Sunday 18 April 2021

யுகங்களின் கால அளவு | பவிஷ்ய பர்வம் பகுதி – 08

(க்ருதாதியுகபரிமாணம்)

The duration and characteristics of yuga | Bhavishya-Parva-Chapter-08 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம் : யுகங்களின் கால அளவைச் சொன்ன வைசம்பாயனர்...


Four yugas and their dawn and twilights

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "ஓ! ஜனமேஜயா, சத்திய யுகம் நாலாயிரம் {4000} ஆண்டுகள் கால அளவைக் கொண்டது என்று கல்விமான்கள் விளக்கியிருக்கின்றனர்[1]. தொடக்கத்திலும், முடிவிலும் நேரும் ஒவ்வொரு யுகசந்திப்பு காலமும் நானூறு ஆண்டுகள் என ஒதுக்கப்பட்டிருக்கின்றன.(1) அந்தக் காலத்தில் அறம் நான்கு கால்களையும், பாவம் ஒரு காலையும் கொண்டிருந்தன. மனிதர்கள், தங்கள் கடமைகளை நோற்றவாறே வேள்விகளைச் செய்து வந்தார்கள். அந்த யுகத்தில் பிராமணர்கள் தங்கள் கடமைகளைச் செய்தார்கள், மன்னர்கள் தங்கள் கடமைகளைப் பின்பற்றினார்கள், வைசியர்கள் வேளாண் பணியில் ஈடுபட்டனர். சூத்திரர்கள் (பிறருக்குத்) தொண்டு புரிந்தார்கள்.(2,3) நல்லியல்பின் குணமான {சத்வ குணமான} வாய்மையும், அறமும் தழைத்திருந்தன. மக்கள் நல்லோரைப் பின்பற்றும் வகையில் பிறரின் போதனைகளைப் பெற்றனர்.(4) ஓ! பாரதா, அறம்சார்ந்த மனம் கொண்டவர்களாக இருந்தாலும், இழிந்த பிறப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும் கிருத யுகத்தில் மனிதர்களின் ஒழுக்கம் இவ்வாறே இருந்தது.(5)

[1] மஹாபாரதத்தில் ஆறு இடங்களில் யுகங்கள் குறித்த விளக்கங்கள் இருக்கின்றன. அவை பின்வருமாறு 1. ஹனுமான் சொன்ன யுக விளக்கம் - மஹாபாரதம் வன பர்வம் 148ம் அத்தியாயம், 2. மார்க்கண்டேயர் சொன்ன யுக விளக்கம் - வனபர்வம் 187ம் அத்தியாயம், 3. குந்தி சொன்ன யுக விளக்கம் - உத்யோக பர்வம் 132ம் அத்தியாயம், 4. சஞ்சயன் சொன்ன யுக விளக்கம் - பீஷ்ம பர்வம் 10ம் அத்தியாயம், 5. வசிஷ்டர் சொன்ன யுக விளக்கம் - சாந்தி பர்வம் 302ம் அத்தியாயம், 6. வியாசர் சொன்ன யுக விளக்கம் - சாந்தி பர்வம் 340ம் அத்தியாயம் 

திரேதா யுகத்தின் கால அளவு மூவாயிரம் {3000} ஆண்டுகளும், அதன் தொடக்க, முடிவு காலங்கள் {சந்திக்காலங்கள்} முன்னூறு வருடங்களும் ஆகும்.(6) அந்தக் காலத்தில் அறம் மூன்று கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்தன. வாய்மையும், நல்லியல்பின் குணமும் {சத்வ குணமும்} கிருத யுகத்தைப் போலவே தொடர்ந்திருந்தன. மனித குலம், அறச்செயல்களின் பலன்களை விரும்பி கெட்டுப் போனது. அதன்தொடர்ச்சியாக நால்வகையினரின் {நான்கு வர்ணத்தாரின்} அறச்சடங்குகள் சீர்குலைந்து அவர்கள் பலவீனமடைந்தார்கள். இவ்வாறே, ஓ! மன்னா, தேவர்களால் விதிக்கப்பட்டபடி திரேதா யுகத்தின் பணி உனக்கு விளக்கப்பட்டது. இனி துவாபரத்தின் பணியைக் கேட்பாயாக.(7-9)

ஓ! குருக்களில் முதன்மையானவனே {ஜனமேஜயனே}, துவாபரத்தின் கால அளவு இரண்டாயிரம் ஆண்டுகள் நீண்டதாகும், அதன் சந்திக் காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் இருநூறு ஆண்டுகளைக் கொண்டனவாகும்.(10) அந்தக் காலத்தில் பிராமண ஞானிகள் தன்னலங் கொண்டவர்களாகவும், ரஜஸ் குணத்தால் (தன்னை மையப்படுத்தும் போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும், வஞ்சகர்களாகவும், இழிந்த மனம் படைத்தவர்களாகவும், இயல்பில் பிறழ்வு கொண்டவர்களாகவும் பிறந்தார்கள். அறம் இரண்டு கால்களையும், பாவம் மூன்று கால்களையும் கொண்டிருந்ததால் நித்திய அறத்தின் பாலங்கள் படிப்படியாக வக்கிரமடைந்தன.(11,12) உண்மையான பிராமணத்தன்மை மறைந்தது, கடவுள் மீதான நம்பிக்கை தகர்ந்தது, விரதம், நோன்புகள், அறச்சடங்குகள் ஆகியன கைவிடப்பட்டன.(13)

