவில்லை.

கசியபரை முன்னிட்டுச் சென்ற சூரர்கள், எல்லாம்வல்ல உலக ஆசானை மீண்டும் தங்கள் மனத்தில் வணங்கினர்.{28} பல்வேறு சாத்திரங்களையும் நன்கறிந்த தேவர்களால் இனிமையான, கம்பீரமான வேத ஒலி மீண்டும் கேட்கப்பட்டது.{29} எப்போதும் நோன்புகளையும், ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுபவர்களும், ஹோம் செய்வதையும், வேதமோதுவதையும் விரும்புகிறவர்களுமான முன்னணி பிராமணர்களை அங்கே அந்தக் கசியபரின் மகன்கள் கண்டனர்.{30,31} உலகின் பெரும்பாட்டனும், சூரசுரர்களின் {சூர, அசுரர்களின்} ஆசானுமான பிரம்மன், அந்தச் சபையில் அமர்ந்து கொண்டு, தெய்வீக மாயையின் மூலம் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்தான்.{32}

அங்கே தக்ஷனும், குடிமுதல்வர்கள் {பிரஜாபதிகள்} பிறரும், பிரசேதஸ், இருபிறப்பாளர்களில் முதன்மையான புலஹர், மரீசி, பிருகு, அத்ரி, வசிஷ்டர், கௌதமர், நாரதர் ஆகியோர் அவனை வழிபட்டுக் கொண்டிருந்தனர்.{33,34} கல்வி, மனம், வானம், நெருப்பு, நீர், பூமி, ஒலி, தீண்டல், வடிவம், சுவை, மணம் உள்ளிட்ட இந்தப் புலன் நுகர் பொருட்களும், மஹத் கோட்பாடும்,{35} நான்கு வேதங்கள், அறச்சடங்குகள், வேள்விகள், தீர்மானம் {சங்கல்பம்}, உயிர்மூச்சு {பிராணம்} ஆகியவையும்,{36} இன்னும் வேறு பொருள் அனைத்தும் சுயம்புவான அந்தத் தேவன் முன்பு இருந்தன. பொருள் {அர்த்தம்}, அறம் {தர்மம்}, விருப்பத்திற்குரிய பொருள், பொறாமை, இன்பம் {காமம்} ஆகியன அவன் முன்பு இருந்தன.{37} சுக்ரன் {வெள்ளி(Venus)}, பிருஹஸ்பதி {குரு/வியாழன்(Jupiter)}, சம்வர்த்தர், புதன், சனி, ராஹு முதலிய கோள்கள் அனைத்தும்,{38} மருத்துகள், விஷ்வகர்மன், நட்சத்திரங்கள், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரம்மனைத் துதித்துக் கொண்டிருந்தனர்.{39} புனித மந்திரமான ஸாவித்ரி, துர்கா, தரணி, வாணி, வாக்கின் ஏழு வடிவங்கள், ஸ்ருதி, காதாங்கள், விதிகள் {சட்டங்கள், நியமங்கள்}, உரைகள்,{40} க்ஷணம், லவம், முஹூர்த்தம், பகல், இரவு, மாதம், ஆறு பருவ காலங்கள், வருடங்கள், நான்கு யுகங்கள், மாலைப் பொழுது,{41} காலச்சக்கரம் ஆகியோரும் இன்னும் பலரும் சுயம்புவான அந்தத் தேவன் {பிரம்மன்} முன்பு இருந்தனர்.{43}

கசியபர், பக்திமான்களான தேவர்களுடன், விருப்பங்கள் அனைத்தையும் அளிக்கவல்ல அந்தத் தெய்வீக சபைக்குள் நுழைந்தார்.{43} பெரும்படைப்பாளியும், நித்தியனுமான பிரம்மன், தன்னெழிலில் எரிந்து கொண்டிருப்பதையும், களைப்பில் இருந்து விடுபட்டவனாகப் பிரம்மரிஷிகளால் தொண்டாற்றப்படுவதையும் கண்டு தேவர்கள் அவனை வணங்கினர்.{44,45} அவர்கள், தங்கள் தலையால் அந்தப் பரமேஷ்டியின் பாதங்களைத் தீண்டி பாவங்கள் விடுபட்டு, அமைதியடைந்த ஆன்மாக்களாகினர்.{46} பெரும்பிரகாசமிக்கப் பிரம்மன், அங்கு வந்திருக்கும் தேவர்களுடன் கசியபரும் இருப்பதைக் கண்டு பேசத் தொடங்கினான்".{47}(28-47)

பவிஷ்ய பர்வம் பகுதி – 42ல் உள்ள சுலோகங்கள் : 47

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English