Monday 20 July 2020

உக்ரஸேனனிடம் மறுமொழி கூறிய கிருஷ்ணன் | விஷ்ணு பர்வம் பகுதி – 87 – 032

(உக்ரஸேநாபிஷேகம்)

Krishna's reply to Ugrasena | Vishnu-Parva-Chapter-87-032 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் :  கம்ஸன் கொல்லப்பட்டதை யாதவர்களுக்கு விளக்கிய கிருஷ்ணன்; ஈமச்சடங்கு செய்ய கிருஷ்ணனிடம் அனுமதி கேட்ட உக்ரஸேனன்; உக்ரஸேனன் பட்டாபிஷேகம்...

Krishna crowning Ugrasena

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "நஞ்சு பருகிய மனிதனைப் போல மூச்சுவிட்டுக் கொண்டிருந்த உக்ரஸேனன், தன் மகனுக்கான துயரில் எரிந்தபடியே கிருஷ்ணனை அணுகினான்.(1) அவன் {கிருஷ்ணன்}, கம்ஸனை அழித்த பாவத்திற்காக மனம் வருந்திக் கொண்டிருப்பதையும், யாதவர்களால் சூழப்பட்டிருப்பதையும் அங்கே கண்டான்.(2)

அவன் {கிருஷ்ணன்}, கம்ஸனுடைய மனைவியரின் இதயம் பிளக்கும் புலம்பல்களைக் கேட்டு, அந்த யாதவச் சபையில் தன்னைத் தானே நொந்து கொண்டு,(3) "ஐயோ, குழந்தைத்தனமான என் குறும்புத்தனத்தாலும், கோபத்தின் ஆதிக்கத்திலும் கம்ஸனை அழித்ததன் மூலம் இந்த ஆயிரம் பெண்களையும் விதவைகளாக்கி விட்டேன்.(4) கணவனின் மரணத்தினால் அவலமிக்க நிலையில் இருக்கும் இந்தப் பெண்கள் சாதாரண மனிதனின் இதயமும் இரக்கம் கொள்ளும் வகையில் அழுது புலம்புகிறார்கள்.(5) கள்ளங்கபடமற்ற இந்தப் பெண்களின் புலம்பலைக் கேட்டு கிருதாந்தனின் (இறந்தோரை ஆள்பவனின் {யமனின்}) இதயமும் இரக்கத்தால் நிறையும்.(6)

நல்லோரை ஒடுக்குபவனும், எப்போதும் தீமையைச் செய்பவனுமான கம்ஸன் கொல்லப்பட வேண்டும் என்று நான் முன்பே தீர்மானித்திருந்தேன்.(7) ஒழுக்கக்கேட்டையும், இரக்கமற்ற மனத்தையும், மந்த புத்தியையும் கொண்டவனும், மக்களால் வெறுக்கப்படுபவனுமான இவன் வாழ்வதை விடச் சாவதே சிறந்தது {என்றும் தீர்மானித்திருந்தேன்}.(8) கம்ஸன் பெரும்பாவியாகவும், ஒருபோதும் நல்லோரால் விரும்பப்படாதவனாகவும், அனைவராலும் வெறுக்கப்படுபவனாகவும் இருந்தான். இவனுக்காக ஏன் பரிதாபப்பட வேண்டும்?(9) நல்லவர்கள், தங்கள் அறச்செயல்களின் பலனாகத் தேவலோகத்தில் வாழ்கின்றனர். இவ்வுலகில் மகிமையை அடைபவனும் சொர்க்கவாசியைப் போன்றவனே ஆவான்.(10)