கலியுகத்தின் கால அளவு ஆயிரமாண்டுகளாகவும், சந்திக்காலங்கள் இரண்டில் ஒவ்வொன்றும் நூறு வருடங்களைக் கொண்டனவாகவும் இருக்கும்.(14) இந்தக்காலத்தில் அறம் ஒற்றைக் காலையும், பாவம் நான்கு கால்களையும் கொண்டிருக்கும். மனிதர்கள் காமம் {ஆசை} நிறைந்தவர்களாகவும், தமஸ் குணத்தால் (ஒழுங்கற்ற போக்கால்) பீடிக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். எவரும் நோன்பு பயிலமாட்டார்கள், எவரும் பக்திமானாக {நல்லோனாக} நடந்து கொள்ள மாட்டார்கள், எவரும் உண்மை பேச மாட்டார்கள். ஒவ்வொரு மனிதனும் நாத்திகனாகவோ, பிரம்மவாதியாகவோ இருப்பான். ஒவ்வொருவனும் தான் என்ற அகந்தை கொண்டவனாகவும், பற்றுணர்வு {பாசம்} அற்றவனாகவும் இருப்பான். விப்ரர்கள் சூத்திரர்களைப் போல நடந்து கொள்வார்கள், சூத்திரர்கள் பிராமணர்களின் குண இயல்புகளைக் கொண்டிருப்பார்கள்.(15-17) கலியுகத்தில் மக்கள் ஆசிரமங்களின் வரம்புகளை மீறி, கண்டபடி கலவி புரிவதன் மூலம் சந்ததிகளைப் பெருக்குவார்கள், அறியக்கூடாத பெண்களை அறிவார்கள்.(18)

இவ்வாறே, ஓ! ஜனமேஜயா, பனிரெண்டாயிரம் {12000} வருடங்கள் ஒரு யுகமாகவும் {யுகசுழற்சியாகவும்}, எழுபத்தோரு யுகங்கள் {யுகசுழற்சிகள்} ஒரு மன்வந்தரமாகவும் அமைகின்றன.(19) ஒரு யுகசுழற்சி நிறைவடையும் நேரத்தில் எவரும் மூன்று வேதங்களில் ஐயங்கொள்ள மாட்டார்கள். பனிரெண்டாயிரம் தேவ வருடங்கள் ஒரு யுகமாக அமைவதாகக் கல்விமான்கள் கருதுகிறார்கள். அத்தகைய ஆயிரம் யுகங்கள் பிரம்மனின் ஒரு நாளாக அமைகின்றன.(20)

ஓ! பாரதா, இந்த நாள் கடந்ததும், பெரும்பூதங்களின் தலைவனான தாமரை உந்தி படைத்த {பத்மநாபப்} பெருந்தேவனானவன், பிராமணர்கள், தைத்தியர்கள், தானவர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், அப்சர்கள், தேவரிஷிகள் {தெய்வீக முனிவர்கள்}, பிரம்மரிஷிகள் {பிராமண முனிவர்கள்}, ராஜரிஷிகள் {அரசமுனிகள்}, ஆகியோரின் உடல்களும், பாம்புகள், மலைகள், ஆறுகள், விலங்குகள், பறவைகள், மான்கள் ஆகியவற்றின் உடல்களும், பிற உயிரினங்களின் உடல்களும் சிதைவடைவதை சாட்சியாகக் காண்பான். அப்போது உலகை அழிக்கும் தன் புத்தியைப் பயன்படுத்தி அண்டத்திற்கு அழிவை ஏற்படுத்தும் வகையில் பயங்கரம் நிறைந்த செயல்களைச் செய்வான்.(21-25) அவன், சூரியனின் வடிவில் உயிரினங்கள் அனைத்தின் பார்வையைப் பறிப்பான், காற்றின் வடிவில் அவற்றின் உயிர் மூச்சுகளைப் பறிப்பான், நெருப்பின் வடிவில் அவன் உலகங்கள் அனைத்தையும் எரிப்பான், மேகத்தின் வடிவில் அவன் சாதகமற்ற பெருமழையை மீண்டும் மீண்டும் பொழிவான்" என்றார் {வைசம்பாயனர்}.(26)

பவிஷ்ய பர்வம் பகுதி – 08ல் உள்ள சுலோகங்கள் : 26

மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English