Friday 5 March 2021

ஜ்வரத்துக்கு வரமளித்த கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 181 – 125

(ஜ்வரஸ்ய பராஜயோ வரளாபஷ்ச)

Krishna's boon to jvara | Vishnu-Parva-Chapter-181-125 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : ஜ்வரதேவனுடன் கடும்போர் புரிந்த ராமகிருஷ்ணர்கள்...


Lord krishna

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பகைவரைக் கொல்பவனான கிருஷ்ணன், தன் கைகளால் தாக்கப்பட்ட ஜ்வரம் இறந்துவிட்டதாகக் கருதி, அவனைப் பூமியின் பரப்பில் வீசி எறிந்தான்.(1) ஒப்பற்ற ஆற்றலைக் கொண்ட ஜ்வரம், கிருஷ்ணனின் கரங்களில் இருந்து விடுபட்டாலும், அவனது உடலைவிட்டு அகலாமல் உள்ளே நுழைந்தான்.(2) ஒப்பற்ற சக்தி கொண்டவனும், ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டவனுமான கிருஷ்ணன், மந்த இயக்கம் கொண்டவனாக மீண்டும் மீண்டும் தரையைத் தீண்டி தன்னைத் தாங்கிக் கொண்டான்.(3) அவன் உறக்கத்தால் பீடிக்கப்பட்டான், அவனது நடை தளர்ந்தது, மயிர்கள் சிலிர்த்தன. அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சும், கொட்டாவியும் விட்டுக் கொண்டிருந்தான்.(4) பகை நகரங்களை வெற்றி கொள்பவனும், பெரும் யோகியுமான கிருஷ்ணன், இவ்வாறு பலவீனத்தால் பீடிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் கொட்டாவி விட்டபடியே இருந்து, நீண்ட நேரத்திற்குப் பிறகு தன் இயல்பு நிலைக்கு மீண்டான்.(5)

அப்போது ஜ்வரத்தால் பீடிக்கப்பட்டிருந்த புருஷோத்தமன், அதை {ஜ்வரத்தை} அழிப்பதற்காக மற்றொன்றை {ஜ்வரத்தை} உண்டாக்கினான்.(6) பெருஞ்சக்தியும், பேராற்றலும் கொண்டவனான ஜனார்த்தனன், தன் சக்தியின் மூலம் உயிரினங்களுக்குப் பேரச்சத்தை விளைவிக்கக்கூடிய பயங்கரம் நிறைந்த {மற்றொரு} ஜ்வரத்தை {வைஷ்ணவ ஜ்வரத்தை} உண்டாக்கினான்.(7) கிருஷ்ணனால் உண்டாக்கப்பட்ட ஜ்வரமானவன் {வைஷ்ணவ ஜ்வரம்}, முந்தைய ஜ்வரத்தை வலுக்கட்டாயமாகப் பிடித்து இழுத்து  அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன் கொண்டு வந்தான்.(8) பெருஞ்சக்தியும், கோபமும் நிறைந்திருந்த வாசுதேவன், இவ்வாறு தன்னால் உண்டாக்கப்பட்ட ஜ்வரத்தால் தன் உடலில் இருந்து விரட்டப்பட்ட ஜ்வரத்தைத் தாக்கித் தரையில் வீழ்த்தி,(9) அவனைத் துண்டு துண்டாக்க ஆயத்தமானான்.

அப்போது கலக்கமடைந்த அந்த ஜ்வரம், "ஓ! ஜனார்த்தனா, என்னைக் காப்பதே உனக்குத் தகும்" என்றான்.(10) ஒப்பற்ற சக்தி படைத்த கிருஷ்ணன், அந்த ஜ்வரத்தைத் தரையில் நசுக்க முற்பட்ட போது,  புலப்படாத குரல் ஒன்று வானில் இருந்து கேட்டது.(11) அஃது {அந்தக் அசரீரி}, "ஓ! கிருஷ்ணா, ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கிருஷ்ணா, யாதவர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனே, இந்த ஜ்வரத்தைக் கொல்லாதே. ஓ! பாவமற்றவனே, இவன் உன்னால் பாதுகாக்கத் தகுந்தவனாவான்" என்றது.(12)