குடிமக்கள், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களாகவும், தங்கள் கடமைகளை நோற்பவர்களாகவும், நற்செயல்களைச் செய்பவர்களாகவும் இருந்தால் மன்னனை அநீதி தீண்டாது.(11) தீயவர்கள் சரியான பலனை அறுவடை செய்வதற்காகக் காலனால் இறுக்கப்படுகிறார்கள் {கட்டுப்படுத்தப்படுகிறார்கள்}. நல்லோர் மறுமையில் மங்கலப் பலன்களை அடைகிறார்கள்.(12) இவ்வுலகங்களில் பலர் இழி செயல்களைச் செய்கின்றனர், எனவே தேவர்கள் நல்லோரை முழுமையாகப் பாதுகாக்கிறார்கள்.(13) கம்ஸன் கொல்லப்பட்டதன் மூலம் நான் அவனது தீச்செயல்களை ஒழித்திருக்கிறேன் என்பதால் இதை {இந்தக் கொலையை} நீங்கள் அறமெனக் கருத வேண்டும் {அதர்மனைக் கொன்றது நல்லதெனவே கொள்ள வேண்டும்}.(14) எனவே நீங்கள் துயர் நிறைந்தவர்களாக இருக்கும் பெண்களையும், குடிமக்களையும், வணிகர்களையும் இனி தேற்றுவீர்களாக" என்று {யாதவர்களிடம்} சொன்னான் {கிருஷ்ணன்}.(15)

கிருஷ்ணன் இதைச் சொன்னபோது, உக்ரஸேனன் தன் மகன் செய்த தவறுகளுக்கு அஞ்சி தலை குனிந்தவனாகப் பிற யாதவர்களுடன் அங்கே நுழைந்தான்.(16) யதுக்களின் சபையில் அவன் துயரமெனும் நீராவியால் துன்புற்றவனாக {கண்ணீரால் தழுதழுத்தவனாக} அந்தச் சந்தர்ப்பத்துக்குத் தகுந்த வகையில் தாமரைக் கண்ணனான கிருஷ்ணனிடம் பின்வரும் பரிதாபகரமான சொற்களைச் சொன்னான்.(17) {உக்ரஸேனன்}, "ஓ! மகனே, உன் கோபம் தணிந்தது, உன் பகைவன் யமலோகத்திற்கு அனுப்பப்பட்டான், உன் மகிமை உன் கடமைகளைப் பின்தொடர்ந்து வந்தது, உன் பெயர் இவ்வுலகில் கொண்டாடப்படுகிறது.(18) உன்னுடைய இந்தச் செயலின் மூலம் நல்லோரின் மத்தியில் நீ உன் மகிமையை நிறுவிக் கொண்டாய், யாதவர்களில் நிலையை வலுவடையச் செய்தாய், உன் நண்பர்களைப் பெருமை கொள்ளச் செய்தாய்.(19) உன் மகிமை அக்கம்பக்கத்துத் தலைவர்களின் மத்தியில் பரவியிருக்கிறது, அவர்கள் உன் நட்பையும், உன் கூட்டணியையும் நாடுவார்கள்.(20)

ஓ! வீரா {கிருஷ்ணா}, உன் குடிமக்கள் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள், பிராமணர்கள் உன் மகிமையைப் பாடுவார்கள், அமைதியையும், பகையையும் உண்டாக்குவதை நன்கறிந்தவர்களான அமைச்சர்கள் உன்னை வணங்குவார்கள்.(21) ஓ! கிருஷ்ணா, யானைகள், குதிரைகள், தேர்கள், காலாள்கள் நிறைந்த கம்ஸனின் இந்த அழிவற்ற படையை நீ ஏற்பாயாக.(22) ஓ! மாதவா, கம்ஸனின் செல்வம், தானியங்கள், ரத்தினங்கள், விரிப்புகள், பொன், ஆடைகள், பெண்கள் ஆகியவற்றையும், அவன் கொண்டிருந்த அனைத்தையும் உன் ஆட்கள் எடுத்துக் கொள்ளட்டும்.(23) ஓ! கிருஷ்ணா, பகைவரைக் கொல்பவனே, யாதவர்களின் சார்பாக யோகத்தின் துணை கொண்டு எதிர்ப்புகள் அனைத்தையும் முற்றுபெறச் செய்தாய், இனி அவர்களை {யாதவர்களை} பூமியில் நிறுவுவாயாக. ஓ! யதுவின் வழித்தோன்றலே, இனி உன்னிடம் இருந்தே யாதவர்களுக்கு இன்பமோ, துன்பமோ வாய்க்கப் போகிறது.(24,25)

