Friday, 12 June 2020

விரஜ கிராம விவரிப்பு | விஷ்ணு பர்வம் பகுதி – 60 – 005

(கோவ்ரஜகமனம் - நந்தவ்ரஜகமனம்)

A description of village Vraja | Vishnu-Parva-Chapter-60-005 | Harivamsha In Tamil


பகுதியின் சுருக்கம் : குழந்தைகள் இருவரின் பாதுகாப்பு குறித்து நந்தகோபனை எச்சரித்து அனுப்பிய வஸுதேவன்; கோகுலத்திற்குச் சென்ற நந்தகோபன்...

Vraja village Gokulam

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "வஸுதேவன், விரஜ கிராமத்தில் {கோகுலத்தில் / இடைச்சேரியில்}[1] சந்திரனைவிட அழகான ஒரு மகனை {பலராமனை} ரோஹிணி பெற்றாள் என்பதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தான்.(1) அவன் {வஸுதேவன்} தாமதமேதும் செய்யாமல் நந்தகோபனிடம், இனிய சொற்களில், "யசோதையுடன் சேர்ந்து விரஜத்திற்கு விரைந்து செல்வாயாக[2]. அவ்விரு சிறுவர்களின் பிறப்பின் விளைவாகச் செய்ய வேண்டிய {ஜாதகர்மம் உள்ளிட்ட} பல்வேறு சடங்குகளைச் செய்து, அவர்களை விரஜத்தில் {கோகுலத்தில்} மகிழ்ச்சியுடன் வளர்ப்பாயாக.(2,3) ரோஹிணி பெற்ற என் மகனை {பலராமனை} விரஜத்தில் கவனமாகப் பாதுகாப்பாயாக. அப்போதுதான் பித்ருக்களின் பட்டியலில் மகனைக் கொண்டவனாக என் பெயர் குறிப்பிடப்படும்[3].(4) ஐயோ, என் ஒரே மகனின் முகத்தையும் நான் காண இயலாதவனானேன். நான் விவேகத்துடன் கூடியவனாக இருப்பினும், இஃது {இந்நிலை} என் ஞானத்தைக் களவாடுகிறது.(5)

[1] இங்கே குறிப்பிடப்படும் விரஜம் எனும் கிராமம், கோகுலம், இடைச்சேரி, ஆய்ப்பாடி, ஆயர்பாடி எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இடையர்கள் / ஆயர்கள் / கோபாலர்கள் / மேய்ப்பர்கள் இருக்கும் இடம் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயராக இஃது இருக்க வேண்டும்.

[2] இந்த அத்தியாயத்தின் தொடக்க வரிகளைக் கொண்டு நந்தகோபன் அதுவரை மதுராவில் இருந்தான் என்பதும், வஸுதேவனின் மற்றொரு மனைவியான ரோஹிணி கோகுலத்தில் இருந்தாள் என்பதும், மதுராவில் இருந்த நந்தகோபனை கோகுலம் சென்று விடுமாறு வஸுதேவன் பணித்தான் என்பதும் தெரிகிறது. மேலும் மூலத்தின் இந்த அத்தியாயத்தின் தலைப்பாக நந்தவ்ரஜகமனம் என்றிருக்கிறது. அதை விரஜத்திற்கு இடம்பெயர்ந்த நந்தன் என்று மொழிபெயர்க்கலாம்.

[3] சித்திரசாலைப் பதிப்பில், "சிறுவனும் என் மகனுமான ரோஹிணேயனை விரஜத்தில் கவனமாகப் பாதுகாப்பாயாக. நான், குழந்தை கொண்டவர்களின் விவாதப் பொருள் ஆவேன். (ஒரு தந்தையின் கடமைகளைச் செய்யாததற்காக நான் அவர்களால் பழிக்கப்படுவேன்)" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், விரஜம் சென்றதும் அவர்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பாயாக. ரோஹிணியின் மகனையும் என் மகனையும் விரஜத்தில் பாதுகாப்பாயாக. குழந்தைப் பருவத்தில் அனைவரும் விளையாட்டுத்தனமாக இருப்பார்கள். மனிதர்கள் குழந்தைப்பருவத்தில் மூடர்களாகவும் இருப்பார்கள். குழந்தைப்பருவத்தில் அனைவரும் கடுமைமிக்கவர்களாகவும் இருப்பார்கள். எனவே கவனத்துடன் இருப்பாயாக. பிள்ளைகளைக் கொண்டோரின் மத்தில் பித்ருபக்ஷத்தில் நான் விவாதத்திற்குரிய பொருளாவேன்" என்றிருக்கிறது. விரஜத்தில் பாதுகாப்பாயாக என்பதன் அடிக்குறிப்பில், "ரோஹிணியின் மகன் என்று சொல்வதில் பலராமனையும், தன் மகன் என்று சொல்வதில் கிருஷ்ணனையும் குறிப்பிடுகிறார் வஸுதேவன்" என்றிருக்கிறது. பித்ருபக்ஷம் என்பதன் அடிக்குறிப்பில், "இது பித்ருக்களைக் கௌரவிக்கும் வகையில் ஈமச் சடங்குகள் நடைபெறும் காலம்" என்றிருக்கிறது. உ.வே.எஸ்.ராமானுஜ ஐயங்காரின் பதிப்பில், "ரோஹிணி பெற்ற என் பிள்ளையையும் கோகுலத்தில் நன்கு காப்பீராக. நான் ஒரே குழந்தையின் முகத்தைப் பார்க்கவில்லையென்று புத்ரர்களுடைய ஜ்ஞாதிகளால் நிந்திக்கப்படுபவன்" என்றிருக்கிறது.

