Monday 7 February 2022

சந்நியாச தர்ம நிந்தனை | பவிஷ்ய பர்வம் பகுதி – 83

(ஸந்யாஸதர்மநிந்தா)

Insult to Sannyasa dharma | Bhavishya-Parva-Chapter-83 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சந்நியாச தர்மத்தை நிந்தித்த ஹம்சனும், டிம்பகனும்...


Durvasa

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "பிராமணா {துர்வாசா}, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மெய்யறிவின் சுவடொன்றேனும் உன் இதயத்தில் வசிக்கவில்லை என்றே தெரிகிறது. உன் ஆசிரமமென்ன?(1) கிருஹஸ்த ஆசிரமத்தை நிராகரிப்பதன் மூலம் எதை அடைய நீ விரும்புகிறாய்? வஞ்சகனாகவே நீ தென்படுகிறாய். பற்றறுந்தவன் போல் நடிக்கும் உன் நடிப்பை வேறு எதனால் விளக்கிவிட முடியும்?(2) மூடா, சீடர்களாக நீ கருதும் இவர்கள் அனைவரையும் நீ கெடுத்துக் கொண்டிருக்கிறாய். உண்மையில், நீ அவர்கள் அனைவரையும் நரகத்திற்கே இட்டுச் செல்கிறாய்.(3) 

மூடப் பிராமணா, நிச்சயம் இறுதியில் நீ அழிவையே அடைவாய். உன் பாதச்சுவடுகளைப் பின்பற்றும் இவர்கள் அனைவரும் உன்னையே பின்பற்றுவர். ஐயோ! ஏன் இன்னும் உன்னைப் போன்ற ஒரு வஞ்சகனை எவனும் தண்டிக்கவில்லை? இவை யாவற்றையும் உனக்குக் கற்பித்தவனும் பெரும்பாவியே என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பிராமணா, இந்த ஆசிரமத்தைக் கைவிட்டுக் கிருஹஸ்தனாவாயாக. உன் மனத்தைக் கட்டுப்படுத்தி ஐவகை வேள்விகளைச் செய்தால் நீ மறுமையில் இன்புற்றிருப்பாய். கிருஹஸ்த ஆசிரமமே மங்கலத்தை அருளும் உண்மையான பாதையாகும். நீ மகிழ்ச்சியாக வாழ விரும்பினால், நாங்கள் சொல்வதைப் போலச் செயல்படுவாயாக" என்றனர்.

எனினும் பக்திமிக்கப் பிராமணன் ஜனார்த்தனன் இந்தச் சொற்களைக் கேட்டுப் பெரிதும் துன்புற்றான். அவன் சந்நியாசியான துர்வாசரை வெறித்துப் பார்த்து, அவரது பாதங்களை வணங்கிவிட்டுத் தன்னிரு நண்பர்களிடமும், "என் அன்புக்குரிய இளவரசர்களே, உங்கள் புத்தியும், பகுத்தறிவும் மாசடைந்திருக்கின்றன. இவ்வாறு பேசாதீர்! இவ்வாறான கேட்கத்தகாத வாக்கியங்கள் இம்மையிலும், மறுமையிலும் தீங்கிழைப்பவையே. இம்மையில் தன் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மகிழ்ச்சியாக வசிக்க விரும்பும் எந்தப் பாவிதான் இவ்வாறு பேசுவான்?(4-9)