இவ்வாறு சொல்லப்பட்டதும், கடந்த காலம், எதிர்காலம், நிகழ்காலம் ஆகியவற்றின் தலைவனும், உலகின் பேராசானுமான ஹரி, அந்த ஜ்வரத்தை விடுவித்தான்.(13) அப்போது அந்த ஜ்வரம், தலைவணங்கியவறே ரிஷிகேசனின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து,(14) "ஓ! யதுவின் வழித்தோன்றலே, ஓ! கோவிந்தா, என் விண்ணப்பத்தைக் கேட்பாயாக. ஓ! பெருந்தோள்களைக் கொண்ட தேவா, என் மனத்தில் இருப்பதையும், நீ செய்ய வேண்டியதையும் கேட்பாயாக.(15) ஓ! தலைவா, இவ்வுலகில் ஜ்வரம் என்று நான் மட்டுமே இருக்க வேண்டும், வேறு எவரும் {வேறு எந்த ஜ்வரமும்} இருக்கக்கூடாது என நான் உன்னை வேண்டுகிறேன்" என்று கேட்டான்.(16)

தலைவன் {பகவான் / கிருஷ்ணன்}, "வேண்டுபவனுக்கு வரமளிப்பது முறையானதே. அதையுந்தவிர நீ என் பாதுகாப்பை நாடியிருக்கிறாய். எனவே, ஓ! ஜ்வரமே, நீ நலமாக இருப்பாயாக. நீ வேண்டியதைப் பெறுவாய்.(17) முன்பு போலவே நீ ஒருவனே ஜ்வரமாக இருப்பாய். என்னால் படைக்கப்பட்டவன் {மற்றொரு ஜ்வரம் / வைஷ்ணவ ஜ்வரம்} என்னிலேயே கரைந்து போகட்டும்" என்றான்".(18)

வைசம்பாயனர், "பெருஞ்சிறப்புவாய்ந்தவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான கிருஷ்ணன் இதைச் சொல்லிவிட்டு மீண்டும் ஜ்வரத்திடம்,(19) "அசைவன, அசையாதன உள்ளிட்ட மொத்த படைப்பின் மத்தியில் உன்னைப் பரப்பிக் கொண்டு இவ்வுலகில் நீ எவ்வாறு திரியவேண்டும் என்பதைக் கேட்பாயாக.(20) எனக்கு மகிழ்ச்சியளிப்பதை நீ செய்ய விரும்பினால் உன்னை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வாயாக. ஒன்றால் {ஒன்றாம் பகுதியைக் கொண்டு} நான்கு கால் விலங்குகளையும், இரண்டால் அசைவற்ற {உயிரற்ற} பொருட்களையும்,(21) மூன்றால் மனிதர்களையும் நீ பீடிப்பாயாக. உன்னுடைய மூன்றாம் பகுதியின் நாலில் ஒரு பங்கானது, எப்போதும் பறவைகளின் மத்தியில் வாழட்டும்.(22) இவ்வாறு உன்னை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும், இரண்டு நாளைக்கு ஒரு முறையும், மூன்று நாளைக்கு ஒரு முறையும், நான்கு நாளைக்கு ஒரு முறையும் தோன்றி மனிதர்களின் மத்தியில் வாழ்வாயாக. பிற உயிரினங்களின் மத்தியில் நீ எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கேட்பாயாக.[1].(23,24)

[1] சித்திரசாலை பதிப்பில், "மூன்றாம் வகை ஜ்வரம் ஒருநாள்விட்டு மறுநாள் வரும்போது ஏகாந்தரம் என்று அழைக்கப்படும், இரண்டு நாள் விட்டு வரும்போது திஜ்வரம் என்றழைக்கப்படும். மூன்று நாள்கள் விட்டு வரும்போது சாதுர்த்திகா ஜ்வரம் என்றழைக்கப்படும். இந்த வேறுபாடுகளுடன் உன் வடிவத்தைப் பகுத்துக் கொண்டு மனிதர்களின் மத்தியிலும், உயிரினங்களின் மத்தியிலும் நீ உலவ வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், இந்தப் பத்தி இல்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "இந்த மூன்றில் ஒரு பாகத்தில் உனது உடலை மூன்றாகப் பிரித்துப் பக்ஷிகளிடம் இருப்பாய். மூன்றினுள் ஒரு கால் பாகத்தில் ஒன்றரை விட்டொன்று சாதுர்த்திகோ ஜ்வரமாகும். நான் சொல்வதைக் கேள். பலவித பேதங்கள் நன்கு பிரித்துக் கொண்டு மனிதர் நீங்கலாக மற்ற ப்ராணி ஜாதியிடத்தில் வஸி" என்றிருக்கிறது.