தீயவனான இந்தக் கம்ஸன், குறிப்பாகக் குழந்தைகளைக் கொல்லும்போது சற்றும் இரக்கம் கொள்வதில்லை என்பதால் நான் அஞ்சுகிறேன். அதையுந்தவிர, இவ்வுலகில் குழந்தைகளைப் பல்வேறு ஆபத்துகளும் அச்சுறுத்துகின்றன. எனவே, ஓ! நந்தா, உன் மகனை {கிருஷ்ணனைக்} கவனித்துக் கொள்வதைப் போலவே ரோஹிணியின் மகனையும் {பலராமனையும்} கவனித்துக் கொள்வாயாக.(6,7) என் மகன் மூத்தவன், உன் மகன் இளையவன். அவர்களுடைய பெயர்கள் ஒரே பொருளைக் கொண்டவை. எனவே, அவர்களை நிகரான கவனத்துடன் வளர்ப்பாயாக.(8) அவர்கள் இருவரும் நிகர்வயது கொண்டவர்கள். ஓ! கோபாலா, உன்னுடைய கவனமான வளர்ப்பிலும், விரஜத்தின் {கோகுலத்தின்} அருளிலும் அவர்கள் வளருமாறு கவனித்துக் கொள்வாயாக.(9) குழந்தைப்பருவத்தில் ஒவ்வொருவரும் தங்கள் வழியில் செயல்பட்டுக் குறும்புகளையும், தவறுகளையும் செய்கிறார்கள். எனவே அவர்களைப் பெருங்கவனத்துடன் பயிற்றுவிப்பாயாக.(10) தீயவனான கேசியினாலும், ஊர்வன மற்றும் பூச்சிகள் {புழுக்கள்} பலவற்றாலும், கழுகுகளாலும் அனைத்து வகை அச்சமும் ஏற்படும் என்பதால் பிருந்தாவனத்தில் உன் பசுத்தொழுவங்களை அமைக்காதே. பசுத்தொழுவத்தில் பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளிடம் இருந்து அந்தச் சிறுவர்கள் இருவரையும் பாதுகாப்பாயாக.(11,12) ஓ! நந்தா, கிட்டத்தட்ட இரவு முடியப் போகிறது. விரஜத்திற்கு விரைந்து செல்வாயாக. தெற்கில் உள்ள பறவைகளும் உன்னிடம் அதையே செய்யுமாறு கேட்டுக் கொள்வதைக் காண்பாயாக" என்றான் {வஸுதேவன்}.(13)

நந்தன், பெரும் மனம் கொண்ட வஸுதேவனின் இந்த ரகசிய செய்தியைக் கேட்டுப் பெரிதும் நிறைவடைந்து, யசோதையுடன் சேர்ந்து தன் வாகனத்தில் ஏறினான்.(14) அவன், மனிதர்களால் தோள்களில் சுமக்கப்படும் ஒரு வாகனத்தில் {பல்லக்கில்} குழந்தையான அந்த இளவரசனை {கிருஷ்ணனை} வைத்தான்.(15) பிறகு அவன், ஏராளமான நீர் தெளிக்கப்பட்டதும், குளிர்ந்த காற்றால் நிறைந்திருந்ததும், யமுனைக் கரையில் அமைந்ததுமான ஒரு சாலையின் வழியே சென்றான்.(16)