இந்த உயரான்மா இதோ உங்கள் முன் மரணத்தின் வடிவமாக {காலனாக} நிற்கிறார். உடனடியாக உங்கள் வீழ்ச்சி நிகழப்போகிறதெனத் தெரிகிறது. நீங்கள் இருவரும் இந்தப் பிராமணரின் கோபத்தால் ஏற்கனவே இறந்துவிட்டீர்களென்றே நான் கருதுகிறேன்[1].(10) இங்கே இருக்கும் முனிவர்கள் அனைவரும் தூய இதயம் படைத்த சந்நியாசிகளாவர். ஆழமான ஞானமெனும் தீபத்தால் இவர்களின் இதயங்கள் ஒளியூட்டப்பட்டதாலேயே தாங்கள் திரட்டிய பாவங்களை இவர்கள் சாம்பலாக எரித்திருக்கிறார்கள். இதோ அந்தத் தூய நிலையிலேயே இவர்கள் தங்கள் வாழ்வைப் பரமனின் தொண்டிற்கு அர்ப்பணித்திருக்கிறார்கள்.(11) இந்த உயரான்மாவை இவ்வாறு நிந்திக்கத் துணிபவன் உங்களைத் தவிர வேறு எவன்? உங்கள் முடிவு அருகில் வந்துவிட்டதென நான் நம்புகிறேன்.(12)

[1] ஜனார்த்தனன் வைஷ்ணவன் என்றும், துர்வாசரும், ஹம்சடிம்பகர்களும் சைவர்கள் என்றும் முன் அத்தியாயங்களில் நாம் கண்டிருக்கிறோம் என்பது இங்கே நினைவில் கொள்ளத்தக்கது.

என் அன்புக்குரிய மன்னர்களே, நீண்ட காலத்திற்கு முன்னர்ப் பிரம்மச்சரியம், கிருஹஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசமென்று அந்தக் காலச் சமூகத்தை நான்கு ஆசிரமங்களாக வகுத்தனர்.(13) அவற்றில் நான்காவதான சந்நியாச ஆசிரமமே தலைச்சிறந்தது. பெரும் நுண்ணறிவுமிக்கவனும், பெரும்பக்திமானுமான ஒருவன் மட்டுமே சந்நியாச ஆசிரமத்தை ஏற்கத் தகுந்தவனாவான்.(14) நீங்கள் இருவரும் ஒருபோதும் பெரியோருக்குக் கீழ்ப்படிந்து, வழிபட்டுத் தொண்டாற்றியதில்லை. பெரும் முனிவர்களின் உதடுகளில் உதிர்ந்த ஆழ்ந்த ஞானத்தையும் நீங்கள் கேட்டதில்லை. நல்ல தொடர்பால் ஈட்டப்பட்ட ஞானத்தை மதிக்காதவன் எவனும் உங்களைப் போலவே பேசியிருப்பான்.(15)

மன்னா {ஹம்சா}, என்னால் இதுபோன்ற அவதூறுகளைக் கேட்க சகிக்க முடியவில்லை. இருப்பினும் நீ என்னுயிர் நண்பனாக இருக்கிறாய். இஃது எனக்கான இக்கட்டான சூழ்நிலை. நான் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையில் நான் ஆதரவற்றவனாக இருக்கிறேன்.(16) மன்னா {ஹம்சா}, உன் குருக்களிடம் இருந்து நீ பெற்ற அறிவனைத்தும் இப்போது உன் துன்பத்திற்கான காரணமாகியிருக்கின்றன. அறக்கோட்பாடுகளைப் பின்பற்றுகையில் அடையப்படும் ஞானம், எப்போதும் நல்ல விளைவுகளையே அருளும். எனினும், பலவந்தமாகவோ, அகங்காரத்துடனோ அடையப்படும் ஞானம் பாவங்களிலேயே ஒருவனை ஆழ்த்தும்.(17) நான் உங்களைக் கைவிடலாமா, உயர்ந்த இடத்தில் இருந்து பாறையில் விழலாமா, நஞ்சுண்ணலாமா, பெருங்கடலில் மூழ்கலாமா என்பது தெரியவில்லை.(18) ஒருவேளை உங்கள் முன்னிலையிலேயே நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமோ?" என்றான் {ஜனார்த்தனன்}. இவ்வாறே அந்த ஜனார்த்தனன், அந்த இளவரசர்கள் இருவரும் நிந்திப்பதைத் தடுத்து அழுது கொண்டிருந்தான்" என்றார் {வைசம்பாயனர்}.(19)

பவிஷ்ய பர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 19

மூலம் - Source