துன்பம் நிறைந்த இதயத்துடன் அவர்கள் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! கோவிந்தா, உன் கோபமெனும் நெருப்பால் எரிக்கப்பட்டவனும், பாவச் செயல்களைச் செய்தவனுமான கம்ஸனின் ஈமச் சடங்குகளை நீ விரும்பினால் அவர்கள் செய்வார்கள். பேரிடரைச் சந்தித்த இந்த மன்னனுக்கு, இறந்தோருக்குச் வேண்டிய சடங்குகளைச் செய்த பிறகு, நானும், என் மனைவியும், மருமகள்களும், காட்டில் விலங்குகளுடன் திரியப் போகிறோம். இறந்தோருக்கான ஈமச் சடங்குகளைச் செய்ய வேண்டியது மனிதர்களின் கடமையாகும்.(26-28) கிருஷ்ணா, இதைச் செய்வதால் மக்கள் தங்கள் சமூகக் கடனில் இருந்து விடுபடுகிறார்கள். எனவே, கம்ஸனுக்கான ஈமச்சிதையை அமைத்து, அதற்குத் தீயிட்டு, நீர்க்கடன் செலுத்திய பிறகு நான் இவனுக்கான கடனைச் செலுத்தியவனாவேன்.(29) ஓ! கிருஷ்ணா, இது மட்டுமே என் வேண்டுதலாகும். இக்காரியத்தில் என்னிடம் அன்பு காட்டுவாயாக. இறந்தோருக்கான சடங்குகள் செய்யப்படுவதன் மூலம் பாவியான கம்ஸன் அருள் நிலையை அடையட்டும்" என்றான் {உக்ரஸேனன்}.(30)

கிருஷ்ணன், உக்ரஸேனனின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தால் நிறைந்தான். அவனுக்கு {உக்ரஸேனனுக்கு} ஆறுதல் கூறும் வகையில் அவன் {கிருஷ்ணன்},(31) "ஓ! ஐயா, ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, உமது வயதுக்கும், குடும்பத்திற்கும், உமது இயல்புக்கும் தகுந்தவற்றை நீ சொன்னீர்.(32) {இருப்பினும்} தவிர்க்கப்பட முடியாத காரியம் முடிந்திருக்கையில் நீர் ஏன் இவ்வாறு சொல்கிறீர்? கம்ஸன் இறந்தாலும், மன்னனுக்குத் தகுந்த இறுதி மரியாதைகளைப் பெறுவான்.(33) ஓ! ஐயா, நீர் பெருங்குலத்தில் பிறந்தவர், அறிய வேண்டியவை அனைத்தையும் அறிந்தவரும் ஆவீர். அவ்வாறிருக்கையில் விதியைத் தவிர்க்க முடியாது என்பதை நீர் ஏன் புரிந்து கொள்ளவில்லை?(34) ஓ! மன்னா, அசைவனவும், அசையாதனவுமான உயிரினங்கள் அனைத்தின் உண்மையான செயல்கள் காலப் போக்கில் முழுமையை அடைகின்றன.(35)

ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, தயாளமும், அழகும், வளமும் நிறைந்த அரசுகளும், எப்போதும் வறியோரிடம் அன்பொழுகுபவர்களும், மஹேந்திரனைப் போன்ற ஆற்றலைக் கொண்டோரும், ஸ்ருதிகளையும், விதிகளையும், பிரம்மஞானத்தையும் நன்கறிந்தோரும், லோகபாலர்களைப் போன்றோரும் கூடக் காலனால் கொண்டு செல்லப்படுவார்கள்.(36,37) குடிமக்களைப் பாதுகாப்பதையே எப்போதும் நோக்கமாகக் கொண்டவர்களும், க்ஷத்திரியக் கடமைகளில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டுடன் கூடியவர்களும், அனைத்தையும் நன்கறிந்தவர்களுமான நல்ல மன்னர்கள் பலரும் காலப்போக்கில் மரணத்தை அடைந்தார்கள் என்பதை நீரும் அறிவீர்.(38) மனிதர்கள், தாங்கள் அனுபவிக்கும் இன்பத்தாலோ, துன்பத்தாலோ, தங்களின் செயல்கள் நன்மையானவையா, தீமையானவையா என்பதை உரிய காலம் வரும்போது புரிந்து கொள்கிறார்கள்.(39) ஓ! மன்னா, அனைவரின் இதயங்களிலும் இருக்கும் மாயையின் உண்மை இயல்பைத் தேவர்களாலும் புரிந்து கொள்ள முடியாது. இதனால் {மாயையால்} கலக்கமடையும் மனிதர்களின் கருவியே கர்மமாகும் {செயலாகும்}.(40)

