Saturday 26 February 2022

டிம்பகன் | பவிஷ்ய பர்வம் பகுதி – 100

(ஸாத்யகிடிம்பகயோர்யுத்தம்)

Dimbhaka | Bhavishya-Parva-Chapter-100 | Harivamsa In Tamil


பகுதியின் சுருக்கம்: சாத்யகிக்கும் டிம்பகனுக்கும் இடையில் நடந்த போர்; டிம்பகனின் மகிமை...


Dimbhaka

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}, "அதே நேரத்தில் நிகரான சக்தி படைத்தவர்களும், கொண்டாடப்பட்ட க்ஷத்திரியர்களுமான டிம்பகனும், சாத்யகியும் கடும்போர் செய்து கொண்டிருந்தனர்.(1) அவ்விருவரும், முதன்மையான குருக்களிடம் போர்க்கலையினைக் கற்றுக் தேர்ச்சியடைந்தவர்கள் என்பதால், பெருஞ்சீற்றத்துடனும் திறனுடனும் போரிட்டனர். அவ்விருவரும் போரிட்டுக் கொண்டிருந்தபோது சாத்யகி, டிம்பகனின் மார்பு, முகம், வயிறு ஆகியவற்றை நோக்கிப் பத்துக் கணைகளை ஏவினான். பெரும்பலத்தில் பெருஞ்செருக்கு கொண்டிருந்தவனும், க்ஷத்திரியர்களில் முதன்மையானவனாகக் கருதப்படுபவனுமான டிம்பகனும் அடுத்தடுத்து சாத்யகியின் மீது ஐயாயிரம் கணைகளை ஏவினான். எனினும், அந்தப் பெரும் விருஷ்ணி வீரன் {சாத்யகி}, உரக்க முழங்கியபடியே அந்தக் கணை மழையை அழித்தான்.(2-4)

அதன்பிறகு, சாத்யகி ஏவிய ஏழு கணைகள் டிம்பகனுக்குப் பெருந்துயரை அளித்தன. இதில் கோபமடைந்த டிம்பகனும், பதிலடியாக ஒரு லட்சம் கணைகளைச் சாத்யகியின் மீது ஏவினான்.(5) அப்போது சாத்யகி ஓர் அர்த்தச்சந்திரக் கணையைத் தன் நாண்கயிற்றில் பொருத்தினான். அந்தக் கணை ஏவப்பட்டபோது, அது டிம்பகனின் வில்லை இரண்டாக அறுத்தது.(6) வலிமைமிக்க வீரனான டிம்பகன், விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணெய் பூசிய கணையால் துளைத்து சாத்யகிக்குக் காயத்தை ஏற்படுத்தினான்.(7) மன்னா, அந்தக் கணையால் துளைக்கப்பட்ட சாத்யகி, குருதி கக்கியபோது இளவேனிற்காலப் பலாச மலர்க்குவியலைப் போலக் காட்சியளித்தான்.(8)

இதைக் கண்ட பலராமன், தன் கணைகளால் டிம்பகனின் பெரும் வில்லைத் துண்டுகளாக முறித்தான். டிம்பகன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, பார்வையாளர்களாக நின்று கொண்டிருந்த பிற க்ஷத்திரியர்களின் முன்னிலையில் யாதவத் தலைவன் சாத்யகியின் மீது இடையறாத கணையோடையைப் பொழிந்தான். எனினும் சாத்யகி ஒரே கணையால் அந்தப் பாவி டிம்பகனின் உறுதிமிக்க வில்லை முறித்தான்.

இராஜேந்திரா {ஜனமேஜயா}, டிம்பகன் விரைவாக மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, எண்ணற்றக் கணைகளால் சாத்யகியின் உடலைத் துளைக்கத் தொடங்கினான். இருப்பினும் சாத்யகி அந்த வில்லையும் முறித்தான். இவ்வாறே சாத்யகி, டிம்பகன் எடுக்க எடுக்க நூற்றுப்பத்து விற்களை ஒன்றன்பின் ஒன்றாக முறித்தான். இந்த அருஞ்செயலைச் செய்த பிறகு அவன் சிங்கமுழக்கம் செய்தான்.