இவ்வாறே சற்றுத் தொலைவு சென்றதும், குளிர்ந்த காற்றால் நிறைந்திருப்பதும், கோவர்த்தன மலையின் அருகே, யமுனைக் கரையில் பசுக்களின் அழகிய கிராமமாக அமைந்ததுமான விரஜத்தை {கோகுலத்தைக்} கண்டான்.(17) அஃது இனிய குரலெழுப்பும் விலங்குகளாலும், கொடிகளால் மறைக்கப்பட்ட பெரும் மரங்களாலும், பால் கொடுப்பவையும், மேய்ந்து கொண்டிருப்பவையுமான பசுக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.(18) அந்த இடம், பசுக்கள் சுகமாகத் திரியும் அளவுக்கு அழகிய சமவெளிகளைக் கொண்டதாகவும், நல்ல சமமான படிக்கட்டுகளுடன் கூடிய தடாகங்களைக் கொண்டதாகவும் இருந்தது. {அங்கே இருந்த} மரங்கள், காளைகளின் கொம்புகள் மற்றும் திமில்களால் கீறப்பட்டிருந்தன.(19) கழுகுகள், காட்டுப்பூனைகள், வல்லூறுகள், இறைச்சியை விரும்புபவையும், பின்தொடர்ந்து வருபவையுமான பிற பறவைகள், சிறுத்தைகள் மற்றும் சிங்கங்கள் ஆகியன எப்போதும் அங்கே வாழ்ந்து வந்தன. இதன் காரணமாக அந்த இடம் கொழுப்பு, மஜ்ஜை மற்றும் எலும்புகளால் நிறைந்திருந்தது.(20) ஏராளமான புற்களால் மறைக்கப்பட்டிருந்ததும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் முழங்கும் புலிகளால் நிறைந்திருந்ததுமான அந்த இடம், இனிய கனிகளால் சூழபட்ட மரங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டதாகவும், பசுக்கள் மற்றும் கன்றுக்குட்டிகளின் மங்கல ஒலிகளை எதிரொலிப்பதாகவும் இருந்தது. அந்த அழகிய கிராமம் {விரஜம் / கோகுலம்} கோபிகைகளால் நிறைந்திருந்தது.(21,22) வாகனங்களுக்கான சாலைகள் அகன்றவையாக இருந்தன. முட்களால் அது மறைக்கப்பட்டதாகவும், வீழ்ந்த பெரும் மரங்களால் அவற்றின் புறவெளிகள் நிறைந்தவையாகவும் இருந்தன.(23)

அதன் சுற்றளவு தோறும் நிலத்தில் கன்றுகளைக் கட்டும் கயிறுகளும், முளைகளும் பொருத்தப்பட்டிருந்தன; அங்கே பசுஞ்சாணம் நிறைந்திருந்தது. புற்களால் மறைக்கப்பட்ட குடில்களும், மடங்களும் அங்கே இருந்தன.(24) மத்து கடையும் ஒலியால் அது நிறைந்திருந்தது. செழிப்பின் அனைத்து அறிகுறிகளையும் கொண்டவர்களும், நன்கு வளர்ந்தவர்களுமான அரசு அதிகாரிகளும், மகிழ்ச்சி நிறைந்த மனிதர்களும் அங்கே எப்போதும் வாழ்ந்து வந்தனர்.(25) அங்குள்ள நிலம் மோர் சிந்தியதாகவும், தயிராடைகளால் நனைந்ததாகவும் இருந்தது. தயிர் கடையும் கோபிகைகளின் ஒலியால் அது நிறைந்திருந்தது.(26) நன்கு தடுக்கப்பட்ட கதவுகளால் பசுத்தொழுவங்கள் அனைத்தும் முறையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தன; அவற்றின் உள்ளே பசுக்களுக்கான கொட்டில்கள் இருந்தன. ஆயர்களின் விளையாட்டு மைதானங்களாலும், காகங்களின் இறகுகளை {காகபக்ஷம்} அணிந்த சிறுவர்களாலும் அது நிறைந்திருந்தது.(27)

நீல ஆடைகளை உடுத்திய இளமை நிறைந்த கோபிகைகள் நெய் தயாரித்தனர், இந்தக் காரணத்தால் அங்கே இனிய நறுமணம் கொண்ட காற்று வீசியது.(28) காட்டு மலர்மாலைகளால் தலை அலங்கரிக்கப்பட்டவர்களும், மார்புகளை மறைக்கும் கச்சை அணிந்தவர்களுமான கோபிகைகள், தங்கள் தலைகளில் பாற்குடங்களுடன் எப்போதும் அங்கே நடந்து கொண்டிருந்தனர்.(29) யமுனைக் கரையில் இருந்த சாலை நீர் சுமக்கும் கோபிகைகளால் நிறைந்திருந்தது. நந்தகோபன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் இவ்வழியில் தன் கிராமத்தில் நுழைந்தபோது, அவனது குலத்தைச் சேர்ந்த மனிதர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஆரவாரம் எழுந்தது.(30) முதியவர்களான கோபர்களும், கோபிகைகளும் வெளியே வந்து அந்நகரத்தில் அவனை வரவேற்றனர். அவனும் அந்த இனிமை நிறைந்த இடத்திற்குத் தன் விருப்பத்தின்படியே சென்றான்.(31) அதன் பிறகு அவன் {நந்தகோபன்}, வஸுதேவனின் அன்புக்குரிய மனைவியான ரோஹிணியிடம் சென்று, உதயச் சூரியனுக்கு ஒப்பான பூடகப் புருஷனான கிருஷ்ணனை அங்கே வைத்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(32)

விஷ்ணு பர்வம் பகுதி – 60 – 005ல் உள்ள சுலோகங்கள் : 32
மூலம் - Source   | ஆங்கிலத்தில் - In English