கம்ஸன் தன் உண்மையான செயல்களால் தூண்டப்பட்டு உரிய காலத்தில் மரணத்தை அடைந்தான்; இதில் நான் காரணனல்ல. இதில் கர்மமும் (உண்மையான செயல்பாடும்), காலமும் கருவிகளாக இருந்தன.(41) சூரியன், சந்திரன், உள்ளிட்ட அசைவனவற்றையும், அசையாதனவற்றையும் கொண்ட இந்த அண்டம் காலத்தில் அழிவடைகிறது, மீண்டும் காலத்தில் இருப்பில் எழுகிறது.(42) காலமே அனைத்தையும் அடக்கவும், அனைத்துக்கும் உதவவும் செய்கிறது, எனவே உயிரினங்கள் அனைத்தும் காலத்துக்கு உட்பட்டவையாகும்.(43) ஓ! மன்னா, உமது மகன் தான் செய்த பாவத்தாலேயே எரிக்கப்பட்டான். இதில் நான் கருவியல்ல, காலமே {இதற்குக்} காரணமாக அமைந்தது.(44) உமது மகன் தன் செயல்களின் மூலமே கொல்லப்பட்டான்; {அவ்வாறு இல்லாவிட்டால்} இதில் நிச்சயம் நான் கருவியாக இருந்தேன் என்பதில் ஐயமில்லை.(45) காலம் பலம் வாய்ந்ததாகும், அதன் போக்கை அறிவதும் கடினமானதாகும். பக்கச்சார்பற்ற நிலையில் இருந்து பொருள்களின் சாரத்தைப் பார்ப்போர் இதையறிவர்.(47)

நான் அரசையோ, அரியணையையோ விரும்பவில்லை. ஆட்சிப்பகுதியை அடைவதற்காக நான் கம்ஸனைக் கொல்லவும் இல்லை.(48) உலகங்கள் அனைத்தின் நன்மைக்காவும், என் மகிமையை நிறுவுவதற்காகவும், இந்தக் குடும்பத்தின் சாபமாக இருந்த உமது மகனும், அவனது பணியாட்கள் அனைவரும் என்னால் கொல்லப்பட்டனர்.(49) விரும்பிய வகையில் திரியும் பறவையைப் போலக் கோபர்களுடன் பசுக்களுக்கு மத்தியில் மீண்டும் நான் காட்டில் மகிழ்ச்சியாகத் திரிவேன்.(50) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, எனக்கு அரசு தேவையில்லை என நூறு முறை உறுதி கூறுவேன். இதை அனைவருக்கும் சொல்வீராக.(51) ஓ! மன்னர்களில் முதன்மையானவரே, நீர் யாதவர்களின் தலைவரானதால் என்னால் மதிக்கப்படத் தகுந்தவர். எனவே, அரியணையில் அமர்ந்து அரசனாகி வாகைசூடுவீராக.(52) நான் விரும்புவதைச் செய்வது முறையெனவும், உமக்குத் துன்பமளிக்காதெனவும் நீர் நினைத்தால், என்னால் துறக்கப்படும் இவ்வரசை எப்போதும் ஏற்பீராக" என்றான் {கிருஷ்ணன்}".(53)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "உக்ரஸேனன், யதுக்களின் சபையில் கிருஷ்ணன் சொன்ன சொற்களைக் கேட்டு மறுமொழி கூற இயலாதவனாக நாணத்தால் தலைகுனிந்தான்.(54) பிறகு விதிகளை நன்கறிந்த கோவிந்தன் அவனை {உக்ரஸேனனை} அரியணையில் நிறுவினான். தலையில் பிரகாசித்த மகுடத்துடன் அழகாகத் தெரிந்த மன்னன் உக்ரஸேனன், கிருஷ்ணனுடன் சேர்ந்து கம்ஸனின் ஈமச் சடங்குகளைச் செய்தான்.(55) தேவர்கள் தங்கள் மன்னனை (இந்திரனைப்) பின்தொடர்ந்து செல்வதைப் போலவே, முன்னணி யாதவர்கள் அனைவரும் கிருஷ்ணனின் ஆணையின் பேரில் நகரத்தின் வீதியில் உக்ரஸேனனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(56) இரவு கடந்து சூரியன் எழுந்த போது, முன்னணி யாதவர்கள் கம்ஸனின் ஈமச் சடங்குகளைச் செய்யத் தொடங்கினர்.(57)