சிறிது நேரம் கழிந்ததும், பெரும் போர்வீரர்களான அந்த டிம்பகன், சாத்யகி இருவரும் விற்களின் பயன்பாட்டைக் கைவிட்டு, வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரோடு ஒருவர் போரிட்டனர். வாளேந்தலிலும் இருவரும் திறம் பெற்றவர்களாக இருந்தனர். அப்போது, நற்பேறுபெற்றவனான துச்சாசனனின் மகன் {தௌஷாஸநி}[1], சோமதத்தனின் மகனான பூரிஸ்ரவஸ், வலிமைமிக்க அபிமன்யு, நகுலன், டிம்பகன், சாத்யகி ஆகிய அறுவரே வாள்வீரர்களில் முதன்மையானவர்களாக அறியப்பட்டிருந்தனர். மனித ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, அவர்களில் டிம்பகனும், சாத்யகியும் மிகச்சிறந்தவர்களாகக் கருதப்பட்டனர். போரிடும் பேராவல் கொண்டிருந்த அவ்விரு வீரர்களும், தங்கள் வாள்களை எடுத்துக் கொண்டு ஒருவரையொருவர் அணுகினர்.

[1] இவனே அபிமன்யுவை கதாயுதத்தால் தலையில் அடித்து இறுதியில் கொன்றவன் என்பதை முழுமஹாபாரதம், துரோண பர்வம் 47ம் பகுதியில் காணலாம் இவன் தௌசாசனி என்றும், துர்மசேனன் என்றும், துர்ஜயன் என்றும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறான். தௌசாசனி என்பது துச்சாசனனின் மகன் என்ற பொருள் கொண்ட பெயராகும்.

வாட்போரில் முப்பத்திரண்டு உத்திகள் உண்டு. அவை பிராந்தம், உத்பிராந்தம், ஆவித்தம், பிரவித்தம், பாஹுநிஹ்ஸுருதம், ஆகரம், விகரம், பிந்நம், நிர்மர்யாதம், அமாநுஷம், ஸங்கோசிதம், குலசிதம், ஸவ்யஜது, விஜாநு, ஆஹிகம், சித்ரகம், க்ஷிப்தம், குஸும்பம், லம்பநம், துருதம், ஸர்வபாஹு, விநிர்பாஹு, ஸவ்யேதரம் உத்தரம், திரிபாஹு, துங்கபாஹு, ஸவ்யோந்நதம், உதாஸி, பிருஷ்டதம், பிரதிதம் {பிரதிபிருஷ்டதம்}, யௌதிகம், பிரதிதம் {பிரதியௌதிகம்} ஆகியனவாகும். போரின் போது அவ்வீரர்கள் இருவரும் இந்த உத்திகள் அனைத்தையும் பயன்படுத்தினர். புஷ்கரமெனும் அந்தப் புண்ணியத்தலத்தில், தங்கள் பகைவனைக் கொல்லும் தீர்மானத்துடன் அவ்விருவரும் போரிட்டாலும், நீண்டநேரமானதில் அவர்கள் களைப்படைந்ததாகத் தெரிந்தது. வானில் இருந்த தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பெரும் முனிவர்கள் ஆகியோர் அவ்விரு போர்வீரர்களும் வெற்றியடையும் நோக்கில் தீவிரமாக முயன்று வருவதைக் கண்டு, "ஐயோ, வலிமைமிக்கவர்களான இவ்விரு வீரர்களின் பொறுமையும், ஆற்றலும் ஒப்பற்றவையாக இருக்கின்றனவே. வாட்போரிலும், விற்போரிலும் இவ்விருவரும் பெரும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்களில் ஒருவன் சிவனின் சீடன், மற்றொருவன் துரோணரின் சீடன்.(9-24) அர்ஜுனன், சாத்யகி, ஜகத்பதியான வாசுதேவன் ஆகிய மூவரும் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களாகக் கொண்டாடப்படுகின்றனர்.(26) டிம்பகன், கார்த்திகேயன், சிவன் ஆகிய மூவரும் ஒப்பற்ற ஆற்றல் படைத்த முதன்மையான மஹாரதிகளாக அறியப்படுகின்றனர்" என்றனர்.(26)

தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், யக்ஷர்கள் ஆகியோரும், பெரும் நாகர்களும் இப்படிச் சொன்னவாறே அந்தப் போரைத் தொடர்ந்து கண்டு வந்தனர்" என்றார் {வைசம்பாயனர்}.(27)

பவிஷ்ய பர்வம் பகுதி – 100ல் உள்ள சுலோகங்கள் : 27

மூலம் - Source