மரங்களின் மத்தியில் நீ புழு, பூச்சிகளின் வடிவிலும், இலைகளை உதிரச் செய்து {சங்கோபத்ரகம்}, அவற்றை மங்கச் செய்யும் {இலைகளை மஞ்சளாக்கும் - பாண்டுபத்ரகம்} நோய்களாகவும் வாழ்வாயாக; கனிகளில் அதுர்ய நோயாக {குழிகளை உண்டாக்கி} வாழ்வாயாக;(25) தாமரைகளில் பனியாகவும் {ஹிம நோயாகவும்}, பூமியில் உவர்நிலமாகவும் {சோஷர நோயாகவும்}, நீரில் நீலிகையாகவும் {நீலிகை நோயாகவும்}, மயில்களில் உச்சி கொண்டைகளாகவும் {சிகோபேத நோயாகவும்},(26) மலைகளில் எலிகளாகவும் {கிரிகையாகவும்}, பசுக்களில் பசுநோய் அல்லது கோரகம் நோயாகவும் {வலிப்பு நோயாகவும்} நீ வாழ்வாயாக;(27) இவ்வாறே இந்த எண்ணற்ற வடிவங்களில் நீ பூமியில் வாழ்வாயாக. வெறுமனே நீ பார்ப்பதாலும், தீண்டுவதாலும் விலங்குகள் தங்கள் உயிர்களை இழக்கும். தேவர்களாலும், மனிதர்களாலும் மட்டுமே உன்னைத் தாக்குப்பிடிக்க இயலும்" என்றான்".(28)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "கிருஷ்ணனின் சொற்களைக் கேட்ட ஜ்வரம் பெரும் மகிழ்ச்சியடைந்து, கூப்பிய கரங்களுடன் அவனை வணங்கிவிட்டு,(29) "ஓ! மாதவா, உயிரினங்கள் அனைத்தின் மேலும், பொருட்கள் அனைத்தின் மேலும் நீ எனக்கு அதிகாரத்தைக் கொடுத்ததன் மூலம் நான் அருளப்பட்டவன் ஆனேன்.(30) ஓ! புருஷோத்தமா, இனி நான் உன் ஆணைகளை நிறைவேற்ற விரும்புகிறேன். ஓ! பெருந்தோள்களைக் கொண்ட கோவிந்தா, நான் என்ன செய்ய வேண்டுமென எனக்கு ஆணையிடுவாயாக.(31) திரிபுரத்தையும், பிற விலங்குகளையும் அழித்த ஹரனால் முன்பு நான் படைக்கப்பட்டேன். போரில் உன்னால் வீழ்த்தப்பட்டதும் நான் உன் பணியாள் ஆனேன்.(32) இப்போது நீயே என் தலைவனாக இருக்கிறாய். {நான் நற்பேறு பெற்றவனாகவும், அருளப்பட்டவனாகவும் ஆனேன். நான் விரும்பியதையே நீ செய்தாய். ஓ! சக்கரபாணியே, நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?}" என்றான்".

வைசம்பாயனர், "ஜ்வரத்தின் சொற்களைக் கேட்ட வாசுதேவன், "என் இதயத்தில் இருக்கும் தீர்மானத்தைக் கேட்பாயாக" என்றான்.(33,34)

ஜ்வரம், "ஓ! சக்கரபாணியே, உன்னால் எனக்குச் செய்யப்பட்ட நன்மையின் மூலம் நான் ஆதரிக்கப்பட்டவனும், அருளப்பட்டவனும் ஆனேன். நான் நிறைவேற்றக் கூடிய உன் விருப்பத்தைச் செய்ய எனக்கு ஆணையிடுவாயாக" என்றான்[2].