சடங்குகளின் விதிப்படி மன்னன் கம்ஸனின் ஈமச் சடங்குகளைச் செய்ய விரும்பிய அவர்கள், அவனுடைய {கம்ஸனின்} உடலைச் சிவிகையில் {பல்லக்கில்} வைத்து அதை யமுனையின் வடகரைக்குக் கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர்கள் முறையான வரிசையில் அவனது இறுதிச் சடங்குகளைச் செய்து சிதைக்குத் தீமூட்டினர்.(58,59) ஸுனாமன் என்ற பெயரைக் கொண்டவனும், நீண்ட கரங்களைக் கொண்டவனுமான கம்ஸனுடைய தம்பியின் இறுதிச் சடங்கையும் கிருஷ்ணனின் ஏற்புடன் யாதவர்கள் செய்தனர்.(60) அப்போது, விருஷ்ணிகளும், அந்தகர்களும், யாதவர்களும், "இறந்தவர்கள் அழிவற்ற கதியை அடையட்டும்" என்று மீண்டும் மீண்டும் சொல்லி, அவர்களைக் கௌரவிக்கும் வகையில் நீர் காணிக்கைகளைச் செலுத்தினர்.(61)

{ஓ! மன்னர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, அப்போது, பத்து கோடி பொன் நாணயங்கள், பசுக்கள், ரத்தினங்கள், ஆடைகள், கிராமங்கள், நகரங்கள் ஆகியவை கம்ஸனின் பெயரால் பிராமணர்களுக்குக் கொடையாக அளிக்கப்பட்டன. அவர்கள் பிராமணர்களிடம் "உங்களுக்கு அழிவற்றவை (செல்வம்) வாய்க்கட்டும்" என்று மீண்டும் மீண்டும் சொன்னார்கள்.(62,63)}.[1]

[1] இந்த 62, 63ம் ஸ்லோகங்கள் மன்மதநாததத்தரின் பதிப்பில் இல்லை. பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இல்லை. சித்திரசாலை பதிப்பில் இருந்து இங்கே எடுத்தாளப்பட்டுள்ளன. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ஹரியான கிருஷ்ணனும், கம்ஸனை உத்தேசித்து ப்ரகாசிக்கும் பத்து கோடி பொன்னையும், பசுக்களையும், ரத்னங்களையும், ஆடைகளையும், நகரம் போன்ற பெரிய கிராமங்களையும், ப்ராஹ்மணர்களுக்குக் குறைவில்லாமலிருக்கட்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு, திருப்தியாகும் வரை கொடுத்தனர்" என்றிருக்கிறது.

யாதவர்கள் அனைவரும் கம்ஸனுக்கும், அவனுடைய தம்பிக்கும் நீர்க்கடனைச் செலுத்திவிட்டு, உக்ரஸேனனைத் தங்கள் முன் கொண்டு, கவலைநிறைந்த உதயங்களுடன் மதுராவுக்குத் திரும்பிச் சென்றனர்" என்றார் {வைசம்பயானர்}.(64)

விஷ்ணு பர்வம் பகுதி – 87 – 032ல் உள்ள சுலோகங்கள் : 64
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English