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில் இருக்கும் இந்த வாக்கியம், சித்திரசாலை பதிப்பில் இல்லை. பிபேக்திப்ராயின் பதிப்பில் இங்குள்ளதைப் போலவே இருக்கிறது. சித்திரசாலை பதிப்பில் 30-33ம் ஸ்லோகங்களுக்குள் இதே கருத்து இருக்கிறது. அதுவே மேலே 33,34ம் ஸ்லோக எண்களில் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப் பட்டிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், சித்திரசாலை பதிப்பில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.

தலைவன் {பகவான் / கிருஷ்ணன்}, "ஓ! ஜ்வரமே, இந்தப் பெரும்போரில் {ஆயுதங்களின்றி} நம் கரங்களைக் கொண்டே நாம் நமது ஆற்றலை வெளிப்படுத்தினோம். என்னை வணங்கிவிட்டு, குவிந்த மனத்துடன் பின்வருவனவற்றைச் சொல்லும் மனிதன் ஜ்வரங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டவனாக வேண்டும்.(35) {அவன் ஜ்வர வசப்படாதவனாக வேண்டும். "பஸ்மத்தை [சாம்பலை] ஆயுதமாகக் கொண்டவனும், மூன்று கால்களையும், மூன்று தலைகளையும், ஒன்பது கண்களையும் கொண்டவனும், பிணிகள் அனைத்தின் தலைவனுமான ஜ்வரமே, என்னிடம் நிறைவடைந்து எனக்கு ஆறுதல் தருவாயாக.(36) [அண்டத்தின்] தொடக்கத்திலும், முடிவிலும் இருப்பவர்களும், புராதனமானவர்களும், நுட்பமானவர்களும், திரளானவர்களும், பேராசான்களுமான வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோரும் நிறைவடைந்தவர்களாகி என்னிடம் உள்ள ஜ்வரங்கள் அனைத்தையும் விலக்கட்டும்" [என்று சொல்லி வேண்டுபவனின் ஜ்வரங்கள் அனைத்தும் விலக வேண்டும்]}" என்றான்[3].(37)

[3] 35-37 ஸ்லோகங்கள் சித்திரசாலை பதிப்பின் படி இங்கே மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலே அடைப்புக்குறிக்குள் இருக்கும் 36, 37 ஸ்லோகங்களில் உள்ள செய்திகள் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இப்பத்தி இல்லை. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "புஜபலம் அஸ்த்ரம் இரண்டையும் உடைய இந்த நாமிருவரின் போர் பராக்ரமத்தை என்னை வணங்கி ஒரே மனதுடையவனாக எவன் படிப்பானோ, அந்த மனிதன், ஜ்வரமே, ஜ்வரம் வராதவனாகவிருப்பான். மற்றும் மூன்று பாதங்களுடையதும், பஸ்மத்தை ஆயுதமாகவுடையதும், மூன்று தலைகளையுடையதும், ஒன்பது கண்களுடையதும் ஆகிய இத்தகையதாய் எல்லா விரோதிகளுக்கும் தலைமையாகும். ஜ்வரம், ப்ரீதி அடைந்ததாய் எனக்கு ஸுகம் கொடுக்கட்டும். ஜகத்தின் ஆத்யந்தத்தைத் தங்கள் வசமுடையவர்கள், தத்வஞானிகள், மிகவும் பழையவர்கள், ஸூக்ஷ்ம ஸ்வரூபி, ப்ரஹத் ஸ்வரூபி ஆயினும் எல்லோரையும் அடக்கியாள்பவர்கள். இத்தகைய அநிருத்த ப்ரத்யும்னன் ஸங்கர்ஷ்ண வாஸுதேவர்கள் எல்ல ஜ்வரங்களையும் அழிக்கட்டும்" என்று கிருஷ்ணன் சொன்னதாக இருக்கிறது.

யதுக்களில் முதன்மையான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பெருஞ்சக்திவாய்ந்த ஜ்வரம், "அவ்வாறே ஆகட்டும்" என்றான்.(38) இவ்வாறு வரத்தை அடைந்து, உறுதிமொழியும் கொடுத்த ஜ்வரம், கிருஷ்ணனை வணங்கிவிட்டு போர்க்களத்தைவிட்டு அகன்றான்" என்றார் {வைசம்பாயனர்}.(39)

விஷ்ணு பர்வம் பகுதி – 181 – 125ல் உள்ள சுலோகங்கள் : 39
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English